காசைக் காணவில்லை
கதையாசிரியர்: அல்வாயூர் மு.செல்லையா
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 125
(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அட ராமா நீ ஏனடா இதுவரையும் வரப்பிந்தினாய். மாட்டுக்கு ஓலை இல்லையே. மாடு ஓலை இல்லாமல் தவிக்கப் போகின்றதே. இன்று மாடு பட்டினியானால் நாளை காலையில் கோவிலில் சுவாமிக்குக்கூட பாலில்லாமல் போய்விடுமே. அட சனியனே, உன்னால் எத்தனை நாள்தான் எனக்கும் பால் இல்லாமல் போயிற்று.” என்று கோப ஆவேசத்துடன் கடுகடுத்துப் பேசினார் கதிரைவேலர்.
இவருக்கு வயசு 45 இருக்கும். நல்ல வயல் தோட்டம் காணி பூமி உடையவர். செல்வாக்கும் ஒருவிதமான நைஷ்டிகமும் பூண்டவர். சாதி பேதத்தைக் குருட்டுத்தனமாகக் கொண்டு நடப்பதில் இவருக்கிவர்தான் இணையானவர். கதிரை வேலரின் இந்தச் சொற்கள் இராமனின் காதுகளைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தன. அவன் பயம் மேலிட்டவனாய் மெல்லிய குரலில் “கமக்காரன்! எங்க வீட்டிலை என்ர மனிசிக்கு சுவாதக்குத்து 13 நாள். மூத்தமேளுக்கு காய்ச்சல் 7 நாள். என் பொடியனுக்கு சின்னமுத்து. கைக்குழந்தைக்கு கிரந்திவாய்வு. இவர்களுக்கு ஏதும் உதவி ஒத்தாசை செய்து கஞ்சித்தெளிவு வேளைக்கு உதவிபுரிந்தவள் என் தங்கச்சி பாறுவதி. அவளுக்கும் வயிற்றுளைவு. நானும் ஏதும் சீவனத்துக்குழைக்க வழியில்லை. நேரமும் இல்லை. இஞ்சிக்கிழங்குக்கு ஒரு சதத்திற்கு வயதியில்லை. என் பெண்சாதி போட்டிருந்த போளமும் முருகுவாளியும் பிள்ளைப் பெத்த சிலவுக்காக அடைவில் துலைஞ்சுபோச்சு. இவ்வளவு தொந்தரவுக்கூடாக இங்கே வாறதெண்டால் மிச்சங் கசிட்டம். இதினால்தான் நேத்தும் வரவில்லை. இண்டைக்குப் பிந்தினது” என்று பணிவாகக் கூறினான்.
“அட முட்டாளே, எனக்குத்தான் பால் இல்லாமற்போனாலும் கடவுளுக்கும் பால் இல்லையே. இது என்ன அக்கிரமம். ஒரு கொஞ்சநேரம் இடைபிடித்து இங்கே வரக்கூடாதா? அரை மணித்தியாலம் பிந்துவதால் உன் குடும்பம் பாழாய்ப் போய்விடுமா! அவ்வளவு பெரிய குடும்பமா அது! இராமா! ஓலை யை நறுக்கு ஆயத்தஞ்செய். இனி இப்படிச் செய்வாயானால் …..” என்றார் காருண்யமூர்த்தி கதிரை வேலர்.
இராமனுக்கு ஒரே கலக்கம்! ஒரு பெரிய மூச்சுவிட்டுப் பின் அவரைப்பார்த்து, “கமக்காரன் பசு-பட்டினிகிடப்பது எனக்கும் துக்கந்தான். ஆனாலும் இங்கை இறம்பிய புல்லுப் பட்டடையும் வைக்கல் குவியலும் இருக்கு. இதுகளை மாட்டுக்குப் போடு வியள் எண்டு நம்பினேன்” என்றான்.
இச் சொற்களைக் கேட்டதும் கதிரைவேலருக்குத் தொண் டைக்குள்ளே 6 கட்டுச் சீனாவெடி ஒருமித்து வெடித்து விட்டது. “ஆமோ! என் காணிக்குள் குடி இருக்கிற நீயும் எனக்குப் புத்தி கூறத் தொடங்கி விட்டாயா? கவனமாய் நட. இல்லாவிட்டால் நீ குடி எழும்ப வேண்டியும் வரும்” எனத் திருவாய் மலர்ந்தார்.
இந்தப் பேச்சுக்களை எல்லாம் நன்றாய் அவதானித்தான் சற்றுத் தூரத்தில் மாமரத்தின் கீழ் இருந்து வாசித்துக் கொண்டிருந்த நடராசன். இவனுக்கு வயது இருபது. ஒரு கல்லூரியில் “இன்றர் சயன்ஸ்” (Inter Science) படிக்கிறவன். நேற்றுத் தான் லீவில் வந்தவன். சிறிது முற்போக்குடையவன். பாரதியார் பாடல்களை வேதம் போல் போற்றுபவன். இவன் அங்கே வந்து தந்தையை நோக்கி “ஐயா, எங்கள் நாய்க் குட்டியின் பேரை இப்போது மாற்றிவிட்டீர்களா” என்றான். “இல்லை” என்றார் கதிரைவேலர். “எங்கள் நாயை நீங்கள் “அட இரத்தினா” என்று அடிக்கடி கூப்பிடுவீர்கள். இன்று அட ராமா என்று பற்களும் நொறுங்கும்படி கூப்பிட்ட சத்தம் என் காதிற் பலமுறை விழுந்தது. ஆனபடியால் தான் நாயின் இரத்தினன் என்ற பெயரை மாற்றிவிட்டு, இராமன் என்று இப்போது பேர் வைத்திருக்கிறீர்களாக்கும் என எண்ணிக் கேட்டேன்” என்றான்.
“இல்லை, இவனைத்தான் அட ராமா என்றேன். இவன் எங்கள் வீட்டு வேலையாள் தானே” என்றார் தந்தை. மகன் முகம் மாறப்பெற்று, “ஆ! இந்த மனிதனையா கூப்பிட்டீர்கள். இந்த ஆளுக்கும் உங்களுக்கும் ஒரு வயதுதானே இருக்கும். இவருடைய குடும்பநிலைமையை உங்களுக்குச் சொல்லிய போது கேட்ட நான் என்னுள் அழுதுவிட்டேன். எவ்வளவு நிர்ப்பந்தம்! ஓலை இல்லாவிட்டால் சுவாமிக்குப் பால் கிடை யாது என்றீர்களே. 5-6 பேர் வருந்தித் துடிக்கவிட்டுச் சுவாமிக்குப் பால் கொண்டு போகத்தான் வேண்டுமா? அந்தப் பாலை அங்கே வருந்துங் குழந்தைகளுக்குப் பருக்கினாற் கோடி புண்ணியம் வருமே! …” என்று பின்னரும் ஏதோ சொல்வதற்கிடையில் தகப்பன் சீறி எழுந்து “அட பயலே உன்னைப் படிக்கவிட்டது எனக்குப் புத்திசொல்லவோ! வாரக் குடியானவனைத் தூக்கி மடியில் வைக்கச் சொல்லுகின்றாய். அவனை அறுக்கை பண்ணாவிட்டால் நாளைக்குத் தலையில் ஏறிவிடுவானே” என்றார்.
மகன் “ஐயா, நீங்கள் முற்பிறப்பில் ஏதோ ஒருவிதப் புண்ணியஞ் செய்தபடியாலாக்கும் பணம் பெற்றீர்கள். பாவத்தினால் இந்த மனிதன் வறுமையடைய நேரிட்டது. செல்வத்தைக் காரணமாகக் கொண்டு (சாதி நோக்கியும்) அகங்காரங் கொள்வது நீதியல்ல. மேலும் இந்த ஆளைத் தூக்கித் தலையில் வைக்கும்படி நான் கூறவில்லை. உங்கள் வீட்டினுள்ளும் விடவேண்டாம். ஆனால் இத வார்த்தைகளால் அழையுங்கள். உணவு கொடுக்கும் போது ஆதரவாகப் புனிதமான இடத்தில் இருத்திக் கொடுங்கள். அவர்கள் படுந்துன்பத்துக்கு இரங்குங்கள். அவர்களின் அளவுகடந்த கஷ்டத்தினால்தான் உங்களுக்குச் சுகவாழ்வு கிடைக்கின்றதென உணருங்கள். பழைய வழக்கமென்று எதையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள். மேலும் சுவாமி விவேகானந்தர் ஒரு சக்கிலியன் வீட்டில் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டார் என்று நான் வாசித்திருக்கின்றேன்” என்றான்.
இவைகளைக் கேட்டதும் பிதாவுக்குக் கோபம் பிரசண்ட மாருத மாயிற்று. பல்லை நெறுமினார்! சொண்டைக் கடித்தார்! “இந்தச் சனியனுக்காகவா நீயும் பேசுகிறாய். இப்படிப் பேசுவாயானால் உன்னைப் படியாதபடி மறித்துவிடுவேன். இவனையும் குடி எழுப்புவேன்” என்றார். பிதாவின் இரக்கமற்ற நெஞ்சை யறிந்த மகன் நடராசன் ஏதோ ஒன்றை உள்ளத்திலடக்கிக் கொண்டு யாதும் பதில் பேசாதவனாய் அப்புறமகன்று வீட்டினுட் புகுந்து மீண்டு இராமனோடு தானும் ஓலையைக் கிழித்துக்கொண்டு “இராமு நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே! முன்னொரு முறை ஐயா கடுமையான வருத்தமாய் இருந்தபோது நீ குடி இருக்கும் காணியை என்பேருக்கு எழுதிவிட்டார். ஆதலால் குடி எழுப்ப முடியாது என்று கூறி 10 ரூபா நோட்டு ஒன்றும் 5 ரூபா நோட்டு மூன்றும் சுருட்டிய ஒரு சுருளை நீட்டினான். இராமன் கண்ணிழந்தவன் மீண்டுங் கண்பெற்றதுபோல் மகிழ்ச்சி யடைந்து வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தான்.
மற்றநாள் கதிரைவேலர் காசுப்பெட்டியைத் திறந்து பார்த்தார். ஐயோ! நாளைக்குப் பிள்ளையார் கோவிலில் அன்ன தானத்துக்கு வைத்த பணத்தில் 25 ரூபா காசைக் காண வில்லை! என்று கலங்கினார். மகன் நடராசன் அல்லது கொடைராசன் ஒன்றுந் தெரியாதவன்போல் நின்று தானும் அங்குமிங்குங் தேடினான். தேடிக்கொண்டு “நேற்று அந்த மனிதனை ஏசிய பாவத்தினாற் காசு மாயமாக மறைந்து விட்டதாக்கும்” என்று ஒருவகையான அசட்டைத் தனமாகக் கூறினான். கதிரைவேலர் சாஸ்திரங் கேட்கப் புறப்பட்டார். (அப்பால் ஏதும் ருசிகரமான சம்பவம் நடந்தாற் பின் எழுதுவேன்.)
– ஈழகேசரி, 06.02.1938.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.
![]() |
மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
தனக்கு வந்தால்
ஸ்ரீ.தாமோதரன்
September 27, 2026
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026
