மெய்யன் நடராஜ்

மெய்யன் நடராஜ்
 

என்னுரை – காதலியின் கல்யாணம், 2022.

சற்றே இடைவெளி விட்டு எனது இரண்டாவது தொகுப்பு சிறுகதைத் தொகுதியாக வெளிவருவதில் மனக்கிளை மகிழ்ச்சிப் பறவையை உட்கார வைக்கிறது. பொதுவாக ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே சற்று இடைவெளி விடவேண்டும் என்பார்கள். இங்கே எனது இரண்டாவது குழந்தைக்கு சற்று பெரிய இடைவெளி

விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. “காதலியின் கல்யாணம்” . இது வெறும் காதலை மட்டும் கருவாகக் கொண்டு உருவானதல்ல. இது ஒரு கதையின் தலைப்பு. காதலொடு சமூகத்தில் அன்றாடம் நம் கண்முன் நடக்கும் பல சம்பவங்களைக் கொண்டு உருவாகியிருக்கும் பதைபதைப்பு. வெகு நீண்ட காலமாக ஒரு சிறுகதைத்தொகுப்பு வெளியிடவேண்டும் என்ற எண்ணத்திற்கு காத்திருப்பு அதிகம். காத்திருப்பை மேலும் காத்திருக்க வைக்காமல் உடனடியாக அச்சுவாகனமேற்றி வாசகர் உங்கள் பார்வைக்கு கொண்டுவருவதில் பேரு மகிழ்வு கொள்கிறேன்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் அமைந்த கதையாகவும் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளாகவும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை பத்திரிகைகளில் வெளிவர காரணமாக இருந்த நான் என்றும் போற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காத அதே வேளை சமுதாயத்தில் நடக்கும் சில அநீதிகளையும் அவலங்களையும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் வாழும் உங்கள் பார்வைக்கு எழுத்துகளாய் வைக்கிறேன். கதைகளை வாசித்து உங்கள் மேலான அபிப்பிராயங்களை அறியத்தாருங்கள். அது என் எழுத்துப்பணியை மேலும் இழுத்துச் செல்ல ஊக்கமாத்திரையாய் அமையும். இப்புத்தகத்திற்கான வாழ்த்துரையை வழங்கிய சக எழுத்தாளர் திரு. பாலா சங்குப்பிள்ளை அவர்களுக்கும் , பல்வேறு வேலைப்பளுவுக்கு மத்தியிலும் மிகச் சிறப்பான முறையில் அணிந்துரைகளை வழங்கியநம் நாட்டுக் கவிஞரும் எழுத்தாளருமான திரு நஜ்முல் ஹுசைன் ,தமிழகம் காரைக்குடியைச் சேர்ந்த கவிஞரும் பாடலாசிரியருமான செ. இராசமாணிக்கம் ஆகிய இருவருக்கும், என் நன்றி. மேலும் இப்புத்தகத்தை பதிப்பித்து வெளியிடும் நிகழ் ஊடகத்திற்கும் அதன் நிறுவுனர் திரு ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. என் முதல் நூலுக்குத் தந்த ஆதரவை இந்நூலுக்கும் தந்து கைகோர்க்க வேண்டுகிறேன்

நன்றி ,
வணக்கம்

மெய்யன் நடராஜ்
No. 18/5/1 Thelankapaththa ,
Meeghaawatta road,
Wattala – srilanka Email ; meiyannadaraj@gmail.com