பதிப்பாசிரியர் முகவுரை
(மரியாதைராமன் கதைகள் – பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)
மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.
புகழ்மிகு கதையிலக்கியங்கள் :
விக்கிரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள். தனாலிராமன் கதைகள், இராயர் – அப்பாஜி கதைகள், மரியாதைராமன் கதைகள் முதலியன மக்களிடையே பரவ லாக வரவேற்புப் பெற்ற கதையிலக்கியங்கள் ஆகும். இவற்றுள் ‘மரியாதைராமன் கதைகள்’ தமிழ் மண்ணைக் களனாகக் கொண்டு தோன்றிய கதைகளாகக் காட்சி தருகின்றன. இருநூற்றாண்டுகளாக மரியாதைராமன் கதைகள் தமிழ் மக்களிடையே வழங்கிவருகின்றமைக்குச் சான்றுகளும் உள்ளன. இக்கதைகள் வெறும் பொழுது போக்குச் சுவையை அளிக்கும் கதைகளாக மட்டுமல்லாமல் அறிவுக்கு விருந்தாகும் படைப்புகளாகவும் விளங்குகின்றன.
மரியாதைராமன் கதைகள் :
மரியாதைராமன் சோழநாட்டைச் சார்ந்தவனாக இக் கதைகளில் குறிப்பிடப்படுகின்றான். மரியாதைராமன் என்னும் பாத்திரத்தின் மதிநுட்பத்தை மையமாகக்கொண்டு பின்னப்பெற்ற இக்கதைகள், மரியாதைராமனை ஓர் உணமைப்பாத்திரமாகப் பலரின் உள்ளங்களிலும் பதியச் செய்துள்ளன. மரியாதைராமன் கதைகள் நாட்டுப்புறவியல் தன்மையுடைய கதைகளாக இருப்பதையும் நீதிக்கதைகள் பலவும் அவன் பெயரால் வழங்குவதையும் அறிஞர் தெ.பொ.மீ. குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியங்களில் மரியாதைராமன் பற்றிய குறிப்புகள் :
அண்மை நூற்றாண்டுகளில் தோன்றிய செங்குந்தர் துகில்விடுதூது, சங்கரமூர்த்தி விறலிவிடுதூது. நம்பிச் சதகம் ஆகிய இலக்கியங்களில் மரியாதைராமன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
Mariyathay-Raman is usually thought of as the minister of the Krishna Deva Raya; but in the folklore he has also become a tradition, gatharing all Tales of Justice around his name. -T. P. Meenakshisundaran, Foreword, Tamil Wisdom, P. vii.
திருக்குறுங்குடி நம்பி பேரில் நம்பிச்சதகம் ‘ என்னும் இலக்கியம் 18ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும். இவ்விலக்கியத்தைப் படைத்தவர் ‘வரராமயோகி’ என்னும் வலிய மேலெழுத்து யோகீச்வரன் ராமன்பிள்ளை என்பவர் ஆவார். அவ்விலக்கியத்தில், மரியாதைராமன் கதைகளில் பத்தாம் கதையான ‘அயலான் பெண்சாதியைத் தன் பெண் சாதி என்றது’ எனும் கதை,
“கொண்ட காதலன்முன்
சரியாய் மறுச்சொன்ன வனுக்குப் பாரி இத் தையலென்ற
மரியாதி ராமன் கதைபோல்” (நம்பிச்சதகம் – 81)
எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது.
தோன்றிய காலத்தை அறியச்சான்றுகள் கிடைக்காத, இருநூறு ஆண்டுப் பழமையுடையனவாய்த் தோற்றும் செங்குந்தர் துகில்விடுதூது’ எனும் நூலும், சங்கர மூர்த்தி விறலிவிடுதூது’ எனும் நூலும்,மரியாதைராமனின் வழக்காயும் திறத்தை மரியாதைராமனெனத் தீரா வழக்கைத் தெரிந்துரைத்து (அடி எண் 112-114), “மரியாதைராமனைப்போல் வந்த வழக்காயும் பெரியோர் (949. 676007 798-800) என் முறையே குறிப்பிட்டு அமைகின்றன.
மரியாதைராமன் கதையும் பஞ்சதந்திரக் கதையும்:
பஞ்சதந்திரக் கதைகளுள் ஒன்று மரியாதைராமன் கதைகளுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரியாதை ராமன் கதைகளுள் ஒன்றாக இடம்பெற்றுள்ள கதை “ஒருவன் தன்னிடத்தில் வைத்த இரும்பை எலி தின்ற தென்றது” என்னும் தலைப்பில் அமைந்ததாகும். இக்கதை வடமொழிப் பஞ்சதந்திரக்கதை மூலத்திலும், தமிழில் அக்கதைகள் செய்யுள் வடிவில் ஆக்கப்பட்டுள்ள இலக்கியங் களான வீரமார்த்தாண்ட தேவர் இயற்றிய ‘பஞ்சதந்திரப் பாடல்’, இயற்றியவர் பெயர் அறியப்படாத “செழியதரையன் பஞ்சதந்திரம்” ஆகியவற்றிலும் காணப்படுகின்றது. (காண்க. பிற்சேர்க்கை 3).
பஞ்சதந்திரக் கதை நூல்களில் இடம்பெற்ற இக்கதை யில் வழக்கைத் தீர்த்து வைத்த நீதிபதிக்கும் அரசனுக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. மரியாதைராமன் கதை களில் இக்கதை இடம்பெறும்பொழுது, அந்த நீதிபதியாக மரியாதைராமன் இடம்பெறுவதோடு தன் தீர்ப்பால் அவன் முக்கியத்துவமும் பெற்றுவிடுகின்றமையை நாம் காண முடிகின்றது.
மரியாதைராமன் கதையும் விக்கிரமாதித்தன் கதையும்:
பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்று மரியாதைராமன் கதை களில் இடம்பெற்றுள்ளதைப் போலவே. விக்கிரமாதித்தன் கதைகளில் ஒன்றும் மரியாதைராமன் கதைகளில் ஒன்றாக இ டம்பெற்றுள்ளது. அக்கதை மரியாதைராமன் கதைகளிலும் விக்கிரமாதித்தன் கதைகளிலும் கதைக்குள் கதையாகவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரியாதைராமன் கதைகளில் ஒன்று, ‘ நால்வர்க்குப் பொதுவிலிருந்த ரத்தினத்தை அவர்களில் ஒருவன் திருடியது’ என்னும் கதையாகும். இக்கதை விக்கிரமாதித்தன் கதைகளில் இரண்டாம்படிக்குக் காவலாகிய மதனாபிஷேக வல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகளில் ஒன்றினை ஒத்ததாகும். கதைக்குள் கதையாக விக்கிரமாதித்தன் கதை களில் இடம்பெறும் ஒப்புமை கொண்ட இக்கதையின் தலைப்பு ‘மதனசேனையின் கதை’ என்பதாகும்.
வேதாளம், விக்கிரமாதித்தனைக் கேள்வி கேட்க இக் கதையைச் சொல்லியது. இக்கதை சிறு மாறுதல்களுடன் மரியாதைராமன் கதைகளில் இடம்பெற்றுள்ளது மரியாதை ராமன், சகோதரர் நால்வரில் திருடனைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு இக்கதைபைச் சொல்லிக் கதையில் வருபவரில் யார் சிறந்தவன் என்று, வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்பது போலவே கேட்கிறான். கதையில் வரும் திருடனே சிறந்தவன் என்று சொல்லிய விக்கிரமாதித்தன் அங்குச் சரியான பதில் கூறியவனாக ஆகின்றான். இங்கோ ‘திருடனே சிறந்தவன்’ என்று கூறிய ஒரு சகோதரன் குற்ற வாளி என்று பிடிபடுகிறான். (பதிப்புகளுக்கேற்ப இக்கதை யில் சிறுசிறு மாறுதல்கள் காணப்படுகின்றன.)
ஆங்கில மொழிபெயர்ப்புகளில் மரியாதைராமன் கதைகள் :
மரியாதைராமன் கதைகள் அயல்நாட்டாரையும் ஆங்கில எழுத்தாளர்களையும் ஈர்த்துள்ளது. அதன் விளைவாக இக்கதைகள் செய்யுள் வடிவிலும். உரை நடை வடிவிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. எட்வர்ட் ஜ்விட் இராபின்சன் (Edward Jewitt Robinson) என்பவரால் ஆங்கிலத்தில் செய்யுள் நடையில் மொழி பெயர்க்கப்பட்ட மரியாதைராமன் கதைகளை உள்ளடக்கிய நூலானது 1873ஆம் ஆண்டிலேயே “Tamil Wisdom’ என்னும் பெயரில் இலண்டனிலிருந்து வெளிவந்துள்ளது. இந்நூல் ”Tales and Poems of South India’ எனும் தலைப்பில் 1885இல் விரிவுபெற்ற நூலாகவும் வெளிவந்துள்ளது. “Tamil Wisdom” நூலானது 1957இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாராலும். “Tales and Poems of South India” நூலானது 2000இல் தஞ்சை சேக்கிழார் அடிப்பொடி திரு தி.ந.இராமச்சந்திரனாராலும் மறுவெளியீடுகளாக தமிழகத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
1873ஆம் ஆண்டிலேயே, செய்யுள் நடையிலே, அயல் நிலத்திலிருந்து. அயல்மொழியினரால் மரியாதைராமன் கதைகள் மொழிபெயர்க்கப்பெற்று நூலாக மலர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
“Tales and Poems of South India’ நூல், “கதா மஞ்சரி” எனும் நூலில் மரியாதைராமன் கதைகள் இடம் பெற்றுள்ளமையையும், அதில் முதற்கதை வழக்கமான மரியாதைராமன் கதைகளில் உள்ள திலிருந்து சற்றே மாறு பட்டு அமைந்துள்ளமையையும், குறிப்பிடுகிறது (பக். 268, 269). இச்செய்தியிலிருந்து 1873க்கு முன்னர் வெளிவந்த “கதாமஞ்சரி” நூலில் மரியாதைராமன் கதைகள் இடம் பெற்றமையை அறியமுடிகிறது.
எட்வர்ட் ஜ்விட் இராபின்சன், மரியாதைராமன் கதை களுள் இருபதாவது கதையாக இடம்பெறுவது, மொழி பெயர்க்க ஏற்றதாக இல்லை எனவும், அதனால் அக் கதையை மட்டும் மொழிபெயர்க்கவில்லை எனவும் குறிப்பிடு கின்றார் (ப.305).
ஆங்கிலத்தில் உரைநடை வடிவிலான மொழிபெயர்ப்பை பி. இராமச்சந்திரராவ் என்பார் ஆக்கியுள்ளார். இம்மொழி பெயர்ப்பு நூலில் வெளியிடப்பெற்ற ஆண்டு குறிப்பிடப்பட வில்லை. எனினும் இம்மொழிபெயர்ப்பு பழைமையானதென் பதை நூலால் உணரமுடிகின்றது
இந்நூலகப் பதிப்புக்கு அடிப்படையான சுவடி :
இப்பதிப்பிற்கு அடிப்படையாய் அமைந்த சுவடி, சரசுவதி மகால் நூலகத் தமிழ்த்துறையில் இடம்பெற்றுள்ள 1830 ஆம் எண் சுவடியாகும். இச்சுவடியில் 38 ஏடுகளில் நூல் எழுதப்பெற்றுள்ளது. மரியாதைராமன் கதைகள், இரண்டாவது கதையிலிருந்துதான் ‘குருவாழ்க குருவே துணை’ எனும் தொடக்கக் குறிப்புடன் தொடங்குகின்றன. சுவடியில் மரியாதைராமன் கதைகளுடன் இராயர் அப்பாஜி கதைகளும் இடம்பெற்றுள்ளன. அதனை அடுத்துத் தெனாலிராமன் கதைகளின் தொடக்கம் மட்டும் எழுதப் பெற்று அதன்பின் ஏடு தொடர்ந்து எழுதப்பெறாமல் டை யிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு, அச் சுவடியில் இடம்பெற்றுள்ள ‘மரியாதைராமன் கதைகள் மட்டும் நூலாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன.
இச்சுவடி சரசுவதி மகாலுக்குத் தாளியாப்பட்டி திரு வை. பாலார் கவுண்டர் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப் பெற்றதாகும். அவருக்கு நூலகத்தின் நன்றி உரியது.
இப்பதிப்பின் அமைப்பு :
இப்பதிப்புக்கு அடிப்படையான சுவடியில், வழக்கமாக மரியாதைராமன் கதைகளில் இடம்பெறும் முதற்கதையும் இறுதிக்கதையும் காணப்பெறவில்லை. ஆதலால் இவ்விரு கதைகள் மட்டும், பழம்பதிப்பு நூலான “கதாசிந்தாமணி யென்றுவழங்கிய மரியாதைராமன் கதை” எனும் நூலி லிருந்து (1904) இப்பதிப்பு நூலில் எடுத்தளிக்கப் பெற்றுள்ளது.
கதைகளுள் இடம்பெற்றுள்ள பழமொழிகள் தடித்த எழுத்தில், கவனத்தில் நன்கு படும் வண்ணம் அச்சிடச் செய்யப்பெற்றுள்ளன.
நூலின் முற்பகுதியில் விரிவான இப்பதிப்புரையும் பொருளடக்கமும் இடம்பெறுகின்றன. பிற்பகுதியில் அருஞ்சொல் அகரநிரல், பழமொழி அகரநிரல், அரிய பிற் சேர்க்கைகள் ஆகியன இடம்பெற்றுப் பதிப்புக்கு வளம் சேர்க்கின்றன.
நமது பதிப்புக்கும் பிற பதிப்புகளுக்கும் உரிய மூலம் குறித்து:
மரியாதைராமன் கதைகள் இதுவரை ஐம்பதுக்கும் மேற் பட்ட பதிப்புகளைப் பெற்றிருக்கும் எனக் கருதலாம். 1873க்கு முன்னரே கதாமஞ்சரி எனும் நூலிலும், வேறு சில நூல்களிலும் இக்கதைகள் இடம்பெற்று அச்சுவடிவில் வெளி வந்தமையை அறியமுடிகிறது. 1904இல் மணிமங்கலம் வடிவேலு முதலியாரால் பரிசோதிக்கப்பெற்ற கதாசிந்தா மணி எனும் நூலிலும் இக்கதைகள் இடம்பெற்றுள்ளன.
இக்கதைகள் வாய்மொழி மூலத்திலிருந்து தொகுக்கப் பெற்றனவா சுவடிகளிலிருந்து எடுத்துப் பதிப்பிக்கப் பெற்றனவா என்பதை அறிய இயலவில்லை.
நமது பதிப்பு, சுவடி அடிப்படையில் அமைந்ததாகும். மரியாதைராமன் கதைகளுக்குச் சுவடி அடிப்படையில் வேறு பதிப்புகள் எதுவும் தோன்றியதாகத் தெரியவில்லை. கதா சிந்தாமணி எனும் நூலுள் இடம்பெற்ற கதைகளுக்கும் நமது பதிப்பிலுள்ள கதைகளுக்கும் நடையமைதியில் பல ஒற்றுமைகள் உள். இரண்டும் ஒரு மூலத்திலிருந்து உருவாகியிருக்கலாம்.
‘மரியாதைராமன் கதைகள்’ எனும் பெயரில் இன்று பல வெளியீட்டாளர்களாலும் நூல்கள் வெளியிடப்பெற்றுள்ளன. அவை பழம்பதிப்பு நூல்களின் அடிப்படையில், அவ்வந் நூல்களின் பதிப்பாசிரியர்களால் அவரவர் நோக்குக்கும் போக்குக்கும் ஏற்பச் சிறுசிறு மாறுதல்களுடன் தம்தம் நடையில் எழுதப்பெற்றவையாக உள்ளன.
இப்பதிப்புகளில், பதிப்பாசிரியர், தொகுப்பு (தொகுப் பாசிரியர்), பார்வையிட்டவர், ஆசிரியர், எழுதியவர், என்று குறிப்பிடப்பட்டுப் பெயர் குறிக்கப்பெற்றும், எதுவும் குறிப்பிடப்பெறாமல் பெயர்மட்டும் குறிக்கப்பெற்றும் பதிப்பித்தோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்பதிப்பு களின் ஆசிரியர்களில் பலர் தங்கள் முன்னுரைகளில். கதை களை இக்கால நடைமுறைகளுக்கேற்பவும், கொச்சையான சில பகுதிகளை நீக்கிவிட்டும், தம் நடையிலும் எழுதியுள்ள தாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டுப்புறவியல் அறிஞரான திரு சு. சக்திவேல் தயாரித்துள்ள நாட்டுப்புறக் கதைப்பாடல்களின் பெயர் களைக் கொண்ட அகரவரிசைப்பட்டியலில் ‘மரியாதைராமன் கதையும் இடம்பெற்றுள்ளது. (நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் (Folk Ballads). நாட்டுப்புறவியல் பக்.215-230).
ஆனால் மரியாதைராமன் கதைகள் செய்யுள் வடிவில் – கதைப்பாடல் வடிவில் இருப்பதாகத் தெரியவில்லை.
மரியாதைராமன் கதைப்பதிப்புகள் – சில வேறுபாடுகள் :
மரியாதைராமன் கதைகளின் எல்லாப் பதிப்புகளும் ஒரே மாதிரியான கதை வரிசையொழுங்கைக் கைக்கொள்ள வில்லை. சில பதிப்புகளில் வரிசையொழுங்கு ஒத்தும் சில பதிப்புகளில் வரிசையொழுங்கு மாறியும் உள்ளது.
நமது பதிப்பில் கதைகளுக்கான தலைப்புகள், ‘தன் குழந்தையைக் கொன்று சக்களத்தி மேல் பழிபோட்டது.’ ‘……வழக்கு நேரிட்டது’, ‘முத்தை இல்லை என்றது ‘, ‘…… எலி தின்றது ‘ என்பன போல அமைந்துள்ளன. அசோக்குமாரால் உருவாக்கப்பெற்றுத் தன லட்சுமி பதிப்பகத்தால் 1990இல் வெளியிடப்பட்ட நூலில் உள்ள கதைத்தலைப்புகள் பொருத்தமான ‘உலகநீதி’ இலக்கியத் தொடர்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நமது சுவடிப் பதிப்புக் கதைகளில் பாத்திரங்களுக்குப் பெயர்கள் காணப்பெறவில்லை. சில பதிப்புகளில் பதிப்பாசிரியர்களே பாத்திரங்களுக்குத் தத்தம் நோக்கில் பெயர்கள் இட்டிருக்கின்றனர். நமது சுவடிப்பதிப்பில் பாத்திரங்களுக்குச் சுட்டப்படும் சில சாதிப்பெயர்கள் வேறு சில பதிப்புகளில் மாறிக் காணப்படுகின்றன.
பழமொழிகளே இடம்பெறாமல் கதைகள் அமைந்துள்ள நிலையையும் சில பதிப்புகளில் காணமுடிகின்றது.
சில பதிப்பு நூல்களில் புதிதாகச் சில கதைகள் இடம் பெற்றுள்ளன. அவை வெவ்வேறு நூல்களில் உள்ள பரவல் பெற்ற வாய்மொழிக் கதைகளாகும்.
“யானைக்கும் பானைக்கும் சரி என்னும் கதையின் பாத்திரங்களில் உள்ள இந்து. முசுலீம் என்னும் மதச் சுட்டுப் பெயர்கள், சிவகுமார் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள மரியாதைராமன் கதைகள் பதிப்பில் காணப்பெறவில்லை. இம்மதச் சுட்டுப்பெயர்கள் நமது பதிப்பிலும் பிற பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ளன.
மரியாதைராமன் கதைகளில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் :
மரியாதைராமன் கதைகள் ஒவ்வொன்றும் தம் முடிவுப் பகுதியில் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு முடிவனவாக அமைந்துள்ளன. 2,3, 5ஆம் கதைகளில் மட்டும் இரண்டு இரண்டு பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் இப்பதிப்பு நூலின் இறுதி யில் அடைவுபடுத்தி அளிக்கப்பெற்றுள்ளன (ப.55,56)
மரியாதைராமன் கதைப்பதிப்புகள்- குறிப்பிடத்தக்க வேறுபாட்டுப் பகுதிகள் :
நமது நூலகப்பதிப்பில் இடம்பெற்றுள்ள கதைப்பகுதி களும் பிற பதிப்புகளில் இடம்பெற்றுள்ள கதைப்பகுதிகளும் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவை சமூகவியல் நோக்கில் எண்ணிப்பார்க்கத்தக்கவை.
எடுத்துக்காட்டாக ஒரு பகுதியைக் காணலாம்.
மரியாதைராமன் நீதிபதியானதும், அவனுடைய தந்தை அவனை அப்பதவியை விட்டுவிடச் சொல்கின்றார். அதற்கு அவன் மறுமொழி கூறுகின்றான்.
இப்பகுதி நமது சுவடிப்பதிப்பு நூலிலிருந்து:
தன் குமாரனுக்கு மரியாதைராமனென்கிற பேரும் நியாயாதிபதி உத்தியோகமும் கிடைத்த சமா சாரத்தை அவன் தகப்பன் கேள்விப்பட்டு அவனிடத் திற்கு வந்து “ஓகோ பிள்ளாய்! என்ன காரியம் செய்தாய்? இப்படி மதிமோசம் போகலாமா? நியாயசூச்சம் அறிகிறது, தேவர்களுக்கும் எளிதல்லவே. சற்றே பிசகினால் அதிக பாவம் விளையுமே! நீ இந்த நியாயாதிபதியத்தை விட்டு விடு” என்று சொன்னான். அதைக்கேட்டு மரியாதை ராமன், ‘ஓய் என் பிதாவே! கோபம் செய்யவேண் டாம். கடவுளானவர் எப்படிப்பட்ட நியாய சூட்சுமத் தையும் கண்டுபிடிக்கத்தக்க புத்தியைக் கொடுத்து அதிலே எவ்வளவும் குற்றம் வராமல் என்னைக் காப்பாற்றுவார். தானாகவந்த சீதேவியைக் காலா லுதைத்துத் தள்ளுவது போல் உலகத்தை எல்லாம் ஆளும் அரசனாலே கிடைத்த இந்த நியாயாதிபதித் தானத்தை விட்டுவிடச் சொல்லா திருக்கும்படி, உம்மைப் பிரார்த்திக்கிறேன் என்றான். (ப.4 )
இதே. மரியாதைராமனின் தந்தை அறிவுரை கூறும், மரியாதைராமன் மறுமொழி கூறும் கதைப்பகுதி பிரேமா பிரசுரப் பதிப்பு நூலிலிருந்து:-
(இப்பதிப்பு முதற்பதிப்பாக 1958இலும் எட்டாம் பதிப்பாக 1989இலும் வெளிவந்துள்ளது.)
மரியாதைராமனின் தகப்பனார் தன் குமாரனுக்கு நீதிபதி ஸ்தானம் கிடைத்ததைக் கேள்விப்பட்டு அளவிலாத ஆனந்தம் கொள்வதற்குப்பதிலாக அளவிலாத துக்கம் கொண்டவராய்த் தம்குமாரனிடம் வந்து, மகனே! நம்முடைய குலத்தொழிலான விவசாயத்தை விட்டுவிட்டு ஏன் இந்த அபாயகர மான நீதிபதியின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டாய்? நீதி நுட்பங்களை அறிந்து சரியான தீர்ப்பு வழங்கு வது தேவர்களுக்கும் எளிதான காரியமல்ல. தராசின் தட்டு இறங்காமல் நீதி வழங்கவேண்டும். சிறிது தவறினாலும் நிரபராதிகளின் கண்ணீர் நம்முடைய ஏழேழு தலைமுறையையும் கூர்மையான வாள் போல் அறுக்குமே! பழிபாவமும் வந்து சேருமே! நமக்கு எதற்கப்பா இந்த வம்பெல்லாம்? அபாயகர மான அந்தப் பதவியை விட்டுவிடு!” என்றார்.
அதற்கு மரியாதைராமன், “தந்தையே! கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒருவன் தன் குலத்தொழிலைத் தான் செய்யவேண்டுமென்று சொல்வது அறி வுடைமையாகாது. பிறப்பை ஒட்டித் தொழிலை வகுப்பதும், சாதாரண குடும்பங்களில் உயர்ந்த அறிவுடையோர் பிறக்கமாட்டார் என்னும் மூட நம்பிக்கையும் வெகு காலமாகவே நம் நாட்டைப் பீடித்துப் பெரும்வியாதியாக வளர்ந்து வந்திருக் கிறது. அந்தச் சம்பிர தாயத்தை உடைத்தெறி வதற்காக நான் இப்போது நீதிபதியாக ஆகியிருக் கிறேன்!. நீதிதேவனான கடவுள் எப்படிப்பட்ட நீதி நுட்பத்தையும் கண்டுபிடிக்கத்தக்க அறிவையும் ஆற்றலையும் எனக்குக் கொடுத்து நீதி வழங்கும் முறையிலே எள்ளளவும் குற்றம் வராமல் என்னைக் காப்பாற்றுவார். தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளுவதுபோல நாடாளும் மன்னனால் கிடைத்த இந்த நீதிபதி ஸ்தானத்தை வீணாக விட்டுவிடும்படி தயவுசெய்து சொல்லாதீர்கள்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டான்!
இந்த இரண்டு பகுதிகளையும் உற்றுநோக்கும் போது அவற்றின் தொனியை, வெளிப்படுத்தும் கருத்துகளை அடையாளங் காணமுடிகின்றது. முக்கியமான வேறுபாடு புலப்படுகின்றது.
குலத்தொழில் செய்யும் மரபைப் போற்றும் பழமை வாதியாக மரியாதைராமனின் தந்தை பேசுவதையும், திராவிட இயக்க- பகுத்தறிவுச் சிந்தனைகளைக்கொண்ட ஓர் இளைஞன் பேசுவது போல மரியாதைராமன் பேசுவதையும் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள தைப்பகுதியில் நாம் காண்கின்றோம்.
பிரேமா பிரசுரப் பதிப்புக் காலத்திற்கு முன்பு சுவடியில் எழுதப்பட்டதான நமது பதிப்பில் தந்தை மகன் உரையாட லில் குலத்தொழில் போன்ற எந்தக் கருத்தும் இடம்பெற வில்லை. பழைய சுவடியில், தந்தை சாதியைக் காரணங் காட்டி நம் சாதிக்கு ஏற்காது என்று மரியாதைராமனைப் பதவியைவிட்டு விலகச்சொல்லவில்லை. மரியாதைராமனும்
புரட்சி இளைஞனாக விடைதரவில்லை. தன் காலத்தின் கருத்தோட்டத்தைத் தனக்கு முந்தைய காலத்துப் படைப் பான- பாத்திரமான மரியாதைராமனை வாய்ப்பாகக்கொண்டு அவன் கூற்றாக ஆக்கிப் பதிப்பித்துள்ளார் பிரேமா பிரசுரப் பதிப்பாசிரியரான அரு.இராமநாதன். (பிற சில பதிப் பாசிரியரும் இவரைப் பின்பற்றியுள்ளனர்).
அவர் சுவடியை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்க வில்லை என்பதையும் அவரே அடிப்படைக் கதையைத் தன் மனப்போக்கிற்கு இயையக்கொண்டுசென்றுள்ளார் என்பதை யும் அப்பதிப்பின் ‘புதிய தமிழில் புதிய கதைகளுடன் என்னும் வரி சுட்டி நிற்கின்றது.
கால மாற்றத்தால்-சமூகப் பழக்கவழக்க மாற்றத்தால் கதையில் ஏற்பட்டுள்ள மாறுதல்
ஆண்கள் காதுகுத்திக்கொண்டு காதில் கடுக்கன் அணிந்துகொள்ளும் வழக்கம் கடந்த நூற்றாண்டு வரை நம்நாட்டில் இருந்துவந்தது. இப்போது இவ்வழக்கம் ‘சென்று தேய்ந்து இற்று’விட்ட து.
நமது மரியாதைராமன் கதைப்பதிப்பு நூலிலும் பிற பழம்பதிப்பு நூல்களிலும் உள்ள ‘ஒருவன் காதுக்கடுக்கனை ஒருவன் திருடியது’ என்னும் கதை ஆண்கள் காதுக்கடுக்கன் அணியும் வழக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இனனொரு வகையில் சொல்லப்போனால் ஆண்கள் காது களில் கடுக்கன் அணியும் வழக்கம் நிலவிய காலக்கட்டத்தில் இக்கதை தோன்றியிருக்கின்றது எனலாம்.
தற்காலத்தில் ஆண்கள் காதுகளில் கடுக்கன் அணியும் வழக்கம் வழக்கற்றுவிட்டது. இதனை மனத்தில்கொண்டு. அண்மையில் வெளிவந்த ‘மானோஸ்’ என்பவரை ஆசிரிய ராகக்கொண்ட “மரியாதைராமன் நீதிக் கதைகள் நூலில் மேலே குறிப்பிட்ட கதை. பொன் ஜிமிக்கிக்குக் கால் வந்தது’ என்னும் கதையாக உருமாறி இடம்பெற்றுள்ளது. பழைய கதையில் இடம்பெறும் இரு ஆண் பாத்திரங்களும் இதில் பெண் பாத்திரங்களாக மாற்றம் பெற்றுள்ளன.
கடுக்கன் ஜிமிக்கியாக உருமாறியுள்ளது. நூலைப்படிக்கும் தற்கால வாசகர்களுக்குக் கதை தற்காலத்தில் நடந்தது என்று தோன்றும்படி இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலமாற்றத்தால் -சமூகப் பழக்கவழக்க மாற்றத்தால் ஒரே கதை பேரளவு மாறுதல்களைப் பெற்றுள்ளமையை இப்பதிப்பு நூலின் கதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
நிறைவுரை:
மரியாதைராமன் கதைகளின் நடை நமது இப்பதிப்பில் பேச்சுவழக்குச் சொற்களையே பெரிதும் கொண்டு அமைந் துள்ளது. மரியாதைராமன் கதைகள் ஓரளவு எழுத்தறி வுள்ளவர் முதல் நன்கு கற்றவர் வரை, சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்க்கும் பாங்குடையன. இக்கதைகள் சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி ஊடகத்தின் வழியாகவும் மக்களிடம் சென்று சேர்ந்து வரவேற்புப் பெற்றதை அனைவரும் அறிவர்.
பரவலான வரவேற்புக்குரிய இக்கதைகள், கதை யிலக்கிய – நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களால் மேலும் ஆராய்தற்குரிய களமாக விளங்குகின்றன. அவ்வாய்வு களைத் தூண்டும் வகையிலும் துணையாகவும் இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது
இவ்விரண்டாம் பதிப்பின் நிறைபோற்றிக் குறை பொறுத்துத் தமிழுலகம் வரவேற்கும் என்பது இப்பதிப் பாசிரியனின் நம்பிக்கை.
ய.மணிகண்டன், தமிழ்ப்பண்டிதர்.
தஞ்சாவூர், 25-5-2001.
– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.