
அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் – ஆகஸ்ட் 1985
தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை
தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் ‘தேவி’ இதழ் ‘கண்ணீர்க் கதைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!
அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!
இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப் பீறிடும் பாசஉணர்வுடனும், சோகப் புயலில் தள்ளாடும் படகனைய நெஞ்சத்துடனும் கண்ணீர்முத்துக்களை உதிர்த்துள்ளார்; கதைகளாக!
நடந்த நிகழ்ச்சிகள் – இந்த அணிந்துரையை நான் எழுதும்போதுகூட நடந்துகொண்டிருக்கிற நிகழ்ச்சிகள், பூங்கோதையின் கைவண்ணம் பெற்று நம் மனத்தை உலுக்கியெடுக்கின்றன!
பெற்றெடுத்த தாயாரைக் காப்பாற்றிட எண்ணி, அவளைக் குளியலறையில் அடைத்துவிட்டுச் சிங்களவர்களை எதிர்க்கும் அவளது செல்வங்கள் தீயிலே தூக்கி எறியப்பட்டுச் சாம்பல் குவியலாய்க் கிடப்பதுகண்டு அந்தத் தாய் துடித்தழும் காட்சி யைப் படிக்கும்போது நமது கண்கள் நீர்வீழ்ச்சி களாகின்றன! தமிழன் கண்களல்லவா?
இடி! மின்னல்! பூகம்பம்! எரிமலை! இன்னோ ரன்ன தாக்குதலால் நம் இதயம் நொறுங்கிப் போகிற நிகழ்ச்சிகள்; கதைகளாக உருவெடுத்துள் ளன எனினும் – இந்தச் சோக ஓவியங்களில் புற நானூற்றுத் தாய்மார்களைச் சந்திக்கிறோம்! தாயகத் தின் விடுதலைக்காக விழுப்புண்களைத் தங்கள் மேனியில் மணியாரங்களாக அணிந்துகொள்ளும் போராளிகளைக் காணுகிறோம்! அரும்புகள் உதிர் வதையும், மலர்கள் வாடுவதையும், குடும்பச் சோலை கள் அழிவதையும் பார்க்கிறோம்; பதைக்கிறோம்!
இந்தப் பகைமுடிக்க வழியே இல்லையா என்று துடிக்கிறோம்!
பூங்கோதை எழுதியுள்ள இந்தக் கதைகள்; பொழுதுபோக்கிற்காக அல்ல!
புதுக் கருத்துக்களை விதைப்பதற்காக அல்ல!
புனித நீதிகளைப் போதிப்பதற்காக அல்ல!
அவற்றுக்குப் பயன்படவேண்டிய இந்தத் திறன் மிக்க எழுத்தாளரின் ஆற்றல் ஒரு இனம் அழிக்கப் படும் வேதனையான வரலாற்றை விளக்கிடப்பயன் பட்டிருக்கிறது என்பதுதான் இந்தக் கதைகளின் வாயிலாக நாம் அறிந்திடும் உண்மையாகும்!
இலங்கைத் தமிழ் இனம் படும் துன்ப துயரங்களை எத்தனையோ சாதனங்களின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கி வருகிறோம்!
அந்த உணர்வுபூர்வமான முயற்சிக்கு பூங்கோதை அவர்களின் இந்தக் கதைகளும் மெத்த உதவிகரமாக இருக்கின்றன!
குடம் குடமாகக் கொட்டப்படும் தமிழினத்தின் குருதி இலங்கைத் தெருக்களில் பெருகியோடுவதை- சிலதுளி மையினால் கதைகளாகச் சித்தரித்து தமிழ் ஈழ விடுதலைக்குத் தனது பேனா முனையினை, வாள் முனையாக மாற்றியுள்ள ஞானப்பூங்கோதைக்கு என் பாராட்டுகள்! வாழ்த்துகள்!
தமிழ்ஈழத்தை வென்றெடுக்கக் களம்காணும் வீரர்களுக்கு வெற்றித்திலகமிடுகிறேன்; இந்த அணிந்துரை வாயிலாக!
சென்னை 13-8-85
டாக்டர் கலைஞர்
மாண்புமிகு நீதியரசர் எஸ்.மோகன் அவர்களின் பாராட்டுரை
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த மனப்பான்மை தமிழனுடையது. திரை கடல் ஓடியும். திரவியம் தேடு என்று சொன்னாள் ஒளவை. பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலோ… திரவியம் தேடவோ தெற்கு நோக்கிச் சென்றார்கள் தாய் திக் நாட்டைவிட்டுத் தமிழர்கள். ஆனால் இன்று கற்றவர்களாக நிற்கின்றார்கள். அந்த நிலையிலேதான் பல்வேறு சோதனைகளை தாங்கவேண்டிய கட்டம் ஏற் பட்டது. எத்தனை குமுறல்கள்… எத்தனை கதறல்கள்…. எத்தனை உயிரிழப்பு… எத்தனை மானபங்கம். அவை கணக்கிலடங்கா. அதனைக் கண்ணாடி போல் காட்டி யிருக்கின்றார்கள் செல்வி பூங்கோதை.
இதிகாசம் கூறியது இலங்கையிலே அரக்கர்கள் வாழ்ந்தார்கள் என்று. இதிகாசத்தை நம்புகிறோளோ .. இல்லையோ…ராமாயணத்தை நம்புகிறோமோ… இல்லையோ… இன்றைய நடப்பு… இன்றைய வரலாறு அதை எடுத்துக் காட்டுகின்றது. மனித உட லிலே சிங்களவர்களாக இருக்கட்டும் தமிழராக இருக் கட்டும் ஓடுவது ஒரே நிறமான இரத்த மென்றால் ஏன் இந்தப் பாகுபாடு… ஏன் இந்தக் கொடூரம்…? மக்களை எங்கே வெறிபிடித்த செயல்கள்…? இது கொண்டு போய் விடும்…? மனித இனத்தின் அழிவின் எல்லைக்கல்லவா கொண்டுபோகும்…? செல்வி. பூங் கோதையின் நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் அந்த அழிவுப் பாதையிலேயிருந்து மீட்கப்படுவார்கள் என்பதில் ஐய்யப்பாடில்லை. அதற்காகவாவது அவர் களுடைய பேனாவளத்தை, சீரிய முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த முறையிலே எனது உளங்கனிந்த பாராட்டுதல்கள்.. போற்றுதல்கள்…
ஒரேமாதிரி இதயந்தான் ஒவ்வொரு மனித உடலிலும் துடிக்கிறது என்பது உண்மையானால் இனிமேலாவது இந்த உளம் நெகிழும் கதைகளைப் படித்த பிறகாவதுமனிதர்கள்… மனிதர்களாகட்டும்… நல்ல சிந்தனையைப் பெறட்டும்… நல்ல உணர்வுகளை பெறட்டும். அதற்கு இந்த சிறிய நூல் ஒரு ஒளி விளிக்காக விளங்கட்டும். பரந்த இருட்டிலே ஒரு சிறிய அகல்விளக்குக்கூட ஒளியை தருமல்லவா…!
‘தேவி’ ஆசிரியர் பா. இராமச்சந்திர ஆதித்தன் பி .எஸ். சி, அவர்கள் அளித்துள்ள வாழ்த்துரை
ஈழத்தமிழரின் வரலாறு எழுதப்படுகிற எழுச்சிமிக்க காலகட்டம், இது!
‘உலகில் சின்னஞ்சிறு குருவிகளுக்குகூட ஒரு கூடு இருக்கும். ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே!’ என்று மறைந்த தமிழர் தலைவர் சி.பா. ஆதித்தனார் அடிக்கடி கூறுவது உண்டு. அந்தச் சொற் களுக்குப் பின்னணி இப்போது பட்டப்பகலாகிவிட் டது. எல்லா நாடுகளை நோக்கியும் உலக அகதியாக தமிழன் உயிர் தப்ப ஓடி ஒளியும் அவலமான காட்சி யைக் காண்கிறோம்.
இந்தக் கதைத் தொடரில் உள்ள பெரும்பாலான கதைகள், ‘தேவி’ இதழுக்கு ஈழத்திலிருந்து வந்த தமிழர்கள் எழுதியனுப்பிய உண்மையான நிகழ்ச்சி களை அடிப்படையாகக் கொண்டவை. ஈழத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ள எழுத்தாளர் பூங்கோதை தமிழினத்தவரின் துயரை உணர்ந்து எழுதியிருக்கிறார். தாமே பல நிகழ்ச்சிகளை சேகரித்தும் கதைகளாக வடிவமைத்துள்ளார்.
வெறும் கற்பனைக் கதைகளாக மட்டும் இல்லா மல் வரலாற்று உண்மை நிகழ்ச்சிகளாகவும் அமைந்த இந்தக் கதைகள் என்றோ ஒரு நாள் தமிழ் ஈழத்தில் விடியலுக்குப் பிறகும், வரப்போகிற தலைமுறையின ருக்கு கடந்தகால கொடுமைகளை ‘பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும். பூங்கோதையின் இந்த முயற்சி வெல்க என வாழ்த்துகிறன்.
என்னுரை
எங்கோ வெகு தொலைவில் அல்ல… இங்கிருந்து பதினெட்டே மைல்களுக்கு அப்பால் தமிழர் இரத் தங்கள் ஆறாக ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் உயிருடன் எரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அவலக்குரல்கள் தினம்… தினம் தமிழகத்து மக்களின் காதுகளில் விழுந்துகொண்டுதானிருக்கின்றன. இதனை அவ்வப்போது பல பத்திரிகைகள் செய்தி களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவைகள் அனைத்தும் தமிழகத்து மக்களை இதுவரை கண்டிராத அளவு கொதிப்படையச் செய்திருக்கிறது என்பதில் சந்தேக மில்லை.
இருப்பினும், ஈழத் தமிழர்களின் சோகச் சுவடு களைப் புரிந்து கொள்ள மேலும் ஏதாவது செய்ய வேண்டும்… இன்னலுற்றிருக்கும் அவர்களின் நிகழ் கால வரலாற்றை அனைத்துத் தமிழர்களும அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கில் ‘தேவி’ ஆசிரியர் என்னை அழைத்து ஈழத்திலே நடந் தொழிந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங் களைத் தொகுத்து கதையாக்குங்கள்… செய்திகளோ கட்டுரைகளோ கொண்டுவர முடியாததொரு மனக் கிளர்ச்சியை மக்கள் மத்தியில் கதைகள் மூலமாகக் கொண்டுவர முடியுமா…? என முயன்று பாருங்கள் என்றார்.
அம்முயற்சியின்போது இந்தக் கதைகளை வெளி யிடுவதற்காகப் பல சம்பவங்களைச் சேகரித்தேன். பலர் கடித மூலமாகத் தங்கள் துயரினை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். யாராலும் நம்பமுடியாத கோரச் சம்பவங்கள்… இதயத்தை பிழிந்தெடுக்கும் அராஜகங்கள்… எழுத்தில் வடிக்க முடியாத பல அவலங்கள் எல்லாம் அங்கு நடந்து கொண்டிருக்கின்றன…
அனைத்தையும் என்னால் எழுத்து வடிவில் கொண்டுவர முடியவில்லை. அவற்றுள் சிலவற்றை மட்டுமே இங்கே கதைவடிவில் படைத்துள்ளேன். கதைகளில் வரும் பெயர்கள் மட்டும் கற்பனை. சம் பவங்கள் அனைத்தும் நடந்த உண்மைகளாகும்.
ஒரு தலைமுறையினர் கண்டு கேட்டு… அனுப வித்த நிகழ்ச்சிகளே அடுத்த தலைமுறையினர் சரித் திர வரலாறாகும். சரித்திர பூர்வமான வரலா றொன்றை கதை வடிவில் கொண்டு வந்துள்ளேன். என்னுடைய இந்த முயற்சியில் சிறுகதைக்கென வகுக்கப் பட்டுள்ள சில இலக்கணங்கள் தடம் மாறிப் போயிருக்கலாம்… இருப்பினும் ஓரினத்தின் அவலக் குரல்களை… ஆவேசப் போராட்டங்களை… வீரச் சாவு களை… இங்கே பார்க்கப் போகிறீர்கள்.
உயிர் தமிழுக்கு… உடல் மண்ணுக்கென வாழ்ந்து மறைந்த சி.பா. ஆதித்தனாரிள் வழித் தோன்றலான ‘தேவி’ ஆசிரியர் பா. இராமச்சந்திர ஆதித்தனார் ஈழத் தமிழர்கள் இன்னல் கண்டு… அவர்கள் துயர் தடைப்பதில் காட்டும் சிரத்தை தமிழீழ வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
‘தேவி’யில் என் கதைகள் தொடர்ந்து இடம் பெற அனுமதி வழங்கிய ஆசிரியர் அவர்கட்கும்; கதைகளை நெறிப்படுத்தி வெளியிட்ட உதவி ஆசிரியர் ஜேம்ஸ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி உரியது.
எத்தனையோ கடமைகளுக்கு மத்தியிலும்… தனது பொன்னான நேரத்தை இச்சிறியேனுக்காகச் செல விட்டு அணிந்துரை வழங்கிய தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் பாராட்டுரை நல்கிய நீதியரசர் ச. மோகன் அவர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.
எழுத்தாக உருவெடுத்த என் சிந்தனைகள் நூலாக வும் வெளிவரவேண்டுமென ஊக்கமும், ஆக்கமும் அளித்து என்னை நிர்வகித்த எனது அண்ணியை இந்தச் சந்தர்ப்பத்தில் மறக்கவே முடியாது. அவர் களுக்கும் எனது நன்றி.
இந்நூலுக்கு மிகக்குறுகிய காலத்தில் அட்டைப் படம் வரைந்துகொடுத்த ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்கும் அதனைப் ‘பிரிண்ட்’ வடிவில் கொண்டு வருவதற்கு அயராது உழைத்த சூரியா ஸ்கிறீன் பிரிண்டேஸ்ஸுக்கும், இந்நூலினை விரைவாக அச்சிட்டு உதவிய விசாலம் பிரிண்டிங் ஹவுஸ் உரிமையாளருக்கும் என் நன்றி என்றென்றும் உரியது.
மேலும் எனது இந்த நூலை… தங்கள் சொந்த நூல்போல் குறுகிய கால எல்லைக்குள் வர உதவிய அனைத்து நண்பர்களுக்கும், தேனருவி பதிப்பகத்தின் உரிமையாளர்கட்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை 15-8-85
பூங்கோதை
– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.