பிரமிளா பிரதீபன்

பிரமிளா பிரதீபன்
 

பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் கற்றார்.இளங்கலைமானி பட்டத்தை தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் கற்கைநெறியை தேசிய கல்வி நிறுவத்திலும் கற்றுள்ளார். இவர் ஆசிரியராக தற்பொழுது பணிப்புரிந்து வருகிறார்.

2005ஆம் ஆண்டு இவரின் சலனம் எனும் கவிதை தினமுரசு நாளிதழில் முதலில் பிரசுரமானதாக தெரிவிக்கும் எழுத்தாளர், பீலிக்கரை எனும் சிறுகதை ஊடாக ஞானம் சஞ்சிகையின் இளம் எழுத்தாளராக அறிமுகமாகி தனது எழுத்துப் பயணத்தை தொடர்வதாகத் தெரிவிக்கிறார்.

2007ஆம் ஆண்டு பீலிக்கரை எனும் சிறுகதைத் தொகுப்பை புரவலர் புத்தகப் பூங்கா ஊடாகவும், 2010ஆம் ஆண்டு பாக்குபட்டை எனும் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தலினூடாக வெளியீடு செய்துள்ளார். அத்துடன் இவரின் கட்டுபொல் நாவல் கொடகே வெளியீடாக வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் பிரேமிளா, பிரதீபன் – கொடகே கையெழுத்து போட்டி 2017 கட்டுபொல் நாவல் சிறந்த நாவலுக்கான விருதை பெற்றது, நீயும் நானுமாய் நீண்ட பயணம் எனும் இவரின் கவிதைக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் சிறந்த கவிதைக்கான மகரந்த சிறகு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுகதைகள்

  • பீலிக்கரை (புரவலர் புத்தகப் பூங்கா – 2007)
  • பாக்குப்பட்டை (மல்லிகைப் பந்தல் – 2010)
  • விரும்பித் தொலையுமொரு காடு – (யாவரும் 2022)

நாவல்

  • கட்டுபொல் (கொடகே – 2017)

பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007

என்னுரை 

யாரும் கொஞ்சம் அதிகமாய் திட்டினாலும் கூட அம்மாவின் முந்தானைக்குள் மறைய நினைக்கும் பதட்டக்காரி நான். எனது படைப்புக்கள் நூலுருப் பெறப்போகிறதென்றால் ! 

என்னையே நான் நினைத்துப் பார்க்கிறேன். என்னை ஒரு முறை திரும்பிப் பார்க்கிறேன்! 

என் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் ஏராளமானோர். அவர்களை எல்லாம் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறேன். 

என் அத்திவாரக் காலத்தின் வாசிப்புத் தாகத்தை தணிக்க தண்ணீர் வார்த்த என் அம்மா…அவ்வப்போது தலையைத் தடவி என்னைத் தட்டிக்கொடுத்த என் அப்பா… எள்ளி நகைக்கும் பாங்குடன் எப்போதும் என்னை உற்சாக ஊஞ்சலில் ஆட்டிக் கொண்டிருக்கும் என் அண்ணன்… தங்கைகள்… இப்படி என் குடும்பச் சூழலில் கொஞ்சம் மெய்சிலிர்த்து இருக்கிறேன். சந்தோசித்திருக்கிறேன். 

மலையக எழுத்தாளர்கள் மத்தியில் நானும் ஒருத்தியாய் வரவேண்டும்; ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும் என்று தொடர்ந்து என்னைத் தூண்டி துலங்க வைத்த அனைவரிடத்திலும் அளவு கடந்த மரியாதை எப்பொழுதும் எனக்கு உண்டு. அந்த வரிசையில், அக்கா என்ற உறவு முறையில் இடைநடுவில் என்னை வளர்த்த ஓர் அன்புச் சிற்பம் திருமதி ஞானம் ஞானசேகரன். இலக்கிய உலகிற்கு எனை அறிமுகப்படுத்தி, இலவச புத்தக வெளியீட்டு வாய்ப்பையும் எனக்களித்த ஞானம் ஆசிரியர், எத்தனையோ புத்தகங்களை வாசிக்கத் தூண்டி, அறிவுரைகளால் என்னை ஆளாக்கிய மல்லிகை ஆசிரியர், கூடவே பிரசுரமாகும் என் ஆக்கங்களைப் பார்த்து உடனுக்குடன் உற்சாகப்படுத்திய கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள்…. 

இவர்களுக்கு மத்தியில் இடைக்கிடையே கொஞ்சம் கொஞ்சமாய் நான் எனது திறமைகளை அடையாளப்படுத்த ஒரு சில நல்ல உள்ளங்களின் ஆலோசனைகளும் காரணமாகி இருந்திருக்கின்றன. மொத்தத்தில் மூத்த எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும் ஏதோ ஒருவகையில் என்னை அங்கீகரிப்பது புரிந்ததும் எனக்குள் ஒரு தன்னம்பிக்கை… சாதிக்கும் வேட்கை! 

எனிலும்… 

என் கவிதைகளையும், சிறுகதைகளையும் நூலாக்க வேண்டுமென்ற கனவு வெகு தொலைதூர ஆசையாகவே இருந்து வந்தது. இத்தனை சீக்கிரம் அதற்கொரு வாய்ப்பு வருமென்று நான் எண்ணி இருக்கவில்லை. 

புரவலர் புத்தகப் பூங்கா… மாதாந்தம் ஒரு நூல்… இலவச வெளியீட்டுத் திட்டம்… இந்த வரிகளை ஞானம் சஞ்சிகையில் வாசித்ததும் எனக்குள் மலைப்பு… திகைப்பு… வியப்பு! இது நடக்குமா? நடைமுறைப்படுத்தப்படுமா…? என என் உதடுகள் கேள்விக்கு மேல் கேள்விகள் எழுப்ப, என் உள்ளம் சொல்கிறது… 

புரவலரின் உறுதிமொழிகள் பொய்யானவை அல்ல! புரவலர் யாரென்று நான் சொல்லத் தேவையில்லை.. பள்ளி மாணவருக்கும் அது பாடம். நம்பிக்கையுடன் எனது ஆக்கங்களை அனுப்பிவைத்தேன். அவை இவ்வளவு சீக்கிரம் நூலரங்கேறுவதே படைப்புலக அதிசயம்தான். 

புரவலர் புத்தகப் பூங்கா நிர்வாகிகள் அனைவருக்கும் நிறைவான உவகையுடனான உயர்வான நன்றிகளைக் கூறக்கடமைப்பட்டுள்ளேன். 

இப்போது பீலிக்கரைக்கு வருகின்றேன்! 

பல்வேறு வகையில் மலையகப் பேச்சுமொழியும், வாழ்க்கை முறைகளும் இழிவு படுத்தப்பட்டு, ஆங்காங்கே பிரயோகிக்கப் பட்டமையை உணர்ந்த பின்னர்தான் எனக்குள் ஆவேசம்… அக்னி ஜுவாலை! அவைகளிலும் நளினம் உண்டு. சுவைக்கத்தக்க உணர்வுகளும், அவசியமான உரிமைகளும் உண்டு. அவற்றை வெளிக்கொணர நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் – எண்ணிய சந்தர்ப்பங்களில் – பலரதும் சலிக்காத வரவேற்பு. இதுதான்… இதுவேதான் என் ஆரம்பமாக இருந்தது. 

“பீலிக்கரை” என்பதுதான் எனது முதலாவது சிறுகதை. இக்கதை ஞானம் சஞ்சிகையில் வெளியான போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மலையக மண்வாசனையை உணர்த்தும் உயர்ந்த தலைப்பாக இதை நான் கருதுவதால், இந்தத் தலைப்பிலேயே எனது முதலாவது படைப்பும் வெளிவரவேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. (அதுவே ஞானம் ஆசிரியரின் தெரிவாகவும் அமைந்தது) இவ்வாறே எனது ஒவ்வொரு கதையும், அதன் கருவும் மலையகப் பின்புலத்துடன் ஒட்டி இருப்பதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன். 

எனது கதையில் வரும் பாத்திரங்கள் வெறும் கற்பனையல்ல. அவர்கள் என்னுடன் உறவாடுபவர்கள்… என்னைப் பாதிக்கச் செய்தவர்கள்… அன்றாடம் நான் கண்டு மனதிற்குள் பதித்துக்கொண்ட புதியவர்கள். இவர்களின் உணர்வுகள்தான் என் கதைகளில் பரவியிருக்கிறது. எனது ஒவ்வொரு வரிகளும் என்னால் உணர்ந்து, அனுபவித்து எழுதப்பட்டவைகள். ஆகையால் என் ஒவ்வொருகதைகளும் என் நேசத்திற்குரியவை. 

என் ஆழ்மன விருப்பம் நிறைவேறிடும் தருணமதில் என் மூத்தோரின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.. கூடவே அவர்களது பரிபூரண ஆசிகளையும். 

எழுத்துலகில் தவழ நினைக்கும் இந்தச் சிறியவளை ஏற்று என் கதைகளை விமர்சிப்பீர்கள் என்று காத்திருக்கிறேன். 

குருவில்லாத வித்தை பாழ்! 

எனவே எனதிந்தத் துறையில் இன்னுமே நான் வளர எனது குருவினதும், கடவுளினதும் அருளை வேண்டுகிறேன். 

ஊவா கட்டவளை,- 
ஹாலி – எல. 
பிரமிளா செல்வராஜா 
(நூலாசிரியை) 


இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியை பிரமிளா செல்வராஜா மலை நாட்டில் பிறந்தவர். அந்தச் சூழலில் வளர்ந்தவர். தற்போது மலையகத்தில் ஆசிரியராகத் தொழில் புரிபவர். 

இவர் எழுதிய முதற்சிறுகதை ‘பீலிக்கரை’ ஞானம் சஞ்சிகையில் வெளியானது. அதுவே இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. ஞானம் பண்ணையில் வளர்த்தெடுக்கப்படும் இளம் பிரமிளா செல்வராஜா தலைமுறை எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். 

இத்தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. அவை அகத்துணர்ச்சிகளை அதன் முரண்பாடுகளை மனிதநேயக் கண்கொண்டு பார்க்கும் ஓர் அனுபவத்தை மண்வாசனை கமழ வாசனுக்கு உணர்த்துகின்றன. சமகாலத்தைப் பிரதிபலிக்கும் நல்ல சிருஷ்டிகளைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுத்தாளரின் மனதில் உறைந்துகிடப்பதை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. 

சிறுகதையின் அமைப்பு, பாத்திர வளர்ப்பு, சமூகச் செய்தி, கலையழவு போன்ற விடயங்களில் கதாசிரியருக்கு ஒரு தெளிவு இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

மலையகத்தில் சமகாலத்தில் தோன்றியுள்ள புதிய எழுத்தாளர்களோடு ஒப்பிடுகையில் அழகியல் அமைதியுடன் எழுதுவதில் பிரமிளா செல்வராஜாவுக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இவருடைய வசனங்கள் நேரடியானவை. தேவையற்ற அலங்கார வசனங்கள் இன்றி, இயற்கையின் வனப்பினை, சமூகச் செய்திகளை இவரது எழுத்துக்கள் தெளிவாக வெளிக் கொணருகின்றன. 

– திருமதி ஞானம் ஞானசேகரன் ‘ஞானம்’ இணை ஆசிரியர்.