நாவேந்தன்

நாவேந்தன்
 

நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.

நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.

தமது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.

தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய “மரியாள் மகதலேனா” என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.

சமுதாய அவலங்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை மூடத்தனங்களை தீண்டாமையைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார். இவர் அநேக கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.

சிறுகதைத் தொகுதிகள்
வாழ்வு
தெய்வ மகன்
வாழ்வு சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1964) பெற்றது.

குறுங்காவியம்
மரியாள் மகதலேனா

நாடகங்கள்
பெருநெருப்பு
மண்டோதரி
தாரை

வேறு
சிறீ அளித்த சிறை


வாழ்வும் எழுத்தும் – வாழ்வு (2-10-62)

இலக்கியம் அனைத்தும் வாழ்வை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்படுகின்றன. இலக்கியத் திற்கு எவ்வித எல்லைக்கோடும் இல்லை. நல்லதைச் சொன்னாலும், அல்லதைச் சொன்னாலும் இலக்கியம் மனித வாழ்வையே சொல்லுகின்றது. இலக்கியக்கார னின் மனநிலை, வாழுங்காலம், சமுதாயநிலை என்ப வற்றுக்கியையவேதாம் பேதங்கள் கிளைக்கின்றன. இவற்றைக் கண்டு இலக்கியக்காரர்கள் யாருமே அவ லப்படவேண்டியதில்லை. இலக்கியம் கடவுளைப் போன் றது. அதற்கு முடிவில்லை. 

எந்தக் கோட்பாட்டுக்கும், விதிகளுக்கும் பணிந்து, குனிந்து இலக்கியம் படைத்தலியலாது. தமிழின் தொன்மையான இலக்கியங்கள் தொட்டு, இன்றைய இலக்கியங்கள்வரை இந்த உண்மைகளையே யாம் காண் கிறோம். இலக்கியம் படைக்க மொழி மூலப்பொருளா கும். அம்மூலப்பொருளுக்கு வரையறையுண்டு. இலக் கணம் உண்டு. மூலப்பொருளின் வலிவு குன்றினால், அதனாலாய படைப்பு வலிவற்றதாகும். தமிழின் வலிவுக் குக் காரணம் அதன் இலக்கண வரம்பும், தூய மரபுமே. இவ்வுண்மையினைப் பகுத்தறிவாளர் எவரும் மறுத்திட எண்ணார். மொழி மரபினையும், இலக்கணத்தினையும் சிறிதேனும் ஓராதார், அவை இன்று வேண்டப்படுவன் வல்ல என்பதில், அன்னார்தம் அறியாமையே தெற்றெ னத் தோன்றுகின்றது. 

மொழிப்பண்பு, இலக்கியம் என்பவற்றின் வேறு பாடுகளை உணராதார், அவையிரண்டும் ஒன்றென மயங்கிப் பிதற்றுதலைக் கண்கூடாகக் காண்கிறோம். கவல் கிறோம்! இந்நிலையில் இலக்கியம் படைப்பவனுக்குப் பேரிடர் எழுந்துள்ளது. ‘செக்குஞ்சரி சிவலிங்கமுஞ் சரி’யென அறியாமையிற் பழுத்துவிளங்குபவர்களிடமும், அத்தகையவர்களுக்காகவே எழுத்தாளர்களாக விளங்குபவர்களிடமும் இருந்துவரும் வீணுரைகளைத் தவிர்த்துக்கொள்ளுதல் மிகக்கொடுமையும், கடுமையுமாகவுளது. 

இந்நிலையில் உண்மையான இலக்கியப் படைப்பாளன் பெரிய திண்ணிய மனத்துணிவுள்ளவனாகவும் போராட்டக்காரனாகவும், தியாகியாகவும் வாழவேண்டி யேற்படுகிறது. 

அவன் தனது இலக்கியப் படைப்பை மக்களுக்கு நல்ல முறையில் அறிமுகப்படுத்துவதுடன், தான் மேற்கொண்டுள்ள மொழி இயல்பையும், இலக்கியச் சிறப்பையும் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளவனாகிறான். ஈழத்தில் இன்றுள்ள இலக்கியப்படைப்பாளர் களை இப்பாரியபொறுப்பு எதிர்நோக்குகின்றது. அவர் களிற் பலருக்கு இதன் பொருள் தெரிவதேயில்லை.சிலருக்கு இவ்வுண்மைகள் புலனாயினும் அவற்றை நிலை நாட்டுதற்கான மனப்பண்பும், வலிவும், வகையும் இயலுவதாயில்லை. மிக மிகச்சிலர் மட்டுமே இவ்வுயரிய குறிக்கோளுக்காக இன்று எழுத்துலகிற் போராடுகிறார்கள். 

அத்தகைய எழுத்துலகப் போராட்டக்காரனாகிய எனக்கு, இச்சிறுகதைத் தொகுப்பை வாசகர்களாகிய உங்கள் முன் வைப்பதில் பெருமகிழ்ச்சி கிளர்கிறது. இஃது எவ்வித முற்போக்கு இலக்கியமோ, அஃதல் ஒப்புக் லாத இலக்கியமோ அல்ல. அனைத்துலகும் கொண்டுள்ள இலக்கியத்துறையின் ஒரு கூறான, சிறுகதை இலக்கியத்தின்பாற்பட்ட ஒரு படைப்பாகும். 

ஈழத்திலும், தமிழகத்திலும் சிறப்புற்று விளங்கிய, விளங்குகின்ற வீரகேசரி, சுதந்திரன், கலைமன்றம், உமா, ஆனந்தன், கலைச்செல்வி, உதயம், விவேகி ஆகிய எட்டு பத்திரிகைகளில் வெளியாகிய, எனது பதினைந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இலக்கியத்தின் பொதுவான அடிப்படை யான வாழ்வு இக்கதைகள் முழுமையும் இழையோடி இலங்குவதால் தொகுப்பு ‘வாழ்வு’ எனப் பெயர் பெறுவதாயிற்று. கதைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை யுடையவை என்பதனைப் படிப்பவரனைவருமுணர்வர். வாழ்க்கையில் மிக இழிந்த பொருளாதாரநிலையிலுள்ளவர்கள் சிலரையும், நடுத்தர வகுப்பினருக்கேயுரிய ‘அரைகுறையான’ வாழ்க்கை வசதிகளுடன் போராடிக் கொண்டு வாழ்பவர்கள், பல்வேறு உணர்ச்சிச் சிக்கல்களுடன் உலாவுபவர்கள் பலரையும், கதைகளின் பாத் திரங்களாக நீங்கள் பார்க்க முடியும். எவ்விதச் சார்பு மின்றி, நடுநிலைநின்று நோக்குபவர்களுக்கு, இப்பாத் திரங்கள் இன்றைய சமூகத்தின் உண்மையான, உயி ரோட்டமுள்ள படைப்புக்கள் என்பதில் ஐயமே எழாது! 

வாழ்க்கையில் நாம் காணுகின்ற உண்மையான உல கினை விட்டு, எதுவோ ஒரு ‘கொள்கையின்’ கட்டுப் பாட்டிற்குத் தலைபணிந்து, வலிந்து, புதிய மனநிலையும், செயல்களும் உரிய பாத்திரங்களை அளவுக்கு அதிக மாகப் படைத்துவிடுவதில், எனக்கு எள்ளளவும் ஒருப் பாடில்லை. எனது கதைகளின் பாத்திரங்கள் உண்மை யானவர்கள். அவர்கள் அதிகமாகக் காதலிக்கலாம், காதலிக்க விழையலாம். அஃது தவறன்று. இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் ‘மத்தியதர வகுப்பு’ மக்களின் குறிப்பாக, இளம்பெண்கள், இளைஞர்களின் இயல்புகள் அதுவாக அமையவில்லையா? அது போன்றே சுடலை யாண்டியும், நகரசுத்தித் தொழில் புரியும் நல்லானும், இழுவைவண்டிக்காரனான நாகப்பனும் உண்மையானவர்களாக நடமாடுகிறார்கள். 

இவர்களுக்கு மட்டும் தனியான அழுத்தங்கொடுத்து, திரைப்படங்களையும், மரும நாவல்களையும் பார்த்து, படித்துக் காதல் செய்யத் துடிப்பவர்களையும், உண வுக்கு வேண்டியதை, உடைக்காகவே செலவழித்து வாழத் துடிக்கின்ற ஆடம்பரப் பிரியர்களான ஆடவர், பெண்டிரையும், ஆன்மீக வழிபாட்டிலேயே தம்மைக் கரைத்துக்கொள்ள விரும்புகின்ற சிதம்பரர்களையும் மறந்துவிட்டு இலக்கியம் படைக்க என்னாலியலாது. ஏனெனிற் சிந்தனைச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந் திரத்தையும் உயிராக எண்ணுபவனாக நானிருப்ப தாலும், அத்தகைய கருத்துக்கு, உயர்வு கொடுக்கப் படுகின்ற காலத்தில் வாழ்பவனாக இருப்பதாலுமேயாம். உண்மை எவ்வித நிலையிலும் மயங்கக்கூடாது. சிறு கதைத்துறை மட்டும் அதற்குப் பிறிதாக முடியுமா? 

மனித சமுதாயம் தோன்றிய நாள்தொட்டு பயமும், பத்தியும், காதலும், தியாகமுமாகிய உணர்ச்சிகள் சிரஞ் சீவியாக வாழுகின்றன. சாதி, இன, மதப் பூசல்களை யும், வர்க்கப் போராட்டங்களையுமே பெரிதாகச் சித்த ரித்து, ஏனையவை யாவும் நலிந்துவிட்டன என்பதிற் பொருளில்லை. காலப்போக்கில் நிரந்தரமானவை, உலகப் பொதுவுணர்ச்சிகளான பயம், பத்தி, அன்பு, காதல், தியாகம் ஆகியவையே. கொள்கை வழிபாட்டிற்காக பத்திக் கண்ணோட்டத்துடன் இன, மத, சாதி, வர்க்கப் பூசல்களைப் பெரிதுபடுத்தி எழுதப்படும் இலக்கியங்கள் விரைவில் இறந்துபடும். என் கதைகளில் உலகின் நிரந்தர உணர்ச்சிகள் அதிகமாக இடம்பெறுகின்றன. அவை காதலாகவும், தியாகமாகவும், பத்தியாகவும், பயமாகவும் எதுவாக இருப்பினும் நிரந்தரமானவையே. இதன் காரணமாக நிலப்பிரபுத்துவத்திற்கு, அல்லது முதலாளித்துவத்திற்கு அடிபணியும் இலக்கியக்காரன் என என்னைக் கருதுபவர்களுக்காக உண்மையில் அனுதாபப்படுகிறேன். ஈழத்தின் தரமான இலக்கிய வளர்ச்சிக்குக் குந்தகம் விளைப்பவர்களின் குரலிதுவாயிருப்பி னும், நாளும் பொழுதும் எனது பாதையில் நம்பிக்கையுடன் எழுத்துலகிற் போராடி வருபவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறுதற்குப் பெருமைப்படுகிறேன். 

முப்பது வயதினனாகிய யான் எழுத்துத்துறையில் செலவழித்த காலம் பதினைந்து ஆண்டுகளாகும். பதினைந்து ஆண்டுக் கால எல்லையுள்ள கதைகள் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இக்கதைகள் பல்வேறு தரத்துத் தோற்றப்படுதற்கு இக்கால எல்லையின் அனுபவங்கள் பெரிதும் காரணமாகும். கதைகளைப் பத்திரிகைகளுக்கு எழுதுவது வேறு; நூலாகத் தொகுத்தளிப்பது வேறு. எனினும் இயன்றவரை இருவகை முயற்சிகளிலும் மொழி மரபையும், தூய்மையினையும் பேணுதற்கு ஒல்லும்வகை முயன்றிருக்கிறேன். அம்முயற்சியில் நிறைவான வெற்றி பெற்றுள்ளேன என்பதினும், பெறல் வேண்டும், பெறத் தொடர்ந்து முயல்வேன் என்ற உறுதியே எனக்குப் பெருமையளிப்பதாகும். 

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும், அதற்கு முன்னருமே தமிழ் மொழி பீடும், பெருமையும் பெற்று விளங்கத் தன்மானத்துடன் உழைத்தவர்கள், உழைத்து வருபவர்கள் தமிழாசிரியர்களும், தமிழ்ப் பண்டிதர் களுமே ஆவர். இலக்கிய விழிப்புணர்ச்சி பெற்றுவிட்ட தாக விதந்து கூறப்படும் இக்காலத்துத் தமிழ்ப் பண் பறியாதார், தமிழாசிரியர்களையும், தமிழ்ப் பண்டிதர் களையும் இழித்துப், பழித்துப் பொய்யுரை புகல்வது கண்டு மனம் கவல்கிறேன். வேற்றுமொழிப் புலமை காரணமன்று, அடிமைத் தனத்தின் எஞ்சிய சிறுகூறான சுபாவம் மனக்கிடக்கையாகக் கொண்டவர்களுக்கு, எதிர் காலம் நிச்சயமாக நற்புத்தி புகட்டுமென்பதில் ஐய மில்லை. யானும் ஒரு தமிழாசிரியன் என்ற முறையில், என் முன்னோடிகளான தமிழ்ப் புலமையாளர்களுக்கு என்னுளமார்ந்த அஞ்சலியை இந்நூல் வாயிலாக உரிமையாக்குகின்றேன். 

இச்சிறுகதைத் தொகுப்புக்கான என்னுரை சிறிது நீண்டுவிட்டதெனினும், சொல்லவேண்டிய சில கருத்துக்களை, அவசியம் சொல்லியே ஆகவேண்டுமெனும் உந்துதலாற் சொல்ல முயன்றேன். இந்நூல் சிறப்புற அமைதற்குக்காலாக இருந்தவர்களுக்கு, என் நன்றியுரியது. கதைகளின் இரசனை உணர்விற்றோய்ந்து காவியநயம்மிளிர, அணிந்துரை எழுதிவழங்கிய பன் மொழிப்பண்டிதரும், கவிஞருமான, க.சச்சிதானந்தன் பீ.ஏ. அவர்களுக்கும், மதிப்புரை அளித்துள்ள ஈழத்தின் முதுபெருஞ்சிறுகதை எழுத்தாளரான திரு.க.தி.சம்பந்தன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். 

கதைகளனைத்தையும் தொகுத்து அளித்த எனது அருமைத் துணைவர் த.துரைசிங்கம் அவர்களுக்கும் குறுகிய காலத்தில் மிகச் சிறப்புறநூலை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த கலைவாணி அச்சகம், புத்தகநிலையம் என்பவற்றின் உரிமையாளரான, சமாதான நீதிபதி, உயர்திரு. கு.வி.தம்பித்துரை அவர்களுக்கும் என்னுளமார்ந்த நன்றியுரியது. தமிழ்கூறு நல்லுலகின் வாசகப் பெருமக்கள் திருமுன்னிலையில் ‘வாழ்வி’னைப் படைத்து, அவர்கள் பேராதரவினை வழங்கக்கேட்டு நிற்கின்றேன். 

வணக்கம். 

ஏழாலை வடக்கு,
சுன்னாகம் (இலங்கை),
நாவேந்தன்.
2-10-62.

– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).