து.ராமமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் செப்டம்பர் 11, 1916-ல் துரைசாமி, ராஜம் இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய தலைமைக் கணக்கு அலுவலர் அலுவலகத்தில் தணிக்கை அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
‘அசோகா’ என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். கல்கி இதழின் துணையாசிரியராக பல காலம் இருந்தார்.
ராமமூர்த்தியின் ‘கழைக்கூத்தன்’ சிறுகதை ‘சக்தி’ இதழில் 1943-ல் வெளிவந்தது. கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் எழுதினார். விகடனில் முத்திரைக்கதைகள் எழுதினார். ‘கதம்பச்சரம் சிரித்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.
‘கணையாழியில் எழுதிய ‘குடிசை’ என்ற நாவல் அவர் மகன் ஜெயபாரதியால் 1979-ல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.
து.ராமமூர்த்தி அக்டோபர் 31, 1999-ல் காலமானார்.
சிறுகதைகள்
கதம்பச்சரம் சிரித்தது
குறுநாவல்
வானத்தாரகை
நாவல்
குடிசை
முன்னுரை – காளியின் கண்கள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.
நேற்றுத்தான் போலிருக்கிறது. 1935-ஆம் வருஷம். சிறு கதை ஒன்று எழுதவேண்டும் என்ற தீர்மானத்துடன், பள்ளிக்கூடப் புஸ்தகங்களைக் கட்டி வைத்துவிட்டு உட்கார்க் தேன். தமிழில் எழுதும் பழக்கம் ஏற்கனவே சிறிது உண்டு. நான்கு வருஷங்களுக்கு முன்பே என் முதல் ‘கட்டுரை’ பத்திரிகையில் வெளியாகிவிட்டது. (அப்பொழுது எனக்கு வயசு பதினைந்து. அந்தக் ‘கட்டுரை’யைப் பார்க்கவேண்டு மென்று ஆசைப்படுகிறேன்; கிடைக்கவில்லை.) ஆனால், சிறு கதை எதுவும் அதுவரையில் நான் எழுதியதில்லை.
அன்று எழுதிய ‘காளியின் கண்கள்’ என் முதல் கதையாய் அமைந்தது. அதைப் படித்த நண்பர்கள், நன்றாயிருக்கிறது என்று புகழ்ந்து என்னை மேலும் எழுதத் தூண்டினார்கள். அப்பொழுது தீர்மானித்தேன், இனிமேல் சிறு கதைகள் எழுதுவது என்று. அன்று மனசில் ஊன்றிய வித்தின் விளைவுதான் இச்சிறுகதை மலர்கள்.
இம்மலர்களின் வாசனையை நான் அறியேன். (எழுத்தாளனுக்கு ஏற்படும் நஷ்டங்களில் இதுவும் ஒன்று.) எழுத வேண்டும் என்று தோன்றிய பொழுதெல்லாம் சிருஷ்டிக்கப் பட்ட கற்பனை மலர்கள் இவை. பூமியைப் பண்படுத்தி, உரம் போட்டு, நாற்று விட்டுப் புஷ்பித்தவை அல்ல. அழகையோ, வாசனையையோ இம்மலர்களில் வாசகர்கள் கண்டு அநுபவித்தார்களானால், நான் எழுதியதை வியர்த்தமென்று கருதுவதற்கில்லை.
இக்கதைகளைக் குறித்து ஒரே ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் – சிறுகதை எப்படியிருக்கவேண்டும் என்ற விஷயம் சம்பந்தமாக,
அதாவது,
சிறுகதை சிறியதாக இருக்கவேண்டும். அதனுடன் அது கதையாகவும் இருக்கவேண்டும் என்பது ஒரு கட்சி. கதாஸ்வாரஸ்யந்தான் பிரதானம், கருத்து அடுத்தபடிதான் என்பது. இல்லை, சிறு கதையில் கருத்துத் தான் முக்கியம் என்பது வேறொரு கட்சி. இவர்கள் கதையே இல்லாமல் சிறு கதை எழுதிவிடுவார்கள்.
கதாஸ்வாரஸ்யம் எவ்வளவு அவசியமோ அப்படியே கருத்தும் அவசியம் என்று நான் கருதுகிறேன், மலருக்கு அழகும் மணமும் போலே. வாசனை இல்லாத மலரும், அழகினால் கண்ணைக் கவருகிறது. அத்துடன் மணமும் சேர்ந்தால் இன்னும் விசேஷமல்லவா? இவ்விதமே, சிறு கதையின் சிறப்பு கதையின் ரஸத்தையும், கருத்தின் விசேஷத்தையும் சார்ந்தே நிற்கிறது. கதையும் கருத்தும் ஒன்றுக்கொன்று ஒத்தாசையாய் இழைந்து அமையும் முயற்சியில் உருவானவையே, இத்தொகுதியில் உள்ள கதைகள். எவ்வளவு தூரம் இதில் வெற்றியடைந்திருக்கிறேன் என்பதை வாசகர்கள் நிர்ணயிக்கவேண்டும்.
கதைகள் வெளியான பத்திரிகைகளுக்கும், புத்தகம் வெளியாவதற்கு முற்றும் காரணமான நண்பர் கி.வா.ஜ. அவர்களுக்கும் என் நன்றி உரியது.
23-8-’43
து. ரா.