
க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்.
நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார்.
இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் ‘வீரகேசரி’ இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த ‘பூரணி’ என்ற இலக்கிய இதழின் இணையாசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.
சிறுகதைத் தொகுப்புக்கள்
மாற்றம் (1980)
உலா (1992)
சட்டநாதன் கதைகள் (1995)
புதியவர்கள் (2006)
முக்கூடல் (2010)
பொழிவு (2016)
தஞ்சம் (2018)
கவிதைத் தொகுப்புகள்
நீரின் நிறம் (2017)
துயரம் தரும் அழகு (2019)
குறுநாவல்
நீளும் பாலை
தாவடிக்காரர்கள்
நாவல்
உயிரில் கலந்த வாசம் (2019)
விருதுகள்
தமிழியல் விருது
வட மாகாண சாகித்திய விருது
தேசிய சாகித்திய விருது
வட மாகாண இலக்கிய விருது
கனக செந்திநாதன் விருது
சட்டநாதன் தன்னளவில் திரும்பத் திரும்ப, தான் உருவாக்கும் படைப்புப் பற்றிய பிரக்ஞையுடன் நிதானமாக இயங்கும் படைப்பாளி. வேறு வார்த்தையில் சொன்னால், இவர் கலைஞராக இருக்கவே விரும்புகின்றார். வெறும் கதாசிரியராக இருக்க விரும்பவில்லை. கலைஅனுபவம், கலை வெளிப்பாடு சார்ந்த நுண்மையான அக்கறைகள் மையம் கொள்ளும் வகையில் இயங்குகின்றார். இதுவே இவரது தனிச்சிறப்புக் குரிய அடையாளம். சட்டநாதன் காட்டும் திசைகளில் மனித வாழ்வுக்கான கனவும் சுதந்திரமும் இருப்பும் அடையாளமும் போராட்டங் களும் விரிவு கொள்கின்றன. மனித வாழ்வு குறித்தான சிந்தனைகளும் பார்வைகளும் விமரிசனங்களும் இன்னும் விரிகின்றன. புதிய வாழ்வுக்கான கனவுகள், மனித மதிப்பீடுகள். ஆன்மீகத் தேட்டங்கள் யாவும் புதிதாகச் சேகரம் கொள்கின்றன. அவை படைப்பாகின்றன. புதிதாகப் பிறக்கின்றன.
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.