எஸ்ஸார்சி

 

எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நானும் என் எழுத்தும்

கடலூர் மாவட்டத்திலே உள்ளது விருத்தாசலம் வட்டம். அங்கே ஒரு சிறிய கிராமம் என் பிறந்த ஊர். தருமநல்லூர் என்பது அந்த அழகான கிராமத்தின் பெயர், நான் என்னுடைய கதைப் படைப்பில் அனேகமாக தருமங்குடி என்று குறிப்பிடுவது எப்போதும் இந்த கிராமத்தைத்தான். கிராமத்துப்பள்ளியில் அங்கே நான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். அய்ந்து வகுப்புவரை மட்டுமே அப்பள்ளியில் அப்போது இருந்தது. எங்களூர் மாரியம்மன் கோவில் வாகன மண்டபத்திலேதான் அந்தப்பள்ளிக்கூடம் நடந்தது. நான் தான் பள்ளியில் சட்டாம் பிள்ளை.

மகாகவி பாரதியார் பற்றி என் ஆசிரியர் பள்ளி மாணவர்களைப் பேசச் சொன்னார்..பாரதியார் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கட்டுரையும் சேர்த்துக்கொண்ட கட்டுரைப் புத்தகம் எங்கிருந்தோ கிடைத்தது. அந்நூலைக் கடன் வாங்கிப்படித்துவிட்டு நான் பள்ளியில் பேசினேன். எனக்குத்தான் அன்று பரிசு கிடைத்தது அது பெரியதாக ஏதுமில்லை. விச்டம்’ என்று அட்டையில் அச்சிடப்பட்ட 40 தே பக்கமுள்ள ஒரு கோடுபோட்ட நோட்டுப்புத்தகம். அதுவே எனக்குக்கிடைத்த முதற்பரிசு.

சின்ன நெற்குணம் என்னும் பக்கத்து கிராமத்திலிருந்து வரும் ஆசிரியர், ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடித்த (லோயர் கிரேடு) ஆசிரியர் பூவராகப்படையாட்சி.. அந்தக்காலத்தில் அப்படித்தான் அவர் கையெழுத்திடுவார் . அவரே வகுப்பில் எங்களுக்குக் கதைகள் அடிக்கடிச் சொல்லுவார். .ராமாயணமும் பாரதமும் அவர் சொல்லித்தான் எனக்குத்தெரிய ஆரம்பித்தது.

ஊர்க்கதைகள் சொல்வதில் தருமநல்லூர் சாமிநாத குருக்கள், வாகடம் காசிப்படையாச்சி, தருமைநாதன் சந்நிதியில் ,தேவாரம் பாடும் வைணவரான ராஜகோபால் பிள்ளை, கொடிகளத்து ஆச்சி நாவிதன், தொழிலாளி நாகலிங்கம், என் அம்மாவின் தமக்கையார் வெங்கம்மாள், என் உடன் பிறந்த சகோதரன் சந்துரு, கதை சொல்லி ச்சொல்லி எப்போதும் கூடியிருப்போரைச் சிரிக்க வைத்திடும் என் தந்தை சுந்தரேசன் என்று எத்தனையோ பேர் எனக்கு விஷய தானமாய் உதவியிருக்கிறார்கள் என்னோடு தொலைபேசித்துறையில் பணியாற்றிய முகாசப்பருர் கணேசன் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாலோ ஒருவருக்குப் பசிகூட எடுக்குமா என்ன. டெலிபோன் ஆய்வாளர் நெய்வேலி கணேசன் இலக்கிய நண்பராய் கிடைத்ததும் எனக்கு எழுத்தில் வலிமை சேர்த்த சமாச்சாரங்கள் தமிழ் போதித்த தமிழாசிரியர்களில் நான் குறிப்பிடவேண்டியது வாழைக்கொல்லை புலவர் ராசாங்கம், அவரைப்போல் இனி தமிழ்ப்பாடம் நடத்த எங்கே போவது.. தமிழ் இலக்கணத்தை அவர் சொல்ல க்கேட்கும் மாணவர்கள் யாவரும் கொடுத்துவைத்தவர்கள்.

‘ வா வந்து தெரிந்தவரை பேசு அது இது எது பற்றி வேண்டுமானாலும் பேசு. தோன்றியது எல்லாம் பேசு தம்பி பயப்படாதே’ என்பார். மாணவர்கட்கு மேடையில் சரியாகப் பேச்சுப்பேசக்கற்றுத்தரவேண்டும் என்பார். தவறு கண்டால் உடன் திருத்தி உதவுவார். மாணவர்க்கு பரந்த ஆழமான உலக அறிவு வேண்டும் என்பார். எப்போதும் தூய வெள்ளை ஆடை, நிமிர்ந்த நடை கம்பீரமான பேச்சு கணீர்க்குரல் அடிக்கொருதரம் அவிழும் புன்னகை தேவைக்கு உதவும் தங்கக் குணம்,குன்றா ஒழுக்கம் எல்லாமாய் வாழ்ந்த என் தமிழாசிரியர் அவர். என் நெஞ்சில் எப்போதும் நிலைப்பவர் வாழைக்கொல்லை புலவர் ராசாங்கம். அன்று நிகழ்ந்த சீன எல்லை யுத்தத் தருணத்தின் போதெல்லாம் மாணவர்களுக்கு நாட்டு நடப்பு என்ன என்பது சொல்லிக்கொடுத்தார். அந்த வளையமாதேவி வள்ளலார் பள்ளியில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பாக காந்தி பஜனை நடக்கும். அனைத்து மத பிரார்த்தனைப்பாட்டுக்களும் அங்கே பாடப்படும்.

பிறகு கம்மாபுரம் உயர்நிலைப்பள்ளி யில் நான் படித்தபோது மூன்றாண்டுகள். இலக்கிய மன்ற செயலாளனாய் செயல் பட்டேன். ஒரு முறை மன்ற ஆண்டு விழாவில் தெய்வசிகாமணி என்று கையெழுத்திட்ட அன்றைய குன்றக்குடி அடிகளார் சிறப்புரை ஆற்றினார். அடிகளார் கையால் நான் நிறைய பரிசுகள் வாங்கினேன்.

பிறகு சிதம்பரத்து அண்ணாமலைப்பல்கலைக்கழகம் எனது ஆசானானது. நான் வேதியியல் பட்டபடிப்புப் படித்தாலும் மொழிப்பாடமே எனக்கு மிகவும் பிடிக்கும். வித்துவான் வெங்கடராம ச்செட்டியார் நடத்திய முத்தொள்ளாயிர வகுப்பு இன்றும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. பதிப்புச்செம்மல் மெய்யப்பனார் அன்று அரை செயின்கவர்போட்ட சீட்டுக்கவரும் இல்லா பழைய சைக்கிள் ஒன்றில் வெற்றி கைடுகள் காரியரில் கட்டாக வைத்துக்கொண்டு எறும்புபோல் உழைத்து உலா வந்த காலம். அவ ரோடு ஆறு அழகப்பன் அழ பழனியப்பன் போன்றோர் பல்கலையில் எனக்குத் தமிழ் ப்போதித்தனர். ஆங்கிலப்பேராசிரியர் வீரப்பன் மாக்பெத் நடத்தியது நினைவில் இன்றுமுள்ளது. மாக்பெத் மாகாவியம் என்றே சொல்வேன்.

அண்ணாமலை ப்பல்கலைக்கழகத்து ஆண்டு மலரில்(1972) நான் ‘பாரதிதாசன் பனுவலில் சில’ என்னும் கட்டுரை எழுதினேன் பல்கலைகழக மலருக்கு டாக்டர் மாத்யூ வணிக இயல் துறை பொறுப்பாய் இருந்தார். அக்கட்டுரையே அச்சில் வந்த என் முதல் படைப்பு.

சிதம்பரம் காந்தி அமைதி நிலையத்து அன்பர்களோடு அன்று எனக்கு நல்ல தொடர்பு இருந்தது .அங்கும் ‘தொண்டு’ என்னும் இதழுக்கான ஆசிரியக்குழுவில் நான் பொறுப்பாக இருந்தேன். சாந்தி சேனா என்னும் அமைப்பில் பின்னர் உறுப்பினன் ஆனேன். கருநாட மாநில கடோலி ( ஹ¥பிலி அருகே ) கிராமத்தில் சர்வோதய முகாம் ஒரு மாத காலம் நடந்தது. அதனில் இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்தும் பல்கலைக்கழக மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது முழுப்புரட்சி க்கு அறைகூவல் தந்த ஜயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தோடு விரும்பி இயங்கினேன் கருநாடக சுப்பா ராவ் அதன் தலைவராக இருந்தார்.மகாதேவ தேசாயின் புதல்வர் நாராயண தேசாயோடும் அங்கு கடோலியில் தங்கியிருந்தோம். கல்லூரியில் படித்த சமயம் சிதம்பரம் வந்த காஞ்சி ஜயேந்திரர் கீழ வீதியில் வேத பாராயண மடத்தில் இறங்கியிருந்தார். அவர் முன் கூடியிருந்த ஆன்மீகக் கூட்டத்தில் தன்னிடமிருந்த மாலையொன்றை வீசி எறிந்தார். அது என் மீது வந்து விழுந்தது. பின்னர் என்னை அவர் அழைத்து வரச்சொல்லிப்பேசினார்.

காஞ்சி சங்கராச்சாரியர் ஜயேந்திரர் அவர்கள் என்னை இந்துசமய தொண்டு மன்றம் தொடங்கிப் பணி செய்ய அறிவுறுத்தினார். பரங்கிப்பேட்டையில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

பரங்கிப்பேட்டை சிவன் கோவிலில் ஜயேந்திரர் தங்கியிருக்க அந்நகரத்து இசுலாமியர்கள் அவர் வருகையின் போது அவருக்கு உணவு மற்றும் இதர செலவுகளை ஏற்று நிறைவாக உதவி செய்தனர். அது தொன்றுதொட்டு வரும் மரபென்றும் கேள்விப்பட்டு நெகிழ்ந்துபோனேன்.

தேசபிதா காந்தியின் அரிசனசேவையை அங்கீகரிக்க மறுத்த ஜயேந்திரரின் யோசனைகள் எனக்கு மன வருத்தம் தந்தது.

பணிக்கு என்று தொலைத்தொடர்பு த்துறைக்கு வந்த போது மார்க்சீயம் என்னை ஈர்த்தது. இன்றும் மனித நேயம் போற்றும் மார்க்சீயமே எனக்குப்பிடித்த விஷயம்.
தீபம் தாமரை கணையாழி தினமணிக்கதிர் ஆகியன என் கவனத்துக்கு வந்தன.
கனையாழியில் அன்று அசோக மித்திரன் ஆசிரியர். என் முதல் சிறு கதை’ குட்டிச்சுவர்’
கணயாழியில் பிரசுரமானது சிறுகதைகள் தொடர்ந்து எழுதினேன்.

கவிதையை முதன் முதலில் நிகழ்- ஞானி, வெளியிட்டு எனக்கும் ஒரு கார்டு எழுதி உற்சாகம் தந்தார்.என் முதல் சிறுகதைத்தொகுப்பு என் இலக்கிய நண்பர் வே. சபாநாயகம் முன்னுரையோடு ‘மறுபக்கம்’ வெளி வந்தது. ஜெயமோகன் ஒரு இன்லன்ட் லெட்டரில் அதனை ப்படித்துவிட்டு விமரிசனத்தைக் கட்டுரைபோல் எழுதி அனுப்பினார்.

என் நாவல் ‘மண்ணுக்குள் உயிர்ப்பு.’ குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகம்வெளியிட்டது. குறிஞ்சி வேலன் அன்று தொடங்கி என் எழுத்துக்கு உற்றதுணை ஆனார்.

ராஜம்கிருஷ்ணன் அந்நாவலுக்கு விமரிசனம் எழுதி அது கணையாழியில் வெளி வந்தது.

திருமுதுகுன்றம் ( விருத்தாசலம் ) விட்டு ப்பின்னர் பணி மாற்றலில் நான் கடலூர் நகரம் வந்தேன்.

கடலூரில் தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்ற மாவட்டச்செயலர் என்று ஆகிப்பணி செய்தேன்.

சங்கு ஆசிரியர் வளவதுரையனோடு எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.

கடலூரில் சிரில் அறக்கட்டளை என்னும் தொலைபேசி ஊழியர்கள் தமிழ் அமைப்பில் பொறுப்பளாகப்பணியாற்றினேன். ஒரு பத்தாண்டுகள் தமிழ்த்தொண்டு ஆற்ற கடலூரில் வாய்ப்புக்கிடைத்தது. குறிஞ்சிப்பாடி என்னும் சிறு நகரிலிருந்து திசை எட்டும் இதழ் மொழிபெயர்ப்புக்கு என குறிஞ்சி வேலன் அவர்களால் தொடங்கப்பட்டது. அதனில் ஆசிரியர்க்குழுவில் பணியாற்றும் ஒர் கிடைத்தற்கரிய நல்ல வாய்ப்பு கிடைத்தது.

பட்டுக்கோட்டை மு. ராமலிங்கம் நடத்தும் ‘ இலக்கியச்சிறகு’ மற்றும் ஆங்கில இதழ் ‘ஷைன்’ ஆகியவற்றில் ஆலோசகராயும் இருந்து வருகிறேன். பண்பாளர் ராமலிங்கத்தின் மனம் பெரிது.

சென்னைக்கு வந்து யுகமாயினி சித்தனோடு சேர்ந்து இலக்கிப்பணி செய்து வருகிறேன்.

பணி என்றால் அது கொஞ்சம் பெரிய வார்த்தையோ..

திண்ணை இணைய தள இதழில் தொடர்ந்து எழுதுகிறேன். பத்து உபநிடதங்களை நான்கு வேதங்களை புதுக்கவிதை நடையில் நூறு வாரங்கள் கொண்டு வந்திருக்கிறேன். இணையத்தார் திண்ணைக்குக்கடமைப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

என்னுடைய புதினம் ‘ கனவு மெய்ப்படும்’ முடி திருத்தும் துணி வெளுக்கும் தொழிலாளர் பற்றியது.

திருப்பூர், எட்டயபுரம், மாநில வங்கி,, என் எல் சி நிறுவன விருது என நான்கு பரிசுகள் அந்நாவலுக்குக்கிடைத்தது. ‘நெருப்புக்கு ஏது உறக்கம்.’ என்னும் புதினம் தமிழ அரசின்
பரிசு பெற்றது. சேலம் தாரையார் விருதும் அந்நாவலுக்குக் கிடைத்தது.

ஆங்கில இலக்கித்திலும் ஈடுபாடு உடைய நான் ‘ரெயின் போ’ என்னும் கவிதை நூலையும், ‘பேகனும் திருவள்ளுவரும்’ ஒப்பீட்டு நூலையும் எழுதி னேன். இந்திய அளவில் வெளிவரும் ஆங்கில சிற்றிதழ்களிலும் சர்வதேச ஆங்கில இதழ்களிலும் என் எழுத்துக்கள் வெளியாகியுள்ளன.

மொழிபெயர்ப்புக்கு திசை எட்டும் இதழ் எனக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
மகேந்திர பட்நாகரின் ஆங்கில க்கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘ காலம் மாறும்’ என்னும் ஒருதொகுப்பாகவும் ராஜாஜி எழுதிய இந்து தத்துவ நூல் ஒன்றினை ‘ ஆன்ம தரிசனம்’ என்ற பெயரிலும் மொழி ஆக்கம் செய்து வெளியிட்டேன்.

தமிழக அரசின் மொழிபெயர்ப்பு உதவித்தொகை ராஜாஜியி நூலுக்குக்கிடைத்தது.
மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் நான் எழுதிய ‘ சிந்தனை விழுதுகள்’ என்னும் கட்டுரை நூலைத்தேர்வு செய்து வாங்கி நாடு முழுவதுமுள்ள மைய அரசின் நூலகங்கட்கு விநியோகித்தது.‘ யாதுமாகி’’ என்னும் சிறுகதை நூல் காஞ்சி மாமுனிவர் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பிற்குத்துணைப்பாடமாக வைக்கப்பட்டது.
அய்ந்து சிறுகதை நூல், மூன்று புதினங்கள், மூன்று கவிதை நூல், நான்கு கட்டுரை நூல்,
மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டு ஆகியன இதுவரைக்குமான என் படைப்புக்கள்.
எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் சொன்ன பாரதியே என்றும் என் மானசீக குரு.

– பெப்ரவரி 2011