இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி.
இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.
படிப்பதில் தீரா காதல் கொண்ட அவருக்கு, கதைகள், கவிதைகள் எழுதுவதிலும், அதிக ஆர்வம் இருந்தது. வேதியியலில் இளங்கலை பட்டமும், உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். யோகக் கலையில் தேர்ச்சி பெற்றவர். இன்னும் பல கலைகளில் ஆர்வமும்,தகுதிகளும் உண்டு.
ஆரம்பத்தில் இவரது பல கதைகள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. அவரது சொந்த குரலிலும் , வானொலியில் கதைகளை வாசித்துள்ளார். வானொலியில், பல நேர்காணல் நிகழ்ச்சிகளிலும், பலவிதமான “நிலா முற்றம்” போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார்.
பிறகு குடும்பக் கடமைகள், அலுவலக கடமைகள் ஆகியவற்றால், எழுதுவதில் நேரம் செலவழிக்க முடியாமல், அரிதாக அவ்வப்போது சில கதைகள், கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் நிறைய சிறுகதைகள், கவிதைகள், எழுதத் துவங்கியுள்ளார்.
இவரது இருபதுக்கும் மேற்பட்ட சிறு கதைகள் , பல கவிதைகள், பல விழிப்புணர்வு கட்டுரைகள், இலக்கிய மாத இதழ் தாமரை, கணையாழி, புதிய பார்வை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வானவில் மின்னிதழ், முதலெழுத்து மின்னிதழ், தீக்கதிர் நாளிதழ், ஆகியவற்றில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இவரது முகநூலில் இவர் எழுதிய கதைகள், கவிதைகளை பதிவு செய்துள்ளார். “கலையின் சிறுகதைகள்” என தனியாக “blogger” திறந்து, தனது படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இவரின் முதல் சிறுகதை 1988 ஆம் ஆண்டு இலக்கிய மாத இதழ் தாமரையில் வெளியானது. இதுவரை பத்திரிக்கையில் பிரசுரமான சிறு கதைகளையும், இதுவரை எழுதி உள்ள பிற கதைகளையும் சேர்த்து புத்தகம் வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அரசு வேலை, நல்ல குடும்பம், பல அரசு துறைகளில் பணியாற்றிய அனுபவம், பலவித மனிதர்களை சந்திக்கின்ற வாய்ப்பு, இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அனுபவம், மலேசியா ,சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று, அங்குள்ள மக்களை பார்த்து பழகிய அனுபவங்கள்…. என்ற நிலையில், அவர் பார்த்த, கேட்ட, அறிந்த, மனதினை நெருடிய பல உள்ளார்ந்த விஷயங்களை ,மனித வாழ்வின் அவலங்களை, சமூகக் கொடுமைகளை, அவருக்கென்ற தனி நடையில், அவருக்கு பிடித்த பாணியில் பதிவு செய்கிறார்.
அவர் உணர்ந்து தெளிந்த, விஷயங்களின் தாக்கத்தினை, அவர் மனதினை பாதிக்கின்ற, பல சமுதாய அவலங்களை, நண்பர்கள் வட்டாரத்தில் அவருக்குத் தெரிய வந்த, பல வித கதை கரு சூழல்களை, அவரின் எதார்த்த கதை களத்துடன் சேர்த்து, அனைவரும் அதை உணரும் வகையில், கதைகளாக வடிக்கிறார்.
அவர் யாருடைய எழுத்து நடையையும் பின்பற்றவில்லை. அவருக்கென்று உள்ள அவரின் இயல்பான சொந்த நடையில், கதைகளை வடிக்கிறார். அறம் சார்ந்த விஷயங்களை வாசகர் மனதில் பதிய வைக்க முற்படுகிறார்.
நல்லதே நினை. நல்லதே நடக்கும் என்பதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை. நேர்மறை எண்ணங்களுடன் கூடிய, நேர்மையான கடின உழைப்பு, உண்மையான விடா முயற்சியால் வெற்றி கிட்டியே தீரும், என ஆழமாய் நம்புபவர். அவரின் இந்த முயற்சி வெற்றி அடைய நல்வாழ்த்துக்கள். அவரின் படைப்புகளின் மீதான உண்மையான விமர்சனங்களை ஆவலுடன் வரவேற்கிறார்.
அவர் எழுதி பிரசுரமான சிறுகதைகளின் விவரங்கள் கீழே:
- “ஒரு நிஜம் ஒரு கற்பனை”, நவம்பர் 1988, தாமரை இலக்கிய மாத இதழ்.
- “இவளா அவன்..?” பிப்ரவரி 95, அகில இந்திய வானொலி.
- “வேஷம்”, ஜூலை 1995, புதிய பார்வை (மாதம் இருமுறை இதழ்).
- “ருத்திர தாண்டவம் “, செப்டம்பர் 1996 ,அகில இந்திய வானொலி.
- “கொஞ்சம் தனியா பேசணும்”, டிசம்பர் 1996, அகில இந்திய வானொலி.
- “மத்தாப்பு சிரிப்புக்குள் ஒரு சோக ராகம்”, மார்ச் 2007, தாமரை மாத இதழ்.
- “நெகிழி”, ஜூன் 2022, தாமரை இலக்கிய மாத இதழ்.
- “ஏக்கம்”, ஆகஸ்ட் 2022, தீக்கதிர் நாளிதழ்.
- “ஏக்கம்”, நவம்பர் 2022, தாமரை இலக்கிய மாத இதழ்.
- “உயிர் மூச்சு”, ஏப்ரல் 2023, தாமரை இலக்கிய மாத இதழ்.
- “சாந்தி குடியிருப்பு”, ஜூலை 2023, தாமரை இலக்கிய மாத இதழ்.
- “ரமணி பாட்டி”, அக்டோபர் 2023 ,வானவில் மின்னிதழ்.
- “அவனோட மனசு”, நவம்பர் 2023 வானவில் மின்னிதழ் .
- “உயிர் மூச்சு”, ஜனவரி 2024 ,வானவில் மின்னிதழ்.
- “நான் ஏன் இப்படி..?”, பிப்ரவரி 2024, வானவில் மின்னிதழ்.
- “ஜானகி அம்மா”, ஏப்ரல் 2024, தமிழ் டிஜிட்டல் நியூஸ்.
- “சிகப்பி கிழவி “, ஏப்ரல் 2024, தமிழ் டிஜிட்டல் நியூஸ் .
- “கலெக்டர் அம்மா”, மே 2024, தமிழ் டிஜிட்டல் நியூஸ்.
- “நான் ஏன் இப்படி..?”, மே 2024 ,தீக்கதிர் நாளிதழ்.
- “இரத்தக்களரி”, ஜூன் 2024, தமிழ் டிஜிட்டல் நியூஸ்.
- “இரத்தக்களரி”, ஜூன் 2024, வானவில் மின்னிதழ்.
இத்துடன் அவரின் பல கவிதைகள், பல இதழ்களில் பிரசுரம் ஆகியுள்ளன.
இன்னும் பல சிறுகதைகள் கையிருப்பில் , பிரசுரத்தில் இருப்பதாய் தெரிவித்துள்ளார்.