என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு.
இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்
அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான் காண நேர்ந்திருக்கிறது.
1967ல் தான் என் முதல் எழுத்துலக பிரவேசம். எனது இயற் பெயர் மாதினியார். ஆரம்பத்தில் என் புனை பெயர் தமிழ் குடி கொண்டான். அந்தப் பெயரில் முதல் நான் எழுதியது ஓரிரண்டு அரசியல் கட்டுரைகள் தாம். காங்கிரஸ் கட்சித் தலைவரான காலம் சென்ற திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்களின் கட்சிப் பத்திரிகையான தமிழனில் தான் என் முதல் அரசியல் கட்டுரை பிரசுரமானது. அது பின்னர் திரு தமிழ்வாணன் அவர்களின் கல்கண்டு இதழிலும் மறு பிரசுரமாக வெளியானது. அதன் பின்னர் தான் நான் கதைகள் எழுதத் தொடங்கினேன்.
தமிழனிலும், ஈழநாடு என்ற பத்திரிகையிலும் என் கதைகள் வெளியாயின. இருந்த போதிலும் பெரிய பத்திரிகைகலில் எழுத எனக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் நான் என்ற உளவியல் மஞ்சரியில் நிறைய எழுத நேர்ந்தது. என் கதைகளை மட்டுமல்ல அதன் ஆசிரியரான வின்சன் பற்றிக் அடிகளார் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நான் எழுதும் கடிதங்களில் வரும் சிறப்பான வார்த்தைகளுக்கே அவர் பூரண அங்கீகாரம் கொடுத்து அவற்றையும் தமது பத்திரிகையில் பிரசுரம் செய்ததையும் ஒரு விருதாகவே ஏற்று மகிழ்ந்திருக்கிறேன்.
நான் எழுதும் தமிழ் அத்துணை சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதும் கூட. இதை என் அருமை சினேகிதி கோகிலா மகேந்திரன் கூட ஒரு முறை சிலாகித்துப் பேசியிருகிறார். என் கதைப் படித்துப் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாகவே பிடிபடும்.
அதன் பிறகு கொழும்புக்கு இடம் பெயர்ந்து வந்த பிறகு, திரு டொமினிக் ஐயா அவர்களின் மல்லிகை பத்திரிகையிலும் நான் நிறைய எழுதியிருக்கிறேன். அவருக்கும் என் எழுத்தின் தனித்துவ நடை நன்றாகவே பிடிக்கும். மேலும் திரு பரணிதரனின் ஜீவநதி பத்திரிகையிலும் என் ஏராளாமான சிறுகதைகள் மட்டுமல்ல இரு குறு நாவல்களையும் அதில் நான் எழுதினேன்.
- என் புத்தகவெளியீட்களாய் மொத்தம் மூன்று புத்தகங்களை மட்டுமே வெளியீடு செய்திருக்கிறேன்
- மல்லிகை வெளியீடாக வந்தது துருவசஞ்சாரம் என்ற சிறுகதைத் தொகுப்பு
- மற்ற இரண்டும் ஜீவநதி வெளியீடுகள்.
- ஒன்று ஆனந்தியின் இரு குறுநாவல்கள் என்பது.
- மூன்றாவதாக சமநிலை வைத்தியன் என்ற சிறுகதைத் தொகுப்பு.
- இது எனக்கு கிடைத்த விருதுகளாய் மூன்று மட்டுமே உண்டு மூத்த எழுத்தாளார்களூக்கான ஒரு விருது.
- மற்றது இலங்கை கலாச்சார அமைச்சினால் வழங்கப்பட்ட கலாபூஷணாம் விருது.
- மற்றது சிறீ விபூதி விருது தெஹிவளை பிரதேச்சபையால் வழங்கப்பட்டது.
என்னைப் பற்றிய சுயவிபரங்கள் இவ்வளவே. என் சுயமான இருப்பு வேறு விளம்பர வாழ்வியலுக்குள் சிக்காத வேதசாரமான என் உள் மன இருப்பை வெளியிடுவதானால், வேறு விதமாக எழுத வேண்டும். அதை என் கதைகள் வாயிலாகவே அறிய முடியும். இப்படியொரு வேண்டுதலை என் பொருட்டு அறிவித்தமைக்கு மிக்க நன்றி. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இப்படிக்கு அன்புடன்
ஆனந்தி.