அல்-அஸுமத், பொன்னையா (1942.11.22 – ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலாயுதம். இவரது தந்தை பொன்னையா; தாய் மரியாயி. 1960 – 1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழிநுட்பக் கல்லூரியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரை பணியாற்றினார்.
இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப் புலவர் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுங்காவியங்கள் எழுதியுள்ளார். புலராப் பொழுதுகள் (குறுங்காவியம்), மலைக்குயில் (கவிதைகள்), அல் அஸுமத் கவிதைகள் (கவிதைகள் 1987), வெள்ளை மரம் (சிறுகதைகள் 2001), குரல் வழிக் கவிதைகள் (கவிதைகள் 2009), பிலால்: ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு (மொழிப்பெயர்ப்பு 2010), அறுவடைக் கனவுகள் (நாவல் 2010), ஆயன்னையம்மாதாய் (சிறுகதைகள் 2012) ஆகியவை இவரது நூல்கள்.
யாழ்ப்பாண இலக்கிய வட்டத்தின் மிகச்சிறந்த கவிதை நூலுக்கான விருது, தேசிய அரச சாஹித்திய விருது, சிரித்திரன் சுந்தர் நினைவு விருது, முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருது, தமிழியல் விருது ஆகிய விருதுகளையும் இலக்கியச் சாகரம், கவித் தாரகை ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
வெளிவந்த நூல்கள்
- குரல் வழிக் கவிதைகள் – கவிதைத்தொகுப்பு
- வெள்ளை மரம் – சிறுகதைத்தொகுப்பு
- புலராப் பொழுதுகள் – குறுங்காவியம்
- அறுவடைக் கனவுகள்
பரிசுகளும் விருதுகளும்
- யாழ். இலக்கிய வட்டத்தின் மிகச்சிறந்த கவிதை நூலுக்கான விருது (குரல் வழிக் கவிதைகள் – கவிதைத்தொகுப்பு 2009)
- தேசிய அரச சாஹித்திய விருது (வெள்ளை மரம் – சிறுகதைத்தொகுப்பு, 2002)
- சிரித்திரன் சுந்தர் நினைவு விருது
- முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருது (புலராப் பொழுதுகள் – குறுங்காவியம், 1984)
- தமிழியல் விருது (அறுவடைக் கனவுகள்)
என்னுரை – வெள்ளை மரம் – டிசம்பர் 2001
ஓசை முதல எழுத்தெலாம் ஏகன்றன்
நேசம் முதற்றே நிலம்
1964ல் என் முதற் சிறுகதையான ‘பூவின் காதல்’ வீரகேசரியில் வெளி வந்தது. அதற்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் வீரகேசரியில் எழுதி வந்திருந்தாலும், அவ்வாக்கங்கள் கதைகளாகவும் கட்டுரைகளாகவுமே இருந்தன. 1965ல் என் முதற் கவிதை வெளிவந்தது. அதுவும் வீரகேசரியில் தான்.
தொடர்ந்தும் சில கதைகள் வெளியாகின எனினும் என் கவனம் பிறகு கவிதையிலேயே இருந்துவிட்டது. அடிக்கடி பிரசுரமாகும் ஓர் ஊடகமாகக் கவிதை இருந்தமை காரணம் எனலாம்.
1966லிருந்து எழுபது வரையும் பிறகு 1974 லிருந்து எண்பது வரையிலும் ஓர் அஞ்ஞாதவாசமும் மேற்கொண்டிருந்தேன்!
1980க்குப் பிறகு கலாபூஷணம், தமிழ்மணி திரு. தெளிவத்தை ஜோசப் அவர்களைக் கண்ட போது அவர் என்னைச் சிறுகதை எழுதுமாறு தூண்டினார். சிறுகதைத் தொடர்பு அற்றுப் போய்விட்டதாக நான் சொன்ன போது, அப்படியெல்லாம் சொல்லக் கூடாதென்று அறிவுறுத்திச் சில சிறுகதை நூல்களையும் தந்தார்.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நான் பங்கு பற்றியிருந்த சில சிறுகதைப் போட்டிகளைச் சுட்டிக்காட்டி, அவற்றுள் சிலவற்றுக்குத் தான் நடுவராக இருந்தமையையும், நான் பரிசு பெறாது போனாலும் என் கதைகள் பாராட்டப்பட்டன என்பதையும் வலியுறுத்தி, நானே மறந்து போயிருந்த சில போட்டிக் கதைகளின் தலைப்பையும் சில முக்கியமான வரிகளையும் அவர் எனக்கு நினைவூட்டியபொழுது நான் வியந்து போனேன்!
இந்த நூலில் வெளிவந்திருக்கும் பரிசு பெற்ற ஏழு சிறுகதைகளும் அதன் பிறகு எழுதப்பட்டவையே. ஏனைய ஐந்து சிறுகதைகளும் அதன் பிறகு எழுதப்பட்டு மிகவும் பாராட்டப்பட்டவையே. என் இலக்கிய வழிக்குப் பொதுவாகவும் என் கவிதைகளுக்குச் சிறப்பாகவும் எவ்வாறு நான் என் ஆசிரியர் ‘நயினை ஆறாறே’ அவர்களை என் இலக்கிய ஆசானாக வரித்திருக்கிறேனோ, அதே போல் தெளிவத்தை ஜோசப் அவர்களை நான் என் சிறுகதை ஆசானாக வரித்திருக்கிறேன்.
இந்த இருவரையும் எனக்களித்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
1993ல் கலை ஒளி’ முத்தையாப்பிள்ளை அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட மலையகச் சிறுகதைப்போட்டியில் என் சிறுகதையான ‘விரக்தி’ முதற் பரிசு பெற்றது. தெளிவத்தை அவர்களின் வழிகாட்டலின் பிறகு பிறந்த கதை அது!
தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் பேசப்பட்ட சிறுகதை’ என்ற தகுதிக்கு அது ஆளானது! இலங்கை, இந்தியாவிலும், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற தமிழ்க்குடியேற்ற நாடுகளிலும் இக்கதை வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது! இந்தப் பேச்சுக்கெல்லாம் காரணம், தெளிவத்தை ஜோசப் அவர்களின் அப்பழுக்கற்ற ஆர்வமூட்டுகைதான்!
இந்தக் கதை பரிசு பெற்றிருந்த கையோடு, துரை விஸ்வநாதன் ஜயா அவர்கள் என்னை அழைத்து, ஒரு தொகைப் பணத்தையும் என்னிடம் தந்து, என் சிறு கதைத் தொகுதி ஒன்று உடனடியாக வெளிவர வேண்டுமென்று வற்புறுத்தினார்! அப்போது துரைவி பதிப்பகத்தை அவர் ஆரம்பித்திருக்க வில்லை.
என் வசம் அக்காலகட்டத்தில், பழைய முறையிலான கோர்க்கும் அச்சுக்கூடம் இருந்தது. நானே எழுத்துக் கோர்த்து எண்பது பக்கங்கள் வரை அச்சேற்றியிருந்தேன். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் ஒருநாள் அச்சு வேலைகளைக் கண்டு திருப்திப்படாதவரானார். கம்பியூட்டர் யுகத்தில் அழகான அச்சு முறைகள் வந்துவிட்ட பிறகு இது இனி எடுபடாது என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்! அனுபவசாலி அல்லவா! துரைவி அவர்களும் அதையேதான் சொன்னார், அடுத்த நாளே! பழைய முறையிலான அச்சு வேலையை உடனடியாக நிறுத்தினேன்.
கணனிப் பிரதிகளைப் பெறுவதற்காக ஒருவரைத் தேடிப்பிடித்து அவரிடம் என் கையெழுத்துப் பிரதிகளை ஒப்படைத்தேன்.
ஆறு மாதங்களில் எனக்கு அவர் தந்திருந்த கதைகளின் எண்ணிக்கை நாலரைதான்! அலைந்தலைந்து எனக்கும் அலுத்துப்போன நிலையில், கைப்பிரதிகளைக் கொண்டு வரும்படி நண்பர் கோவிந்தராஜ் என்னை வற்புறுத்தினார்.
ஆனால், கணனிக்காரர் திடீரென்று காணாமற் போய்விட்டார்! என் கைப்பிரதிகளும் அவரோடு காணாமற் போய்விட்டன! மறுபடியும் என் கைப்பிரதிகளை நான் தயார் செய்து முடித்த போது மேலும் சில மாதங்கள் கடந்திருந்தன.
இது நடந்து கொண்டிருக்கும் போது, துரைவி பதிப்பகம் தொடங்கப்பட்டு அமோகமாக வளர்ச்சியடைந்து, ஒரு சிறுகதைப் போட்டியும் நடந்து முடிந்திருந்தது! ஆயினும் பரிசளிப்பு விழாவுக்கு முன்னரே ஐயா அவர்கள் எங்களிடமிருந்து உடலளவிற் பிரிந்தார்கள். இந்த நிலையில், அந்தப் போட்டியில் ஆறுதல் பெற்றிருந்த ‘இருட்டு’ சிறுகதையையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகளைக் கோவிந்தராஜிடம் கொடுத்திருந்தேன். அவர் கணனியில் இட்டுத் தந்தார். இக்காலகட்டத்தில் நண்பரின் அச்சியந்திரம் பழுதாகி இருந்ததால் இன்னொரு நண்பரிடம் கணனிப் பிரதிகளைக் கொடுத்தேன். அந்த வாரம் தான் விடுமுறையிற் போவதாகவும் அது கழித்துத் தன்னை வந்து பார்க்கும்படியும் அவர் என்னிடம் கூறியிருந்தார். அதே போல் நானும் ஒரு வாரம் கழித்துப் போனபோது, அவர் விலகிப்போய்விட்டதாக அச்சுக்கூடத்தின் உரிமையாளர் சொன்னார். என் பிரதிகளைப் பற்றி அவரிடம் பிரஸ்தாபித்த போது, தேடிப்பார்த்துவிட்டு ஒரு வாரத்தில் சொல்வதாகச் சொன்னார்.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் நான் போன போது, என் நண்பர் இந்தியா போய் விட்டதாகவும் இனிமேல் வரமாட்டார் என்றும் அவர் தன்னுடைய எந்தப் பொருளையும் அங்கே விட்டுச்செல்லவில்லை என்றும் கூறினார்! நான் கவலைப்படுவதைத் தவிர செய்வதற்கொன்றுமிருக்கவில்லை!
ஆனால், என் நண்பர் மீதிருந்த வன்மத்தில் அந்த அச்சுக்கூடத்தார் அவருடைய எல்லாப் பொருள்களையும் எரித்து விட்டார்கள் என்று அங்குள்ள ஒரு சிப்பந்தி சொன்னார். என் கதை ‘விரக்தி’ போலவே நானும் இருந்துவிட்டேன்!
கோவிந்தராஜின் கணனியிலும் பழுது ஏற்பட்டு என் கதைகள் உட்படப் பல விடயங்கள் அழிந்து போயிருந்ததால் மறுபடியும் கணனிப் பிரதிகளைப் புதிதாகச் செய்ய வேண்டிய நிலை.
அப்போதுதான் துரைவி ஐயாவின் மகன் திரு ராஜ் பிரசாத் என்னை அழைத்திருந்தார். தெளிவத்தை அவர்களோடும் மேமன் கவியோடும் அவர் கதைத்திருப்பார் போல் தெரிகிறது. என் சிறுகதைத் தொகுதி வர வேண்டும் என்று தந்தையார் கொண்டிருந்த ஆவலைத் தான் நிறைவேற்றுவதாக
திரு ராஜ் பிரசாத் கூறினார்.
அல்ஹம்துலில்லாஹ்!
அதனால் என் முதற் சிறுகதைத் தொகுதி உங்கள் கரங்களில்.
தெளிவத்தை ஜோசப் என்னைச் சிறுகதை எழுதுமாறு தூண்டியிருக்கா விட்டால் நான் அதில் சிரத்தை எடுத்திருப்பேனா என்பது சந்தேகமே. அவர் என்னைச் சிறுகதை எழுதுமாறு துாண்டியதற்குக் காரணம், அவருக்குள் என்னைப் பற்றியிருந்த உயர்வான ஒரு தொலை நோக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை.
அதே தொலை நோக்குத்தான் துரை விஸ்வநாதன் அவர்கள் மனத்திலும் உதித்திருக்க வேண்டும்.
இவ்விருவரின் தொலை நோக்கும் உறுதி செய்யப்பட்டுவிட்டது!
புதுடில்லியில் இயங்கும் ‘கதா’ என்ற அமைப்பு, சிறுகதை ஊடகத்தை ஊக்குவிக்கும் ஓர் அமைப்பாக இருந்து வருகிறது. ஆண்டு தோறும், சார்க் நாடுகளுக்கிடையில் வெளிவரும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மொழி பெயர்ப்புச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள்.
1999 ஆம் ஆண்டுக்குரிய போட்டிக்காக இலங்கையிலிருந்து முதன் முதலாக என் சிறுகதையான ‘விரக்தி’ யைத் தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்தார்கள். அதற்கான பரிசுத் தொகையையும் எனக்கு அனுப்பி இருந்தார்கள்.
என் ஆரம்பக் காலத்துக் கதைகள் வெறும் கதைகள்தான். பண்ணப்பட்ட கதைகள். தெளிவத்தை ஜோசப் அவர்களின் அறிவுறுத்தலுக்குப் பிறகுதான் நான் என் அனுபவங்களைச் சிறுகதையாக்கத் தொடங்கினேன். அந்தப் படியில் என் ஒவ்வொரு சிறுகதையும் என்னை மேலே மேலே உயர்த்திக் கொண்டு செல்வதைக் கண்டு உற்சாகமாகினேன்.
அதுமட்டுமல்லாமல், ஒரே முறையில் எழுதும் பழக்கமும் என்னை விட்டுப் போய்விட்டது. எண்ணிக்கையை நான் புறக்கணித்து விட்டேன். ஒன்றை எழுதினாலும் அது நின்று பிடிக்க வேண்டும் என்ற மனோதிடம் ஏற்பட்டுவிட்ட பிறகு, அந்த ஒன்றைச் செப்பனிடுதலே என் கடமையாக அமைந்துவிட்டது.
பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ பிரசுரமாகியிருந்ததைக் கூட இங்கே நான் செப்பனிட்டிருக்கிறேன். முதற் பிரசுரத்தின் போதே சில பகுதிகள் பிரசுரமாகாமல் இருந்திருக்கின்றன. அவையும் இதில் பிரசுரமாகியிருக்கின்றன.
எனது அனைத்துக் கதைகளும் இரத்தமும் சதையுமான நிஜங்களே. சில சம்பவப் போக்குகளையும் சம்பாஷணைகளையும் கதைக்காகப் புனைதலைத் தவிர்க்க முடியாதெனினும் அவையும் தொண்ணூறு விகிதம் சத்தியமானவையே.
இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கும் ‘வம்சத்துவம்சம்’ சிறுகதை மாத்திரம் சில விமர்சகர்களால் செயற்கையான முடிவு என்று விமர்சிக்கப்பட்டது. ஆயினும் என் காரணம் வேறாக இருப்பதால் அதைச் செயற்கைக் கதை என்று சொல்ல மாட்டேன்.
ஹோமோக்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் ஆண்களாக மாறலாம் என்றும், லெஸ்பியன்கள் பெறும் ஆண் குழந்தைகள் பெண்களாக மாறலாம் என்றும் நான் கருதினேன். அப்படிக் கருதியதன் காரணம் நான் எந்த மருத்துவ ஆராய்ச்சியையும் படித்ததால் அல்ல. எழுத்தாளனுக்கேயுரிய ஒரு சர்வாதிகாரக் கற்பனை! அதை நான் கதை எழுதும்போது எந்த வைத்தியரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளவுமில்லை.
பிரச்சினை வந்த பிறகுதான் என் வைத்திய நண்பர்களான டாக்டர் முருகானந்தம், டாக்டர் தாஸிம் அஹமது, டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோர்களிடம் விசாரித்தேன். அப்படி ஒரு தியறி இல்லை என்றார்கள்.
எனினும் எதிர் காலத்தில் தியறிகள் எப்படியெப்படி இருக்கக் கூடுமோ! அதனால், பிற கதைகளைச் செப்பனிட்டதுபோல் இந்தக் கதையைச்
செப்பனிடாமல் மருத்துவ உலகின் ஆராய்ய்ச்சிக்காக விட்டுவிட்டேன். என் கற்பனை சரியென்று நான் கூறவில்லை. ஆயினும் பால் மாற்றம் சத்தியமானது தானே!
சிறுகதையின் சரியான எழுத்துப் போக்கையும் பிரயோசனத்தையும் எனக்குக் காட்டித் தந்ததோடு இத்தொகுதிக்குரிய முன்னுரையையும் தந்துதவிய தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும், என் சிறுகதைகளைப் பிரசுரித்த களங்களுக்கும், என் சிறுகதைத் தொகுதி இலக்கிய உலகில் உலவ வேண்டும் என்று பேரார்வத்துடன் செயல்பட்டு வரும் நண்பர் கே. கோவிந்தராஜ் அவர்களுக்கும், எனது முதற் சிறுகதைத் தொகுதியான ‘வெள்ளைமரம்’ வெளிவருவதற்கு மூல கர்த்தாவாக விளங்கும் துரைவி வெளியீட்டக உரிமையாளர் திரு. ராஜ் பிரசாத் அவர்களுக்கும், என்மீது கரிசனைமிக்க வழிகாட்டிகளான திரு. எஸ். எம். கார்மேகம் திரு. மு. நித்தியானந்தன் டொமினிக் ஜீவா, எச். எச். விக்கிரமசிங்க, என் மனைவி சஃபியா உம்மாவுக்கும் என் மக்களுக்கும் நன்றி கூறி, என்றென்றும் இலக்கிய உலகில் நித்தியமாக விளங்கும் துரைவி ஐயா அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பித்து அமைகின்றேன்.
அல் அஸுமத்,
22-11-2001.
1/1, சென். மேரிஸ் வீதி, மஹாபாகே, ராகம. தொலைபேசி: 075-352556
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.
மாத்தளை டிக்கிரியா தோட்டத்தில் 22.11.1942ல் பொன்னையா (ராமன் நாயர்) – மாரியாய் தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்த அல் அஸுமத்தின் இயற்பெயர் வேலாயுதம் ஆகும்.
1965ல் மரபுக் கவிஞராக இலக்கிய உலகிற்கு அறிமுகமான அல் அஸுமத் கடந்த நான்கு தசாப்தங்களாகக் கவிதை, சிறுகதை, குறுநாவல், தொடர் நாவல், நடைப்பா என்று இலக்கியத்தின் பல்துறைகளிலும் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருபவர்.
கலைஒளி முத்தையாபிள்ளை நினைவு விழாக்குழுவுடன் வீரகேசரி நடாத்திய மலையகச் சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘விரக்தி’ என்ற கதைக்கு முதற்பரிசு கிடைத்தது.
1999ல் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகளிலிருந்து மேற் கொள்ளப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான மொழி பெயர்ப்புப் போட்டியில் ‘விரக்தி’ சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு புதுடில்லியில் இயங்கும் ‘கதா’ இலக்கிய அமைப்பின் இந்த முதன்மையான இலக்கிய விருதினை இலங்கையில் பெறும் முதல் சிருஷ்டி எழுத்தாளராக அல் அஸுமத் தெரிவு செய்யப்பட்டார்.
துரைவி -தினகரன் நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘இருட்டு’ சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.
நாற்பதுக்கும் மேலாகச் சிறுகதைகள் எழுதிய இவர் தினகரனில் ‘அமார்க்க வாசம்’, ‘அறுவடைக்கனவுகள்’, ‘சுடுகந்தை’ என மூன்று தொடர்கதைகளையும் எழுதியுள்ளார். ‘புலராப் பொழுதுகள்’, ‘மலைக்குயில்’ ஆகியவை கவிதை நூல்களாக வெளிவந்துள்ளன.
வெறும் எழுத்தோடு நின்றுவிடாமல் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ‘இலக்கிய மஞ்சரி’, ‘இளைஞர் இதயம்’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியதோடு ‘கவிதைச் சரம்’ என்ற நிகழ்ச்சி மூலம் நான்கு வருடங்களாகப் பல புதிய கவிஞர்களை உருவாக்கி 468 கவிஞர்களின் 580 கவிதைகளை 372 பக்கத்தில் ‘கவிதைச் சரம்’ என்ற பெயரில் ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார்.
‘பூபாளம்’, ‘பௌர்ணமி’, ‘முகில்’ போன்ற சஞ்சிகைகளை வெளியிட்டுக் களைத்தவர்.
‘சுடுகந்தை வேலாயுதம்’, வாணியன்’, ‘வேசுதன்’, ‘விருச்சிகன்’, ‘புல்வெட்டித்துறைப்புலவர்’, ‘சாத்தன்’, ‘எல். அசோமட்’, ‘அசோமட்டெல்கோவ்’ ‘மாத்தளையான்’ ஆகிய புனைபெயர்களில் மறைந்திருப்பவரும் இவரே.
கே.கோவிந்தராஜ்
11.2011
(கங்குலன்)
அல் அஸுமத் அருமையான சிறுகதை எழுத்தாளர். மலையகம் பெருமைப்படக் கூடிய படைப்பாளி. – தெளிவத்தை ஜோசப்.
“… ‘விரக்தி’ கதை பார்த்தேன்… மிக நல்ல கதை! எங்கள் அய்யா மிகமிக மகிழ்ந்து போயிருப்பார். ஒரு நல்ல மனிதனின் நினைவுப் பரிசு அது….. – மு. நித்தியானந்தன்.
“அடிப்படையில் அல் அஸுமத் ஒரு கவிஞராக இருப்பதனால். இவரது ஏனைய ஆக்க இலக்கியப் படைப்புகளிலும் உள்ளோட்டத் தொனியாகக் கவித்துவமே இழையோடுகிறது.” – மேமன் கவி
“…கவிஞராகி, சிறுகதை ஆசிரியராகி, அமார்க்க வாசம்’ மூலம் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராகவும் பரிணமித்துள்ளார் அல் அஸுமத்”. – சுபைர் இளங்கீரன்.
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.