ஒரு கோடை விடுமுறை
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 1,794
(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் – 5
வழக்கமான சிரிப்பு. வழக்கமான தாடி. ‘தேடிய தெய்வம் வழியில் வந்தது.’ அப்படித்தான் நினைத்தான் பரமநாதன்.
“என்ன இலக்கிய வேட்டையோ நடக்கிறது?”
சத்தியமூர்த்தியின் கண்களையும் முகத்தையும் போல் அவன் வார்த்தைகளும் எப்போதும் மலர்ந்திருக்கும்.
“ஏதும் சிபாரிசு செய்யும் நல்ல தமிழ் நாவலாக”. பரமநாதன் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தான்.
“நல்ல தமிழ் நாவல்!” கண்களை வியப்புக்குறியுடன் உயர்த்திக்கொண்டு யோசனை செய்யுமாப்போல் வாயில் கை வைத்தான் சத்தியமூர்த்தி.
“என்ன காணும் இலங்கையை விட்டு ஒரு நிமிடம் பிரியாமல் இருக்கிறீர். தற்காலத் தமிழ் இலக்கியப்புலி போல ஆட்களான உங்களுக்குத் தெரியாவிட்டால், யாரிடம் கேட்பது?”
நண்பனின் பெரிய கேள்வியால் அவன் ஒன்றும் அசந்து விடவில்லை.
“என்ன இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இன்ரறஸ்ற்? காண்டேகர்களும் கல்கிகளும் பிறந்திருப்பார்கள் என்றா நினைக்கிறாய் பத்து வருடங்களில்?”
சத்தியமூர்த்தி திருப்பித் தாக்கினான். எப்போதும் இருவரும் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். முன்பு எத்தனையோ இரவுகள் நேரம் போவது தெரியாமல் இலக்கியச் சர்ச்சைகள் செய்திருக்கிறார்கள்.
மத்தியானச் சூடு மண்டையை உடைத்தது. இருவரும் ‘சுபாஸ் கபே’க்குள் போனார்கள். பரமநாதனுக்குப் பழைய பொக்கட்டைத் தடவிய காலம் ஞாபகம் வந்தது.
இப்போது நூறுரூபா நோட்டுகளுக்குச் சில்லறையில்லை.
ஒரு அக்கறையுமில்லாமல் நூறுரூபா நோட்டுக்களை மேசையில் போட்டுச் சில்லறை தேடும் நண்பனை வியப்பைக் காட்டிக் கொள்ளாமல் பார்த்தான். சத்தியனின் பார்வையின் கருத்து பரமநாதனை உலுக்கியிருக்க வேண்டும்.
“நாங்கள் ஒன்றும் லண்டனில் பணத்தில் விழுந்து எழும்பவில்லை. இங்கே நூறு ரூபா எங்களுக்கு இரண்டரைப் பவுண்ஸ்; இரண்டரை ரூபா மாதிரி. அதனால் ஒரு நிமிடத்தில் நூறுரூபா போவது பெரிய காசாகத் தெரியவில்லை. ஏனென்றால் லண்டனில் ஒரு கோழி வாங்க உதவும் காசு இரண்டரைப் பவுண்ஸ்.”
நண்பனின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்து பெரு மூச்சு விட்டான் சத்தியமூர்த்தி.
“என்ன காணும் பெருமூச்சு விடுகிறீர்?” ‘பாஷன் புறுட் ஜுஸ்’ பத்துவருடத்துக்கு முன் இருந்த ருசியாக இல்லை.
“கோழிக்கறிக்கு ஆசைப்பட்டுத் தமிழர்கள் ஓடுவதாற் தான் யாழ்ப்பாணத்தில் ஆண்களின் தொகையே குறைந்து விட்டது”.
வேடிக்கையாகச் சொன்னான் சத்தியன். அவன் உள்ளம் வேலையற்ற ஆயிரக்கணக்கான தமிழர்களின் துடிப்பையுணர்ந்தது.
யூனிவேர்சிற்றியால் வெளிக்கிட்டபின் உருப்படியான் வேலை கிடைத்திருந்தால் பரமநாதன் போயிருப்பானா?
“எப்படி இருக்கிறீர்?” பரமநாதன் கேட்டான்.
“எப்படி என்றால்……?” சத்தியன் கேள்விக்குறியுடன் நண்பனைப் பார்த்தான்.
“எப்படி என்றால்…… குடும்பம்… குழந்தைகள்?”
பரமநாதனை விரக்தியுடன் பார்த்தான் சத்தியன்.
“வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் வசதி படை த்தவர்களுக்கு. வாழ்க்கை ஒரு திண்டாட்டம் எங்களைப் போன்ற தமிழர்களுக்கு. கல்யாணம் ஒரு ‘லர்ஸறி’ வசதி படைக்காதவனுக்கு. கல்யாணம் இல்லை என்றால் வாழ்வு இல்லை என்று ஏன் யோசிக்கிறாய்?”
சத்தியனின் கேள்விகள் உடனடியாகப் பதில் சொல்லக் கூடியவைகளாக இருப்பதில்லை சில வேளைகளில்.
கொழும்பில் இந்துக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருபது வருடங்களுக்கு முன்னால் இருக்குமா? கொழும்பு இனக்கலவரத்துடன் பரமநாதன் குடும்பம் யாழ்ப்பாணத்தோடு நிலைக்க, சத்தியன் ஆட்கள் திரும்பவும் கொழும்புக்குப் போய்….
‘அக்கா சொன்னாள் எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவரத்தில் சத்தியன் குடும்பம் பலத்த சேதமடைந்ததாக.
சத்தியன் எங்கே வேலை செய்கிறான், என்ன வேலை செய்கிறான், எப்படிச் சீவிக்கிறான்? அவர்களின் மற்றச் சினேகிதர்களுக்கெல்லாம் என்ன நடந்தது என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள், பரமநாதனின் மனத்தில் ஓடின.
பரமநாதனின் யூனிவேர்சிற்றி நண்பர்களை அவனுக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் கொழும்பில் அரசியல் விடயங்களில் ஒன்றாய்த் திரிந்தவர்களைத் தெரியும். வியட்நாம் யுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய கூட்டத்தில், சத்தியன் தலைமை தாங்கினான்.
அந்த அரசியல் வேட்கை எங்கே இப்போது?
“எங்கே வேலை செய்கிறீர்?” பரமநாதன் கேட்டான்.
“கொழும்பிற்தான்.” சத்தியமூர்த்தி சொன்னான்.
“அம்மா. அப்பா…” பரமநாதன் முடிக்கவில்லை.
“பரலோகம் போய் விட்டார்கள் தமிழனாய்ப் பிறந்த குற்றத்தால். வீட்டோடு எரித்தார்கள் தெகிவளையில்.நான் எப்படி முறிந்தகாலுடன் தப்பினேனோ தெரியாது!”
மேலே கேட்க ஒன்றுமில்லை. கேட்கவும் தயாராயில்லை.
தாய் நாடு, தமிழர் நிலை, நினைக்க முடியாத பயங்கர வாழ்வுக்கு ஆளாகிப் பரிதவிக்கும் தமிழர்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும்?
“எல்லாம் எங்கள் தலைவர்களின் பிழை. சத்தியாக்கிரகம் பண்ணி தமிழ் இனத்தையே அழியப்பண்ணி விட்டார்கள்”. பரமநாதன் இப்படிச் சொல்ல, சத்தியன் அக்கம் பக்கம் பார்த்தான். எங்கே யார் இருந்து என்ன கேட்டு வைக்கிறார்கள் என்பதில் சத்தியனுக்குக் கவனம்.
“கவனமாகக் கதையும்” சத்தியன் முணுமுணுத்தான்.
“வெளிநாட்டில் சொகுசாக இருந்து கொண்டு ஒரு மாத விடுமுறையில் வந்து எதையும் சொல்லி விட்டுப் போய்விடுவீர்கள். அதனால் தாக்கப்படுவது தமிழ் இனம்; சாதாரண சனங்கள் தாக்கப்படுகிறார்கள்.
இரவில்லை பகல் இல்லை எந்த நேரமும் வீட்டை உடைக்கிறார்கள். உத்தியோக உடுப்பில்லை, வெறும் ஆயுதங்களுடன் வந்து மனித வேட்டை – தமிழர் வேட்டை ஆடுகிறார்கள். “ஆளும் கட்சியின் ஆர்மிகள்”. சத்தியனின் குரலில் ஆவேசம் தெரிந்தது. ஆனாலும் அடங்கிப் பேசினான்.
எரிந்து மறைந்து திரும்பக் கட்டிய யாழ்ப்பாணப் பெரிய கடை, முன்னால் தெரிந்தது.
“தன் சொந்தப் பூமியில் தன் தலைநகரை எரிக்கப் பார்த்துக் கொண்டிருந்த தமிழன், என்னத்தைத்தான் இழக்க மாட்டான்?” பரமநாதன் வெறியுடன் சொன்னான்.
“விசர்க்கதை கதையாதேயும் தமிழன் என்று மட்டு மில்லை. தன்னை எதிர்க்கும் எந்தச் சக்தியையும் தகர்த்து எறிய, எந்த அரசாங்கமும் தயங்கியதில்லை.71ம் ஆண்டில் எத்தனை ஆயிரம் சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள்! எதிர்ப்பு என்ன விதத்தில் வந்தாலும் அதை அழித்து ஒழிப்பதுதான் ஆளும்கட்சியின் வேட்டைநாய்களின் வேலை.
ஒரு காலம் வரும். சாதாரண மக்களுடன் அரசாங்கத்தைப் பாதுகாத்த காவல் படையே சேரும். அந்தக் காலத்தை விரைவில் வரப்பண்ணுவதுதான் எங்கள் வேலையாக இருக்க வேணும்.”
சத்தியமூர்த்தியின் பிரசங்கத்தால் வாயடைத்துப் போய் இருந்தான் பரமநாதன்.
தனக்கும் தன் குடும்பத்துக்கும் நேர்ந்த அவலநிலையால் தமிழ் வெறியூறியிருக்கும் என்று நினைத்தான்.
சத்தியன் அப்படியே இருந்தான்.
எத்தனை துன்பங்கள் வந்தும் தன் இலட்சியத்தை மாற்றாத முற்போக்குச் சோசலிசக் கொள்கைகளை யுடையவனா இருந்தான்.
ஆனால் நடப்பது?
பரமநாதன் சத்தியமூர்த்தியின் அரசியல் வேதாந்தத்தில் எரிச்சல்பட்டுச் சொன்னான்.
“உமது இடதுசாரி உபதேசம் எனக்கு வேண்டாம். நான் பிற்போக்குவாதியுமில்லை முற்போக்குவாதியுமில்லை. சாதாரண நடைமுறையில் ஒரு இனம் நசுக்கப்படுவது என்ன ஜனநாயகம்?
அதிகாரம் இருப்பதற்காக ஒரு இனத்தை அழிக்க இன்னொரு இனத்தைத் தூண்டி விடுகிறார்கள். இதை எதிர்ப்பதை விட்டுவிட்டு இன்றும் சாதாரண சிங்கள மக்களுன் சேர்ந்து தமிழர் விடுதலைக்குப் பாடுபடவேண்டும் என்று விசர்க்கதை கதைக்கிறீர்”. ரமநாதன் படபடத்தான். சத்தியன் நண்பனைக் கூர்ந்து பார்த்தான்.
“லண்டன் பகட்டுச் சீவியத்தில் இலங்கையின் பிரச்சினை யின் உண்மைச் சொருபங்கள் உமக்கு வேறு விதமாகத் தெரி கிறது. சாதாரண சிங்கள மக்கள் த ங்களில் பாய்வார்கள் தங்கள் முதலாளித்துவத்தைப் புரிந்துகொண்டு என்ற பயத் திற்தான், அவர்கள் கவனத்தையும் கஷ்டத்தையும் தமிழரில் காரணம் காட்டித் திருப்பிவிடுகிறார்கள். இதை எதிர்ப் பதைத்தான் இன்றைய முற்போக்குச் சக்திகள் செய்யவேண்டும்.” சத்தியமூர்த்தி அமைதியாகச் சொல்ல, பரமநாதன் ஆத்திரத்துடன் எழுந்தான்.
“ஆமாம் கலாநிதி பெரேரா, விக்கிரமசிங்கா,பீட்டர் கெனமன் செய்ய முடியாமல்தான் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தார்கள்!”
பரமநாதன் பெரியகடையில் இறங்கி நடந்தான். காலையில் எழுந்தது தொடக்கம் தங்கை பானுமதி முதல் ஒவ்வொரு நிகழ்ச்சியும், தலையிடி தருவதாகப் பட்டது.
கஸ்தூரியார் றோட்டில் நடந்து கொண்டிருந்தனர்.
“வீட்ட வாரும் மத்தியானம் சாப்பிடுவம்.” சத்தியன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான். யாழ்நகர் எங்கும் பொலிஸ், ராணுவம் நடமாட்டம் தெரிந்தது.
”பார்க்க உனக்குத் தெரியவில்லையா இவர்கள் நடந்து கொள்ளும் விதம்? ஒரு சொந்த இனம், சொந்த நாட்டின் ஒரு பகுதியாகவா யாழ்பாணம் நடத்தப்படுகிறது? ஏதோ கைப்பற்றிய அந்நியபூமியை அந்நியநாட்டாரை நடத்துவது போல் இல்லையா இந்த ராணுவத்தினரின் நடமாட்டம்?”
பரமநாதனை வழக்கம் போல் சிரித்தபடி பார்த்தான் சத்தியன்.
“எழுபத்தி ஓராம் ஆண்டும் இப்படித்தான் சிங்களக் கிராமங்கள் ராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள்ளாகின. எதிர்ப்பது யாராயிருந்தாலும் அழிப்பதுதான் அவர்கள் கட்டளை”.
‘எதிர்ப்பது யாராய் இருந்தாலும்…’
‘பானுமதியை வீட்டில் எல்லோரும் எதிர்க்கப்போகிறார்கள். என்ன செய்யப்போகிறாள்?’
“உனக்குக் கல்யாணம் ஆகாதது ஒரு விதத்தில் நல்லது”. பரமநாதன் முன்னுக்குப் பின் முரணாக சம்பாஷணை தொடங்க, ஆச்சரியத்துடன் பார்த்தான் சத்தியன்.
“ஏன் என்றால் கல்யாணம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது தெரியாமல் இருக்கலாம்.”
இருவரும் சிரித்தார்கள். சத்தியமூர்த்தி நண்பனிடம் கேட்டான்.
”உமது இங்கிலிஸ் பெண்டாட்டியைப் பற்றிச் சொல்லவில்லையே நீர்?”
பரமநாதன் சிரித்தான்.
“என்ன சிரிக்கிறீர்?” சத்தியன் கேட்டான்.
“பெண்டாட்டிகளும் கல்யாணங்களும் கடைசியில் ஒரே ரகமும் ஒரே ருசியுமென்றுதான் நினைக்கிறேன். நிறங்களும் அவர்கள் நினைவுகளும் பாஷைகளுந்தான் வித்தியாசம்; பிரச்சனைகளும் ஒரே மாதிரி”.
இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
பரமநாதனின் யூனிவேர்சிற்றிக் காதலைப் பற்றிச் சாடையாகக் கேள்விப் பட்டிருந்தான் சத்தியன். தற்போது அது ஞாபகம் வந்தாலும் மௌனமாக நடந்தான். கேட்காமல். “எப்போது திரும்புவீர்?” சத்தியன் கேட்டான்.
“தங்கைச்சிகளின் பிரச்சனைகள் கிட்டத் தட்ட முடிந்த மாதிரி. ஒருமாத லீவு முடியப் போக நினைக்கிறேன்”
“என்ன தகப்பனாரின் செத்தவீடு முடிய முதல் தங்கைகளுக்குக் கல்யாணமா?” ஆச்சரியத்துடன் கேட்டான் சத்தியன். தனக்குச் சொல்லாமல் கொள்ளாமல் கௌரிக்குக் கல்யாண எழுத்து முடிந்ததைச் சொல்லி ஓலம் வைக்காத குறையாக முறையிட்டான் பரமநாதன்.
“பானுமதி?” கேட்டான் சத்தியன்.
ஒரு கணம் தயங்கிட்டுச் சொன்னான் பரமநாதன்.
“தனக்குத் தானே பெடியன் பார்த்து வைத்திருக்குத் தங்கைச்சி”. பரமநாதனுக்குத் தெரியும் பெண் உரிமையை விரும்புவன் சத்தியன் என்று.
“கெட்டிக்காரி. காதலிப்பது கெட்டித்தனம் இல்லை. அது எல்லோராலும் முடிந்த விசயம். கல்யாணத்தைப் பண்ணிக் கொள்ளச் சொல்”. சத்தியன் நகைச்சுவையுடன் சொல்ல, பரமநாதன் சொன்னான். “அதுதான் பிரச்சினையாக வரப் போகிறது.”
என்ன என்பது போல் நண்பனைப் பார்த்தான் சத்தியன். “பெடியன்… பெடியன் தாழ்த்தப்பட்ட சாதி” பரமநாதன் எங்கோ பார்த்தபடி சொன்னான்.
அறுபத்தி எட்டாம் ஆண்டு கோயில்களில் தாழ்த்தப் பட்டவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் தகப்பன்களின் வேட்டியைக் கட்டிக்கொண்டு கலந்து கொண்டது ஞாபகம் வந்தது.
“நீர் என்ன சொல்கிறீர்?” சத்தியன் கூர்மையாகக் கேட்டான். லண்டன் பிற்போக்குக் கருத்துக்களை யுண்டாக்கியிருக்குமா?
சத்தியனுக்குத் தெரியாது கார்த்திகாவின் தம்பி என்று.
“நான் என்ன சொல்வது? நான சபேசனைச் செய்யப் போகிறேன். அவளின் விருப்பர், செய்யட்டும்.”
“‘சபேசனா?” ஆச்சரியத்துடன் கூவினான் சத்தியன்.
“ஏன் உமக்குத் தெரியுமா ஆளை?” பரமநாதன் கேட்டான் சத்தியன் கத்தியவிதத்திலிருந்து.
சத்தியன் நண்பனை ஏறிட்டுப் பார்த்தான்.
“என்ன காணும் அளந்து பார்க்கிறீர், சேட் தைக்கப் போகிறீரா?” பரமநாதன் எரிச்சலுடன் கேட்டான்.
“நீர் தமிழர் உரிமைகளைப் பற்றிக் கதைத்த விதத்தில் நான் உணர்ந்திருக்க வேண்டும் நீர் யார் கூட்டமென்று” சத்தியமூர்த்தி புழுதியடித்த பஸ்ஸுக்கு விலகிக்கொண்டு சென்றான்.
பரமநாதன் விளங்காமல் திண்டாடினான். என்ன புலம்புகிறான் இவன்? நான் கூட்டணிக்காரனா?
“என்ன சத்தியன் புலம்புகிறீர்?”
சத்தியன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நண்பன் அருகில் வந்து மெல்லச் சொன்னான்.
“உமது தங்கைச்சியின் காதலன் ஒரு விடுதலை வீரர்; சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்; ஒரு எழுத்தாளர்; பொலிஸாரிடம் அகப்பட்டு எலும்பெல்லாம் உடைந்தவர். எந்த நிமிடமும் அவர்கள் இவரை, மூளையைப் பிய்த்து நாய்க்குப் போட்டு மூலையில் கிடக்கும் கேணிகளில் எறிந்து விடலாம்”.
பரமநாதன் திடுக்கிட்டான் நண்பன் சொல்வதைக் கேட்டு. சத்தியன் சொல்லச் சொல்ல ஒவ்வொரு எலும்பும் ஆடுவதுபோல் இருந்தது; இரத்தம் உறைவதுபோல் இருந்தது.
”உமக்கு என்ன தெரியும் இருவரும் ஒரே சபேசனாக இருக்கும் என்று?” பரமநாதன் குரல் பதறியது.
“சதாசிவம் வாத்தியாரின் மகன் உமது தங்கைகள் படித்த ‘ரியூட்டரி’யிற் படித்தது ஞாபகம். சபேசனையோ பானுமதியையோ எனக்குத் தெரியாது. உமது அக்கா சொன்னா கடைசித் தங்கை படித்த ரியூட்டரியைப் பற்றி ஒருதரம்”. சத்தியன் சொன்னான்.
சதாசிவம் மாஸ்ரரின் மகன் சபேசன்.
‘கொம்யூனிஸ்ற் சதாசிவம் மாஸ்ரரின் மகன் சபேசன்? சத்தியமூர்த்தி, பரமநாதன் போன்றவர்களுக்கு மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்ற கொம்யூனிஸ்ற்றுகளின் தத்துவத்தைப் படிப்பித்த சதாசிவம் வாத்தியாரின் மகன் ஒரு இனவாதி! ஈழவிடுதலைக்காரன்!’ பரமநாதன் மௌனமாக நடந்தான்.
“இளைஞர்கள் இப்படி ஆவேசமாகப் போவதில் ஆச்சரியம் இல்லை. சபேசனின் தம்பி ஒருவனைப் பொலிஸார் கொலை செய்து விட்டு கேணி ஒன்றில் போட்டிருந்தார்கள். அத்துடன் அவர்கள் குடும்பத்திற்கும்…” மேலே சொல்ல முடியாமல் நடந்தான் சத்தியன்.
“அவர்கள் குடும்பத்திற்கு என்ன….?” பரமநாதன் பதறினான். கார்த்திகாவும் செத்திருப்பாளா?
”சபேசன் சம்பந்தியாக வரப்போகிறான், கேட்டுக் கொள்.” கேட்டைத் திறந்துகொண்டு மாமர நிழலில் சைக்கிளைச் சாத்தினான் சத்தியன். எத்தனை மைல் நடந்திருப் பார்கள்? இவனுக்கும் கால் உளைந்தது.
சத்தியன் வீட்டில் அருமையான மரக்கறிச் சாப்பாடு. இவன் எதிர்பாராத விருந்தாளி என்றாலும் இருந்த சாப்பாடு எல்லோருக்கும் போதுமானதாக இருந்தது. மனம் நிறைந்த சினேகிதம், வாய் ருசிக்கும் சாப்பாடு, இவற்றை விட வேறு என்ன வேண்டும் என்றிருந்தது பரமநாதனுக்கு. சத்தியனின் தமக்கையின் உழுந்து வடையைச் சாப்பிட்ட போது.
இன்னொரு தரம் மாமரத்தின் கீழ் இருந்து இலக்கிய, அரசியல் வாதம் செய்துவிட்டு வரப், பின்னேரம் ஆகி விட்டது.
***
வீட்டில் பானுமதியுடன் தனிமையில் கதைக்க வேண்டும் போல் இருந்தது. சபேசனைப் பற்றிக் கேட்க வேண்டும். சபேசனைப் பற்றி நிறைய அறியவேண்டும் போல் இருந்தது. சபேசன் எழுத்தாளனாம்.
அவன் என்ன எழுதுகிறான் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. இலங்கையில் எழுத்தாளர்கள் மலிந்து விட்டார்கள்!
பானுமதியின் விடயம் எவ்வளவு தூரம் வீட்டில் தெரியும் என்பது மர்மமாக இருந்தது. ஆனால் பானுமதியுடன் தனியாகக் கதைப்பது முடிந்த காரியமாகத் தெரியவில்லை.
அந்த வார விடுமுறைக்குப்பின் கொழும்பு போவதாக முடிவு கட்டியிருந்தான்.
அக்காவும் குழந்தைகளும் மாமியார் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.
கௌரி வழக்கம் போல் ஆட்டுடனும் கோழிகளுடனும் மாரடித்துக் கொண்டிருந்தாள். அவனும் வார விடுமுறையின் பின் பாடசாலைக்குப் போகத் தொடங்கலாம். அதன் பின் பானுமதி வீட்டில் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களை விடாமல்,கேட்க வேண்டியவற்றைக் கேட்க நினைத்தான்.
மனைவி மரியனின் ‘எக்ஸ்பிரஸ் லெற்றர்’ வந்திருந்தது. அவன் பிரிவை அவள் விபரித்த விதம், மனத்தை நெகிழப் பண்ணியது. பிரிவில்தான் அன்பின் வலிமை தரிகிறது.
ஏரோபுளொட்டில் போனது பிழை என்று எழுதியிருந்தாள். சரி என்பதுபோல் தலையாட்டினான் கடிதம் வாசிக்கும் போது.
குழந்தை மீரா தன் பிஞ்சுக் கைகளால் படம்போட்டு அனுப்பியிருந்தாள் யானையும் கொண்டு வரட்டாம்!
அதிகம் பிரச்சினை தராத அன்பான தன் சின்னக்குடும்பத்திடம் அந்தக் கணமே போக வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
என் குடும்பம் என்பதின் முழுக் கருத்தும் நிறைவும், பிரிவின் துடிப்பில்தான் முழுக்க முழுக்க உணரப்படுகிறதாக யோசித்தான் அவன்.
பின்னேரம் தாய் வளவு மூலையில் வேலை. கௌரி ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள். யாரோ சொந்தக்காரர் புழுக் கொடியலும் வடையும் கொண்டு கொடுத்ததாக பானுமதி கொண்டு வந்தாள்.
இருபத்தொரு வயது. இதற்கிடையில் தனக்கென்று ஒருவனைத் தேர்ந்தெடுத்து விட்டு அவனைத்தான் செய்வேன் என்று சண்டைக்கு நிற்கிறாள். ஜான்ஸிராணி போதனையோ! வீரமாக இருக்கிறாள்!
“சபேசன் எப்படிப் பட்டவன் என்று தெரியுமா?” புழுக் கொடியலைக் கடித்தபடி கேட்டான் பரமநாதன். பானுமதி அவன் கேள்வி விளங்காத மாதிரி புருவத்தை உயர்த்தினாள். “எப்படியானவன் என்றால் என்னவாம்?”
”சபேசன் பொலிஸாருடன் தகராறுப் பட்டவனாம்.” அவன் வடையைக கையில் எடுத்தபடி சொன்னான்.
“உண்மையான தமிழன் எவனையும் பொலிஸ்காரனுக் குப் பிடிக்காதுதான்.” தமையன் தன்னுடையவனைத் தாக்குகிறானா? பானுமதி படபட த்தாள். விட்டுக் கொடுக்காத குரல்.
“பானுமதி, சபேசன் நடக்க முடியாத காரியங்களை உத்தேசித்து தன்னை அழித்துக் கொள்கிறான் என்று உனக்குப் புரியவில்லையா?” ‘எப்படி விளங்கப் படுத்துவது இவளுக்கு…?’ தமையனின் கேள்வி விசித்திரமாக இருந்திருக்க வேண்டும். சதிரையை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.
“அண்ணா, மற்றவர்களால் செய்யமுடியாதென்று நினைப்பவற்றைச் செய்யத்துணிபவர்கள் செய்ய முடியாதவர்கள் கண்களுக்கு, கோழையாகத்தான் படுவார்கள். இந்தியச் சுதந்திரப் போராட்டம் தொடங்கும்போது புத்தி கெட்ட இந்தியன் எப்படி, இந்த வலிமை படைத்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெல்ல முடியும் என்றுதான், கதைத்தார்களாம்! வியட்நாம் யுத்தத்தில் யார் வென்றார்கள்? அமெரிக்கனா அவர்களால் அழிக்க முடியும் என்று நினைத்த சாதாரண வியட்நாம் மக்களா?”
பரமநாதன் வாய் திறவாமல் தங்கையைப் பார்த்தான். “ரியூட்டரிக்குப் போவதாகச் சொல்லிக்கொண்டு சபேசனிடம் அரசியல் படிக்கப் போனாயா?” என்று கேட்டான்.
“யாருக்கு யாரும் அரசியல் படிப்பிக்கத் தேவையில்லை. எங்களுக்கென்று அனுபவம் வரும்போதுதான் எங்கள் இரத்தம் துடிக்கும். தமிழர்கள் எதை எதை எல்லாம் இழக்கிறார்களோ அதெல்லாம் ஒரு காலத்தில், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சிங்கள அரசாங்கத்தால் அழிபடப் போகும்போது, இருப்பதைப் பாதுகாக்க நாட்டை விட்டு ஓடாத சபேசன்கள் பாடுபடத்தான் போகிறார்கள்”
இவள் என்ன எலிஸபெத்தின் மறு அவதாரமா? அவள் பெண் விடுதலை கதைக்க இவள் இன விடுதலை கதைக்கிறாள்.
“உன்னைச் சபேசன் நன்றாகக் கதைக்கப் பழக்கி இருக்கிறான்.” தமையனின் குரலில் நையாண்டி இருந்திருக்க வேண்டும். அவள் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.
“அண்ணா எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவரத்தில் அவர் குடும்பத்துக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியாது”.
சொல்லி முடிக்க முதல் அவள் நா தழுதழுத்தது. எதுவும் யாருக்கோ நடக்கும் போது கதையாகவும் செய்தியாகவும் தான் இருக்கும்.
தனக்கென்று நடக்கும் போது……?
வாழ்கையின் திருப்புமுனைகள் தான் அந்த அனுபவங்கள் என்பது தெரியாதவனல்ல அவன்.
தங்கையை நிமிர்ந்து பார்த்தான்.
‘எவ்வளவு தூரம் குடும்பத்துக்குத் தெரியும் இவளின் காதலைப் பற்றி?’
“வீட்டில் தெரியுமா?” தமையன் தங்கையின் முகத்தைப் பாராமல் கேட்டான். அவள் மெளனமாக இருந்தாள் கொஞ்ச நேரம்.
“அப்பாவுக்குச் சொன்னேன். அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் தெரியும் என்று நான் நினைக்கல்ல. அப்பாவுக்கு அன்றிரவுதான் வருத்தம் வந்தது.”
பானுமதி சொல்லிமுடிக்கமுதல் தாய் வருவது தெரிந்தது; அவள் போய் விட்டாள். போக முதல், தமையனின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல் ஏன் இப்படித் திகிலாக இருக்கிறது என்பதின் உண்மையைத் தெரிந்திருந்தால் துடித்திருப்பாள் என்று தெரியும், அவனுக்கு.
‘ஸ்ரோக்’ என்ற வாதத்துக்கு ஒரு காரணம் மூளையில் ஏற்படும் தீடீர் அதிர்ச்சியும் என்பது இலக்கியமும் தையல் வேலையும் படித்த பானுமதிக்கு, எங்கே தெரிந்திருக்கப் போகிறது?
கடவுளே என்ன கொடுமை என்று கத்தியழுதிருப்பாள். அவன் சொல்லியிருந்தால். அதை அவளுக்கு விளங்கப் படுத்தியோ சொல்லியோ என்ன காணப்போகிறான்? அந்த அதிர்ச்சி அம்மாவுக்கும் ஏற்படாமல் எப்படிப்பார்ப்பது?
தகப்பன் இறந்த வேதனையிலிருந்து மீளவே இன்னும் எத்தனையோ மாதம் எடுக்கலாம். அதற்கிடையில் கௌரியின் கல்யாண விடயங்களில் கவனம் இருக்கும். இந்த நிலையில், கோவியனைக் காதலிக்கிறாள் பானுமதி என்று சொன்னால் எப்படி இருக்கும் தாய்க்கு? அவன் பெருமூச்செறிந்தான்.
அத்தியாயம் – 6
அம்மா, கொழும்புக்குப் போய் கௌரிக்குப் பேசிய பையனைப் பார்க்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தாள்.
பெரியக்கா, குழந்தைப் பட்டாளங்களுடன் யாழ்தேவியில் ஏறினான் பரமநாதன். சபேசன் கொழும்பில் நிற்பதாக பானுமதி சொன்னாள். போய்க்காணுவதாகச் சொன்னான். யாருடன் நிற்கிறான் என்று அவன் கேட்கவில்லை. தமக்கை தெகிவளையில் இருப்பதாக அவள் சொன்னாள்.
லண்டனிலிருந்து கொழும்புக்கு வந்து யாழ்ப்பாணம் போகும்போது இருந்த உணர்ச்சிகளையும், இப்போது ஒரு கிழமைக்குப் பின் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் போகும்போது இருக்கும் உணர்ச்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாமல் இருந்தது. எல்லாம் யாருக்கோ நடப்பது போல் இருந்தது. கார்த்திகா எங்கே இருக்கிறாள் என்று கூடத் தெரியாமல் இலங்கையில் கால் வைத்தவன் இப்போது அவளைத் தேடிப் போகும் நிலைவரத்தை யோசித்தான். இப்படியா அவர்கள் தொடர்பு இருக்குமென்று யோசித்தான்?
நல்லூர்த் திருவிழா. அந்தச்சாட்டில் இளம் பெண்களை வட்டமிடும் வாலிபர்கள். அவன் நினைவு விரிந்தது. வெறும் நிழலாய் அவள் பூங்காவனத் திருநாளன்று கோயில் அருகில் அநேகம் பெண்களுடன் திரிந்தாள். யாரோ ஒரு பெண்ணாக அவன் பார்வையில் பட்டாள்.
திரும்பி இன்னொருதரம் பார்க்கவேண்டும் போன்ற இளமையான அழகு.
திரும்பிப் பார்த்தான்.
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்று சிரித்தான் நரேந்திரன், நண்பன் பரமநாதனைப் பார்த்து.
அடுத்த நாள் விழுந்தடித்துக்கொண்டு நல்லூருக்குப் போனான் அவள் கண்களில் தட்டுப்படுகிறாளா, என்று பார்க்க.
அதன் பிறகு எத்தனையோ வெள்ளிக் கிழமைகள். ஏதும் விரதம் பிடிக்க மாட்டாளா? அதன் சாட்டில் கோயிலுக்கு வரமாட்டாளா என்ற நப்பாசை. சைக்கிள் பல தரம் உருண்டது நல்லூரில் யூனிவேர்சிற்றி என்றன்ஸ் படிப்பு வேறு. அப்பா வீட்டில் நச்சரித்துக் கொண்டிருந்தார். இப்படிப் படிக்காமல் திரிந்தால் என்னென்று எடுபடப் போகிறாய் யூனிவேர்சிற்றிக்கு என்று.
நண்பர்கள் சொன்னார்கள் நல்ல ரியூஷன் மத்ஸ், பிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி சதாசிவம் மாஸ்ரரிடமிருந்து என்று.
அவனுக்குத் தெரியவில்லை, எதிர்காலம் விரிகிறது என்று. மாஸ்ரர் இருக்கிறாரா என்று தேடிப்போக அவள் வந்து ‘கேட்டைத்’ திறப்பாள் என்று, அவன் படித்தது, யூனிவேர் சிற்றிக்குப் போனதென்பது எல்லாம் எப்படி உண்மையானது என்று அவனுக்கே ஆச்சரியமான காரியங்கள்.
இளமையின் உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளுக்கு ஒரு பெண் இவ்வளவு காரணமாய் இருக்கலாம் என்ற உண்மை நம்பமுடியாமல் இருந்தது. எண்ணமெல்லாம் எழுத்தாகி அவை பல வடிவங்களாகி – கவிதையாய்……கடிதங்களாய்…
சபேசனுக்கு ஞாபகம் இல்லாமல் போகாது அக்காவுக்கு கதைப் புத்தகம் கொடுத்தனுப்பியதெல்லாம். ‘என்ன நினைப்பான் இப்போது?’
தன் தமக்கையை ஏமாற்றியவன் தங்கைக்காக என்னிடம் வருகிறான் என்று நினைக்க மாட்டானா? அவன் பிழையா இப்படி எல்லாம் நடந்தது? பரமநாதன் – கார்த்திகா இருவரும் யூனிவேர்சிற்றிக்குப் போகப் பிளான் பண்ணியா நடந்தார்கள். அவைகள் சந்தர்ப்பவசத்தால் நடைபெறும் காரியங்களா?
கொழும்புப் பல்கலைக்கழகம், மாணவர் விடுதிகள், விக்டோரியாப் பூங்கா.
மவுண்ட்லவேனியாக் கட ற்கரை.
வெறும் இயற்கையின் மாற்றங்களாக இருக்கலாம் இரவும் பகலும், அதன் மகிமையை உணராதவர்களுக்கு.
ஆனால் உலகமே பூஞ்சோலையாய்த் தாங்கள் அந்தப் பூங்காவின் இளம் சிட்டுக்களாய்…
யாழ்தேவி ஓட்டத்தில் அவன் பெருமூச்செறிந்தான். என்ன நடந்தது எனக்கு லண்டனில்?
போய் ஒவ்வொரு கிழமையும் கடிதம் எழுதினேன் அவளுக்கு.என்னவென்று மாற்றியது லண்டன் என்னை?
ஒவ்வொரு நாளும் எழுதி-ஒரு கிழமையாகி – பின் பின்…. ஒவ்வொரு விதமான உறவுகளிலும் உலகம் தான் நினைத்த அளவு புனிதமில்லை. பவுத்திரமில்லை என்ற போலி வரட்டு வேதாந்தத்தால்…
அவளை அவ்வளவு கெதியில் – இரண்டு வருட இடை வெளியில் எப்படி அவனால் மறக்க முடிந்தது? மரியனின் சந்திப்பு அவளின் உறவு – உதவிகள் கடைசியாக அவள் குழந்தைக்குத் தாயாகப் போகிறாள் என்ற தீடீர் அதிர்ச்சி…
‘கார்த்திகா எப்படி நான் உன் முகத்தில் விழிக்கப் போகிறேன்? என்னை எத்தனையோ சொல்லித் திட்டலாம் நீர். எதற்கும் மறுமொழி சொல்ல எனக்குத் தெரியாது. எப்படி உங்களால் இப்படி நடக்க முடிந்தது என்று எத்தனை கோடி தரம் சொன்னாலும் என்னால் எந்த மறுமொழியும் சொல்ல முடியாது.
லண்டன் எப்படி எங்கள் போன்ற பலவீனமானவர்களை உருக்குலைக்கும், என்பதை எப்படி நான் விளங்கப்படுத்துவேன்’.
அவன் வாய்விட்டுச் சொல்ல வேண்டும் போல் துடித்தான்.
ஆரம்ப காலத்தில் மனச்சாட்சி என்றொரு ‘சாமான்’ அவன் நிம்மதியை எப்படி எல்லாமோ குழப்பியதுண்டு. காலப்போக்கில் நான் என்ன அப்படிச் செய்துவிட்டேன் என்று தன்னைத்தான் சமாதானப் படுத்தியதுண்டு. ‘அவளுக்கு இன்னொருத்தன் கிடைக்காமலா போய் விடுவாள் என்று தன்னைத் தானே ஏமாற்றி பத்து வருடங்களின் பின்….?
அவன் நிம்மதி எங்கேயோ போய் விட்டது. கொழும்புக்கு வந்ததும் உடனடியாகச் சபேசனைப் பார்க்க வேண்டும் என்ற துணிவு போய்விட்டது. அதற்கு முதல் சத்திய மூர்த்தியைப் போய் ரத்மலானையில் பார்க்க நினைத்தாள்.
சத்தியமூர்த்தியின் வீடு பார்க்கப் பயங்கரமாய் இருந்தது. தமிழர்கள் உரிமை எப்படிச் சாம்பலாக இருக்கிறது என்பதற்குச் சாட்சியாக, அரைகுறையாக எரிந்து சாம்பலான அந்த வீடு நின்றது. கருணை ததும்பும் சத்தியமூர்த்தியின் தாய்; கடவுளும் கலைகளும் பெரிது எனப் புகழும் தகப் பன், சாம்பலாகி விட்டார்களாம்!
அவர்களை உயிரோடு எரித்தார்களாம் சண்டாளர்கள்.
அந்த வீட்டுக்குள் போக முதல் பெருமூச்சுடன் ஒரு நிமிடம் நின்றான்.
லண்டனில் பி. பி. சி. செய்தியில் சொல்லும்போது கேட்டதை நினைத்துப் பார்த்தான்.
‘தன் இனிய நண்பனின் தாய், தகப்பன் எரிவதை வெறும் செய்தியாகக் கேட்குமளவுக்கா, எங்கள் இனம் தாழ்ந்து விட்டது?’
இவன் வந்து நின்றதை சத்தியமூர்த்தி கண்டிருக்க வேண்டும். இவனின் முகபாவத்தில் தெரிந்திருக்க வேண்டும். என்ன யோசிக்கிறான் என்று.
“என்ன வேதாந்தம் யோசிக்கிறாய்?” வழக்கப்படி சிரித்துக்கொண்டு வந்தான். வேதனைகளை மறைத்த சிரிப்பு. இனிக் கவலைப்பட்டு என்ன செய்து விடப்போகிறோம் என்ற வரட்டுச் சிரிப்பு.
“சபேசன் போன்ற ஆட்கள் நினைப்பதில் தவறென்ன என்று யோசிக்கிறாயா?”
சத்தியமூர்த்தி கேட்டான்.
வினை விதைத்தவர் வினையைத்தான் பெறுவார் என் சொன்ன தகப்பனுக்கா இந்தக் கதி என்று கேட்க நினைத்தான்.
சத்தியமூர்த்தி அரசியல் விவாதத்தில் இறங்கி விடுவான் என்று தெரியும். பானுமதியையும் சபேசனையும் பற்றிக் கதைக்க வேண்டி வந்தவன் மற்றவர்களின் பிரச்சினையை எழுப்ப விரும்பவில்லை.
சத்தியமூர்த்தி குடும்பத்தை ‘மற்றவர்களாக நினைக்கும். தன் மனோபாவத்தை நொந்து கொண்டான். சபேசனைப் பார்க்கப் போவதாகவும் தன்னுடன் வர முடியுமா என்றும் கேட்டான்.
சத்தியமூர்த்தி நண்பனை மேலும் கீழும் பார்த்தான்.
“என்ன அப்படி ஆட்டையோ மாட்டையோ பார்ப்பது போலி பார்க்கிறாய்?” பரமநாதன் எரிச்சலுடன் கேட்டான்.
“கோபிப்பதுக்கு இதில் ஒன்றுமில்லை. இது உம்முடைய குடும்ப விசயம். நான் வருவதை நீர் விரும்பினாலும் சபேசன் விரும்புவான் என்றில்லை.”
பரமநாதனுக்குச் சரி என்று பட்டது அவன் சொல்வது. கார்த்திகா வீட்டில் சபேசனைக் காண்பது அவனால் கற்பனை செய்ய முடியாத காரியமாக இருந்தது. இத்தனைக்கும் கார்த்திகா தான் பரமநாதனுடன் ‘வாசிற்றியில் திரிந்த பெட்டை’ என்று சத்தியமூர்த்திக்குத் தெரியாது.
சதாசிவம் மாஸ்ரரிடம் ஒன்றிரண்டு தரம் பரமநாதனுடன் போய் இருக்கிறான். சதாசிவம் மாஸ்ரரின் மகளைத் தான் நண்பன் ‘சுழட்டுகிறான்’ என்று சத்தியமூர்த்திக்குத் தெரியாது. சத்தியமூர்த்தியுடன் நெருங்கிய சினேகிதராய் இருந்த காலத்தில் கார்த்திகாவின் உறவு பெரிதாக இருக்கவும் இல்லை.
அப்படி வளரத் தொடங்கிய காலத்தில் சத்தியமூர்த்தி ‘கிளாக்’ வேலையாக வவுனியாவுக்குப் போய்விட்டான்.
சத்தியமூர்த்தி துனைக்கு வராதது மனதை அரித்தாலும் வேறு வழியில்லாமல் கார்த்திகா வீட்டுக்குப் போக யோசித்தான்.
அக்காவிடமோ மைத்துனரிடமோ மூச்சுக்காட்டாமல் இருப்பது தர்ம சங்கடமாக இருந்தது. நல்ல காலம் சத்தியமூர்த்தி கொழும்பில் வேலை செய்வது. அல்லது ஒவ்வொரு தரமும் ஒவ்வொரு சாட்டுச் சொல்ல வேண்டி ஏற்படலாம்.
அக்காவும் மைத்துனரும் கெளரியின் வருங்கால மாப்பிள்ளையைப் பார்க்கக் கொள்ளுப்பிட்டிக்குப் போனார்கள். கௌரிக்குப் பார்த்த மாப்பிள்ளை மகாதேவன் பரவாயில்லை பார்ப்பதற்கு. லண்டனில் பரமநாதன் இருப்பது தெரியும் என்று சொன்னான் மகாதேவன். ஆனால் இலங்கைக்கு வருவான் என்ற நம்பிக்கை கௌரி வீட்டில் இல்லாததால், தகப்பன் சொன்னவுடன் கல்யாண எழுத்து நடந்தது என்று மகாதேவன் சொன்னான்.
வீட்டில் தனக்குச் சொல்லத் தயங்கியது ஏன் என்று இப்பொழுது விளங்கியது. ‘பத்து வருடம் வராதவன் இப்போது மட்டும் என்ன வந்து சேரப் போகிறானா’ என்று யோசிக்கலாம். சடுதியாக வந்து இறங்கியபோது மூத்த மகனுக்குத் தெரியாமல் கல்யாண எழுத்து எழுதியது குற்ற மனப்பான்மையை உண்டாக்கியிருக்கலாம்.
‘என்ன இருந்தாலும் என்ன?’ இனி பரமநாதனால் என்ன செய்ய முடியும்?
மகாதேவனைப் பற்றி நன்றாகத் தெரிந்ததாக அம்மா சொன்னா. எங்கள் தமிழர் லண்டனில் ஒருவிதமாகவும், கொழும்பில் ஒருவிதமாகவும் பழகுகிறார்கள் என்று தெரிந்திருக்குமா?
லண்டனில் எங்களவர் எப்படி வாழ்கிறார்கள் என்று இலங்கையில் இருக்கும் யாருக்கு என்ன தெரியும்?
கௌரியை லண்டனுக்கு கூப்பிடத் தேவையான விபரங்களைக் கதைத்தார்கள் மகாதேவன் குடும்பத்தினர் தகப்பனின் முப்பத்தி ஓராம் நாள் சடங்கு முடியும் வரை வீட்டிலிருந்து கெளரி அதிகம் போக மாட்டாள் என்று அக்கா சொன்னா.
அடுத்த கிழமை மகாதேவன் லண்டன் போவதாக இருக்கிறான். அதற்கிடையில் கௌரி கொழும்புக்கு வந்தால் லண்டனுக்குப் போகிற விடயங்களைக் கவனிக்கலாம் என்று பேசி முடிவுகட்டினார்கள். வெள்ளவத்தைக்கு வரும்போது பரமநாதன் மௌனமாக இருந்தான். தமக்கை “ஏன் மெளனமாய் இருக்கிறாய்” என்று கேட்டாள். “தகப்பனின் செத்த வீட்டுக்கு இவர்கள் ஏன் வரவில்லை” என்று கேட்டான்.
“முதல் நாள் தான் வந்து போனார்கள். கதிர்காமம் போக வேண்டி இருந்ததால் போய் விட்டார்கள்” என்றாள் அக்கா.
“கௌரிக்குப் பிடித்ததா மாப்பிள்ளை?” பரமநாதன் கேட்டான்.
அக்காவுக்குப் பிடிக்கவில்லை அவனின் கேள்வி என்று முகத்தில் தெரிந்தது.
“தாய் தகப்பன் பார்த்தது தகுதியானது என்றுதான் நாங்கள் யோசிக்கப் பழகியிருக்கிறம்” தமக்கை சொன்னாள். பழக்கியிருக்கிறார்கள் என்று திருத்த நினைத்தான்.
ஒரு மாத விடுதலையில் ஏன் கருத்துவேறுபாடான விவாதங்கள் என்று, பேசாமல் விட்டு விட்டான்.
பானுமதியைப் பற்றிக் கதைக்க வேண்டும் போல் இருந்தது. அக்கா விளங்கிக் கொள்ள மாட்டாள் என்று நன்றாக தெரிந்தது. தான் உதவி செய்வதாகத் தெரிந்தால் முகத்தில் அடித்தால் போல் “நீ வராமலே இருந்திருக்கலாம்” என்று சொல்லத் தயங்க மாட்டாள். என்ன வழி?
பானுமதி சொன்னாள் இங்கிருந்தால் என்றோ ஒரு நாள் பொலிசாரிடம் போய் முடியப் போகிறார். தயவு செய்து ஏதும் படிக்கிற சாட்டொன்று செய்தாலும் லண்டனுக்குக் கூப்பிடச் சொன்னாள். தமிழ் இனம், ஈழ விடுதலை என்று கூப்பாடு போடும் சபேசன், லண்டனுக்கு வராமல் மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வது?
பானுமதிக்காக லண்டனுக்கு வருவானா? தன் கொள்கைகளுக்காக மடிந்து போவானா?
என்னவென்று பேச்சை ஆரம்பிப்பது? பானுமதி உம்மைப் பார்த்துப் பேசச் சொன்னாள் என்று சொல்வதா?
வீட்டுக்குப் போகும்போது மரியனின் கடிதம் வந்திருந்தது.
இலங்கை, கொழும்பு, யாழ்ப்பாணம். தங்கைகள் எல்லாம் மறந்து தன் குடும்பத்தைப் பற்றி யோசித்தான். இனிமையான மனோபாவனை எல்லாப் பிரச்சினைகளையும் மறந்து போகச் செய்ததது. கொளுத்தும் வெயிலில் மரியன் லண்டனில் பனி கொட்டுவதை எழுதியிருந்ததைப் படிக்கும் போது, உடம்பு சிலிர்த்தது.
பங்குனி மாத ஆரம்பத்தில் கடைசிப் பனித்துளி கொட்டுவதாகச் சொல்வார்கள். அதாக இருக்கலாம் என்று வேடிக்கையாக எழுத நினைத்தான். தகப்பனின் மறைவுக்குத் துக்கம் சொல்லி எழுதியிருந்தாள் மரியன். அருமை மகள் மீரா தன் தாத்தாவின் மரணத்தைப் பெரிதாக எடுக்காமல், எவ்வளவு பெரிய யானை கொண்டு வருவீர்கள் என்று கேட்டிருந்தாள். மரியனுக்குப் பானுமதியைப் பற்றி எழுத முடிவு கட்டினான்.
கௌரியின் கல்யாண வீட்டைப் பற்றி எழுதினான் லண்டனில் மண்டபம் ஒழுங்கு செய்வதில் இருந்து எல்லாம் மரியனின் பொறுப்பாக இருக்கும் என்று எழுதி விட்டுத் தானே சிரித்தான்.
கல்யாண வீட்டுக்கு எப்படித் தன் ஆங்கிலேய மனைவி கத்தரிக்காய்க் குழம்பு வைப்பாள் என்று யோசிக்க சிரிப்பு வந்தது.
கையில் மனைவியின் கடிதம் கண்ட அடுத்த வினாடி பதில் எழுதிய பின் மனம் நிம்மதியாக இருந்தது.
ஒருமாத விடுமுறையில் தான் பிறந்த மண்ணில் என்ன தான் நடந்தாலும் தன் குழந்தையையும் மனைவியையும் பார்த்தவுடன், எல்லாத துன்பமும் தீர்ந்து விடும் என்று நினைக்கும் போது சந்தோசமாக இருந்தது.
மரியன் – மேரி ஆன் ஸிம்ஸன்.
பரமநாதன் லண்டனுக்குப் போனவுடன் முதலில் கண்ட ஒரே பெண் இல்லை.
கொழும்பு வாசமும் சர்வகலாசாலைப் படிப்பும்-படிப்பு முடிந்த பின் கிடைத்த வேலையால் உண்டான சினேகிதங்களும் வாழ்ககையில் மத்தியதர வர்க்க உணர்ச்சியை உண்டாக்கி விட்டிருந்தது அவனுக்கு.
இலங்கையில் அரசியல் பிரச்சினை எப்படி இருந்தாலும் வசதி படைத்த தமிழர்கள் ஒரு கஷ்டமும் படாதது போல் அல்லது கஷ்டங்களைச் சமாளிப்பதுபோல், தகப்பன் மகனுக்கு யாரோ பெரிய மனிதர்கள் காசுக்கு வேலை செய்யும் சில எம்.பிக்கள் உதவியுடன் பெரிய வேலை எடுக்க ஓடியிருந்தார். தகப்பனின் கரைச்சல் தாங்காமல் அவனும் தன் சோசலிசக் கொள்கைகளை (அவன் அப்படித்தான் நினைத்திருந்தான்) விட்டுக் கொடுத்து பிரமுகர் வீடுகளுக்கு நல்ல லஞ்சம் கொடுக்கவும் தயாராக இருந்தான் ஒரு நல்ல வேலைக்கு.
கிடைத்தது ஒரு அயல் நாட்டுக் கொம்பனியில் ஒரு அரை குறைவேலை. தகப்பன் இதை விட்டு விட்டு லண்டனுக்குப் போய் மேல் படிப்பு படிக்கச் சொன்னார், நினைத்த படி பெரிய வேலை கிடைக்காததால்.
சர்வகலாசாலையில் படிப்பிக்கப் பட்ட கடன் பெரிய தமக்கைக்குக் கல்யாணத்துக்குப் பட்ட கடன் – கலவரத்துடன் யாழ்ப்பாணம் ஓடிப்போய் காணி வாங்க பட்ட கடன் எல்லாம் தலைக்கு மேல் ஏறியிருந்தது. அத்துடன் அவனுக்குத் தெரியும் கார்த்திகா விடயமும் சாடையாக அவருக்குத் தெரியும் என்று. சுற்றி வளைத்துக் கேட்டார் தகப்பன் ‘சதாசிவம் மாஸ்ரரின் வீட்டில் என்ன அடிக்கடி வேலை’ என்று.
ரியூஷன் முடிந்த பின்பும் சதாசிவம் மாஸ்ரருடன் அரசியல் கதைக்க அவன் போவதாகப் பாவனை செய்து கொண்டதை, அவர் நம்பத் தயாரில்லை.
அவரும் ஒரு காலத்தில் இருபது வயதுப் பெடியனாக இருந்தார். எத்தனையோ ‘பெட்டைகளைப்’ படலைக்குள்ளால் பார்த்திருப்பார். இவன் மனதில் ஓடும் உணர்ச்சிகளின் விசித்திரம் அவரும் ஒரு காலத்தில் அடைந்திருப்பார்.
நாகரிகமாகக் கேட்ட தகப்பனுக்கு நாகரிகமாகப் பதில் சொன்னான்; தான் ஒன்றும் வீட்டுப் பிரச்சினை தெரியாமல் சுயநலமாகத் திரியவில்லை என்று.
உண்மையில் அவனின் திட்டம், தகப்பன் சொற்படி லண்டனுக்கு வந்து உழைத்துப் படித்து தங்கைகள் வீட்டுச் செலவெல்லாம் பார்த்த பின், கார்த்திகாவைக் கூப்பிடுவது என்று.
அப்படித்தான் அவளுக்கும் சொன்னான். அவள், அவன் லண்டன் போவதாகச் சொன்னவுடன் திடுக்கிட்டு அழுத போது அவன் தேற்றினான், வார்த்தைகளால்.
‘எத்தனை சுலபமாகத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தைப் பற்றி….? எப்படித் தன்பாட்டுக்குச் சுற்றி வளைத்துப் பிடிக்கிறது சந்தர்ப்பங்கள்!’
தனக்குத் தானே வலிமையில்லாதவர்கள் தான் சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சாட்டுச் சொல்லித், தங்கள் சுயநல தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள் என்று சத்திய மூர்த்தி சொன்னான் எப்போதோ ஒரு நாள். நாள். ‘தனக்குத் தானே வலிமையற்றவர்கள்……?’
தான் அப்படித் தானோ என்று சில நேரம் நினைப்பதுண்டு அவன்.
சர்வகலாசாலை நாட்களில் சாதியை எதிர்த்துப்போராட் டம் தொடங்கிய போது நண்பர்களுடன் சேர்ந்து கோயில்களுக்கெல்லாம் போய், தீண்டாதவர்கள் என்று சொல்லப் பட்டவர்களுக்காகப் போராடினான்.
கொள்கைகளுக்காகவா? அப்படி ஒன்று இருந்ததா? எங்கள் சமுதாயத்தில் படிப்பும் பட்டமும் வசதியான உழைப்பும் என்று வந்தவுடன் மனிதர்கள் ஏன் காற்றோடு சேர்ந்தாடும் நாணலைப்போல் இருக்கிறார்கள்?
அவனுக்கு விளங்க முடியாத தத்துவங்களில் ஒன்று.
லண்டன்! லண்டன் மேற்கு நாகரிகத்தின் சொர்க்க பூமி, கட்டுப்பாடற்ற ஒழுக்கம். கண் மண் தெரியாத பழக்க வழக்கம். கை நிறையும் பணம். கருத்துக்குத் தெவிட்டாத கன்னிகள்!
வந்த புதிதில் எல்லாரையும் போல் இதெல்லாம் வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருந்தன.
இருபால் உறவு எங்கள் சமுதாயத்தில் சாத்திரம் கோத்திரம் – சமுதாய ஒழுங்குகளுக்குள் கட்டுப்பட்டது என்பது இல்லாமல் லண்டனில், ஒருத்தரில் ஒருத்தர் உள்ள அன்பைக் காட்டப் பயன்படும் ஒரு செய்கையாகக் கணிக்கப்பட்டது. நம்ப முடியாமல் இருந்தது உண்மை என்பது இப்போது நினைக்க அவனுக்குச் சிரிப்பாக இருக்கிறது.
கொழும்பில் பம்பலப்பிட்டிக் கடற்கரையில் கல் குன்றுகளுக்கு மேலமர்ந்து கையோடு கைபிணைத்து கார்த்திகாவை மார்பிலணைத்த போது உண்டான உணர்வு தான் சொர்க்கத்தின் உச்சம் என்று கருதியவன், லண்டனுக்கு புரட்டாசி மாதம் வந்து மார்கழி மாத கிறிஸ்மஸ் பார்ட்டியில் வொட்கா வெறியில் தன்னை மறந்து…. அடுத்த நாள் எழும்பி அரைகுறை நிர்வாணத்தில் தன்னுடன் படுத்திருக்கும் பெண்ணின் பெயர் என்ன என்று கூறத் தெரியாமல் வீட்டுக்குப் போனபோது, காரத்திகாவின் நினைவு முள்ளாகத் தைத்தது நினைவில். வெறும் சதை உறவுகள் குலைந்து உருப்படியாக ஒரு சினேகிதத்தின் அடிப்படையில் மேரி ஆன் ஸிம்சன் அறிமுகமாகியபோது, அவனுக்குத் தெரியும் கார்த்திகாவின் நினைவு அவன் மனதிலிருந்து தன்னையறியாமல் மறைகிறது என்று.
உ ண்மையை உணரப் பயந்து தன்னை அந்த மயக்கத்திலிருந்து விடுபடுத்த முடியாமல் மேரி ஆன் ஸிம்ஸனின் உறவில் அமிழ்ந்திருந்ததன் பலன், மரியன் (மேரி ஆன்) குழந்தைக்குத் தாயாகப் போகிறாள் என்ற போது தான் திடுக்கிடப்பண்ணியது.
அவள் அலட்டிக் கொள்ளவில்லை. பெரும்பாலான மேல் நாட்டுப் பெண்களைப் போல் “அபோர்ஷன்” செய்யப் போகிறேன் என்ற போது அவன் துடித்து விட்டான். பாவ புண்ணியம் – மனச்சாட்சி என்ற சொல்லெல்லாம் இரவில் தனிமையில் உருவம் எடுத்து அவனை உலுப்பி எடுத்தன.
இன்பத்திலும் துன்பத்திலும், ஏழ்மையிலும் செல்வத்திலும், இறக்கும் வரை இவளைப் பராமரிப்பேன் என்று சொல்லிக் கையெழுத்து வைத்து மரியனுடன் போனபோது, கார்த்திகாவின் உருவம் மறைந்திருந்து பெருமூச்சு விடுவதாக உணர்வு.
அந்த உணர்வு கூட எப்படி அவனுக்கு மறந்து விட்டது?
– தொடரும்…
– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
