என் பிரியசகி






(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம் – 13

அமர்ந்திருந்த மைனாவதி நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டு மகனின் கையை இறுகப்பற்றினாள் நன்றியுணர்வுடன்.
“என் மகனை என்கிட்டேர்ந்து பறிக்கப் பார்த்தே யில்லை. இப்போ பார்த்தியா உன் பிள்ளையை நான் பறிச்சுக்கிட்டேன்” என்று வெற்றி மமதையுடன் கறுவிக் கொண்டிருந்தாள்.
நீதிபதி மணவிலக்களிக்கிறேன் என்றதும் சொல்லவொணா வேதனை எழுந்தது ராமிற்கு.
அவன் சத்யாவை உயிருக்குயிராய் நேசித்தது நிஜம். அதனால் தான் இந்த நிரந்தரப்பிரிவு அவன் நெஞ்சில் ரத்தம் வடிய வைத்தது.
ஒருவேளை அம்மா அந்த விஷயத்தை பெரிதாக்காமல் இருத்திருந்தால், அவனும் கோபத்தோடு அவளை மன்னித்து விட்டிருப்பான், அம்மாவோ அவளை வெளியே அனுப்பியே ஆக வேண்டும் என்று ஆர்ப்பாட்டமே பண்ணி விட்டாள். அம்மாவை மீறி அவனால் எதையும் செய்ய முடியாது.
அன்றுகூட அவளை அவன் வீட்டில் ஒப்படைக்கச் சென்ற போது ஆளாளுக்கு சத்யாவை கேவலமாய் பேசி வதைத்தபோது ரத்தம் கொதிக்கத்தான் செய்தது.
தனியே குழந்தையுடன் அவஸ்தைப்படும்போது, அதை ஒரு வாய்ப்பாக கருதி முரளி வீட்டிற்குள் நுழைந்ததை ஒரு குழந்தையைப் போல் பரிதவிப்புடன் சொன்ன போது அந்த முரளியை எலும்புகள் தொறுங்க அடிக்கத் துடித்த உத்வேகத்தை அடக்கிக் கொண்டான்.
ஆனால், உள்ளிருந்த மிருக குணம், தன் தாயை சந்தோஷப்படுத்த, தன் குழந்தையை அவள் கையில் ஒப்படைக்க தாலி கட்டிய மளைவியின் நடத்தையை கோர்ட்டில் ஏற்றி இழிவுபடுத்தி விட்டான்.
இந்த பாவத்தை எந்த கோர்ட்டில் போல் கழுவுவான்?
இதோ இப்போதும் கூட தனக்கெதிரான தீர்ப்பிற்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி குழந்தையுடன் ஒடியவளை மனம் வதைக்கப் பார்த்தான்.
உண்மையில் பெற்றவள் அவளுக்கல்லவா எல்லா உரிமையும் இருக்கிறது?
“ஐய்யோ ராம், அவ என் பேரனைத் தூக்கிட்டு ஓடறா, பார்த்துக்கிட்டு சும்மாவே உட்கார்ந்திருக்கியே போ என் பேரனை தூக்கிட்டு வா!”
‘பேரனுக்காக உனக்கே பதைக்கும் போது, பெத்தவளாச்சேம்மா அவ உயிரையே நாம பறிக்கும் போது சும்மாவா இருப்பாள்?’ அம்மாவை ஏறிடவே விரும்பாமல் மெல்ல எழுந்தான்.
அதற்குள் இரண்டு பெண் போலிசார், நீதிபதியின் உத்தரவின்படி விரட்டிச்சென்று, அடித்து குழந்தையை மீட்டனர்.
அவளை இழுத்துக் கொண்டு வந்தனர்.
“அபி, என் அபி, என் அபியக் குடுத்துடுங்க. என் பிள்ளைய என் கிட்டகுடுத்துடுங்க” கதறி அழுதாள்,
கண் கொண்டு பார்க்க முடியாத ராம் முகத்தை திரும்பிக் கொண்டான்.
ராமிடம் குழந்தையைத் தர, அவன் அம்மாவிடம் தந்தான்.
மைனாவதி பேரனை மார்போடணைத்து உச்சி முகர்ந்தாள்.
“என்னங்க என்னங்க!” ராமின் காலை வந்து கட்டிக் கொண்டாள்.
“நான் என்னங்க தப்பு பண்ணினேன்? உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க… நான் தப்பானவனா? உங்களை உண்மையா நேசிச்சதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அப்பா, அம்மா, அண்ணன் இப்ப என் பிள்ளைன்னு எல்லாரையும் என்கிட்டேர்ந்து பறிச்சிட்டீங்களே! எனக்கு எதுவும் வேணாம். என் பிள்ளைய மட்டும் குடுத்துடுங்க! எல்லாத்திலேயும் பெரிய சோகம் புத்திர சோகம்னு உங்களுக்குத் தெரியாதா? அபி இல்லாம என்னால் எப்படி வாழ முடியும்?… நீங்களே சொல்லுங்க!” முகத்தில் அறைந்துக் கொண்டு அழுதாள்.
“ராம் புறப்படு!” அம்மா அதலட்டலாய் உத்தரவிட, கட்டுப்பட்டவன் வேகமாகய் வெளியேறினான்.
பெண் போலீசார் அவளை பிடித்துக்கொள்ள, அவள் கதறக் கதற வெளியேறினர்.
காரில் குழந்தையுடன் அமர்ந்தனர். அபிலாஷ் அம்மாவைத் தேடி உதடு பிதுக்கி அழுதாள்.
கார் புறப்பட்டது.
ஒரு தாயின் பாசத்திற்கு முன், பலத்திற்கு முன் போலீசார் எம்மாத்திரம்? அவர்களிடமிருந்த தன்னை விடுவித்துக் கொண்டு காரின் பின்வேகமாய் ஓடினாள்.
“அபி…”
கார் வேகமெடுத்தது.
“அபீ…” மிக வேகமாய் ஓடினாள்.
அவள் பின்னே போலீசாரும்.
“ராம் வேகமாப்போ”
மெல்ல திரும்பிப்பார்த்த ராமிற்கு பக்கென்றது.
ஒரு குதிரையின் பாய்ச்சலோடு ஓடி வந்து கொண்டிருந்தாள் சத்யா. சற்று தூரத்தில் கீழே பெரிய சிமெண்ட்கல் இருப்பதைப் பார்க்காத நேர்ப் பார்வை!
“ஐய்யோ…”அவன் நடக்கப்போகும் விபரீதம் உணர்ந்து அலற அந்த விபரீதம் நடந்தேவிட்டது.
படு வேகத்தோடு ஓடி வந்த சத்யா அந்தக்கல்லில் தடுக்கி விழுந்து தலையில் பலமாய் அடிபட ரத்தம் குபு…குபுவென்று பொங்கியது.
அவன் காரை நிறுத்தி இறங்கி வருவதற்குள்… ஆழ்ந்த மயக்கத்திற்குப் போயிருந்தாள்.
“ராம் நீ காரை எடு!” என்ற அம்மாவின் வார்த்தையை அலட்சியப்படுத்தினான்.
போலீசார் உடனடியாக சத்யாவை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அதன் பின் நடந்ததெல்லாம் ஒரு பெண்ணுக்கு நேரக் கூடாதவை.
பலமாய் தலையில் அடிபட்டதில் சித்தம் கலங்கிப் போனாள். சேலத்திலிருந்த மன நல மையத்திற்கு அனுப்பப்பட்டாள்.
வீட்டிற்கு வந்திருந்த ஹரி ஆயாசத்துடன் கண்களை மூடி சோபாவில் அமர்ந்திருந்தான்.
வற்புறுத்திய பின் சில வார்த்தைகள் சத்யாவிடமிருந்து உதிர்ந்தன.
“சேலத்திலேர்ந்து எப்ப வந்தே சத்யா?”
‘ரெண்டு மாசமாச்சு! குணமாய்ட்டதால… இங்கே ஒரு சேவை மையத்தில் வேலை போட்டுக் கொடுத்து, அங்கேயே தங்க இடமும் கொடுத்திருக்காங்க!”
“அபிலாஷை எப்படி கண்டுபிடிச்சே?”
“வீடு மாறிட்டதால் சிரமப்பட்டே கண்டுபிடிச்சேன். உங்க வீட்டுப் பக்கம் கத்தினேன். அபியை ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போறப்ப காரில் பார்த்திருக்கேன்!” சொல்லும் போதே, வலியை மீறி கண்களில் மின்னலடித்தது.
கண்களைத் திறந்தவனின் நேரெதிரே பிரம்மாண்ட மாலை போடப்பட்டிருந்த போட்டோவுக்குள் அடைபட்டிருந்தாள் மைனாவதி.
“சார் கொரியர்!”
வாசலில் குரல் கேட்டு நிமிர்ந்தான். ஹேமாவும் அறைக்குள்ளிருந்து வந்தவள் நேரே வாசலை நோக்கிச் சென்றாள்.
“ஹரிராம்ங்கறது…”
“என் ஹஸ்பண்ட் தான்!” கையெழுத்துப்போட்டு கவரை வாங்கினாள்.
“உங்க பேரு மேடம்!”
“ஹேமா!”
போய் விட்டான்.
தவரோடு உள்ளே வந்தவள் ஹரி… என்கிற ஹரிராமிடம் கொடுத்து விட்டு பக்கத்திலேயே அமர்ந்தாள்.
ஹரி சலனமின்றி அவளை திரும்பிப் பார்த்தான். வறட்டுக் கோபம் காணாமல் போய் அந்த பளிங்கு முகத்தில் செல்லமான நேசம் படர்ந்திருந்தது.
வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட கடிதம் தான்! படித்து விட்டு டேபின் மீது வைத்தான்.
ஹேமா அவன் தலையைக் கோதி விட்டான்.
“ரொம்ப டல்லா தெரியறிங்க… சாப்பிட வாங்க!”
“பசிக்கலே ஹேமா!”
“ப்ச்… என் மேல உள்ள கோபத்தை சாப்பாட்ல காட்ட வேண்டாம். என் பிள்ளை விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுத்திட்டீங்கன்ற கோபம். யோசிச்சுப் பார்த்தேன்.
உங்க பிஸினஸ் டென்ஷன்ல போலீஸ் ஸ்டேஷன் கேசுன்னு அலைய முடியாது. அதை மனசுல வச்சுதான் அவளை விட்டுட்டீங்கன்னு புரிஞ்சுது. ஸாரிங்க!”
மனம் லேசாக… அவள் கையைப் பற்றினான்.
”கோபம்லாம் ஒண்ணுமில்லே ஹேமா… பசிக்கலே! பட், உனக்காக சாப்பிடறேன்… கொஞ்சமா!”
“வாங்க!” சிறு பெண் போல் துள்ளி எழுந்தாள்.
பேருக்கு கொஞ்சமாய் கொறித்து விட்டு படுக்கைக்குப் போனான்.
திருமணமானபுதிதில் அவனும், சத்யாவும் அந்த சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தான் சென்றார்கள்.
‘அதனால் தான்… அவளும் என்னைப் போலவே அங்கு சென்றாளோ?’
ஹேமா அவள் கழுத்தில் முகம் புதைத்து கிச்சு கிச்சு மூட்டினாள்.
“சாருக்கு என்ன ஞாபகமோ?” சொல்லிக் கொண்டே கன்னத்தைக் கடித்தாள்.
சத்யா கடித்தது நினைவிற்கு வந்தது.
அவனால் ஈடுபாட்டுடன் ஹேமாவைப் பார்க்க முடியவில்லை.
“ஸாரி ஹேமா… டிஸ்டர்ப்டாயிருக்கேன். பிஸினஸ் டென்ஷன்… தலை வலிக்குது!” நாசூக்காய் தவிர்த்தான்.
“ஸாரி டியர்… தூங்குங்க!” அவனை தட்டிக் கொடுத்து விட்டு விலகிப்படுத்தாள்.
அத்தியாயம் – 14
ஹேமா, அபிலாஷை நடுவில் போட்டு தானும் உறங்கி விட்டாள். அவனுக்குத் தான் உறக்கம் வர முரண்டு பண்ணியது.
ஹேமாவை திருமணம் செய்தது கூட அம்மாவின் வற்புறுத்தலாலும், உண்ணாவிரதமிருந்து பிடிவாதம் பிடித்ததாலும் தான்! ஹேமா மைனாவதியின் ஒன்று விட்ட அண்ணன் மகள் தான்.
ஏற்கனவே திருமணமாகி ஒரே வாரத்தில் கணவனை பறிகொடுத்திருந்த இளம் விதவை. அந்தஸ்தில் இவர்களை விட பல மடங்கு.
அம்மாவை ஆச்சர்யம் தாங்கிய வினாவுடன் பார்த்தான். அதன் பொருளைப் புரிந்து கொண்டவள், ”என்னடா, அம்மா ஏற்கனவே கல்யாணமான பொண்ணாப் பார்க்கிறாளே. அந்த சத்யாவை ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சாங்கிற காரணத்துக்காக வீட்டை விட்டு விரட்டினாளேன்னு பார்க்கறியா ராம்? ஹேமாவும், சத்யாவும் ஒண்ணாகிட முடியுமா? சத்யா உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டவ. ஹேமா அவளை மாதிரி கீழ் ஜாதியில்லே. நம்ம உறவுக்காரி, ரதி மாதிரி அழகி, பணக்காரி. அவளுக்கே கல்யானமாகாத வரன்கள் நிறையவே வந்திருக்கு. ஆனா, அவதான் கல்யாணமான ஆளாப் பாருங்கன்னு சொல்லியிருக்கா. சொல்லப் போனா… முன்னாடியே உனக்கு பொண்ணுதர விருப்பப்பட்டு, அண்ணனும், அண்ணியும் என்னைக் கேட்டாங்க. நீதான் பிடிவாதமா அந்த நாதாரி நாயை கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தைக் கால்ல நின்னியே! அதுக்கப்புறம் உனக்கும் சரி, அவளுக்கும் சரி. முதக் கல்யாணம் நிக்கல. அவளுக்கு நீதான்னு எழுதியிருக்கறதை யாரால அழிச்சி எழுத முடியும்? உன்னை அவளுக்கு ரொம்ப பிடிக்குமாம் ராம். அதனால் தான் குழந்தைபோல இருக்கிற உன்னை கல்யாணம் பண்ணிக்க உடனே சம்மதிச்சிட்டா?” என்று அவனுக்கு வாகாய் பதில் சொல்லி வாயை அடைத்தாள் மைனாவதி.
சும்மா சொல்லக் கூடாது. ஹேமா நல்லவள் தான். குழந்தை அபிலாஷை ரொம்ப பிடித்துப் போக தன் பிள்ளையாகவே பாவித்ததோடு, தானொன்று பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாய், பாதுகாப்பாய் இருந்தாள்.
அவனையும், அபிலாஷையும் ஏற்றுக் கொண்டவளால் மைனாவதியை, அவளின் தெனாவட்டு பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பேச்சு வாக்கில் இறந்து போன முதல் கணவனைப் பற்றி கிண்டலாய் பேசும் அநாகரிகத்தை கற்று வைத்திருந்தாள். ஹேமா வசதியான குடும்பத்தைச்சேர்ந்த பெண் என்பதால், கணவனையும், அபிலாஷையும் கவனித்துக் கொள்வதைத் தவிர வேறெந்த வேலையையும் செய்வதில்லை. மைனாவதியைக் கண்டு ஒதுங்கிப்போனாள். ஆனால், சத்யா… மாமியாருடன் எவ்வளவு தான் மனஸ்தாபம் என்றாலும்,.. அவளுக்குத் தேவையானதை குறித்த நேரத்தில் சரியாக செய்து விடுவாள்.
வீட்டிலேயே ஜிம் இருந்ததால் காலை, மாலை இருவேயையும் ட்ரெட் மில்லில் ஓடுவது, இன்ன பிற உடற்பயிற்சிகள் செய்வது என்று உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள் ஹேமா.
பழங்காலத்து மனுஷியான மைனாவதிக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
“என்ன ராம்… இவ இப்படியெல்லாம் நடந்துக்கறா… என்னை மதிக்க மாட்டேங்கறா, குடிக்க தண்ணி கேட்டாக்கூட காதிலே விழாத மாதிரி போகிறா”
“என்னைக் கேட்டா? உங்க அண்ணன் பொண்ணு இப்படி அப்படின்னு நீதானே சர்ட்டிபிகேட் குடுத்தே… நீயே கேள்!”
“என்ன குத்திக் காட்டறியா?”
“இல்லேம்மா… இதுவரைக்கும் என்ன சொன்னியோ அதைத்தானே கேட்டு நடக்கறேன். அபிலாஷ் உனக்கே வேணும்னு கேட்டே. போடக் கூடாத பழியைப் போட்டு சத்யாவை அசிங்கப்படுத்தி மென்ட்டல் ஹாஸ்பிடலுக்கே அனுப்பி பிள்ளைய உன்கிட்டே ஒப்படைக்கலியா? உனக்காக என்னதான் செய்யலே? கல்யாணமே வேண்டாம்னு மறுத்தவனை அடம் பிடிச்சு நீதானம்மா அவளை மருமகளா கொண்டு வந்தே? இதிலே குத்திக்காட்ட என்ன இருக்கு? நான் ஒரு தலையாட்டி பொம்மைதானம்மா”
“குழந்தையக் கூட என்கிட்ட விடமாட்டேங்கறா. அவளே வச்சுக்கறா!”
“உனக்கே இவ்ளோ கஷ்டமாயிருக்கேம்மா… பெத்தவளுக்கு எப்படியிருக்கும்? துடிக்க வச்சு தூக்கிட்டு வந்தோமே!”
“ராம்…”
“நீ இன்னும் அவளையே நினைச்சிட்டிருக்கியா?”
லேசாய் கோபம் எட்டிப்பார்க்க, வியப்பு மேலிடக் கேட்டாள்.
”எவ்வளவு மோசமான கேள்விம்மா! நான் சத்யா மேல வச்ச அன்பைக்கூட மறந்திடலாம். ஆனா, அவளுக்குப் பண்ணின பாவத்தை எப்படி மறப்பேன்? சத்யாவுக்கு துரோகம் பண்ணிட்டேன்ம்மா. பெரியதப்புப் பண்ணிட்டேன். உன் பேச்சை நான் கேட்டிருக்கக் கூடாது. என்னையே நம்பி வந்தவளை மென்ட்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வச்சேன். அவ பிரச்சனைகளை எனக்கு சாதகமாக்கி, நானே அவளை முரளியோட சம்பந்தப்படுத்தி அசிங்கப்படுத்திட்டேன். என் அறிவுக்கு புரிஞ்சுதும்மா… பழைய காதல் விஷயமெல்லாம் தப்பா எடுத்துக்கற அளவுக்கு சத்யா தப்பானவ இல்லேன்னு, ஆனா மனசு முரண்டு பண்ணுச்சு. ஈகோ தடுத்துச்சு. ஒரு வேளை நீ அவளுக்கு சாதகமாப் பேசியிருந்தா… அவளை ரெண்டு திட்டு திட்டி விட்டிருப்பேன். என்னை விட அதிகமா முரண்டு பிடிச்சதே நீதானே?”
“ராம்… நீயா பேசறே? அம்மா உன் நல்லதுக்கு தானே செஞ்சேன்?”
“நிம்மதியில்லாம தவிக்கிறேனம்மா! அப்பா உன்னை நடுத்தெருவிலே விட்டிருந்தா… புழு மாதிரி துடிச்சிருக்கமாட்டே! என்னை மட்டும் எம்மாஅப்படியொரு பாவத்தைப் பண்ண வச்சே? உன்னை மாதிரி அவளும் பொண்ணுதானே? என் சத்யாவை என்கிட்டேர்ந்து பிரிச்சிட்டியேம்மா!” பொருமினான், கலங்கினான்.
இது மாதிரியெல்லாம் ராம் பேசி கேட்டறியாத மைனாவதி உடைந்து போனாள்.
அந்தக் கவலை அவளை ரொம்ப நாள் விட்டு வைக்கவில்லை. ஒரு நாள் உறக்கத்திலேயே அவள் உயிர் பிரிந்தது.
ஹரிராம் தன்னை நம்பி வந்த ஹேமாவுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. குழந்தையை அவள் குறையின்றி கவனித்துக் கொண்டதால் முழு கவனத்தையும் பிஸினஸில் செலுத்தினான். லாபம் கொட்டியது. தொழிலை விரிவு படுத்தினான். நகரின் முக்கியஸ்தர்களில் ஒருவரானான்.
ராம், சத்யாவுடனான தன் திருமண ஆல்பத்தை பீரோவில் பூட்டி வைத்திருந்தான்.
ஹேமா பலமுறை மெல்ல சத்யா பேச்சை எடுப்பதுண்டு. ராம் பதில் கூறாமல் பேச்சை மாற்றுவான்.
ஒரு நாள் எப்படியோ சாவி கிடைத்து, பீரோவை திறந்து ஆல்பத்தை எடுத்து விட்டாள்.
“ஏங்க… நான் எத்தனை முறை கேட்டிருப்பேன். கல்யாண ஆல்பத்தைக் காட்டுங்கன்னு. இல்லே… எப்படியோ மிஸ்ஸாயிடுச்சுன்னு சொன்னீங்க. ரொம்ப பத்திரமா வச்சிருக்கீங்க” என்றாள் அவன் கண்களில் தவறை ஆழமாய் தேடியபடி.
“ஏன் எடுத்தே ஹேமா… என் பர்மிஷன் இல்லாம!”
“உங்க பர்மிஷன் எனக்கெதுக்கு? ஐம் யுவர் பெட்டர் ஹாப்! பத்திரமா ஒளிச்சு வச்சிருக்கீங்க”
“சரி… என்ன இப்ப?”
“எவ்ளோ சாதாரணமாக கேக்கறீங்க, உங்களுக்கும் அவளுக்கும் டைவர்ஸ் ஆயாச்சு. அவ சம்பந்தப்பட்ட எந்தப் பொருளும்… ஐமீன் அவளுடைய நினைவுகள் கூட உங்க கிட்டே இருக்கக் கூடாது. நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம்”
“…?”
”என்ன அப்படிப் பார்க்கறீங்க? நான் ரொம்ப பொசிவ் கேரக்டர்”
“அபிலாஷ்… சத்யாவை நினைவு படுத்தலையா ஹேமா?”
“இல்லே… அவள் உங்க பிள்ளை. உங்க ஜீன், உங்க ரத்தம், அவள் வாடகைத் தாய் மாதிரி… அவ்வளவு தான்!”
“…?”
“ஆச்சர்யமாயிருக்கு, அவளை விழுந்து, விழுந்து காதலிச்சி, பிடிவாதம் பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாம். அப்படி என்ன இருக்கு அவகிட்டே?அட்ராக்ட் பண்ற அளவுக்கு அந்த பைத்தியம் கிட்டே ஒண்ணுமே இல்லையே!”
“ஹேமா… திஸ் இஸ் த லிமிட்! சத்யாவைப் பத்தி மட்டமாப் போசறதை என்னால அனுமதிக்க முடியாது”.
“நீங்க யாரு அனுமதிக்கறதுக்கு அதான் கோர்ட்டே பிரிச்சு வச்சிடுச்சே! சொல்லப் போனா, ஒரு மென்ட்டல பத்தி பேசறதுக்கு நான் தான் யோசிக்கணும். அவ இருந்த இடத்துல தான் இப்ப நான் இருக்கேன்றதே… ஜீரணிக்க முடியாத விஷயம்!”
திமிரும், கர்வமும் போட்டி போட பேசியவளை அடிக்கத் துடிக்க உணர்வுகளை அபிலாஷை நினைத்து தன்னை அடக்கிக் கொண்டவன்.. அதே வேகத்தோடு வெளியேறினான்.
அத்தியாயம் – 15
அன்று அவன் திரும்பி வந்த போது ஆல்பத்தை எரித்து வைத்திருந்தாள் ஹேமா அவளின் முரட்டுத் தனம் கண்டு வாயடைத்துப் போனான். எச்சரிக்கையாக இருந்தான். தப்பித் தவறிக்கூட சத்யாவின் பெயரை உச்சரிக்கவில்லை.
அன்று முதல் இன்று வரை அவன் கவனமாகவே இருந்தான்.
கஸ்தூரிபாய் சேவை மையம்!
முதியோர்கள், குழந்தைகள், பெண்கள் என்று கைவிடப்பட்டிருந்த அத்தனை ஜீவன்களும் அடைக்கலமாகியிருந்த நந்தவனம் அது!
வார்த்தை ஜாலத்திற்காக அல்ல… நிஜமாகவே நந்தவனம் தான் அது! உண்மையான தொண்டுள்ளம் கொண்ட சிலரால் நடத்தப்படுகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியரால் தயாள கொடையளிக்கப்பட்டு ஊர் ஊராய் கிளை நிறுவனங்கள் நிறுவப்பட்டு சேவை செய்து வருகின்றனர்.
மரங்களும், செடிகளும் குழ்ந்த, கட்டிடங்கள், தரமான உணவு, ஆரோக்கியமான சூழ்நிலை, கைத்தொழில் கற்றுத்தருதல், கல்வியுடன் கம்ப்யூட்டர்பயிற்சி என்று நல்ல பெயருடன் திகழ்ந்து வருகிறது கஸ்துரி பாய் சேவை மையம்!
கடந்த இருபது நாட்களாக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருந்த அந்நிறுவனத் தலைவர் லலிதா முதல் நாள் இரவு தான் ஊர் திரும்பி இருந்தார்.
நிறுவனத்தை வலம் வந்து, அங்கிருப்பவர்களுடன் உரையாடிவிட்டு தன் அறையில் வந்தமர்ந்தவர் அப்போது தான் உணர்ந்தார்.
சத்யாவை, எங்கே காணோம்? கண்ணிலேயே படவில்லையோ அடுத்த நிமிடமே அவளிருந்த இடம் தேடி ஆள் போனது. தயங்கிக் தயங்கி தான் அறைக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்த லலிதாம்மா துள்ளாத குறையாக அதிர்ந்தாள்.
“சத்யா… என்னாச்சு.. முகம், உடம்பெல்லாம் என்ன காயம்?”
“அ… அது… வந்து… கீழே விழுந்துட்டேன்!” அவள் கண்களை நேரேப் பார்க்க தைரியமின்றி தலை கவிழ்ந்தாள்.
“கீழே விழுந்து அடிபட்ட மாதிரித் தெரியலியே… யாரோ அடிச்ச மாதிரியில்லே இருக்கு?”
“இ… இல்லே… ம்மா… ஆமாம்மா” ஒரு நிமிடத்திற்கு கூட அவளால் பொய்யைக் காப்பாற்ற முடியவில்லை.
எழுபது வயது லலிதாம்மா அவளருகில் வந்து, தவிப்புடன் கையைப் பற்றினாள்.
“யாரு… யாரது உன்னை அடிச்சது?”
“போ…போலீஸ்?”
“போலீஸ்? ஏன்?” வியப்பின் எல்லைக்கே போனார்.
சத்யா.. பயத்துடன். அழுகையுடன், வலியுடன் விவரித்தாள்.
லலிதாம்மா அவளைப் பற்றிய முழு விபரமும் அறிந்தவர். சேலத்தில் தன் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்யாவை அங்கு சென்றிருந்த போது குணமாகாத நிலையில் இருந்தவளை பார்த்து நெகிழ்ந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின் குணமானவளை தன் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள விரும்பி சென்னைக்கே அழைத்து வந்து விட்டார்.
தினசரி உணவு தயாரிப்பிற்கான காய்கறி, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட கணக்கு வழக்குகளை பார்க்கும் வேலையை அவளிடம் ஒப்படைத்து, ஒரு சிறு தொகையை சம்பளமாக தந்து அங்கேயே தங்க இருப்பிடமும் தந்தார்.
“சத்யா… ஏம்மா அவசரப்பட்டே”
“என்… என் பிள்ளைய பார்க்காம என்னால இருக்க முடியலேம்மா”
“உன் பீலிங்ஸ் எனக்குப் புரியுது சத்யா! பாரு எவ்வளவு காயங்கள்?. தவிர, மிஸ்டர் ராம் நடந்து கொண்ட விதம், அவர் மனசாட்சியே அவருக்கு தண்டனையை வழங்கியிருக்குன்னு புரியுது. நான் அவரைப் பார்த்து பேசவா?”
“இல்லேம்மா… வேண்டாம். இதே ஊர்ல தான் என்னைப் பெத்தவங்களும் இருக்காங்க. அவங்களையும் கூட எனக்குப் பார்க்கத் தோணலே. அதே மாதிரி தான் என் பிள்ளையோட அப்பாவையும்! என் உயிர், மூச்சு எல்லாமே என் அபிலாஷ் மட்டும் தான். ஆனா, அவனுக்கு என்னை யாருன்னே தெரியலேம்மா!”
கதறியவளை, வார்த்தைகளின்றி அணைத்து தட்டிக் கொடுத்தார்.
அன்று அபிலாஷின் பிறந்த நாள்.
விடியற்காலையிலிருந்தே பங்களாவில் தோரணம் கட்டுவதும், சமையல் செய்வதுமான வேலைகள் ஆரம்பமாகிவிருக்க…
காம்பவுண்ட் சுவரை ஒட்டி, சேலைத் தலைப்பால் உடம்பைப் போர்த்திக் கொண்டு மெல்ல எட்டி, எட்டிப் பார்த்தாள் சத்யா.
அபிலாஷ் தன் கண்ணில் படமாட்டானா, என்கிற ஏக்கம் வழிந்தது.
எதற்காகவோ காரை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த ஹரிராம் அரையிருட்டில் ஒரு உருவம் தயங்கித் தயங்கி நகர்ந்து செல்வதை சந்தேகத்துடன் பார்த்தான்.
“ஏய்… யாரது… ஓடாதே… நில்லு!”
காரை வேகமாய் அவளருகே நிறுத்தி, காரின் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தவன், திடுக்கிட்டான்.
“ச…த்…யா! நீயா?” அவசரமாய் இறங்கினான்.
“என்ன சத்யா?”
“ஒ… ஒண்ணுமில்லே…” நகர்ந்தாள்.
“ஒரு நிமிஷம் சத்யா?”
“அபிலாஷை பார்க்கணுமா?”
ஈரத்தில் பளபளத்த கண்களால் அவனைப் பார்த்தாள்.
“ம்!”
“எத்தனை சட்டங்கள் பிரித்தாலும் அவன் உன் பிள்ளை சத்யா. சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு அழைச்சிட்டு வரட்டுமா?”
கண்கள் சிரிக்க, கை கூப்பி விட்டு, வேகமாய் சென்றவளை நெஞ்சம் பதைக்க பார்த்துக் கொண்டிருந்தான் இவன்.
அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஹரிராம், ஹேமா, அபிலாஷ் ஆகியோர் பிரகாரத்தில் நின்றிருக்க… சற்று தள்ளி ஒரு தூணின் மறைவில் நின்றபடி தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.
“இந்தக் கோவிலுக்கு எதுக்குங்க அழைச்சிட்டு வந்தீங்க? வழக்கமா காளிகாம்பாள் கோவிலுக்கு தானே போவோம்? கோவில் சின்னதா, பழசாயிருக்கே?”
கிசுகிசுத்த ஹேமாவை முறைத்தான்.
“கோவில்லேயும் பாரபட்சம் பார்க்க ஆரம்பிச்சிடாதே! கோவில் பழசாயிருந்தாலும், சின்னதாயிருந்தாலும் எல்லா சாமியும் ஒண்ணு தான்!”
ஹேமாவை ராமின் அருகில் சேர்த்துப் பார்க்கவே நெஞ்சடைத்தது.
மனுஷங்களை மாதிர், நீயுமல்லவா தாயே என்னைக் கைவிட்டுட்டே? எத்தனை யெத்தனை மோசமான சம்பவங்கள் நடந்தேறிவிட்டன?
அதோ என் செல்லப்பையன். கருவாக உருவான நாளிலிருந்தே… என் பிள்ளையை இப்படி வளர்க்கணும், அப்படி வளர்க்கணும்னு கனவு கண்டு, மனசுக்குள் பேசி மகிழ்ந்தேனே! ஆனா, இப்ப, என் பிள்ளை கூட பேசக் கூட எனக்கு பாக்கியமில்லை. ஆசை, ஆசையாய் நான் வைத்த பெயரை சொல்லிக் கூப்பிடக் கூட இன்று எனக்கு உரிமையில்லை. அவனை தூரத்தில் இருந்து திருட்டுத்தனமாய் பார்க்கிற அளவுக்கு என்ன பாவம் செய்து விட்டேன்?
என் அபிக்குட்டி எவ்வளவு பெரிதாய் வளர்ந்து விட்டான்? அப்படியே அப்பாவை உரித்துக் கொண்டு பிறந்திருக்கிறான்? அவனைக் கட்டிக் கொண்டு முத்தமிட வேண்டும் போல் இருக்கிறதே! ஏனம்மா என்னை சோதிக்கிறாய்?’
“மம்மி… சாமிய ஏன் பால்ல குளிப்பாட்டறாங்க? எறும்பு கடிக்காது?” அபிலாஷ் ஹேமாவின் மேல் சாய்ந்து கொண்டு கேட்டது காதில் விழுந்தது.
சத்யாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘அபி… நான் தான் உன் அம்மா. உன்னைப் பெத்தவடா, என்னை அம்மான்னு கூப்பிடுடா கண்ணா! அம்மான்னு கூப்பிடுடா…’ மனசு ஓல மிட…
அதற்கு மேல் அங்கு நிற்பது உசிதமல்ல என்பதை உணர்ந்தவள்… வேகமாய் திரும்பி நடந்தாள்.
ஹரிராம் அவள் செல்வதை குழப்பத்துடன் பார்த்தான்.
அத்தியாயம் – 16
வழக்கமாய் வாங்கும் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வேனில் ஏறப் போனவளை அந்தக்குல் புரட்டிப்போட்டது.
“சத்யா!”
திரும்பியவளின் விழிகள் வியப்பில் விரித்தன.
“நீ…ங்..க…ளா?”
“உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன் சத்யா!” என்றான் விழிகளில் நேசம் பொங்க.
“நா….நான் இங்கே… எப்படி…?”
“நானே சொல்லிடறேன் உன்னைப் பத்திய எல்லா விபரமும் எனக்குத் தெரியும். நமக்கு வேண்டப்பட்டவங்களை பத்தி தெரிஞ்சக்கிறது பெரிய விஷயமா என்ன?”
“இ…இனி இப்படி. ரோட்ல சந்திக்கறது உங்களுக்கும் சரி, எங்கள் சேவை மையத்துக்கும் சரி. நல்லதல்ல… அதனால், தயவு செய்து என்னை சந்திக்க வராதீர்கள்” தீர்மானமாய் கூறி விட்டு வேனில் ஏறி அமர்ந்தாள்.
“சத்யா ப்ளீஸ்… உன்கிட்ட நான் நிறையப் பேசணும்.”
“அதனால் எந்த பிரயோஜனமும் இல்லே… வண்டிய எடுங்க சோமுண்ணா”
“சத்யா… சத்யா…”
அவன் கத்தக்கத்த வண்டி வேகமாய் போய் விட்டது.
ஆனால், சத்யாவின் மனசு தான் மின்சாரக் கம்பத்தில் சிக்கிய காற்றாடியாய் கிழிந்தன.
“எதற்கு ராம்… காலம் கடந்து என்னப் பேசி என்ன ஆகப்போகிறது? பேசப்போ எனக்கு அபியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற ஆசை தான் பெரிதாகும்… விட்டு விடுங்கள்.”
ஆனால், அவளை விட அவன் தான் ரொம்ப தவிந்துப் போயிருந்தான்.
எப்போதும் அவளைப் பற்றிய எண்ணங்களே சுழன்றடித்தன.
‘ஏதோ காரணங்களால் அவளை ஒதுக்கினேன். ஆனால், என் சத்யாவை நான் நேசித்தது, நேசிப்பது நிஜம் தானே? அனாதையாய் என் பிரியமானவள் சேவை மையத்தில் வாழ்வதா? என்ன செய்யப் போகிறேன்? கண்டிப்பாய் நான் இழைத்த தீங்குகளுக்கு பிராயச்சித்தம் தேடியே ஆக வேண்டும்’.
அடுத்த இரண்டாவது நாளே… கஸ்தூரிபாய் சேவை மையத்தின் வாசலில் காத்திருந்தான்.
வாட்ச்மேன் மூலம் தகவல் போக, பதைப்புடன் வந்தாள் சத்யா.
“வா.. சத்யா!‘
“என்னங்க இது… இங்கேயே வந்துட்டீங்க?”
“நான் உன்கிட்டேப் பேசியே ஆகணும் சத்யா. நீ என்கிட்டே பேசற வரை தான் இப்படி வந்துக்கிட்டே தான் இருப்பேன்!” சிறுபிள்ளையைப் போல் பேசினான்.
சத்யாவிற்கு ஆச்சர்யம் ஒரு பக்கம், சங்கடம் ஒரு பக்கம்.
காதலில் கட்டுண்டிருந்த போது ராமிடம் பார்த்த அதே சிறுபிள்ளைத்தன பிடிவாதத்தை இப்போது மறுபடியும் பார்க்கிறாள் பல வருடங்கள் கழித்து,
‘எல்லாம் இழந்து பற்றிக் கொள்ள ஒரு பிடிமானமும் இன்றி தலித்தவளுக்கு கைப்பற்றி அழைத்து வந்து தங்க ஒரு கூரையைத் தந்தவள் லலிதாம்மா. இவன் இப்படி வாசலிலும், மார்க்கெட்டிலும் சந்தித்துப் பேசுவதை தவதாக எண்ணிக் கொண்டால்? அந்த சங்கடம் வேறு’.
“சரி… சொல்லுங்க. என்ன பேசணும் உங்களுக்கு சீக்கிரம் சொல்லிட்டுப்போங்க!”.
“நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா சத்யா?”
“…?!” சிரிப்பு தான் வந்தது.
“சொல்லு சத்யா!”
“கேட்கறதுக்கு முன்னாடி யோசிக்கிட்டு கேள்வி கேளுங்க. மென்ட்டல் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தவக் கிட்டே கேட்கலாமா இப்படியொரு கேள்வி?”
“ஸாரி சத்யா… எல்லாம் என்னால தான். நம்பி வந்த உன்னை…”
“ஒரு நிமிஷம்!”
“….?!”
”தயவு செய்து பழைய விஷயங்கள் பேச வேண்டாம்.”
“அது தானே சத்யா என்னை உறுத்திக்கிட்டு இருக்கு.”
“மறக்க முயற்சிப் பண்ணுங்க!”
“முடியல சத்யா. சொல்லப் போனா இப்ப தான் அதிகமா நினைவிற்கு வருது”.
“அது உங்களுக்கு மட்டுமல்ல… எனக்கும் ஆரோக்கியமான விஷயமல்ல..”
“ஆனா, பேசணும் சத்யா. மனசுக்குள்ளே பொங்கிட்டு இருக்கிற தெல்லாம் வெளியில் வந்தால் தான் எனக்கு நிம்மதி. என் சந்தோஷமெல்லாம் உன்னோடயே போய்டுச்சுன்னா நம்புவியா? ஆனா, அது தான் உண்மை!”
“…?”
“உனக்கு நான் செய்தது மிகப்பெரிய துரோகம். எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனேன். சுயமா எடுத்த முடிவல்ல… கடைசி நேரத்திலே எங்கம்மா நிம்மதியா சாகலே தெரியுமா?”
“ப்ளீஸ்… இங்கிருந்து போய்டுங்க. உங்க ஸ்டேட்டஸுக்கு நீங்க இங்கே நின்னுக்கிட்டு பேசுறது சரியா வராது. நா… நான்… இங்கே… இந்த மரத்தில் ஒண்டி வாழ்ந்துட்டு இருக்கிற நூத்துக்கணக்கான பறவைகள்ல நானும் ஒருத்தி. அதுக்கும் வேட்டு வச்சிடாதீங்க!.”
“ப்ளீஸ்…“ கை கூப்பினாள்.
ஹரிராம் அவளையே சில கணங்கள் பார்த்தவன். ஒண்ணும் பேசாமல் காரை நோக்கிப் போனான்.
பத்து நாட்களாக ஹரிராம் அவளைப் பார்க்க வராதது சத்யாவிற்கு ஒரு புறம் நிம்மதியாய் இருந்தாலும், ஏனோ மனசு அவன் வர வேண்டும் என்று முரண்டுப் பிடித்தது.
ஆனால், அந்த பத்து நாட்களும் ஹேமாவிற்கும், ஹரிக்கும் பிரச்சனை அதிகமாயிருந்ததும், அதற்கு நான் தான் காரணம் என்று அவளுக்குத் தெரியாது.
உறக்கத்தில் ஒரு நாள் ஹரி. “சத்யா… சத்யா நான் உனக்கு துரோசும் பண்ணிட்டேன் சத்யா” என்று உளற.
அப்போதே எழுப்பி சண்டைப் போட்டாள் ஹேமா.
“அதெப்படி அவள் நினைப்பு உங்களுக்கு வரலாம்? அப்ப… எனக்குத் தெரியாமல் மென்டல் ஹாஸ்பிடலுக்குப் போய் அவளைப் பார்த்துட்டு வர்றீங்க. அப்படித்தானே?” என்று சந்தேகப்பட்டாள்.
அதன் பிறகு தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டாள், சந்தேகப்பட்டாள். பிரச்சனை வலுத்தது.
சத்யா… சமையல் கூடத்தில் காய்கறிகளை சரி பார்த்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“சத்யா… மேடம் உங்களைக் கூப்பிடறாங்க!”
உதவியாளர் பெண் அழைக்க… “இதோ வந்துட்டேன்” என்று உடனே கிளம்பினாள்.
“அம்மா!” என்று அவர் முன்னே போய் நின்றாள்.
“வாம்மா சத்யா.. வேலை முடிஞ்சுதா?”
“முடிச்சிட்டேன்ம்மா”
“அந்த ரூம்ல உனக்காக, அபிலாஷோட அப்பா காத்துக்கிட்டிருக்கார்…. போய்ப்பேசு!”
“அ…ம்…மா!” என்றாள் அதிர்வில் ஓரடிப்பின்வாங்கி.
“போம்மா… நானும் பேசினேன்.அவரும் மனசு விட்டுப் பேசினார். தன் தவறுகளுக்கு நிஜமாகவே வருந்தறார். நீ வாழ்க்கையில் படக்கூடாத அவமானங்களையும், கஷ்டங்கனையும் பட்டவ, அதற்கெல்லாம் ஆறுதலா கடவுள் உனக்கு எதோ நல்லது செய்யப் போறார்னேத் தோணுது. போ…போய்ப்பேசு… ஆல் த பெஸ்ட்!”
உள்ளே வந்தவளைக் கண்டதும் “ச…த்…யா!” என்று நெகிழ்ந்தான்.
“உட்கார் சத்யா”
அமர்ந்தாள்.
“என்னடா… சொல்லச் சொல்ல திரும்ப வர்றானேன்னுப் பார்க்கறீயா? இனி மேல் வரமாட்டேன்…”
“….?”
“நீ இங்கே இருந்தால் தானே வர்றதுக்கு? உன்னை நான் அழைச்சிட்டுப் போகவே வந்தேன்”
நெற்றி சுருங்கியது.
“ஆச்சர்யமாயிருக்கா சத்யா? எனக்கும் ஹேமாவுக்கும் பிரச்சனை அதிகமாகிட்டேப் போகுது” என்றவன் நடந்தலைகளை சுருக்கமாகச் சொன்னான்.
உன் பேரைச் சொன்னாலே பேய் மாதிரி ஆடறா. அதெப்படி மறந்துட முடியும் சத்யா? உன்னை உருகி உருகி காதலிச்சி, ஆசை ஆசையாய் கல்யாணம் பண்ணிக்கிட்டவன். ஏதோ உன்னை இப்ப பார்த்ததால தான் இப்படியெல்லாம் பேசறதா நினைச்சிடாதே. உன்னைப் பிரிஞ்ச நாள் முதலா உன்னோட சேர்ந்து வாழணும்னு தான் ஆசைப்பட்டேன். அபிக்காக தானே இத்தனை அவஸ்தையும்பட்டே? அவன் உன் பிள்னை. உன் கிட்டயே ஒப்படைச்சிடறேன். ஹேமாவை டைவர்ஸ் பண்ணப்போகிறேன்”.
“பண்ணி….”
“….?”
“நாம சேர்ந்து வாழலாம் சத்யா!”
“….?”
“என்ன சத்யா அமைதியாய்ட்டே?”
“ஒரே ஒரு கேள்வி…”
“கேளும்மா…!”
“நா… நான் தப்பானவள்னு தானே என்னை ஒதுக்கி வச்சிங்க. இப்ப மட்டும்…”
“ஸாரி சத்யா. நீ எப்படிப்பட்டவள்னு எனக்குத் தெரியும். அம்மாவுக்காக நான் மனசாட்சியில்லாம நடந்துக்கிட்டேன்.”
“தாங்க்ஸ்ங்க… இது போதும்….!”
“நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலியே! நாம புதுசா வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் சத்யா!”
“அப்பவும் சரி அவசரப்பட்டு முடிவெடுத்தீங்க. இப்பவும் அதே மாதிரி அவசரப்படறீங்க.”
“அவசரப்படலே சத்யா. சட்டம் பிரிச்சாலும் நீயும், நானும் புருஷன், பொண்டாட்டி தான். இழந்ததுக்கெல்லாம் சேர்த்து வச்சு உனக்கு சந்தோஷத்தைத் தரணும்னு ஆசைப்படறேன்”.
“….?”
“சொல்லு சத்யா…”
“எனக்கு மூணு நாள் டைம் தர முடியுமா… யோசிக்கணும்”
“யோசிக்கணுமா?”
“ஆமாம்!”
“சரி!”
“ஆனா, அது வரைக்கும் என்னைப் பார்க்க வராதீங்க.”
சற்று நிதானித்து ‘சரி’ என்றான்.
அடுத்த நாள்!
பெட்டியுடன் லலிதாம்மாவின் முன் வந்து நின்றாள் சத்யா.
“உன் முடிவுல மாற்றமே இல்லையா சத்யா?”
“இல்லேம்மா… இந்த முடிவு தான் சரி. இல்லேன்னா இன்னொரு சத்யா உருவாகிடுவா!”
“என்னம்மா சொல்றே?”
“நான் யாரையும் குற்றமோ, குறையோ சொல்லலே. ராமோட பார்வையில் அவர் செய்யறது மனசாட்சிப்படி நியாயமாத் தெரியலாம். தப்பே செய்யாத நான் இவ்வளவு மோசமான தண்டனையை அனுபவிச்சது கண்டிப்பாஅவரை உறுத்தவே செய்யும். அதே சமயம் ஹேமா பக்கமும் நியாயமிருக்கே? புருஷனை எந்த மனைவி தான் விட்டுக்குடுப்பா? இப்ப முழு உரிமையும் ஹேமாவுக்கு தானே? அவளோட அன்புல எந்தப் பாசாங்கும் இல்லே. என் பிள்ளைய அவ இடத்துல வேற யார் வந்திருந்தாலும் ஹேமா அளவுக்கு அவ்வளவு பாசமா பார்த்துக்க முடியாது. அவளுக்கு துரோகம் பண்றது தப்பில்லையா?”
“நீ சொல்றது சரி தான்…ஆனா நீ பெத்த பிள்ளைய திருட்டுத்தனமா பார்க்க வேண்டிய அவசியமில்லையே. எதுக்காக கோர்ட்டு படியேறி போராடினே. உன் பிள்ளைக்காக தானே? அன்னைக்கு பறிச்சுக்கிட்டுப் போன உன் புருஷனே திரும்ப உன் கிட்ட ஒப்படைக்கிறேன் என்கிறார். நீ வேணாங்கறது தான் ஆச்சர்யமாயிருக்கு.”
“பெத்தப் பிள்ளைய யாரவது வேண்டாம்னு சொல்லுவாங்களாம்மா? என் உயிர், உலகம் எல்லாமே அபிலாஷ் தானே? நான் மனநிலை பாதிக்கப் பட்டு கிடத்தப்பக் கூட என் பிள்ளையத் தவிர வேறெந்த நினையும் இல்லையே! அப்படிப்பட்ட பிள்ளைய விட்டுத்தாறேன்னா… இன்னொரு சத்யா உருவாகிடக் கூடாதில்லையா?”
“….?”
“ஹேமா அபிலாஷ் மேல உயிரையே வச்சிருக்கா. என் பாசத்துல எந்த வகையிலேயும் குறைஞ்சதல்ல அவ பாசம்? அவனுக்காகவே தானொரு குழந்தையைப் பெத்துக்கல. அப்படிப்பட்ட தாயை ஏமாத்த எனக்கு மனசு வரலேம்மா.
அப்படிப் பறிச்சுக்கிட்டா என்னை விட மோசமா பாதிக்கப்படுவா! புதுசா ஒரு அம்மா வந்து, அபி உன்னை பெத்த அம்மா நான் தான்டான்னு குழப்ப மனசு வரலே. என் பிள்ளைய ஹேமா சந்தோஷமா வச்சிருப்பா. அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு.”
“ச..த்..யா!”
“புருஷன் பொண்டாட்டி சண்டை விடிஞ்சா காணாமப் போய்டும். அப்படி முடியாம பூதாகரமா பெருசாகுதுன்னா… அதுக்கு யாராவது காரணமாயிருப்பாங்க. இங்கே எனக்கேத் தெரியாம நான் தான் காரணமாயிருக்கேன்.
நான் இங்கே இருந்தா அவர் என்னைப் பார்க்க வருவார். மனசு ஊசலாடும். குற்ற உணர்வு வதைக்கும். நான் சுத்தமானவள்னு அவர் நினைச்சதேப் போதும். நான் மறுபடி சேலத்துக்கேப் போய்டறது தான் எல்லாருக்கும் நல்லது. என்ன ஒரு வித்தியாசம்? அஞ்சு வருஷம் முன்னாடியைத் பைத்தியமாப் போனேன். இப்ப வேலைக்கான பொறுப்யை ஏத்துக்கப் போறேன்!”
”உன்னை அங்கே அனுப்ப மனசே இல்லை சத்யா. உன் பிடிவாதம்… என்னை தலையாட்ட வைக்குது!”
“எனக்கும் உங்களை விட்டுப்போக, மனசில்லேதாம்மா. ஆனா, இங்கேயிருந்தா… ஒரு.அழகானக் கூட்டை கலைக்கற மாதிரி ஆகிடும்”.
“ராம் வந்தா நான் என்ன சொல்லட்டும்?”
“இந்த கடிதத்திலே எல்லாமே விளக்கமா எழுதியிருக்கிறேன். அவர் புத்திசாலி, வருத்தப்பட்டாலும், என்னை புரிஞ்சுப்பார். ஜீரணிச்சுப்பார். ஆனா, நான் இருக்கிற இடம் மட்டும் அவருக்குத் தெரியாம… நீங்க தான் பார்த்துக்கணும்.” என்றவள் ஒரு கவரை நீட்டினாள்.
பெருமூச்சுடன் வாங்கிக் கொண்டார் லலிதாம்மா.
அவள் சேலம் செல்ல கார் ஏற்பாடு செய்திருந்தார்.
காரில் ஏறி அமர்ந்த சத்யா தன்னை மீறி உடைப்பெடுத்த கண்ணீரைத் துடைத்தபடி கையடைத்தாள். கார் புறப்பட்டது.
ஆவலுடன் வந்த ராமிடம் லலிதாம்மா அந்த கடிதத்தை ஒப்படைத்து விட்டு தன் அறைக்குச் சென்று விட்டார்.
படிக்க படிக்க… இதயம் கனத்துப் போனது ஹரிராமுக்கு.
‘ஏன் இப்படிப் பண்ணிட்டே சத்யா? மேலும், மேலும் என்னை தண்டிக்கிறியா? இனி உங்கள் பார்வையிலேயே பட மாட்டேன் என்று எழுதியிருக்கிறாயே. ஹேமாவை நீ நினைத்துப் பார்க்கிறாய். ஆனால் அவள்?
அவளுடன் சேர்ந்து வாழ்வது தான் உனக்கு நான் செய்யும் கைமாறா? வாழ்கிறேன். ரெட்டை வாழ்க்கை வாழ்கிறேன். உன்னை மனசு முழுக்க நிரப்பி வச்சுக்கிட்டு அவ கூட வாழத்தான் போகிறேன்.
ஆனா, நான் உன் மேல வச்சிருக்கிற பிரியத்தை உணர்ந்திருந்தா இப்படியொரு கடிதம் எழுதியிருப்பியா? என் மனசை உடைச்சிட்டுப் போய்ட்டியே சத்யா?
எனக்கு நீ வேணும் சத்யா. பிரியமானவளே…. எனக்கு உன் பிரியம் வேணும். தருவாயா? நீ சொன்னதும் நான் உன்னை மறந்துடணுமா? அதெப்படி மறப்பேன்? நான் உன்னை மறுபடி சந்திப்பேன்ற நம்பிக்கை நிறைய இருக்கு. அது எத்தனை வருஷமானாலும் சரி… நாம கண்டிப்பா சந்திப்போம். அப்ப நீ என் நேசத்தை புரிஞ்சுப்பே. அப்ப உன் கண்ல இருந்து… ஒரு சொட்டு கண்ணீர் வழியுமே! அது தான் நீ எனக்குத் தர்ற சன்மானம். அந்த புரிதலுக்காக, நேசத்துக்காக காத்திருப்பேன் சத்யா!
கடிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்தவன், நாசூக்காய் கண்களையும் துடைத்துக் கொண்டு காரில் ஏறினான்.
ஜன்னல் வழியே அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த லலிதாம்மாவின் நெஞ்சமும் விம்மியது.
(முற்றும்)
– என் பிரியசகி (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 2007, தேவியின் கண்மணி, சென்னை.