இலவசம்!





சபேசன் வீட்டு ‘கேட்’டை திறந்து கொண்டு மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள்ளே நுழைந்தார்கள். விற்பனை பிரதிநிதிகளாக இருக்கலாம்! இனி மேல் பகலில் கூட வெளிக் ‘கேட்’டிற்கும் பூட்டு போட்டு விட்டால் தான், இந்த தொல்லையை தவிர்க்க முடியும் என்று சபேசன் நினைத்துக் கொண்டார். ஆண்களாக இருந்தால் கேட்காமல் உள்ளே நுழைந்தற்கு கடுமையாக ஏதாவது சொல்லியிருப்பார்.
தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே வரும் அழகான இளம் பெண்களிடம் ஒரு ஆணால் எப்படி கடிந்து பேச முடியும்? அவரும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே “வாங்க!…வாங்க!…” என்று வரவேற்றார். அவர்கள் மூன்று பேர்கள் தோள்களிலும் ஒவ்வொரு பெரிய பை நிறைய புத்தகங்களை தொங்க விட்டிருந்தார்கள்!.
“சார்!…. எங்க கம்பெனியை பிரபல படுத்தும் முயற்சியை எடுத்து வருகிறோம்! அதற்கு உங்களைப் போன்ற படித்தவர்களுக்கு நிறைய புத்தகங்களை இலவசமா கொடுத்து ஆதரவைத் திரட்டுவதற்காக நாங்க வந்திருக்கிறோம்! …”
“அப்படியா!….ரொம்ப சந்தோசம்! இப்படி உள்ளே வந்து உட்காருங்க!” என்று அந்தப் பெண்களை உபசரித்தார் சபேசன்.
இலவசம் என்ற வார்த்தைக்கு நமது சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது!
“இந்த பெரிய சைஸ் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி 1500 ரூபா…இது முற்றிலும் இலவசம்!..இந்தா பிடியுங்க…” என்று அந்த பெரிய சைஸ் டிக்ஸ்னரியை அவர் கைகளில் வைத்தாள் முதலில் பேசிய பெண்.
அடுத்து ஒரு புத்தகத்தை எடுத்து “இது லேட்டஸ் அட்லஸ் சார்!…இது 1000 ரூபா விலை….இதுவும் இலவசம்…தான்!.”அதையும் அவர் கைகளிலிருந்த டிக்ஸ்னரி மேல் வைத்தாள் இன்னொரு பெண்!
மற்றொரு பெண் தன் கைப் பையிலிருந்து கனமான மூன்று புத்தகங்களை எடுத்து,. “ இது பிரபலமான ரஷ்ய நாவல்….இன்னொன்று சிறுவர் இலக்கியம்….அடுத்தது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நூல்….எல்லாமே உங்களுக்கு இலவசம் தான் என்று வரிசையாக சபேசனில் கைகளில் அவைகளை அடுக்கினாள்.
சபேசனின் கைகள் கனம் தாங்காமல் வலித்தது. அதே சமயம் மனசு இலவசங்களை நினைத்து குதூகலித்தது.
“சார்….இது எங்க கம்பெனி தயாரிப்பு பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகம்!…இதன் விலை வெறும் 1000 மட்டுமே!…இந்த ஒரு புத்தகத்தை மட்டும் நீங்க விலைக்கு வாங்கினாப் போதும்….மற்றதெல்லாம் உங்களுக்கு இலவசம்!…”
சபேசனின் கைகளிலிருந்த புத்தகங்கள் எல்லாம் அவரை அறியாமல் நழுவி விட்டன!
இந்தக் காலத்தில் யாரும் எதையும் இலவசமாகத் தரமாட்டார்கள்! அப்படி நமக்கு ஒருத்தர் இலவசமாக எதையாவது தருகிறார் என்றால், அவர் நமக்கு கொடுத்ததை விட, உயர்ந்த எதையோ அவர் நம்மிடம் எதிர் பார்க்கிறார் என்று அர்த்தம்!
அதை மட்டும் நாம் புரிந்து கொண்டால் நாடே முன்னேறி விடாதா?
– புதுகைத் தென்றல் பிப்ரவரி 2015
![]() |
கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க... |