இருவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 4,830 
 
 

இந்த ஊருக்கு வேலை மாற்றலாகி வந்த புதிதில் பல வீடுகள் மாறி விட்டேன். குருவிகள் தன் கூடுகளை ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றி கொண்டே இருப்பது போன்று. எனக்கும் என்ன காரணம் என்று சரியாக யோசிக்க முடியவில்லை.

தற்போது இருக்கும் வீடும் தெருவும் மிக பெரியது. நகரத்தின் மையத்தில் உள்ளது. ஆனால் ஒரு மூலையில் அடக்கமாக ஒதுங்கி இருக்கிறது.

ஒரு துளி காடு என்பது போன்று கடைசி தெருவில் தெரியாமல் வலது புறம் திரும்பினால் எதோ பனை மர காட்டில் புகுந்து விட்டது போன்ற எண்ணம் வந்து விடுகிறது. நகரமயமாக்கலில் இருந்து தப்பித்த கருப்பு பனைகள் பரட்டை தலையுடன் சுதந்திரமாக ஆடாமல் அசையாமல் அமைதியாக நின்று கொண்டும் பேசி கொண்டும் இருப்பது போல் இருந்தது. காட்டு கொடிகளில் சங்கு பூக்கள் பச்சை வானில் நட்சத்திரங்கள் போல் மின்னியது. யாருக்கும் இந்த இடம் அவ்வளவாக தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எந்த குப்பையும் கொட்டாமல் ஒரு காட்டை விட்டு வைத்து இருக்கிறார்கள். பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டு இருந்தன. நான் அவ்வபோது நினைத்து கொண்டால் வந்து கொஞ்சம் நேரம் நின்று கொண்டு இருப்பேன். ஒரு நெல்லி மரம் மறைவாக வளர்ந்து இருந்தது. அடுத்த பருவத்திற்கு காய்த்து விடும் போல.

இந்த தெருவில் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள், சுருக்கமாக சொன்னால் ஓய்வு ஊதியம் வாங்கும் மனிதர்கள் வசித்து வருகிறார்கள். இது எல்லாம் நான் தெரிந்து கொண்டது வினிதா சொல்லி கேட்டது தான். பழைய காவியங்களில் வருவது போன்று மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் நிறைந்திருந்தன. எளிமை என்பதற்கு இங்கு இடம் இல்லை.

வினிதா எங்கள் நிறுவனத்தில் உடன் வேலை பார்ப்பவள். நானும் அவளும் வேறு வேறு துறைகள். அவளுடைய பிராஜக்ட் தொடர்பான சில வேலைகளுக்கு நான் முதலில் உதவ தயக்கம் காட்டினாலும்

நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு சில உதவிகள் செய்வது உண்டு. அதுவே ஒரு காரணமாக அவளுடன் பேசவும் பழகவும் வாய்ப்பு கிடைத்தது. நான் எல்லோரிடமும் அவர்களாக பேசினால் பேசுவேன் இல்லையென்றால் காலையில் பார்க்கும் போது புன்னகைப்பதோடு சரி. வேலை நிமித்தமாக பேசினால் தான் உண்டு. வினிதாவும் என்னை போல் தான். அவள் துறையில் உள்ளவர்களிடம் மட்டுமே பேசுவாள் ஆனால் எல்லோரிடமும் பேச மாட்டாள். அவள் இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே தேநீர் அருந்த மற்றும் மதிய சாப்பாடு இடைவேளையின் போது பேசி கொள்வார்கள். சில நேரங்களில் வினிதா என்னையும் கூட சேர்த்து கொள்வாள். அவள் துறையில் அவளிடம் மட்டுமே பேசுவேன்.

செல்போனில் சில நேரங்களில் சிறை கைதி போல் மாட்டி கொள்வது உண்டு நாளாக நாளாக அது ஒரு வகை போதை போல் ஆகி விட்டது. அதனிடம் இருந்து தப்பித்து கொள்வது பெறும் பாடாக இருந்தது. அதனால் அதிகாலை எழுந்து ஓடுவதை வழக்கமாக்கி கொண்டேன். அதுவும் ஓர் அளவு தான் பலன் கொடுத்தது. நடை பயிற்சி செல்பவர்கள் போல தினமும் காலை மாலை அதை ஒரு வேலையாக செய்வது இல்லை. பள்ளி கல்லூரி நாட்களில் கால்பந்து விளையாட்டு விளையாடும் போது தினமும் பயிற்சி எடுப்பது வழக்கம். வேலைக்கு வந்து பிறகு எந்த பயிற்சியும் கிடையாது. வேலை மற்றும் தூக்கம் இடை இடையே திரையரங்கு சென்று படம் பார்ப்பது. யாருடனும் பழகுவது கிடையாது அப்படியே பழகினாலும் உடனே மாற்றலாகி வேறு வேறு ஊர்களுக்கு சென்று விடுவது வழக்கம். அதனாலும் எந்த தொடர்பும் பழக்கமும் அதிகமாக இல்லை.

இந்த ஊரில் இருந்து மாறாமல் அதிக நாட்கள் இருப்பதால் இப்போது தான் ஒருவர் பழக கிடைத்து இருக்கிறார். அவரும் எப்படி கிடைத்தார். நான் ஓட தொடங்கியவுடன் தான். இந்த பகுதிக்கு வருவதற்கு முன்பு இரயில்வே ஸ்டேசன் அருகில் உள்ள நெருக்கமான பகுதியில் மொட்டை மாடியில் ஒரு அறையில் இருந்தேன். ஒரே வசதி மொத்த நகரத்தின் மரங்களையும் அதில் புகுந்து கொண்டு இருக்கும் வண்ண வீடுகளும் இடையில் ஓடும் சாலையும் நதியும் பார்க்க முடியும். நதியை ஒட்டியுள்ள கோயில் கோபுரங்கள் வானத்தில் இருப்பது போன்ற தோற்றம் கூடுதலாக இரயிலின் தட தடக்கும் இசையும் அதிர்வுகளும் யாரோ துணைக்கு இருப்பது போன்று இருக்கும்.

அங்கு தான் பன்னீர் செல்வம் பழக்கம். நானும் அவரும் தான் அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்பவர்கள் . எனக்கு எப்போது படுத்தாலும் அதிகாலை விழிப்பு வந்துவிடும். எனவே பல நாட்கள் டிவி பார்ப்பது படம் பார்ப்பது செல்லில் சமூக வலைதளங்களில் குதித்து துண்டு செய்திகளில் முழ்குவதுமாக இருந்தேன். அந்த நேரம் அதிலிருந்து விடுபட நடை பயிற்சிக்கு வந்தேன்.

வினிதாவிடம் பழக தொடங்கியவுடன் அவ்வபோது அவள் படித்த புத்தகங்கள் பற்றியும், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளை எனக்கு அனுப்புவாள்.

ஒரு முறை ஒரு கவிதை அனுப்பினாள்

நிலவு தேய்ந்த நாளில்
வானம் பொட்டல்
காடு போன்று
நட்சத்திரங்களற்று
இருள் மட்டுமே
துணைக்கு இருந்தது
சூரியன் மறையும் போது
உதிர்த்து
வீசி சென்ற
ஆரஞ்சு நிற அடை
மேகங்களில் நனைந்து
படுத்து இருந்தது.

போன்ற கவிதைகள் படித்து பார்ப்பேன் பெரும்பாலும் எனக்கு புரியாது. அதை பற்றி அவளிடம் ஒரு முறை கேட்டேன். அதற்கு அவள் மௌனமாக சிரித்தாள்.

கதைகளையும் என்னால் படிக்க முடியாது பல கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். கட்டுரைகளை மட்டுமே படிப்பேன் கொஞ்சம் புரியும்.

அவளிடம் தூக்கம் இல்லாமல் விழித்து கொள்வது பற்றி நான் கூறியதில்லை அவளாகவே என்னிடம் கேட்டாள். ஏன் நீ சரியாக தூங்க மாட்டிய இல்ல விடிய விடிய படம் பார்ப்பியா என்று கிண்டலாக கேட்டாள். அவள் கேட்பது புரிந்தது. அப்போது அவளிடம் முதல் முதலில் எப்போதும் ஒரு பட்டு நூல் இடைவெளி போல அனைவரிடமும் என்னுடைய தனிப்பட்ட செயல்களை கூறியது கிடையாது. பன்னீரும் கேட்பார் அவரிடமும் சிரித்து பேசி சமாளித்து கொள்வேன்.

ஆனால் வினிதாவிடம் அந்த பட்டு நூல் கொஞ்சம் விலகியது அல்லது இடைவெளி இல்லையென்று வைத்து கொள்ளலாம்.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு எதையாவது வலைதளத்தில் தேடுவது. ஒரு செய்தி அது தொடர்பான முழு செய்தியையும் நேரம் காலம் தூக்கம் கடந்து செல்வது தெரியாமல் தேடிக் கொண்டே இருப்பேன். இதை தான் செல்போன் அடிக்ஸன் என்று கூறுகிறார்களோ தெரியவில்லை. ஒரு முறை சமூக வலைதளத்தில் இனிப்பான பாடல் கேட்டேன். ஹிந்தி மொழி பாடல்.

“மஸ்தா நேக சா ரோமே”

இந்த முழு பாடலையும் வலைதளத்தில் பல மணி நேரங்கள் தேடினேன் சலிக்காமல். ஒரு கட்டத்தில் தேடுவதை நிறுத்தி விட்டேன். விடுமுறையாக இருந்ததால் தப்பித்தேன் இல்லையென்றால் பேய் பிடித்தது போல தேடிக் கொண்டே இருப்பேன். பல முறை இப்படி நடந்தது உண்டு.

இதனை வினிதாவிடம் ஒரு தேநீர் இடைவேளையின் போது நான் சொன்னேன். அன்று அவள் மிகவும் ஆர்வமாக இருந்தாள் நான் வேறு எதாவது சுவாரஸ்யமாக கூறுவேன் என்று எதிர்பார்த்திருப்பாள் போல.

நான் சொன்னவுடன் ஏமாற்றத்தில் அதிக சத்தத்துடன் சிரித்தாள். எல்லோரும் எங்களை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். நான் அவளிடம் கேட்டேன் உனக்கு இது போன்று ஏதாவது தேடிக் கொண்டு இருப்பாயா என்று. அவள் சிரித்து கொண்டே இது எல்லோருக்கும் உள்ள பிரச்சனை தான். எல்லோரும் பிடித்தவைகளை தேடிக் கொண்டு தான் இருப்பார்கள். நானும் தேடுவேன் ஆனால் அதற்கு ஓர் எல்லை உண்டு மற்றும் நேரம் காலம் முக்கியம். தூக்கம் என்று வந்தால் தூங்கி விடுவேன் என்றாள்.

அவள் கூறினாள் நான் நினைத்தேன் நீ ஏதோ காதலில் எவர் மீதாவது விழுந்து விடிய விடிய பேசிக் கொண்டு இருப்பாயோ அல்லது சாட் செய்வாயோ என்று. அதற்கும் வாய்ப்பு இல்லை. அல்லது எல்லோரும் பார்க்கும் விசயங்கள் ஆனால் வெளியே பொதுவில் பார்க்க முடியாத விடியோக்களை பார்க்கிறாயோ என்று நினைத்தேன். அவள் சொல்லி முடித்தவுடன் அவள் முகம் கொஞ்சம் மாற்றம் கொண்டு என்னை பரிகாசம் செய்ததில் அழகு கூடியது சிணுங்கும் குழந்தை போன்று.

அதிகாலையில் ஓடுவது பழக்கமாக மாறியது. முதலில் என்னால் ஓட முடியவில்லை அதிகமாக இரைப்பு வந்து மூச்சு வாங்கியது. பின்பு மெல்ல தடகள வீராங்கனை போல் ஓட தொடங்கினேன். பன்னீர் என்னுடன் நடந்து வரும் போது நானும் கூட நடந்து வருவேன். அவர் சிறிது நேரம் தான் நடப்பார். அவர் ஒரு கணித ஆசிரியர். என்னுடன் வேலை பார்க்கும் சின்ன தம்பி ஒரு முறை கேட்டார். உங்கள் வீட்டின் அருகில் தான் பன்னீர் சார் இருக்கிறார் என்றார்.

அப்போது தான் எனக்கு தெரியும் அவர் ஆசிரியர் என்று. அதனால் தான் என்னவோ எப்போதும் ஒரே பரபரப்பாக இருப்பார். நான் சமுக வலைத்தளத்தில் மாட்டிக் கொண்டது போல அவர் காலை மாலை இரவு என்று எந்த வித்தியாசமும் அவருக்கு கிடையாது. மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஹொம் டியுஸன் வகுப்புகள் எடுக்கிறார்.

ஒரு சில வகுப்புகளை வீட்டிலும் எடுப்பார். வகுப்புகள் இருக்கும் நேரத்தில் பத்து இருபது சைக்கிள்கள் வரிசையாக காம்பவுண்ட் நோக்கி நிற்கும்.

அவருக்கு குழந்தைகள் கிடையாது. ஒளிவு மறைவு இல்லாமல் வெளிபடையாக பேசுவார். அவரே சொல்லுவார் நானும் உங்களை போன்று யாரிடமும் பழக்கம் அதிகம் இல்லை என்பார்.

நான் அவரிடம் கேட்டேன் ஏதாவது டிரிட்மெண்ட் எடுக்க வேண்டியது தானே என்று. அதற்கு அவர் எல்லா வழிகளிலும் முயற்சி செய்து

விட்டேன் பலன் இல்லை. என் வீட்டுகாரம்மாவே சொல்லிடுச்சு எனக்கு எந்த ஏக்கமும் இல்லை என்று.

ஏதாவது குழந்தையை தத்து எடுத்துக்கலாமே என்று ஆரம்பித்தேன். அவர் அதுவும் எல்லா வேலைகளும் முடிந்து கடைசியில் பிரச்சனை ஆகி விட்டது. இப்போது எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை இல்லாதது பற்றி எந்த வருத்தமும் இல்லை என்றார் புன்னகையுடன். அதனால் தான் என்னவோ ஒரு செயலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு துயரங்களில் இருந்து விடுபட வழி தேடுகிறார்.

ஏக்கங்கள் மனதின் அடி ஆழத்தில் குளத்தில் கிடக்கும் கற்கள் போன்று சில நேரங்களில் வெளிப்படும்.

இந்த தெருவில் பன்னீரை எல்லோருக்கும் தெரியும். எல்லா விசயங்களை பற்றியும் கூறுவார். நான் ஓட துவங்கியவுடன் நன்றாக உறங்க துவங்கி விட்டேன். ஆனால் அலாரம் அடிப்பது போல் அதிகாலையில் விழிப்பு வந்துவிடும் தூக்கம் கெடுவது இல்லை. நான் கைபேசியில் தேடிக் கொண்டு இருப்பது முற்றிலும் நின்று விட்டது. அதுவும் வினிதா பழக்கம் கிடைத்தவுடன் தான்.

அவள் படிக்கும் செய்திகளை எனக்கு அனுப்பி கொண்டே இருப்பாள். எல்லாவற்றையும் படித்துவிடுவேன். அவள் எப்போதாவது எதையாவது கேட்பாள். நான் ஆரம்பத்தில் முழித்து கொண்டு இருப்பேன் பின்பு அவளுடைய ஏமாற்றம் கொண்ட முகத்தை பார்க்க முடியாமல் படிக்க தொடங்கி விட்டேன்.

அவள் எப்போதும் என்னை படி என்று வர்புறுத்த மாட்டாள். நாங்கள் சந்திக்கும் போது அவள் படித்து கொண்டு இருக்கும் புத்தகத்தை என்னிடம் கொடுத்து எடுத்து வர சொல்வாள்.

அவள் படிக்கும் புத்தகங்கள் பல பல வண்ணங்களில் இருக்கும். அவள் தேகம் கொண்ட நிறமும் ஒளியும் அவள் புத்தகங்களை தொடும் போது என்னால் உணர முடிந்தது. சில சமயங்களில் புத்தகத்தின் அட்டை படத்தை தொட்டு பார்த்தேன்.

வினிதா ஒரு முறை கேட்டாள் புத்தகத்த படிக்க மாட்ட ஆனா என்னத்த தொட்டு தொட்டு பாக்குர என்று முறைத்தாள்.

நான் அவளிடம் கூறினேன் நான் படிக்க சில சமயம் முயற்சி எடுப்பது உண்டு ஆனால் பத்து நிமிடத்திற்கு மேல் தாண்டுவது கிடையாது. அதற்குள் தூக்கம் வந்து விடுகிறது. செல்பேசியில் நீ அனுப்பும் செய்திகளை ஒரு வரி விடாமல் படித்து விடுவேன். அவள் சிரித்து கொண்டே மகிழ்ச்சியுடன் என்னை பார்த்தாள். எனக்கு இப்போது அவள் படிக்கும் புத்தகம் ஒன்றை படிக்க வேண்டும் போல் இருந்தது.

அவள் கூறினாள் எப்போது வேண்டும் என்றாலும் படித்து கொள்ளலாம் ஒன்றும் கட்டாயம் இல்லை என்றாள்.

என்னிடம் உள்ள புத்தகங்களை என் கைகளிலிருந்து உள்ளங்கை தொட்டு எடுத்து கொண்டாள். தொட்டியில் உறங்கும் குழந்தையை அல்லி எடுப்பது போன்று. என்ன நினைத்தாலோ ஒரு சிறிய புத்தகத்தை என் கண்களை பார்த்தவாறே என்னிடம் திருப்பி தந்தாள் என் கைகளை பிடித்து கைக்குள் திணித்தாள் கோயில் பிரசாதம் போன்று. அவள் கண்கள் ஏதோ கூறுவது போன்று இருந்தது.

ஒரு விடுமுறை நாளில் காலையிலேயே கோயிலுக்கு சென்று இருப்பாள் போல, அவளுடைய செல்ஃபியை எனக்கு அனுப்பி இருந்தாள்.

அதனை பார்த்து கொண்டே இருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *