தின / வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
முதல் வெளியீடு: 1985
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 479
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவசர அவசரமாகச் சரக்கை அரைத்துக் கொண்டிருந்தாள் சரசு. சோறு வடித்தாகி விட்டது. கறியையும் வைத்து விட்டு நேரத்துடன் புறப்பட்டால்தான் பஸ் பிடித்து ஆஸ்பத்திரிக்குப் போகலாமென்ற அவசரம், அவளது கையுள்ளும் மனத்துள்ளும் பரபரத்தது. 

“அம்மா அம்மா, பாங்கிலை நகை குடுக்கப்போகினமாம்.”. மகள் ராஜியுடைய சொற்கள் அவளுடைய உள்ளத்தில் தேவாமிர்தத்தையா வர்ஷிக்கின்றன! 

“யார் மேனை சொன்னது?” ஆர்வம் கரைபுரள அவள் கேட்கிறாள். 

“பொன்னுப் பெரியப்பா சொன்னவர். பேப்பரிலை கிடக் கெண்டு யாரோ சொன்னவையாம். உங்களை பாங்கிலை போய்க் கதைக்கட்டாம். என்னவோ எழுதிக் குடுக்கவேணுமாம்” ராஜி பொன்னுப் பெரியப்பா சொல்லி அனுப்பிய அத்தனையையும் மூச்சுவிடாமல் ஒப்புவிக்கிறாள். பெரிய சுமையொன்று இறங்கப் போகும் உணர்வு அந்தப்பிஞ்சு உள்ளத்திலும் எழுந்திருக்க வேண்டும். 

சரசுவுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அரைத்த சரக்கை வழித்துக் கறியில் போடுகிறாள். நேரம் பத்தைத் தாண்டியிருந்தது. 

“எல்லா வேலையையும் பார்த்துக்கொண்டு வெளிக்கிட்டா பாங்குக்குப் போகமுடியாது” அவளது மனம் கணக்குப்போடுகிறது. அவசரமாகக் கறியை இறக்கி, ஆஸ்பத்திரிக்கு உணவு கொண்டு போக ஆயத்தம் செய்கிறாள். 

“அந்த அட்டியலை எடுத்த உடனை கொண்டுபோய் பொன்னம்மா அக்கான்ரை முகத்திலை எறிஞ்சுபோட்டு வரவேணும். அப்பதான் என்ரை மனம் ஆறும்” அவளுடைய மனம் கொதித்துக் குமுறுகிறது. 

சாப்பாட்டைக்கட்டி முடித்ததும், பரபரவென்று சேலையைச் சுற்றி அள்ளிச் செருகுகிறாள். மனதுள் ஏதோ ஓர் ஆவேசம்! வெறி! 

“கொடிது கொடிது வறுமை கொடிது எண்டு சொன்னது எவ்வளவு உண்மை. அதாலைதானே இந்த அடைவு, கடன் எல்லாம். இந்த அடைவு வைக்கிற அநியாயத்தாலைதானே மனிசன் கட்டின தாலியை முதற் பறிகொடுத்தன்” 

அவளுடைய மனம் பழைய நினைவுகளுக்குத் தாவுகின்றது; “நெல்லு விளையுமெண்டு நம்பி கிளிநொச்சியிலை தாலியை அடைவு வைச்சு நெல்லும் போச்சு. தாலியும் போச்சு. கிளிநொச்சி வங்கிக் கொள்ளையிலை அது களவுபோக அதோடை அந்தக் குத்தகைக் காணியையும் விட்டுட்டு வந்தம். இங்கை வந்ததும் மண்ணை நம்பினம். அதுக்குள்ள போட் எங்களிட்டை என்ன கிடந்தது? ஒருமுறை பட்டும் விடமுடிஞ்சுதே? வறுமை தள்ளிக் கொண்டுபோய் அடைவு வைப்பிச்சுது. ரவுணுக்குள்ளை ஒண்டும் நடக்காதெண்ட நம்பிக்கையிலை ஆற்ரையோ நகையை வாங்கி அடைவு வைச்சது பிழைதான். ஆனால் வேற வழி?’ 

காசு, அடையாள அட்டை, வங்கி ரசீது எல்லாவற்றையும் சரி பார்க்கிறாள் சரசு. 15.03.84 காசு கட்டிய திகதி கண்ணில் பட்டதும் மனம் அந்தரப்படுகிறது. 

அந்தளவு காசுக்கும் பதினேழு மாதத்துக்கு வட்டி கட்ட வேணும். 

இந்த அடைவு வைப்பாலை தாலியை மட்டுமே. அதைக் கட்டின அவரையும் பறிகொடுக்கப் பார்த்தேனே. கந்தையர் அடிச்ச அடியிலை மண்டை பிளந்து இரத்தம் பெருக அவர்… 

அந்தப் பயங்கரம்… அவளது அன்றைய அந்தரநிலை அனைத்தும் ஒருகணம் நினைவிலோடி இரத்தத்தைச் சில்லிட வைக்கிறது. 

அவள் செய்த புண்ணியம், அவர் கடவுள் அருளால் தப்பியது. ஆனால் ஆள் இன்னும் ஆஸ்பத்திரியிலேதான். 

‘பாங்குக்குப் போட்டு ஆஸ்பத்திரிக்கும் போகவேணும்’ 

“ராஜி நான் வருமட்டும் மாமியோடை இருங்கோ” என்று சொல்லி மகளை அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு அவள் புறப்படுகிறாள். 

காலை வெயில் சூடேறுகிறது. அவள் வேகமாக நடக்கிறாள். அவளது மனதின் வேகமும் வேக்காடும் அதைவிட அதிகமாக இருக்கிறது. 

“எல்லாம் பொன்னம்மா அக்காவின்ரை ஓதலால் வந்த வினை அவள், “நகை இனி வராது; என்ரை அட்டியலை இனிக் காணேலாது” எண்டு ஒவ்வொரு நாளும் ஒப்பாரி வைக்க, அந்த ஆத்திரத்திலை கந்தையர் வந்திருப்பார். இவரும் கதைக்க அவரும் கதைக்க அடிதடியாகி…’ அவள் பெருமூச்சு விடுகிறாள். 

சரசு பஸ் தரிப்பை அடைந்துவிட்டாள். 

பஸ் எப்போது வருமோ? 

மனம் பழையவற்றை மீண்டும் இரைமீட்கிறது. 

நான் காசுக்கு அந்தரப்பட்டபோது, “என்ரை அட்டியலைத் தாறன். அடைவு வைச்சுக் காசெடன். நெல்லு வெட்டினாப்போலை அடைவு மீண்டு தந்தால் போதும்” எண்டு எவ்வளவு அன்பாய்க் கதைச்சு உதவி செய்த பொன்னம்மா அக்கா, இண்டைக்கு எப்பிடி மாறீட்டா? பொன்னம்மா அக்காவின்ரை பழைய அன்பும் பாசமும் அவளது நினைவைத் தொடுகின்றன. 

‘அவவையும் குறைசொல்லிப் பயனில்லை. எல்லாரும் நகை கிடைக்காதெண்டு தானே பயப்பிடுத்துகினம். சங்கானை வங்கிக் கொள்ளையோடை எல்லா வங்கி நகையளையும் கொழும்புக்குக் கொண்டு போட்டினம். காசு கட்டினாலும் நகையை மீள முடியாத நிலை’ 

மினிபஸ் ஒன்றும் பின்னால் பஸ் ஒன்றும் வருகின்றன. 

‘பிரச்சினைகளாலே கொஞ்சநாள் இதுகள் ஓடுகிறதே குறைவு. இப்ப எல்லாம் ஞாயமாய் ஓடுதுகள். இந்த நேரத்திலை நகையைத் தந்திடுவினம்’ என்று நினைத்துக்கொண்டே சரசு பஸ்ஸிலே ஏறிக்கொள்கிறாள். 

அவள் மனதில் நல்லதொரு எதிர்பார்ப்பு நம்பிக்கையாய் முகிழ்க்கிறது. 

வங்கி வாசலை அடைந்தபோது, கதவுகளைப் பூட்ட ஆயத்த மாகின்றனர். கெஞ்சி மன்றாடி அவள் உள்ளே போய்விடுகிறாள். 

“ஐயா, நகை எடுக்கிறதுக்கு என்னவோ எழுதிக் குடுக்க வேணுமாம்” சரசு வங்கி உத்தியோகத்தரிடம் வந்த காரணத்தை விவரிக்கிறாள். 

“நகையைக் கொழும்பிலை எடுக்க விருப்பமெண்டால் சம்மதக் கடிதம் தரலாம்” உத்தியோகத்தரின் பதில் அவளைத் திகைக்க வைக்கிறது. 

“கொழுப்பிலை எடுகிறதோ? எங்களுக்கு கொழும்பே தெரியாதையா” கண்ணீர் கண்களில் கரைகட்ட அவள் ஏக்கத் துடன் கூறுகிறாள். 

“காசு கடன்பட்டுக்கட்டினனாங்கள். கனகாலமாய்ப்போச்சு, வட்டி ஏறுது” அவள் கெஞ்சுகிறாள். 

“அப்படியெண்டால் முந்தி அடைவு வைச்ச தொகையின்ரை தொண்ணூறு வீதத்தை வங்கி அடைவு வட்டி வீதத்துக்கு நீங்கள் எடுக்கலாம்” வங்கி அதிகாரி மேலிடத்து உத்தரவுகளைக் கிளிப்பிள்ளைபோல் கூறுகிறார். 

‘இரவல் நகையை அடைவு வைச்சனாங்கள் ஐயா. உங்கட சட்டதிட்டம் பணக்காறருக்குத்தான் சரி. அவையாலை தான் நாங்கள் இப்படி இருக்கிறம். நாங்கள் ஏழைகள். எங்களின்ரை கண்ணீர் உங்களைச் சும்மாவிடாது. எங்களுக்கு நகைதான் வேணும். அதுவும் இங்கை கொண்டந்து தரவேணும்” 

அவள் விம்மி விம்மி அழுகிறாள். 

அந்த அதிகாரி அங்கு அடுத்துநின்ற ஒரு மனிதரிடம் உடைந்த இசைத்தட்டு மாதிரி அதே கதையை ஒட்புவித்துக் கொண்டிருக்கிறார். 

– ஈழநாடு 01-09-1985.

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *