இனி என்று காண்பேனோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 174 
 
 

1998 இளங்கலை கணிப்பொறியியல் படித்து முடித்து அவன் வேலை தேடிக் கொண்டிருந்த தருணம். திருச்சியில் அப்பொழுது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் இல்லாததால் ஐடி துறையில் வேலை வாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது. அதனால் வேலை வாய்ப்பின் பொருட்டு சென்னைக்கு பயணம் ஆனான் விஜய். சில மாதங்கள் ஒரு நண்பனின் வீட்டில் தங்கி ஒரே ஒரு நேர்காணலுக்காக ஏங்கிக் கொண்டிருந்த சமயம் அது. இளங்கலை பட்டதாரிகளுக்கு அவ்வளவாக நேர்காணல் அழைப்பு வரவில்லை. மாறாக, நிறுவனங்கள் பொறியியல் மற்றும் முதுகலை படித்தவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை அளித்தார்கள். சில மாதங்கள் கழித்து அவனுக்கு ஒரு பெங்களூரு நிறுவனத்தில் மென்பொருள் துறையில் வேலை கிடைத்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய குடும்பத்தாருடன் பகிர்வதற்காக அவன் திருச்சிக்குப் புறப்பட்டான். அதே நாளில் அவன் காதலியை சந்தித்து இந்த மகிழ்ச்சியான செய்தியை அவளுடன் பகிர்ந்தான். அவளும் மகிழ்ந்தாள்.

வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் அவளுடைய பெற்றோரிடம் சென்று பெண் கேட்டான். முதலில் அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவன் மீண்டும் பலமுறை முயற்சி செய்து அவர்களை சமாதான படுத்தியதால்ஒரு வழியாக அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. இருவரும் பெங்களூருக்கு குடி பெயர்ந்தார்கள். இனிய இல்லற வாழ்க்கை தொடங்கியது.

அவர்கள் திருமணமான புதிதில் அவனிடம் ஒரு இருசக்கர வாகனம் மட்டும் தான் இருந்தது. ஒவ்வொரு மாலை வேளையும் அவன் வேலை முடித்து திரும்பியதும்அவர்கள் இருவரும் அதில் ஒரு ஒரு சிறிய பயணம் செல்வார்கள். அதை அவள் மிகவும் ரசித்தாள். ஆனால் ஒரு நாள் ஒரு தெரு நாய் வெகு தூரம் துரத்தியதால் அன்று அவன் அவளிடம் கூடிய சீக்கிரத்திலேயே ஒரு கார் வாங்கி விடுவேன் என்று உறுதி அளித்தான்.

சில மாதங்களிலேயே அவளுக்கு பெங்களூருவின் காலநிலை பிடிக்கவில்லை. அவனுக்கும் பல காரணங்களால் பெங்களூரு பிடிக்கவில்லை. அதில் ஒன்று ஒவ்வொரு முறையும் காவேரி நதி நீர் பங்கீடு குறித்து பிரச்சினைகள் எழும்போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவார்களோ என்ற அச்ச உணர்வு. இரண்டாவது அவனுக்கு கன்னட மொழி தெரியாது அதை கற்கும் ஆர்வம் அவனுக்கு துளியும் இல்லை. மூன்றாவது பெங்களூரு பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் பெரு நகரம் என்றாலும் சில கன்னட அமைப்புகள் அவ்வப்போது நடத்தும் ஊர்வலங்கள், அதில் எழுப்பப்படும் கோஷங்கள், அவர்கள் பயன்படுத்தும் ஒரு மஞ்சள் நிற கொடி எப்போதும் அவனுக்கு ஒரு அச்ச உணர்வையே ஏற்படுத்தி இருந்தது. தனக்கு வேலை கொடுத்த மண் என்பதை அவன் என்றுமே மறந்ததில்லை. ஆனால் இதன் காரணங்களுக்காக அவர்கள் சென்னை செல்ல தீர்மானித்தார்கள். அவனுடைய நிறுவனத்தில் இடமாற்றம் கேட்ட பொழுது ஒரே மாதத்தில் அது அவனுக்கு வழங்கப்பட்டதால், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.

சில மாதங்கள் வாடகை வீட்டில் கழிந்தபின், ஒரு நாள் அவளை சென்னை டிரேட் சென்டரில் ஒரு கட்டுமான துறை பொருட்காட்சிக்கு அவன் கூட்டி சென்றான். அங்கிருந்த ஒரு நிறுவனத்தின் ப்ராஜெக்ட் அவளுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதையே புக் செய்ய தீர்மானித்தான். அவளுக்கு பிடித்தபடி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகில் மதுர வாயிலில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் ஒரு வீட்டை புக் செய்தான். அவள் வீட்டிற்கு விபு என்று பெயரிட்டாள்.

அங்கு குடி புகுந்த முதல் வருடமே அவள் கருவுற்றாள். அன்றே அவளிடம் உறுதி அளித்தது போலவே அவன் கார் வாங்கினான். அடுத்த ஆண்டு ஒரு பெண் குழந்தை அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இரு குடும்பத்தாரும் உற்றார் உறவினர் நண்பர்கள் என்று எல்லோரும் வந்து அவர்களை ஆசீர்வதித்தார்கள். அவருடைய தாய் அவளுடன் வந்து சில பல மாதங்கள் தங்கினாள். போதிய ஆண்டு இடைவெளி விட்டு இரண்டாவது குழந்தை. அவன் சென்னையிலேயே வேலை செய்தான், சில ஆண்டுகள் கழிந்தது. வீட்டுக் கடன் அடைந்து விட்டது, இரு குழந்தைகளும் சிறிது வளர்ந்து இருந்தார்கள்.

ஒரு நாள் அவள் அவனிடம் ஒரு நீண்ட தூர கார் பயணமாக காஞ்சிபுரம் வரை செல்லலாமா என்று கேட்டாள். அடுத்த நாள் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு காரை கிளப்பினான் விஜய் காஞ்சிபுரத்தை நோக்கி. வழியில் பலவற்றை பேசிக் கொண்டும், தமிழ் திரைப்பட பாடல் இசையை கேட்டுக்கொண்டும் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். செங்கல்பட்டை தாண்டி பல சிறிய கிராமங்களை கடந்து சென்ற பொழுது சாலையின் இரு மருங்கிலும் விவசாய நிலங்கள் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது. அப்படி போய்க் கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் ஒரு சிறிய சோலை போன்ற ஒரு இடத்தை அவள் கண்டாள். இந்த இடம் நல்லா இருக்கு இல்லப்பா? இங்கே காரை நிறுத்தி இறங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்து நான் பிளாஸ்க்ல டீ கொண்டு வந்து இருக்கேன் அதை சாப்பிட்டு போலாமா?, என்று கேட்டாள். அவள் கூறிய அந்த இடத்தில் காரை நிறுத்தி அவள் கொடுத்த டீ அருந்தி கொண்டிருந்த பொழுது, நான் சிறிது நடந்து வருகிறேன் என்று கூறியவள் நடக்க ஆரம்பிக்கிறாள். அந்தத் இடம் முழுவதும் கொன்றை மரங்களால் நிறைந்து இருக்கின்றன. தங்க நிற மஞ்சள் கம்பளம் விரித்தது போல் பூக்களால் நிறைந்திருந்தது. அதில் சிரித்தவாறு நடந்தவள் ஒரே ஒருமுறை திரும்பி கையை அசைத்து திரும்பவும் நடக்கத் தொடங்குகிறாள். திடீரென்று மறைந்து போகிறாள். அதைப் பார்த்த அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அவன் பயத்தின் உச்சத்தில் அவள் பேரை உச்சரித்து கத்தினான்.

அப்பா என்ன ஆச்சு? என்ன ஆச்சு? ஏதாவது கெட்ட கனவா? அம்மா வந்தாளா கனவுல? தண்ணி குடிச்சிட்டு படுங்க. என்ற சத்தம் வந்த பொழுது தான் அவன் நிதானத்துக்கு வந்தான். இரவு இரண்டு மணி. அவனுடைய குழந்தைகள் கலக்கத்துடன் அவனை பார்த்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு நேரம் அவன் கண்டதெல்லாம் கனவே. அவன் காதல் மனைவி மறைந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. அவள் எப்பொழுதாவது இப்படி அவன் கனவில் வருவாள். அவன் கனவில் கண்ட வாழ்க்கை அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக, அவன் செய்த எல்லா தவறுகளும் சரி செய்யப்பட்டு அவனுடைய வாழ்க்கை இவ்வாறு இருந்திருக்கலாம் என்று அவனே ஏங்கிய வாழ்க்கையை அன்று அவனுடைய மனம் கனவாக கொடுத்திருந்தது. படுக்கை அறையின் விளக்கை ஆன் செய்து சிறிது நீரை அருந்திவிட்டு படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்தான். அருகில் மேஜையில் அவளுடைய புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான். அவளை இனி என்று காண்பேனோ என்றது மனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *