அவள் கொண்டு வருவாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 3,994 
 
 

“சுசீலா, கிளம்பிட்டியா? இந்த ஊரில் ட்ராஃபிக் நிறைய இருக்கும். இன்னும் முன்னாடி கிளம்பணும், சரியா? நல்ல வேளை இங்கே மாற்றல் வாங்கினேன். நீயும் உடனே புறப்பட்டு என் கூட இந்த ஊருக்கு வந்தது உனக்கும் நல்லதா போச்சு. பணமும் சம்பாதிக்க முடியுது. இல்லையா?” என்று மனைவி சுசீலாவை கேட்டான் பத்ரி.

“எனக்கு எப்போதும் ஒரே நேரத்தில் கிளம்பணும்னு கிடையாது. ஒரு நாள் முன்னாடி சொல்லிட்டா நான் லேட்டா கூட கிளம்பலாம். ட்ராஃபிக் எல்லாம் இந்த நாலு நாளில் பழக்கம் ஆயிடுச்சு.ஆனால் இப்ப இங்க உட்கார்ந்து என்ன பண்றது? அதனால்தான் உங்க கூடவே கிளம்பறேன். சரி, லன்ச்க்கு என்ன வேணும், இப்ப சொல்றீங்களா இல்லை அப்புறம் ஃபோன் பண்றீங்களா?” என்று கேட்டாள் சுசீலா.

“நான் ஆஃபீஸ் போய் அங்கே நிலவரத்தை பாத்துட்டு ஃபோன் பண்றேன்.லஞ்ச் நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னாடி சொல்றேன். நீ எடுத்து வந்துடு. ஏதாவது பணம் வேணுமா, ஃபோன் பே செய்யட்டுமா?” பத்ரி கேட்டான் அவளை.

“வேண்டாம். வேணும்னா நான் கேக்கறேன் ” என்று சொல்ல இருவரும் கதவை பூட்டி விட்டு அவரவர் வண்டியை எடுத்து கிளம்பினார்கள்.

பத்ரிக்கு புதியதாக நல்ல வேலை கிடைத்ததும் இந்த நகரத்திற்கு வந்து நிறுவனத்தில் சேர்ந்தான். ஒரு வாரம் முன்னதாகவே அலுவலகம் சென்று முக்கியமான நபர்களை சந்தித்து விட்டு, திங்கள் முதல் தொடங்குகிறேன் என்று சொல்லி விட்டு வந்தவன், இன்று காலை கிளம்பிய போது இவ்வாறு பேசினார்கள்.

அலுவலகத்தின் வரவேற்பு அறையிலிருந்து அவனுடைய இருக்கை வரையில் எல்லோரும் பத்தியை வரவேற்று புன்சிரிப்புடன் நட்பு பாராட்டினார்கள். பிறகு அவன் அன்றைய பணிகளின் பட்டியல் போட்டு வைத்து ஒவ்வொன்றாக செய்யத் தொடங்கினான்.

“ஹை, அம்ரிஷ் ஹியர், உங்க பக்கத்து சீட். அந்த பக்கம் சுதாகர். அடுத்து இருப்பது இந்துமதி. இன்னிலேருந்து நாம் எல்லோரும் இந்த ப்ராஜெக்ட் டீம். ஸோ இது சம்மந்தப்பட்ட எல்லா கம்யூனிகேஷனும் இந்த ஈமெயில் வழியாதான் போகணும். வீக்லி மீட்டிங் நமக்குள் தனி. ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஷன் நமக்குள்தான்.

அப்புறம், லன்ச்க்கு கேன்டீனுக்கு போகணும்னா கூட சேர்ந்துதான் போவோம். இல்லையா சுதாகர்?” என்று கூறி சிரித்தான் அம்ரிஷ்.

“எல்லாம் ஓகே. ஆனால் லஞ்ச் எனக்கு என் மனைவி எடுத்து வருவாள்”. என்று புன்னகையுடன் சொன்னான் பத்ரி அவர்கள் அனைவருக்கும் கைகொடுத்தபடி.

“ஆச்சரியம், வைஃப் எடுத்து வருவார்களா, புதிய செய்தியா இருக்கே? லக்கி ஆள் சார் நீங்க”. என்றான் அம்ரிஷ்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவள் வேலையை அவள் செய்றாள். வேற ஒண்ணும் இல்லை. உங்களுக்கும் வேணுமா, கேளுங்க, நான் அவள் கிட்ட சொல்றேன், அதையும் எடுத்து வருவாள்” என்றான் பத்ரி.

“என்ன சார் சொல்றீங்க, எப்படி இப்படி ஒரு மனைவி? வரம் சார் வரம். சரி, இப்ப நாங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு மெனு கொடுத்தா முடியுமா?” என்று கேட்டான் சுதாகர்.

“அது ப்ராப்லம் இல்லை. ஆனால் அது மாதிரி தினமும் கேட்பீங்களா? அதையும் முன்கூட்டியே அவகிட்ட சொல்லிடறேன்”.என்று சொல்லி சிரித்தான்.

“சார், அப்படி தொந்தரவு கொடுக்க மாட்டோம். இன்னிக்கு மட்டும்” என்று சிரித்தபடி சுதாகர் சொல்லி விட்டு “ஓகே ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு என்ன வேணும், எனக்கு பட்டர் நான், கடாய் வெஜிடபிள்” என்று மற்றவர்களை பார்த்தான்.

இந்துமதி உடனே சிரித்துக்கொண்டே “எது வேண்டுமானாலும் கேளுன்னு அவர் சொல்லிட்டாருங்கறதுக்காக கண்டபடி கேட்பீங்களாய்யா, எனக்கு ஒரு வெஜ் பிரியாணி இருந்தா போதும்” என்றாள்.

அம்ரிஷ் “எனக்கும் அது போல வெஜ் பிரியாணி போதும். பத்ரி சார், உங்களுக்கு?” என்றான். “நான் சுதாகருக்கு கம்பெனி கொடுக்க அதையே எனக்கும் வேண்டும்னு சொல்லப் போறேன்.எத்தனை மணிக்கு வேண்டும்?” என்று பத்ரி கேட்டான்.

எல்லோரும் ஒண்ணரை மணிக்கு என்று கூறியதும் “ஒரு நிமிஷம்” என்று சொல்லி பத்ரி வெளியே போய் விட்டு வந்தான். “மனைவியிடம் சொல்லிட்டேன். எடுத்து வந்துடுவா” என்று சொல்லி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

மணி ஒண்ணேகால் ஆனது. அம்ரிஷ் “என்ன பத்ரி சார், வெளியே போகலாமா, வருவாங்களா உங்கள் மனைவி?” என்று கேட்டான்.

“கவலையே படாமல் இருங்க. நிச்சயம் வந்துடுவா. நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும்” என்றான் பத்ரி.

நால்வரும் வெளியே வந்து அலுவலக வாயில் மரத்தடியில் இருந்த கிரானைட் பெஞ்சில் அமர்ந்தனர். மணி ஒன்றரை ஆனபோது பைக்கை நிறுத்தி விட்டு ஒரு ஸ்விக்கி டெலிவரி வந்தபடி இருந்தது.

“என்ன சார், இன்னும் ஒருத்தரையும் காணுமே, ஸ்விக்கிதான் வருது” என்றான் அம்ரிஷ்.

ஸ்விக்கி நபர் நேராக பத்ரி நோக்கி வந்தவண்ணம் இருந்தார்.

“முதல் நாள் டூட்டிலயே சார் நிறைய மெனு சொன்னதால் கோபத்தில் ஸ்விக்கி மூலம் அனுப்பிட்டாங்க போல் இருக்கு” சுதாகர் சொன்னான் புன்னகையுடன்.

ஸ்விக்கி நபர் கொண்டு வந்த பொட்டலங்களை பெஞ்சில் வைத்து விட்டு, ஹெல்மெட்டை கழற்றினார்.

பிறகு பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து புன்சிரிப்புடன் “ஹலோ ஃப்ரெண்ட்ஸ், நான் சுசீலா, பத்ரியின் மனைவி. ஸ்விக்கியில் வேலை பார்க்கிறேன்” என்றாள்..

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *