அம்மாவின் பிறந்த நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2026
பார்வையிட்டோர்: 177 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

சுபாஷ் பேசிக்கொண்டிருந்தான் அவன் அம்மா நாராயணியிடம். ” இந்த முறை லீவு கிடைச்சுடும் அம்மா. ஏன்னா பார்டர்ல நல்லவிதமா செக்யூரிட்டி அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ணியாச்சு. சண்டையெல்லாம் ஓய்ந்து போய் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேலயே ஆயிடுச்சு. நான் மேஜர் கிட்ட பேசிட்டு லீவுக்கு மூணு நாள் முன்னாடியே அப்ளை பண்ணிட்டேன். அவருக்கும் தெரியும் ரொம்ப நாளா லீவு எடுக்காமல் இருக்கற ஆஃபீஸர்ஸ்ல நானும் ஒருத்தன்னு. அதனால் இப்ப இருக்குற நிலையில் லீவு கண்டிப்பா கிடைச்சுடும். நான் கிளம்பி வரேன் இன்னும் ரெண்டு நாளில. அடுத்த வாரம் வரப்போற உன் பிறந்த நாள் அன்னிக்கு நான் அங்கே உன் பக்கத்தில் இருப்பேன் பாரு.” என்று உற்சாகம் பொங்க பேசினான்.

” சந்தோஷம்டா இதைக் கேக்கறதுக்கே. அங்கே அமைதியா இருக்குன்னு சொல்றதைக் கேட்டாலே எனக்கு மன நிம்மதியா இருக்கு ராஜா. நல்ல விஷயம் சொல்லிட்டே இன்னிக்கு. இரு ஸ்வஸ்திகா கிட்ட தரேன். சர்வாவும் இங்கேதான் இருக்கான். நீ வரப்போறதை கேட்டா துள்ளி குதிப்பான். பேசு.” என்று சொல்லி மந்தாகினி, சுபாஷின் அம்மா, சுபாஷின் மனைவி ஸ்வஸ்திகாவிடம் கைபேசியைக் கொடுத்தாள்.

” ஹலோ, நல்லா இருக்கீங்களா கேப்டன் சார்! நிச்சயமா லீவு கிடைச்சிடும் இல்லையா? போன மாசம் பண்டிகை நேரத்தில் வர்றதா சொல்லிருந்தீங்க.ஆனால் திடீர்னு அங்கே எல்லைப்பகுதியில பயங்கரவாதிகளோட தாக்குதல் அதிகமானதால அதை சமாளிக்கறதுக்காக உங்கள் எல்லாரையும் இருக்க வச்சுட்டாங்க. அதனால பண்டிகை எங்களுக்கு சும்மா பேருக்குதான். நீங்க இங்கே இல்லாமல் என்னத்தை கொண்டாடறது? சர்வாவும் அதையேதான் சொல்வான் அடிக்கடி. அப்பா இருந்தாத்தான் ஜாலியா பண்டிகையெல்லாம் கொண்டாட முடியுதுன்னுட்டு. அவனுக்கு மட்டுமா, நீங்க என் பக்கத்தில் இங்கே வந்து இருக்கற நாளெல்லாம்தான் எனக்கு பண்டிகை, திருவிழா எல்லாம். ” என்று கண்களில் நீர் ததும்ப பேசினாள் ஸ்வஸ்திகா.

” டேய் ஸ்வாஸி, கவலைப்படாதே. இந்த முறை நான் கட்டாயம் வரேன். நீ சொன்ன மாதிரியே தினமும் நாம பண்டிகை போலவே கொண்டாடுவோமே, அதுல ஒண்ணும் தப்பே இல்லை. நாட்டின் எல்லை சூப்பர் பாதுகாப்பா இருக்கறதை நினைச்சு நாம் இன்னும் சந்தோஷமா கொண்டாடுவோம். நம்ம ஃபேமிலிக்கு அது இரட்டிப்பு மகிழ்ச்சி இல்லையா? நீ, அம்மா கொடுக்கற

சப்போர்ட், அப்பாவின் ஆசீர்வாதம், சர்வாவோட உற்சாகமான பேச்சு இதெல்லாம்தானே எனக்கு டானிக்! இந்த பட்டாலியன்ல ஒரு சிறந்த கேப்டன்னு பேர் வாங்கும்படியா என்னை நடத்தறதே அந்த மருந்துதான். இந்த தடவை நிச்சயம் வர்றேன். எழுதி வச்சுக்கோ. எங்கே நம்ப வாரிசு? கூப்பிடு அவனை.” என்றான் சுபாஷ்.

” எங்கேயா, உங்க கால்னு தெரிஞ்சவுடனே, என்னமோ விளையாடிட்டு இருந்தவன் எல்லாத்தையும் போட்டுட்டு ஓடிவந்துட்டான். சீக்கிரம் பேசி முடியம்மா, நான் அப்பாவோட பேசணும்னு ஒரே பிடியா இங்கேதான் நின்னுட்டு இருக்கான். ஃபோனைத்தரேன் பேசிக்கோங்க” என்று சொல்லி ஸ்வஸ்திகா முடிக்கும் முன் கைபேசியை அவசரமாகப் பிடுங்கி சர்வஜித் பேச ஆரம்பித்தான்.

” ஹலோ, அப்பா, நீங்க பாட்டிகிட்ட பேசிட்டு இருக்கும்போதே வந்துட்டேன் நான்.பாட்டியும் அம்மாவும் மாறி, மாறி பேசிட்டே இருந்தாங்களா, ஃபோனை எங்கிட்ட சீக்கிரம் கொடு, எனக்கு அப்பாவோட உடனே பேசணும்னு நான் தொல்லை செஞ்சேன்ப்பா. நீங்களே சொல்லுங்க, எங்கிட்டதானே முதல்ல ஃபோனை கொடுக்கணும், நான் சின்ன பையன்தானே! அப்பா, நீங்க வந்தவுடனே நாம எல்லாரும் சேர்ந்து ஒரு டூர் போகலாம்ப்பா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அப்படி ஒவ்வொரு வருஷமும் போறாங்கப்பா.ப்ளீஸ், ஓ.கே சொல்லுங்க அப்பா!” என்று சர்வா என்று அழைக்கப்படும் சர்வஜித் படபடவென பேசினான்.

சுபாஷ் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே ” டேய், சர்வா கண்ணா, எனக்கு நீ பையன், அது போல பாட்டிக்கு இந்த சுபாஷ் பையன் இல்லையா? அது மட்டும் இல்லாமல் பாட்டிக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருது. அதையெல்லாம் நான் உங்களோட சேர்ந்து அங்கே கொண்டாடணும் இல்லையா? அதனால பாட்டிகிட்ட பேசினேன். அப்புறமா உங்க அம்மா. உன்னையும், பாட்டியையும் யாரு பத்திரமா பாத்துக்கறாங்க, ஸ்வஸ்திகா அம்மா, இல்லையா? அதனால் அவங்க கிட்ட அடுத்தது பேசினேன். நீதான் என் செல்லப்பையனாச்சே, அங்கே வந்தா உன்னோடவேதான் இருக்கப் போறேன். உனக்கு என்ன டூர்தானே போகணும், நான் அங்கே வந்தவுடனே பாட்டி பிறந்த நாளை கொண்டாடிட்டு, அடுத்த வாரமே டூர் போகலாம்.ஓகே! உனக்கு என்ன வாங்கிட்டு வரணும்னு சொல்லு!” என்று கேட்டான்.

” எனக்கு நல்ல பென்சில் செட், பேனா செட்,கலர் க்ரேயான் அப்பறம் ஒரு கேப் இதெல்லாம் வாங்கிட்டு வாங்க. பாக்கி எல்லாம் இங்கே வந்து வாங்கலாம் அப்பா.நானும் உங்களோட மாலுக்கு வரும்போது, சரியா?” என்று சர்வா பதிலளித்தான்.

” ஓகே, நிச்சயம் வாங்கி வரேன். சரி இப்ப அம்மா கிட்ட கொடு. நீ போய் விளையாடு.” என்று சுபாஷ் அதன்பின் கொஞ்சநேரம் ஸ்வஸ்திகாவிடமும், அவன் அம்மா மந்தாகினியிடமும் பேசிவிட்டு தன் கூடாரத்திற்குள் சென்றான்.

“க்யா பாத் ஹை, செஹ்ரா பர் இத்னா குஷ் நஜர் தீக்தா?” (என்ன விஷயம், முகத்தில் இத்தனை சந்தோஷக்களை தெரிகிறது) சுபாஷ் போன்ற இன்னொரு டீம் கேப்டன் தல்ஜித் சிங் கேட்டார் இவனைப் பார்த்து.

சுபாஷ் சொன்னான். ” எனக்கு லீவு ஸாங்க்ஷன் ஆயிடுச்சு. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு கிளம்பிடுவேன். இருபத்தைந்து நாட்கள் கழித்து வருவேன். அதை இப்போதான் என் குடும்பத்தார் கிட்ட சொல்லிட்டு வரேன். அடுத்த வாரக் கடைசியில் அம்மாவுக்கு பிறந்த நாள் வருது. அவங்க பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அவங்க அருகிலேயே ரொம்ப நாள் கழிச்சு இருக்கப்போறேங்கறதை நினைச்சா மகிழ்ச்சியா இருக்கு.”

கேப்டன் தல்ஜித் சிங் மற்றும் சுபாஷ் டீம் அனைவரும் “ஹேய், ஹேப்பி நியூஸ்” என்று கைகளைத் தட்டி சந்தோஷமாக கத்தினார்கள். ” லெட் அஸ் செலபிரேட்” என்று சொல்லி ஆடவும், பாடவும் ஆரம்பித்தார்கள். சுபாஷும் அதில் உற்சாகம் பொங்க கலந்து கொண்டான்.

தஞ்சாவூர் அருகில் உள்ள குடிகாடு ஊரைச் சேர்ந்தவன் சுபாஷ். அவனுடைய தந்தை வாஞ்சிநாதன் ராணுவத்தில் கர்னல் பதவியில் பணி செய்து ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் அவர் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள சொந்த நிலத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்து வந்தார். தனக்கு சொந்தமான தோட்டத்தில் மா,தென்னை, வாழை, நெல்லி, பலா மற்றும் பலவகையான கறிகாய்களும் பயிர் செய்து முறையாக கவனித்து வந்தார். உடல் ஆரோக்கியத்திலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் மிகவும் கண்டிப்பான முறைகளைத் தவறாது கடைப்பிடித்து வந்தவர் கர்னல் வாஞ்சிநாதன். இருப்பினும் கடந்த ஒன்றரை வருடங்கள் முன்பு மாரடைப்பால் திடீரென காலமாகிவிட்டார்.

அவர் பணியில் இருந்த காலத்தில் அவரின் வீரச்சாதனைகளை அரசு பெரிய அளவில் பாராட்டி அவருக்கு விருது வழங்கினார்கள். வாஞ்சிநாதன் தன் ஒரே மகன் சுபாஷையும் அதேபோல் ராணுவத்தில் சேர்த்து அவன் நாட்டிற்காக வீரச் செயல்கள் செய்து, சாதனைகள் படைத்து, பெரிய பதவியில் அமரச் செய்ய வேண்டும் என்று மனதில் மிகவும் ஆசைப்பட்டார். அதை ஒரு நாள் சுபாஷ் கல்லூரி படிப்பை முடித்து வந்த நாளில் அவனிடம் வெளிப்படுத்த, அவனும் மறுப்பு ஏதும் கூறாமல், அவனுக்கே அந்த எண்ணம் இருந்ததைக்

கூறி ராணுவத்தில் சேரத்தயாரானான். அவன் அம்மாவிடம் இதைக் கூறியபோது, மந்தாகினி ” தாராளமாகச் செய். நாட்டிற்காகவும், நம் பூமிக்காகவும் இதை உன் அப்பாவுக்கு பின்னால் செய்றது எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா. என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு. கடவுள் உன்னை நிச்சயம் நல்ல நிலைக்கு கொண்டு செல்வார். நீ சின்ன குழந்தையா இருக்கறதிலிருந்தே தைரியமானவன். உனக்கு வெற்றி கட்டாயம் கிடைக்கும்” என்று மகிழ்ச்சி பொங்க அவன் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தாள்.

அதன்படியே சுபாஷ் ராணுவத்தில் சேர்ந்து இன்று கேப்டன் பதவி வரையில் வந்துள்ளான். இந்த இடைவெளியில் எல்லைச்சண்டைகள் பலவற்றை தன்னுடைய அணி உதவியுடன் எதிர் கொண்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறான். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவனால் நீண்ட விடுமுறையில் குடும்பத்தாரோடு சேர்ந்து இருக்கமுடியவில்லை. எல்லைப்புறங்களிலும், சில மாநிலங்களிலும் ராணுவத்தின் முக்கியமான உதவிகள் வேண்டியிருந்ததால் யாருக்கும் விடுப்பு தரவில்லை. அதில் சுபாஷும் ஒருவன். கடந்த வருடம் அம்மாவின் பிறந்த நாளுக்கு வருகிறேன் என்று கூறி, அப்போது ஏற்பட்ட நெருக்கமான சூழ்நிலையில் அவனுக்கு கொடுத்திருந்த விடுப்பு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் சற்று சுமுகமான சூழல் நிலவுவதால் அவனுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் இன்னும் சிலருக்கும் விடுப்பு எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் இன்று இதைக் கொண்டாடுகிறார்கள்.

அப்போது மேஜர் அமர்நாத் அங்கே வந்தார். அனைவரும் சத்தத்தை நிறுத்தி அமைதியாகி “ஸல்யூட் சார்” என்று வணக்கம் தெரிவித்தனர்.

மேஜர் அமர்நாத் ” டியர் ஜவானோங்,ஆஃப்டர் ய லாங் டைம் வீ ஆர் வெரி ஹேப்பி டு ஸீ தி பீஸ்ஃபுல் அட்மாஸ்ஃபியர் இன் திஸ் பார்டர். இதற்கு முக்கிய காரணம் நாம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்திய ராணுவம் எதனையும் எதிர்கொள்ளத் தயார் என்பதையும், நம் வலிமை எப்படி என்பதையும் எதிரிகளுக்கு நன்கு புரியவைத்துவிட்டோம் இந்த மாதத்தில். உங்களுடைய அயராத பணிகளுக்கும், துணிச்சலான செயல்களுக்கும் ராணுவத்தின் தலைமை பாராட்டு தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளனர் என்பதை உங்களிடம் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோரும் சந்தோஷமாக இந்த தருணத்தை கொண்டாடுங்கள். என்ஜாய் யுவர் ஈவினிங்.ஜெய் ஹிந்த்” என்று பேசினார்.

எல்லா வீரர்களும் ஒரு சேர “ஜெய் ஹிந்த்” என்று சத்தம் போட்டனர். மேஜர் சென்றபின் சுபாஷ் அருகே நிதீஷ் வந்தான். அவன் கேரளாவைச் சேர்ந்தவன்.” கேப்டன், எனக்கும் லீவு கிடைச்சாச்சு. நான் நாளைக்கு ஆஃப்டர் லஞ்ச்

கிளம்பறேன் சாரே” என்றான். ” தட்ஸ் குட். உன் மேரேஜ் விஷயம் எவ்வளவு தூரத்தில் இருக்குப்பா? இந்த முறை போகும் போது கல்யாணம் பண்ணிடுவியா? ” என்று சுபாஷ் அவனைக் கேட்டான்.

” ஆமாம் சாரே, அப்படித்தான் ப்ளான் செஞ்சிருக்கேன். போன முறை பெண் வீட்ல ஒரு வருஷம் டைம் கேட்டாங்க. வேற ஏதோ வீடு ரிப்பேர் வேலையெல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு. இப்பதான் ஒண்ணரை வருஷம் ஓடிப்போச்சே, அதனால் இந்த முறை மேரேஜ் நடந்துடும் சாரே.சார் எப்ப கிளம்பறீங்க?” என்று நிதீஷ் சுபாஷைக் கேட்டான்.

” நான் ரெண்டு நாளில கிளம்பறேன்ப்பா. ஆல் தி பெஸ்ட் அண்ட் மை அட்வான்ஸ் கங்க்ராஜுலேஷன்ஸ்” என்று கூறி சுபாஷ், நிதீஷ் கைபிடித்து குலுக்கினான்.

” தாங்க் யூ சாரே. ஞான் நிங்ஙளுக்கு இன்விடேஷன் அனுப்பி வைக்கும். சமயம் கிட்டினால் வாங்க சாரே.” என்று கூறி சிரித்தபடி நகர்ந்தான் நிதீஷ்.

அன்றிரவு அந்த வீரர்கள் அனைவரும் நிம்மதியாக உறங்கினர் வெகுநாட்கள் கழித்து.ஆனாலும் காவல் காத்துக் கொண்டும் ஒரு குழு விழித்திருந்தது.

மறுநாள் காலை உணவுக்குப் பின் எல்லோரும் மேஜர் அமர்நாத் உள்பட வெவ்வேறு விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். விடுமுறை கிடைத்த சிலர் தங்கள் உடைமைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் வீட்டிற்கு முகாமிலிருந்து சிறப்பு கைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தனர். எல்லைக் காவலில் இருக்கும்போதும், சண்டை போன்ற குழப்பங்கள் நடக்கும்போதும் வீரர்களுக்கு பாதுகாப்பு கருதி கைபேசி வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் அமைதி நிலவும் நேரம், முகாமிற்கு வந்த பின்னர் அங்குள்ள பிரத்யேக தொலைபேசி மூலமோ, அல்லது குறிப்பிட்ட கைபேசி மூலமோ குடும்பத்தாருடன் பேசிக் கொள்ளலாம்.

நிதீஷ் எப்போது மதிய உணவு நேரம் வரும் என்று காத்திருந்தான். அவன் மூன்று மணிக்கு கிளம்பிச் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தான்.சுபாஷ் மீண்டும் ஒரு முறை மந்தாகினி, ஸ்வஸ்திகா, சர்வஜித் இவர்களுடன் பேசிவிட்டு, தில்லியில் உள்ள தன் நண்பன் ரஞ்சித்துடன் பேசி அவன் நாளை மறுநாள் அங்கே வருவது பற்றியும் கூறினான். சுபாஷ் தில்லி சென்று ரஞ்சித் வீட்டில் தங்கி, தில்லியில் தனக்கு வேண்டியவைகளை வாங்கிக் கொண்டு பின்னர் ஊருக்குப் போக திட்டமிட்டு இருந்தான்.

மதியம் அனைவரும் உற்சாகம் பொங்க உணவு உண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் ஒரு அறிவிப்பு ஒலித்தது.

” அட்டென்ஷன், ஆப்பரேஷன் எக்ஸ், ஃபால் இன்” என்றும், சைரன் சத்தமும் கேட்டவுடன் அனைத்து வீரர்கள், கேப்டன்கள், மேஜர்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, ராணுவ உடைகள் அணிந்து, பரபரப்புடன் வெளியே வந்து அவர்களின் வரிசைப்படி அணிவகுத்து நின்றனர்.

எதிர்ப்பக்கத்திலிருந்து தொடர்ச்சியாக வந்த மூன்று ஜீப்களில் ஜெனரல், மேஜர் ஜெனரல், கர்னல் அனைவரும் இறங்கி வந்து, அங்கு நின்றிருந்த வீரர்கள் முன்னிருந்த ஒரு மேடான இடத்தில் நின்றபோது, எல்லா வீரர்களும் ” ஸல்யூட் சார்” என்று கூறி மரியாதை செலுத்தினர்.

அப்போது ஜெனரல், பிரிகேடியரை அழைத்து அவரிடம் ஏதோ கூறினார். பிரிகேடியர் மோஹித் திரிவேதி அதைக் காதில் வாங்கி, ஜெனரலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வீரர்கள் பக்கம் திரும்பி ” ஸாத்தியோன், தேர் இஸ் அன் எமர்ஜென்சி. இந்த நிகழ்வை நாம் யாரும் கணிக்க முடியாத அளவில் எதிரிகள் இன்று அதிகாலை நடத்தியுள்ளனர். ஆனால் இதை நாம் முறியடித்துக் காண்பித்து அவர்கள் இனி இது போன்ற எந்த திட்டத்துடனும் நம் தேசத்து எல்லைப் பகுதியில் கால் வைக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்ட வேண்டும். இப்போது நாம் ஈடுபடப்போகும் இந்த பாதுகாப்பு உத்திகள் முடியும் வரையில் யாரும் விடுமுறையில் செல்ல முடியாது. இந்த வாரம் யார் யாருக்கெல்லாம் விடுமுறையை அனுமதித்திருக்கிறோமோ அவைகள் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. இதன் விரிவான பகுதிகளை ஜெனரல் உங்களுக்கு கூறுவார்.ஜெய்ஹிந்த்”. என்று சொல்லி முடித்தார்.

ஜெனரல் கௌதம் சிங் கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார்.” ஹலோ ஜவான்ஸ், பஹதூர் ட்ரூப்பர்ஸ், எஸ், திஸ் மூமெண்ட் இஸ் அன் எக்ஸ்பெக்டட், பட் வீ வில் பீ மோர் விஜிலன்ட் இன் ஃப்யூச்சர். நம் ராணுவ சீருடை போன்று உடை அணிந்து எல்லைப் பகுதியில் உள்ள பத்து வீடுகளில் இன்று அதிகாலை புகுந்த தீவிரவாதிகள் அவர்களை மயங்கி விழச்செய்து சத்தமில்லாமல் குப்வாரா காட்டுப் பகுதிகளில் கடத்திச் சென்றுள்ளனர். ஒரு மணிநேரம் முன்பு வந்த வீடியோ மூலம் அவர்களிடம் பத்து முதியோர் தம்பதிகள், ஐந்து விதவைகள் சிக்கியிருக்கின்றனர் என்று தெரிய வந்தது. அவர்களைப் பணயமாக வைத்து நம்மிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். நாம் கைப்பற்றிய அவர்களின் ஆயுதக் கிடங்கு, மற்றும் அவர்களின் மூன்று கமாண்டர்கள் இவை அனைத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் பணயமாக இருக்கும் முதியோர்களைக் கொன்று வீசி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். ஐந்து நாட்கள் இதற்கு நேரம் கொடுத்துள்ளனர்.குப்வாரா பகுதியில் பனிமூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது இவ்வருடம். நம் எல்லைக் காட்டுக்குள்ளேயே அவர்கள் இருப்பதால் நாங்கள்

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் அனைவரும் ரகசியமான முறையில் குப்வாரா பகுதிக் காட்டுக்குள் சென்று அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, முடிந்தால் பிடித்து வர வேண்டும். அல்லது அழித்து விட வேண்டும். அந்த இருபத்தைந்து பேர்களையும் காப்பாற்ற வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் சாட்டிலைட் ஃபோன் மூலம் பேசிக் கொள்ளவும். ஆறு வீரர்கள் கொண்ட குழுக்களாக பிரிந்து சென்று தேடவும். ஒவ்வொருவருக்கும் ஃபோன் தரப்படும். வேறு எல்லாவிதமான நவீன கருவிகள் வழங்கப்படும். திஸ் ஆப்பரேஷன் ஸ்டார்ட்ஸ் நௌ. ஆல் தி பெஸ்ட். விக்டரி இஸ் அவர்ஸ். ஜெய் ஹிந்த்!” என்று உரத்த குரலில் கூறினார்.

வீரர்களும் திரும்ப உரத்த குரலில்” ஜெய் ஹிந்த் ” என்று பதிலளித்தார்கள். அவரவர் உடனே ஆறு பேர் குழுக்களாக மாறி வண்டிகளில் ஏறி உட்கார்ந்து வண்டி குப்வாரா பக்கம் விரைந்து கொண்டிருந்தது.

சுபாஷ் இருக்கும் அதே குழுவில் நிதீஷ் இருந்தான். மேஜர் அமர்நாத் முன்பு போலவே இந்த ஆறு பேருக்கு தலைமையாக இருந்தார்.நிதீஷ் மெல்லிய குரலில் சுபாஷிடம்”எந்தா சாரே, நம்மட ப்ளான் இப்படி ஆகிப்போச்சே! இதை நாம் குடும்பத்துக்கு ஃபோன் செய்து சொல்லக்கூட முடியாதே! எல்லாம் அந்த தீவிரவாதிகள்தான் காரணம் சாரே!அத்தர ஆளுகளையும் கொன்னு களையும் ஞான்!” என்று கோபத்துடன் பேசினான்.

” கரெக்ட் நிதீஷ். இந்த கோபத்தை அங்கே காண்பி. அந்த வெறியோடு இருந்தா அவனுகளைப் பிடிச்சு அழிச்சுடலாம். இப்போ நமக்கு நாடு முக்கியம்.அதைவிட முக்கியம் அவங்க கிட்ட மாட்டியிருக்கற முதியோர்களை காப்பாத்தறதுதான்.வேற எதுவும் இல்லை” என்றான் சுபாஷ்.

” கரெக்ட் சாரே, அதுதான் முக்கியம்.” என்று கூறி கட்டை விரலை உயர்த்தி காட்டினான் நிதீஷ்.ஒரு வழியாக வண்டிகள் குப்வாரா பகுதியில் ஒரு மறைவான இடத்திற்கு வந்து சேர்ந்தன.எல்லா வீரர்களும் இறங்கி குழுவாக நின்று, மேஜர், கேப்டன் இவர்களின் வழிகாட்டுதல் படி பிரிந்து வெவ்வேறு திசைகளில் காட்டிற்குள் நுழைந்தனர். பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்ததால் ஒருவரை ஒருவர் பார்ப்பதே சிரமமாக இருந்தது.

மேஜர் அமர்நாத், சுபாஷ், நிதீஷ்,யோகீந்தர்,மணீந்தர்,ஹர்தீப் ஆகியோர் வடமேற்கு திசையில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றனர். அதே போல் மற்ற குழுக்களும் வெவ்வேறு திசைகளில் காட்டிற்குள் நுழைந்தனர். இருளடைந்த இடங்களில் குறிப்பிட்ட தூரத்தில் சென்றதும் அனைவரும் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி அந்தந்த குழுக்களின் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொண்டனர்.எந்தக்குழு எந்த

திசையில் உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டு இருள் நோக்கிக் கண்ணாடி அணிந்து பணிகளைத் தொடர்ந்தனர்.

” அவர்கள் ஒரு வேன் கொண்டு வந்து முதியோர்களை ஏற்றிச் சென்று, காட்டின் உட்பகுதிக்குள் ஜீப் கார்கள் மூலம் சென்றிருப்பார்கள் என்று ஊகிக்கிறோம்” என்று கர்னல் சொல்லி இருந்தார். அதனால் அந்த தடயங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்று இரு வீரர்கள் பார்த்தவாறு மெதுவாக நகர்ந்தனர். பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் தரைகளில் சுவடுகளை கண்டறிவது கடினமாக இருந்தது.

நேரம் ஆக, ஆக எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே பனிக்காற்று பனிக்கட்டிகளுடன் அதிவேகமாக வீச ஆரம்பித்தது. மலைப்பாதை ஏற்றமும் இறக்கமும் கொண்டதாக இருந்தது. அப்போது சுபாஷ் கண்ணில் கொஞ்ச தூரத்தில் ஏதோ தென்பட்டது போலிருந்தது. அவன் ” மேஜர் சாப், அங்கே அந்த மரத்தின் அருகே பாருங்க. ஏதோ கேப் மாதிரி இருக்கு” என்று சொல்லி அங்கு ஓடினான். ஆம்! அது குளிருக்கு அணியும் தொப்பிதான். அதை ஆராய்ந்த போது மிகவும் புதிதாக இருந்தது. மேஜர், சுபாஷ் மற்றவர்களுக்கும், தீவிரவாதிகள் இது வழியேதான் சென்றிருக்கக்கூடும் என்ற நம்பிக்கை வலுவானது.

மேலும் நடந்தனர் காட்டிற்குள். யோகீந்தரும், நிதீஷும் ஒரு பொருளை எடுத்துக் காண்பித்தனர். அது மூச்சுத்திணறல் அல்லது மூச்சிறைப்புக்கு உபயோகப்படுத்தும் மூச்சிழுப்புக்கருவி வாங்கிய சிறிய அட்டைப் பெட்டி. மிகவும் புதிதாக இருந்தது. மேஜர் கூறினார்.” அந்த முதியோர்களில் யாருக்கோ அல்லது தீவிரவாதிகளில் எவனுக்கோ இந்த தொல்லை இருப்பதால் இதை எடுத்துப் போயிருக்கிறார்கள்.இதே வழியில் கவனமாக பார்த்துக் கொண்டே போகலாம் ” என்று சொல்ல எல்லோரும் நல்ல இடை வெளி விட்டு ஆனால் ஒரே கோட்டில் நடந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது திடீரென பனிப் புயல் போல வீசி அனைவரையும் நிலைகுலையச் செய்தது. ஒரு அடி மேல் எடுத்து வைக்கவும் முடியவில்லை. சக வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. மற்ற குழுக்கள் செல்லும் பாதைகளிலும் பனியின் தாக்கம் இருந்தாலும் இந்த வழியில் அடித்த புயல் போல அடிக்கவில்லை. சுபாஷ், மேஜர் அமர்நாத், நிதீஷ் ஒரு பக்கம் இழுத்துச் செல்லப்பட்டனர். அடுத்த மூவரும் வேறு பக்கம் தள்ளப் பட்டு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள தடுமாறினர்.

அன்றைய பொழுது போய்விட்டது. அடுத்த நாள் மதியம் வரையில் நிலைமை அப்படியே இருந்தது. பின்னர் ஓரிடத்தில் பெரிய புதர் அடியில்

தள்ளப்பட்டிருந்த மணீந்தர் மெள்ள எழுந்து சுற்றும்முற்றும் பார்த்தபோது சற்றுத் தொலைவில் இரு மரங்களுக்கிடையே சாய்ந்து உட்கார்ந்திருந்த வீரரை அருகில் போய் பார்த்து அது யோகீந்தர் என்று தெரிந்து இருவரும் சேர்ந்து மற்றவரைத் தேட முயற்சி செய்தார்கள். புயலின் உக்கிரம் குறைந்திருந்ததால் அவர்களால் நடக்க முடிந்தது.இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய பள்ளத்தில் விழுந்திருந்த ஹர்தீப்பை கண்டு அவனைக் கைப்பிடித்துத்தூக்கி மேலே ஏற்றி மூவரும் கயிற்றால் இணைத்து சேர்ந்து நடந்தனர். அன்றும் மறுநாளும் தேடித் தேடி மற்ற மூவரும் எங்கு சென்றார்கள் என்பது அறியாமல் தவித்தபடி இருந்தாலும், தீவிரவாதிகளைத் தேடுவதில் முனைப்பு காட்டி நடந்தார்கள்.

நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் எந்த ஒரு தகவலும் ஜெனரலுக்கோ மற்ற உயர் அதிகாரிகளுக்கோ வரவில்லை. ஐந்தாம் நாளில் ஐந்து குழுக்களிடமிருந்தும் ‘இன்னும் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.ஆனாலும் தொடர்ந்து தேடி வருகிறோம் ‘ என்ற தகவல் மட்டுமே வந்தது. ஆறாவது குழுவான மேஜர் அமர்நாத் குழுவிலிருந்து மணீந்தர் மூலம் தகவல் இவ்வாறாக வந்தது. ” பனிப்புயலின் தாக்கத்தால், தனித்தனியே பிரித்துத் தள்ளப்பட்டு மூவர் இப்போது வரை சேர்ந்து பணிகளைச் செய்கிறோம். ஆனால் மேஜர் அமர்நாத், சுபாஷ், நிதீஷ் இவர்கள் எங்கே சென்றார்கள் என்பது இரண்டு நாட்களாகத் தெரியவில்லை. ஏதேனும் தகவல் அறியும்போது மீண்டும் அழைக்கிறோம்” என்று.


இதே நாட்களில் மந்தாகினி, ஸ்வஸ்திகா, சர்வஜித் இவர்கள் மூவரும் ‘ ஏன் சுபாஷ் சொன்னபடி வரவில்லை. எந்த தொலைபேசி அழைப்பும் இல்லை ‘ என்று கவலையுடன் இருந்தார்கள். இதற்கு முன்பும் இப்படி ஆகியிருக்கிறது மூன்று நான்கு முறை. வருவேன் என்று சொல்லும் சுபாஷ் திடீரென வரும் அவசர ராணுவப் பணிகளால் வரமுடியாமல் போய் இரண்டு வாரங்கள் கழித்து அவைகள் பற்றிச் சொல்வான். ஆனால் இம்முறை எல்லை அமைதியாக உள்ளது என்ற தகவல்கள் எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் சுபாஷிடமிருந்து எதுவும் செய்தி வரவில்லையே என்று பதட்டத்துடன் இருந்தார்கள்.

கோட்டயம் அருகே உள்ள ஒரு ஊரில் நிதீஷ் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்கள் அவன் வராமல் போகவே மிகவும் ஆழ்ந்த கவலையில் இருந்தார்கள். பெண் வீட்டார் பிரார்த்தனை செய்து வந்தார்கள்.


மூன்று நாட்கள் கழித்து ஜெனரலுக்கு மேஜர் அமர்நாத்திடமிருந்து செயற்கைக் கோள் தொலைபேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது.பதினைந்து நிமிடங்கள் ஜெனரல் பேசிய பின், முக மலர்ச்சியுடன் எல்லோரையும் பார்த்து ” நம் வீரர்கள் அனைவரும் வெற்றியுடன் திரும்புகின்றனர். நாம் குப்வாரா காட்டின் முகப்புப் பகுதியில் போய் அவர்களை அழைத்து வருவோம். தனியாக ஒரு வேன் எடுத்துச் சென்று அவர்கள் பாதுகாத்து அழைத்து வரும் முதியோர்களையும் கூட்டி வருவோம்.கெட் ரெடி நௌ” என்றார்.

அதேபோல் காட்டின் முகப்புப் பகுதிக்கு மதிய வேளையில் வந்தனர். எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த போது காட்டின் பல்வேறு திசைகளிலிருந்தும் வீரர்கள் குழுக்களும் அவர்களுடன் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட முதியோர்களும், அதன் பின்னால் மேஜர் அமர்நாத், சுபாஷ் மற்றும் நிதீஷ் மூவரும் காயமுற்ற நிலையில் சற்று மெதுவாக நடந்து வந்தனர்.அதற்குப் பின்னால் மணீந்தர், ஹர்தீப் மற்றும் சில வீரர்கள் ஆறு தீவிரவாதிகளின் உடல்களை இழுத்து வந்தனர். ” ஜெய் ஹிந்த் ” எல்லோரும் ஒரு சேர கோஷமிட்டனர்.

எல்லோரும் ஒரு இடத்தில் வந்து சேர்ந்த பின்னர் ஜெனரல் மேஜர் அமர்நாத்திடம்” மேஜர் நீங்களே சொல்லுங்கள்” என்றார்.

மேஜர் அமர்நாத்” நாங்கள் ஆறு பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து வெவ்வேறு திசைகளில் காட்டிற்குள் சென்று இந்த தீவிரவாதிகளைத் தேடும்போது கடுமையான பனிப்புயல் வீசி எங்கள் அனைவரையும் வெவ்வேறு பகுதிகளில் பிரித்து விட்டது.மற்ற குழுக்கள் நடந்து போன பகுதிகளில் இந்த பனிப்புயல் சற்று குறைவாக இருக்கவே அவர்கள் சேர்ந்தே இருந்தார்கள். ஆனால் என்னையும், சுபாஷ், நிதீஷ் இவர்களையும் காற்றின் வேகம் இழுத்துச் சென்று ஒரு சிறிய ஓடைப்பகுதியில் தள்ளி விட்டது. மணீந்தர், யோகீந்தர் மற்றும் ஹர்தீப் இந்த மூவரையும் வேறு பக்கம் தள்ளிச் சென்றது.

நாங்கள் சில மணிநேரம் சென்றபின் இருட்டில் விழித்த போது கொஞ்ச தூரத்தில் இரண்டு முகாம் போலவும், சிறிய விளக்கு வெளிச்சமும் லேசாகத் தெரிந்தது. நாங்கள் பதுங்கி பதுங்கி சற்று அருகில் சென்ற பின் அவர்கள்தான் அந்த தீவிரவாதிகள் என்பதை புரிந்து கொண்டோம். அன்று இரவே தனியாக வடக்குப் பக்கம் இருந்த தீவிரவாதியை சுபாஷ் தந்திரமாகக் கொன்று விட்டு அவன் உடையை மாட்டிக் கொண்டு அவனுடைய நடைபேசியை எடுத்து மற்றவர்களின் நடவடிக்கைகளை அறிந்தான். அவர்கள் சாப்பிடுவதற்கு ஒவ்வொருவராகப் போவதை கடைப்பிடித்தனர். வடக்கு பக்கம் தீவிரவாதி போல் நின்றிருந்த சுபாஷ் அதே போல் தனியாக சாப்பிட செல்லும் போது

அங்குள்ள முதியோர்களிடம் மிகவும் ரகசியமாக பேசிவிட்டு அமைதியாக இருக்கச் சொல்லி வந்து விட்டான்.

இப்படி மறுநாள் நாங்கள் மூவரும் சேர்ந்து இருவரை சத்தமில்லாமல் வீழ்த்தினோம். அதற்கு இந்த பனிப்புயல் சூழ்நிலை மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் ஒருவனுக்கு மூச்சிழுப்பு பிரச்னை இருப்பதைக் கவனித்து அவனை எளிதாக முடித்தோம். அவர்களிடம் இருந்த உயர் தொழில்நுட்ப கருவிகளைக் கைப்பற்றினோம். நான்காவது ஐந்தாவது தீவிரவாதிகளைக் கையாள்வது மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தது. நாங்கள் அங்கேயே வந்து மூவரை கொன்று விட்டோம் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியாமல் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்து விட்டார்கள். இதனிடையே நாங்கள் இருவர்தான் இருக்கிறோம் என்றெண்ணி அவர்கள் உடையில் இருந்த சுபாஷை முகாமிற்குள் இருக்கும் கடைசி தீவிரவாதிக்கு உதவுவதற்காக உள்ளே அனுப்பியது எங்களுக்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது. நானும் நிதீஷும் இந்த இருவரையும் ஒரு வழியாக தாக்கி முடித்து விட்ட பின் உள்ளே சென்ற போது சுபாஷ் அந்த கடைசி தீவிரவாதிகளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். தீவிரவாதி இரண்டு பெண்மணிகளைக் கீழே தள்ளி விட்டு அவர்கள் மேல் காலை வைத்து நின்று கொண்டு சுபாஷை சரணடையச் சொல்லி மிரட்டியும் இல்லாவிட்டால் அப்பெண்மணிகளை சுட்டுவிடுவேன் என்றும் சத்தம் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் நுழைந்தோம். அவன் எங்களைத் திரும்பிப் பார்க்க முற்பட்ட போது சுபாஷ் அவனைச் சுட்டு விட்டான். இப்படி ஆறு பேரையும் வீழ்த்தி புயல் அடங்கட்டும் எனக் காத்திருந்தோம். அதன் பின்னர் ஜெனரலுக்கு ஃபோன் செய்து விட்டு இவர்களை மெதுவாக இங்கே அழைத்து வந்தோம்.ஜெய் ஹிந்த் ” என்று கூறி முடித்தார். கைத்தட்டல்கள் அடங்க வெகு நேரமானது.

இவைகள் நடந்த அடுத்த நாளில், ஸ்ரீநகரில் தீவிரவாதிகளிடம் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட முதியோர்களை மேடையில் உட்கார வைத்து ராணுவ வீரர்கள் ஒரு விழா நடத்தினார்கள். அப்போது அவர்களை மீட்டு வந்த அந்தக் குழுவினரை ஒவ்வொருவராக அழைத்து ஜெனரல் பரிசுகள் அளித்தார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. நாட்டின் மக்கள் மட்டுமல்ல, நிதீஷ் வீட்டிலும், மந்தாகினி, ஸ்வஸ்திகா மற்றும் சர்வஜித் இவர்களும் பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தனர். அன்று மந்தாகினியின் பிறந்த நாள்.

இந்த விழா முடியும் நேரத்தில், சுபாஷ் மேஜரிடம் ஏதோ கூற அவரும் சம்மதம் தெரிவித்தார். சற்று நேரத்தில் மந்தாகினிக்கு சுபாஷிடம் இருந்து காணொளி அழைப்பு வந்தது. மந்தாகினி ” என் பிறந்த நாள் இன்று.நீ அருகில்

இல்லாதபோது குறையாகத்தான் இருக்கு. ஆனால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கு உன் வீரச் செயல் பார்த்து” என்றாள்.

” அம்மா, ஹேப்பி பர்த்டே டு யூ. நான் அங்கே வந்திருந்தேன்னா இன்னிக்கு நான் மட்டுந்தான் உன் பக்கத்தில இருந்திருப்பேன். ஆனால் இப்ப பாரு உன் வயதுக் காரங்க எத்தனை பேர் சந்தோஷமாவும், திருப்தியான மனசோடயும் இருக்காங்க பாரு. அதையும் தவிர இன்னிக்கு இந்த நாடே என்ன மகிழ்ச்சியா இருக்கு பாரும்மா.” என்று கூறி அந்த கைபேசியை முதியோர்கள், மேஜர் மற்றும் சக ராணுவ வீரர்களிடம் காண்பிக்க, அத்தனை பேரும் மந்தாகினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு, அவளின் மகன் செய்த அரிய செயல் பற்றி மிகப் பெருமையாக அவளிடமும், ஸ்வஸ்திகாவிடமும் பேசினர். மந்தாகினிக்கு சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. ஸ்வஸ்திகாவும் அதே நிலையில் இருந்தாள். தன் அப்பாவைப் பார்த்து சர்வஜித் ராணுவ பாணியில் வணக்கம் வைத்தான்.

அப்போது சுபாஷ் அம்மாவிடம்” அம்மா, இது எவ்வளவு அருமையான பிறந்த நாள் கொண்டாட்டம் பாரம்மா. இன்றைக்கு நீ மட்டும் எனக்கு அம்மாவாக வாழ்த்து சொல்லும்போது, இந்த வயசானவங்க ஒவ்வொருத்தரும் தன் மகனாக என்னை பாவித்து வாழ்த்துறாங்க அம்மா. இவ்வளவு பேரோட வாழ்த்துகளையும் ஒரே நாளில பாக்கற உன் மகன் பாக்யசாலி இல்லையா அம்மா? உன்னோட இந்த பிறந்த நாள் எனக்கு மட்டுமில்ல, நம் குடும்பத்தில யாருக்கும் மறக்கவே முடியாத பிறந்த நாள் அம்மா! நான் சீக்கிரமே உன்னைப் பார்க்க வரேன்!”. என்று கண்ணீருடன் பேசி முடித்தான். “அது சரிதான்டா சுபாஷ். உனக்கு என் ஆசீர்வாதங்கள்.” என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தாள்.மற்ற அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தாள். மந்தாகினியின் பிறந்த நாள் இனிதாக முடிந்தது.

(தன் உயிரைப் பணயம் வைத்து நாட்டையும் மக்களையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கு இக்கதை சமர்ப்பணம்)

.

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *