ரூபாக்களின் மகாநாடு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 120 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஆறறிவு படைத்த மனிதனுக்குத்தான் இக் காலத்தில் ஆபத்தும் கலக்கமும் அதிகமென்றும் மற்றைய உயிர்ப் பொருள்களுக்கு ஆபத்தும் கலக்கமும் மிகவும் குறை வென்றும் உயிரில்லாத பொருள்களுக்குச் சிறிதும் கலக்கமே இல்லை என்றும் உலகம் சொல்லி வருகின்றது. அவற் றுள்ளும் “காசு” எனப் பேர்பெற்ற எங்களுக்கிருந்த மதிப்புக் கோர் அளவில்லை. எங்களுக்குச் சாதி – மத நிற வித்தியாசமே கிடையாது. எங்கும் எப்போதும் எமக்கு மதிப்புத்தான். ஆயினும் இப்போது சிலகாலமாக நமக்குஞ் சனியன் திசை பிடித்துவிட்டது. ஆரோ சிலர் களவாக நம்முட் சிலரைப் படைக்கிறார்களாம். அதனால் நாம் படும் பாடு உலகில் நவிலும் பஞ்சு தான் படுமோ! படாது !! படாது !!! ஆகையால் இக் கஷ்டத்தினின்றும் நீங்க நாம் செய்யத்தக்கது யாது என்று யோசித்தற்கே இம் மகாநாடு கூட்டினோம் என்று தலைவர் ஸ்ரீமான் ஒரு ரூபா எழுந்து கூறிவிட்டு விரும்புவோர் தம் அபிப்பிராயங்களை வெளியிடலாம்” என்று உட்கார்ந்தார். 

அப்போது மிஸ்ரர் அரை ரூபா எழுந்து கூறியவை:-“நம் முடைய நாட்டிலே யாரேனும் ஒருத்தி சோரமாகப் பிள்ளைப் பெற்றால் அப்பிள்ளையின் பிதாவை அறிதற்குப் பெரு முயற்சி செய்யப்படும். பிதாவைக் கண்டு கொள்ளாவிட்டால் மாதாமூலம் பதிவுசெய்தல் நடைபெறும். அம் மாதாவுக்கே ஊரில் அவமதிப்பு அதிகமாகும். பிள்ளைக்கும் ஓரளவில் மிகச் சிறிய அவமானம் ஏற்படுவதுண்டு தான். இந்த அவமதிப்பும் சிலகாலத்திற்கு மாத்திரம் நிற்கும். ஆனால் நம்முள் சிலர் சோரமாகப் பிறந்தார்களாம். அதற்காக அந்தச் சிலரின் தாயைக் கண்டுபிடித்து அவமானமோ அபராதமோ- கொடுப்பதை விட்டு எங்களுக்குச் செய்யும் ஆய்க்கினையோ என்றால் சொல்ல முடியாததாகும். வம்புப் பிள்ளைகளோ நல்ல பிள்ளைகளோ என்று எங்களை அறிவதற்காகச் சிலர் எங்களைத் தூக்கி நிலத்தில் அடிக்கிறார்கள். சிலர் சீமெந்து இட்ட தரையில் உரத்துப் போடுகிறார்கள். நாங்கள் அப்பப்பா எமது சந்து நொந்தது! என்று வருந்துகிறோம். சில பாதகர்கள் 5-6 முறையும் எங்களைப் புரட்டிப் புரட்டி எறிகிறார்கள். 

“நல்ல வேளையாக எங்களுக்குத் தலை படைக்கப் படாதபடி யால் உடைவில்லாமல் தப்பிக் கொள்ளுகிறோம். இவ்விதம் ஒருவர் வீட்டில் மாத்திரமா நடக்கின்றது! இல்லை! இல்லை. நாங்கள் எங்கெங்கே போகிறோமோ அங்கங்கே எல்லாம் இம் மாதிரி உபசரிப்புத்தான் – வரவேற்புத்தான் – நடக்கின்றது. ஆகையால் இவற்றைப் பற்றி அரசாட்சியாருக்கு ஒரு மனுச் செய்தல் வேண்டும்” என்று சொற்பொழிவு செய்தபின் இருந்தது. அப்பால் திருவாளர் கால் ரூபா பெலத்த கரகோஷத் தினிடையே எழுந்து கெம்பீரமாகக் கூறியவை பின்வருமாறு:- 

“அவைத் தலைவரே! அவையோர்களே! நான் தனித் தமிழில் விரிவுரை நிகழ்த்தும் பேராற்றல் உடையேன். ஆயினும் இங்கு குழுமிய நீவிர் எல்லீரும் எளிதில் எனது சொற்பொழிவை விளங்கும் பொருட்டு வடமொழிக் கலப்புடன் சிறிது பேச விரும்புகின்றேன்” 

எங்களுக்குள்ளே “செல்லாத காசு” – “செல்லும் காசு” என்று இரு பிரிவுண்டு. இந்த இரண்டு பிரிவில், யாருக்குத் துயரம் வந்தாலும் நாம் கவலைப்படவேண்டியது தான். இந்த விஷயத்தில் வகுப்புவாதம் பாராட்டுவது நல்லதல்ல. இந்த வகுப்புவாதத்தைக் கிளப்பக்கூடிய வகையில் தோழர் அரைரூபா கூறியது எனக்குப் பிடிக்கவேயில்லை. அஃதிருக்க நான்பட்ட பாட்டைச் சொல்கிறேன் கேளுங்கள். ஒருதினம் ஒரு மனிதன் என்னை மீன்காரச் சின்னாத்தையிடம் சன நெருக்கடியிற் கொடுத்துவிட்டு மீன் வாங்கச் சென்றான். மனுஷியும் என்னை அந்த நேரம் பார்க்கவில்லை. அடுத்த நாள் என்னைப் புரட்டிப் பார்த்தது. 10, 15 முறை நிலத்திலெறிந்துவிட்டு “ஐயோ முனியடிப்பான் சுவாதங் குத்துவான் – கடுவன்களைத் தின்னி – அட்டைக் கிடங்கில் விழுவான்…” என்றெல்லாம் அந்த மனிதனுக்கு வாழ்த்துக் கூறிவிட்டுக் கொட்டைப் பெட்டிக்குள் என்னை வைத்துக்கொண்டது. அந்த மறியல் வீட்டில் 8, 10 செதிள் ஆடையை உடுத்துக் கொண்டு 4, 5 மாதம் கிடந்தேன். காற்றும் இல்லை. வெளிச்சமும் இல்லை. நாற்றமுமதிகம். கடவுளே! எனக்கு இந்த மறியல் எப்போது நீங்கும் என்று தெய்வத்தை வேண்டினேன். 

அந்த மனுஷி மீன் விற்பதற்காக கமுகடிப் பிள்ளையார் கோவிலடி றோட்டாலே போவது வழக்கம். நாள்தோறும் ஆலயத்தைக் கிட்டிய பிறகு மீன் பெட்டியைத் தலையிலிருந்து உயர்த்தி ஏதோ முணுமுணுத்துக்கொண்டு போவதை நான் கேட்டிருந்தேன். இப்படியாக ஒரு 25 நாட்கள் போனபின் என்னை வெளியில் எடுத்தா, எனக்குப் பெருஞ் சந்தோஷம். மறியல் தொலைந்தது என்று மகிழ்ந்தேன். அந்தோ! அந்த மகிழ்ச்சி நீரிற் குமிழியாயிற்று! ஏன் தெரியுமா? என்னை எடுத்து மேற்படி கோயில் உண்டியல் பெட்டிக்குள் மனுஷி போட்டுவிட்டது. உள்ளே போனேன். என்மீது ஒட்டிக்கிடந்த செதிள்களைக் கண்டதும் மற்றக் காசுகள் சாதிபேதம் பார்க்கத் தொடங்கின. நான் முதலில் மறியல் வீட்டில் சாதிபேதம் உண்டா என்று கேட்டேன். பின் இறைவன் முன்னிலையில் சாதி வித்தியாசம் உண்டா என்றேன். அப்பால் உன்னுடைய நாட்டில் சாதிபேதம் இல்லை என்றேன். அங்கே இருந்தவர்கள் யாவரும் கறுத்தவர்கள். (1 சதம் 1/2 சதங்கள் ) நான்தான் ஒருவன் வெள்ளையன்! அஞ்சவேயில்லை! இப்படி ஒரு 10 மாதங் கிடந்தேன். கடைசியாக ஒரு நாள் குமிளி மிதியடியில் வந்த ஒருவர் எங்கள் சிறைவாயிலைத் திறந்தார். நான் மாத்திரம் “பளீச்” என்று மின்னினேன். அவர் அவாவுடனே எடுத்தார் கையில்! பார்த்தார் மீன் செதிள்களை! எறிந்தார் என்னைத் தூரத்தில்! அருவருத்தார் புறுபுறுத்தார்! என்றாலும் 25 சத ஆசை விடவில்லை. சிறுதடியொன்றால் என்னை ஊன்றிப் பிடித்துச் செதிளைத் தட்டிக் கழுவினார். பின் எடுத்தார் கரத்தில். செல்லாக்காசு ஆனேன். அவருக்குக் கோபமும் துக்கமும் ஏற்பட்டது. அங்கு நின்று ஒருவாறு தப்பிச் “சுயா” விடம் போயினேன். அங்கும் சிலகாலங் கிடந்து தவித்துப் பின் பஸ் கொண்டக்டர் வாயிலாக ஆகாயக் கப்பற்சாரதியிடம் போய்ச்சேர்ந்தேன். அங்கும் நல்ல உல்லாசமாக வாழ்ந்து வருகையில் என்னைத் தேடிப் பரிசுபெறக் கருதிய அநு சுயாவிடம் அகப்பட்டேன். (இவற்றைப் பற்றிச் சிலமாதங் களுக்கு முன் பத்திரிகையில் வெளிவந்ததை நீங்கள் அறிவீர்கள்) அங்கிருந்து தான் இன்று இங்கு வந்தேன். ஆதலால் இனி அரைக்கால் ரூபாக்களை எல்லாம் அரசாட்சி யார் தொலைத்து விட்டு முக்கால் ரூபா நாணயத்தையோ அல்லது கடதாசியையோ அச்சடித்தல் வேண்டுமென்று பிரேரிக்கின்றேன்” என்றது. பிரேரணைச் சபையின் அங்கீகாரம் பெற்றவுடன் மகாநாடு குலைந்தது. 

– ஈழகேசரி, 03.04.1938.

– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.

அல்வாயூர் மு.செல்லையா மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *