கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 93 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுவிசேஷம்

சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை யும் போதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. மத் தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால் வரும் தனித்தனியே எழுதின நான்கு சுவிசேஷங் கள் புதிய ஏற்பாட்டிற் காணப்படுகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று பல இடங்களில் ஒத்தும், சில இடங்களில் மாறுபட்டுங் காணப்படுகின்றன. நான் கினையும் ஒப்பு நோக்கிப் படித்து, ‘முள்’ கதைக்கு இறுக்கந் தரக்கூடிய பகுதிகளை நான்கு சுவிசேஷங் களிலுமிருந்து எடுத்து இணைத்துள்ளேன். தடித்த எழுத்துக்களிலும், பெரிய எழுத்துக்களிலும் இடம் பெறும் பகுதிகள் சுவிசேஷங்களிலிருந்து நேரடியாக எடுத்தவை. வேறு இடங்களிலும் அவசியங் கருதி சுவிசேஷ வசனங்கள் சில கையாளப்பட்டுள்ளன. 


நள்ளிரவை எகத்தாளித்தும், நத்தையாக இழு பட்டு ஊரும் நீளிரவு. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்-மூப்பரும் அமிழ்ந்து கிடக்கும் அஞ்ஞானத்தையே உறையிடுங் காரிருள். திக்குத் திசையெல்லாஞ் சங்கம மாகிய அந்த நிசியின் இருள் வனத்தில், சீமோன் பேதுரு பசை உலராத ஒரு நம்பிக்கையில் ஒட்டுண்டு நடக்கின்றான். ‘மெய்யாகவே, மேய்ப்போன் நம்மை விட்டுப் பிரியும் காலம் வந்து விட்டதா?’ என்ற கடாவிற் கருத் தரித்து, நிமை அசைப்பு நேரத்தில் விளைந்து, பிரசவமான அமானுஷ்ய சக்தி அவனை இயக்குகின்றது. பாதங்களை விறைக்கச் செய்யுங் குளிரும், விரல்களைப் பொசுக்கிடும் சுடுமணற் காடும் அவனுக்கு அந்நிய மல்ல. ஆயனின் விசுவாசக் கதகதப்பும், உபதேசத் திரு நீழலும் அளிக்கும் அரணைக் கெட்டியாகவே நம்பிய தினால், வெட்ப தட்ப உபாதித்தல்களென்ற மாம்ஸ ஆக்கினைகள் அவனைத் தாக்கியதில்லை. விந்தை யிலும் விந்தையாக, இன்று மட்டுமே மனப் புழுதியில், உலைவுகள் சல்லிவேர் தள்ளி முளைக்க ஏதுவென்ன? அநிசமாக நீண்டு மதர்த்து, பஸ்காவைப் புசித்த இரவு இடறல்களின் செங்குத்து மலையாக உயர்கின்றதா? பேதுருவின் மனச் சரிவுகளில் அலை விளிம்பு சுழற்றும் எண்ணச் சுழிகள்… இருப்பினும், உலகினை இரட்சிக்கத் தோன்றிய அருள் ஜோதி வழி நடத்துகின்றது என்ற பின்னமற்ற நம்பிக்கை உந்தி இயக்க, பேதுருவின் கால்கள், உடற் பாரத்தின் சுமையை இழுத்துச் செல்கின்றன. 

நயனத்தின் கதவுகளாம் இமைகளை அகல விரித்து, கருவிழிகளை அதன் நிலையத்திற் பொறித்துப் பார்க் கும் பொழுதுதான் இரட்சகர் இயேசு கைதாகிச் செல் வது மங்கலாகத் தெரிகின்றது. கொள்ளைக் கூட்டம் ஒன்றின் நடமாட்டச் சாயலை நியாயமாகக் கற்பிக்குந் தீவர்த்திகளிலிருந்து சிதறும் ஒளிச் சிதர்கள் பிரதான ஆசாரியர்-பரிசேயர் என்பவரால் அனுப்பப்பட்ட ஊழி யக்காரரும் போர்ச் சேவகரும் வெற்றி மமதையின் உபரியிலே எழுப்பும் அகங்காரக் கூக்குரல் பேதுருவின் செவிப் பறைகளை மோதிக் குடைகின்றது. 

கர்த்தரின் கருணையை அறியாத அந்தக் கர்விகள் மொய் பிரதான ஆசாரியரின் வீட்டிற்குள் நுழைகின்றது. 

அலைச் சென்னிகளால் அள்ளி ஏற்றப்படும் மீன் படகாக சீமோனின் உள்ளம் கடந்த கால நினைவுக் கல்லைகளில் அலைக்கழிக்கப்படுகின்றது. 

முதலாம் நினைவு முறி 

கலிலேயாக் கடல், மீன்பிடித்தலே அவன் ஜீவனம். அன்றும், என்றும் போலவே தன் சகோதரனான அந்திரேயாவுடன் கடலில் வலைபோட்டு, அதிலே மீன்படும்வரை அவன் காத்திருந்தான். அப்பொழுது சர்வேசுவர சுதனின் அழைப்புக் கிட்டியது. 

‘என் பின்னே வாருங்கள். உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களரக்குவேன்,’ 

குரல் வந்த திக்கிற் சென்னி திருப்பிப் பார்த்தான். தசை ஒறுப்பில் மெலிந்த உருவம்; கடற் காற்றில் அசைந்து தோள்களிற் புரளும் கேசம்; எளிமையின் சமாசமான குறுந்தாடி; அருளை உமிழும் அக்கண் களில், மனித மனங்களைத் தன் வயப்படுத்துங் காந்தப் பொறிகள்; தேவ வாக்குகளை உச்சரித்துக் கவர்ச்சி பெற்ற உதடுகள்… அக்கணமே, அவரால் அவன் வசீகரிக்கப்பட்டான். அன்று அங்கேயே அவரின் சீடராகப் பின் தொடர்ந்த பேதுரு இன்று வரை…. 

இரண்டாம் நினைவு முறி 

பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பார்த்தலமேயு, மத்தேயு, தோமாசு, சின்ன யாக்கோபு, செலோத்தே சீமோன் தயேயு, இஸ்காரி யோத் யூதாஸ் ஆகிய பன்னிரு சீடர்களுடன் அமர்ந்து, இயேசு தான் ஏற்கனவே தேர்ந்தெடுத்த இல்லத்தில், புளிப் பில்லா அப்பப் பண்டிகையான பஸ்காவைக் கொண்டாடினார். தேவ குமாரன் தீர்க்கதரிசனத்தி னாலே தன் ஊழினை அறிந்தார். தேவனுடைய இராஜ்ஜியம் வருமளவும் புசிக்கவோ, பானம் பண்ண வோ, மாட்டே னென்று மெய்யுரைத்து, அப்பத்தைப் பிட்டுத் தனது சரீரமாகவும், பாத்திரத்திலிருந்த பானத்தைத் தனது உதிரமாகவும் சீஷரிடம் பங்கிட்டார். அவ்வேளையில், இயேசுவின் கண்கள் தீப காந்தியுடன் ஒளிர்ந்தன. அவர் தெளிவாகவும் மெய்யாகவும்- உறுதியாகவும் அறுதியிட்டார்: 

‘என்னைக் காட்டிக் கொடுக்கிறவனு டைய கை என்னுடனே கூடப் பத்தி யிலிருக்கிறது. 

யூதாஸ் அப்பொழுது நயமாகக் கேட்டான்: 

‘ரபீ நானா?’ 

அப்பொழுதுகூட இயேசு கிறிஸ்துவுக்கே தெரிந்திருந்த உண்மை… 

மூன்றாம் நினைவு முறி 

ஒலிவமலையும், கெதரோன் ஆறும் இயேசு பெருமான் அமைதியுடன் சஞ்சரிக்கும் இடங்கள் கெதரோன் மருங்கிலுள்ள ஒரு தோட்டத்தை அடைந்தார். அதனை அடைந்ததும் தன் கூட வந்திருந்த சீஷரை நோக்கிச் சொன்னார்: 

‘நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு. ஜெபம் பண்ணுங்கள்’ 

அவர்களை அங்கு விடுத்து, கல்லெறி தூரம் அப்புறம் போய், முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணினார்: 

‘பிதாவே! உமக்குச் சித்தமானால் இ தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும் படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல; உம்முடைய சித் தத்தின்படியே ஆகக் கடவது.’

அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாய்த் தரையில் விழுந்தது. 

ஜெபம் முடிந்ததும் சீஷரிடத்தில் வந்தார். அவர் கள் துக்கத்தினால் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு கேட்டார்: 

‘நீங்கள் நித்திரை பண்ணுகிறதென்னை.? எழுந்து ஜெபம் பண்ணுங்கள்?’

அவ்வாறு தேவ குமாரன் பேசுகையில், ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரு. சீஷருள் ஒருவனான யூதாஸ் என்பவன் முன்னே வந்து, இயேசுவை முத்தஞ் செய்யும்படி அவரிடத்திற் சேர்ந் தான். இயேசு அவனை நோக்கிக் கேட்டார்: 

‘யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷ குமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?’ 

பின்பு இயேசு தனக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும், தேவாலயத்துச் சேனைத் தலைவர் களையும்,மூப்பர்களையும் நோக்கி உசாவினார்: 

‘ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறது போல, நீங்கள் பட்டயங் களையும் தடிகளையும் எடுத்துப் புறப் பட்டு வந்தீர்களே?’ 

அக்கேள்வியிலே கூட தேவனினால் அளிக்கப்பட்ட அதிகாரந் தொனித்தது.


சிந்தனைக் கல்லைகளில் அலைத்துலைக்கப் பட்டே நடந்த பேதுரு பிரதான ஆசாரியருடைய வீட்டு வாசலை அடைந்து விட்டதை உணர்கின்றான். 

“நான் உம்மோடே மரிக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன்’ என்று கொடுத்த பிரதி யுத்தரத்தை நிறைவேற்றும் ஆவேசம் பொங்க ஆபத்தின் பயப் பிராந்தியை அரவச் செட்டையாகக் களைந்து, கெட்டியான உறுதியில் விளைந்த வைராக் கியத்துடன் அவன் வாசலைத் தாண்டுகின்றான். தலைப்பாகையின் விளிம்பு முக்காடன்ன முகத்தின் ஓரங்களை மறைத்திருந்தாலும், வாசல் காத்து நின்ற வேலைக்காரி பேதுருவை அடையாளங் கண்டவளாக ‘நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா? என்று கேட்கிறாள். ஏனையோரின் அவதானம் தன்மீது திரும்புவதற்கு முன்னர், ‘நான் அல்ல’ என்ற வார்த்தை களை உதிர விட்டு, மக்களுக்காகப் பாடுபட்டு, ஆக்கினைக்குள்ளாயிருக்கிற இயேசு நாதரின் திவ்விய தரிசனம் பெறுவதைத் தவிர, வேறெவ்வித சிந்தையு மற்றவனாக அவளைக் கடந்து செல்கின்றான். 

அது, குளிர்காலத்தின் கடை ஜாம அந்தலை. என்புக் குள்ளிருக்குங் குழலட்டையையுந் திடமாக உறைக்குஞ் சீதளம். களிப்பின் எக்காளம் கலகலக்க, ஊழியக்காரரும், சேவகரும் கரி நெருப்பு உண்டாக்கிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அக்கூட்டத்தினரு டன் ஒருவனாக, தன்னை இனங்காட்டிக் கொள்ளாது பேதுரு கலந்து கொள்ளுகின்றான் இங்கிருந்து இயேசுவைப் பார்க்க அவனால் ஏலும். என்றுமில்லாத பொலிவுடனும், தேஜஸுடதும் இரட்சகரின் முகம் பிரகா சிக்கின்றது. பேதுருவின் மனத்தில் நிறைவு. 

‘ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப் பட்டவர்’. 

அகம்பாவத்தினதும், அஞ்ஞானத்தினதும் உறைவிட மான பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவ ருடைய சீஷரைக் குறித்தும், போதகத்தைக் குறித்துங் கடூரங் கொப்பளிக்குங் குரலில் உசுப்புகிறான். அந்த மூர்க்கனுடைய கேள்விக்கு மொழியும் பிரதியுத்தரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் பேதுரு உன்னிப்பாகவே, சீஷ விசுவாசத்துடன் கேட்டுக் கொள்ளுகிறான். 

‘நான் வெளியரங்கமாய் உலகத்துடன் பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்களெல்லாருங் கூடிவருகிற தேவா லயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித் தேன்; அந்தரங்கத்தில் நான் ஒன்றும் பேசியதில்லை. நீர் என்னிடத்தில் விசா ரிக்க வேண்டியதென்னை? நான்சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசா ரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே!’ 

அவ்வார்த்தைகளில் ஆணவம் கவியவில்லை; தெளிவு துலங்கிற்று பரிகாசம் அணுவுமில்லை; பரிசுத்தம் நிறைந்திருந்தது. இவற்றிற்கும் மேலாக, தன்னைச் சருவேசுவரனின் பிரியங்களுக்கு ஒப்புக் கொடுத்த கெட்டியான உறுதியைக் குழைத்துத் மகிமையை உணராது. தொனிக்கிறது. அவருடைய அண்மையில் நின்ற மொழுக்கனான சேவகனொருவன் அஞ்ஞானத் தடத்தில் மூர்க்கம் மிக்கவனாய், ‘இப்படியா உத்திரவு சொல்லுகிறது?’ என்று இயேசுவின் கன்னத்தில் ஓர் அறை அறைகிறான். 

‘உமது கொடி உடல் எவ்வளவு வைராக்கியத்துடன் அதனைத் தாங்கிக் கொண்டது!’ 

அக்கொடியவனை நோக்கி இயேசு சொன்னார்; 

‘நான் தகாத விதமாய்ர் பேசினதுண்டா னால், தகாததை ஒப்புவி; நான் தகுதி பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?’ 

இந்தப் பதிலின் ஒவ்வொரு வார்த்தையையும் நழுவ விடாது கிரகிக்கும் பேதுருவின் மனம் மலைவு கொள்ளு கிறது. சிக்கலின் அந்தலையைக் காண இயலாத சிக்கலின் சிக்கல்கள்! ஒன்றின் தொடராக இன் னொன்று… ஒவ்வொன்றும் நிகழ்ந்ததா, மனப் பிராந் தியா என்று தெளிவடையும் அவகாசந் தராத துகட் பொழுது நேரத்திற்குள் மின்னற் புழுக்களன்ன மறை கின்றன… சித்திர விசித்திர நிகழ்ச்சிகள்… சிக்கலான உவமைகளைப் புரிந்து கொண்ட சீமோனால்… மலைப் பிரசங்கத்தின்போது இயேசு கிறிஸ்துநாதர் செய்த போதனைகளுள் ஒன்று குகைக்குள் அகப்பட்ட ஒலியாக எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது… 

‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத் தையும் திருப்பிக் கொடு’. 

‘இந்த அரிய நற்போதனையை நல்கியவர், ஏன் சேவகனுக்கு—அந்த அஞ்ஞான மூர்க்கனுக்கு-நியாயங் கற்பிக்கிறார்? அவன் தீமையல்ல, தீமையின் கருவி என்பதினாலா?’ 

பஸ்கா இரவினைப் போலவே, பேதுருவின் ஐயங் களும் நீண்டு… 

அப்பொழுது அவனுக்குச் சமீபமாகச் குளிர் காய்ந்து கொண்டிருந்த சிலர், பேதுருவின் மௌனத்தையுஞ் சிந்தனையையும் அவதானித்து, ‘நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா?’ எனக் கேட்கிறார்கள். 

சிந்தனைச் சங்கிலி அற, ‘நான் அல்ல’ என்று பேதுரு மறுதலிக்கிறான். இயேசு என்ற நித்திய ஆண் டவர் மனித யாக்கையுடன் அல்லற்படும் போராட்டத் தில் நிலை குத்திய ஏக ‘சிந்தையனாய், தன்னையே மறக்கிறான்… 

இன்னொருவன் பேதுருவை மிகவும் உன்னிப்பாகப் பார்க்கிறான். இவன் பேதுருவாற் காதறுக்கப்பட்ட மல்குஸ் என்பானின் இனத்தவனாவன். அவனுடைய விழிகளிலே கொலை ஆவேசம் துளிர்க்கின்றது. ‘நீயும் அவர்களுள் ஒருவன்’ என்கிறான். 

இயேசு கிறிஸ்துவைக் கட்டிப் பிணைத்து, பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அனுப்புவது தெரிகிறது…யோசிக்கும் அவகாசமில்லை. ‘மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன்’ என்கிறான் பேதுரு. 

சேவல் கூவுகிறது! 

அப்போது, கர்த்தர் பேதுருவைத் திரும்பிப் யார்க்கிறார். 

பேதுருவுக்கு ஞான விழிப்பு ஏற்படுகின்றது 

‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.’ 

இவ்வாறு போதித்த நசரேயன் கேவலமாக இழுத்துச் செல்லப்படுங் காட்சி பேதுருவின் நெஞ்சைப் பிளக்கின்றது. 

இன்னொரு நினைவு முறி

இதே பஸ்கா இரவு. பன்னிரு சீஷரும் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப் பொழுது இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்:

‘மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிற படி, இந்த இராத்திரியிலே நீங்களெல் லாரும் என்னிமித்தம் என்னிமித்தம் இடறலடைவீர்கள்’. 

பேதுரு அவருக்குப் பிரத்தியுத்தரமாக, “உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன்’ என்றான் 

இயேசு அவனை நோக்கிச் சொன்னார்: 

‘பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிற தற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிற தை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்.’ 

இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய். 

இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்…. 

இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்…. 

அட்ட திக்குகளிலுமிருந்து இந்த வாக்கியத்தின் பூதாகாரமான எதிரொலிகள் பேதுருவின் கழுத்தினை நெருக்குகின்றன. வெறும் ஒலியலைகள் உயிரின் மூச்சினையே திருகும் பிரணாவஸ்தை. 

மனம் மெழுகாக உருகி நெகிழ அழுகின்றான். 

கறை கழுவப்படும்வரை சீமோன் பேதுரு விசும்பி விசும்பி அழுகின்றான். 

குளிரிற் சீதளித்த அவ் வைகறையை நடுங்க வைக்கும். அழு குரல். 

‘ஆண்டவரே! நான் பாவி… பாவி! என்னை மன்னித் தருளும் கர்த்தரே! மாயமாகிய பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னீர்களே! உங்களுடைய உவமையை நான் புரிந்து கொள்ளவில்லையா? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கின்றவன், தேவதூதர் முன்பாக மறுதலிக்கப் படுவான் என்று சொன்னீர்களே! மனுஷரின் முன்பாக மட்டுமல்ல, தங்களின் முன்பாகவும் நான் ஆண்டவரை மறுதலித்த பாவி…!’ என்று மனந் திறந்து அழுது பிரலாபிக்கலானான். 

விழியூற்றுகளிலிருந்து பிரளயகாலத்து வெள்ளம். தன் மாம்ஸப் பலவீனத்தின் மீது எழுந்த வெறுப்பு, தன்மீதே அகண்டிதமான வெறுப்பினை வளர்க்கின்றது. மறைவாகக் கிடந்த பட்டயத்தை உருவுகிறான் பேதுரு… 

அதன் விளிம்பிலுள்ள இலேசான இரத்தக் கறை மனத்தைத் தாக்குகிறது. 

இந்த இரத்தக் கறைமீது மோதிச் சிதறும் நினைவு முறி ஒன்று, கடைசிச் சொட்டு நெய்யை உறிஞ்சும். வேகத்துடன்… 

அந்த நினைவு முறி 

பிரதான ஆசாரியர்களுடனும், வேதபாரகருட னும், தேவாலயச் சேனைத் தலைவர்களுடனும் வந்த ஜனங்களைக் கண்டதும், பேதுரு பட்டயத்தை உருவி, ஒருவனுடைய காதினை அறுத்த பொழுது இயேசு சொன்னார்: 

‘அதனை உறையிலே போடு; பட்ட யத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப் பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகி யோனுக்கு அதிகமான தூதரை என்னி டம் அனுப்ப மாட்டாரென்று நினைக் கிறாயா? அப்படிச் செய்வேனானரல் இவ்விதமாகச் சம்பவிக்க வேண்டும் என் கிற தேவ வாக்கியங்கள் எப்படி நிறை வேறும்?’ 

‘வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?’ 

‘வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?’ 

‘வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?’ 

ஒவ்வொரு தடவையும் பேதுருவின் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த முட்களைப் பிடுங்கி, இயேசு கிறிஸ்து தம்முடைய முள் முடியிலே சூட்டிக் கொண்டதைப் போன்ற சுமைக் குறை. 

‘சேவல் கூவுவதற்கு முன்பு, மூன்று தரம் பேதுருவாகிய நான், இயேசுவை மறுதலிக்க வேண்டும் என்பது கர்த்தர் வாக்கு. நான் மறுதலித்தேனா? அவரு டைய வாக்கு நிறைவேறிற்று! கர்த்தரின் வாக்கு நிறைவேறிற்று…’ 

புலரிக் காலத்துக் கீழ்வானில் ஊமை ஒளி படருகிறது… 

சீமோன் பேதுருவின் உள்ளத்திலே தெளிவும் அமைதியும் விரிகின்றன… 

– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *