மிகச்சிறிய மிருகங்கள்
கதையாசிரியர்: நீ.பி.அருளானந்தம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 12, 2026
பார்வையிட்டோர்: 181
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உன்னோடு சேர்ந்திருந்து கொண்டு இந்த அறையில் வாழ்வது மிகவும் கஷ்டம்..”
என்று கூறிவிட்டு உன் நண்பனும் இன்று உன்னை விட்டுப்பிரிந்து அந்நியமாகப் போய் விட்டான். அவன் போன பிறகு, உன் வீட்டுப் படலைக்கு முன்னாலுள்ள நிலத்தில் புதைந்து கிடந்த – உடைந்த ஆட்டுக்கல்லின் மேல் அசதியோடு குந்திக் கொண்டிருந்தபடி நீ யோசித்தாய். பிறகு நீ வெளியே போய் வெயிலெல்லாம் அலைந்து உளுத்து அவிந்து போன கணக்கில் வந்து, ஏதோ இயந்திரத் தனமாகத் தான் இப்போது இருந்து கொண்டிருக்கிறாய்.
ஆனால் வீட்டுக்குள்ளே உன் பார்வையை நீ சுழலவிட்ட போது அங்கு காணப்பட்டவை எல்லாமே உனக்கு எப்போதும் போல இயல்பாக இருப்பதாகவே தென்படுகிறது. வீட்டுக்குள்ளே எரியும் மின்சார விளக்குகள், பாவனைப் பொருட்கள், ஆடைகள் – எல்லாமே எப்போதும்போல இயல்பாக இருப்பதாகவே உனக்குத் தோன்றுகின்றன. “அப்படி உள்ள எல்லாவற்றையும் போலத்தான் உன்னிடத்தில் ஏதும் தவறு இல்லை” – என்று உன் கையை அசைத்து நீ கூறியும் கொள்கிறாய். ஆனாலும் இங்கு ஏதோ எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தவறு நடந்துவிட்டது…. அதனால் தான் இப்படியான ஒரு தவறாக பிறகு எங்கள் இருவருக்கும் அது வந்து விட்டது – என்றும் நீ சிந்திக்கிறாய்.
“வாழ்க்கையில் ஏற்பட்ட எந்த விததாக்குதல்களுக்கும் தைரியமாக நின்று ஈடுகொடுக்க என்னைப் பழக்கிவிட்டவன் அவன் ….. நான் அவனை அதன் பொருட்டு எவ்வளவாய் நேசித்தேன்…! ஒரு மனுசனுக்கு ஏதாவது ஒரு பலகீனம் இருக்குமென்பது அவனுக்குத் தெரியாதா….?”
அவன் வருவான் வருவான் என்ற எதிர்பார்ப்புகளின் நாட்கள் என்பது உனக்கு, இந்த நினைவுகளுடன் மிகவும் வலி நிறைந்ததாகவே இருக்கிறது.
ஆனாலும் அங்கே – ‘அவன் தான் இனி உன்னோடு சேர்ந்து இந்த அறையில் இருந்து கொள்ளப் போவதில்லை…’ என்று நினைத்துக் கொண்டிருப்பது உனக்கு எங்கே அதெல்லாம் தெரியப் போகிறது? என்றாலும் இனி அவன் வருகை என்பது நிச்சயமாக்கப்படாத ஒன்றுதான் – என்று நீ இப்போது நினைக்கத் தொடங்கி விட்டாய். அவன் உன்னிடத்தில் வராததற்குரிய விளக்கங்கள் இப்போது உன்னினடத்தில் மன அடிவரைப்பாய்ந்து வலுவானவையாகிப் போய்விட்டன. மிகச் சிறப்பாக அவனிடத்தில் நீ மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுத வேண்டும் என்றும் நீ இப்போது நினைக்கத் தொடங்கிவிட்டாய்.
உன் வீட்டுக் கூரையின் மேலிருந்து வெள்ளைக் கண்ணாடி ஓட்டால் விழுந்த சூரிய வெளிச்சம் கூட இப்போது விழாமல் விட்டு விட்டது போல உன் கண்பார்வைக்கு இப்போது இருக்கிறது. தனிமையின் நிழல்கள் இப்படியாய் உன்னிடத்தில் நீளமாய் வளரத் தொடங்கிவிட்டன. உன் கவலைகளை வீட்டுச்சுவர்களும் உறிஞ்சிக் கொண்டது போல் கறுப்பு நிறமாகிவிட்டன. சுறுசுறுப்பாய் இருந்த நீ அது அற்றுப் போனதால் இப்போ முதுமை அடைந்த கணக்காகவும் ஆகிவிட்டாய். மனதில் கறுப்பு நிழல் கொண்ட ஒரு நிறுத்தம் இப்போது உனக்கு நிரந்தரமாகிவிட்டது போல் ஆகிவிட்டது. “இது என் தலைவிதிஎன்று சொல்லாமல் அந்தத் துன்பத்திலிருந்து ஒருவன் விடுபட வேண்டுமென்றால் போதுமான அக்கறையுடன் மனம் தளராது அவன் அதற்காக முயற்சி செய்துவர வேண்டும். நீயும் அதைப்போல உண்மையில் பழக்க முயற்சி செய்கிற ஒரு காலகட்டமாக உனது உனது இன்றைய நிலையை எடுத்துக் கொண்டுவிட்டாய். சிறியதொரு துன்பமான மணல் மூடல்போன்றது தான் உன்னை இப்படி கவலையில் மூழ்கடித்திருக்கிறது – என்று நீ அதை யோசித்துப் பார்த்தாய்.
இலையின் மீது ஸ்தம்பித்து நிற்கும் வெட்டுக்கிளி போல அசையாது அந்த யோசனை உன் மூளையிலே நின்று கொண்டிருக்கிறது. தன்னை மூடிய மணலிலிருந்து துருத்திக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கும் ஒரு எறும்பின் முயற்சி போன்ற ஒரு குறிக்கோளுடன் அதற்காக நீ செயலாற்றத் தொடங்கி விட்டாய்.
“என்னைச் சுற்றியதாய் எப்போதுமே இருட்டு “-என்றதாய் இப்போதெல்லாம் நீ நினைப்பதில்லை. பகல் வேளையிலும் படுத்துப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நீ அந்தப் பழக்கத்திலிருந்தும் இப்போது விடுபட்டதாய் விட்டாய்.
நீ அறைக்குள் நுழைந்த நேரமெல்லாம் உதவியற்ற ஒரு நிலை உனக்கு அப்போது இருந்தது. அந்த ஏக்கம் உனக்கு இருந்தது. துண்டிக்கப்பட்ட அவளின் தொடர்புடன், உன் நண்பனது தொடர்பு வரை எல்லாமே உன் தொண்டைக்குள் முள்ளை விழுங்கியது போன்ற ஒரு வேதனையாக இருந்தன. நீசிறு சிறு துண்டுகளாக அந்தக் கவலைச் சம்பவங்களை உன்னிடத்திலிருந்து வெட்டி வெட்டி அப்புறப்படுத்தியும் ‘டால்ஸ்டாயின்’ கதையில் வரும் அந்தப் பாதிரியார் போல உன் கரத்திலுள்ள விரல் நுனியைக்கூட வெட்டிக்கொள்ள வேண்டியதான ஒரு பரிதாபமான நிலையில் இருந்தாய். ஒரு மனிதனுக்கு சிதைந்து போகாமலிருக்கும் மனத்துக்கத்தைக் காட்டிலும் வேறு என்ன ஒரு கொடுமை வந்துவிடப் போகிறது?
ஆனாலும் அந்தக் குப்பையான போலி வாழ்க்கையிலிருந்து ஒரு நல்ல மனித வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று உனக்கு இப்போது தெரிந்து கொண்டுவிட்டது. நண்பர்களாகிய உங்கள் இருவருக்கும் முன்னால் நின்று கொண்டு செம்பட்டை நிறம் பூசிய தலை மயிரைச் சீப்பால் இழுத்து வாரியபடி இனிப்பாகக் கதைத்தாளே அந்தச் சூழ்ச்சிக்காரி – அவள் நீங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதை நன்றாக தெரிந்து கொண்டுவிட்டு ‘நான் சொல்வது உங்களிடத்தில் இரகசியமாக இருக்கட்டும்’ என்று உங்கள் இருவர் உள்ளத்திலும் பகைமை எண்ணம் தோன்றும்படி எவ்வளவு கொடுமையான பொய்களையெல்லாம் சோடித்து நன்றாகக் கூறினாள்.
“உங்கள் அனுமதியுடன் இதை நான் கேட்க விரும்புகிறேன்” – என்று ஆனந்தமாய்த் தான் இருந்தபடி ஆலிங்கனமான பார்வை வசியத்துடன் சிரித்துக் கொண்டு, ஏதோ தெரியாதவள் போல கதைகள் கேட்பாளே அவள்? அவள் ஒரு கலப்படம்! ஆமை போன்ற, அல்லது ஒரு நத்தை போன்ற பிராணிக்கு ஒத்தவள் அவள்-உங்கள் இருவருடைய உடல் கூட்டைத் தேடிப்பிடித்தது போல் பிடித்துக் கொண்டு. அதற்குள் தன்னை அவள் பிரிக்க முடியாதது போல் ஒட்டிக் கொண்டதாய் விட்டாளே…? அவள் உங்கள் இருவருக்குள்ளும் ஒடுங்கிக் கொள்ள – அழுக்கு பிடித்துச் சகிக்க முடியாத அளவுக்கு நீங்கள் புகை அடைத்தது போன்று ஆகிவிட்டீர்கள். இதனால் அவளின் பரபரப்பான அணைப்பிலிருந்து கையை இழுத்து உதறிக் கொண்டு பின்பு வெளியேறிவிட உங்கள் இருவருக்கும் பிற்பாடு முற்றாக இயலவில்லை. உங்கள் அவலம் தோய்ந்த முகங்களை அவளின் இருபாதங்களாலும் துடைத்துக் கொண்டு ஒரு பூனைக்குட்டி போல அவளின் அருகில் பதுங்கி இருக்கும் நிலை உங்களுக்கு வந்து விட்டது போல அல்லவா நாள் செல்ல நாள் செல்லவாக உங்களுக்கு இருந்தது.
உங்கள் இருவருக்குமுள்ள வேலைகள் – கடமைகள் அலுவல்கள் எல்லாமே அவளால அப்போது கெட்டுவிட்டன. எல்லாவற்றிலும் கவனக் குறைவு வளரத் தொடங்கிவிட்டது உங்களுக்கு. இதெல்லாமே விதிவசத்தால் எனக்கு வந்து நேர்ந்ததா என்று கெட்டியாக மூடப்பட்டுக் கிடந்த உன் சிந்தனை மண்டைக்குள் அப்போது தான் ஆயிரம் மடைகள் திறந்து கொண்டு விட்டது போல இந்தச் சிந்தனை வெளிப்படத் தொடங்கியது.
தன் நினைவு இழந்து தியானம் புரிபவன் போல நீ தனியே இருந்தபடி ஒரு கணம் அவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்ததில் ஓட்டக் குதிரைகள் பூட்டிய மாதிரியாய்ச் சூரியக் கடைசிக் கதிர்களோடு விரைவில் உனக்கு வந்தது அந்த ஞானமான நினைப்பு. புழு வெடித்துத் தட்டாம் பூச்சி கிளம்புவதைப் போன்ற அந்த நினைப்பு வந்ததும் – கருங்கல் நடைபாதை போன்ற கேடு கெட்ட அந்த இடத்தை விட்டு விலகி, சிறப்புடைய நல்ல வாழ்வினை நான் இனி வாழ வேண்டுமென நீ மாத்திரம் உன் நினைவில் இதை நெய்யத் தொடங்கி விட்டாய்.
இதனால் விளக்குச் சுடர் போல இருந்த அவள் மேலே நீ ஒரு பூச்சியைப் போல விழுந்ததாய் இருந்தாலும் -அந்த விளக்குத்தான் குப்பென்று அணைந்ததேயல்லாமல் நீ அதிலிருந்து தப்பியவன் போல பிறகு ஆகிவிட்டாய்.
உன் நண்பன் சாத்வீகபாவமான மனமுடையவன். அவன் முகத்திலே எப்போதும் யோக முத்திரையால் எழும் சுவாசத்தின் வெளிச்சம் போல ஒரு தெளிவு இருந்து கொண்டிருக்கும். உன்னைத் திருத்திக் கொண்ட நீ – முன்னம் அலங்காரமாயிருந்த அவன் முகத் தெளிவிலே ஒரு மூதேவி இப்போது வந்து ஒளிந்திருப்பதைப் போன்ற ஒரு கெடுதியைக் கண்டாய்.
உடனே கூர்மையான பார்வையுடைய பளபளப்பான உனது கண்கள் இரண்டும் துக்கம் மேவிக் கலங்கியதாய் விட்டன.
“எங்கள் உடலையும் மனத்தையும் முட்புதரில் சிக்குண்டது போல துன்பத்தில் ஆக்கிவிடாமல் தூய்மையானதாக நாங்கள் ஆக்கிக் கொள்ளவேண்டும். இந்த ஆசையிலும் அருவருப்பிலுமிருந்தும் நாங்கள் வெளியேறிவிட வேண்டும்…” என்று அவனுக்கு நீ உபதேசித்தாய். அவன் யானை பெரிதாக உறுமிக் கொள்வது போல நின்று கொண்டு உன்னைப் பார்த்தான். நீ அவனைப் பார்த்துப் பின்னகர்ந்தபடி பீதியுடன் நின்றாய். அவனின் பார்வை உன்னிடத்திலே அனலில் வாட்டிய தாமரை இலையை வைத்து அழுத்தியதைப் போல அப்போது இருந்தது.
அவன் புருவத்தை இறுக்கியபடி, இன்னும் அதே மாதிரியாகத் தன் பார்வையை உன் மீது எறிந்து கொண்டிருந்தான்.
அவன் பார்வை கூரான உளியை அவன் தன் கையில் பிடித்துக் கொண்டு கல்லாக உன்னை நினைத்துக் குத்திக் கொண்டு போவது போல உனக்கு இருந்தது. உடனே தாமரை கூம்பியது போல உன் உடல் சுருங்கியது. அவன் பாம்பு போல தன் பார்வையை உன் மீது ஊர்ந்து கொண்டு உன் கால் பாதங்கள் வரை கீழே இறக்கினான்.
பிறகு புளிய மரத்தினைத் தாண்டி வரும் வெப்பக் காற்றுப் போல – நெருப்பாய் மூர்க்கத்துடன் மூச்சுவிட்டான். அதன் பிறகு ஒரு அசைவாக மாறி உன்னைத் தீண்டுவது போல தன் பேச்சை ஆரம்பித்தான்.
“நான் உன்மீதுள்ள நட்பிலிருந்து விலகவே இப்போது ஒருவித வெறியுடன் நிற்கிறேன் – நீ இப்போது என்னை வெறும் சதை மோகம் கொண்ட ஒரு மனிதனாகத்தானே நினைக்கத் தொடங்கிவிட்டாய்…? உன் தொண்டைக்குள் தலைமயிர் ஒட்டிப் போய் ஓங்காளித்துச் சத்தி எடுத்துக் கொண்டு – எனக்கு இப்போது நீ உபதேசிக்க ஆரம்பித்து விட்டாயா? நீ முதலில் பழைய சம்பவங்களை நோக்கி உன் கவனத்தைத் திருப்பிப்பார்…ஒரு காலம் உன்னை வாழ்க்கைச் சீர்குலைவு களிலிருந்தும் சிதைவுகளிலுமிருந்தும் தெளிவாக யோசிக்க வைத்துத் திசை திருப்பி வாழ வழிகாட்டியவன் நான்! இப்படி நான் சொல்வதெல்லாம் ஐயமே இல்லாத ஏற்புடையதான ஒரு உண்மை… இதெல்லாம் உன் கண் முன் நிரம்பியிருக்கும் மாயப்படலத்திற்குள்ளாலே உன்னால் பார்க்க முடியவில்லைப் போலும்….”
அவன் சொல்லிவிட்டு ஏளனமாய்ச் சிரித்தான். அவன் சுடர்போல தன் விரலை நீட்டியபடி உனக்குச் சொன்னவைக் ளெல்லாம் எத்தனை கடுமையான சொற்கள். உனக்கென்றால் அவன் சொன்னவைகளைக் கேட்டு உச்சமெய்திய கவலைதான். உன் நினைப்பில் அவன் மிருகமாக இருக்கிறதாகவும். நீ ஒரு கல்லாகவும் ஒரு மரமாகவும் இருக்கின்றது மாதிரியான ஒரு நினைப்பு.
நீ அவனை நோக்கியபடி “உன் மனதுக்குள் உனக்கு நாசமும் நசிப்புமுடைய அவளிடமிருந்து தப்ப வழியில்லை. தப்ப வழியேயில்லை. ஆம் தப்ப வழியே இல்லை…” என்று சொல்லியவாறே இருந்தாய்.
அன்று முதல் தான் உங்கள் இருவருக்குமிடையே நட்பாய்த்திறந்துகிடந்த அந்த வாசல் அடைபட்டது. ஒருவருக் கொருவர் நீங்கள் அரண்கட்டிக்கொண்டீர்கள். ஆணவம் பிடித்த செய்கைகளிலே இரக்கம் காட்டுகிற வார்தைகளும் அதற்குள்ளே அடக்கம் -என்றுதான் அப்பொழுது நீயும் நினைத்தாய். எல்லாம் மறைந்துபோக வேண்டும் என்று நினைத்து நீ திரையையும் இழுத்துவிட்டாய். இதற்குப் பிறகு அவன் கதியை நினைத்து நீ அழுதாய். நண்பன் அழிந்து போவதற்கு முன்னால்நானே உயிரைத் துறந்து அழிந்துபோய் விடலாமென்று நீ யோசித்தாய்.
யோசிக்க யோசிக்க உனக்குத் தலையைப் பிளப்பது போல வேதனையாக இருந்தது. வாழ்வை உணர்ந்து அறியாத போக்கில் சிறகுகளையெல்லாம் உதிர்ந்த பறவை பிறகு ஒரு சதைப்புழுவாக மாறியதைப் போல நீ அவதிப்படத் தொடங்கினாய். இந்த வேதனைகளிலே நீ உன் உதடுகளைக் கடித்து இறுக்கத் தொடங்கியதும் உடனே வலி உனக்கு மாறிப்போய் மனம் உனக்கு சற்றுத் திசை திரும்பத் தொடங்கியது.
அந்த கணம் முதல் நீ அவைகளைப்பற்றி நினைத்துக் கொள்வதைத் தவிர்க்கத்தொடங்கினாய். உடனே உனக்கு அடி வயிற்றுக்குள் அலை பிரிந்து கொண்டிருந்த பயம் விலகிப் போய் விட்டது.பயமுறுத்தும் நிழலாக வரும் இந்தச் சிந்தனைகளை இப்படி யான செய்கைகளாலும் விலத்தலாமோ…?
‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று முன்பு நினைத்த உனக்கு இப்போது அது வியப்பாக இருக்கிறது. நாள் செல்லச் செல்ல உன் மனதுக்குள் அந்த நினைப்புகள் எல்லாமே சுருண்டு தூங்குகிற அளவுக்கு மாறிக் கொண்டதாய்த் தான்விட்டன.
நீ ஏறிக்கொண்டிருந்த துக்கமும் இருட்டும் நிரம்பிய படிகள் ஒவ்வொன்றாக இப்போது உன் நினைவில் மறைந்தாகிவிட்டன. இருட்டின் மெழுகலிலிருந்து காலைப் பொழுது விடிந்து விட்டது இப்பொழுது…. உன் வாழ்க்கையும் அது போல விடிந்ததாய் விட்டது தானே. இந்த விடியிருட்டில் முற்றத்து மரத்திலிருந்து பறவைச் சத்தங்கள் உன் காதுகளுக்குக் கேட்கின்றன. காலையில் என்ன அற்புதம்! மசூதியிலிருந்து இமாமின் கூவல் உனக்கும் கேட்கிறது. நேரம் போகப் போக மரங்களின் கொம்புக் கிளைகளில் அமர்ந்தும் எழுந்தும் இறகுகளை அடித்துக் கொண்டு பறக்கின்ற பறவைகளுடன் நீயும் சேர்ந்து இருப்பதைப் போன்றதோர் மகிழ்ச்சி. கிழக்கு மூலையிலிருந்து சிவப்பான உதய ஒளி படர்கிறது. இந்நேரம் இடைமுறியாமல் ஒலித்த ஒரு பூச்சியின் ஒலியோடு நீயும் உன் மனத்தைக் கலந்தாய். வேளை முதிர முதிர பூச்சி வயிறதிர ஒலி எழுப்பியபடி இருக்கிறது. ஆனால் அந்த ஒலியை அடக்கி ஒடுக்க வேண்டுமென்பது மாதிரியாக வந்தன, உன் வீட்டுக் கோடியிலிருந்து வந்த உன் வளர்ப்பு நாய்களின் விபரீதமான பயங்கரமான குரைப்புச் சத்தங்கள்.
அவைகளின் குரைப்பு ஒலிகளில் மற்ற ஓசைகயெல்லாம் அச்சம் கண்டதைப்போல அடங்கிவிட்டன. நீ இருக்கும் அறை முழுக்கவும் நாயின் குரைப்புச் சத்தங்கள் பரவிப் பெருகி உன் காதிலும் கொடிய விஷம் போன்ற கணக்கில் பாய்கின்றன. நீ எச்சமயமும் அந்த நாய்களிலிருந்து அறிந்திடாத குரைப்புச் சத்தத்தோடு, பயத்தில் ஒருவித விஷ நீலம் உன் நரம்புகளிலும் ஆழப்புதைந்ததாய்ப் பாய்கின்றது மாதிரி உனக்கு இருக்கிறது.
மனிதக் கண்களுக்கு மனம் சொல்வதை உடனே சென்று பார்த்துவிடத்தான் ஆவல் இருக்கும். வர வர அந்த நாய்களினது குரைப்புச் சத்தங்கள் உன் காதில் விழ விழ, உன் நரம்புகளெல்லாம் பச்சை நிற வலைப்பின்னல்களாக புடைத்து எழுவதைப் போல இருக்கின்றன.
“என்ன நீ இப்படி அந்த நாய்கள் போடும் சண்டைச் சத்தங்களைக்கேட்டும் பூரண ஓய்வு கொண்டவன் போல இதிலே இருந்து கொண்டிருக்கிறாய்.. போ.. போ…என்ன அங்கே நடக்கிறது என்று போய் உடனே பார்” – என்று சொல்கிறது உனது மனம்.
இந்த நாய்களினது சண்டையை நிறுத்த இங்கிருந்தே ஆணையிடுவது போன்ற மனத்தோடு நீ இருந்து கொண்டிருந்த கதிரையிலிருந்து எழுந்தாய். அந்த மூட நாய்களின் மண்டைகளைப் போய் உடைத்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தோடு நீ மள மளவென்று விரைவாக நடந்து உன் வீட்டுக்குப் பின்புறமுள்ள கோடிப்பக்கம் போகின்றாய். ‘இவற்றுக்கு என்ன தான் கேடு?’ – என்று நீ நினைத்துக் கொண்டு வீட்டுச் சுவரோடு உள்ள நடை வழியால் போக கண்கள் உக்ரமாகஜ்வலிக்கும் அந்த மூன்று நாய்களும் அந்த தாழ்வாரத்தடியே உன் பார்வைக்குக் காணப்படுகின்றன.
உடற்பொலிவுள்ள அந்த மூன்று நாய்களையும் மனமகிழ்சியோடு முன்பெல்லாம் நீ பார்த்து வந்திருக்கிறாய். நீ பாசத்தோடு அவைகளின் தலையில் உன் கையை வைத்தால் அவைகள் உடனே தங்கள் உடல் குழைய நிற்கும். ஆனால் இப்போது உயிரைப் போக்கும் அளவுக்கு ஒன்றை ஒன்று கடித்தபடி தங்கள் பிடியை விடாமல் மரணஅவஸ்தையில் கால்களை உதைத்துக் கொண்டிருக்கும் அவைகளின் நிலைமையைக் கண்டதும் ‘சாவின் அமைதியில் இவைகள் அடங்கிவிடுமோ..?’ என்ற ஒரு பதகளிப்பாக உனக்கு இருக்கிறது.
அந்த நாய்களின் கடிவாய்களில் இருந்து நனைந்து சொட்டிட்டுக் கீழே விழும் இரத்தத்தை இந்த அளவுக்கு எங்கும் நீ பார்த்ததில்லைப் போல் உனக்கு இருக்கிறது. நீ உடனே கதிகலங்கியதாய் விட்டாய். ஆண்டவனே – இந்த இரத்தத்துக்கு நான் இவ்விடமிருந்து விலகிப் போய்விட வேண்டும்மென்ற அளவுக்கு எவ்வளவு உனக்கு வெறுப்பாக இருக்கிறது. உன் மீது கொட்டி மூடியதுமாதிரியான இந்தப் பின்வாங்காத இரத்த வாடையை உன்னால் கொஞ்சம்கூட பொறுத்துக் கொள்ளவே முடியவில்லையே.
என்ன குரோதத்தை தங்கள் மனதில் வைத்துக் கொண்டு இந்த நாய்கள் மூன்றும் இப்படிக் கடித்தகடியை விடாமல் மரணவாயிலடியில் நின்று கொண்டதாய் இருக்கின்றன? மூர்க்கத்தின் உச்சகணம் தான்! இறுகித் தினவு கொண்ட அந்தப் பெண் நாயின் கழுத்துத் தசையை தன் கடிவாயில் இறுக்கிப் பிடித்தபடிதான் மற்றைய அந்தப் பெண் நாய் குரூரப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கடிவாய்க்கு தன் கழுத்தைக் கொடுத்தாலும் அந்த இளம் பெட்டை நாய் சும்மா விட்டு விட்டு இருக்கவில்லை அதுவும் கழுத்தைத் திரும்பி – என் சதையைப் போலத்தான் உன் சதையையும் கிழித்தெடுக்கிறேன் – என்ற அளவுக்கு மற்றையப் பெட்டை நாயின் கழுத்தைக் கடித்துப் பிடித்தபடி இருக்கிறது. மூன்றாவதாவுள்ள அந்த ஆண் நாய், தன் நேச நாயைக் கடிக்கும் மற்ற நாயின் தொடைப்பக்கம் முழுமையையும் தன் வாயில் கடித்து உள் அடக்கியது போன்ற கோரமான பிடியுடன் அதன் தொடையிலுள்ள மாமிச வடிவை இழுத்துக் கிழிக்கின்ற மாதிரியான வெறியுடன் நிற்கிறது, எல்லா நாய்களிலிருந்தும் இரத்தம் ஒன்றை யொட்டியொன்றாய் நிலத்தில் சொட்டுப் போடுகின்றன – அவ் வுதிரத்துளிகள் காலை வெயிலில் பவழம் மின்னியதைப் போன்று மின்னுகின்றன. இந்த நாய்களைப் பிரித்துவிட என்ன செய்வது – என்ன செய்வது?
நினைக்க நினைக்க உனக்கு, வெட்ட வெளியான இருளுக்குள் ஓடித்திரிவது போன்ற அவதியாக இருக்கிறது.
நாய்கள் மூன்றையும் இந்த மஹா கொடுமைத் தனத்திலிருந்து விடுதலையாக்குகிற ஒரு நல்ல வழியை மாற்றி மாற்றி, மாறி மாறி யோசித்தபடி நீ தவித்துக் கொண்டிருக்கிறாய்.
இது தான் இப்போது உன் தவிப்பு!
அதற்குள்ளே உன் தவறும் நினைத்துக் கொள்ளவேண்டிய தொன்றாய் வருகிறது.
அதை நினைக்கவும் மண்டை உனக்குக் கிறுகிறுக்கிறது. பழைய ஏடுகள் தொடங்கி நீ படித்த மாதிரிப் பல நூல்களைப் படித்து முடித்திருக்தும் – ஒரு புத்தியில்லை – அறிவில்லை உனக்கு?
ஒரு ஆண் நாய்க்கு இரண்டு பெண் நாய்களைச் சேர்த்து யாராவது வீட்டில் வளர்ப்பார்களா? அதுவும் ஒடுங்கிய தலைகளை யுடைய சுருண்டு தூங்கும் இந்தக் கொடுமையான கொமேரியன் சாதி நாய்களுக்கு? அந்த ஆண் கொமேரியன் நாய் தன் நேச நாயுடன் சேர்ந்து கொண்டு திரிவதை மற்றைய அந்தப் பெண்நாய் கடுமையாக எதிர்த்துக் கொண்டு இதுவரையுமாக வந்திருக்கிறது. அந்த நாயுடன் அது குரோதமாக இருந்திருக்கிறது. இன்று அந்த நாய்க்கு வாய்த்த சந்தர்ப்பத்தை இழக்க மனமில்லை. அந்தப் பெரிய பெட்டை நாய் இன்று தன் விரோதியின் உயிரைத் தான் பறித்துவிட வேண்டுமென்ற ஆக்ரோஷத்தில் நின்று கொண்டிருக்கிறது.
சாவுக்களை கூத்தாடும் இந்தக் குரூரத்தைப் பார்த்ததும் உன் நினைவு பின் நோக்கிச் சென்று ரோமாபுரியின் சரித்திரப் பரம்பரையான அந்தக் காலத்தை எட்டிப் பார்க்கவில்லை. கலிகுலா சீசரையோ அன்றி சிங்கக் கூட்டங்களை அந்த மெய்வணக்கத்தார் மேல் ஏவிவிட்டு அவர்களைக் கொன்றொழித்த நீரோ மன்னனையோ நினைவில் கொள்ளவில்லை.
ஆனால் லா. ச. ரா எழுதிய கதை தான் உடனே இந்தவித குரோதத்துக்கு மிகத் தோதானதாய் உனக்கு ஞாபகம் வருகிறது.
அந்தக் கதையிலே ஒரு பூனை புறமுதுகிட்டு ஓடாமல் தன்னை எதிர்த்த அந்த நாயுடன் போராடுகிறது.
லா.ச.ரா. அந்தக் காட்சியை என்ன மாதிரியாக விபரிக்கிறார்.
பத்து எகிறி எகிறி தன் மேல் விழும் அந்தப் பூனையை இரண்டு மூன்று தடவைக்கு அந்த நாய் சமாளிக்கப் பார்த்தது. ஆனால் உயிரையும் உருவத்தையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு அந்தப் பூனை தன் மேல் விழுகையில் நாயின் முகத்தில் குழப்பத்தைத் தான் லா. ச. ரா. காண்கிறார்.
அந்தப் போராட்டத்தில் பூனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாய் ஓடியேவிட்டது. ஆனால் பிறகு சுயரூபத்துக்கு விரிந்த அந்த பூனையின் கடைசி முடிவு – அது அடி வயிற்றை நின்றபடியே அவகாசமாக நக்குகிறது. அது மெல்ல நடந்து மெல்ல நடந்துபோய்.
ஜயோ அதுவெல்லவோ பிறகு அதன் முடிவு.
அந்த முடிவை இவைகளிடமும் காணவா நான் இதுவரை ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் நின்றபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அவனில்லாத இந்தத் தனிமையான என் நிலையில் என் கண் பார்க்க விதிக்கப்பட்டிருக்கும் கொடுமையோ இது.
உனக்குக் கையெல்லாம் நடுங்குகிறது. என்றாலும் முன்னாலே உள்ள முற்றத்தடிக்கு ஓடிச்சென்று அங்கு கிடந்த ஒரு வெற்று வாளியைத் தூக்கிக் கொண்டு மீண்டும் நீ நின்ற அந்த இடத்துக்குத் திரும்பி வருகிறாய்.
“தண்ணீர் தண்ணீர்…”
என்கிறது உன் தாகமான மனம். நடுங்கிக் கிலி பிடித்ததால் பயத்தில் எழுந்த தாகத்தில் முதலில் தண்ணீரைக் கொஞ்சம்போல் குடித்து விடவேண்டும் போலத்தான் உனக்கு அவதியாக இருக்கிறது. என்றாலும் அந்தத் தாகத்தை வெளியே காவலாக நிறுத்திவிட்டு கொண்டுவந்த வாளிக்குள் – அதிலே உள்ள தண்ணீர்க் குழாயைத் திறந்து நீ தண்ணீர் நிரப்புவதற்குப் பிடிக்கிறாய்.
தாகத்தில் உனக்கு வாய் கசக்கிறது. கடவுளே இந்த தண்ணீராவது நாய்கள் கொண்டுள்ள குரூரத்தை மாற்றி இவைகளை வேறுவேறாக தனியே பிரித்துவிடட்டும். என்று நினைத்துக் கொண்டு, நீர் நிரம்பி வழிந்ததாய் இருக்கும் அந்த வாளியை தூக்கிச் சென்று – தண்ணீரால் அவைகளை மூழ்கடிப்பது போல இடிந்துவிழும் விசையில் மேலே அவைகளுக்கு கொட்டிப் பார்த்தாய். ஆனால் – இல்லை – இல்லை -ஏதும் பிரயோசனம் என்பதேயில்லை. தண்ணீரில் நனைந்து நாய்களது தோற்றம் சட்டென மாறிவிட்டது. ஆனால் அப்படியே இன்னும் குரூரத்தை தூண்டி எழுப்பியதில் – இருப்பதைவிட மேலும் மிஞ்சியதாய் விடுகின்றன அந்த நாய்கள். குளிர்ச்சியில் இன்னும் கொடூரமாக கடிவாயை அவைகள் இறுக்குகின்றன. நாய்கள் மேல் ஊற்றிய தண்ணீர் சிவப்பு ரத்தத்தில் கலந்து செம்பரப்பாக வாய்க்காலுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்னும் இதற்குப் பிறகு என்னால் செய்யக்கூடியது -ஒரே ஒரு வழிதான் ஒரே ஒரு வழிதான். இருபக்கமும் பார்த்துவிட்டு – பிறகு வெறும் தரையில் தூங்துவது போல கிடந்த மண்வெட்டியை கண்டதும் நீ இவ்வாறு நினைத்துக்கொள்கிறாய். மடங்கிச் சரிந்து விழுந்து கிடந்த மண்வெட்டியை உன் கையில் உடனே எடுத்துக் கொள்கிறாய்.
இரும்பாலே இரும்பைக்கூட அறுத்துத் துண்டாக்கி விடலாம். இரும்பு தான் உங்களுக்கு இனிமேல் விடுதலையைத் தரும்.
உன் கால்களை உதைத்தபடி இவற்றைச் சொல்லிவிட்டு ரத்தச் சேறாய்க்கிடந்த அந்த நாய்களுக்கிடையே இரும்புப் பகுதியை ஆப்புப் போல இடையில் மெல்ல செலுத்தினாய். மிகுந்த அமைதியுடன் நீ பிரயாசைப்பட்டதற்குறிய பலன் கிடைத்து விட்டது. எல்லாம் சொற்ப நேரத்திலும் சொற்ப நேரம்தான் – விகாரமாகக் கோணிய உடலமைப்புகளுடன் அந்த மூன்று நாய்களும் பிடுங்குவது போல வைத்திருந்த வாய்க் கடித்தலை ஒருவாறு விட்டு விட்டன.
ஆனால் நீ இப்போது அவைகளைப் பார்த்து என்ன அறிகிறாய்? அந்த ஆண் நாயின் நேச நாய் தனக்குக் கிடைத்த மரணக் காயத்தால் ஏற்பட்ட வலியை எதிரியான அந்தப் பெட்டை நாய்க்குக் காட்டாது லா. ச. ரா. அந்தப் பூனையில் கண்ட கெளரவத்தோடும் தன்மானத் தோடும் தானும் சேர்ந்தது போலத்தான் தள்ளாடியபடி நடக்கிறது.
லா. ச. ராவின் மனதிலே தன் கௌரவத்தை பதித்துவிட்டு உயிர்நீத்தது அந்தப் பூனை. ஆனால் அந்த நாய் அதிலே போய் விழுந்து ஆவ் ஆவ் வென்று வாயைத்திறந்து திறந்து மூச்சுக்குத் தேடி பிறகு இறந்த அந்த நிகழ்வு உனக்கு என்னத்தைத்தான் மனதில் உணர்த்தியது? லா. ச. ரா. கண்ட அவர் தன் நெஞ்சதறிந்த அந்தக் காட்சியிலே கெளரவம் தான் அந்தப் பூனையிலிருந்து பிரசன்னமாகியது.
ஆனால் இந்த நாய்களிலிருந்து நீ கண்டு கொண்டது. மன அலைச்சலைக் கொடுக்கும் காமக் குரோத மோகங்கள். பாலியல் வக்கிரம்! அந்த வக்கிரத்தின் முடிவில் நீ அவைகளில் கண்டமைந்ததாய் இருக்கிறது – முடிவில் மரணம் தானே? அந்த ஆண் நாய் இறந்து போன தன் நேச நாயை – தவித்து மூச்சுவிட்டுக் கொண்டு பார்த்தபடி ஒரு வித அவமான உணர்வுடன் நிற்பது போல நின்று கொண்டிருக்கிறது. தனக்குப் பிடித்ததை இனிமேல் செய்ய அனுமதிக்கப்பட்டு விட்டதுபோல முகமெல்லாம் மெத்தான அமைதியுடன் இரத்தத்தால் சிவந்த மற்றைய அந்தப் பெட்டை நாய் நின்று கொண்டிருக்கிறது.
இறந்த அந்தப் பெட்டை நாயில் நீயும் அன்புள்ளவன் தான் ஆனால் அந்த நாய் இறந்ததை நினைத்து உன்னை நீ ஆறாத்துயரில் ஏன் வருத்திக் கொள்ளப் போகிறாய்? நாய்களின் சண்டை முடிந்து ஓய்ந்த பிறகு உனக்கு சித்தத்தெளிவு வந்துவிட்டது. திரும்பிப் பெற முடியாத கடந்த காலங்களை இப்போதெல்லாம் நீ இசைவுபடுத்திக் கொள்வ தில்லைத்தானே? அந்த நாய் இறந்துவிட்டது. அதன்கதை முடிந்துவிட்டது. ஆனாலும் இப்போது நீ செய்ய வேண்டிய வேலைகள் இரண்டு – நீ இனிமேல் செய்ய வேண்டியதாய்க் காத்திருப்பது போல இருக்கின்றனவே…. அவற்றில் ஒன்று உடனே ஒரு கூலி ஆளை கூட்டி வந்து இறந்த நாயை புதைப்பதற்கு ஒரு குழிவெட்ட வேண்டும்.
அந்த வேலை முடிந்தும், இறந்தும் போய் விட்ட நாயை அதிலே போட்டுப் புதைத்துவிட்டு உயிருடன் உள்ள நாய்களுக்கு மருந்து கேட்டு வாங்கவென்று வைத்தியரை நாடிச் செல்ல வேண்டும். “இந்த வேலைகளையெல்லாம் நான் இனி எப்போது செய்யத் தொடங்கி என் நேரத்துக்குள்ளாக செய்து முடிப்பது…?”
அவசரத்தில் வீட்டைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு மள மளவென்று வீதிவழியே இப்போது நீ யோசனையோடு நடந்து கொண்டிருக்கிறாய்.
வெயில் ஏறிவிட்டது.
உன் கையிலுள்ள வீட்டுக் கதவுச் சாவி நீ நடந்து கொண்டிருக்கையில் நழுவிக் கீழே விழுந்தது உனக்குத் தெரியவில்லை “ஓய் ஓய்” என்று உன் பின்னாலிருந்து ஒருவன் உன்னை கூப்பிட்டவாறே இருக்கிறான். நீ அதையெல்லாம் கேட்டும் கேட்காதது போல் இருந்தபடிதான் உன் கால்களை வருத்துமளவிற்கு மிகவும் அவசரத்தோடு இப்போது அவ்வழியே நடந்து கொண்டிருக்கிறாய்.
(மார்ச் – 2010)
– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.
![]() |
நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026
கடவுளே உனக்குக் கேட்கிறதா
நீ.பி.அருளானந்தம்
October 9, 2026
