பூசைக்குள் வரும் பூக்கள்
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2026
பார்வையிட்டோர்: 1,046
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

“இன்னைக்காவது பேச்சு குடுத்து அவளை சீக்கிரம் மடக்கனும்டா!” ரகு வந்ததுமே மாலா மேல் குறி வைத்து பேச்சை ஆரம்பித்தான்.
“கிழிச்சே….!” கணேசன்.
“என்ன கிழிச்சே ?! இப்போ பாருங்க உங்க கண் முன்னாலேயே அவள்கிட்ட பேசறேன் பழகறேன்!” வீராப்பாய் எழுந்தான்.
“மவனே உதை வாங்கப் போறே?” பாலா அவனைப் பயமுறுத்தினான்.
“பரவாயில்லே!” அவன் துணிச்சலாய் மாலா வீடு நோக்கி நடந்தான். மிச்ச நண்பர்களுக்குள் உள்ளுார உதறல் எடுத்தது.
“வீட்டுல யாருங்க?“ ரகு அவள் வீட்டு வாசலில் நின்று குரல் கொடுத்தான்.
“யாரு?” மாலா வெளியே வந்தாள்.
“நா..நான் ரகு. குடிக்கத் தண்ணி வேணும்.” வாயில் கட்டை விரலை வைத்துக் காட்டினான்.
உள்ளுார் வாலிபன். மேலும் தினம் எதிரில் தலைகாட்டுபவர்கள். எப்படி இல்லையென்று சொல்ல முடியும்?…
“இதோ வர்றேன்!” அவள் திரும்ப உள்ளே சென்றாள். சொம்புடன் வந்தாள். நீட்டினாள்.
ரகு தாகமே இல்லாமல் வாங்கி மடக் மடக்கென்று குடித்தான். ஏதோ ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டது போல் முகத்தில் மலர்ச்சி. “நன்றி!” காலி சொம்பைத் திருப்பிக் கொடுத்து திரும்பினான். நண்பர்களிடம் புன்னகையுடன் வந்தான்.
“என்ன பேசியாச்சா?” சீனு.
“ஓஓ…!”
“என்ன பேசினே”
“தண்ணிக் கேட்டேன் குடுத்தா…குடிச்சேன்!”
“த்தூ…” ஒருத்தன்.
“இது ஒரு பேச்சா?” – இன்னொருத்தன்.
“உங்களுக்குப் பெண்களை மடக்குற வித்தை தெரியாது. முதல்ல இப்படித்தான் பேச்சுக் கொடுக்கனும். அடுத்து இன்னும் கொஞ்சம் தொடரனும்….நெருங்கனும் நாலு நாளுக்குப் பிறகு கடைசியாய் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லி மடக்கனும்.”
அவர்கள்…இவன் அரிச்சுவடியைக் கேட்டு வாயைப் பிளந்தார்கள்.
மூன்றாவது வீட்டுக்காரனுக்கும் மாலா.. பாலுவைக் கட்டி வந்த நாள் முதலாய் இவள் மீது ஒரு கண். அநாவசியமாக வந்து பேச்சுக் கொடுப்பான். ரகு பேச்சுக் கொடுத்துவிட்டுச் சென்றதைப் பார்த்ததும் அவனுக்குச் சொரக்கென்றது, வாசலில் வந்து நின்றான்.
“மாலா!”
“என்னண்ணே?” வெளியே வந்தாள்.
“இந்த பசங்ககிட்ட அநாவசியப் பேச்சு வேணாம். எந்த உதவியாய் இருந்தாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளு. உதவறேன்.” என்று அழுத்திச் சொல்லி “பொறுக்கிப் பசங்க! அலையுறானுங்க. இந்தா சாவி. என் வீட்டுக்காரி வெளியில போயிருக்கா. வந்தா கொடு” அசட்டு சிரிப்பு சிரித்து கொடுத்து விட்டுச் சென்றான்.
மாலாவிற்கு எரிச்சலாக இருந்தது.
‘ஆண்கள் ஏன் இப்படி அலைகிறார்கள்?! உடல் ஊனமென்றால் தாம்பத்தியத்தில் குறை உள்ளவன் என்று அவர்களுக்கு நினைப்பு. மனைவி அலைவாள் என்று கணக்கு. எந்த பெண் அப்படி அலைவாள்? கற்பு மானம். மாட்டாள். ஊனமானப் பெண்ணை நல்ல ஆண் திருமணம் செய்து கொண்டால் எந்த பெண்ணும் அவனை மொய்க்க மாட்டார்கள். அவனை மதிப்பாய்ப் பார்ப்பார்கள். அழைக்க மாட்டார்கள். பெண்கள் குணம் ஆண்களுக்கு இல்லை? காரணம் சபலம்!’ இவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
‘உன் புருசன் நடப்பு என்கிட்ட இப்படி..!’ என்று சாவி வாங்க வரும் அவன் மனைவியிடம் கொஞ்சம் போட்டுக் கொடுத்தால் போதும். அவள் பத்ரகாளியாகி விடுவாள். சொல்லலாமா?… யோசனை வந்தது.
குடும்பத்தில் வீண் தகராறு, பிரச்சனை வரும். ஒதுக்கினாள்.
பெண்களின் இந்த முன்னெச்சரிக்கை, நல்ல குணம், அழுத்த மனதும்தான் பல ஆண்களை அத்து மீற வைக்கிறது! என்பதும் அவளுக்குப் புரிந்தது.
சிறுசுகள் இளசுகள்தான் இப்படி என்றில்லை. பெருசுகளுக்கும் கொழுப்பு அதிகம்!
கோடி வீட்டு கோபாலு அறுபது வயதைக் கடந்தவர். இவர்கள் திருமணத்திற்கெல்லாம் வந்தவர்.
மாலாவை அவர் வழியில் தனியே பார்த்தால் போதும்….
“பாலு உன்னைக் ஒழுங்கா கவனிக்கறானா? இல்லேன்னா கூச்சப்படாம சொல்லு நான் வந்து பின்னி எடுக்கிறேன்… அவனை!” என்னவோ இவள் மீது அக்கரை கொண்டவர் போல் இரட்டை அர்த்தத்தில் தன் மனதை வெளிப்படுத்துவார். அவர்களுக்கெல்லாம் வயது ஒரு கவசம்.
‘போடா கிழட்டு ராஸ்கோல்!’ இவளுக்கு வாய் வரை வார்த்தை வரத் துடிக்கும். அடக்கிக் கொள்வாள்.
இன்று ஜொள்ளு விட்டு அலைபவர்களெல்லாம் நேற்று ஏன் தன்னைப் பெண் பார்க்க வரவில்லை? இப்படி வலிய வழிபவர்களுக்கெல்லாம் எப்படி பாடம் புகட்ட? அவளுக்குள் யோசனை ஓடியது. சிந்தனையைத் தீவிரப் படுத்தினாள்.
நான்கு நாட்களுக்கு முன் பூங்காவில் இவர்களைப் பார்த்து இரண்டு இளைஞர்கள் பேசியதுதான் முந்திரிக் கொட்டையாய் ஞாபகம் வந்தது.
அன்றைக்கும் எங்கும் தொல்லையாக இருக்கிறதேயென்று தம்பதிகள் பூ ங்காவில் போய் அமர்ந்தார்கள். சுவர் போல் கட்டையாய் வெட்டிவிடப்பட்ட செடிகளுக்கு அப்பால் இரு கல்லுாரி மாணவர்கள் பேச்சுக்குரல்.
“மச்சி ! சூப்பர் சரக்குடா!”
“எங்கே?”
“நமக்குப் பின்னால உட்கார்ந்திருக்கு!” கேட்டவன் மெளனமாக இருந்தான்.
“அவள் ஜாதகம் சொல்றேன் கேட்டுக்கோ. கண்டிப்பா இவ வெளியில அடிபடுவா.”
“எப்படி?“
“இந்த மாதிரி ஆளைக் கட்டினவள்ல்லாம் விரும்பிக் கட்டி இருப்பாள்ன்னு நெனைக்கிறீயா? மாட்டாள். அம்மா அப்பா நிர்பந்தம்.. இவனைக் கணவனாய் வைச்சிக்கிட்டு வேறொருத்தனைக் கைக்குள்ளே போட்டுக்கலாம்ன்னு கணக்குப் பண்ணி கட்டிருப்பாள். அது மட்டுமில்லாம இந்த மாதிரி புருசன்…. பொண்டாட்டியை எப்படி வைச்சிருந்தாலும் அவளுக்கு தன்னை நல்லவனாய்த் தொடனும்ங்குற ஏக்கம் இருக்கும். மாறுவாள்!“
அடுத்தவன் பேசவில்லை.
“இவ மட்டும் அப்புடி இப்புடி இருந்தாள்ன்னா சாருவைத் தாண்டிடுவாள்!”
”யாரு சாரு?”
“நீ சைவம். நான் அசைவம் சொன்னேன் பாரு. என்னைச் செருப்பால அடிக்கனும்.!” எரிச்சல் பட்டவன் குரலை இன்னும் தாழ்த்தி
“பலானவள். உதயம் நகர் அஞ்சாவது குறுக்குத் தெருவுல ஆறாவது வீடு. மவ மூக்கும் முழியும் பேசும். படுக்கையில விளையாடுவாள். மீண்டும் மீண்டும் சிரிப்பு போல ஒரு தடவை போனவன் அடுத்தடுத்தும் போவான். மணிக்கு நானூறு ரூபாய்தான். புரோக்கர் சின்னப்பன் மூலமாத்தான் போகனும். ஒரு நாளைக்குப் பத்து டோக்கன்தான். அதுக்கு மேல கெடையாது. இந்த பொம்பளை தொழிலுக்கு வந்தா அவ கவுந்துடுவாள்.” முடித்தான்.
அடுத்தவன் மனைவியைப் பற்றி எப்படி நாக்கூசாமல் பேசுகிறார்கள்?!
‘அடி செருப்பால!’ அடிக்க ஆசை. நினைத்ததைச் செய்ய இவளென்ன ராணியா?!
“போகலாம் மாலா!” கணவன் அழைக்க எழுந்து நடந்தாள்.
‘இந்த துடைப்பக்கட்ட நாய்ங்க முகம் தொங்கிப் போகிறாப் போல ஏதாவது செய்யனும்! என்ன செய்யலாம்?!’ அவளுக்குள் மறுபடியும் சிந்தனை வந்தது. மூளைக்குள் வண்டு குடைந்தது.
கொஞ்ச நேரத்தில் மண்டைக்குள் பளீரென்று மின் வெட்டு! அந்த வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டு முன்னேறி உச்சி முதல் உள்ளம் கால்வரை அணு அணுவாக அலசினாள். எல்லாம் திருப்தியாய் இருக்க முகம் பிரகாசித்தாள்.
அத்தியாயம் – 4
வாடிக்கையாளர் வீட்டைவிட்டு வெளியேறியதும் உடைகளைச் சரி செய்து கொண்டு கட்டிலை விட்டு எழுந்தாள் சாரு. அழைப்பு மணி அடித்தது. வந்து கதைவைத் திறந்தவளுக்குச் சின்ன அதிர்ச்சி.
வாசலில் இருபத்தைந்து வயதில் ஒரு இளம் பெண். மங்களமாய் நெற்றியில் குங்குமப் பொட்டு. கழுத்தில் பாதி அழுக்கடைந்த புது தாலி.
‘யாரிவள்? எவன் பொஞ்சாதி? வந்து சென்றவள் மனைவியா? எந்த புருசனை என்னிடமிருந்து மீட்க வந்திருக்கிறாள்?!’ புரியாமல் பார்த்தாள்.
“வணக்கம்மா….” மாலா அவளைப் பார்த்து பவ்வியமாய் கை கூப்பினாள்.
“வணக்கம் நீ…நீங்க ?”
“என் பேர் மாலா”. இவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“என்ன விசயம்?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்…”
“என்ன சேதி?”
“ஒரு முக்கியமான விசயம்” வெளியே நிற்க சங்டபடுவள் போல் அக்கம் பக்கம் பார்த்தாள்.
சாருவிற்கு அவள் சங்கடம் புரிந்தது,
நாம் எவள் புருசனையும் வா என்று அழைக்கவில்லை. வந்தவனையும் இரு என்று இருத்திக் கொள்ளவதில்லை அடுத்து வா என்றும் அழைப்பதில்லை. இவள் தனக்குப் பாதிப்பு அவனைச் சேர்க்கதாதே என்று சத்தம் போட்டோ சமாதானமாகவோ கேட்டால் சரியென்று பிரச்சனை முடிவு! என்று தனக்குள்ளேயே சமாதானம் செய்து கொண்ட சாரு துணிந்து “உள்ளே வாங்க” அழைத்தாள்.
மாலா உள்ளே நுழைந்து கதவைச் சாத்தி தாழ் போட்டாள். சாருவிற்குள் திக்கென்றது.
ஏன் தாள் போட வேண்டும்? சண்டை சமாதானம் காலில் விழல் வெளியே தெரியக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை! ஆக இவள் ஏதோ ஒரு முடிவில் வந்திருக்கிறாள்! மனசுக்குள் சின்ன கலக்கம் வர தெளிந்தாள். எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “உட்காருங்க” சொல்லி எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.
மாலா அமர்ந்தாள். என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது மனசுக்குள் கொஞ்சம் தடுமாற்றம்.
“என்ன?”
“வந்து…வந்து….”
“தைரியமா சொல்லுங்க”.
“என்… புருசன் ஊனம். போலியோ நோயால் இரண்டு காலும் சூம்பிப் போனவர்.”
இது சண்டை கேஸ் இல்லை. வேறு.
“ஏதாவது உதவி செய்யனுமா?“
“வே….வேணாம்!”
“பின்னே?”
“என் அம்மா அப்பா ஏழை. நான் ஒரே பெண். என்னை கூன், குருடு, நொண்டி, முடத்துக் கெல்லாம் கொடுத்து கிணத்துல தள்ற அளவுக்கு வறுமை இல்லே. எனக்கு நல்ல வரனாய்த்தான் தேடினாங்க. தரகர்கிட்ட சாதகம் கொடுத்தும் தேடச் சொன்னாங்க….”
“பின்னே எப்படி இப்படி?” சாருக்கு அவசரம்.
“சொல்றேன். ஒரு நாள் அப்பாவோட நெருங்கிய நண்பர் எங்க வீட்டுக்கு வந்தார். அவர் எங்களுக்கு ரொம்ப ரொம்ப அந்நியோன்யம். என் வீட்டுக்காரர் புகைப்படத்தைக் காட்டி பேர் பாலு. கம்பெனியில குமாஸ்தா வேலை. கைநிறைய சம்பளம். எந்த வித கெட்டப் பழக்கமும் கெடையாது. பொண்ணைக் கொடுத்தால் கண் போல காபந்து செய்வார். புகுந்த வீட்டுல யாரும் கெடையாது. குப்பத்துல சின்னதாய் ஒரு கூரை வீடு இருக்கு. வயசு முப்பது. அதுல தனியா இருந்து கைப்பொங்கலும் ஓட்டலுமாய்ச் சாப்பிட்டு வர்றார். இவருக்கு முடிச்சால் பெண் கண்ணைக் கசக்கிக்ட்டு வெளியில நிக்காது. ஆனா மாப்பிள்ளைக்கிட்ட குறை இருக்கு. அதை நீங்க பெரிசு பண்ணக்கூடாது. சொன்னார்.”
“என்ன ஊனம்…?” அப்பா கேட்டார்.
“போலியோ நோயால் ரொண்டு காலும் சூம்பி ஊனம்.!” இடியை இறக்கினார்.
அம்மா அப்பா எனக்கெல்லாம் அதிர்ச்சி.
தொடர்ந்தார்.
“கை உன்றி முட்டிப் போட்டு தவழ்ந்து பச்சைக் குழந்தை போல நடப்பார். வெளி போக்குவரத்தெல்லாம் மூணு சக்கர வாகனம். சைக்கிள் வண்டி. சொன்னார்.
கேட்ட அப்பா அம்மாவுக்கு முகம் தொங்கிப் போச்சு. எனக்கும் பிடிக்கலை. ஆனா… அவர் எங்க முகத்தைப் பார்த்து அடுத்து கேட்டதுதான் எனக்குள் உறுத்திச்சு முடிவை மாத்திச்சு.
“என்ன கேட்டார்?”
“எல்லா பொண்ணும், பெத்தவங்களும் நல்ல மாப்பிள்ளையாய்ப் பார்த்துக் கட்டிக்கிட்டுப் போனா இந்த மாதிரி ஆண்களுக்கெல்லாம் வாழ்வு தர்றது யாருன்னு கேட்டார்.”
“நல்ல கேள்வி!” சாருவும் அதை ஆமோதிப்பது போல சொல்லி தலையாட்டினாள்.
“அதே கேள்வியை நானும் என்னைத் திருப்பிக் கேட்டேன். எனக்குள்ளே நாம் ஏன் கட்டிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. உடனே சம்மதம்ன்னு சொன்னேன். என் அம்மா அப்பாவுக்கு அதிர்ச்சி. என்னம்மா சொல்றேன்னு அலறினாங்க. ஏம்ப்பா ! ஏன் செய்யக்கூடாதுன்னு அவுங்களைத் திருப்பிக் கேட்டேன். அதுக்கு அம்மா… வழி இல்லாம நாங்க உன்னைக் கெணத்துல புடிச்சு தள்ளிட்டோம்ன்னு ஊர் உறவு சொல்லும்ன்னு கமறினாங்க. உண்மை என்னன்னு நமக்குத் தெரியும். மத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலை இல்லே. அவரையே முடிங்க. மறுத்தா எனக்கு கலியாணம் வேணாம்ன்னு உறுதியா சொன்னேன். வழி இல்லாம பெத்தவங்க சம்மதிக்க.. திருமணம் குடித்தனம்.” நிறுத்தினாள்.
‘என்ன துணிவு?!’ சாருவிற்கு ஆச்சரியமாக இருந்தது. வியப்பாய் அவளைப் பார்த்தாள். அதே சமயம் ‘எதற்கு இந்த கதை? இவள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?!’ குழம்பினாள்.
மாலா தொடர்ந்தாள்.
“எங்க வீடு குடிசை குப்பம். நான் நினைச்சு வந்ததுக்கு மேலாய் என் புருசன் என்னைத் தங்கமாய்த் தாங்குறார். நாங்க ரெண்டு பேரும் சந்தோசமாய் கடற்கரை சினிமாவுக்கெல்லாம் போறோம். அவர் மூணு சக்கர சைக்கிள்ல பின் பக்கம் ரெண்டு பேர் உட்கார்ற அளவுக்கு வசதி இருக்கு. நான் அதுல உட்கார்ந்துப்பேன். அவர் வலிப்பார். கை வலிச்சு களைச்சா நான் இறங்கி தள்ளிப்போவேன். எங்களுக்குள்ளே எந்தவித கஷ்டம், சங்கடம், தாழ்வு மனப்பான்மை இல்லே.”
“வேற என்னதான் பிரச்சனை?” சாருவிற்குப் பொறுமை இல்லை.
“பிரச்சனை அவரால இல்லே. மத்தவங்களால! அவரைவிட நான் அழகு. குறை இல்லே. எங்களைச் சோடியாய்ப் பார்க்கிற இளவட்டமெல்லாம் என்னை மட்டும் தனியா பிரிச்சுப் பார்க்கிறாங்க. அதுல வக்கிரம் இருக்கு. என் புருசன்கிட்ட எனக்கு தாம்பத்தியம் சரி இல்லே ஊனம்ங்குற குறை. பார்த்தால் மடங்கிடுவாள் முயற்சி செய்தால் வீழ்த்திடலாம்ங்குற எண்ணம் இருக்கு. வயசு வித்தியாசம் இல்லாமல் இதை துணிஞ்சே சில பேர் என் காதுல விழறாப்போல ஜாடை மாடையாய்ச் சொல்றாங்க. பக்கத்து வீட்டுக்காரனுக்கு முப்பது வயசிருக்கும். ரெண்டு புள்ளைங்களுக்குத் தகப்பன். மனைவி குத்துக்கல் போல இருக்காள். இருந்தும் அவனுக்கு மத்தவங்களைப் போல என் மேல ஒரு கண். நான் அவனை அண்ணேன்னு கூப்பிட்டாலும் உனக்கு என்ன கஷ்டம் குறையாய் இருந்தாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளு உதவறேன்னு ரெட்டை அர்த்தத்துல சொல்றான். எனக்கு அவனை அறையனும் போல் ஆத்திரம் வந்தாலும் சரிண்ணேன்னு சரிச்சு சமாளிச்சு பொறுத்துக்கிறேன். அவரால தாங்கிக்க முடியலை. என்னால உனக்கு இந்த சங்கடம் நான் விவாகரத்துத் தர்றேன். வேற நல்லவனாய் பார்த்து முடிச்சு சந்தோசமாய் வாழுன்னு சொல்லி வருத்தப்படுறார்.”
“எனக்கு இவுங்களைப் போங்கடான்னு விரட்டி அடிக்க துணிவு இருக்கு. போலீஸ் சொல்லி தண்டனை வாங்கிக் கொடுக்கவும் வழி இருக்கு. ஆனா இதுனால பின்னால பிரச்சனை வரும். பாதிக்கப்பட்டவன் தொல்லை கொடுப்பான். முடியாதவரை ஒரு உதை விட்டு தள்ளிட்டுக்கூட என்னைச் சுலமாய்த் துாக்கிப் போவான். ஆத்திரம்தானே..!. மனுசன் எதை வேணுமின்னாலும் செய்வான். அதனால அதையெல்லாம் ஒதுக்கிட்டேன். இருந்தாலும் எந்தவித அசம்பாவிதம், சிக்கல் இல்லாம இப்படி ஜொள்ளுவிட்டு சபலப்பட்டுத் திரியறவங்க முகத்துல கரியைப் பூசறாப்போல ஏதாவது செய்ஞ்சி எங்களைப் பார்த்தாலே தலையைக் குனிஞ்சு ஓடச்செய்யனும்ன்னு ஆசை உறுத்தல் இருக்கு. அதே சதா யோசனை. நேத்திக்குத்தான் அதுக்கு வழி கெடைச்சுது. அக்கு வேறாய் ஆணி வேராய் அலசினேன். எல்லாம் திருப்தியாய் இருக்கு. ராத்திரி அதை என் கணவர் காதுலேயும் போட்டேன். உனக்கென்ன பைத்தியமான்னு ஆரம்பத்துல எரிஞ்சு விழுந்தவர் அடுத்து நான் சொல்ல சொல்ல சமாதானமாகிட்டார். ரொம்ப வாக்குவாதம் சண்டை போட்டு பூரண சம்மதமும் வாங்கிட்டேன் அதுக்கு நீங்க உதவனும்.” நிறுத்தினாள். சாரு துணுக்குற்றாள்.
“இந்த உதவியினால உங்களுக்கும் பலன் உண்டு. சமூகத்துல ஒரு மதிப்பு, மரியாதை ஏற்படும்.”
“அப்படி என்ன உதவி?!” புரியாமல் பார்த்தாள்.
“நீங்க என் புருசனுக்கு ரெண்டாவது மனைவியாய் வரனும்!”
“ஏய்..!” சாரு விதிர்விதிர்த்து அலறினாள். நெஞ்சம் படபடத்தது.
“அதிர்ச்சி அடையாம முழுசா கேளு சாரு. நான் இந்த முடிவுக்கு வந்ததுக்கு நிறைய காரணங்களிருக்கு. ஒன்னு… ஊனத்துக்கு ரெண்டு பொண்டாட்டியான்னு அசத்தல். அந்த அசத்தல்ல உன்னைப் போல பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து சமூகத்துல ஒரு மதிப்பு மரியாதைக்கு உயர்த்தக்கூடாதுன்னு எனக்குள் கேள்வி இதுல இடைச்சொருகலாய் கூடுதல் பலாபலன்.. பலான பொண்ணையே அசத்தி திருமணம் முடிச்சிருக்கான்னா இவன் சராசரி ஆம்பளைக்கு மேலேன்னு ஜொள்ளு விடுற எதிரிங்க முகத்துல கரி, தலை குனிவு.”
சாரு அசந்தாள்!
“இன்னைக்கு நீ பணம் காசுல புரண்டாலும் இந்த தொழில் சகதி, பாவம். வயசான காலத்துல கைவிடும். ஆதரிக்க ஆளில்லாம போகும். தனிமை வாட்டும். காசு பணத்தைக் கட்டி சம்பளத்துக்கு ஆள் புடிச்சி வைச்சிருந்தாலும் அவுங்ககிட்ட உண்மையான அன்பு, ஆதரவை எதிர்பார்க்க முடியாது, நீ இதுக்குச் சம்மதிச்சா… தொழில் வசதிக்காக நீ குடும்பக் கட்டுப்பாடு செய்து உனக்குன்னு சொந்த வாரிசு இல்லாம போனாலும் என் வாரிசு உன் வாரிசு. தோள் கொடுக்க நான், புருசன். எப்படியும் கடைசி காலம் கஷ்டமில்லே. நிம்மதி. என்ன சொல்றே?” நிறுத்திப் பார்த்தாள்.
சாருவிற்கு எல்லாம் புரிந்தது, அந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சி தலை தூக்கியது.
“ஊனம் ஒரு குறை இல்லே சாரு. மனசு இருந்தால் மார்க்கம் உண்டு. துணிஞ்சவங்களுக்கு எதுவும் துக்கம் கிடையாது. இதையெல்லாம்விட அடுத்து முக்கியமான விசயம்…. தாலி கழுத்துல ஏறின அடுத்த வினாடி இந்த தொழிலை விட்டுடனும். அன்னைக்கு அவ அப்படி. இன்னைக்கு ஒழுங்குன்னு மத்தவங்க மனசுல மதிப்பு மரியாதை ஏற்படுறாப்போல செய்யனும். நாம சும்மா இல்லாம அவர் சம்பாத்தியம், சேமிப்புல ஒரு கடை வைக்கலாம். தையல் வேலை, கைத்தொழில் செய்யலாம். ரெண்டு மனைவி சிக்கல் வரும்ன்னு யோசனை வேணாம். நாம ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து மனசொத்து வாழ்ந்தால் ஏது சிக்கல்?!”
‘என்ன துணிவு, புத்திசாலித்தனம்?!’ கேட்ட சாருவிற்குச் சிலிர்ப்பாய் இருந்தது. மாலாவைப் பெருமையாய்ப் பார்த்தாள்.
‘ஒரு வேளை இவள் இப்படியெல்லாம் பேசி வளைத்து நம் காசு, பணம், சொத்து, இந்த வீட்டைக்குறி வைக்கிறாளோ!’ சடக்கென்று சந்தேகம் தலை தூக்கியது.
“இந்த காசு பணம் சொத்தெல்லாம் நீ கொண்டு வரத் தேவை இல்லே சாரு. நாம யோக்கியமா வாழ நினைச்ச பிறகு எதுக்கு இந்த பாவப்பட்ட காசு, சொத்து? இதையெல்லாம் உன் கையாலேயே ஒரு அனாதை ஆசிரமம், ஊனமுற்றோர் இல்லம், முதுமை காப்பகம்ன்னு பிடித்த இடத்துல குடுத்துடு அப்படித்தான் வரனும்.!” மாலா அதையும் படம் பிடித்தவள் போல் பேசி சரி செய்தாள்.
சாரு பிரமிப்பின் உச்சுக்குப் போய் “அக்கா!” என்று தழுதழுத்து அவளைக் கட்டிப்பிடித்தாள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வரப்பு பூக்கள்
பிரேமா நரசிம்மன்
July 20, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 20, 2026
ஏடிஎம் மகள்
தரணி யோகேஸ்வரன்
July 20, 2026
