சோதனை
கதையாசிரியர்: தெளிவத்தை ஜோசப்
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2026
பார்வையிட்டோர்: 91
(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தரையை தோண்டிக் குழியாக்கி அந்தப்புது மண்ணின் கதகதப்பில் நாய்கள் படுத்திருக்கும் –
இது இரவில்.
நாய்கள் எழுந்து போன கையுடன் மரம் அறுத்த தூசி போன்ற மண்குவியலில் கோழிகள் புதைந்து குடைந்து கொண்டிருக்கும்
இது காலையில்.
கோழிகளை விரட்டிவிட்டு அவைகள் சிலப்பித் தள்ளிய மண்ணை வெளியே தள்ளும் உத்தியில் சின்னஞ்சிறுசுகள் சவுக் குத் தழையால் அல்லது தேயிலை மிளாரால் தரையை மேலும் குழியாக்கிக் கொண்டிருக்கும் –
இது பிந்திய காலையில்.
இன்று இதொன்றையும் காணவில்லை.
தொடுவானம்வரை சீராக நீண்டிருக்கும் ‘பச்சை பசேல்’ மலைச் சரிவுகள்போல் வழுவழுப்பா, மட்டமாக இருக்கிறது பள்ளிக்கூடத்தின் தரை.
மண்போட்டு மட்டப்படுத்தி பலகை போட்டு அடுத்து பசுச் சாணிபோட்டு மெழுகி பளபளப்பாக வைத்திருக்கின் றார்கள் பள்ளிக்கூடத் தரையை.
வருடத்துக்கு ஒருதடவை வந்து, தோட்டத்துப் பிள்ளை களுக்கு மாஸ்டர் படிப்பித்திருக்கிறாரா என்பதைப் பரீட் சித்துப் பார்க்கும் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டர் இன்று வரு கின்றார். இரண்டாவதிலிருந்து மூன்றாவதற்கும், மூன்றாவதி லிருந்து நான்காவதுக்குமாக தோட்டத்துப் பிள்ளைகளை வகுப்பேற்றிவிட இன்ஸ்பெக்டர்தான் வரவேண்டுமென்பது ஒரு வெறும் ‘இது’தான். மாஸ்டருக்கு இயலாததா அல்லது தெரியாததா?
ஒருவாரமாக மாஸ்டருக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லை. மனு ஷியின் கடிதத்துக்குப் பதில்கூடப் போடவில்லை. நேரம் வேண்டாமா! பரீட்சை முடிந்தகையுடனே ஒருமாதத்துக்குப் பாடசாலையை மூடிவிட்டு கோச்சேறினால் அடுத்தநாள் ஊரில் இருக்கலாம்.
யாழ்ப்பாணம் என்ன ஆயிரம் மைலுக்கப்பாலா இருக்கிறது?
இதை உத்தேசித்துத்கான் அம்மாவின் கடிதத்துக்கும் பதில் போடவில்லை. இதையே உத்தேசித்துத்தான் சம்பளம் வாங்கிய கையுடன் பெரியய்யா குடும்பத்துடன் அம்மாவை யும் ஊருக்கு அனுப்பிவைத்தார். வீட்டைக் கட்டி முடித்து என்ன செய்ய. சுவரெல்லாம் பல்லைக்காட்டிக் கொண்டிருக் கிறது. கல்கல்லாய் பிளாஸ்டர் பண்ணவேண்டும்.
வீட்டுச் சுவர் நினைவு வந்ததும்தான் பாடசாலையின் அரைச்சுவர் தெரிந்தது. சுண்ணாம்பு அடித்து பளீரென்றிருக் கும் சுவரின்மேல் படம் மாட்டுவதற்காக ஏறிநின்ற பையன் தெரிந்தான்.
பள்ளிக்கூடத்துக்கு சுண்ணாம்பு அடிக்கவென்று வாங்கிய ஆறுபெட்டி நீலத்தில், பெரியய்யா வீட்டுக்கொன்று தனக்கு இரண்டு என்று எடுத்து மனைவி கையில் அனுப்பியது போக மிகுதி மூன்று பக்கெற் நீலத்தையும் சோறுவடித்த கஞ்சியில் கலக்கி கணக்காக சுண்ணாம்பு கலந்து சுவற்றுக்கு அடித்திருந் தார். பங்களா முன்சுவர் போல் பளீரென்றுதான் இருக் கிறது பள்ளிக்கூடச் சுவர். மண் காலுடன் அதில் போய்வரு கிறானே மடக்கழுதை என்று நொந்தவர், ஊறிய எச்சிலுடன் ஊர் நினைவுகளையும் விழுங்கிக்கொண்டு எழுந்தார்.
‘டேய் ஒரு பேப்பரைப் போட்டு ஏறேண்டா மூதேவி என்று கத்தினார்.
நேற்றிலிருந்து ஒரு சுடுகுஞ்சை அவர் உள்ளே விடவில்லை தரையை அழுக்காக்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால்.
ஐந்தாம் வகுப்புப் பையன்கள் ஆறுபேரையும் காலம் பெறவே வரச்சொல்லிவிட்டு அவரும் பாடசாலைக்கு விடிந் ததும் வந்துவிட்டார்.
அரைச் சுவரில் ஏறிநிற்கும் அத்தனை சிறுவர்களும் காலுக் கடியில் கடதாசி போட்டு நிற்கின்றனர். பெட்டிக்குள் சுருட் டிக் கிடந்த கதைப் படங்கள் ஒவ்வொன்றாகத் தொங்கத் தொடங்கின.
குரங்கும் முதலையும், குரங்கும் பாற்கட்டி திருடிய பூனை களும், நரியும் திராட்சையும், ஓநாயும் ஆட்டுக் குட்டியும், எலியும் தவளையும் இன்னும் எத்தனை எத்தனையோ!
ஆணியில் மாட்டப்பட்டு ஆடி ஆடி விரியும் அத்தனை படங்களும் விலங்குகள் பற்றியதுதான். உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு மனிதன் உயர்ந்துவிடவில்லை என்பதையா இது காட்டுகிறது?
“அந்தச் ‘சிங்கமும் முயலும்’ படத்தைக் கழட்டு. ஒரு பயலுக்குத் தெரியாது அந்தக்கதை. உனக்காவது தெரியுமா? அதைக் கொண்டுவந்து எதிரே மாட்டிவச்சா, சுருட்டிப் போட்டுட்டு அதோ அந்தத் தூண்லே தொங்குற ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியையும்’ கொண்டாந்து இங்கேபோடு…”
‘அந்தத் தூணுக்குப் படம் இல்லீங்களே சார்’
‘வேறு ஏதாவது இருக்கான்னு தேடிப்பார், இல்லாட்டி சிங்கமும் முயலையும் அங்கே மாட்டு, தூரத்திலே தொங் கட்டும் ……’
இன்றையப் பொழுது கழிந்துவிட்டால் … ! ஒருவருடம் ஜாலியாக இருக்கலாம்.
அவர் புறப்படவேண்டியதில்லை தான். இருந்தாலும் திரு மணதினம் போன்றதொரு பயங்கலந்த பரபரப்பு எப்படியோ வந்து விடுகிறது. ‘இந்தத் தோட்டத்து ‘பக்கிகளை’ நம் ப முடியாது. திடீர் திடீரென்று லயத்தில் படுத்துக்கொள்ளுங் கள். இந்தத் தோட்டம் மட்டுமா? முன்பு வேலை செய்த தோட்டத்திலும் இதே கதைதான். இந்தச் சனியன்களை பாடசாலைக்கு இழுப்பதே ஒரு அதிசயம்’. மனம் எதை எதையோ மெல்லுகின்றது.
இந்தத் தோட்டத்துக்கு வருமுன் பதுளைப் பகுதியில் ஒரு சிறிய தோட்டத்தில் இருந்தார். அது ஒருநேரப் பாடசாலை சிங்கிள் செக்ஷன். இங்கே கிடைக்கும் சம்பளத்தில் சரிபாதி தான் சம்பளம். வீடு கிடையாது. பள்ளிக்கூடத்தில் உள்ள அந்த ஒற்றை அறையில்தான் தங்கிக்கொள்ளவேண்டும்.
தற்சமயத்துக்கு ஒட்டிக் கொண்டால் போதும் என்று மற்றவர்களைப்போல் அவர் அங்கு ஒட்டிக்கொள்ளவில்லை.
இது போதுமென்ற மனத் திருப்தியுடன் தான் அங்கு நுழைந்தார். ஆனாலும் எந்த நாளும் இதே போதுமா? போதும் என்ற மனம் வந்துவிட்டால் மனித சமுதாயம் என்ன ஆவது! ஆகவே பேப்பர் பார்க்கத் தொடங்கினார்.
இப்போது வேலைசெய்கின்றாரே இந்த வேலை காலியாக இருப்பதாக ஒருநாள் பேப்பரில் இருந்தது.
இந்தத் தோட்டத்தைப்பற்றி ஏற்கெனவே அவர் நிறை யக் கேள்விப்பட்டிருக்கின்றார். வேலைசெய்தால் அப்படி ஒரு தோட்டத்தில் வேலை செய்யவேண்டும் என்று அங்கலாய்த் துக் கொண்ட நாட்கள் ஏராளம்.
அன்றே ஒரு அப்ளிக்கேசனை எழுதி எடுத்துக் கொண்டு அரைநாள் பாடசாலையையும் முழு நேரமாக மூடிவிட்டுக் கிளம்பினார்.
தன்னூர்க்காரரான மாஸ்டர் அந்தத் தோட்டத்துக்கு அடுத்த தோட்டத்தில் இருப்பது இவருக்குத் தெரியும். அங்கே போய் விசாரித்தார்.
அவர் சொன்னார். ‘பள்ளிக்கூடமென்றால் படுமோசம். மாட்டுக் கொட்டில் மாதிரி …..”
‘தொலையட்டுமன் நமக்கென்ன! வீடெப்படி’
‘வீடெண்டா ஏ ஒன். முன்பு கிளாக்கர் இருந்த பங்களா. பெரிய தோட்டம். ஏகப்பட்ட சலுகைகள்.
‘பிறகேன் விடுவான் ட்றை போடுவம்’ என்றவர் ‘ஆர் இன்ஸ்பெக்டர்’ என்றும் கேட்டார்.
இன்ஸ்பெக்டர் பெயரைக் கேட்டதும் துள்ளிக் குதித் தார். அப்போதே வேலைகிடைத்த மகிழ்வு அவருக்கு.
‘அவரே . ‘ என்று மறுபடியும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு ‘வாறனான்” என்று புறப்பட்டவர் நேராக இன்ஸ் பெக்டரனக் காண நடந்தார். வெறும்கையை வீசிக்கொண்டு போக இயலுமா!
அதே தோட்டத்துப் பாடசாலையில் ஐந்தாவது வரை படித்த ஒரு இளைஞன் தன்னுடைய சீனியர்ஸ்கூல் சர்டிபிக் கேட்டுடன் பெரிய துரையின் ஜன்னல்முன் நின்றான்.
அந்தப் பாடசாலைப் புழுதியில் புரண்டு, அந்தத் தேயிலைச் சரிவுகளில் விழித்தெழுந்து அந்த மக்களுடன் உண்டு, உறங்கி சண்டையிட்டு, அவர்களை நேசித்து, அவர்களில் ஒருவனாக வளர்ந்த அவன் இன்று அதே பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றும் எண்ணத்துடன் ஆபீஸ் படியேறினான்.
ஆயிரமாயிரம் தோட்டத்துக் குழந்தைகளில் ஒருபத்தை யாவது அதி உயரத்துக்கு இல்லாவிட்டாலும் அவனளவு உயரத்துக்காவது ஏற்றிவிடவேண்டும் என்ற பாச உணர்வு அவனுள் பொங்கி வழிந்தது.
‘இந்த வேலைமட்டும் கிடைத்துவிட்டால்’ என்ற உயிர்ச் சிரிப்புடன் துரையின்முன் நின்றான்.
எதிரே நிற்கும் இளைஞனின் தகப்பனாருடைய தன்னல மற்ற உழைப்பு, அடக்கம், பணிவு ஆகியனவற்றை நினைவுக் கிழுத்து ‘இவனிடம் அதில் பாதியாவது இருக்கலாம். நிற்கும் பணிவிலேயே தெரிகிறது’. என்ற எண்ணத்தையும் தகப்ப னைப் பற்றிய நினைவுடன் உறவாடவிட்டு தலையை ஆட்டிக் கொண்டவர் ‘சரி போ’ என்றார்.
பெரியதுரை ‘சரி போ’ என்றால் சரியேதான் என்பது அவனுக்குத் தெரியுமாதலால் ‘தேங்யூ வெரிமச் சார்’ என்று கூறிவிட்டுத் திரும்பினான்.
திரும்பி நடந்தவனிடம் ‘உன் தகப்பன் எப்படி? இன்னும் கடையில்தானா? நான் கேட்டதாகச் சொல்’ என்று கூறியதன் மூலம் உனக்கு நான் வேலைகொடுக்கிறேன் என்றால் அது உனக்காக அல்ல உனது தகப்பனுக்காக என்பதையும் நாசுக் காக அவனுக்குணர்த்திய பெரியவரை நன்றியுடன் ஒரு முறை ஏறிட்டு ‘எஸ் சார், ஹி இஸ் ஆல்ரைட்’ என்று கூறிவிட்டு நடந்தான்.
பென்ஷனில் போய் இத்தனை காலமான பின்னும் பெரிய துரை நினைவில் வைத்திருந்து கேட்குமளவு நல்லவராக இருந் திருக்கிறாரே தனது தந்தை என்றும் பெருமைப் பட்டுக் கொண்டான்.
‘தட் மேனேஜர் இஸ் மை குட் பிரன்ட் மாஸ்டர், நீர் ஒரு அப்ளிக்கேஷனை எழுதிப்போடும். ஐ வில் புட் இன் ஏ வேர்ட் எபவுட் யூ. இது வலு ஈஸி மாஸ்டர்’ என்று அவரை அனுப்பிய கையுடன் தோட்ட மனேஜருக்கும் டெலிபோன் செய்துவிட்டார் இன்ஸ்பெக்டர்.
ஸ்கூல் இன்ஸ்பெக்டர் இப்படி வந்து குறுக்கா விழுவார் என்று பெரியதுரை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர் கூறிய ஆளை எடுத்துப் போடாவிட்டால் சோதனைக்கு வரும் போது அது நொட்டை இது நொட்டை என்று எழுதிக் கொண்டே இருப்பார்.
எதிர்கால இடைஞ்சல்களுக்கு ஏன் இடம்வைக்க வேண் டும் என்ற எண்ணத்தில் இன்ஸ்பெக்டருக்கு ஓகே சொல்லி விட்டார் துரை.
தன்னை வந்து பார்த்த இளைஞனுக்கு ‘சரி போ’ என்று கூறும் உரிமை உள்ளது போலவே ‘இல்லை போ’ என்றுகூறும் அதிகாரமும் அவருக்கு உண்டுதானே.
‘ஏன் இல்லை’ என்று எப்படிக் கேட்பது! யார் கேட்பது!’
இந்தத் தோட்டத்து மாஸ்டர் வீட்டுக்குள் இவர் நுழைந் துவிட்டபிறகு இது நான்காவது சோதனை. சென்ற மூன்று முறையும் அதே இன்ஸ்பெக்டர்தான். இந்த முறையும் அவரேதான் பிறகேன் அவர் பயப்பட வேண்டும். இருந்தா லும் உள்ளூற ஒருபயம் இழையத்தான் செய்கிறது.
அடுத்த வருடம் சில வேளை இவர் மாற்றலாகிப் போக லாம். மதிகலாக எதை எதையோ மனம் அசைபோட்டுக் கொள்ளுகின்றது.
பிள்ளைகள் ஒவ்வொருவராக பாடசாலைக்குள் வருகின் றனர். மற்ற நாட்கள் போலல்லாது எல்லாப் பிள்ளைகளும் புதுச்சட்டை சகிதம் வருகின்றனர். சின்னக் கணக்கப்பிள்ளை ஐயாவின் மகள் மட்டும் ‘நான் சற்று உசத்தி’ என்று காட்டுவதற்காக ஒரு வெள்ளைக் கென்வாசை மாட்டிக் கெரண்டு வந்திருக்கின்றது. மற்றப் பிள்ளைகள் ஏக்கம் நிறைந்த கண்க ளுடன் அதை வேடிக்கை பார்க்கின்றனர்.
புது சிலேட்டுகள். புது புத்தகங்கள், ஆளுக்கொரு சிலேட் பென்சில்கள் என்று வகுப்புவாரியாக சகல பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படுகின்றது.
ஒருநாளும் இல்லாத திருநாளாய் புதுப் புத்தகங்கள் கிடைத்த ஜோரில் எல்லாப் பிள்ளைகளும் சுத்திப் படிக்கின் றனர்.
ஆக்ரோஷமாகப் பிரம்பை மேசையில் அறைந்து சத்தத் தைக் கட்டுப்படுத்துகின்றார் மாஸ்டா.
‘எவ்ரிதிங் பெர்பக்ட் மாஸ்டர்’ என்று கேட்டபடி சின் னத்துரை உள்ளே நுழைகின்றார்.
‘உனக்கெல்லாம் உள்ளே வேலை இல்லை’ என்று மாஸ்டர் வெளியே விரட்டிய பிள்ளைகள் சின்னத்துரையின் மோட்டார் சைக்கிளை சூழ்ந்துகொள்கின்றன.
‘எஸ் சார்’ என்று துரைக்கும் ‘ஓடிப்போ சனியன்களே என்று சைக்கிளைச் சூழ்ந்துகொண்ட சிறுவர்களுக்குமாகக் கூறிவிட்டு மாஸ்டர் துரையிடம் வந்தார். பள்ளிக்கூடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு துரை போய்விட்டார், கொழுந்துக் காட்டைப் பார்க்கும் அதே பழக்கம்.
பாலர் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை சோதனைக் கனுப்பும் பிள்ளைகளை இடாப்பில் அடையாளம் போட்டுக் கூட்டுகின்றார். நூற்றி ஏழுபேர். அப்பாடா! பலசரக்குக் கடைப் பட்டரையில் பண்டங்கள் அடுக்கி வைத்திருப்பது போல் குறுக்கும் நறுக்குமாகப் பிள்ளைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றனர்.
இவ்வளவு நாளும் பாடசாலைக்கே வராத சிலபிள்ளைகளும் இராப் பள்ளிக்கூடத்தில் படித்தவை – அருகே உள்ள டவுண் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் பையன்களும் அந்த நூற்றி ஏழுக்குள் நுழைந்துகொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு வகுப்பாக மேசைக்குமுன் அழைத்து யாருக்குப் பக்கத்தில் யார் நிற்கவேண்டும் என்று இடாப்பில் உள்ள பெயர்ப் பிரகாரம் நிற்கச் சொல்லிக்கொடுக்கின்றார்.
மணி ஒன்பதாகிவிட்டது. இன்னும் கார்ச் சத்தத்தைக் கூடக் காணவில்லை. ஐந்தாம் வகுப்புப் பையனில் ஒருவனை பாதையில் போய் நிற்கச் சொல்லுகின்றார். மேல் வளைவில் கார் வருகிறதா என்று கவனித்துக்கொள்ள. அவன் சவுக்கு மரத்தில் ஏறிக் கொள்ளுகின்றான். தூரத்தில் வரும்போதே பார்த்துவிடலாம் என்று.
அரைச்சுவற்றில் ஒரு ஜாடியில் பூ வைக்கப்பட்டிருக்கின் றது. பூச்சாடிக்கு நேராகக் கீழே ஒரு சிறிய கைவாளியில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது. சிலேட் அழிப்பதற்கு!
எச்சிலைத் துப்பி பிள்ளைகள் சிலேட் அழிப்பதில்லை என்று காட்டிக்கொள்ள.
ஒரு மூலையில் சிறிய டீப்போயில் இரண்டு பார்லி போத் தல்களும் ஒரு பிஸ்கட் பக்கெட்டும் இருக்கிறது. களைத்துப் போய்த்தான் வருவார் பாவம்!
‘எல்லோரும் வெளியே போய்விட்டு வந்துவிடுங்கள், அய்யா வந்தபிறகு யாராவது விரலை நீட்டிக் கொண்டு வந்தீர் களோ வெட்டிப் போடுவேன்’
பிள்ளைகள் அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடுகின்றனர்.
ஒன்பதேகால், ஒன்பதரை, ஒன்பதே முக்கால், மாஸ்ட ருக்கே சலிப்புத் தட்டுகிறது. எவ்வளவு நேரம் என்றுதான் காத்திருப்பது. இ. போ. சாவுக்காக நிற்பதுபோல்.
சவுக்கு மரத்தில் ஏறிநின்றவன் சர்ரென்று இறங்கினான். ‘கார் வருகுது சார் …’ அவனது குரலில் பயங்கலந்த ஒரு உற்சாகம் தொனித்தது.
‘எல்லாரும் சத்தம்போடாமல் இருங்கள். அய்யா உள்ளே என்று எல்லோரும் நுழையும்போது ‘காலை வணக்கம்’ எழுந்துநின்று கூறவேண்டும். கத்தக்கூடாது.
மாஸ்டர் றோட்டுக்கேறவும் காரில் இருந்து அவர் இறங் கவும் சரியாக இருந்தது. ‘குட் மோனிங் சேர்’ இவர் சொன் னதை அவர் கவனிக்கவில்லை.
‘எத்தனை பிள்ளைகள் மாஸ்டர்’ இறங்கிக் கார்க் கதவை பூட்டியபடி இஸ்ன்பெக்டர் கேட்கிறார்.
‘நூற்றிஏழு சேர்’
‘மை காட் எப்படி மாஸ்டர் சமாளிக்கிறியள்’
‘என்ன சேர் செய்ய … ’
இருவரும் உள்ளே நுழைகின்றனர்.
கூரைத் தகரம் ஒருவினாடி உப்பித் தணிகின்றது.
‘காலை வந்தனம், அமருங்கள். இப்படிச் சத்தம் போடக் கூடாது என்ன’
டைம் டேபிள், அடுத்த வருட இடாப்பு, மற்றும் வரு ரு டாந்த விபரத் திரட்டு ஆகிய வழமையானவைகளில் இன்ஸ் பெக்டர் கையொப்பம் இடுகின்றார்.
‘வில் கால் தெம் கிளாஸ் பை கிளாஸ், மாஸ்டர்’ என்ற படி அடுத்த தோட்டத்துப் பாடசாலைக்கு வழி கேட்டுக் கொள்கின்றார்.
அங்கேயும் இன்றுதானாம் இன்பெக்ஷன். இதே சடங் குகள்தான் அங்கேயும் நடந்து கொண்டிருக்கும். இங்கே முடித்துக்கொண்டு அங்கே போகிறாராம்.
‘நல்லவேளை அங்கே முடித்துக்கொண்டு இங்கே வராமல் போனாரே’ என்று மாஸ்டர் திருப்திப்பட்டுக் கொள்கின்றார்.
‘பாலர் வகுப்பு வரட்டும் மாஸ்டர்’
பிள்ளைகள் வந்து மேசைமுன் நிற்கின்றனர்.
சோதனைப் புத்தகத்தில் பாலர் வகுப்பை எடுத்து வைத் துக்கொள்ளுகின்றார்.
‘பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்’ முதல் பையனைக் கேட்கின்றார்.
‘செல்வராசா’
‘உன் பெயர்’
கடைசிப் பிள்ளையைக் கேட்கின்றார்.
‘தனபாக்கியங்க’
‘எல்லாரும் நம்பர் சொல்லுங்கள் பார்ப்போம்’
செல்வராசு ‘ஒன்று’ என்று தொடங்க தனபாக்கியம் ‘இருபத்தொன்பது’ என்று முடிக்கின்றது. புத்தகத்திலும் இருபத்தொன்பது பெயர்கள் இருக்கின்றன.
‘வெரிகுட் வெரிகுட்’ என்று முனகிக்கொண்டவர் ‘எல் லோரும் சேர்ந்து ஒரு பாட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்கின்றார்.
எந்தப்பாட்டைச் சொல்லுவது என்று தெரியாமல் ஒரு நிமிடம் சிறிசுகள் தவிக்கின்றன. ஆசிரியர் அடி எடுத்துக் கொடுக்கின்றார்.
‘ஓடி விளையாடு பாப்பா’ கத்தித் தீர்ந்தவுடன், இன் னொன்று சொல்லுங்கள் பார்ப்போம் என்கின்றார்.
‘அம்மா அய்யா ஆனவரே ஆடை அணிகள் அளிப்பவரே’ அதையும் கத்தித்தீர்ந்தவுடன் ‘ஒளவைப் பாடம் எடுங்கள், என்கின்றார்.
ஒளவைப் பாடம் வாசித்து முடிந்தாகி விட்டது. ‘எல் லோரும் சுவற்றிடம் போய் நின்று இப்போது வாசித்த பாடத்தை எழுதுங்கள்’ மணியைப் பார்க்கின்றார். பதினொன் றேகால்.
‘கரும்பலகை இரண்டிருக்குத்தானே மாஸ்டர் மூன்றாவது நான்காவது கணக்குப் போடுங்கள், முதல் வகுப்பை என்னி டம் விடுங்கள். இரண்டாவதற்கு நான் கொடுக்கும் பிரிவை சொல்வதெழுதல் போடுங்கள்’
ஒரே நேரத்தில் நான்கு வகுப்புக்கள் வெளியேவந்து விட்டன.
முதல் வகுப்பு மேசைமுன் நிற்கின்றது. ஐம்பதுக்கும் கீழ் விடை வருமாப்போல் மனக் கணக்குப் போடுகின்றார். பிழையாகக் கூறும் பிள்ளையின் பெயரைக் கேட்டு புத்தகத் தில் அந்தப் பெயருக்கு நேராக கணக்குக்கு முட்டை போடு கின்றார்.
டவுன் பள்ளிக்கூடத்துக்குப் போகும் நான்கு பையன்கள் வரிசையில் நிற்கின்றனர்.
சோதனையன்று இங்கு வந்துவிட வேண்டும் என்ற நிபந் தனையில்தான் அவர்களை டவுன் ஸ்கூலுக்குப் போகவிட்டார்
‘புத்தகத்தில் நரியும் முதலையும் பாடம் எடுங்கள். முதல் ஆள் வாசியும்’
பையன் வாசிக்கின்றான்.
‘அடுத்த ஆள்’
அடுத்தவன் வாசிக்கின்றான். சோதனைப் புத்தகத்தில் அடையாளம் இட்டபடி ஒரு பெயரைக் கூறுகின்றார். ‘இரா மன் வாசியும்
சிறிது நேரம் சத்தத்தைக் காணவில்லை.
கரும்பலகையில் கணக்கை எழுதி முடித்த ஆசிரியர் மேசையிடம் வந்ததும் தீயை மிதித்தவர்போல் நின்று விட்டார்.
வரிசையில் இராமனைக் காணவில்லை. எலும்பினுள்ளே ஏதோ குடைவதுபோன்ற உணர்வு.
‘எப்படிக் காணாமல் போனான் சனியன். இப்படி ஒரு தவறை எப்பிடித்தான் செய்திருக்கமுடியும்’ அவருக்கு ஒன் றும் பிடிபடவில்லை. ‘அந்த ராஸ்கல் டவுண் பள்ளிக்கூடம் போகின்றவன். எங்கே இராமன் என்று கேட்க யாராவது அவன் வேறு ஸ்கூலுக்குப் போகிறான் என்று கூறிவிட்டால் பாடசாலையிலேயே இல்லாத மாணவனை நான் பரீட்சைக்கு தோற்றுவித்து இன்ஸ்பெக்டரை ஏமாற்ற முயல்வதாக அல் லவா கூறுவார். பாரதூரமான குற்றமாயிற்றே, என்று பதறி யவர் வரிசையை எண்ணினார். இருபத்திரண்டுதான். இரு பத்து மூன்றுதான் இருக்கிறது.
‘முருகர்’ என்று கையாட காலாட நின்றவருக்கு இன்ஸ் பெக்டரே கைகொடுக்கின்றார்.
‘வாசிப்பைக் கவனமாகப் பார்க்க வேண்டும். பெயர் கூறியதும் விட்ட இடத்திலிருந்து வாசிக்கவேண்டும். இல்லா விட்டால் முட்டைதான்’ என்றபடி இராமனுக்கு நேராக சைபர் போட்டுவிட்டு ‘கருப்பையா’ என்றார்.
கருப்பையா கடகடவென்று வாசிக்கின்றான். ‘சரி நீங்கள் எல்லாரும் இடத்துக்குப் போய் இரண்டாவது பந்தியைப் பார்த்து எழுதுங்கள்’
‘இந்தாருங்கள் மாஸ்டர் இந்தப் பிரிவை இரண்டாவது வகுப்பிற்கு சொல்வதெழுதல் கொடுங்கள். அத்துடன் பாலர் வகுப்பை வெளியே அனுப்பிவிடுங்கள்.
மூன்றாம் வகுப்புக் கணக்குகளைக் கொண்டுவந்து காட்டு கின்றனர். எல்லோருக்கும் எல்லாம் சரி. மாஸ்டர்தானே கணக்குப் போட்டது.
இன்னும் ஐந்தாம் வகுப்பு மட்டுமே சும்மா இருக்கிறது.
‘ஐந்தாம் வகுப்பு எழுந்து வாருங்கள். இதோ தொங்கும் படங்களின் கதைகள் தெரியும்தானே. ஆளுக்கொரு கதையை எழுதுங்கள் பார்ப்போம்’
இன்ஸ்பெக்டர் கூறியதை மாஸ்டர் தெளிவுபடுத்துகிறார் ‘ஆளுக்கொரு க்தை எழுதவேண்டும். ஆனால் ஒருவர் எழுது வதை மற்றவர் எழுதக்கூடாது தெரிகிறதா’ என்று கூறிய படி இரண்டாம் வகுப்பு சொல்வதெழுதலைத் திருத்துகிறார்.
திருத்திக்கொண்டே இன்ஸ்பெக்டரைப் பார்க்கின்றார்.
இன்ஸ்பெக்டர் ஐந்தாம் வகுப்பைப் பார்க்கின்றார். ஐந் தாம் வகுப்புப் பையன்கள் ஒருவர் சிலேட்டை ஒருவர் எட்டிப் பார்க்கின்றனர்.
மாஸ்டருக்கு கோபம் வருகிறது. ‘அவனை என்ன பார்க் கிறாய்’ என்று அதட்டினார்.
‘அவன் என்ன எழுதுறான்னு பார்த்தேன் சேர்’
‘ஏன் பார்த்தாய்?’
‘அவன் எழுதும் கதையை எழுதாமல் இருக்க சேர்’
மாஸ்டருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது. என்ன செய்ய. அவர்தானே சொன்னார் ஒருவர் எழுதுவதை மற்றவர் எழுதக்கூடாது என்று.
இன்ஸ்பெக்டர் சிரித்துக்கொண்டு மணியைப் பார்க்கின் றார். ஒன்றுக்குப் பத்து.
உதட்டைப் பிதுக்கிக் கொள்ளுகின்றார். அங்கேயும் போகவேண்டும்.
மூன்றாம் வகுப்பை வெளியே அனுப்பிவிட்டு இரண்டாம் வகுப்பைக் கூப்பிடுகின்றார். மாஸ்டர் திருத்திவிட்ட சொல்வ தெழுதலை நோட்டம் விடுகின்றார். பத்துப் பிழைகளுக்குமேல் வாங்கியுள்ள ஒருவரின் பெயரைக்கேட்டு ‘முட்டை’ போட் டபடி ‘நான்காம் வகுப்புக் கணக்கைத் திருத்தி விடுங்கோ மாஸ்டர்’ என்கின்றார்.
இரண்டாம் வகுப்புப் பையன்களிடம் பெருக்கல் வாய்ப் பாடு கேட்டு அனுப்புகின்றார்.
நான்காவது பையன்களின் கணக்குச் சிலேட்டைப் பார் வையிட்டுவிட்டு பாடம் வாசிக்கச் சொல்லுகிறார். வாசிப்பு முடிந்தவுடன் செய்யுள்; பிறகு வெளியே.
எல்லாம் முடிந்துவிட்டது. மாஸ்டருக்கு இப்போதுதான் நிம்மதி. எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
இரண்டு பிஸ்கட்டுக்களை நாசுக்காகக் கொறித்துவிட்டு பார்லியை உறுஞ்சியபடி ‘லொக் புக்’ எழுதுகின்றார். மணி ஒன்று முப்பது.
‘நல்லாத்தான் எழுதுவார்’ அந்த நம்பிக்கை மாஸ்ட ருக்கு உண்டு.
அவர் ‘லொக் புக்’ எழுதும்போது மாஸ்டர் புத்தகம் இத்தியாதிகளை பெட்டிக்குள் அடுக்கி அறைக்குள் வைக்கிறார் இனி அடுத்த சோதனையின் போதுதானே பிள்ளைகள் புதுப் புத்தகம் பார்க்கும்.
எழுந்த இன்ஸ்பெக்டர், ஒரு நிமிடம் ஊர்க்கதை பேசி விட்டு அடுத்த தோட்டத்துப் பாடசாலைக்குச் செல்லும் பாதையை மீண்டும் உறுதி செய்துகொண்டு காரை நோக்கி நடக்கின்றார்.
கார் போனதும் பிள்ளைகளை உள்ளே கூப்பிட்டு மறுபடி பாடசாலை தொடங்கும் நாளைக்கூறி அவர்களை அனுப்பிவிட்டு ஐந்தாம் வகுப்புப் பையன்களின் உதவியோடு எல்லாவற் றையும் ஒழுங்குபடுத்திவிட்டு ஆபீசை நோக்கி நடக்கின்றார் மாஸ்டர்.
நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து வீதம் பேர் சோதனை யில் சித்தியடைந்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தியை ஆபீசுக்கு அறிவிக்கவேண்டும். சோதனைக்குத் தோற்றும் மாணவர்களின் தொகைக்கும் சித்தி பெற்றுள்ள வீதத்துக்கும் ஏற்பத்தான் டிப்பார்ட்மென்ட் கொடுக்கும் உபகாரம் தோட்டத்துப் பாடசாலைக்குக் கிடைக்கும்.
துரை முதலில் பார்ப்பது எத்தனை பிள்ளைகள் என்ன பர்சென்டேஜ் என்பதைத்தான்.
‘லொக் புக்கை’ ஆபீசில் கொடுத்துவிட்டு அந்திக் கோச் சில் ஏறிவிடுவார்.
அவருக்குச் சோதனை முடிந்துவிட்டது!
ஆனால் தோட்டத்துப் பாடசாலையை தங்களது கல்விக் காக நம்பி இருக்கும் ஒரு உழைக்கும் சமுதாயத்தின் குழந்தைகளுக்கு ……. ?
இளமையிலேயே கண்ணைக் குத்திவிடும் இந்தச் சோதனை முடிவதில்லை.
– மல்லிகை, ஜூன் 1977.
– நாமிருக்கும் நாடே… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1979, வைகறை வெளியீடு, இலங்கை.
தொடர்புள்ள சிறுகதைகள்
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
தனக்கு வந்தால்
ஸ்ரீ.தாமோதரன்
September 27, 2026
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026