அகில இலங்கை நாட்டுச்சீவன சாஸ்திரப் பூச்சிகளின் மகாநாடு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 286 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் இந்த ஈழகேசரிப் பத்திரிகையின் கொறஸ் போன்டன்ற் (நிருபர்) ஆனமையால் எங்கெங்கே சங்கங்கள் சபைகள் மகாநாடுகள் “குசு குசு” கூட்டங்கள் கூடுகின்றனவோ, ஆங்காங்கே சென்று அவற்றைப்பற்றி எழுதி வெளியிடுதல் எனது மகோந்நத தொழிலாகும். 

ஆகவே, சமீபத்தில் நடைபெற்ற அகில இலங்கை நாட்டுச்சீவன சாஸ்திரப்பூச்சிகளின் மகாநாட்டைப் பற்றியும் எழுதலானேன். மகாநாட்டுக்குச் ஸ்ரீமான்கள் ஸ்ரீமதிகள் காண்டாமிருகவண்டு, அறக்கொட்டியான், அந்து, நுளம்பு, அழுக்கந்தை, தேள், வெட்டுக்கிளி, அட்டை, உண்ணி, மூட்டுப்பூச்சி, பேன், வண்ணத்துப் பூச்சி, மயிர்க்கொட்டி, கொசுகு, கறையான், மின் மினி முதலாம் எண்ணிறைந்த பூச்சிப் பிரபுக்கள் திருச்சமுகம் கொடுத்தனர். அப்போது மிஸ்டர், அனோவிலஸ் நுளம்பு எழுந்து பிரமஸ்ரீ அறக்கொட்டியான் அவர்களைத் தலைமை வகிக்குமாறு மகாநாட்டுச் சார்பாக வேண்டிக் கொண் டது. பலத்த கரகோஷத்தினிடையே ஸ்ரீ அறக்கொட்டியான் அவர்கள் எழுந்து தலைத்தவிசிலிருந்து மேற்படி மகாநாடு கூட்டப்பட்ட தின் காரணத்தைப் பின்வருமாறு தம் தலைமைப் பேருரை வாயிலாக கூறினது. 

என் அன்பான சகோதர சகோதரிகளே! நாம் பற்பல ஆண்டு களாகக் காட்டிலும் வீட்டிலும் தோட்டம் வயல்களிலும் சந்து பொந்துகளிலும் நீரிலும் கற்பாரிலும் வாழ்ந்து யாதானுமொரு கிலேசமுமின்றிக் காலம் கழித்து வந்தோம். நாங்கள் இருக்கிறோமென்று கூட அனேகருக்குத் தெரியாமலிருந்தது ஆனால் இப்போது சில வருடங்களாக “றூறல் சயன்ஸ் என்றும் “றூறல்-ஸ்கீம் என்றும் சில பாடத்திட்டங்கள் வந்த பின் எங்க ளுக்குச் சனிதிசை ஆரம்பித்து விட்டது அப்பாடத் திட்டத்தின் பிரதான நோக்கம் எங்களை எப்படிக் கொலை செய்யலா மென்பதே. இந்தப்படிப்பால் எங்களுட் பலபேர் இறந்து விட்டனர். சிலர் குடி எழும்பி வேறிடம் சென்றனர். நமக்கும் இன்றைக்கோ நாளைக்கோ மரணம் வரும் என்று சொல்லத் தக்க நெருக்கடி யான நிலைமை ஏற்பட்டுவிட்டது இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில், நாம் செய்யத்தக்கது யாது என்பதை ஆலோசித்துக்கொள்வதற்கே இம்மகாநாடு இன்று இம் மைதானத்தில் இந்த இரா நேரத்தில் கூட்டப்பட்டது. என்று மிக உருக்கமாகக் கூறிவிட்டு, அப்பால் திருவாளர் உண்ணியார் அவர்கள் சில வார்த்தைகள் பேசுவார்கள் என்று சொல்லிக் கதிரையில் உட்கார்ந்தது. 

பின் உண்ணியார் எழுந்து பிறெசிடென்ற் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்!சீவகாருண்ணியம் நிறைந்த பிரித்தானிய ஆளுகையில் இவ்விதமான கொடுமை வரும் என்று நாங்கள் எப்போதாவது காத்திருக்கவில்லை எங்களை முற்றாக அழிப்பதற்கே மேற்படி பாடங்கள் படிப்பிக்கப்படுகின்றன. ஒரு பாடசாலையில் எங்களை யார் அதிகமாகக் கொல்லுகிறார் களோ அல்லது கொல்லும் வழியைப் போதிக்கிறார்களோ அவர்களுக் குத்தான் “உவேக் சற்றிஸ் வாய்க்ரறி! என்று சேட்டிவிக்கற்” பதியப்படுகிறதாம். இஃதென்ன அநியாயம்! ஓர் உயிரையும் கொல்லாகாது என்று போதிக்கும் புத்தமதமும், “ஒன்றாக நல்லது கொல்வது கொல்லாமை” என்று உபதேசிக் கும் சைவசமயமும் தன்னுயிர்போற் பிறவுயிரையும் நேசி என்று ஓதும் கிறிஸ்து மதமும் பரிசுத்த இஸ்லாம் மார்க்கமும் நிறைந்த இந்த இலங்கையில் இவ்வித அநியாயங்களும் கொலையும் நடந்தால் இச்சமயங்களால் ஏதும் பயனுண்டோ! “எம்மை யுலகத்தும் யாங்காணோம் கல்விபோல்- மம்மாறுக்கும் மருந்து” என்று ஒரு பெரியார் பாடினார். இப்போது எங்கள் நிலைமையை நோக்கினால் “எம்மை யுலகத்தும் யாங்கா ணோம் கல்விபோல் எம்மையறுக்கும் மருந்து” என்று கூறியதாயிற்றே. எங்களைத் தொலைக்கும் மருந்து வகை களைப்பற்றித்தானே நாட்டுச்சீவன சாஸ்த்திரக் கல்வி போதிக் கிறது என்று கம்பீரத்துடனும் ஆத்திரத்தோடும் பேசிவிட்டு பின்வரும் தீர்மானத்தைப் பிரேரித்தது. அஃதாவது:- “நமது சமூகத்தை முற்றாய் பாழாக்கும் இந்த நாட்டுச்சீவன சாஸ்திர பாடத்தை பாடத்திட்டத்தினின்றும் நீக்குமாறு வித்தியா பகுதியாரை இம் மகாநாடு வேண்டிக்கொள்கிறது, என்பதாம். 

பின்னர் ஸ்ரீலஸ்ரீ பேன் அவர்கள் எழுந்து தலைவர் அவர்களே! சபையோர்களே!! ஆங்காங்கு குடியிருக்கும் நாங்கள் இன்று ஓரிடத்தில் கூடி ஒருவரை ஒருவர் கண்டு பேசுவதற்குத் தருணம் வாய்த்த இது ஒன்றே, இம்மகாநாட்டின் சிறந்த பயனென்று நான் முதலிற் கருதி மகிழ்வுறுகின்றேன். (கரகோஷமும், ஹீயா ஹீயா என்ற சத்தமும்) சிறிது காலத்திற்கு முன் ஆயுதமற்ற அபிசீனிய மக்களைக் கொன்று பொசுக்கிய இற்றாலியரையும், இப்போது ஏழைச் சீன மக்களை – சேனா பலம் குறைந்த, சீன மக்களை நசுக்கிக் குவித்து வேட்டையாடித் தம் சுயநலத்தை பூர்த்தி செய்ய முற்படும் யப்பானியரையும் வெறுக்கின்ற கண்டிக்கின்ற உலக மக்கள் – இலங்கை மாந்தர் பரம ஏழைகளாகிய – நிராயுதபாணிகளாகிய எங்களை ( பூச்சி களை) முற்றாக அழிக்க வழிகாட்டும் இந்தக் கல்வித் திட்டத்தைக் கண்டியாதிருப்பது ஏனோ! இது நீதியாகுமா! தெய்வத்திற் கேற்குமா! இப்போது சென்னை மாகாணத்தார் இந்திப் பாஷையைக் கட்டாய பாடமாக்குவதை எவ்வாறு வெறுக்கின் றார்களோ, அது போலவே நாமும் இந்த நா-சீ-சா- -நா-வா-க-மு பாடங்களை முற்றாக வெறுக்க வேண்டிய தாயிற்று. (இடையிற் பலத்த கரகோசம்) ஆதலால் தோழர் உண்ணியாரின் உயரிய பிரேரணையை நான் மனப்பூர்வமாக அனுவதிக் கின்றேன் என்றது. 

பின்னர், ஸ்ரீசத் அட்டை எழுந்து “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில், ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” என்ற பாரதியாரின் வீர முழக்கம் நமக்கே முற்றிலும் பொருத்த மாயிற்று. இந்தப் பிரேரணையின் மூன்று பிரதிகளை எடுத்து ஒன்றை டிறைக்ரர் ஒவ் எட்யுக்கேசனுக்கும் ஒன்றை மினிஸ்ரர் ஒவ் எட்யுகேசனுக்கும், ஒன்றை எடிற்றர் ஒவ் ஈழகேசரிக்கும் அனுப்ப வேண்டும் என்று கூறி, இவ்வரிய கடமையை விரைவிற் செய்யத் தகுந்தவர் இயல்பாகவே சுறுசுறுப்பு நிறைந்த நத்தையே என்றும் அவருக்கே இவ்வதிகாரத்தை இம்மகாநாடு கொடுக்க வேண்டும் எனவும் பிரேரித்தது. 

ஈற்றில் வண காண்டாமிருகவண்டு எழுந்து தமது கறகறக் குரலில், நண்பர்களே அட்டையார் பிரேரித்தவாறு நத்தை யாருக்கு அதிகாரம் கொடுப்பதை நான் வழிமொழிந்து நிற்கின்றேன். நிற்க, இந்த நள்ளிரவில் எங்கள் அழைப்புக் கிணங்கி வந்த உங்கள் யாவருக்கும் யாதாமொரு சதமும் வாங்காது தனது சொந்த வெளிச்சத்தைத் தந்து எங்களைக் காத்த மிஸ்டர் மின்மினிக்கும் இச்சபை சார்பாக மனமார்ந்த துதி கூறுகின்றேன் என்றது. கூட்டம் குலைந்தருளியது. 

– ஈழகேசரி, 19.12.1937.

– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.

அல்வாயூர் மு.செல்லையா மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *