நீ இல்லாத உலகத்திலே….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2026
பார்வையிட்டோர்: 51 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அந்த ஹோட்டல் மிகப் பேமஸான ஹோட்டல். இருபத்து நாலு மணி நேரமும் கூட்ட நெரிசலில் ஹோட்டல் பிதுங்கி வழியும். மதியம் லஞ்ச் மிக சுவையாக இருக்கும் என்பதால், பொதுவாக, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

இருதயராஜ் உள்ளே போனான். பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். இருந்தது. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தொட்டுப் பார்த்து இருப்பதை உறுதி செய்து கொண்டான். சர்வர் சுந்தரம் நாகேஷ் கதையாகிவிடக் கூடாதே என்பதில் கூடுதல் அக்கறை காட்டினான்.

கல்லா கவுண்டர் அருகே போய் டேபிளில் கம்பீர்மாய் சாய்ந்த படி, ‘லஞ்சுக்கு டோக்கன் வாங்கணுமா?’ கேட்க,

லஞ்சுக்கு டோக்கன் வாங்கீட்டு, அதோ அவர் கிட்ட உங்க பேரை என்ரோல் பண்ணிக்குங்க…’ என்றார் கல்லாக்காரர்.

‘என்ன என்ரோலா?!’

‘ஆ…அமாம் சார்! நெறைய பேர் வரிசைல இருக்காங்க. மூணு பேர் நாலு பேர்னு பேமலியா வந்திருக்கவங்களுக்கு மொதல்ல ஆளுக்குத் தகுந்த டேபிளை அரேஞ்ச் பண்ணீட்டு சாப்பிடக் கூப்பிடுவார். அப்புறம்தான் உள்ள போணும்!’ அதுவரை இங்க உக்கார்ந்திருங்க!’ என்றார்.

கேவலமாக இருந்தது. ‘பணத்தையும் கொடுத்து, டோக்கனையும் வாங்கி, காத்திருந்து இடம்பிடித்து சாப்பிடுவது என்பது அசிங்கமா இருக்கே?!’ என்றான் கொஞ்சம் மெல்லிய குரலில். அது, அவருக்குக் கேட்டிருக்க வேண்டும்.

‘அது வேற ஒண்ணுமில்லை சார்., ரசம் சாப்பிடும்போதே நாலுபேர் அவர் பின்னாடியே இடம்பிடிக்க முதுக்குப் பின்னால எப்ப எந்திரிப்பான்னு ஏக்கத்தோட கல்யாண வீட்டுல காத்திருக்கறா மாதிரி காத்திருக்கற அசிங்கம் இல்லையே இங்கே!!. டீசண்டா டேபிள் நம்பர் சொல்ல… நிதானமா சாப்பிட்டு எந்திரிக்கற வரை காத்திருந்து, நம்ம டேபிள்ல போய்ச் சாப்பிடலாமே?!’ என்றார்.

கொஞ்சம் நியாயமாகத்தான் பட்டது.

டோக்கன் வாங்கி, இவன் சிங்கிள் ஆள் என்பதால் சின்னதாய் ஒரு ஓரமாய் போடப்பட்டிருந்த டேபிள் ஒன்றைக் காட்ட, போய் அமர்ந்தான். டோக்கன் வாங்கும் போது பாக்கெட்டில் தொட்டுப் பார்த்து எடுத்த செல் போனில் ஜீபே பண்ணி வாங்கின டோக்கனை மேசை மீது வைத்தான்.

உணவு பரிமாறப்பட்டது. நிதானமாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டு, போய் படுத்து நல்லாத் தூங்கணும். நினைத்துக் கொள்ள, நினைப்பை இடறியது யூடியூபில் படித்த ஒரு விஷயம். சாப்பிட்ட உடனே தூங்கினா வெயிட் போடுமாம். தொப்பை போடுமாம்.

வெயிட் கூட போட்டுட்டுப் போகட்டும் பிரச்சனையில்லை. இந்த தொப்பை இருக்கே.. கேவலமான விஷயம். ஒரு மாசத்துக்குள் பேண்டை மேலெ ஏறவிடாம தொந்தரவு பண்ணுது.

தான் சாப்பிட உட்காரும் முன் உட்கார்ந்து சாப்பிட்ட டேபிளை சுத்தமாக மிக மிக அசுத்தமாக இருந்த துணியைக் கொண்டு துடைத்த மனிதனைப் பார்த்தான். வயது கொஞ்சம் அதிகமிருக்கும். வேறு வேலை எதுவும் செய்ய வாய்ப்பும் வயதும் இல்லாததால் டேபிள் துடைத்துக் கொண்டிருந்தார்.

இவன் சாப்பிட்டு எழும் முன் காத்திருந்தார் துடைத்துக் கிளீன் பண்ண.

பாண்ட் பாக்கெட்டிலிருந்து மீண்டும் செல்லை எடுத்து சர்வருக்கு டிப்ஸ் ஜீபே பண்ணீட்டு மீண்டும் பாண்டுக்குள் கைவிட்டு, கசங்காம இருந்த ஐம்பது ரூபாயை மெல்ல எடுத்து டேபிள் கிளீன் பண்ணின பெரியவர் கைகளில் கொடுக்க அவர், அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.

சர்வர் இருப்பதை… இல்லே… கேட்டதைக் கொண்டு வந்து கொடுப்பவர். எல்லாரும் சுத்தமா சாப்பிட இடத்தையும் சாப்பிட்ட பின் சுத்தமாக்கியும் வைக்கும் டேபிள் கிளீனருக்கு யாரும் டிப்ஸ் கொடுத்ததே இல்லை என்பது அவர் பார்வை பறை சாற்றியது. அவரும் மனிதர் தானே?! எல்லோருக்கும் போல அவர் உழைப்பையும் மதிக்கிற ஒரு மனிதர் வேணும்தானே?

பெரியவரே என்ன பார்க்கறே? ‘நீ இல்லாத உலகத்திலே சுத்தமில்லே…! சுத்தமில்லா உல்கத்தில் நிம்மதி இல்லே..!’

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *