இனி அவரைத் தேவையில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 6 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் காட்டு வெளி இரவில் பேய் பிசாசு நடமாடும் இடமென்றும், அங்கங்கே உள்ள பனங்கூடல்களிலும் மரத் தோப்புக்களிலும் நடுச்சாமத்திலே கொள்ளிவாய்ப் பிசாசு உலாவும் வெளிச்சத்தைக் கண்டவர்கள் உண்டென்றும் பக்கத்துக் கிராமங்களில் பேசிக்கொள்வர்.

யாழ்ப்பாணக் குடா நாட்டுள்ளே மக்கள் குடியேறாமல் அரசாங்கத்துக்குச் சொந்தமாகக் கிடக்கும் பிரதேசங்களில் அதுவும் ஒன்று இந்த நிலையில்தான் மாந்திரீகம் தெரிந்த சந்நியாசி பீதாம்பரம், அந்தப் பெருவெளியின் நடுவிலே படர்ந்து நிற்பதும், முனியாடி ஆலமரம் என்று பெயர் பெற்றதும்.

இரவென்ன பகலென்ன ஆட்டுக்குக் குழை வெட்டுவோரும் அணுக அஞ்சுவதுமான அந்த ஆலமரத்தின் அடியில் விழுதுகளிலிருந்து அணில்கள் சத்தமிட, கிளைகளில் குருவிகள் சிறகடித்து ஆர்ப்பரிக்கத் துணிந்து குடியேறினார். அவர் அருளில் மயங்கி விட்டவர்கள் போலப் பலர் அவரிடம் வந்து பணிந்து திரிந்து அவர் ஊட்டிய துணிச்சலில் அவர் தங்கும் அந்த ஆலமரத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் மனைவி மக்களோடுவந்து குடியேறினர்.

சந்நியாசியாருக்கு ஆலடியில் குடிசை கட்டிக்கொடுத்து, உணவளித்து, பக்தி சிரத்தையோடு வழிபட்டும் வந்தார்கள். பார்த்துப் பார்த்தும் பல ஊர்களிலுமிருந்து வந்து குடியேறிய மக்கள் பத்தே பத்து ஆண்டில் காடுமேடகற்றிப் பசுங்கழனிகளைப் படைத்து, கற்கோட்டைகள் போன்ற வீடுவாசல்களும் கட்டிக் கொண்டார்கள்.

சந்நியாசியாரின் குடியிருப்பான ஆலம் நிழலைச் சந்தியாகக் கொண்டு நாலா திசையிலும் வீதிகளும் வீடுகளும் அமைந்து விட்டன. அந்தக்குடியிருப்பில் பெரிய புள்ளியாகிவிட்ட தென்னந் தோட்டச் சுந்தரமூர்த்தியின் பெயரைத் தழுவிச் சுந்தரபுரம் என்று பெயர் சூட்டப்பட்டு விட்ட அந்தப் புதுக்கிராமத்தில ஐக்கியபண்டகசாலை, தபாற்கந்தோர், மருத்துவ நிலையம், பள்ளிக்கூடம், சந்தை, கடைகண்ணிகள், என்பவற்றோடு கிராமசபையும் உருவாகிவிட்டது.

நாளடைவில் தேடி வந்து வணங்குவோர், திருநீறு வாங்குவோர், உணவு படைப்போர் குறைந்து, கண்ட இடத்திலென்றாலும் கையெடுப்போர் குறைந்து விட்ட சந்நியாசியார், ஆலடிக் குடிசையில் அநாதையாகக் காலந்தள்ளி வந்தார்.

ஒருநாள் கிராமசபையிடமிருந்து அவருக்கு ஒரு கட்டளை பதிவுத் தபாலில் வந்தது. 

“ஐயா! தாங்கள் தங்கியிருக்கும் ஆலமரத்தை வெட்டி வீழ்த்தி அகற்றிச் சந்திக்கும் தெருக்களுக்கும் தாளுற்றுவதற்குச் சபை தீர்மானித்திருப்பதால் தங்கள் குடிசையை ஒரு மாத காலத்துள் அப்புறப்படுத்தி விடும்படி இத்தால் அறிவிக்கிறோம்.” என்று அக்கடிதத்தில் இருந்தது. 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *