சரசுவின் சௌந்தர்ய லஹரி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2026
பார்வையிட்டோர்: 329 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

22. தேவகாந்தாரி

பைத்தியக்காரர்கள் அனைவருமே உண்மையில் பைத்தியக்காரர்களல்ல. உலக நடைமுறைக்கு மாறான, அவர்களுக்கு மட்டுமே உதயமாகின்ற சில விஷயங்களைத் தனியாகச் சிந்திப்பவர்களும் பைத்தியக்காரர்கள் போலக் காட்சியளிக்கிறார்கள். மிக ஆழமாக அந்தச் சிந்தனை அவர்களுக்குள் வேரூன்றிவிட்டால், அவர்கள் பைத்தியக்காரர்கள் என்றே பட்டம் சூட்டப் பெற்று விடுகிறார்கள், 

உண்மையில் சரசுவுக்குத் தோன்றிய விஷயங்கள், மற்றவர்களுக்கும் தோன்ற நியாயமில்லை. கோடியில் ஒருவருக்குத்தான் பூர்வ ஜன்மங்களைப் பற்றி ஞாபகம் வரும்.

‘எப்படியாவது தான் கோடைக்கானலுக்குப் போய், போன ஜன்மத்துக் கணவனைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று சரசு ஆசைப்பட்டாள். அதை அப்படியே தாயாரிடமும் சொன்னாள். 

அப்போதுதான் அவள் தாயாருக்கும் அவள் பைத்தியமோ என்ற சந்தேகம் பிறந்தது. 

“நன்றாய் இருக்கிறது! என்ன பேசுகிறோம் என்ற பிரக்ஞையோடுதான் பேசுகிறாயா? கட்டிய கணவனை விட்டுவிட்டு வந்து, போன ஜன்மக் கணவனைத் தேடப் போகிறேன் என்கிறாயே, உனக்குப் புத்தி புரண்டு விட்டதா? விரும்பினால் பத்து நாட்கள் போய் பாமாவோடு இரு. ஆனால் என்னிடம் பேசிய மாதிரி வேறு யாரிடமும் பேசாதே! சரசு என்றால் தெய்வம் என்று ஊர் நினைக்கிறது. இப்படிப் பேசினால் பிசாசு என்பார்கள்!” என்று கண்டித்தார், தாயார். 

தாயாருக்கு சரசு எந்தப் பதிலும் சொல்லவில்லை. பதில் சொல்லி விளங்கவைக்கக் கூடிய விஷயமா இது? ஒரு ஊமையின் கனவை அவள் மட்டும்தான் உணரமுடியும். 

சரசுவைப் பொறுத்தவரையில் விஷயம் அவளுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்தது. 

இரண்டாவது ஜன்மத்தில் தன்னைக் கற்பழித்த மகேஸ்வரியின் தம்பி தான், இந்த ஜன்மத்தில் தனக்குக் கணவனாக வாய்த்திருக்கிறான். முதல் ஜன்மத்தில் தன்னைக் காதலித்தவனும் இரண்டானது ஜன்மத்தில் பாமாவை மணந்து கொண்டவரும் ஒருவரே.. இந்த ஜன்மத்தில் அவர் கோடைக்கானலில்தான் இருக்கிறார்! இதில் அவளுக்குச் சந்தேகமே இல்லை.

”சும்மா எதற்காக வீண் பேச்சு? என் மனதில் சில படங்கள் விழுந்திருக்கின்றன. அவற்றை நான் நம்புகிறேன். புருஷன் வீட்டுக்கு போகும்படி என்னைத் தொல்லை செய்யாதே!” என்றாள் சரசு. 

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே. நீயாக ஏன் கற்பனை செய்து கொள்கிறாய்? கொடைக்கானலுக்குப் போய் பாமாவோடு இரு என்றுதான் சொன்னேன்!” என்றார் தாயார். 

“நான் போகவேண்டும்; அதுவும் தனியாகப் போக வேண்டும்!” என்றாள் சரசு. 

“வேண்டாம். சின்னத் தம்பியின் காரில் கொண்டு போய்விட்டு வரச்சொல்கிறேன்” என்ற தாயார், அதற்கு ஏற்பாடு செய்தார்.

சில மக்களுக்குத்தான் தாய்மார்கள் அமைகிறார்கள், சில தாய்மார்களுக்குத்தான் மக்கள் அமைகிறார்கள். 

கார் கோடைக்கானல் போய்ச் சேரும்வரை சரசு மனத்துக்குள்ளேயே ஒரு பெரிய சினிமாப் படத்தையே ஒட்டிக் கொண்டிருந்தாள். 

சில்லென்ற குளிர்ந்த காற்று அவள் சிந்தனைக்குச் சுகம் கொடுத்துக் கொண்டிருந்தது. 

அவள் மனதுக்குள் கோடைக்கானல் தோன்றியதே தவிர, பூர்வஜன்மக் கணவனின் முழு வடிவமும் தோன்ற வில்லை. ‘யாராக இருக்கும்’ என்று அவன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டாள். எதிலும் முழு உருவம் விழவில்லை. 


அவள் பாமா வீட்டுக்குள் நுழைந்த போது, கர்ப்பிணியான பாமா அவளை ஆச்சரியத்தோடு பார்த்தாள். 

“என்னக்கா திடுதிப்பென்று? ஒரு கடிதம் கூடப் போடவில்லையே?” என்றாள் பாமா.

“என்னவோ தோன்றிற்று. புறப்பட்டு வந்து விட்டேன், நான் இருப்பதில் உனக்கு விருப்பமில்லை என்றால் போய் விடுகிறேன்” என்றாள் சரசு. 

“இதுதான் உன்னோடு! நான் ஏதாவது சொன்னால் நீ ஏதாவது பேசுவாய். அத்தான் கூட சரசு இருந்தால் பொழுது நன்றாகப் போகும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நீ இல்லாமல் சௌந்தர்ய லஹரி புத்தகத்தை நாங்க தலைக்குத்தான் வைத்துக் கொண்டு தூங்குகிறோம். எங்களுக்கும் திருமணமாகி தொண்ணூறு நாட்களுக்கு மேலாகிலிட்டது. இனி தனிமை என்ன தனிமை, இனி நீயும் இருப்பதுதான் எங்களுக்கு இனிமை. என் மைத்துனர் கூட அடிக்கடி சொல்வார். ‘உன் அக்காள் இருந்தாலாவது சௌந்தர்ய லஹரி பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்; உங்களுக்கு ரசனையே இல்லை’ என்பார். வா வா! வெந்நீர் நன்றாகக் கொதித்திருக்கிறது. குளித்து முழுகி விட்டுக் கோவிலுக்குப் போய்விட்டு வருவோம்” என்றாள் பாமா. 

‘கோயிலுக்குப் போனால் ஏதாவது தடயங்கள் தட்டுப் படலாம்’ என்று சரசுவுக்கும் தோன்றியது. 

அவள் குளித்துவிட்டு வெளியே வருவதற்கும். ஜெயசந்திரன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. 

“அடடே! செளந்தர்ய லஹரி எப்போது வந்தது?” என்று ஆச்சரியத்தோடும், உற்சாகமாகவும் வினவினான் ஜெயசந்திரன். 

“இதோ சேலை மாற்றிக் கொண்டு வந்து சொல்லுகிறேன்!” என்று உள்ளே போனாள் சரசு.

பூர்வ ஜன்ம ஞாபகம் வந்ததிலிருந்து அவள் புதிய பெண்ணாகவே மாறிவிட்டாள். 

மாடியிலிருந்து இறங்கி வந்த பாமா, மைத்துனருக்கு விஷயங்களைச் சொன்னாள். 

”அப்பாடா! இனிமேல் வீடு களையாக இருக்கும்!” என்றான் ஜெயசந்திரன். 

அறைக்குள் சென்று சேலை மாற்றும்போது சரசுவுக்கு மீண்டும் ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. அந்த அறை அரசநாராயணனின் வீட்டு அறை போலக் காட்சி யளித்தது. தான் குளிப்பதை ஒரு நாள் எட்டிப் பார்த்தது ஞாபகம் வந்தது. 

மயக்கம் கலந்த ஓர் உணர்வு, அங்கங்களில் ஏதோ கிளு கிளுப்பு! அரச நாராயணனோடு அனுபவித்த சுகத்தின் பிரதிபலிப்பு! எங்கே நிற்கிறோம் என்று தெரியாமலேயே அவள் நின்றாள். பிறகு விலையுயர்ந்த பட்டுச்சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். தலைவாரிப் பூ முடித்துப் பொட்டிட்டாள். 

இப்போது அவள் யார்? 

அபரஞ்சியா, தங்கமா, சரசுவா?

நிச்சயமாக அவள் சரசு அல்ல. 

ஏதோ ஒரு ஜன்மத்தின் மறுபதிப்பு. 

இனம் தெரியாத சுகத்தோடு சௌந்தர்ய லஹரியைக் கையில் எடுத்தாள்; இனிமையான குரலில் பாடினாள்; பாடிக்கொண்டே கதவைத் திறந்து முன் ஹாலுக்கு வந்தாள். 

கைதட்டும் சப்தம் கேட்டது. “அற்புதம்! அபாரம்!” என்றான் ஜெயசந்திரன்.

அதை அடக்கத்தோடு ஆமோதித்தான் அங்கே நின்ற ராஜேந்திரன். 

பக்கத்தில் நின்ற பாமா சிரித்தாள். 

ராஜேந்திரனையும், ஜெயசந்திரனையும் கண்ட போது, சரசுவின் கண்கள் மயங்கின. 

யார் நம்முடைய கணவன் என்றபொழுது பிரமையிலிருந்து இப்பொது இரண்டு கேள்விக் குறிகளுக்குள் சிக்கிக் கொண்டாள் சரசு. 

ஒன்று ராஜேந்திரன்; மற்றொன்று ஜெயசந்திரன்!

மீண்டும் அவள் சுய உணர்வு பெற்று, “சரி கோவிலுக்குப் போகலாம்” என்றாள் 

நால்வரும். முன்பு சென்ற அதே அம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். 

இப்போது அவர்கள் சாரதாம்பாளைச் சந்திக்க வில்லை. யாரோ ஒரு பூசாரிதான் பூஜை செய்து கொண்டிருந்தான்.

தீபாராதனை நடக்கும்போது அவளுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. அங்கு இருந்த ஒரு சிவப்புப் பூவையும், வெள்ளைப் பூவையும் கையிலெடுத்துக் கொண்டாள். 

‘சிவப்புப் பூவை யார் எடுக்கிறாரோ, அவரே நம்முடைய கணவனாக இருந்திருக்க வேண்டும்’ என்று மனதில் எண்ணிக்கொண்டு பூவை அவர்களிடம் நீட்டினாள். 

அவள் கையிலிருந்து பூவை எடுக்க ஜெயசந்திரனும், ராஜேந்திரனும் தயங்கிய போது, திடீரென்று சிவப்புப் பூவைக் கையில் எடுத்துக் கொண்டாள் பாமா.

பூசாரியின் மணியோசை அம்மன் சிரிப்பது போல் ஒலித்தது! 

23. நாட்டக் குறிஞ்சி

முக்கியமான நேரத்தில் பாமா குறுக்கிட்டு விட்டதாகத்தான், அப்போது சரசு நினைத்தாள். ஆனால் ஒரு பெரிய இக்கட்டில் இருந்தல்லவா அவளைப் பாமா காப்பாற்றி இருக்கிறாள்? 

சரசுவின் கேள்விக்கு எந்த பதில் வந்தாலும் அது மகிழ்ச்சியாளிக்கக் கூடியதாக இருக்காது. 

சரசு தனக்குத் தானே போட்டுக் கொண்ட விலங்கிலே இன்னொரு நபரும் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

அது ஜெயசந்திரனாக இருந்தால் வம்பு குறைவுதான், ஆனால் அதுவே ராஜேந்திரனாக இருந்து விட்டால்?

சரசுவுக்குள்ளே இப்படியொரு கேள்விக்குறி எழுந்து நிற்பது யாருக்கும் தெரியாது. 

பாமா தற்செயலாகத்தான் சிவப்புப் பூவை எடுத்துக் கொண்டாள். ஆனால் அவர்கள் கோவிலிலிருந்து வீடு வந்து சேர்ந்த போது பாமாவின் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அவர்களுடைய தாயார் தான் எழுதியிருந்தார்.

சரசுவின் மாமியார் வந்திருந்ததாகவும், சரசுவைப் பற்றிய விவரங்களை எல்லாம் சொன்னதாகவும், அவர்கள் சொன்னதிலிருந்து சரசு ஏதோ ஒரு மனோ வியாதியால் தாக்கப்பட்டிருப்பதாக தோன்றுவதாகவும், ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளும் படியும் குறிப்பிட்டிருந்தது. 

அப்படித்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று பாமாவுக்கும் தோன்றிற்று. இல்லையென்றால் அவள் திடுதிப்பென்று கோடைக்கானலுக்கு ஓடி வந்திருக்க மாட்டாளே? 

இரவு நேரம் தான் அக்காளுடன் நிம்மதியாகப் பேசுகிற நேரம் என்று அதுவரை பொறுத்திருந்தாள் பாமா.

இரவு வந்தது. நடு ஹாலில் சமுக்காளத்தை விரித்து, “வாருங்கள் வாருங்கள், எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்றாள் பாமா. 

சரசு இப்போது மயக்கவில்லை. அழகாக அலங்கரித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தாள், அது மட்டுமல்ல. இரண்டு தலையணைகளை இடது புறமாக வைத்து அதில் சாய்ந்து கொண்டாள். 

ஜெயசந்திரன் மிக பயபக்தியோடு வந்து உட்கார்ந்தான். அவனது காரில் இருந்து கோடைக்கானலுக்கே உரிய சில பழவகைகளை எடுத்துக்கொண்டு வந்து வைத்தான் டிரைவர். 

இப்போது சரசுவுக்கு அபரஞ்சியின் ஞாபகம் வந்தது. வணிகன் நவகோடி தனக்குப் பழங்களை உரித்துக் கொடுத்ததை அவள் நினைத்துக் கொண்டாள். 

தன் அறையிலிருந்து வெளியே வந்த ராஜேந்திரன் பாமாவிடம், “காணாமற் போன நவமணி மோதிரம் கிடைத்து விட்டது” என்றான்.

அப்போது அரசநாராயணன் தனக்கு வைரமோதிரம் அணிவித்ததை சரசு ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

அந்தச் சிலந்தி தான் பின்னிய வலைக்குள்ளே நின்று தடுமாறியபோது, பாமா பேச்சைத் துவக்கினாள். 

“என்னக்கா? நீ சமயபுரம், ஸ்ரீரங்கம், கோபிச் செட்டிப் பாளையம் எல்லாம் போனாயாமே? என்ன இப்படிச் சம்பந்தமில்லாத ஊர்கள்?…” என்று மெதுவாகக் கேட்டாள் பாமா.

“உங்களுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, எனக்கிருக்கிறது,” என்ற சரசு, தன் இரண்டு ஜென்மத்துக் கதைகளையும் சொல்லிலிட்டால், சில விஷயங்கள் புரிந்து விடும் என்று கருதினாள். 

இரண்டு மணி நேரம் தன் வரலாறை வருணனைகளோடு விவரித்தாள். ஆனால் அவர்கள் யாரும் அதை வரலாறு என்று கருதிக் கேட்கவில்லை. யாரோ எழுதிய சரித்திர நாவல் என்றே கருதினார்கள். 

“என்னக்கா, அதையெல்லாமா நம்பிக்கொண்டு அவஸ்தைப்படுகிறாய்?” என்று கேட்டாள் பாமா.

“நான் அவஸ்தைப் படவில்லை. என் பூர்வ ஜென்மம் எனக்கு நன்றாகத் தெரிகிறது. சில அதிருஷ்டக்காரர்களுக்குத் தான் அது வாய்க்கும்” என்றாள் சரசு. 

“உன் இரண்டாவது ஜென்மத்தில் உன்னைக் கற்பழித்தவர் தான் இப்போது உனக்குக் கணவராக வாய்த்திருக்கிறார் என்பது வெறும் பிரமை” என்றாள் பாமா.

“இல்லை. உண்மை அதுதாள். அவருக்கு வந்துள்ள நோயிலிருந்தே அது புரிகிறது” என்றாள் சரசு. 

“சரி, இப்போது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டாள் பாமா. 

“எனது பூர்வ ஜென்மக் கணவர் இந்தக் கோடைக்கானலில் தான் இருக்க வேண்டும். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. அவரைக் கண்டுபிடிக்கும் வரை நான் இங்கேயே இருந்துவிடப் போகிறேன்” என்று உறுதியாகச் சொன்னாள் சரசு. 

“தாராளமாக இருக்கலாம்; நான் காப்பாற்றுகிறேன்” என்று அமைதியாகச் சொன்னான் ஜெயசந்திரன்.

“நீங்கள் எவ்வளவு காலம் இருக்கிறீர்களோ, அவ்வளவு காலம் நாங்களும் இருக்கிறோம்” என்றான் ராஜேந்திரன். 

“ஏன் அக்கா கதை சொல்வதற்கு முன்னால், சிருங்கேரிக்குப் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள், கதையில் சிருங்கேரி வந்தவுடன் அதை மறந்து விட்டீர்களா?” என்றாள் பாமா. 

‘ராஜேந்திரன் சிருங்கேரிக்குப் போவதாகச் சொன்னால் சந்தேகமே இல்லை. அரச நாராயணனாக ராஜேந்திரன் தான் இருந்திருக்க வேண்டும்’ என்று கருதினாள் சரசு. 

”பேசாமல் சமயபுரத்திற்குப் போய் மகமாயியைத் தரிசனம் செய்து கொண்டு, திரும்ப கோடைக்கானலுக்கே வந்து விடுவோம்” என்றான் ஜெயசந்திரன்.

சரசுவுக்குத் தலை சுற்றிற்று. 

“சரி, நான் போய் படுக்கிறேன்” என்று சொல்லி விட்டுத் தன் அறைக்கு வந்துவிட்டாள். 

தூக்கம் பிடிக்காமல் புரண்டவள், காலை மூன்று மணிக்குத்தான் தூங்கத் தொடங்கினாள். 

ஒரு கனவு! அதில் ஒரு சுமங்கலி வருகிறாள். தோற்றத்தில் சாரதாம்பாளைப் போலவே இருக்கிறாள். பழுப்பு நிறப்புடவையில் சிவப்பு நிறக்கரை போட்டு, அதில் மாங்காய் வடிவத்தில் சரிகை போடப் பட்டிருக்கிறது. தலை நிறைய சம்பங்கிப் பூவும் மருக்கொழுந்தும் வைத்திருக்கிறாள். நெற்றியில் அழகான குங்குமப் பொட்டு. 

“அடி பைத்தியக்காரி! உனக்கு இன்னுமா புரிய வில்லை? உன் முதல் ஜென்மத்துக் காதலன் தான் ஜெயசந்திரன். இரண்டாவது ஜென்மத்துக் கணவன் தான் ராஜேந்திரன். இதை நீ தெரிந்து கொள்ளலாமே தவிர, வேறு என்ன செய்ய முடியும்?” என்று கேட்கிறாள் அந்தச் சுமங்கலி. 

“இது போதுமே எனக்கு! எல்லா விவரங்களும் தெரிந்து விட்ட பிறகு, இது தெரியவில்லை என்று தானே கலங்கிக் கொண்டிருந்தேன். இப்போது என் ஆத்மாவுக்கு சாந்தி ஏற்பட்டு விட்டது. சரி, நல்லது. அம்மா நீங்கள் யார்?” என்று கேட்டாள் சரசு. 

“சிருங்கேரியில் நீ பார்த்தாயே, அவள் தான் நான்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாரதாம்பாளின் உருவம் மறைந்து, ராயகவுண்டன்பட்டி சித்தி வீட்டில் உட்கார்ந்திருப்பது போன்ற பிரமை சரசுவுக்கு எழுந்தது. 

“ஐயா, உங்களை அழைத்து வரச்சொன்னார்” என்று ஒருவன் கைகட்டி நிற்கிறான். 

”சரி சித்தி! அவர் நானில்லாமல் தூங்கமாட்டார் நான் போய் வருகிறேன்” என்று புறப்படுகிறாள் சரசு. 

தன் மாளிகைக்குச் சென்று சென்று அரச நாராயணன் அருகிலே அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவனை ஆரத்தழுவியபடி பக்கத்தில் படுக்கிறாள். 

அப்போது அவன் சரசுவாக அல்ல, தங்கமாகத்தான் இருக்கிறாள். 

திடீரென்று, “என்ன இது?” என்றொரு குரல் கேட்கிறது. சரசு கண்ணை விழிக்கிறாள். அப்போது நடு ஹாலில் தான் ராஜேந்திரனைக் கட்டிப் பிடித்திருப்பது தெரிய வருகிறது. 

இன்னொரு பக்கம் படுத்திருந்த பாமா நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். 

சரசு, “கிருஷ்ண கிருஷ்ண” என்றபடி எழுந்து தன் அறைக்கு ஓடினாள். பந்தயக் குதிரைக்கு மூச்சு வாங்குவது போல் அவளுக்கு மூச்சு வாங்கிற்று. அப்படியே பாயில் சாய்ந்தாள். இப்போது அவள் சரசுவாகி விட்டாள். 

“பொழுது விடிந்ததும் எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது?” என்பது அவளுக்குப் பிரச்சனையாகி விட்டது.

24. ரதிபதி ப்ரியா

உலகம் பதில் சொல்லக்கூடிய கேள்விக்குறியையா சரசு போட்டுக் கொண்டாள்? அவளைப் படைத்த தெய்வம் அவளது அறிவை வேறுவிதமாகத் திறந்து விட்டது. 

நமக்குத் தேவைதானா என்று சில விஷயங்களைச் சிந்தித்துப் பார்த்தால் நமக்கே கஷ்டமாக இருக்கும். அப்படிச் சில சம்பவங்களும் விஷயங்களும் கூட மனித வாழ்க்கையில் உண்டு. 

இந்தத் தத்துவங்களெல்லாம் சரசுவுக்குத் தெரிந்தவை தான். ஆனால் அவளைப் பொறுத்தவரை, அவளது பூர்வ ஜென்மம் என்பது மிகத் தெளிவான ஒன்றாகவே அவள் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து வெளியேற அவளால் முடியவில்லை. 

கணவனிடத்தில் ஈடுபாடும் ஐக்கியமும் கொண்ட ஒருத்தி எப்படி இருந்தாலும், ‘கணவன் கணவனே’ என்று எண்ணக் கூடிய ஒருத்தி, ஏதாவது ஒரு தெளிவும் முடிவும் இல்லாமல் இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா? 

அவளது நெஞ்சில் தெளிவிருந்தது. முடிவிருந்தது. ஆனால், அவள் ஒருத்தியாக அல்ல. இரண்டு பெண்ணாக விளங்கினாள். ஒரு சரசு பூர்வஜென்மப் பைத்தியமாகவும், ஒரு சரசு இந்த ஜென்மத்துப் பெண்ணுமாக அவளுக்குள்ளே காட்சியளித்தார்கள்.

காலையில் அவள் கண்விழித்த போது பாத்ரூமுக்குச் செல்லவே வெட்கப்பட்டாள். மெதுவாக ஹாலை எட்டிப் பார்த்து, அங்கு ராஜேந்திரன் இல்லாத நேரமாக ஒன்று கிடைக்காதா என்று ஏங்கி, அந்த நேரத்தில் வெளியே போகத் தலைப்பட்டாள். 

அக்காள் பயப்படுவதும், பதுங்குவதும் மத்தியானத்துக்குள் பாமாவுக்குத் தெரிந்துவிட்டது. 

”ஏனிப்படி நடந்து கொள்கிறாள்?” என்று ராஜேந்திரனைக் கேட்டாள். 

“யாருக்குத் தெரியும்?” என்று தான் அவனாலும் பதில் சொல்ல முடிந்தது. 

உள்ளம் என்னதான் தெளிவாக இருந்தாலும், பல நேரங்களில் அது ஊமையாகத்தான் இருக்க வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட உள்ளம், குழப்பமான நேரத்தில் என்ன கதியாகும்? இந்த ஊமைத்தனம் எவ்வளவு காலம் நீடிக்க முடியும்? குடிப்பவனாக இருந்தால் இரண்டு கிளாஸில் உளறி விடுவான். அல்லாதவர்கள் ஏதாவது ஒரு சம்பவத்தின் போது உளறி விடுவார்கள். 

மறுநாள் இரவே ராஜேந்திரன் பாமாவிடம் உளறிவிட்டான். பாமா திகைத்துப் போனாள். 

‘அக்காவா இப்படி? அதுதான் இரண்டு நாட்களாக நம் கண்முன்னால் வரவே பயப்படுகிறாள். அக்காளுக்கென்ன சித்தப் பிரமையா? யாராவது மனநோய் மருத்துவரிடம் காட்டலாமா?” என்றெல்லாம் அவள் சிந்தித்தாள். 

கொஞ்ச வந்த பாமாவிடம் வேடிக்கையாகச் சொல்லி விட்ட ராஜேந்திரன், அதற்காக வெகுநேரம் வேதனைப் படத்தான் வேண்டியிருந்தது. 

பாமா அவள் படுக்கையில் பக்கத்தில் படுத்திருந்தாளே தவிர, காதல் கனியாட்டங்களில் ஈடுபாடு கொள்ளவில்லை, எதை எதையோ சிந்தித்து மனதைப் போட்டு வாட்டிக் கொண்டாள். 

சந்தேகத்திற்குத் தீர்வு காண்பது இடியாப்பத்துக்குத் தலைப்புக் கண்டுபிடிப்பது போல, 

“அக்காள் வேண்டுமென்றே செய்திருப்பாளா? இல்லை. இருவருக்குமிடையே முன்பே உறவிருக்குமா? இல்லை, ஜெயசந்திரனைக் காதலித்து தடம் தெரியாமல் தன் கணவன் பக்கம் வந்து படுத்திருப்பாளா?” 

ஆம். சந்தேகம் என்ற ஆயிரம் கால் பூச்சி. தன் அத்தனை கால்களையும் நீட்டிற்று. 

சொல்ல முடியாத ரகசியம் தான் துன்பங்களிலே, மிகப் பெரிய துன்பம். 

‘இதைப் போய் அக்காளிடம் எப்படிக் கேட்பது? இல்லை இதற்கொரு முடிவு காணும் வரை அக்காளுடன் சகஜமாகப் பேச எப்படி முடியும்?’ 

தர்ம சங்கடம் என்பது இதுதான். அவள் இரவெல்லாம் தூங்கவில்லை. அதிகாலையில் அவள் செய்த முடிவு, இது தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் ‘நாகரிகம்’ என்பதே. 

ஒன்றும் அறியாதவளைப் போல் அக்காளின் அறைக்குள் சென்றாள், ”என்னக்கா, இரண்டு நாட்களா எதுவுமே சரியாகச் சாப்பிடவில்லை. முகமும் வாடிப் போய் இருக்கிறது. மனதில் ஏதாவதிருந்தால் என்னிடம் சொல்லக் கூடாதா? நான் எதற்காக இங்கே இருக்கிறேன். அக்காள் தங்கை என்று கூடப் பிறப்பதே அனுசரணைக்குத் தானே? உனக்கு மனக்கஷ்டம் ஏதாவதிருந்தால், அதில் நான் பங்கு கொள்ள முடியாதா?” என்றாள் பாமா.

ஒருக்களித்துப் படுத்து விக்கி விக்கி அழத்தான் சரசுவால் முடிந்ததே தவிர, எதுவும் சொல்லக் கூடியதாக இல்லை. 

“ஏனக்கா, நான் உன்னைப் புண்படுத்திவிட்டேனா?” என்று கேட்டாள் பாமா. 

“சீச்சீ! அதெல்லாம் ஒன்றுமில்லை. என் தலையெழுத்தை எண்ணி நான் அழுகிறேன். ஒரு ஜென்மத்திலுமே எனக்கு நிம்மதி இல்லையே இப்படியொரு சிருஷ்டியா…? தேவி ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாள்?” என்றாள் சரசு விம்மலுக்கிடையே. 

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை அக்கா?” என்றாள் பாமா. 

“பரவாயில்லை பாமா. நான் ஏதாவது ஒரு ஹோட்டலில் தனியாகப் போய் இருந்து விடுகிறேன். அதுதான் எனக்கு நிம்மதி. நான் இங்கு இருந்து கொண்டு உங்களையும் கஷ்டப்படுத்தி, நானும் கஷ்டப்பட வேண்டாம்” என்றாள் சரசு. 

“எங்களுக்கொன்றும் கஷ்டமில்லை. நீ போக வேண்டும் என்று விரும்பினால் நான் தடை சொல்ல வில்லை. ஆனால் நீ ஒருத்தி கூட இருப்பதில் எங்களுக்குத் தொல்லை என்ன வந்தது?” என்றாள் பாமா. 

வேறு அவளைச் சமாதானப்படுத்த அங்கு யார் இருக்கிறார்கள்! முன்பெல்லாம் ராஜேந்திரன் இரண்டொரு வார்த்தைகள் சொல்வான். இப்போது அவனும் பேச முடியவில்லை. 

பாமா மிகுந்த ஜாக்கிரதையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் ஜெயசந்திரனை வரச் சொல்லி அவனுடனேயே அக்காளை ஒரு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தாள். அதன் மூலம் அக்காளின் மனோ நிலையையும், நடத்தையையும் கவனிக்க அவள் விரும்பினாள். 

ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்ததும் சரசுவுக்கு ஒரு. நிம்மதி வந்தது போலிருந்தது. அந்த இட மாற்றத்தில் ஒரு பெரிய சுமை இறங்கிவிட்டது போல் தோன்றிற்று. 

சரசுவைக் கொண்டு போய்விட்ட ஜெயசந்திரன், “மறு நாள் வருவதாக” விடை பெற்றுக் கொண்டான். 

அன்று இரவெல்லாம் சரசு சிந்தித்தாள். ‘ஒன்று, தன் புதிய ஜென்மம் வெற்றி பெறவேண்டும்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்’, என்பதே அவள் சிந்தனையாக இருந்தது. 

சரசு தனியாக வந்ததில் இருந்து ஜெயசந்திரனும் நிம்மதியாக இல்லை. அவனுக்குள்ளேயே ஏதோ ஒரு உணர்வும், உறுத்தலும் எழுந்துகொண்டே இருந்தன. அது ஏன் என்று அவனுக்கும் புரியவில்லை. ஹோட்டலில் சரசு தனியாகத்த தூங்குவதே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. 


காலை எட்டு மணிக்கெல்லாம் அவன் சரசுவைத் தேடி வந்து விட்டான். அது வேண்டுமா, இது வேண்டுமா என்றெல்லாம் விசாரித்தான். 

“என்ன அதிசயம் பாருங்கள் இரவில் என் கனவில் ஒரு அம்மையார். பட்டுச் சேலை கட்டியிருந்தார்கள். தலை நிறைய சம்பங்கிப் பூவும், மருக்கொழுந்தும் வைத்திருந்தார்கள். சரசுவை நீ அங்கே தனியாகத் தூங்க வைத்து விட்டு காவலுக்கில்லாமல் வந்து விட்டாயே? என்று கோபித்துக் கொண்டார்கள். எனக்கே மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் எழுந்து ஓடி வந்தேன்!” என்றான் ஜெயசந்திரன். 

“நான் தனியாகத் தூங்குவேன். எனக்கொன்றும் பயமில்லை. ஆனால் நீங்களும் இருந்திருந்தால் கொஞ்ச நேரம் சௌந்தர்ய லஹரி படித்திருக்கலாம்” என்றாள் சரசு. 

ஏதோ பதில் சொல்லவேண்டும் என்பதற்காக அவள் சொன்னாளே தவிர, ஜெயசந்திரன் கண்ட கனவு பற்றி அவள் அதிர்ச்சியுற்றிருந்தாள். 

‘தன் கனவில் வந்த அதே அம்மையார் ஜெயசந்திரன் கனவிலும் வந்திருக்கிறார்களே? ஒரு வேளை இனி பூர்வ ஜென்ம நினைவு அவனுக்கும் தோன்றுமோ? அன்று கோவிலில் சிவப்புப் பூவை பாமா எடுத்துக் கொண்டாளே, அது என் கணவரை மட்டும் விட்டுவிடு என்பதற்கு அடையாளமாக இருக்குமோ?’ 

சரசு சிந்தனையில் ஆழ்ந்ததும், “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று கேட்டான் ஜெயசந்திரன். 

“ஒன்றுமில்லை” என்று சொன்ன சரசு, மெதுவாக உள்ளே போய் கண்ணாடி பார்த்து விட்டுத் திரும்பினாள்.

‘தான் சரசுவல்ல. அபரஞ்சி’ என்பதை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள அவள் விரும்பினாள். 

அவள் எப்படி ஊசலாடினாளோ அப்படியே ஜெயசந்திரனும் ஊசலாடினான். அவள் எப்படி விஷயங்களைச் சொல்வதற்கு வெட்கப்பட்டாளோ, அப்படியே தன் கனவில் வந்த அம்மையார் சொன்ன விஷயங்களைச் சொல்வதற்கு அவனும் வெட்கப்பட்டான். 

இரண்டு பேருக்குள்ளும் பரிமாறிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. ஆனால் யார் பரிமாறுவது என்பதிலே தான் அந்தச் சமையற்காரர்கள் திண்டாடினார்கள். 

அந்த அறைக்குள் அவர்கள் உட்கார்த்திருந்தது, ஊடல் கொண்ட கணவனும் மனைலியும் உட்கார்த்திருப்பது போலவே இருந்ததே தவிர, வேற்று நபர்கள் இருப்பதைப் போல் தோன்றவில்லை. 

நேரங்களைப் பொறுத்துச் சில நியாயங்கள் உண்டு. மாலை நேரத்தில் சிந்திக்கின்ற சிந்தனை இரவிலே மாறும். இரவிலே நினைத்ததை காலையில் எண்ணிப் பார்த்தால் வெட்கமாக இருக்கும். 

அவர்கள் சந்தித்த நேரமும், சிந்தித்த நேரமும் காலை நேரம். ஆகவே நியாயமான பயத்தில் அவர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். அதுவே போதை ஏற்றும் மாலை நேரமாக இருந்திருந்தால், யாராவது ஒருவர் உளறி இருப்பார்கள். 

சரசுவின் சுபாவத்தை நன்றாக அறிந்தவன் ஜெயசந்திரன், ஆகவே அவன் பயப்படுவதற்கு நியாயம் இருந்தது. நடத்தையிலும், பக்தியிலும் கண்ணகிக்கு ஈடான சரசு இப்போது மாறியிருப்பதும் ஜெயசந்திரனுக்குப் புரிந்தது.

கனவில் வந்த அம்மையார் தனக்குச் சொன்ன விஷயங்களுக்கும், இரண்டு நாட்களுக்கு முன் சரசு சொன்ன பூர்வ ஜென்மக் கதைக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதை அவன் உணர்ந்தான். ஆகவே மத்தியானமும் அங்கேயே சாப்பிட்டு விட்டு இருந்தான். 

மாலையில் மனதைத் திறந்து பேச ஆரம்பித்தான்.

– தொடரும்…

– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *