நாடகம் போட்டுப்பார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 6, 2026
பார்வையிட்டோர்: 62 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4

நாடகத்துக்குப் பூஜை போட்ட அன்று சந்தியாதேவியின் எஸ்கார்ட் முத்தம்மா அநாகரிகமாக நடந்து கொண்ட விதம் ராம்குமாருக்கு மிகுந்த வேதனையை அளித்தது. மறுநாள் பாங்க் கான்டீனில் முரளியிடம் மனம் திறந்து பேசினான். 

“முரளி, நான் டீஸண்ட்டா ஒரு ட்ரூப் நடத்தணும்னு நினைக்கிறேன். இந்த மாதிரி லேடீஸுங்களே நம்ம ட்ரூப்புக்கு வேணாம். அந்த அம்மாவோட பேச்சும். முழியும் எனக்குப் பிடிக்கலே…” 

“அவங்க எப்படியிருந்தா உனக்கென்ன? சந்தியாதேவி ஃபர்ஸ்ட்கிளாஸ் ஆர்ட்டிஸ்ட்! அவளை நாம் லூஸ் பண்ணக்கூடாது. தயவுசெஞ்சு நீ இதுலே தலையிடாதே. எங்கிட்டேயும் பாலுகிட்டேயும் விட்டுடு” என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறிய முரளி பேச்சை மாற்றினான். 

ராம்குமாரைக் குஷிப்படுத்துவதற்காக, சரவணா கல்சுரல் அகாடமி ராஜ ரத்தினத்தைச் சந்தித்ததைப் பற்றி உற்சாகமாகப் பேசினான் முரளி. ஜூன் மாதம் நாடக அரங்கேற்றத்துக்கு அவர் தேதி கொடுத்துவிட்டதைப் பற்றிக் கூறினான். ராம்குமாருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 

“என்ன நாடகம் போடப் போறோம்னு நம்பளுக்கே தெரியாது… இன்னும் முதல் ரிகர்சலே நடக்கலே அதுக்குள்ளே அவர் எப்படி ‘டேட்’ குடுத்தார்?” என்று கேட்டான் ராம்குமார். 

“நான் என் வழக்கப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சேன். ‘சாமிஜி ஸ்கிரிப்ட் எழுதப்போறார்னு சொல்லி  சாமிகிட்டே பாதி ஸ்கிரிப்ட் எழுதி வாங்கிடுவேன்” என்றான் முரளி. ராம்குமார் வாயடைத்துப் போனான். அடுத்து, ரிகர்சலைப் பற்றிப் பேச்சுத் தொடர்ந்தது. உட்கார்ந்து பாடம் படிக்கும் வரை முரளி வீட்டிலேயே ரிகர்சலை வைத்துக் கொள்வது என்றும். ‘ஸ்டாண்டிங்’ ரிகர்சலுக்கு வாடகைக்கு இடம் தேடலாம் என்றும் முடிவாயிற்று. 

முரளி வீட்டில் அந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் ரிகர்சல். ராம்குமாரைப் பொறுத்தவரையில், ரிகர்சல்கள் எப்படி நடைபெறும் என்பதற்கு ஒரு ரிகர்சலாக அமைந்தது. அது அவன் பொறுமையைச் சோதித்தது! 

சாமிஜி எழுதிக் கொடுத்திருந்த ஒன்பது காட்சிகளின் ஜெராக்ஸ் காப்பிகளுடன் குறித்த நேரமான நான்கு மணிக்கெல்லாம் ராம்குமார், முரளியின் வீட்டுக்கு வந்துவிட்டான். பத்து பதினைந்து நிமிடம் அவனும் முரளியும் மட்டுமே எதோ பேசிக் கொண்டிருந்தனர். நாலரை மணிக்கு அப்பாராவ். ”பஸ்லே வரவில்லை” என்று சொல்லிக் கொண்டே வந்தார். வின்சென்ட்டும் ஹரனும் வரும்போது மணி நாலு ஐம்பது. சப்பாணி வியர்க்க வியர்க்க நுழைந்தபோது மணி ஐந்து அடித்தது. ஐந்தரை மணி வரை வேறு யாருமே வரவில்லை. 

பாவம், ராம்குமார்! ராகுகாலத்துக்கு முன் முதல் ரிகர்சலைத் தொடங்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் வெறுப்படைந்தான். ரிகர்சலின்போது ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்தால்தான் நாடகத்தை நல்ல முறையில் தயாரிக்க முடியும் என்றும்… டிஸிப்ளின் இல்லாத ட்ரூப், சுருதி சேராத சங்கீதம் போன்றது என்றும் பொதுவாக ஒரு லெக்சர் அடித்தான். சப்பாணியும் முரளியும் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாகச் சிரித்துக் கொண்டனர். 

ஐந்தேமுக்காலுக்கு அசட்டுச் சிரிப்புடன் சுபத்ரா வந்தாள். முதல் நாள் ஈரோடில் ‘ப்ளேயை முடித்துவிட்டு, ரயிலில் சரியாகத் தூங்காமல் வந்ததால், சாப்பிட்டுவிட்டுப் படுத்தவள் அசந்து தூங்கிவிட்டாளாம். ராம்குமார் காதில் விழும்படி சப்பாணியிடம் லேட்டாக வந்ததற்கான காரணத்தைக் கூறிக் கொண்டிருந்தாள். 

கைக்கடிகாரத்தைப் பார்த்த ராம்குமார், “இன்னும் சாமிஜியைக் காணோமே முரளி…” என்று கவலைப் பட்டான். 

“ராகுகாலம் போகட்டுமேன்னு வீட்லே காத்துக்கிட் டிருக்காரோ என்னவோ…” என்று முரளி ‘ஜோக்’ காகச் சொன்னது ராம்குமாருக்கு ரசிக்கவில்லை. கோபத்தால் முகம் சிவந்தது. 

ஆறு மணிக்கு… சக்கி சைக்கிளை ஓட்டிவர,காரியரில் டபுள்ஸ் வந்தான் சாரதி. “வழிலே டயர் பங்க்சர் ஆயிடுச்சு” என்று சமா தானம் கூறினான். 

“உனக்கு ‘டயர்’ பங்க்சர் ஆயிடுச்சா? எங்களுக் கெல்லாம் ‘டியூப்’ தான் பங்க்சர் ஆவும்” என்று அவன் பொய் சாக்கு சொல்வதை இடித்துக் கூறினான் சப்பாணி. நேரம் வீணாகிறதே என்று கவலைப்படாமல், ஆளுக்கொரு ஜோக் அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ராம்குமாரின் வயிறு பற்றியெரிந்தது. 

அப்போது ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. சப்பாணியும் முரளியும் வெளியே விரைந்தனர். பாலுவை அங்கேயே மடக்கி, ராம்குமார் படா மூடுலே இருக்கான். ஜாக்கிரதையா பேசு…” என்று எச்சரித்தனர். 

“சந்தியா என்ன சொன்னா…. வரேன்னாளா?” என்று கேட்டான் சப்பாணி. “அது போயிட்டா கேஸுடா. வேற யாரையாவதைத்தான் பார்க்கணும்…” என்றான். 

“ஏன்?” 

“ராமுடுவோட புது ‘ப்ளேலே செய்யப் போறாளாம். நல்ல ரோலாம்… நூத்தம்பது ரூபா தரேன்னானாம்…” 

“வுடு களுதையை… அது ஒரு இடத்துலே நிலைச்சு இருக்காதுப்பா. அதான் டேலண்ட்ஸ் இருந்தும் முன்னுக்கு வரமாட்டேங்குது…” 

“அதுமேலே தப்பு இல்லேப்பா… அம்மாக்காரி பேச்சைக் கேக்கற வரைக்கும் அது உருப்படாது…” 

அந்தச் சமயம்… சாமிஜி, சந்தியாதேவி, முத்தம்மா மூவரும் ஆட்டோவில் வந்து இறங்கினர். 

சந்தியாதேவியும் முத்தம்மாவும் சாமிஜியுடன் ஆட்டோவில் வந்திறங்கிய ய காட்சியை பாலுவால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

“சாமிஜியைப் பற்றி முத்தம்மா என்னிடம் எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறா!” 

“அவன் என்னா பெரிய எழுத்தாளனா? காப்பியடிச்சு எழுதறான். மத்தவங்க ஜோக்கைத் திருடிப் போட்டுக்கறான்’ என்று முத்தம்மா பேசியபோது, சந்தியா அதை ஆமோதிப்பதுபோல் சிரித்துக் கொண்டிருந்தாளே, இப்போ சிரித்துப் பேசியபடி மூவரும் ஆட்டோவில் ஒண்ணா வந்து இறங்கறாங்களே! சீ! இதுங்கள்லாம் மேடையிலே நடிக்கிறதைவிட அன்றாட வாழ்க்கையிலேதான் ரொம்ப நல்லா நடிக்கிறதுங்க. இதுங்களை நம்பவே கூடாது. கழிசடைகள்’ என்று வெறுத்துக் கொண்டான். ஆனால், அவர்கள் அருகில் வந்ததும், “வாங்கம்மா, வாங்க மேடம்” என்றான் வளைந்து நெளிந்துகொண்டே. 

அவனும் நடித்தான்! 

ராம்குமார் அமைதியாக இருந்தான். அது அடிக்கப் போகும் புயலுக்கு அறிகுறியா அல்லது உள்புயல் அடித்து ஓய்ந்துவிட்டதன் அடையாளமா? அறையில் நிலவிய பேரமைதி படுபயங்கரமாயிருந்தது. யாராவது ஏதாவது பேச மாட்டார்களா என்று எல்லோருமே நினைத்தார்கள். 

“எல்லாரும் வந்துட்டாங்க போலிருக்கே, ஆரம்பிக்கலாமே!” சாமிஜி வெற்றிலைப் பொட்டலத்தைப் பிரித்தபடி கூறினான். அதில் டைரக்டரின் குரல் தொனித்தது. 

“ரிகர்சல் நாலு மணிக்குன்னு சொல்லியிருந்தேன். மணி இப்போ ஆறரை” – தயாரிப்பாளர் ராம்குமார் பதில் சொன்னான். 

“அப்படியா! நான் கடிகாரம் கட்றதில்லே”- தன் ஜோக்குக்குத் தானே சிரித்துக் கொண்டான் சாமிஜி. 

“நம்ம கையிலே கடிகாரம் இல்லாட்டியும் டைம் ஓடிக்கிட்டே இருக்கும்” சிரிக்காமல் சொன்னான் ராம்குமார். 

“அடேடே, அது எனக்குத் தெரியாதே!” சொல்லிவிட்டு சந்தியாவைப் பார்த்து விஷமமாகப் புன்னகைத்தான் சாமிஜி. அவளும் சிரித்தாள். அதைப் பார்த்துவிட்ட சுபத்ரா, கீழுதட்டை அஷ்டகோணலாக்கி அழகு காட்டியதை பாலு ஓரக்கண்ணால் பார்த்தான்! 

ராம்குமாருக்கும் சாமிஜிக்குமிடையே டயலாக் விபரீதமாக வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்த முரளி, ராம்குமாரின் காதில் ஏதோ முணுமுணுத்தான். 

“மொதல்லே நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடறேன். அப்புறம்தான் மத்ததெல்லாம்” என்று சீரியஸானான் ராம்குமார். ‘சாருக்கு என்ன சொல்லணும்?” – வாயில் சீவலைப் போட்டபடி கேட்டான் சாமிஜி. 

“ரிகர்சலை எல்லாரும் சீரியஸா எடுத்துக்கணும்னு விரும்பறேன்!” 

‘எல்லாரும்’ என்ற வார்த்தை அண்டர்லைன் பண்ணிய மாதிரி அழுத்தமாக விழுந்தது. 

“எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்க ஆரம்பிச்சா நாடகம் போட முடியாது. டென்ஷனாலே மூளைக்கொதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரி அட்மிஷனுக்கு அப்ளிகேஷன்தான் போடமுடியும்.” – சாமிஜியின் கூர்மையான பதில் பாய்ந்து வந்தது. 

“மன்னிக்கணும், நான் நாடகம் போடறதை ஒரு தமாஷாவோ, பொழுது போக்காகவோ, நினைக்கலே. நாடகம் பார்க்கிற ஆடியன்ஸ் அதைப் பொழுது போக்கா நினைக்கலாம். ஆனா, நாம அதை சீரியஸா எடுத்துக்கணும். நம்ம பொறுப்பை உணரணும்!” 

சாமிஜி எழுந்து வெளியே போனான். ‘ஐயையோ, இன்னொரு வெளிநடப்பா? என்று முரளி தலையைப் பிடித்துக்கொண்டான். 

நல்லவேளை, இரண்டு நிமிடங்களில் சாமிஜி திரும்பி வந்தான். வாயிலிருந்த வெற்றிலையைத் துப்புவதற்காகத் தான் வெளியே சென்றான் என்று தெரிந்ததும் முரளியின் படபடப்பு அடங்கியது. 

நிதானமாக உட்கார்ந்து முரளியைப் பார்த்துப் பேசினான் சாமிT! 

“இங்கே எல்லாரும் ரிகர்சலுக்கு வந்திருக்கோமா, இல்லே நம்ம பொறுப்புகளைப் பற்றிப் பாலபாடம் படிக்க வந்திருக்கோமான்னு எனக்குப் புரியலே. ரிகர்சலுக்கு வரக் கொஞ்சம் லேட்டாயிடுச்சுன்னா, அதுக்காகப் பொறுப்பில் லாதவன்னு என்னைச் சொல்ல இங்கே யாருக்கும் அதிகாரம் கிடையாது. 

“என்னது, கொஞ்சம் லேட்டாயிடுச்சா? இங்கே நான் நாலு மணியிலேருந்து காத்துக்கிட்டிருக்கேன்.”- ராம்குமார். 

“வேலை இருக்கிறவங்களுக்கும் வேலை இல்லாதவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?’ 

“நீ வேலையில்லாத சோம்பேறி! நான் ஃபீல்டுலே படு பிஸியா இருக்கறவன்’ என்று சொல்லாமல் சொன்னான் சாமிஜி. இது புத்திசாலி ராம்குமாருக்குப் புரிந்தது. கோபத்தில் முகம் சிவந்தது. 

திடீரென்று ரிகர்சல் ஹால் தியான மண்டபமாக மாறியது. ஒரே நிசப்தம். சகிக்க முடியாத அமைதி! 

உச்சாணிக் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்த சாமிஜி தொடர்ந்தான்: “மிஸ்டர் ராம்குமார்.. ஆர்வத்தோட புதுசா ட்ரூப் ஆரம்பிச்சிருக்கீங்களேன்னு, அதுவும் முரளி சொன்னானேன்னு நிறைய தியாகம் பண்ணி உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். எத்தனையோ பேர் என் சப்ஜெக்டுக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கும்போது, உங்களுக்கு எழுதித் தர ஒப்புக்கிட்டேன். நாடகத்தையும் அரங்கேற்றித் தரேன். அதுவரை நீங்க புரொட்யூஸரா மட்டும் இருங்க. அதாவது செலவை மட்டும் கவனிச்சுக்குங்க. வேறே எதுலயும் தலையிடாதீங்க. இஷ்டம் இருந்தா சொல்லுங்க… இல்லேன்னா எழுதினவரைக்கும் என் ஸ்கிரிப்டை எடுத்துக்கிட்டுப் போயிடறேன். அஞ்சு நிமிஷம் டைம் தரேன்… யோசனை பண்ணிச் சொல்லுங்க!”

– தொடரும்…

– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *