கணை
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 100
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

But the king’s younger brother named Vattagamini killed the villainous commander and took on himself the government. The little son of his brother, king Khallatanaga, whose name was Mahaculika, he took as his son; and the (child’s) mother, Anuladevi, he made his queen .There-upon the Damilas made war upon the king; in a battle near Kolambalaka thd king was vanquished… He took Anuladevi with him … But, to lighten the car the king gave to Somadevi (his second wife) his splendid diadem- jewel and let her, with her own consent, desc- end from the car… Of the seven Damilas one, fired with passion for the lovely Somadevi, made her his own and forthwith returned again to the further coast.
-The Mahavamsa
Dr. Wilhelm Geiger’s Edition.
(மகாவம்சத்தை வரலாற்று நூலெனக் கருதுபர்கள் ‘கணை’யை வரலாற்றுச் சிறுகதையெனக் கொள்ளலாம். கதையின் நிகழ்ச்சிக் காலம் கி.மு.44-ஆகும்.)
அஸால்ஹ பட்சம் பிரசவித்த பூரணை
வட்டகாமினியை வென்ற ஏழு தமிழ் வீரர்களுள் ஒருவனான குறு நிலவேளின் மாளிகை. மாடத்தில் அமைந்துள்ள சயன மண்டபம்.நிலா,பரதம் பயிலும் பாற்கதிர்க் கற்றையைப் பீச்சுகின்றது. பாலாவி
நிகர்த்த திரைச் சேலைகளைத் தழுவி, அவற்றை நாணத்திலாழ்த்திக் களியிற் கெம்பும் மாருதி. வாலிப உடலங்களிற் சடைத்து வளருஞ் தசைப் பிடுங்கல் விரகம் வியாபிக்கும் நிலைக் களனிலும், சோமாதேவியின் சேத நை சுழல் காற்று வாய்ச் சருகாக எற்றுண்டு, அலைக் கழிந்து…
‘கணிகைக் காற்று… ஈழம் வாழ் பௌத்தர்களின் சிங்களக் கொடி இறக்கப்பட்டிருக்கும். மகிந்த தேரர் வாழ்ந்து, போதி மாதவரின் புனித நெறி பரப்பிய குன்றிலிருந்து எழுந்து, கடம்பநதிப் பிராந்தியத்திற் சீதள மது பருகும் மந்தமாருதம், சைவத் தமிழர் பறக்க விட்டிருக்கக்கூடிய ஆதிக்கக் கொடியை, இதே அம்மணச் சரசத்துடன் தழுவிச் சுகமனுபவித்துக் கொண்டிருக்கலாம்… போரிலேற்படுந் தோல்வி, உடலிலே நித்தியம் ஊறும் புலால் உணர்ச்சிகளைத் தீய்த்துப் பொசுக்கி விடுகின்றதா? இந்நேரத்தில்… கடம்ப மலர்க் காட்டில், அனுலாதேவியின் மருங்கில், மன்னர் வட்டகாமினி சித்த பரிசுத்த நோன்பிலா ஆழ்ந்திருப்பார்? அனுலாதேவி கொடுத்து வைத்தவள்; அனுபவிக்கப் பிறந்தவள். அண்ணனின் மஞ்சத்தைப் பங்கிட்டு, அந்தக் கலவிக் களியிற் குழந்தை பெற்ற வளை, ‘மாடும் கன்று’மாகப் பொறுப்பேற்று, இராணி யாக்கி, ‘அண்ணனுக்குத் தெரிந்த அதே அந்தப்புரக் கலையில் நானுந் தேர்ந்தவன்’ என்பதை வட்டகாமினி மன்னர் நிரூபிக்கவில்லையா? பின்னர், ஏன் என்னைத் தன் இளையாளாய் நாடினார்? அந்த மலரிலே தேன் இற்றுவிட்டது; வண்டு புது மலரை நாடுகின்றது என்று நான் நினைத்தது தவறா ? சென்ற மஹா பட்சத்தை மறப்பதா? முதன் முதலில், என் கன்னிகை அழிந்து, பூ நோக,இடை நொந்து, மன்னருடைய தழுவலில், அரண்மனை மஞ்சத்திற் சயனித்த அந்த நாள் மஹா பட்சத்திற் புலர்ந்ததுதான். இரண்டு திங்கள் களுக்கிடையில் நான் தேன் இற்ற மலரானேனா? என் வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா? மதுபாயுந் திரேகிகளான இரண்டு மன்னர்களின் சிற்றின்பத் திருப்திக்குத் தன் உடல் பிழிந்து, கருத்தரித்து, சுமை தூக்கிய அந்தக் கிழவி மட்டும் இன்றும் இனிக் கின்றாளா? இல்லையேல்…? போர்க்களம் விட்டுத் தப்பியோடுந் தேரிலிருந்து ஏன் நான் மட்டும் இறக்கப் பட்டேன்? “தேர் விரைவாகச் செல்ல வேண்டு மென்றால் ஒருவர் இறங்கவேண்டும் என்று சொல்லி என்னையே பார்த்தால் என்ன அர்த்தம்? இதில் என் விருப்பம் ? இருக்கின்றது? பூவின் சம்மதங் கேட்டா, அஞ்சலிப் பீடம் அனுப்புகின்றார்கள்? நான் மன்னருக்கு ஊட்டிய கலவிக் களியின் பெறுமானம், இறுதி நேரத்தில் அவர் பரிசாகத் தந்த கிரீடத்து ஆபரணந்தானா ?… முத்தும் முத்தமிழும். செந் நெல்லுஞ் செங்கரும்பும் விளையும் இந்நாட்டிலிருந்து வந்த மாவீரனே எல்லாளன். ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், அந்தச் சைவனைத் தோற்கடித்து பௌத்தத்தின் மேன்மையைச் சிங்களத்தில் நிலை நாட் டினார் மாமன்னர் காமினி.ஆண்டுகள்பலவாகி விட்டன. எல்லாளன் மரணத்தைத் தமிழர் மறந்துவிட்டனர்என்று தான் எல்லோரும் நம்பினர். யானையின் ஞாபக சக்தி தமிழருக்கு இருக்கின்றதாம். ஏழு தமிழ் வீரர்கள் சூறா வளியென வந்தார்கள். அவர்களை மகாகமைப் பிரா மணன் வெற்றிவாகை சூட்டுவான் என நினைத்த மன்னர் வட்டகாமினியின் பேதமை என்னே! செருக்கள வீரம் ஒருவன் பிறப்பில் அமைகின்றது. ஏழு தமிழர் களுடன் போராட வக்கின்றி தேர் ஊர்ந்து கானக மேகிய பொழுது, அனுலா தேவியை மட்டும் ‘மாடும் கன்றுகளுமாக அழைத்துச் சென்றது ஏன்? என் வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா? மன்னராயிருந்த தன் அண்ணன் ஹாலதநாகாவைக் கொன்ற சேனாதிபதி மகாரட்டகனை வென்று, மணிமகுடத்தை மட்டுமன்றி, மகா ராணியையும் ‘மாடும் கன்று’ மாகப் பரிசுபெற்ற. மாமன்னர் சதாதீஸனின் கனிஷ்ட குமாரர் வட்டகாமினி கோழையா? போர்க்களம் விட்டோடும் பேடியே வீரனா? அந்த ‘வீரன்’ சுவைத்த இந்த உடலை, வேறொருவன் தீண்டா வண்ணம் நான் தன்னந்தனியாகப் போராட போராட வேண்டுமா? எதற்காக? சூரியோதயத்திற் குளித்து மகிழக்காத்திருக்கும்போது வைகறைக் குறையொளியில் வீயாகக் காய வேண்டுமா? ஏன்? அண்ணன் மனையாளை ‘மாடும் கன்ற று மாகத் தன் நெஞ்சிற் குடியேற்றியிருக்கும் வட்டகாமினிக்கு இரண்டு திங்கள்கள் இளையாளாக- காமக் கிழத்தி யாக- வாழ்ந்தேன் என்பதற்காகவா?’
சிந்தனை ஊஞ்சலின் அலைக் கழிப்பிலிருந்து விடு படும் வேட்கையுடன், தென் திசையிலே தன் பார் வையை வீசுகிறாள். பாட்டும் – கூத்தும் – யாழின் இசை யும்- சதங்கை ஒலியும்! அது கணிகையர் வீதி. பொற் காசுகள் வீசப்படுகின்றன. காமக் குளிப்பு நடைபெறுகின்றது.
‘கணிகையரும் பெண்கள். மன்மத கிருகம், கற்பின் மருநிலமா? இன்பத்தின் விளை நிலமா? பூஜைஅறையா? அங்காடித் துறையா?’
பாலாவி திகர்த்த திரைச் சேலைகளைத் தழுவி, அவற்றை நாணத்திலாழ்த்திக் களியிற் கெம்பும் மாருதி. சோமாதேவியின் உள்ளத்தில் இடு காட்டு மோனம்.
சிலம்பொலிச் சிதறல், சோமா தேவியின் சென்னி அத்திக்கிலே திரும்புகின்றது. பணிப் பெண் களும் வண்ணமகளும்! மலர்த்தட்டு, பழத்தட்டு, அகிற் றட்டு, மதுத்தட்டு… பரிமள கந்தங்களில் அளையும் மாருதி, ஒரு தட்டில் வழியும் மலர்கள் அவள் கவனத்தை ஈர்க்கின்றன.
‘மலர்கள். அற்ப ஆயுசு. ஒரு நாள் வாழ்க்கை. அதற்கிடையில் எத்தனை வண்டுகளுடன் கூடிக் களித்தனவோ?’
அவளுடைய கண்கள் தென்திசையில் மேய்ந்து மீளு கின்றன. கணிகையர் தெரு. உடலின்பத்தில் அங்காடி வணிகம் நடைபெறுகின்றது … வெள்ளப் பெருக்கில் மாயுந் தீயோ? மதநெய் உறிஞ்சி வளருந் தீயோ? ‘கற்பு? அது மலருக்குங் கிடையாது; கணிகைக்குங் கிடையாது. அண்ணனுக்குந் தம்பிக்கும் ஒரே உடலில் தசைத் திரள்களைப் படுக்கையாக்கிய அனுலாதேவிக்கு இருக்கின்றதா? ஏன் எனக்கு மட்டும் தேவை?’
”அம்மா!” – பணிப்பெண்களுடன் வந்து, திரும்பிச் செல்லாத வண்ணமகள் வசந்தமாலையின் அழைப்பு; குறுகிய காலத் தொடர்பு; ஆழமான ஈடுபாடு. விழி யெறிந்து பார்க்கின்றாள்.
‘இந்த வண்ணமகளின் வன்ன முகத்திற் கார் மேகத்தை அள்ளி அப்பியது யார்?’
“ஏன்டீ, உனக்கிந்தக் கலக்கம்? எனக்கிலாக் கவலை?’
“நீங்கள் சிங்களத்தியாகவும், நான் தமிழச்சியாகவுமிருக்கலாம். ஆனால், இருவரும் பெண்கள். கற்பே பெண்மையின் பெருமை. அதனை நீங்கள் இழந்தாலும் நான் இழந்தாலும், ஒரு பெண் தன்னுடைய கற்பை இழந்தாள் என்னுங் கறையே எஞ்சும். . . கற்பைப் பாதுகாக்கும் போராட்டத்திலே உயி ரைப் பலியிடுபவளுக்குச் சுவர்க்க பதவி கிட்டுகின்றது என்று என் குலத்தவர்கள் நம்புகிறார்கள்.—அர்த்தச் செறிவைத் தேக்கித் தன் மோதிரத்தைக் காட்டுகிறாள். அந்த மோதிர முகப்பின் கள்ள அறையில் நஞ்சு இருப் பதை ஊகிக்க முடிகின்றது.
‘ நஞ்சு தரும் சாவு வீரத்தின் பரிசா?’
சோமாதேவி, தொண்டைக்குட் சலங்கை கிலுக்கிச் சிரிக்கிறாள்.
“கவலையை மறப்பதற்கு வழி இன்ப மது மாந்து வதுதான். பைத்தியக்காரி! புண்ணைச் சொறிந்து கூட இன்பம் அனுபவிக்கலாம். வண்ணமகளே! உன் கலை வண்ணங்காட்டு என் வாலை வனப்பும் வசீகர மும் எவரையுங் கிறுங்கச் செய்யும் விதத்தில் ஒப்பனை செய் ஏன் தயக்கம்?. இந்நாட்டில் எப்படியடி, முதலிரவுக்குப் பெண்களைத் தயார் செய்வார்கள்?”
மண்ணாசை துறந்து, போர்க்களத்திலே விழுப் புண் பெற்று விருது புனையும் வீறு போக்கி, சிங்களப் பைங்கிளி சோமாதேவியின் தசையணைப்பே போது மென்று ஊர் திரும்பிய வீரக்காளை வரும் அரவங் கேட்கின்றது.
‘இவனுடைய காதலும்; தமிழர் தம் போக்கும்! பாண்டுகாபய நிருமாணித்த தித்தராமாவின் அயலிற் சிறைப்பட்டேன். இங்கு வருவதற்கிடையில், அவன் என் அருகில் எத்தனை இரவுகளை- மாந்தைத்துறை யிலும், நாவாயிலும், மருவூர்ப்பாக்கத்திலும் – கழித் திருக்கின்றான்? என் வாலை வனப்பையும் வசீகரத்தை. யும் விழியாற் பருகினானேயன்றி என்னைத் தீண்டிய தில்லை. காவலில்லாத கரும்புத் தோட்டத்தை மதம் பிடித்த யானையால் அழிக்கமுடியாதா? இவன் மலரை செடியில் வைத்தே இரசிக்குங் கவிஞனா, கலைஞனா?… இவன் எங்கே? அண்ணனின் உதிரஞ் சேனாதிபதியின் வாளிற் காய்வதற்கு முன்னரே, அண்ணியைத் தன் படுக்கையில் அனுபவித்த வட்ட காமினி எங்கே? ‘மணி முடி வேண்டாம்; சண்டாளப் பெண் அசோகமாலாவின் காதலே வேண்டும்’ எனக் காதலை ஓம்பினான் சாலி ராஜகுமாரன். அவன் தம்பி முறையினனான வட்ட காமினி தன் மணிமுடியின் உரிமையைக் காக்க மாடும் கன்றுமாகக் கிடைத்த அந்தக் கிழவியைப் பெரிதாக மதிக்கின்றான். என் வாலை வனப்பும் வசீகரமும் எஙகே?…’
வந்தவன் சிலையாக நிற்கின்றான். தலைவிரி கோலமாக, கையிற் கட்டாரியுடன், ‘என் கற்பைத் தீண்டுவாயோ?’ என மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னாளை எதிர்பார்த்தே வந்தான். இரும்பை வளைப்பதற்கு முழுப்பலத்தையுந் திரட்டி வந்தவனிடம் குசப்புல் அகப்பட்டால்?
சோமாதேவி தட்டிலிருந்த மலர்களை மஞ்சத்தில் ஒய்யாரமாகத் தூவி, “நிற்கின்றீர்களே?… உங்கள் தேசத்து மது சுவையாக இருக்கின்றது. மது நிரம்பிய கிண்ணத்தை நடன அபிநயத்துடன் நீட்டுகின்றாள். அவளுடைய விரல்கள், அவனுடைய கரத்தில் கண் ணிமைக்கும் நேரத்தில் யாழ்மீட்டித் திரும்புகின்றன.
”சோமா! சிங்களத்திகளின் பண்பு என்னை மிகவுங் கவர்ந்துள்ளது. தமிழச்சிகள் கற்பு என்று வறட்டுத் தத்துவம் பேசி, உணர்ச்சித் தீயைத் தேக்கி, உலர்ந்த விறகுகளாக உக்கிப் போகிறார்கள்…”
வாழ் கணிகையரு மன்று; கற்பு தத்துவமுமன்று. அது வாழும் முறை. வீரமிருக்கும் இடத்தில் அதைப் பயிலலாம்.”
”சிங்களத்திகள் தென்திசை வாழ் கணிகையரு மன்று, கற்பு தத்துவமுமன்று. அது வாழும் முறை. வீர மிருக்கும் இடத்தில அதைப் பயிலலாம்”
“நீயும் சாத்திரம் பேசுகின்றாயா?”
“இல்லை. நிதர்சனம் பேசுகின்றேன். கற்பைக் காப்பாற்ற வேண்டிய வட்டகாமினி வீரத்தைச் செருக்களம் போக்கி, கானகம் ஏகி விட்டபின்னர்?”
பஞ்சணைக்கு வந்து, படுப்பதாக அபிநயித்து…
மலர் தூவிய மஞ்சத்திலே குப்புறப்படுத்து, வாலை வாழிப்பில் வீங்குங் கொங்கைகளை முட்டாக வைத்து, அவை பிரியும் மையப்பகுதியின் பிளவைக் கவர்ச்சிக் கோணத்திற் காட்டி, குறுந்தசைக் குவடு களின் அடிவாரத்திலே உடலை நிமிர்த்தி, கண்களைச் சற்றே மேலிமைக்குள்ளேற்றிய அசைவிற் பார்க் கின்றாள்.
மது அருந்தித் தலை நிமிர்த்திய அவனைஅவளுடைய சுந்தர சாகஸ நிலை தன் வசத்தை இழக்கத் தூபமிடுகின்றது.
‘இந்த மஞ்சமே என் போர்க்களம். என் அம்மண உடலை அப்பிய அவயவங்களே என் ஆயுதங்கள்?’
மதுவிலும் பார்க்க அதிகம் போதையூட்டும் விழி களில் அம்பு தொடுத்து, மஞ்சத்திலே தூவப்பட்டிருக்கும் மென் மலர்களையும் விஞ்சும் வாக்கில், மது வழியும் கிண்ணத்தின் விளிம்பிலுஞ் சுவை தரும் இதழ்களை விரித்துப் புன்னகை சிந்துகின்றாள்.
மன்மதகிருகம், குப்புறக்கிடக்குமிடத்தைச் சமீபிக் கிறான். வட்டகாமினியின் சிற்றின்ப தூவழியிடத்தையும், துரங்கமக் குதியாட்டமிடுங் கொங்கைகளையும் வான் பார்க்கும் நிலையிற் புரட்டுகிறான்.
“நான் வீரன். வீரத்தின் பரிசாக உன்னை அனுப விக்கும் உரிமையைப் பெறுகின்றேன்.
“ஆம். வட்டகாமினியைப் போன்ற வீரன். அவர் தன் அண்ணன் மனைவியிடம் தன் வீரியத்தைச் சிந்திக் மனைவியிடம் காட்டுகின்றார். நீங்கள் மாற்றான் உங்கள் வீரியத்தை விதைக்க வந்திருக்கிறீர்கள்…”
‘‘என் உள்ளத்திற் கொழுந்து விட்டெரியும் காதலை நீ அறிவாய். “
“சிறைப்பட்ட ஒருத்தியிடங் காதல் செய்ய வந்துள்ள உங்கள் வீரத்திற்கும், தனக்கு வாழ்க்கைப்பட்டவளின் கற்பைக் காப்பாற்ற வக்கற்ற என் கணவரின் வீரத் திற்கும் என்ன வித்தியாசம்?’’-ஒரு கணப் பின்னத் தின் முனிவு சிந்திய காங்கைத் துகள்கள்.
அவனுடைய கண்கள் தீக்கங்குகளை உமிழ்கின்றன.
“நாத்தடித்தவளே ! ‘விழுப்புண் பெறா நாள் தோன்றா நாளே’ என்று விழுப்புண்ணை ஓம்பி வாழும் இத் தமிழனையா கோழையென்றாய்?”
இன்னொரு,கிண்ணம் மது அருந்தி நிமிர்கின்றான்.
‘இந்த மஞ்சமே என் போர்க்களம் என் அம்மண உடலை அப்பிய அவயங்களே என் ஆயுதங்கள்’.
“கோபத்தின் முறுக்கு ஏறும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கின்றீர்கள்?… மது தரவா?”
அவளுடைய மேனிக்குத் தசை ஒத்தணங் கொடுக்கும் நெருக்கத்தில், மஞ்சத்திலே அமருகின்றான்.
மதுக்கிண்ண விளிம்பிற்கும், சோமாதேவியின் கள்ளூறும் இதழ்களுக்கும் வித்தியாசம் மறைகின்றது.
சிங்களத்தீவில் கடம்ப மலர்க் காட்டில், அனுலா தேவியுடன் வட்ட காமினி கலவிக் களியின் மயக்கத்தில் துயில் கொள்ளும் வேளை!
– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வீராங்கனை திக்பிரதாப்
எஸ்.ஜி.கிருஷ்ணன்
September 3, 2026
பாட்டியும் பேரனும்
எஸ்.மதுரகவி
August 31, 2026
தோழி
கலைஞர் மு.கருணாநிதி
August 22, 2026
