கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: October 8, 2026
பார்வையிட்டோர்: 60 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள் 

பாரி: பறம்பு மலை அதிபதி கடையேழு வள்ளல்களில் ஒருவன். 

ஒளவையார்: நல்லிசைப் புலமை மெல்லியலாள். 

கபிலர் : ஒரு நல்லிசைப் புலவர். 

சேவகர்கள், கள்வர்கள். 

முதற் காட்சி

[பறம்புமலை அதிபதியும் கடையேழு வள்ளல் களில் ஒருவனுமான பாரி கொலு வீற்றிருக்கிறான். நல்லிசைப் புலமை மெல்லியளாகிய ஒளவையார் மண்டபத்திற்குள் நுழைகிறார்.] 

ஒளவையார்: பறம்பு மலை வேளே! இன்று போகலாம் – நாளைப் போகலாம் என இதுகாறும் நாட்களைக் கடத்திக்கொண்டு வந்து வீட்டீர். உம்முடைய பேரன்பை உணர்கிறேன். இனி என்னால் ஒரு கணமுந் தாமதிக்க முடியாது. இன்று கட்டாயம் நீர் எனக்கு விடை கொடுத்தனுப்ப வேண்டும். 

பாரி: அப்படி என்ன அவசரம் நேர்ந்ததோ?

ஒளவையார்: உடனே புறப்பட்டு வருமாறு அதியமான் எமக்கு ஓலை அனுப்பி யிருக்கிறார். 

பாரி: அதியமான் ஓலை அனுப்பி யிருக்கிறார்; ஆனால் மூவேந்தர்களுக்கும் அஞ்சாத பறம்புமலை யதிபனும், பாவலர்க்கு எளியனுமாகிய பாரியோ, இன்னும் சிலநாள் இங்கு தங்கிவிட்டுச் செல்லுமாறு உம்மை நேரில் வேண்டிக் கொள்கிறான்.

ஒளவையார்: அரசே! உமது வேண்டுகோளை மறுக்க எமக்கு இஷ்டமில்லை. ஆயினும், அதியமான் ஓர் அவசர காரியத்தின் நிமித்தம் என்னை அழைத்திருக்கிறார். 

பாரி: நான் உம்மை இருக்கச் சொல்லுவதும் ஓர் அவசியத்தின் பொருட்டே. 

ஒளவையார்: அவசியத்திலும் தாரதம்மிய முண்டு.ஓர் அரசாங்க அலுவலின் பொருட்டு அவர் என்னைத் தம்மிடம் வரச் சொல்லுகிறார். 

பாரி : அரசர்கள் சம்பந்தப்பட்டது எல்லாம் அரசாங்க அலுவல்கள் தாமே! 

ஒளவையார்: நடுச்சபையில் இதை வெளியிட வேண்டா மென்றிருந்தேன். தமக்கு ஏதோ ஒரு பேரா பத்து நேரவிருப்பதாகவும், என்னை வேற்றரசன் ஒருவனிடம் தூதனுப்ப விரும்புவதாகவும், நான் சென்றால் அவ் வாபத்து நீங்கலாம் என்றும் அதியமான் குறிப்பிட்டிருக்கிறார். இனி என்னால் தாமதிக்க முடியாது. தயவு செய்து விடை கொடுக்க வேண்டும். 

பாரி : (சிரித்துக்கொண்டு) உம்மைப்போன்ற நல்லிசைப் புலவர்களைத் தம்பாலிப்பதற்கு அரசர்கள் செய்யும் சூழ்ச்சிகளில் இது ஒன்று. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அரசர்கள் பொய் சொல்லப் பின் வாங்குவதில்லை. அதியமானும் அதில் இளைத்தவரல்ல. ஆகையினால் ஒளவைப் பிராட்டியாரே! சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். 

ஒளவையார் : அரசே, அப்படி யல்ல. அதியமான் என்னிடம் மனம் விட்டுப் பேசக்கூடியவர். இல்லாதது ஒன்றைச் சொல்லமாட்டார். நான் போகவேண்டும். 

பாரி: நீர் போகவேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. நீர் பறம்புமலைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே, ஏன் இந் நிலக்திற்கே உரியவர். உம்மைப் பாரியின் சமஸ்தானத்தில் அடைத்து விட முற்படேன். இன்னும் சில நாட்கள் இங்கு தங்கிவிட்டுச் செல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன். 

ஒளவையார்  (பரபரப்புடன்) பாரிவேளே! மன்னிக்க வேண்டும்.அதியமானுக்கு ‘ஆபத்து’ என்பதை அறிந்தவுடன் என் மனம் ஒரு நிலையில் இல்லை. என்னென்ன வெல்லாமோ எண்ணி,எங்கெங்கோ அலைகிறது. நான் உடனே புறப்பட வேண்டும். 

பாரி: உம்முடைய மன நிலையை நான் உணர்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போகலாம். 

ஒளவையார்: மலையுடைவேளே! புலவருக்கு நீர் கொடை கொடுப்பதாக இக் குவலயம் முழுவதும் போற்றுகிறது. அவர்களுக்கு விடை கொடுத்தும் நீர் பழக வேண்டும். நான் விடையிரந்து நிற்கிறேன். கருணை புரிய வேண்டும்.

பாரி : (புன் சிரிப்புடன்) அத் துறையில் நமது ஆற்றலின்மையை நாம் ஒப்புக் கொள்கிறோம். இன்னும் ஒரு நாளாவது அடியேனுடன் தங்கி விட்டுச் செல்லவேண்டும். 

ஒளவையார் : அரசே! இதற்குமேல் நான் என்ன கூறுவேன்? (கண்களில் நீர் ததும்ப) யான் அதியமானுடைய அன்பிற்குப் பாத்திரப் பட்டவள். அப் பூமானுக்கு ஆபத்து நேர்ந்திருக்க, நான் அரைக்கணமேனும் இங்கு தங்கியிருத்தல் அற மாகாது. மேலும் என் உள்ளம் இசையவில்லை. இன்றே விடைகொடுத்தருள வேண்டும். 

பாம்: இப்பொழுதே புறப்பட வேண்டுமா? 

ஒளவையார் : ஆம், அரசே! 

பாரி : (நாக் குழற) உம்மைப் போன்ற புலவர் பெருமக்களைத் தகுந்தபடி சன்மானிக்க, இக் குவலயம் முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆளும் சக்கரவர்த்தி யாலும் இயலாது. அடியேனோ ஒரு குறுநில மன்னன். நான் கொடுக்கும் பொருள்களின் விலை மதிப்பைப் பொருட் படுத்தாது, அன்பையே பெரிதாக மதித்து, பெற்றருள வேண்டும். (யானைகள், தந்தம், பொன் போன்ற குறிஞ்சி நிலப் பொருள்களும்; முத்து, பவளம் போன்ற நெய்தல் நிலப் பொருள்களும் மருத நிலத்தைச் சேர்ந்த ஆனிரைகளும், பாலை நிலத்தைச் சேர்ந்த அசுவங்களும், ஒட்டகங்களும் வரை யின்றி வழங்குகின்றான்.) 

ஒளவையார்: (அப்பொருள்களைக் கண்டு பிரமித்து) அரசே! உமது வள்ளன்மையைப் போற்றுகிறேன். நானோ பாணன் மகள். எனக்கெதற்கு. இவ் விலையுயர்ந்த பொருள்களெல்லாம்? பசியுறும் போதெல்லாம் ஒரு பாட்டுப் பாடிக் கூழ் குடித்து வழிநடப்பவள் நான். எமக்கு யாதும் ஊரே, யாவருங்கேளீரே! நாளை என் செய்வோம் என்ற கவலை நாவலர்க்கு ஏது? இந்த யானைகளும், குதிரைகளும், பொன்னும், மணியும் அழியுந் தகைமையின. ஆனால் நீர் எம்மீது வைத்த அன்போ என்றும் அழியாதது. அது ஒன்றையே பெரும் கொடையாகக் கொண்டு நாம் செல்ல விரும்புகிறோம். 

பாரி : மகளிர் நாயகமே! மன்னிக்க வேண்டும். பாரியிடம் வந்தோர் வெறுங்கையாய்ச் சென்றனர் என்ற பழிச்சொல் நமக்கு ஏற்படக்கூடாது.

ஓளவையார் : வீண் பற்றுக்களுக்கும், துன்பங்களுக்கும் என்னை இடமாக்குகிறீர். ஆயினும் நீர் பேரன்பு கொண்டு எனக்கீந்த பொருளானமையால் ஏற்றுக் கொள்கிறேன். விடை பெற்றுக் கொள்ளட்டுமா? 

வாரி : ஒரு விஷயம். வழியில் கள்வர் பயமிருக்கலாம். ஆகையினால் கவனமாய்ச் செல்லவேண்டும். எதற்கும் உம்முடன் துணைக்காக என் வீரர்கள் சிலரை உடனனுப்புகிறேன். மலை நாடல்லவா?

ஒளவையார்: (அலக்ஷியப் புன்னகையுடன்) கலைச்செல்வத்தையே பெருஞ் செல்வமாகக் கொண்ட எம்மைக் கொள்ளையடிக்க வல்லார் யார்?

பாரி: நான் அதைச் சொல்லவில்லை. மற்றதைக் குறிப்பிட்டேன். 

ஒளவையார்: இன்றிருந்து நாளை அழியக்கூடிய அப் பொருளை நாங்கள் பொருளாகவே மதிப்ப தில்லையே! 

பாரி : எதற்கும் என் வீரர்களை உமக்குத் துணையாக அனுப்புகிறேன். 

ஒளவையார்: நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.

பாரி : தமிழ்ப் பெருமகளே! இன்று நீர் நம்மை விட்டுப் பிரிந்த போதிலும் கூடிய சீக்கிரம் உம் வரவால் நம்மை மகிழ்விப்பீர் என்ற நம்பிக்கை யுடனேதான் உமக்கு விடை கொடுக்கிறோம். அடியேனை மறந்து விடவேண்டாம். 

ஒளவையார் : அதியமானிடம் என் வேலை முடிந்ததும், பறம்புமலையை நோக்கியே என் கால்கள் புறப்படும். உம்மை எப்படி மறக்க முடியும்? 

பாரி : (புன் சிரிப்புடன்) அதற்கு முன்னால் இல்லை!  சரி ! (ஒளவை சென்ற பின்பு) அதற்கு முன்னால் ஒளவையார் இங்கு வரமாட்டாராம் பார்க்கலாம்! 

இரண்டாம் காட்சி

[அதே நாள் மாலை, கபிலரும், பிரதானிகளும் புடைசூழப் பாரி வீற்றிருக்கிறான். அவன் யாரோ ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. சேவகன் உள்ளே நுழைகிறான்.] 

சேவகன்: (வணங்கி) ஒளவையார் வந்திருக்கிறார்.

பாரி : (குறும்பு நகையுடன்) ஒளவையாரா? என்னடா உளறுகிறாய்? 

சேவகன்: ஆம், அரசே! ஒளவையார்தான் வந்திருக்கிறார். 

பாரி : (மீண்டும் குறும்பு நகையுடன்) அவருடைய வரவு என்றும் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே! ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவரை எதிர்பார்க்க வில்லையே. என்ன விசேடமோ? (அவரை வரவேற்கச் சிம்மாசனத்தினின்றும் எழுந்து செல்கிறான். அதற்குள் ஔவையார் மண்டபத்திற்குள் வந்துவிடவே, யாவரும் எழுந்து நிற்கிறார்கள்). 

பாரி : வரவேண்டும்! வரவேண்டும்! இவ்வளவு சீக்கிரம் நமக்கு இப் பாக்கியம் கிடைக்குமென்று நாம் கனவிலுங் கருதவில்லை.(புன் சிரிப்பு) மிக்க மகிழ்ச்சி! 

ஒளவையார் : ஆனால் நான் கூறப்புகும் விஷயம் உமக்கு மகிழ்ச்சி யூட்டக்கூடியதாயிராது என்று அஞ்சுகிறேன். 

பாரி: அப்படி யாது விசேடமோ? அதியமானுக்கு… அப்படியானால் இன்றே நமது படைகளைத் திரட்டுவதற்கு நான் உத்தரவிடுகின்றேன். 

ஒளவையார்: அப்படி யொன்றுமில்லை. நீர் கொடுத்த பொருள்கள்… 

பாரி: ஆம், அவை உம்முடைய கௌரவத்திற்கும் புலமைக்கும் போதாவென்பதை நாம் நன்கு உணர்வோம். அதைப்பற்றி நான் முன்பே குறிப் பிட்டேன். ஆயினும் என் பிழையைப் பொறுத் தருளவேண்டும். இன்னும் தங்களுக்குப் பிரிய மானவை என்னென்னவோ, அவைகளை என் னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

ஒளவையார் : அரசே, சற்று நிதானமாய்க் கேட்க வேண்டும். நீர் கொடுத்த பொருள்கள் அனைத்தையும் கள்வர் கொள்ளையிட்டுக் கொண்டனர். அதை உம்மிடம் முறையிடவே வந்தேன். 

பாரி : ச்! இவ்வளவுதானா! யாம் என்னவோ என்று அச்சமுண்டோம். யானைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும், பசுக்களும் இறக்குந் தன்மையன. பொன்னும் மணியும், பவளமுந் தந்தமும் அழியும் நீர்மையன! அவைகளுக்காக வருந்த வேண்டாம், ஒளவைட் பிராட்டியாரே! (அவனுடைய இதழ்களில் ஓர் புன் சிரிப்பு) 

ஔவையார் : இந்த உபதேசத்தைப் பெறுவதற்காக நான் உம்மிடம் வரவில்லை. 

பாரி : (ஒளவையின் வார்த்தைகளைக் கவனியாதது போல்) செல்வம் நிலையாது. அது இன்றிருந்து நாளை அழியக்கூடியது. ஏன்? இப்பொழுதிருந்து இன்னுஞ் சற்று நேரத்தில் அழியக்கூடியது! உதாரணமாக இப்பொருள்களையே எடுத்துக் கொள்ளலாம். இன்று காலை அவை என்னிடமிருந்தன. பிறகு உம்மிடம் வந்தன. இப்பொழுது யார் யாரிடமோ சென்று விட்டன! இதுதான் நிலையற்ற பொருள்களின் இயற்கை! 

ஒளவையார்: அது எனக்குத் தெரியாமல் இல்லை.

பாரி: அதை யாமும் அறிவோம். பொருள் தங்களிடம் இல்லாத வரைக்குந்தான் புலவர்கள் அதன் நிலையாமையைப் பற்றிப் பேசுவார்கள். அது கிடைத்தவுடன் அவர்களுக்குங் கூடச் சிறிது சபலம் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு நீரே உதாரணம். இன்று காலையில்தான் நீர் வேதாந்தம் பேசினீர். ஆனால், இப்பொழுது உம்முடைய யானைகளும், குதிரைகளும் பறி போய் விட்டன என்று என்னிடம் முறையிட வந்து விட்டீர்! 

ஔவையார் : என் முன்னால் இதோ வீற்றிருப்பது பாரி தானா? என்னை இங்ஙனம் ஏளனம் செய்வது பறம்புமலை வள்ளல் தானோ? புலவர்களால் போற்றப்படும் பாரிவேளா என்னிடம் இங்ஙனம் வார்த்தையாடுவது? நான் கனவு காண்கிறேனோ! 

பாரி: ஒளவைப் பிராட்டியாரே! நீர் கனவு காண வில்லை. உமக்குச் சந்தேகமிருந்தால், பக்கத்தில் கபிலர் வீற்றிருப்பதைப் பார்த்தாவது சந்தேகந் தெளியலாம். 

ஓளவையார் : கபிலரே! நீரும் பக்கத்தில் இருந்து, இவை யெல்லாம் பார்த்துக்கொண்டு மௌனமாகவா இருக்கிறீர்? 

கபிலர் : நீரிற் குமிழி இளமை; நிறை செல்வம் 
நீரிற் சுருட்டும் நெடுந் திரைகள். 

ஆகையினால் அழியும் பொருள்களுக்காக அல்லல் உறல் மக்களுக்கு அழகன்று. 

பாரி: (உரத்த சிரிப்புடன்) பேஷ்! பேஷ்! நன்றாய்ச் சொன்னீர்! 

ஒளவையார் : (மிகுந்த கோபத்துடன்) பாரீ! கேவலம் நீர் கொடுத்த யானைகளும், குதிரைகளும் பறி போயினவே என்று முறையிடுவதற்காக நான் வரவில்லை. தமிழகத்தில் இது யாங்கணும் நடக்காததோர் நிகழ்ச்சி! 

பாரி: எது ? 

ஒளவையார்: புலவர்கள் கொள்ளையடிக்கப் படுவது! அதுவும் புலவர்களுக்கெல்லாம் புரவலனாய் விளங்கும் உமது நாட்டில் அது நடந்ததென்றால் அது உமக்கு அவமானமாக இல்லையா? 

பாரி : (அலக்ஷியப் புன்னகையுடன்) ஓஹோ! நம்முடைய மானத்தைக் காப்பாற்றுவதற்காகத் தான் இவ்வளவு விரைந்து வந்தீரோ? அதியமானிடம் நீவிர் சென்ற வேலை முடிந்து விட்டது போலும்! வெகு மகிழ்ச்சி! 

ஒளவையார்: ஆமாம்! இது உண்மையிலேயே நீர் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய விஷயந்தான்.

பாரி: நீர் என்னென்ன மனக்கோட்டைகள் எல்லாம் கட்டியிருந்தீரோ, யாம் அறிவோமா? முத்தாரங்களாலும், பொன்னாபரணங்களாலும் உம்மை யழகு செய்து கொண்டு, நாம் கொடுத்த சேர நாட்டுக் களிற்றின் மீது அழகிய அம்பாரி ஒன்றை அலங்கரித்து, அதன் மீது நீர் ஏறிப் பவனி சென்று, அதியமானுக்கு முன்னால் மிகுந்த கௌரவத்துடன் இறங்க வேண்டு மென்று நினைத்திருந்திருக்கலாம். அதியமானின் பகையரசனிடம் தூது செல்லும்போது, நாம் கொடுத்த இப் பரிவாரங்கள் புடை சூழச் சென்றால் உம்முடைய நாவன்மைக்கு அவன் வசமாகாத போதிலும், உம்முடன் வந்திருக்கும் யானைகளையும், குதிரைகளையும், ஒட்டகங்களையுங் கண்டாவது அவன் பயந்து விடுவான் என்றும் நீர் நினைத்திருப்பீர். எல்லாம் இப் பொழுது வீணாய் விட்டது!பாழும் அக்கள்வர்களால்! பாவம்! அவர்கள் இதை எல்லாம் கண்டார்களா? 

ஒளவையார்: பாரீ! யாரைக் குறித்து இங்ஙனம் பேசுகிறீர்? 

பரி : சரி, போனால் போகிறது. முற்றத் துறந்த முனிவர்களுக்கும் பொருளாசை ஏற்படுவது சகஜமே. நீர் இப்பொழுது என்ன சொல்கிறீர்? 

ஒளவையார்: (மிகுந்த கோபத்துடன்) எனக்கு அவமான மிழைத்த அக் கள்வர்களை இப்பொழுதே பிடித்துக் கொண்டு வந்து, தகுந்த தண்டனை விதிக்க வேண்டும். இல்லையானால் என் மனம் ஆறாது!

பாரி : ஆறுவது சினம்! (சபையில் கொல்லென்ற சிரிப்பு!)

(ஒளவை, உதடுகள் துடிக்க, விழிகள் சிவக்கக் கோபக்கனல் தோன்ற விழிக்கிறார்). 

பாரி: (புன் சிரிப்புடன்) பிறர்க்கு உபதேசம் செய்வது எவர்க்கும் எளிது. அதன்படி நடப்பதுதான் கடினம். சரி, இப்பொழுது உம்முடைய வழக்கைச் சொல்லும். முறைப்படி விசாரிக்கலாம்.

ஒளவையார்: பறம்பு மலைக் காடுகளினூடே நானும் என் பரிவாரங்களும் சென்று கொண்டிருக்கையில், சில கள்வர்கள் வந்து என் பொருள் யாவையும் கொள்ளையிட்டுச் சென்றனர். அவர்களைத் தேடிப் பிடித்து விசாரிக்க வேண்டுகிறேன்.

பாரி: இப்படி யெல்லாம் நேரும் என்று தானே நாம் கவனமாய்ப் போகுமாறு எச்சரித்தோம்!

ஔவையார்: இப்பொழுது நடந்ததற்குப் பரிகாரம் கேட்கிறேன். 

பாரி: உம்முடன் துணைக்குச் சில வீரர்களை அனுப்பினோமே, அவர்கள் என்னவானார்கள்?

ஒளவையார்: அவர்களா? ஆம். அவர்களைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேனே. ஆண்களிடையே கூட அத்தகைய கோழைகளை நான் இதுவரை பார்த்ததில்லை. 

(சபையில் யாவரும் நகைக்கிறார்கள்) 

கபிலர் : (புன் சிரிப்புடன்) உம்முடைய குறும்பு இன்னும் போகவில்லையே! 

பாரி : (சிரித்துக்கொண்டு) இத்தகைய சல்லாபத்தில் தானே நாம் மோகங் கொண்டோம்! ஆமாம், அவர்கள் என்னதான் செய்தார்கள்? 

ஒளவையார்: கள்வர் தோன்றியது தான் தாமதம். அவர்கள் வியர்த்து விறுவிறுத்து, கால்களும் கைகளும் ‘வெலவெல’வென நடுங்கக் ‘குய்யோ முறையோ’ எனக் கூவிக்கொண்டு, நாலா திசைகளிலும் ஓடி விட்டார்கள். 

பாரி: சிறந்த நடிகர்கள்! அவர்களுடைய திறமையை மெச்சுகிறோம். நீர் என்னென்னவோ வீரமாய்ப் பேசுகிறீர், வீரமாய்ப் பாடுகிறீர்; உண்மையில் உம்முடைய தைரியம் எப்படி இருக்கிறதென்று பரிசோதிப்பதற்காகவே அப்படி ஓடியிருக்கிறார்கள்! 

ஒளவையார்: ஆமாம்! மரப்பொந்துகளிலும் பாறை யிடுக்குகளிலும் என்னுடைய வீரத்தை இன்னும் பரிசோதித்துக் கொண்டே இருக்கிறார்கள் போலும்! அத்தகைய வீர சிகாமணிகளை வைத்துக் கொண்டு, நீர் மூவேந்தரை எப்படி எதிர்க்கப் போகிறீரோ, யாம் அறியோம்! 

(இச் சமயம் பாரி ஒரு சமிக்ஞை செய்யவே, ஒளவையுடன் சென்ற வீரர்களெல்லாம் மண்டபத்திற்குள் நுழைந்து வரிசையாய் நின்றார்கள்.) 

ஒளவையார்: (ஆச்சரியத்துடனும் ஏளனத்துடனும் அவர்களை நோக்கி) இதோ வந்து விட்டனர். அவ் வீர மணிகள்! 

பாரி: அதிருக்கட்டும். உம்மைக் கொள்ளை யடித்த கள்வர்களை இப்பொழுது கொண்டு வந்தால், நீர் அடையாளங் கண்டு கொள்ள முடியுமா? 

ஒளவையார்:ஓ! நன்றாய்! 

பாரி : சேவகா! அக்கள்வர்களை யெல்லாம் கொண்டு வந்து நிறுத்து. 

ஒளவையார்: (ஆச்சரியத்துடனும் சந்தோஷத்துடனும்) அவர்களைப் பிடித்து விட்டார்களா உமது வீரர்கள்! 

பாரி: அதைவிட அவர்களுக்கு வேலை! 

ஓளவையார் : பேஷ்! இதுவன்றோ பாரிக்கழகு! 

(கள்வர்கள் வரிசையாக நிறுத்தப் படுகிறார்கள்.)

ஒளவையார்: (ஆனந்தத்துடன்) இவர்களே தாம்! நன்றாகத் தண்டிக்க வேண்டும். தண்டனை குறையக் கூடாது. புலவர்களைக் கொள்ளையிடுவது எத்தகைய பெருங் குற்றம் என்பதை யாவரும் அறிய வேண்டும்! 

பாரி: (கள்வர்களை நோக்கி) நீங்கள் இப்பெரு மகளைக் கொள்ளையிட்டது உண்மைதானா? 

கள்வர்கள்: (அனைவரும் ஒரே குரலில்) ஆமாம்! 

இளவையார்: பாரும் அவர்களுடைய அகந்தையை! மரண தண்டனைகூட அவர்களுக்குப் போதாது.

பாரி: (கள்வர்களை நோக்கி) உமது சேவையை மெச்சினோம். நீங்கள் இன்றே நமது உண்மைத் தொண்டர்களானீர்கள்! நீவிர் கொள்ளையிட்ட பொருள்கள் யாவும் உம்மையே சேரும்! 

ஒளவையார்: (ஆத்திரத்துடன்) என்ன ! என்ன ! உமது நீதி வெகு அழகாயிருக்கிறது, பாரி! 

கபிலர்: நாட்டின் உண்மையான தொண்டர்க்கு உகந்த பரிசளிப்பது அரசருடைய கடமை இல்லையா? 

ஒளவையார்: ஆனால் இவர்கள்? 

கபிலர்: நாட்டுப் பொருள்கள் நாட்டிற் கப்பால் போகவிடாது காத்தது சிறந்த தொண்டில்லையா?

ஒளவையார் : ஓஹோ! அப்படியா? (மிகுந்த கோபத்துடன்) உமக்கும் அக் கொள்ளையில் பங்குண்டோ? நீரும் அக் கொள்ளைக் காரர்களில் ஒருவர் தாமோ? 

பாரி: அவர் மட்டுமல்ல! யானும் அதில் சம்பந்தப் பட்டவனே! யானே பிரதான் கொள்ளைக்காரன்! 

ஒளவையார்: (ஆச்சரியத்துடன் பிரமித்து) பாரி!

பாரி: (சிம்மாசனத்தினின்றும் எழுந்து ஒளவையின் முன்னால் முழந்தாளிட்டுக் குரல் தழுதழுக்க) புலமை மிக்க பெரியோய்! நுமது தமிழறிவில் நாம் கொண்ட காதலினால் இக்காரியத்தைச் செய்யத் துணிந்தோம். மன்னித்தருள வேண்டும். உம்மைப் போன்ற பெரியோர்களைப் பிரிந்து, பாரி எங்ஙனம் உயிர் வாழ்வான்! உம்மை மீண்டும் எம்மிடம் வரவழைப்பதற்கே. இதை ஏற்பாடு செய்தோம். எம்மை மன்னிப்பீரா? 

ஒளவையார்: பாரீ! இன்றுதான் உம்முடைய கொடையின் முழுத் திறனையும் நான் உணர்ந்தேன். கொடுத்துப் புகழ் கொண்டோர் இப்புவியில் அனந்தம். ஆனால் பறித்துப் புகழ் கொண்டோன் பாரி ஒருவனே! இச் செயலுக்காக உம்மை உலகம் முழுதும் போற்றும் ஒரு காலத்தை யான் என்னுடைய எதிர்காலக் கண்களால் பார்க்கிறேன். தமிழ் மீதும், தமிழ்ப் புலவர் மீதும் இத்தகைய பேரன்பு கொண்ட ஒரு வள்ளலின் வேண்டுகோளைக் கொஞ்சமேனும் மதியாமல் யான் உதாசீனம் செய்து விட்டுப் போனேனே, அதை நீர் மன்னிப்பீரா? 

(பாரி மௌனமாய் ஆனந்தக் கண்ணீருக்குத்துக் கொண்டு நிற்கிறான்.) 

ஒளவையார்: நீர் மன்னித்து விடுவீர். அது உமக்குப் பெரிதல்ல. ஆனால் உலகம் என்னை மன்னிக்காது. கள்வர்கள் என் பொருளைப் பறித்து விட்டார்கள் என்று உம்மிடம் முறையிட வந்தேன். ஆனால் நீர் எனது உள்ளத்தையே பறித்து விட்டீர். இதை யாரிடம் முறையிடுவது? 

யாரி: ஒளவைப் பிராட்டியாரே, மன்னிக்கவேண்டும்! 

ஒளவை : இனி நீர் என்னைப் “போ, போ!” என்று பிடரியைப் பிடித்துத் தள்ளினாலும், உம்மை விட்டு அகலுவதற்கு எனக்கு எங்ஙனம் மனம் வரும்? இனி நான் உமது அடிமை!

பாரி: பிராட்டியாரே! இன்றே நான் பிறவிப் பயனை எய்தினேன்! உம்மைப்போன்ற நல்லிசை மிக்கப் பெரியோர் எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டுமென்பது நமது அவா. உம்மைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ்வேன்? ஆயினும் நான் எனது கடமையை உணர்கிறேன். நீர் அதியமானுடைய ஓலையை எங்ஙனம் மதிக்கிறீரோ, அதைப்போல நாமும் கௌரவிக்கிறோம். அதியமானுக்கு வந்த ஆபத்து நமது ஆபத்தே! ஆகையால் எமது ஆவலைப் பூர்த்தி செய்வதற்காக, இன்னும் சில நாட்கள் இங்கு தங்கி இருந்து விட்டு நீர் செல்லலாம். எனது பேதமையினால் ஏற்கனவே ஒரு சூரியனைப் பறம்புமலை நீழலில் அடைத்துவிட்டேன். இன்னொரு சூரியனையும் அடைக்க முயலமாட்டேன்!

(பாரியின் கண்களில் நீர் ததும்புகிறது.) 

ஒளவை : (கண்களில் நீர் ததும்ப நாக் குழற) பாரி! உமது தியாகத்தின் திறனை நான் இப்பொழுது தான் முற்றிலும் உணர்கிறேன். இதுவே நீர் கொடுத்த கொடைகளில் எல்லாம் பெருங் கொடை! 

(பின்னணிச் சங்கீதம்)

(திரை) 

பாரி பறித்தபறியும் பழையனூர்க் 
காரி கொடுத்த களைக்கொட்டும் சேரமான்
வாராய் என வழைத்த வாய்மையும் இம் மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.

– உபகுப்தர் (நாடகங்கள்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *