கொஞ்சம் கொஞ்சமாக… (poco a poco)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 116 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

திலகவதி வீட்டுக்குள் நுழைந்தவுடனே ஹாலில் இருந்த உயரமான மர அலமாரியைத்தான் முதலில் கவனித்தாள்.

மதுரையிலிருந்து கிளம்பும்போது அவள் எடுத்துச்சென்றது இரண்டு பெட்டிகள், ஒரு லேப்டாப், சில புத்தகங்கள் மட்டும்.

மொழிபெயர்ப்பு வேலைக்கு அமைதியான இடம் தேவைப்பட்டதால், நகரத்திலிருந்து தூரமாக இருந்த இந்த வீட்டை சில மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தாள்.

அலமாரி கருப்பு நிறம். அதன் கீழ்பகுதியில் மட்டும் மரம் தேய்ந்து வெள்ளையாகியிருந்தது — அந்த அலமாரி முன்னால் யாரோ பல வருடங்கள் நின்றபடி வாழ்ந்தது போல.

“அதுல பழைய காகிதங்கள் இருக்கு,” என்றாள் வீட்டுக்காரி நாகம்மாள்.

“யாரோடது?”

“இங்க இருந்த ஒருத்தருடையது.”

“யாரு?”

நாகம்மாள் தோளைச் சற்றுத் தூக்கினாள்.

“அவர் பேரு சதாசிவம்.”

“அவரு இப்போ எங்கே இருக்காரு?”

“தெரியல.”

“எப்போ போனாரு?”

“ரொம்ப நாளாச்சு.”

“ஏன் போனாரு?”

நாகம்மாள் அவளைப் பார்த்தாள்.

“அதுதான் சொல்றேனே. தெரியல.”

சிறிது நேரம் இருவரும் அலமாரியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இதுல இருக்குற காகிதங்களெல்லாம் தூக்கிப் போடலாம்னு இருந்தேன்,” என்றாள் நாகம்மாள்.

“ஆனா திடீர்னு அவர் வந்து கேட்டாருன்னா என்ன செய்யறதுன்னு பயம் வந்திடுச்சு. செத்துட்டாரா, எங்கேயாவது போயிருக்காரான்னு எனக்கே தெரியல. அவர் இல்லன்னு நான் எப்படி முடிவு பண்ணறது?”

திலகவதி சிரித்தாள்.

நாகம்மாளும் சிரித்தாள்.

அவளுடைய சிரிப்பில், அந்த மனிதரைப் பற்றிய பழைய எரிச்சல் ஒன்றும் இருந்தது.


மூன்றாம் நாள் இரவுதான் திலகவதி அலமாரியைத் திறந்தாள்.

கதவு திறக்கும் போது பழைய மரத்தின் வாசனையோடு காகித வாசனையும் வெளியே வந்தது.

உள்ளே:

· டைப் ரைட்டரில் அடிக்கப்பட்ட தாள்கள்,

· நோட்டுப் புத்தகங்கள்,

· விளிம்புகள் கருமை படிந்த ஸ்பானிஷ்-ஆங்கில அகராதி.

அலமாரியின் மூன்றாவது அடுக்கில் ரிப்பன் உலர்ந்த டைப் ரைட்டர் மட்டும் தனியாக இருந்தது.

அதன் spacebar மட்டும் மற்ற விசைகளை விட அதிகமாக தேய்ந்திருந்தது.

முதல் நோட்டில் பெயர்:

சதாசிவம்.

தேதி:

1984.

அதற்கு கீழே:

“இன்னைக்கு முழுக்க ‘desasosiego’-க்கு சரியான வார்த்தை தேடுறதிலேயே கழிச்சேன். டிக்க்ஷனரில இருக்கு. ஆனா எதுவும் இந்த லைன்ல உட்கார மாட்டேங்குது.”

திலகவதி மூக்கின் அருகே விரலை வைத்துக்கொண்டு சிரித்தாள்.

ஏனென்றால் கடந்த வாரம் அவளும் “añoranza” என்பதற்காக மூன்று மணி நேரம் உட்கார்ந்திருந்தாள்.

ஒரு வார்த்தையைத் தேடுவதற்காக மூன்று மணி நேரம் செலவழிப்பது, வெளியுலகத்துக்கு சோம்பேறித்தனம்.

மொழிபெயர்ப்பாளர்களுக்கு அது வேலை.

சம்பளம் மட்டும் அதற்கேற்ற மாதிரி இருக்காது.


பகலில் அவள் வேலை செய்தாள்.

ஒரு உருகுவே சிறுகதைத் தொகுப்பு.

ஒரு இடத்தில் நின்றுபோனாள்:

“La infancia se va poco a poco.”

அவள் எழுதினாள்:

“குழந்தைப்பருவம் திடீரென்று முடிவதில்லை.”

பிடிக்கவில்லை.

“குழந்தைப்பருவம் ஒரே நாளில் முடிவதில்லை.”

அதுவும் இல்லை.

“குழந்தைப்பருவம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு போகிறது.”

அந்த “கொஞ்சம் கொஞ்சமாக” வாக்கியத்திற்குள் சரியாக உட்காரவில்லை.

டிக்க்ஷனரியைத் திறந்தாள்.

“மெதுவாக.”

“கொஞ்சம் கொஞ்சமாக.”

“சிறிது சிறிதாக.”

அவள் மீண்டும் மூடிவிட்டாள்.

அந்த வாக்கியத்திற்கு தேவையானது அந்த வார்த்தைகளில் ஒன்றுமில்லை.

மாலையில் சதாசிவத்தின் இன்னொரு நோட்டு கிடைத்தது.

“சில வரிகள் மூலத்தைப் பார்த்துக்கிட்டே கொஞ்சம் தூரம் போகணும். குழந்தை அம்மா எங்க இருக்காங்கன்னு பார்த்துக்கிட்டே விளையாட போற தூரம் மாதிரி.”

அந்த இரவு அவள் டிக்க்ஷனரி இல்லாமல் அந்த வாக்கியத்தை மறுபடியும் எழுத முயன்றாள்.

முடியவில்லை.

ஆனால் பழைய மாதிரி பயமும் இல்லை.


நாகம்மாள் தினமும் மாலை தேநீர் கொண்டு வருவாள்.

தேநீருடன் அக்கம்பக்கத்து வீட்டுச் செய்திகளும் வரும்.

யார் வீட்டில் மருமகள் வந்திருக்கிறாள்.

யார் வீட்டுப் பையன் வீட்டுக்கு வரவில்லை.

யார் வீட்டுக் கிணறு வற்றிவிட்டது.

யார் வீட்டில் புதுசா மோட்டார் போட்டிருக்கிறார்கள்.

செய்தி சொல்லும்போது நடுவில் இருமுறை, “நான் யாரையும் குறை சொல்லல,” என்பாள்.

அதற்குப் பிறகு தான் முக்கியமான பகுதி வரும்.

“இங்க இருந்தவரு என்ன வேலை பார்த்தாரு?” என்று ஒரு நாள் திலகவதி கேட்டாள்.

“எழுதுறவரு”

“புத்தகமா?”

“இல்ல. மத்தவங்க புத்தகத்தை தமிழ்ல மாற்றுவாரு.”

“மொழிபெயர்ப்பாளரா?”

நாகம்மாள் தலைஅசைத்தாள்.

“ஆமாம். ஆனா பெரிய சம்பாத்தியம் ஒண்ணும் இல்ல.”

அவள் தேநீரைக் கிளறிக்கொண்டே இருந்தாள்.

“எவ்வளவு சம்பாதிச்சாருன்னு தெரியாது. ஆனா மாசக் கடைசில மளிகைக்காரன்கிட்ட கணக்கு எழுதிக்கிட்டு வருவாரு.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“மனுஷன் எதையும் வெளியே சொல்ல மாட்டாரு. ”

“என்ன மாதிரி?”

“பசி இருந்தாலும் பசி இல்லன்னு சொல்வாரு. ஆனா சின்ன சின்ன விஷயத்துக்கு ரொம்பக் கோபப்படுவாரு.”

“எதுக்கு?”

“ஒரு தடவை நான் அலமாரியைத் துடைக்கும்போது ஒரு காகிதம் கீழே விழுந்துச்சு. அதை பழைய பேப்பர்னு நினைச்சு கூட்டி வெளியில தள்ளிட்டேன்.”

திலகவதி சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அவர்?”

“மூணு நாள் என்கிட்ட பேசவே இல்ல.”

“அப்படியா?”

“அவருக்கு அது காகிதம் இல்ல. எனக்கு அது காகிதம்தான்.”

நாகம்மாள் தானும் சிரித்தாள்.

“அப்புறம் என்னை சமாதானப்படுத்தி, ‘நாகம்மா, அது நான் நாலு நாளா தேடிக்கிட்டிருந்த மொழிபெயர்ப்பு’ன்னாரு.”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“நல்ல வேளை. இன்னும் கொஞ்சம் நாள் விட்டிருந்தா அலமாரியையே சுத்தம் பண்ணி காலி பண்ணியிருப்பேன்’ன்னு சொன்னேன்.”

திலகவதி சிரித்தாள்.

“அவர் சிரிச்சாரா?”

“இல்ல.”

சிறிது நேரம் கழித்து நாகம்மாள் சொன்னாள்:

“ஆனா அடுத்த நாள் எனக்காக மாம்பழம் வாங்கிட்டு வந்தாரு.”

அவள் குரல் மெதுவானது.

“அவர் நல்ல மனுஷன். அதுதான் அவரோட பெரிய பிரச்சினை.”

அவள் கண்கள் அலமாரியை நோக்கின.

“அவரோட புத்தகம் ஏதாவது வெளியாயிருக்கா?”

“தெரியல. பத்திரிகைகளுக்கெல்லாம் ஏதோ அனுப்புவாரு போல.”

“அவரு இங்க தனியாவா இருந்தாரு?”

“ஆமாம்.”

“தனியா இருந்ததுக்கு வருத்தப்படுவாரா?”

நாகம்மாள் தேநீர் கோப்பையை மேசையில் வைத்தாள்.

“தனியா இருந்ததுக்கு இல்ல.”

“பின்ன?”

“யாராவது பேச வரும்போது வேலை கெடுதுன்னு கோபப்படுவாரு. யாரும் வராத நாள்ல யாரும் வரலன்னு வருத்தப்படுவாரு.”

சிறிது நேரம் கழித்து அவள் சிரித்தாள்.

“நான் அவருக்கு சாப்பாடு வைக்கப் போனா, ‘பசி இல்லை’ன்னு சொல்வாரு. இரண்டு மணி நேரம் கழிச்சு, ‘சோறு இருக்கா?’ன்னு கேப்பாரு.”

இந்த முறை திலகவதி சிரித்தாள்.

“எங்கே போனாரு?”

நாகம்மாள் சிறிது நேரம் யோசித்தாள்.

“ஒரு நாள் கதவு திறந்திருந்துச்சு. விளக்கு எரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. ஆனா அவரு இல்லை.”

“யாரும் அவரத் தேடலையா?”

“தேடினாங்க.”

“கிடைக்கலையா?”

நாகம்மாள் உதட்டைப் பிதுக்கினாள்.

“அவரு செருப்பு மட்டும் பின்கதவு பக்கத்துல இருந்துச்சு.”

அந்த இரவு திலகவதி சதாசிவத்தின் பெயரை ஒருமுறை தேடிப்பார்த்தாள்.

சில பழைய குறிப்புகள் தவிர வேறொன்றும் இல்லை.

ஒரு சிறிய பத்திரிகையின் இணையதளத்தில், இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு பட்டியலில் அந்தப் பெயர் இருந்தது.

“மொழிபெயர்ப்பு: சதாசிவம்.”

அதற்குக் கீழே கதையின் பெயர்.

கதையைத் திறக்க முடியவில்லை.

இணையதளம் இல்லை.

அந்தப் பெயர் மட்டும் இருந்தது.


ஒரு நாள் மொழிபெயர்ப்பு நடுவில் அவள் மீண்டும் சதாசிவத்தின் நோட்டைத் திறந்தாள்.

அதில்:

“இன்னைக்கு ஒரு paragraph-ஐ நான்கு மணி நேரம் பார்த்தேன். வேலைய முடிச்ச பிறகும், அந்த paragraph என் தலையில தமிழ்ல இல்ல. அதே foreign rhythm-லத்தான் ஓடிக்கிட்டிருந்தது.”

அந்த இரவு கண்ணாடியில் தன்னையே பார்த்தாள்.

அதில் தெரிந்த முகம் களைப்பாக இல்லை.

நீண்ட நாட்களாக இன்னொருத்தரின் வாக்கியங்களுக்குள் வாழ்ந்த முகம் போல இருந்தது.


மழைக்காலம் ஆரம்பித்தது.

இரவு நேரங்களில் வீட்டின் கூரையிலிருந்து தண்ணீர் சொட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு மாலை மின்சாரம் போயிருந்தது.

நாகம்மாள் மெழுகுவர்த்தி கொண்டு வந்தாள்.

“இருட்டுல படிக்காதே,” என்றாள்.

திலகவதி சிரித்தாள்.

“அவரும் இப்படித்தான் உட்கார்ந்திருப்பாரு.”

“யாரு?”

“சதாசிவம்.”

“அவருக்கு ஃபேமிலி இல்லையா?”

“யாரும் வந்ததில்ல.”

“அவரோட குரல் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

நாகம்மாள் யோசித்தாள்.

“ரொம்ப மெதுவா பேசுவாரு.”

சிறிது நேரம் கழித்து:

“இருமல் ஞாபகம் இருக்கு.”

“அவருக்கு உடம்பு சரியில்லையா?”

நாகம்மாள் மெழுகுவர்த்தியை மேசையில் வைத்தாள்.

“அதைக் கேட்டா, ‘எனக்கு ஒண்ணும் இல்லை’ன்னு இருமிக்கிட்டே சொல்வாரு. ”

“அப்புறம்?”

“ஒருநாள் இருமல் மருந்து வாங்கிட்டு வந்து மேசைமேல வச்சுட்டேன்.”

“சாப்பிட்டாரா?”

“அடுத்த நாள் அந்த மருந்தும் இல்ல. அவரும் இல்ல.”

திலகவதி அவளைப் பார்த்தாள்.

“என்ன?”

நாகம்மாள் எழுந்தாள்.

கதவுக்குச் சென்றபோது திரும்பிப் பார்த்தாள்.

“அவரைப் பற்றி ரொம்ப யோசிக்காதே.”

“ஏன்?”

“யோசிச்சா அவரு நல்லவரா, பைத்தியமான்னு நம்மால புரிஞ்சுக்க முடியாது. இரண்டுமே இருந்திருக்கலாம்.”

அவள் வெளியேறினாள்.

திலகவதி திடீரென்று சதாசிவத்தை மனிதராக கற்பனை செய்தாள்:

இரவில் இருமிக்கொண்டே டைப் அடிக்கும் மனிதர்.

அந்த இரவு அவள் லேப்டாப்-ஐ திறக்கவில்லை.


ஒரு வாரம் கழித்து மின்னஞ்சல் வந்தது.

அவள் மொழிபெயர்த்த புத்தகம் ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

மின்னஞ்சலின் முதல் வரி மட்டுமே தெரிந்தது. அதில் அவள் பெயர் தடிமனாக இருந்தது.

கீழே ஸ்க்ரோல் செய்யாமல் அதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அலமாரிக்குள் இருந்த டைப் ரைட்டர் ஞாபகம் வந்தது.

அந்த மின்னஞ்சலை யாருக்காவது ஃபார்வர்ட் பண்ணலாம்னு நினைத்தாள்.

சென்னையில் இருந்த இரண்டு நண்பர்களின் பெயர் நினைவுக்கு வந்தது.

யாருக்கும் அனுப்பவில்லை.

பிறகு லேப்டாப்பை மூடிவிட்டு நேராக அலமாரி அருகே போனாள்.

அந்த இரவு சதாசிவத்தின் கடைசி நோட்டைப் படித்தாள்.

தேதி இல்லை.

“சில மொழிபெயர்ப்புகள் அச்சாகும் போது, மொழிபெயர்ப்பாளரின் பெயர் ஏற்கனவே பழையதாகிவிடுகிறது.”

அதற்குக் கீழே வேறு ஒன்றுமில்லை.

அவள் அந்த வரியை மீண்டும் படித்தாள்.

பிறகு நோட்டை மூடி வைத்தாள்.

அந்த இரவு அவள் நீண்ட நேரம் தூங்கவில்லை.

வெளியில் மழை நின்ற பிறகும், கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்தது.

ஒரு இடத்தில் சொட்டு விழும் சத்தம் மட்டும்.

டப்.

சிறிது இடைவெளி.

டப்.

அது கூட ஒரு வாக்கியத்துக்கு இடையில் சரியான இடைவெளி தேடுவது போல இருந்தது.


அடுத்த சில நாட்களில் அவள் வேகமாக மொழிபெயர்க்க ஆரம்பித்தாள்.

ஆனால் ஏதோ மாறியிருந்தது.

முன்பு ஒவ்வொரு வாக்கியத்தையும் சந்தேகப்பட்டவள், இப்போது சில இடங்களில் நேராக எழுதினாள்.

ஒரு நாள் டிராஃப்ட் வாசிக்கும்போது திடீரென்று அவள் நின்றுபோனாள்.

நீளமாக போகும் வாக்கியங்கள்.

அவசரமில்லாத நகர்வு.

எங்கே நிற்கணும்னு தெரிஞ்ச துல்லியம்.

அவள் சாதாரணமாக நிறுத்தும் இடங்களில், அந்த paragraph அங்கே நின்றிருக்கவில்லை.

அவள் உடனே லேப்டாப்பை மூடிவிட்டாள்.

ஃபேன் சத்தம் மட்டும் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது.


“நான் போயிடலாம்னு நினைக்கிறேன்,” என்றாள் மறுநாள்.

நாகம்மாள் தேநீர் கோப்பையை கழுவிக்கொண்டிருந்தாள்.

ஒன்றும் சொல்லவில்லை.

அலமாரி கதவை மட்டும் மெதுவாக மூடினாள்.


திலகவதி மாலையிலேயே பொருட்களை அடுக்க ஆரம்பித்தாள்.

அகராதிகள்.

லேப்டாப்.

உடைகள்.

கடைசியாக சதாசிவத்தின் நோட்டுகள்.

அவள் கையை நிறுத்தினாள்.

அவற்றை எடுத்துச்செல்லலாமா?

அல்லது இங்கேயே விடலாமா?

நடுவிலிருந்த ஒரு தாள் கீழே விழுந்தது.

அதில்:

“சில இரவுகளில் மொழிபெயர்ப்பு வேலை மாதிரி தெரியாது.

யாரோ இன்னொருத்தர் இந்த வீட்டுக்குள்ள உட்கார்ந்திருக்கணும்னு செய்வது போல இருக்கும்.”

திலகவதி அந்த தாளை நீண்ட நேரம் பார்த்தாள்.

பிறகு அலமாரியை நோக்கினாள்.

அலமாரிக்குள் இருந்த நோட்டுகள் அப்படியே இருந்தன.

அவள் கையை மீண்டும் நீட்டவில்லை.


அந்த இரவு அவள் கிளம்பவில்லை.

காலை எழுந்தபோது ஹாலில் விளக்கு இன்னும் எரிந்துகொண்டிருந்தது.

அலமாரி திறந்தபடியே இருந்தது.

காகிதங்களுக்கு நடுவில் ஒரு வெள்ளைத் தாள் மட்டும் எழுதப்படாமல் இருந்தது.

அவள் அதை எடுத்துக்கொண்டு மேசையில் உட்கார்ந்தாள்.

நீண்ட நேரம் எதுவும் எழுதவில்லை.

பிறகு முதல் வரியை எழுதினாள்.

ஒவ்வொரு இடைவெளியிலும் அவள் விரல் சிறிது நேரம் நின்றது.

எங்கிருந்தோ ஒரு மெதுவான இருமல் சத்தம் கேட்டது.

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *