கதையின் கதை
கதையாசிரியர்: அல்வாயூர் மு.செல்லையா
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 16
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்பலவாணர் புதுமையிலும் பார்க்கப் பழமையில் ஆர்வ முடையவர். பழமையிலும் நல்லனவுண்டு, புதுமையிலும் தீயனவுண்டு என்ற நம்பிக்கை வாய்ந்தவர். அவருடைய மனோபாவத்தை அறிந்த இளைஞர்கள் சிலர் அவரைக் “கொன்ஸ வேட்டிவ் அம்பலவாணர்” என்று கூறுவதுண்டு. வயது முதிர்ந்தவரல்லர். மத்திய பருவத்தை அடைந்தவர். இக் காலத்திலே வெளிவருகின்ற சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள் சிலவற்றை இடையிடையே வாசிப்பவர். அவற்றிலே பொதிந்திருக்கும் ஆபாசக் கருத்துக்களையும் மரபுக் கொலைகளையும் அறியும்போது “தமிழ்த்தாய் இவ்வாறு சித்திரவதை செய்யப்படலாமா?” என்று பெருமூச்சு விடுபவர்.
இவற்றைப்பற்றி எழுதி வெளியிட்டுத் தமது அருவருப்பைக் காட்டுவதற்குத் தமக்கு எழுதும்பயிற்சி இல்லையே, என்று ஏங்குபவர். ஆயினும் இந்த ஏக்கத்தைத் தடுப்பதற்கேற்ற தரமான வெளியீடுகள் சில தாய்நாட்டிலும் ஈழநாட்டிலும் பிரசுரமாகின்றன, என்றறிந்து உள்ளம் பூரிப்பவர்.
இப்படியான சூழ்நிலையிலே வாழ்ந்துவரும் அம்பலவாணர், தாமும் சிறுகதை எழுதிப்பழக வேண்டும் என்று விரும்பினார். தானாகவே இயங்குவதைவிட, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தினால் அதிகமாக இயக்கப்படுவது மனித இயல்பாகவே தோன்றுகிறது. “பொற்காலம்” என்று போற்றப்படும் இக்காலத்திலே போட்டியை அடிப்படையாகக் கொண்டு பல காரியங்கள் நிகழுகின்றன. அரசியல் ரீதியிலாகட்டும், சமய சமூக ரீதியிலாகட்டும், அல்லது தனிமனித ரீதியிலாகட்டும் இந்தப்போட்டி மனப்பான்மை எந்த அளவிலே ஊக்கமளித்து வருகிறதென்பதை நாமறிந்து கொள்ளலாம். இந்த விதி அம்பலவாணருக்கு விலக்காக முடியுமா?
ஒரு பத்திரிகையிலே சிறுகதைப்போட்டி பற்றிய விஞ்ஞாபனம் ஒன்று காணப்பட்டது. தாமும் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அம்பலவாணர். எடுத்தார் பேனாவை, தடுத்தது சிந்தனை ஒன்று. “தலைப் பெயரைக் குறித்துக் கொண்டு கதை எழுதுவதா? கதையை எழுதியபின் தலைப்பெயரைக் குறிப்பதா?” என்ற ஐயப்பாடு தோன்றுவ தாயிற்று. அவருடைய தனி ஆராய்ச்சியிலே, ஐயம் தெளிவடை யும் முன்னர் மற்றொரு சங்கடமும் மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தது. “எழுதப்படும் கதை மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ, வேறு பத்திரிகை புத்தகங்களில் வெளிவந்த தாகவோ இருத்தலாகாது.” என்பது பிரதான விதிகளில் ஒன்றாகும்.
உண்மையாகவே அம்பலவாணர் தம் சொந்தக் கருத்தையே எழுத முற்படுகிறார். அவர் கதைகளை அதிகம் வாசிப்பதில்லை என்பது அந்தச் சிறுகதைப் போட்டியை நடத்துபவர்களுக்கு எப்படித் தெரியும்? ஆயினும் அவருள்ளத்தில் உயிர்த்தெழுந்த விஷயக் கருவின் சாயலுள்ள கதைகள் முன்பு வெளிவந்திருக் கவுங் கூடுமாதலால் “தழுவல்” என்று இவரின் கதையைத் தள்ளிவிடலாம். இது நீதியாக மாட்டாது. ஏன்?
“சில நல்ல கருத்துக்கள் வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு சமுதாயங்களிலே தோன்றினாலும் அவை பெரும்பாலும் ஒரே சாரமுடையனவாய்க் காணப்படுகின்றன” என்று பலமொழி கற்றவர் சிலர் சொல்லி வருகிறார்கள். ஆகவே தழுவல் என்ற தீர்ப்பு முற்றும் பொருத்தமாகுமா? ஆயினும், இப்படியான தழுவல் கைங் கரியங்களினால் இலக்கியக்களவு செய்து புகழையோ பொரு ளையோ தேடிக் கொள்ளுகின்ற எழுத்தாளர் களும் சிலர் இருக்கக் கூடும். தாம் எழுதவேண்டும் என்ற ஆசைக்கும் போட்டியாளரின் நிபந்தனைகளுக்கும் இடையிலே அகப்பட்டுக் கொண்டு அம்பலவாணர் திண்டாடினார். இந்தச் சமயத்திலேதான் அயல்வீட்டு அருணாசலம் அங்கே வந்தார். இவர் கதைகளை வாசிப்பதிற் புகழ்பெற்ற “புலி”. கண்ணிற்படுங் கதைகளையெல்லாம் வாசித்துக் களிப்படைவார். ஆனால், கதைகள் ஒன்றையுமே இதுவரை எழுதி அறியாதவர்.
வந்தவரிடம் தமது உள்ளத் துடிப்பை எடுத்துரைத்தார் அம்பலவாணர். அனைத்தையும் அமைதியாகக் கேட்ட அருணாசலம் சொல்கிறார் இந்தப் போட்டி நிபந்தனைகள் சட்ட நுணுக்கம் பொருந்தியவை. ஒருவரைப்போல வேறொருவர் சிந்திக்க மாட்டார்கள். சிந்திக்கவும் கூடாது என்றல்லவா நிபந்தனை கருதுகிறது. அல்லாமலும் உண்மையாகவே ஒருவர் தழுவல் கதை ஒன்றையோ மொழிபெயர்ப்புக் கதையொன்றையோ எழுதி அனுப்பிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம் அதனை நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியுமா? அப்படியானால், இதுவரையிலே வெளிவந்த சிறுகதைகள் முழுவதையும் மத்தியஸ்தர் குழுவினர் வாசித்திருக்க வேண்டுமே! இயலக்கூடிய காரியமா இது? ஆனபடியால் மனச்சாட்சியை வைத்துக் கொண்டு புதிதாகவே கதையை எழுதுங்கள். வென்றாலும் தோற்றாலும் கவலை ஏற்படாது என்றார் அருணாசலம். “செய்த உதவியுடன் இன்னும் சிறிது உதவி செய்வீர்களா..?”
“என்ன உதவி வேண்டும் கூசாமற் கூறுங்கள்?”
“கருத்து நல்லதாக இருந்தாலும் அதற்கேற்ற சொற்களையும் உத்திகளையும் கையாண்டாலே விஷயம் கவர்ச்சிகரமாய் இருக்கு மாதலால் தரமான சில சொற்களையும் சொற் தொடர்களை யும் தயவு செய்து சொல்லுங்கள்” என்றார் அம்பலவாணர்.
“இது சிரமமான காரியமா! சொல்லுகிறேனே. கன்றுக்குட்டி, பளிச்சிட்டது, பிரமாதம், ஆலாய்ப்பறந்தான், நடந்து கொண்டிருந்தான், இருக்கவே செய்கிறது, மலை விளக்கு, மோகனப்புன்னகை, கிளுகிளுப்பு, பேந்தப் பேந்த விழித்தான், தஸ்தாவேஜூ, தூக்கிவாரிப்போட்டது, புரியாத புதிர், சதை வடிந்து எலும்பெடுத்த, இப்படியான தொடர்களை வைத்து எழுதுங்கள், மேலும் நீங்கள் என்னிடம் கேட்காத இன்னொன்றையும் இப்போதே சொல்லிவிடுகிறேன். எழுதப் படும் பொருள், காதல் சம்பந்தமானதாயிருந்தால் பொதுஜன மதிப்பைப் பெறும். அல்லது “சாதியொழிப்பு”, “கடவுள் இருக்கிறாரா?”, “கைக்கூலி”,“பொதுஜன சேவைக்குப் பாராளு மன்றத்தில் புகவேண்டும்”, “சீதன வழக்கம்” என்பன போன்றவை களுள் ஒன்றைப் பின்னணியாகக் கொண்டு கதை அமைவது விரும்பத் தக்கது. ”என்றார் அருணாசலம்.
நன்றிகூறி அவரை வழியனுப்பிவிட்ட அம்பலவாணர் “கன்னிக்கதை” என்ற தலைப்பெயருடன் தமது கதையை எழுதத் தொடங்கினார்.
– ஈழநாடு, 02.01.1960.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.
![]() |
மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026
தெய்வச்செயல்!
ஜெ.ஜெயகுமார்
September 24, 2026
மரம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 21, 2026
