சாலப்பரிந்து…
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 151
(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னைப் பொறுத்தவரை, நான் எழுதும் மனிதனின் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் நான் அறிந்திருக்க வேண்டும்.மொழியை மட்டும் அல்ல.கிராமியக்கலை என்பது குடியரசு தின ஊர்வலத்தில் ஆடிக்காட்டுவதல்ல.அது ஒரு திருத்தப்பட்ட மாதிரி.அந்த மாதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆராய முடியாது.
அசைவுகள் ஒடுங்கிய பின்புதான் எல்லோருக்கும் தகவல் சொல்லத் தொடங்கினார்கள். நெடு நாட்களாய் புழு அரித்து வலி கிளைத்துக் கொண்டிருந்த கடைவாய் பல்லைப் பிடுங்கிய ஆசுவாசம் மனதில் புகுந்தது. முதுமையுடனும் நோயுடனுமான போராட்டம். வாழ எந்த முனைப்பும் அற்று வலியும் வேதனையும் சுமந்த உயிர்,போய்ச் சேர்ந்தாற் போதும் என்று சலித்து…
சலித்துப் போனவரெல்லாம் செத்துப்போய் விடுகிறார்களா? சலிப்பென்பதே சமயத்தில் ஒரு பூச்சு, திரை, முகமூடி,கேடயம். கிழவிக்கு உண்மையிலேயே சலித்துப் போயிருக்கவேண்டும். உயிர் தின்னும் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்த போதெல்லாம் வராத சலிப்பு. வாழ்க்கையில் வலிகளும் இருந்தன, தற்காலிகமாகச் சில நிவாரணங்களும் இருந்தன.
கோழி கூவியவுடன் எழுந்து, முந்தின நாள் இரவே சாணம் மெழுகிக் கோலம் போட்டு உலர்ந்திருந்த அடுப்பங்கரையில் தீப் பெருக்கி, பித்தளை இட்டிலிக் கொப்பரையில் தண்ணீர் ஊற்றி, இரண்டு தட்டிலும் பழுத்து மங்கிய இட்டிலித்துணி விரித்து அளவாய் மாவூற்றி, பிசகாமல் குட்டுவத்தில் வைத்து மூடி முதல் தட்டு அவியச் சற்று அதிக நேரம் ஆகும்.
தினமும் நாநாழி புழுங்கல் அரிசி இட்டிலிக்குக் கொவரப் போடு வாள். நான்கு நாழி அரிசிக்கு ஒரு நாழி உளுந்து. துணியில் ஒட்டாமல் ஓரங்கள் பிய்ந்து போகாமல் அளவான வடிவங்களில் குட்டுவம் குட்டுவமாய் அவித்து முடிப்பதற்குள் தேங்காய் திருவி ஆட்டுரலில் போட்டு அரைத்து, தாளித்து சட்டினியை ஈயம் பூசிய பித்தளை வாளிக்கு மாற்றி
நடுவில் ஆற்றுக்குப் போய் இரண்டு குடம் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும். இட்டிலி அவித்து முடித்ததும் குளித்து, தலை சிக்கெடுக்க நேரம் இருக்காது. அப்படி பின்தொடை வரை தொங்கும் அளக பாரமும் இல்லை. தலையைப் பக்கவாட்டில் வாக்காகச் சாய்த்து, கையால் தட்டி ரதம் போக்கி, கோடாலி முடிச்சுப் போட்டு…
பாலில்லாமல் ஆற்றிய கருப்புக்கட்டி காப்பியில் இரண்டு தம்ளர் கள் குடித்தபின் துளிர்க்கும் வியர்வையை முந்தானையால் ஒற்றி யெடுத்து, மகனை எழுப்பும்போது முதல் பஸ் பூதப்பாண்டிக்குப் போகும்.
பனைநார்ப்பெட்டியில் வாழை இலை போட்டு, அவித்த இட்டிலி களைவரிசையாய், அளவான சூட்டில் ஒன்றுடன் ஒன்று ஒட்டி விடாமல் அடுக்கி, மேலே வாழை இலை போட்டு மூடி, அளவாய்க் கிழிக்கப்பட்ட துண்டு வாழை இலைகள் அடுக்கி…
கால் எட்டிப் போட்ட நடை. ஒரு கை தலைமீது இருக்கும் பனை நார்ப் பெட்டி மீதும் மறு கை சட்டினி வாளியைத் தூக்கியவாறும். முதலில் மறக்குடி, பிறகு நாடாக்குடி, அதன் தொடர்ச்சியாய்க் காலனி என்று அட்டவணை போட்டு முடுக்கி விட்ட யந்திரம் போல. இட்டிலி யில் மாற்றமில்லை. சட்டினியில் மாற்றமில்லை. காளியம்மை இட்டிலிக்கார அக்காவாக இருந்தபோது காலணாவாக இருந்தது, இட்டிலிக்கார அம்மாளானபோது இரண்டணா ஆகி, இட்டிலிக்கார பாட்டி ஆனபோது எட்டணா ஆகியது.
பாதிக்கு மேல் கடன் போய்விடும். சில வீடுகளில் நெல்லாக, புழுங்கலரிசியாக, இரண்டோ மூன்றோ தேங்காயாக ஈடாகும். இட்டிலி விற்றுப் பிழைக்கும் பெண்பிள்ளையிடம் கடன் சொல்பவர்கள் காப்பும் அட்டியலும் சித்துருவும் திருக்குப்பூவும் பாம்படமும் அணிந்தவராகவா இருப்பார்கள்? கைப்பிள்ளைக்கு வாங்கினார்கள், காய்ச்சல்காரப் பிள்ளைக்கு வாங்கினார்கள். சீக்கு வந்து படுத்துக் கிடந்த வயசாளிகளுக்கு வாங்கினார்கள்.
ஒன்பது மணிக்குள் விற்காது போன, உடைந்த உதிரி இட்டிலி களைக் கொண்டு காளியம்மை வீடு திரும்பும்போது மாலையப்பன் பள்ளிக்குப் புறப்பட்டிருப்பான். ஆண்டுக்கு முன்னூற்று அறுபத்தைந்து நாளும் அவனுக்கு காலைச் சிற்றுண்டி இட்டிலி, மதிய உணவும் இட்டிலி. இடைப்பட்ட நேரத்தில் அரிசியும் உளுந்தும் ஊறப்போட் டதைக் களைந்து, ஆட்டுரலில் அரைத்து வழித்து விரவி வைக்க வேண்டும். என்றும் ஒரே மாதிரியாக இருக்கும் நிறம்போன கண்டாங்கி. அதுவே உள்ளாடை. அதுவே மேலாடை. கண்டாங்கிக்குள் குதித்துக் கொண்டிருந்த பால்மடு, வற்றிச் சுருங்கி சுருக்குப்பை போல ஆன போதும் காளியம்மை இட்டிலி அவித்துக்கொண்டிருந்தாள்.
நெற்றியில் குங்குமம் இருக்கும். மஞ்சள் தேய்த்துக் குளித்த மினுக் கம் இருக்கும். எவர் வீட்டிலோ விசேசம் என்றால் வாயில் வெற்றிலை இருக்கும். கொண்டையில் துண்டு பிச்சிச்சரம் அல்லது செவ்வந்தி புகுந்திருக்கும்.
மலையப்பனைப் பெற்று, பிறந்த நாள் கழியுமுன் ஓடிப்போன மாப்பிள்ளையைப் பற்றி இன்னும் ஒரு துப்பும் கிடையாது. சாமியாராகிக் காசிநகர் மடம் ஒன்றில் இருக்கிறான் என்கிறார்கள். செத்துச் சுண்ணாம் பாகப் போயிருப்பான் என்கிறார்கள். கால் வெடிப்புக்ளைத் தோற்கடிப் பதாக இருந்தன அவள் மனவெடிப்புகள்.
தேய்ந்துபோனதோர் பழந்தாலியும் நெற்றிக் குங்குமமும் தவிர வேறு பொருளற்றுப் போனதோர் இல்வாழ்க்கை. தவறாது வந்த மாதவிடாய் போல அவன் நினைவு வந்தது கொஞ்ச நாட்கள். அதுவும் நின்று போனது.
வளர்ந்ததே தெரியாமல் வளர்ந்தான் மாலையப்பன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் மூன்றாண்டுகள் தொழிற்பயிற்சி போனான். அவன் வரு மானம் அவனுக்கே போதவில்லை. கடல் நீல நிறத்தில் கால்சராயும் கோட் போன்ற அரைக்கைச் சட்டையும் கிரீஸும் ஆயிலும் புகுந்த நகக் கண்களுமாய் இரண்டு வேளைச் சாப்பாடு தொழிற்சாலை கேன்டீனிலும் ஒரு வேளை வெளியிலுமாய் நாட்கள் வளர்ந்தன சென்னையில்.
காளியம்மைக்கு குடியிருக்க வீடொன்று உண்டு. கடனுக்கு விற்ற இட்டிலிகளுக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை வசூலாகும் நெல் சாப் பாட்டுக்குப் போதும். ஒழுகிய மூக்கும் சூம்பிய கைகால்களும் முன் தள்ளிய வயிறும் கண்களில் நிரந்தர ஏக்கமும் அலுமினியத் தட்டங்களும் இருக்கும்வரை அவளுக்கு இட்டிலி விற்கும். அந்த ஊரில் இரண்டு கிளப்புக்கடைகள் இருந்தன. ஆனால் அவளுக்குப் போட்டி அல்ல.
மாலையப்பனுக்கு வேலை நிரந்தரமானபோது நிறையச் சம்பளம் வந்தது.சாப்பாட்டுக்கு சிரமமாக இருக்கிறது என்றான். சின்னதாய் வீடு வாடகைக்குப் பிடிக்கலாம் என்றான். இனியும் எதற்கு ஆட்டுரலில் அரைப்பட்டு இட்டிலிக் குட்டுவத்தில் வெந்து மாள வேண்டும் என்றான்.
காளியம்மையைப் பிடுங்கி நடுவது அவ்வளவு எளிதாக இல்லை. என்றாலும் வழிச்சுத்தமுள்ள, குடும்பப் பாங்கான, வசதியான வீட்டில் மகனுக்குப் பெண்ணெடுத்த பிறகு, மகனும் மருமகளும் வருந்தி வருந்தி அழைத்தபோது ஊர்க்காரர்களும் உறவினர்களும் மகனோடு போய் இருப்பதுதான் நல்லது கெட்டதுக்கு ஆகும் என்றபோது அரைமனத் துடன் சம்மதித்தாள்.
மருமகளுக்கு மாநகராட்சிப் பள்ளியில் வேலை கிடைத்தது. பழகிய மாமியார் அலுத்துப் போனாள். அக்கம்பக்கத்தில் பேசுவது மருமகளுக் குப் பிடிக்கவில்லை. நாகரீகக் குறைவாக இருக்கிறது என்று ஐம்பது கழிந்த பிறகு மேல் சட்டை போடச் சொன்னாள். காளியம்மை மகனிடம் சொன்னாள் ‘ரெண்டு உள்பாடியும் வாங்கித் தாலே, போட்டுக்கிட்டு அலையுதேன்.”
காலையில் சமையலாகிவிடும். பெரும்பாலும் மத்தியானத்துக்கு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம், புளிசாதம், வெஜிடபிள் பிரியாணி…மாமியாருக்கு மத்தியானச் சாப்பாடு எடுத்து மூடி வைத்திருப்பாள்.
படுக்கையறை சாமான்கள் அறை எல்லாம் பூட்டி சாவியைக் கொண்டுபோய்விடுவார்கள். டி.வி. படுக்கை அறையில் இருந்தது.
இதற்கு இட்டிலி சுமக்கும் வாழ்க்கை பெரிதெனத் தோன்றியது.
தனியே ஊருக்கு வர வழி தெரியாது. எங்கு போய் ரயில் பிடிக்க வேண்டும் என்பதும் எங்கு இறங்க வேண்டும் என்பதும் டிக்கட்டுக்கு எத்தனை ரூபாய் வேண்டும் என்றும் கூடத் தெரியாது.
வேலையை விட்டு வந்த பிறகும் மாலையப்பனோ மருமகளோ அவளிடம் அதிகம் பேசுவது கிடையாது. தேங்காய் திருவவோ, உள்ளி உரிக்கவோ, கீரை ஆயவோ, பீன்ஸ் அரியவோ என ஏவும் கட்டளைச் சொற்கள். வீடு பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது எல்லாம் வீட்டில் ஆட்கள் இல்லாதபோது.
மாப்பிள்ளைக்காரன் போனதுபோல் ஊரைவிட்டு எங்காவது ஓடி விடலாமா என யோசித்தபோது மருமகள் கர்ப்பமானாள். சாக்கோட்டி மாதங்கள். பிறகு சூலழைத்தல். தனியாக இருந்த மகனுக்கு சமைத்தல். குழந்தை வந்த பிறகு பிள்ளை குளிப்பாட்டுதல், பீத்துணி கசக்குதல், பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்தல், பால்குடி வல்லந்தமாக மறக்கடிக்கப் பட்ட பிறகு ஒன்பதாவது மாதத்தில் இருந்து பேரன் காளியம்மையுடன் படுத்துக் கொள்வான். பால் முலை தேடிப் பரிதவித்த பேரனுக்கு, வறண்டு போன தன் முலையைச் சவைக்கக் கொடுத்தாள்.
பேரனுக்கு மூன்று வயதானபோது அடுத்த குழந்தை வந்தது. சம்சார சாகரத்தில் இருந்து மீளமுடியவில்லை.
புறநகரில் சற்றுப் பெரியதாய் வீடுகட்டிக் கொண்டார்கள். குடிவரும் போது எறிந்த பழைய உபயோகமற்ற பொருட்களில் காளி யம்மைக்குரிய தகர டிரங்குப் பெட்டியும் இருந்தது.
ஊரில் இருந்த வீடும் விலையாகிப் போயிற்று. அலுமினியத் தட்டேந்தி இட்டிலி கேட்டு நிற்கும் குழந்தைகளின் முகங்கள் எப்போ தேனும் கனவில் வரும்.
காளியம்மைக்கு ஒரு அறையும் ஒற்றைக் கட்டிலும் உல்லன் போர்வையும் துணிக்கொடியும் அதில் நான்று கிடக்கும் இரண்டு பதினாறு முழம் கண்டாங்கிகளும்.
குங்குமம் தீர்ந்து போனபோது ஒட்டும் பொட்டு வாங்கித் தந்தாள் மருமகள். கிட்டத்தட்ட வீட்டோடு தங்கும் சம்பளமில்லாத வேலைக் காரி ஸ்தானம். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அறையில் இருந்து வெளியே வரக்கூடாது. வீட்டில் ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட் டாலும் முன்னறையில் காற்றாட ‘அம்மாடி’ என முந்தானை விரித்துப் படுக்கக்கூடாது.
மாலையப்பன் அம்மா என்று கூப்பிட்டே ஐந்தாறு ஆண்டுகள் இருக்கும். ஊரை விட்டு நகர்ந்து வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொள்ளாத நாட்கள் கிடைளயாது. சம்மந்தக்காரர்கள் வரும்போது மரியாதைக்காக இரண்டு வார்த்தை பேசுவார்கள். சமீபத்தில் யாரெல் லாம் இறந்து போனார்கள் எனும் தகவல்கள் கிடைக்கும்.
பேரனுக்குப் பதினேழு வயதாயிற்று என்பதனால் தான் ஊரை விட்டு வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆயின என்பது தெரியும் கிழவிக்கு. பேரன் பேத்திகளுக்கு கிழவி தொட்ட எதுவும் அசிங்கம், அழுக்கு, அருவருப்பு.
சாலைத் திருப்பில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போவாள் கிழவி. கால் நீவிக்கொண்டே உட்கார்ந்து கதை பேசமண்டபம் இருந்தது. சற்றுநேரம் இருந்துவிட்டு இருட்டுமுன் வீடு திரும்ப அனுமதி இருந்தது. திரும்பியதும் தென்படும் மருமகள் முகத்தில் எகத்தாளம் இருக்கும். ஒருநாள் கேட்டாள் “என்னா? பிள்ளைவரம் கேக்கப் போனேளா?”
தானொரு அதிகப்பற்றாகிப் போய்ப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன எனத் தெரியும் கிழவிக்கு. ஆனால் அவமானமும் படவேண்டியதிருந்தது. ‘எனக்கொரு சாக்காலம் வரமாட்டங்கே! என்னைப் பெத்த அய்யா’ என்பது தினசரி மனமுருகல்.
கடவுள், சற்று முயற்சிதான் செய்து பார்ப்போமே என ஆட்டோ ரிக்ஷா வடிவத்தில் வந்தான். உயிர் போகவில்லை. ஆனால் இரண்டு செப்பும் நகர்ந்துவிட்டன.
எல்லாம் படுக்கையில் ஆயிற்று. உணவு, தண்ணீர், பீ, மூத்திரம்… மருத்துவம் என்பது கிழவியை மீட்பதற்கான போராட்டமாய் இருக்க வில்லை.
ஊரில் ஆடைக்கும் கோடைக்கும் காலை ஆறு மணிக்குக் குளிப்பவள் தலை தண்ணீர் கண்டு மாதங்கள் ஆயின. வாரம் ஒரு நாள் வரும் செவிலி, உடம்பு துடைத்து, உடை மாற்றிக் கிடத்திவிட்டுப் போவாள். கதவைத் திறந்தால் உலும்பு வாடை எனக் கிழவியின் அறையைச் சாத்தியே வைத்தார்கள். தினமும் ஊதுபத்தி கொளுத்தி வைத்தனர். ஊதுபத்தி நாற்றத்தை விரட்டாது கொஞ்சம் மறைக்கப் பார்த்தது.
அடிக்கடி செலவாதிக்குப் போகும் சிரமம் கருதி உணவும் தண்ணீரும் குறைத்தாயிற்று. சிலசமயம் காலையில் சாப்பிட்ட தட்டு மாலை வேலைக்காரி வரும் வரை ஈயரித்துக் கிடக்கும்.
யாருக்கும் பொருட்டில்லாத, இருப்பே கூட அறிந்திராத சீவன் முன்னால் சாவு கிளியாந்தட்டு மறித்துக்கொண்டு கிடந்தது.
கிழவிக்கே மறந்து போயிற்று, எத்தனை நாட்களாய்க் கிடக்கிறோம் என்று. வீட்டில் எந்தக் கொண்டாட்டத்துக்கும் குறைவில்லை. சீரணமா காமல் பேதி ஆகும் எனக் கிழவிக்கு எளிய உணவுகள். இரண்டு இட்டிலி, ரசம் சோறு, ரவைக்கஞ்சி….
‘கண்டதைத் திண்ணுக்கிட்டு கழிஞ்சுக்கிட்டுக் கிடந்தா யாரு பீ வாருகது?”
உடல் ஒடுங்கிக்கொண்டு போயிற்று.
எலும்புகள்கூட நீளமும் கனமும் குறையும் போலும். பன்னிரண்டு வயதுச் சிறுமியின் உடல் போலாயிற்று. கழுத்தில் ஒரு கையும் ஓய்ந் திருந்ததுடைகளில் மறுகையுமாய் செவிலி ஒற்றைக்குத் தூக்கித் துணிகள் மாற்றினாள். காலமெல்லாம் கண்டாங்கி சுற்றி நடந்தவள், வசதி கருதி பின்பக்கம் நாடாக்கள் வைத்துத் தைத்த அங்கி மட்டும் அணிவிக்கப் பட்டாள். எண்ணெயிட்டு முடியாத தலைமயிர் சடை பிடித்து, வெட்டி எறியப்பட்டு கிராப்பு போலாயிற்று.
நாட்களும் வாரங்களும் மாதங்களும் மறந்து கிடந்தாள் காளியம்மை. உடலில் இருந்த காளி செத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. மனதில் இருந்த காளியும் செத்துக்கொண்டிருந்தாள்.
மகன் வந்து எட்டிப்பார்த்து எத்தனையோ நாட்கள் இருக்கும். மருமகள் செவிலியை மேற்பார்க்க வருவாள். வேலைக்காரி தினமும் வருவாள். பேரனுக்கும் பேத்திக்கும் அந்த அறை துர்க்கந்தக் கிடங்கு.
முன்னிரவில், எல்லோருக்கும் சாப்பாடு ஆனபின், கிழவிக்கு ரவைக்கஞ்சி கொடுக்கப் போன வேலைக்காரி சொன்னாள்.”பெரியம்மா கிட்டே அனக்கமே இல்லை.”
ஒடுங்கிவிட்டாள் கடைசியில் எனத்தோன்றி மகனுக்குச் சற்றே கண்கள்கலங்கின.
மருமகள் வீட்டை ஒதுங்கவைக்கப் போனபோது மகன் தந்தி கொடுக்கவும் ஃபோன் செய்யவும் போனான். காலையில்தான் சவம் எடுக்க முடியும். ‘அமரர் ஊர்தி’ அல்லது ‘சொர்க்க ரதம்’ ஒன்றுக்குச் சொல்ல வேண்டும்.
வேலைக்காரி, தலைமாட்டில் விளக்கு கொளுத்தி வைத்தாள். கட்டு ஊதுபத்தி கொளுத்தி வைத்தாள். எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டுக் காரர்கள், காத்திருந்து பயனில்லை என்றும் காலையில் வரலாம் என்றும் புறப்பட்டுப்போனார்கள்.
அது மாநகரம். ஊர் என்றால் சாவு வீட்டில் பிணம் கிடக்கும் போது, இரவெல்லாம் கூட்டம் கண்ணடையாமல் காத்துக்கிடக்கும். எப்போதாவது ‘ஏ! என்னப் பெத்த அம்மா’ என முனகலாகவேனும் அழுகை கேட்கும். வீட்டில் தீப்பெருக்க மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் கருப்புக்கட்டிக் காப்பி போடுவார்கள். பிணம் எடுப்பது வரைக்கும் ஊரில் எந்தக் கோயிலும் நடை திறக்க மாட்டார்கள். கடவுள்கள் கருப்புக்கட்டிக் காப்பி குடிப்பதும் இல்லை.
“காத்தால வாறம்மா” என வேலைக்காரி போய்விட்டாள். அவளுக்கு இனியொருமுறை வீட்டுக்குப் போய் குளிக்க வேண்டும். கிழவியின் அறையை வெளியே சாத்தி, கொண்டி போட்டுவிட்டு எல்லோரும் படுக்கப் போனார்கள்.
சவம் எடுக்க முற்பகல் ஆகிவிடும். ஊரில் இருந்து சொந்தக்காரர் சிலர் வருவார்கள், சம்மந்தக்காரர்கள் வருவார்கள்.
நல்லவேளையாக அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து. தொழிற்சாலை நண்பர்கள் சிலர் மலர்வளையம் கொண்டு வருவார்கள். பழக்கமுள்ள சிலர் வருவார்கள்.
மாலையப்பனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. பழைய சினிமா ஒன்றின் துண்டுக்காட்சிகள். சிலந்தி வலை பின்னிய ஞாபக இடுக்குகள். கேவியழவும் அச்சமாக இருந்தது. மனைவி கேட்பாள் ‘என்னா? அம்மா மேல பாசம் பொத்துக்கிட்டு வருதாங்கும்?”
ஓசையின்றி எழுந்து, படுக்கை அறையை விட்டு வெளியே வந்தான். பிள்ளைகள் அவரவர் அறைகளில் தாளிட்டு உறங்கிக்கொண்டி ருந்தனர். நகரம் எழுப்பும் அரண்கள் குண்டு துளைக்க முடியாதவை.
காளியம்மையின் அறைக்கதவைச் சத்தமின்றித் திறந்து எட்டிப் பார்த்தான். அடைத்திருந்த ஊதுபத்திப் புகைச்சுருள்கள் மொத்தமாய் வெளியே வந்து தாக்கின. விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. கெட்டு விடும் போலிருந்த பித்தளை நிலைவிளக்கைத் தூண்டப்போனான்.
தூண்டியபின் அம்மா முகத்தை உற்றுப் பார்த்தான். வறண்டு, பொருக்குத்தட்டி வெளிறிய முகம். குப்பென அழுகை பொங்கியது. அடக்கிக்கொண்டு அம்மா முகத்தையே பார்த்தான். மெலிதாக மூச்சுப் பிரியும் அனக்கம் இருப்பதுபோல்… கண் இமைக்குள் கண்கள் சலிப்பது போல்…
மாலையப்பனுக்கு குப்பென வியர்த்தது.
ஓடிப்போய் மனைவியை எழுப்பினான்.
”ஏ! எந்திரி… அம்மை சாகல்லே… உசிரு இருக்கு….”
உறக்கக் கிறக்கத்திலே சொன்னாள்…
“உசிரு இருக்குண்ணா எடுத்து ஒக்கல்லே வச்சுக்கிடுங்கோ….”
“எந்திரிச்சு வாறயா நீ? மூச்சுப் போகு…”
இதென்ன இழவாய்ப் போயிற்று என எழுந்து உட்கார்ந்தாள்.
“சொப்பனம் கண்டேளா? ராத்திரி எந்திரிச்சு கரிசனமா அம்மையைப் பார்க்கப் போனேளாக்கும்? மனப்பிராந்தியாட்டு இருக்கும். விளக்க அணைச்சுக்கிட்டு படுங்கோ.. விடிஞ்சா ஊருப்பட்ட வேலை இருக்கும். குறுக்கு செத்துப் போகும்…”
“நீ இப்பம் எந்திரிச்சு வாறையா?”
”சரி வாருங்கோ! அந்த சம்சயம் என்னத்துக்கு?”
உண்மையிலேயே கிழவியிடம் உயிர் இருப்பதற்கான அசைவுகள் இருந்தன.
“இப்பம் என்ன செய்யது? எல்லாத்துக்கும் தகவல் சொல்லி யாச்சு,பத்து மணிக்கெல்லாம் ஆளுக வர ஆரம்பிச்சிரும். கூத்தால்லா போச்சு! கெளவி இப்பிடிப்போட்டுப் படுத்துகாளே!”
“இப்பம் எதாம் டாக்டர் இருப்பாரா?”
“என்னத்துக்கு? பட்ட பாடு காணாதா? நீங்களே யோசிச்சுப் பாருங்கோ…எத்தனை மாசமாகு? ஒரு இடத்துக்குப் போக முடியா, வர முடியா? இன்னும் ரெண்டு மாசத்திலே மூத்தவனுக்கு பரீச்சை ஆரம்பிக்கும். நான் இதோட கெடந்து எம்புடு நாளைக்கு மாரடிக்கது?”
“இப்பம் என்னை என்ன செய்யச் சொல்லுகே?”
“இப்பிடிக் கெடந்து கழுத்தறுக்காளே கௌவி! இப்பம் இருந்து என்ன செய்யப் போறா? காலம்பற ஆளு சனம் எல்லாம் வர ஆரம்பிச் சிரும்…”
திகைத்தாற்போல, ஹாலில் கிடந்த சோபாவில் தொய்ந்துபோய் உட்கார்ந்தாள். மாலையப்பனுக்கும் வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.
சற்று நேரம் பொறுத்து மௌனத்தின் கனம் ஆற்றாமல் கேட்டாள். “என்னங்க ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டேளே?” மாலையப்பன், அனிச்சையாய் “ம்?” என்றான்.
“பாத்ரூமிலே போயி அஞ்சாறு பக்கெட், குடம், பானை எல்லாத்தி லேயும் தண்ணி நிறைச்சு வைங்கோ.”
‘”ஏன்? என்னத்துக்கு?”
‘அம்மையைக் குளுப்பாட்டிக் கெடத்தீருவோம்.” ”உனக்கென்ன கிறுக்கு புடிச்சிற்றா?”
”எனக்கு கிறுக்கொண்ணும் புடிக்கல்லே… நல்லா யோசிச்சுத்தான் சொல்லுகேன். இதுலே ஒண்ணும் தப்பில்லே. மேலும் துன்பப்படாமே போய்ச்சேரட்டு….”
“இருந்தாலும்…
“ஒரு இருந்தாலும் இல்லே… போயி தண்ணி நிறைங்கோ…”
பிள்ளைகள் எழுந்துவிடாதபடி, விழித்தாலும் உடனே எழுந்து வராமல் அறைக்கதவுகளை வெளித் தாழ்ப்பாள் போட்டு…
குழந்தையைத் தூக்குவதுபோல் மாலையப்பன் அம்மாவைத் தூக்கிக்கொண்டு போய் பாத்ரூம் சுவர் மூலையில் சாய்த்தாற்போல் உட்காரவைத்தான்.
ஆறு பக்கட்கள், மூன்று குடங்கள், இரண்டு பானைகள் தொடர்ச் சியாக இடைவெளி விடாமல் கவிழ்க்கப்பட்டன. கடைசிக் காற்றை வாங்கியது குடமா,பக்கட்டா, பானையா என்பதைப் பரம்பொருள் அறியலாம். எல்லாம் காலியான பிறகு, மூக்கருகே விரல்வைத்துப் பார்த்து…
எல்லாம் அடங்கிவிட்டிருந்தது.
திருநீறு குழைத்து நெற்றியில் பூசினான். கட்டிலை ஒழுங்கு படுத்தினான். கட்டிலில் கொண்டு கிடத்தி விளக்கைத் தூண்டினான். எரிந்து முடிந்திருந்த ஊதுபத்தி மாற்றிப் புதியது கொளுத்தி வைத்தான்.
எதுவோ குறைவது போலிருந்தது மருமகளுக்கு. படுக்கை அறைக்குப் போய் சிவப்பு நிற ஒட்டும் பொட்டை எடுத்துவந்து நெற்றி யில் ஓட்டினாள்.
சுமங்கலியாய்ப் புறப்பட்டுப் போவது என்பது எவ்வளவு சிறப்பானது?
– ஓம் சக்தி, மே 2000.
நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026
