மனுஷி
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 100
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாட்டை விற்றுவிடுவது என்று முடிவாயிற்று.
அம்மா நேற்று சொன்னாள். ‘விலை படிந்துவிட்டது. இன்றைக் குச் சாயங்காலம் தரகர் வந்து மாட்டை ஓட்டிக் கொண்டு போவார்.’
நான் நின்ற இடத்திலிருந்தே மாட்டைப் பார்த்தேன்.
அதற்கென்று போட்டிருந்த கொட்டகையில் அது படுத்துக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தது. கீழே வைக்கோல் புரிகள் சிந்திக்கிடக்க, பக்கத்தில் காளைக் கன்று. தான் விற்கப்பட்டு விட்டோம் என்பதையோ, அடுத்த சில மணிகளில் தன் வாசஸ்தலம் மாறிவிடப் போகிறது என்பதையோ, புது மனிதர்களையும், புதுப் பழக்க வழக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையோ, அறியாது, கொஞ்சமும் சலனமின்றிக் கிடந்தது மாடு.
மாடு எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது, இன்னும் நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. என் மாமனார், அவர் மகளுக்கு என் மனைவிக்கு அன்பாக அளித்தது அது. கோனார் ஒரு சாயங்காலப் பொழுதில்தான் மாட்டை எங்கள் வீடு கொணர்ந்து சேர்த்தார். ஏறத்தாழ இருபது மைல் நடந்து வந்திருந்தது. களைப்பு அதன் கண்களில் தெரிந்தது. அதன் வருகையை ஏற்கெனவே அறிந்தி ருந்ததால், புல், வைக்கோல், புண்ணாக்கு, பருத்திக் கொட்டை யெல்லாம் வாங்கி வைத்திருந்தோம். தண்ணீர் குடித்து, தீனி தின்று, படுத்துக்கொண்டு களைப்பாறியது அது.
நாங்கள் மாட்டைச் சுற்றி நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். தலையை மட்டும் நிமிர்த்தி அசைபோட்டவாறு எங்கோ தூரத்தில் தன் பார்வையை லயிக்க விட்டிருந்தது அது. விழிப்பு உண்டு. பார்வை இல்லை. எதையாவது ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது போலும். மாடு சிந்திக்கக் கூடாதா என்ன?
தன் சம்பந்தி வீட்டிலிருந்து பசு வந்திருப்பதில் அம்மாவுக்குச் சந்தோஷம். சம்பந்தி வீட்டிலிருந்து காதற்ற ஊசி ஒரு வண்டி வந்திருந்தாலும் அவள் சந்தோஷப்பட்டிருப்பாள். கறந்தவரை லாபம்.
அம்மா வீட்டிலிருந்து தன் பொருட்டு பசு வந்திருப்பதில் என் மனைவிக்குப் பெருமை. கூடவே, மாட்டை முன்னிட்டுத் தனக்கு வேலை கூடுதலாகிவிடுமே என்கிற கொஞ்சம் கவலை.
என் அம்மா இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த புதிதில், எங்கள் தாத்தா பசு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அம்மாவே எனக்குச் சொல்லியிருக்கிறாள். ‘தோ, பாருங்கள். இந்த வீட்டுக்கு மருமகளாகத்தான் நான் வந்திருக்கிறேன். மாட்டுக் காரியாக வரவில்லை. வடை தட்டும் கையால் வரட்டி தட்ட முடியாது.’ என்று சொல்லிவிட்டாளாம். தாத்தாவும் அந்த விருப்பத்தைக் கைவிட்டு விட்டாராம்.
அது அந்தக் காலம். அம்மா இப்போது ஒரு மாமியார். அவளுக்கு மருமகள் வந்துவிட்டாள். மருமகள் வடையும் தட்ட வேண்டும். வரட்டியும் தட்ட வேண்டும். எப்படியெல்லாம் சாத்தியமோ அப்படியெல்லாம் மருமகளை இம்சிக்காவிட்டால் மாமியார் என்கிற ஸ்தானம் என்னாவது?
பசு அழகாகவே இருந்தது. பெரிதும் வெள்ளை. திட்டுத் திட்டாக ஆரஞ்சு வர்ணம். பெரிய நாவற்பழம் போன்ற கண்கள். கண்களைச் சுற்றிக் கருமை. மையிட்டதுபோல. ஆரஞ்சு நெற்றியில் வெள்ளைச் சுட்டி. பனம்பழம் போல வாய். கன்றுதான். இன்னும் முகத்தில் பிள்ளைக் களை இருந்தது. உயர்ந்த ஜாதிப் பசுவாம். கோனார் சொன்னார். பசுக்களிலும் ஜாதி உண்டு.
பக்கத்து வீட்டிலிருந்து என் பெரியம்மா வந்தாள். அவள் கை விரலைப் பிடித்துக் கொண்டு அவள் பேத்தி. மூன்றாவது வீட்டி லிருந்து என் அத்தை. இடுப்பில் பேரக் குழந்தை. என் மகனின் தெருச் சினேகிதர்கள். எல்லோரும் பசு. அழகாக இருக்கிற தென்றார்கள். என் அம்மாவுக்கு வேண்டியிருந்ததும், அதுதான். மற்றவர்களிடம் இல்லாதது தன்னிடம் இருக்கிறது என்று காட்டி, பார்ப்பவர் மனசில் ஒரு கடுகளாவாவது பொறாமை விதையைத் தூவுவது. இதில் கிடைக்கிற சந்தோஷம் வேறு எதிலும் கிடைப்ப தில்லை, அம்மாவுக்கு.
‘பசு லட்சுமி; பசு வீட்டுக்கு வருவது லட்சுமியே வருவது போல.’ ஆகவே பசுவுக்கு லட்சுமி என்று பேர் வைத்தாள் அம்மா. லட்சுமியை எங்கு கட்டி வைப்பது என்கிற பிரச்சினை வந்தது. மனிதர்கள் மனிதர்களுக்காகவே வீடு கட்டிக் கொள்வதால், ஏனைய ஜீவன்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அப்போதைக் குக் கூடத்தில் நடைபாதையில் ஓர் ஓரம் கட்டி வைத்தோம்.
லட்சுமி சாணி போடக் கூடாது என்று விதியிருக்கிறதா என்ன? போட்டிருந்தது. அடுத்த நாள் காலை அறையைவிட்டு வெளியே வந்த என் மனைவி திடுக்கிட்டுப் போனாள்.
சுமார் அரைக்கூடை சாணி போட்டிருந்தது லட்சுமி. மூத்திரம் வேறு பெய்து, சாணி கரைந்து சிறு வாய்க்காலாக ஓடிச் சாக்கடை யில் சேர்ந்திருந்தது. கூடத்தில் பாதி சாணியாகியிருந்தது. வைக்கோல், புல் தும்புகளும் தூசிகளும் பார்க்க அருவருப்பாய் இருந்தது. மாடு துடைப் பகுதி முழுவதும் சாணி பூசிக் கொண்டிருந்தது. அந்த நாள் முதல் அவளுக்குக் காலைகளில் முதல் வேலை கூடத்தைக் கழுவி விடுவது என்றாயிற்று.
லட்சுமியைப் பராமரிக்கும் வேலையை அம்மாவே ஏற்றுக் கொண்டாள். அம்மா செய்த ஒரே வேலை அது. வேளா வேளைக்குத் தீனி போடுவது, தண்ணீர் காட்டுவது, வெள்ளிக் கிழமைகளில் சுடுதண்ணீர் வைத்து இளஞ்சூட்டில் லட்சுமியைக் குளிப்பாட்டுவது, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அழகு பார்ப்பது, என்று இந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டோடு தன்னைக் கரைத்துக் கொண்டாள். பசு தொடர்பான காரியங்களில் அம்மா ஈடுபட்டிருக்கும் போது நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பரவசத்தோடு இருப்பாள். உள்ளத்துப் பரவசம் காரணமாக முகம்கூட அழகாய் இருக்கும். லட்சுமி அம்மா…’ என்று தன் தேவைக்கு அழைக்கும் போதெல்லாம் ‘ஏண்டீம்மா’ என்று ஓடுவாள். அவளுக்கு வயது அறுபத்து ஏழு.
லட்சுமிக்கும் அம்மாவின் மீது ரொம்ப வாஞ்சைதான். அது வந்த முதல் நாள் இரவு இன்றும் என் நினைவில் இருக்கிறது. புதிய இடம். புதிய சூழ்நிலை. இரவு முழுவதும் கால் மாற்றிக் கால்மாற்றி ‘அம்மா…’ ‘அம்மா’ என்று கத்திக் கொண்டேயிருந்தது. தொழுவத்தில் தன் தாயோடும், சகோதரக் கன்றுகளோடும் ஒன்றாக வளர்ந்து கொண்டிருந்தது அது. திடீரென்று அதைப் பிடித்து அழைத்து வந்து எங்கள் வீட்டில் கட்டிப் போட்ட அந்த முதல் தனிமையான இரவை அந்தக் கன்றால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. உறவுகளைப் பிரிவதென்பது எல்லோருக்கும் கஷ்டமான அநுபவம் தான். மனிதனானால் என்ன, மிருகமானால் என்ன? ஆத்மா ஒன்றுதான். கன்று தேற இரண்டு நாள் ஆயிற்று.
பசு எங்கள் வீட்டுக்கு வந்து பல நாள் சென்று நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அம்மா ஏதோ ஒரு விசேஷத் துக்காக இரண்டு நாள் வெளியூர் சென்று வந்தாள். அந்த இரண்டு நாளும் லட்சுமி சரியாகச் சாப்பிடவில்லை. என்றுமே என் பையன்களை முட்டாதது அன்று முட்ட வந்தது. அதன் கண்களில் கோபம். அடிக்கடி ‘அம்மா’ என்று கத்தியது. அம்மா ஊரிலிருந்து வந்து, பையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாளோ இல்லையோ, லட்சுமி தும்பை அறுத்துக் கொள்ளும் ஆவேசம் கொண்டு அலற ஆரம்பித்தது. அம்மா ஓடோடியும் போய், அதை அணைத்துக் கொண்டு தடவிக் கொடுத்தாள். கன்றின் ஆவேசம் அடங்கப் பல நிமிஷங்களாயின. அம்மாவை அந்தக் கணத்தில் நான் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. அவள் கண்களில் இருந்து நீர்வழிந்தது உண்மை.
எல்லாம் சரி. என் சந்தேகம் வேறு. ஒரு மாட்டின் மீது பாசத்தைச் சொரியும் பக்குவத்தைப் பெற்றவளுக்கு, மனுஷியாகிய மருமகள் மீது மட்டும் வெறுப்பைக் காட்டும் துவேஷ புத்தி எங்ஙனம் வந்தது?
லட்சுமி தன் முதல் கன்றை ஈன்றது. காளைக் கன்று. லட்சுமி களைத்துப் போய் இருந்தது. தன் பக்கத்துக் கன்றை நக்கிக் கொண்டிருந்தது. கன்று எழ முயற்சித்து, விழுந்தது. எழவும் விழவுமாக இருந்தது. தாயைப் போலவே கன்று. ஜனனம் எல்லா உயிர்க்கும் அழகைத் தருகிறது.
பிறந்த பச்சைக் குழந்தைகள், பார்க்க, ஐயோ பாவம் என்றி ருக்கும். கர்ப்பத்து வாழ்வை முடித்து மண்ணுக்கு வந்ததும் அவை மிரண்டு போய்விடும். சூழ்நிலைகளை அனுசரித்து, தேறிய பின்பே அவற்றின் முகத்தில் தெளிவு ஏற்படும். என் குழந்தைகள் எனக்குத் தந்த அநுபவம் இவை.
அம்மாவுக்குக் காளைக் கன்று என்றதுமே சப்பென்றாகி விட்டது. அவளுக்குப் பசுங்கன்று பிறக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு. அம்மாவுக்குப் பெண் குழந்தைகள் இல்லை. நாங்கள் மூவருமே ஆண்கள். எனக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டும் பையன்கள்.
“பெண் சாபம் உள்ள குடும்பம்டா இது. இங்கு பெண் முளைக்காது” என்றாள். எங்கள் குடும்பத்துப் பூர்வீகக் கதைகளுள் இதுவும் ஒன்று. ஏழெட்டுத் தலைமுறைகளுக்கு முன்னால் நடந்ததாம் இது. என் கொள்ளுத் தாத்தாவுக்குக் கொள்ளுத் தாத்தா தன் பெண்டாட்டியைக் கொன்று புதைத்துவிட்டாராம். விஷயம் வேறொன்றுமில்லை. கொல்லையில் மாலைக் கருக்கலில் ஏதோ வேலையாகப் போயிருக்கிறாள் அவள். அதே நேரம் பக்கத்து வீட்டுச் சுவரில் அந்த வீட்டு இளைஞன் ஏறி, மரத்தில் இலை பறித்தி ருக்கிறான். பறித்துக் கொண்டு சுவரை விட்டு இறங்கும் அந்தக் கணத்தில் தாத்தா கொல்லைக்கு வந்திருக்கிறார். கொல்லையில் மனைவி
மதிலைவிட்டுத் தன் வீட்டுக்குள் குதிக்கும் பையன். எவன் மனசில்தான் மிருகம் இல்லை? தென்னம்பாளையைச் சீவிப்பிழைக்கும் சாணார இரத்தம் கொதித்திருக்கிறது. அரிவாள், பாளையைக் காட்டிலும் மென்மையான கழுத்தை அன்று அரிந்தது. அம்மா சொல்வாள். ‘பத்தினி சாபம். ஏழேழு தலைமுறைக்கும் இந்த வீட்டுக்குப் பெண் விளங்காது. பிறந்தாலும் தாலியோடு வாழாது.”
லட்சுமி முதல் காளைக் கன்று ஈன்ற பொழுதிலிருந்து, அம்மா லட்சுமியை விட்டு விலக ஆரம்பித்தாள்.
அன்று அம்மா என் மனைவியைப் பார்த்து, ‘இந்த வீட்டு மருமகதான் பெண்ணைத் தராத துக்கிரின்னா, மாடு கூடக் காளைக் கன்றுதானே போடுது…’ என்று சொல்லியதாக, என் மனைவி என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டாள். முதல் கன்று நாலாம் மாதம் வயிறு வீங்கிச் செத்துப் போயிற்று.
லட்சுமி விரைவிலேயே இரண்டாம் கன்று போட்டது. சொல்லி வைத்தாற்போல அதுவும் காளைக் கன்றுதான். அம்மா லட்சுமியை விட்டுச் சுத்தமாக ஒதுங்கிப்போனாள். அதோடு என் மனைவிக்கும் அவளுக்கும் பூசலும் அதிகமாயிற்று. அம்மாவும் மனைவியும் சேர்ந்து எனக்கு அதிகமான மனச்சோர்வைக் கொடுத்த நாட்கள் இவை.
திடீரென்று சட்னியில் உப்புக் கூடிவிட்து என்று புகார். காப்பியா இது, சர்க்கரைத் தண்ணியா? அல்லது கழுநீரா? சாம்பாரில் இவ்வளவு புளிசேர்க்க எந்தச் சீமையில் கற்றுக் கொடுக் கிறார்களோ? உன்னைச் சாதம்தானே வடிக்கச் சொன்னேன். இப்படிக் கொழகொழ என்று கஞ்சி காய்ச்சச் சொன்னேனா? வீடு நடக்கச் சகிக்கவில்லை. காலெல்லாம் மண். தரித்திரம் தொலையக் கூடாது என்று தவம் இருக்கியோ? ராஜா மாதிரி (அதாவது நான்) பிள்ளைக்குத் தேடிப் பிடித்தேனே.. ஒரு மிகச் சின்ன விஷயத்துக்கு காற்றடித்து, பெரிது பண்ணி, அதைப் பல குரல்களில், தொனிகளில் மாற்றி மாற்றி ஒரு மணி நேரம் பேச என் அம்மாவைத் தவிர உலகத்தில் வேறு யாரால் முடியும்…? முடியாது.
அம்மா லட்சுமியை விட்டு விலக விலக நான் அம்மாவை விட்டு விலகியதாக இப்போது நினைக்கிறேன். லட்சுமியை அம்மா புறக்கணித்தது ராட்சஸத்தனம். லட்சுமியின் தவிப்பை என்னால் உணர முடிந்தது. தொடக்கத்தில் தொடர்ந்து பல மணி நேரங்கள் அம்மாவைப் பார்க்காமல் இருந்த படியால், லட்சுமி ‘அம்…மா’ என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தது. கால் மாற்றிக் கால் மாற்றி நின்று களைத்தது. முதலில் தீனி தின்ன மறுத்தது. என் மனைவி தீனி வைக்கப் போகும் போது, யாரோ போல் அவளைப் பார்த்து ‘உஸ்…’ என்று பெருமூச்சுவிட்டது. பிறகு அவளைப் பார்க்கும் போதெல்லாம் பின்னால் நகர ஆரம்பித்தது. முதுகை அடிக்கடிச் சிலிர்த்துக் கொண்டது. ஒழுங்காகச் சாப்பிடச் சில வாரங்கள் ஆயின. மிருகங்கள் இன்னொரு ஜீவனைச் சினேகித்து விட்ட பிறகு, அந்தச் சினேகிதத்தை மனிதர்களைப் போல மறுபரீசிலனை பண்ணுவது இல்லை. லட்சுமியின் துன்பம் இதுதான்.
லட்சுமியின் தோற்றமே மாறிப்போய் இருந்தது. பிள்ளைகள் பெற்றுக் குடும்பம் நடத்தும் நடு வயதுக்காரி மாதிரி அது இருந்தது. முகத்தில் முதலில் இருந்த பிள்ளைக்களை இல்லை. அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் குதிக்கும் கும்மாளம் இல்லை. அதன் நடப்பில் நிதானம் வந்தது. பேசத் தெரிந்த, உணர்ச்சியை வெளிக் காட்டும் மனுஷர்களிடம் சண்டை போடுவதல்லவோ நியாயம். இந்த அப்பாவியிடம் எதற்கு இவள் சண்டை போடுகிறாள் என்று இருக்கும்.
லட்சுமி சம்பந்தப்பட்ட முழு வேலையும் என் மனைவியைச் சேர்ந்ததாயிற்று. லட்சுமியின் இடமும், கொஞ்சம் வீட்டிலிருந்து தூரத்தில் உள்ள கொல்லைக் கொட்டகையில் மாறியது. அவ்வப் போது அம்மாவைப் பார்க்க நேர்ந்தால் கூப்பிடும். அம்மா திரும்பிக் கூடப் பார்க்காமல் வந்து விடுவாள்.
லட்சுமி இரண்டாம் கன்றை ஈன்ற பிறகு, அம்மா இதுவரை நாங்கள் பார்த்தறியா முகங்களை எங்களுக்குக் காட்டினாள். எப்பவோ எனக்குப் பின்னால் பிறந்து, அம்மை வார்த்து இறந்து போன என் ஐந்து வயதுச் சகோதரியை நினைத்துக் கொண்டு அழுதாள். குமுறிக் குமுறி, அது நேற்று நடந்த சமாசாரம் என்பது போல் அழுதாள். இவள் இறந்த தேதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து, பாவாடைச் சட்டைத் தைத்து, பொங்கல் இட்டுப் படையல் போட்டாள். இந்தப் பாவாடைச் சட்டைகளை எதிர் வீட்டுக் குழந்தைக்குத் தானம் செய்தாள். எங்கள் வீட்டுக்கு வரும் ஏழைப் பெண்களுக்கு, தன் புடவைகளை எடுத்துக் கொடுத்தாள். தாராளமாகப் பண உதவி செய்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக, என் மனைவி ஊரில் இல்லாத நேரங்களில், எனக்குத் தன் உடல் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் விருந்துக்குச் சமைப்பது போல் சமைத்தாள். அந்தக் கரிசனம் எனக்கு வேண்டியிருக்க வில்லை. என் மீதான பாசம் என் மனைவியின் மீதான பகையின் வேறு வடிவம்.
மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்யாவிட்டால் என்ன? லட்சுமி தான் ஏற்றுக் கொண்டதை எங்களுக்குத் திரும்பிக் கொடுக்கத் தான் செய்தது. என் குழந்தைகளுக்கும், எங்கள் தேவைகளுக்கும் அது பால் கொடுக்கத் தவறியதில்லை. நான் அறிந்து ஒருபொழுதும் பால் கறக்க வருபவர்களிடம் வம்பு செய்ததே இல்லை. கோனார் வராத நேரங்களில் வீட்டில் நாங்கள் யார் இருந்தாலும் கறப்போம். எங்கள் தேவைகளுக்கு மேல் நிற்கும் பாலை விற்றுக் காசாக்குவோம். காசு பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, புல்லுக்கு ஆனது.
அம்மாவுக்குக் காப்பி அவசியம். தினம் நான்கு முறையாவது குடிப்பாள். இரண்டாவது கன்று பிறந்த பிறகு லட்சுமியின் பாலை அம்மா சீண்டவே இல்லை. ஓட்டலிலிருந்து காபி வரவழைத்துக் குடித்தாள். அம்மாவை விட்டுப் பெரிதும் விலக, இதுவே எனக்குக் காரணமாயிருந்தது. அம்மா முகம் கோரமாகி, பார்க்கவே பயமாயிருந்தது.
அன்றைய சாயங்காலம் தரகர் இன்னோர் ஆளுடன் வந்துவிட்டார்.
மாட்டை விற்க வேண்டியது இல்லை என்று மதியத்திலிருந்தே அம்மாவுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவள் கேட்பதாய் இல்லை.
ஒரு கட்டத்தில் மாடு இங்கிருந்து போய் விடுவதே நல்லது என்று எனக்குப் பட்டது. லட்சுமி போன்றவர்கள் இருக்க வேண்டிய இடம் எங்கள் வீடு அல்ல என்று தோன்றியது.
தரகர் கயிற்றைப் பற்றிக்கொண்டு வெளியே வந்தார். கன்று தாயைப் பின் தொடர்ந்தது. இரண்டு புதியவர்கள் தம்மை எங்கோ அழைத்துச் செல்கிறார்கள் என்று கண்டு கொண்டதும் லட்சுமி என்னை, என் மனைவியை, என் குழந்தைகளை, ‘அம்மாவைப் பார்த்து அம்…மா’ ‘அம்…மா’ என்றது. லட்சுமி போன பல மணி நேரங்களுக்குப் பிறகும் அதன் கூப்பாடு எனக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.
அம்மா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அழுதாள். நிச்சயமாகச் செத்துப் போன தங்கைக்காக அல்ல இந்த அழுகை.
என்னதான் ஆனாலும் அம்மாவும் மனுஷிதானே.
– 1985
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒரு உறவு ஒரு பிரிவு
இரா.துரைமாணிக்கம்
September 30, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 30, 2026
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
