எனக்கும் தெரியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 103 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த போது அம்மா சொன்னாள். “அந்த அண்ணன் வீட்டுக்கு ஒரு நடை போய்ட்டு வந்துடேம்பா…” 

“எந்த அண்ணன்?” என்றான் மூர்த்தி. 

“அம்பது ரூபா யாரிட்டயோ கைமாத்து வாங்கி உனக்கு சொஜ்ஜியும் பஜ்ஜியும் பண்ணிப் போட்டாரே அந்த அண்ணன் வீட்டுக்குத்தான்!” 

“போயி…” 

“இப்பக் கல்யாணம் பண்ற நிலமையிலே இல்லே… நீங்க வேற இடம் பாத்துக்கலாம்’னு சொல்லிட்டு வந்துடு… பாவம் அந்தப் பொண்ணு. நம்மையே நினைச்சிட்டிருக்கும்…” 

“அதை நானே போய்ச் சொல்லணுமாம்மா. லெட்டர் போட்டா போதாதா…?” 

என்ன சங்கடம் இது என்று இருந்தது மூர்த்திக்கு. ஆனால் அம்மா சொன்னாள். 

“யாரோ புது உறவுன்னா கடிதம் போட்டுடலாம். அது நமக்குத் தூரத்து உறவாச்சேப்பா நான் போகலாமா? வீட்டுக்கு ஆம்பிளைன்னு நீதான் இருக்கே… சித்தே போய்ட்டு வந்துடு…” 

அம்மா முடித்துவிட்டாள். எப்போதும் அவள் பேச்சு முடிவாகத்தான் இருக்கும். கட்டளை மாதிரி தொனிக்காது. ஆனால் இதை நீ செய்யத்தான் வேண்டும் என்று தொனிக்கும். எல்லா அம்மாக்களும் இப்படித்தான் இருப்பார்களா என்ன, அந்தத் தூரத்துச் சொந்தக்கார சோமு மாமாவை, ‘யாரிட்டயோ அம்பது ரூபா கைமாத்து வாங்கி சொஜ்ஜி பஜ்ஜி பண்ணிப் போட்டவர்’ என்ற எவ்வளவு அலட்சியமாய்ப் பேசுகிறாள். ஆனால் ‘பாவம் அந்தப் பொண்ணு’ என்று வேறு அவர் மகளுக்கு இரக்கப் படுகிறாள். ‘பென்ஷனைத் தவிர வேறு யோக்யதை இல்லாத மனுஷன். இந்த வீட்டில் பெண் எடுத்தால், மாமனார் வீட்டுக்கு போகும்போது அரை மூட்டை அரிசி, பருப்பு, உப்பு, புளியோடு போவியாடா’ என்று அவரையும் என்னையும் வேறு குத்திக் காட்டுகிறாள். நமக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு நல்ல வரன் ஏதேனும் வந்து தட்டிப் போய்விடப் போகிறது என்றும் ஒரு தர்ம நினைவு வேறு. இதே அம்மா தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கையில் என்ன சொன்னாள்: ‘பிள்ளையை பெத்துட்டா பெண்ணோட வீட்டையே பேத்து எடுத்துக்கிட்டு போகலாம்னு நினைக்கறாங்கடா, அசுர ஜனங்கள்’ என்றாள். அதே அம்மா மாமியாராகும் போது என்ன சொல்கிறாள்: ‘பெரிய பெரிய இடங்கள்ளாம் ஐநூறு பவுன் போடறேன், ஆயிரம் பவுன் போடறேங்கறாங்க. காரு வாங்கித்தந்து, கல்யாணத்தையும் பண்ணி வைக்கிறதா சொல்றாங்க… அது போகட்டும்… சொந்தம் விட்டுடப்படாதுன்னு பார்க்கறேன். என்ன சொல்றீங்க…’ என்று போகும் இடங்களுக்கெல்லாம் பாறாங்கற் களைத் தூக்கிக் கொண்டு போகிறாள். 

மூர்த்தி, மனச்சங்கடத்தோடும் கொஞ்சம் அவமான உணர்ச்சி யோடும்தான் சுகுணா வீட்டுக் கதவைத் தட்டினான். அந்தப் பெண்ணிடம் அல்லது அவள் அப்பாவிடம் நேருக்கு நேராக அவர்கள் முகம் பார்த்து, ‘நான் சுகுணாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளமுடியாது’ என்று சொல்ல வேண்டும். மார்பு லேசாகப் படபடத்தது. மனசுக்குள் இருக்கும் ஓர் ஓரத்து ஈரம், கசிந்தது. கதவு திறப்பதற்குள் ஓடிப்போய்விடலாமா என்றுகூட ஒரு கணம் தோன்றியது. அதற்கு இடம் வைக்காமலேயே கதவு திறந்துவிட்டது. சுகுணாதான் நின்றிருந்தாள். 

கதவைத் திறந்ததும், குழல் வெளிச்சம் பளிரென்று பாய்ந்து வர, மூர்த்திக்குக் கண் கூசியது. 

‘வாங்க, வாங்க…?’ என்று கூறிவிட்டுக் கைகுவித்தாள் சுகுணா, “உள்ளே வாங்க… உட்காருங்க… அப்பா, இப்ப தான் கடைத்தெரு வரைக்கும் போயிருக்காங்க, வந்துருவாங்க. உள்ளே வாங்க சார்..” என்றாள் சுகுணா.. 

தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் மூர்த்தி. ஓர் ஒற்றை ஆள்பாய் விரித்த அளவுக்குச் சின்ன ஹால். இடது கைப் பக்கம் இருந்த ஒரு சின்ன அறைக்குள் நுழைந்தாள் சுகுணா. மூர்த்தியும் பின்தொடர்ந்தான். சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த கை வைத்த நாற்காலியைக் காட்டி “உட்காருங்க” என்றாள். 

அவன் உட்கார்ந்தான். அந்தச் சின்ன அறையை ஒட்டி உள் வாங்கியிருந்த சமையல் அறை தெரிந்தது. தட்டும் தம்ளர்களும் சுவரில் தொங்கின. சின்னக் கன்றுக் குட்டி மாதிரி மூலையில் ஒரு மேஜை. அதன் மேல் எம்பிராய்டரி சட்டை போட்ட டிரான் ஸிஸ்டர். ஒரு பாடகி முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். ஒரே ஒரு காலண்டரும், சோமு மாமாவும் அத்தையும் சுகுணாவும் இருக்கிற ஒரே ஒரு போட்டோவும் மட்டும் சுவரில் இருந்ததன. டி.வி. இன்னும் நுழையாத அந்த அறையில் ஏழ்மையின் முகம் பக்க வாட்டில் தெரியத்தான் செய்தது. ஆனால் அதையும் மீறி ஒரு நறுவிசும் பாந்தமும் ஒழுங்கும் வெளிப்படையாகத் தெரிந்தன. பெண் பார்க்க வந்த அந்தச் சடங்கின் போது மூர்த்தி இந்த அறையில்தான் அமர்ந்திருந்தான். ஆனால் அன்று தெரியாத பலவும் இன்று தெரிகிறதே. 

சுகுணா, அந்தச் சமையல் அறை நிலையில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தாள். ‘நீங்களும் உக்காருங்களேன்’ என்றான் மூர்த்தி. ஸ்டூலில் அவன் எதிரில் அமர்ந்தாள் அவள். 

முதன்முதலாக அவளைப் பார்ப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அன்று, வெற்றிலைத் தட்டுடன் ஒரு பிறைக்கீற்று மாதிரி சரேலென்று வந்து அவன் முன் தட்டை வைத்து, குனிந்தவாறு ஒரு நிமிஷம் நின்றுவிட்டுச் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டவள் அல்லவா அவள். பெண்களுக்கு அது ஒரு கோலம். மின்னல் மாதிரி. இன்று, மூன்றடி தூரத்தில் அவளை முழுமையாக இருத்தி வைத்துப் பார்ப்பதில் அவள் புதுசாகத் தெரிந்தாள். கஞ்சி முறப்போடு ஆகாய நிறத்தில் அவள் கட்டியிருந்த வாயில் சேலை அவளுக்கு எவ்வளவு பொருத்தமாக இருந்தது. அவள் குனிந்தவாறு கேட்டாள். 

“அம்மா வரலியா…?” 

ஊம்.. மூர்த்திக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. என்ன வென்று சொல்வது இவளிடம்? ‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியாது. அதைச் சொல்லத்தான் வந்தேன்’ என்று சொல்ல வேண்டும். அதைவிட, ஒரு வாளி நெருப்பை அவள் தலையில் கொட்டலாமே. 

‘வரலாம்னுதான் இருந்தாங்க… ஏனோ வேலை. மாமாவைப் பார்த்துப் பேசிட்டு வான்னு அனுப்பி வைச்சாங்க’ என்றான். 

அவள் தலையைக் கவிழ்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். மூன்றடி தூரத்தில் இருந்தது அந்த முகம். மழை பெய்து ஓய்ந்த பின் சாலை ஓரத்து மரங்கள் கொள்ளும் அந்த மலர்ச்சி கொண்ட முகம். இவளைச் சிவப்பு என்று சொல்ல முடியுமா? முடியாதுதான்; ஆரோக்கியமாக இருந்தாள். ஆரோக்கியம்தானே தலையாய அழகு எனில், இவள் அழகிதான். 

சுகுணா தரையைப் பார்த்தவாறு, சேலை முந்தானை முனையை, அவளை அறியாமல் பற்றி முடிச்சிட்டுப் பிரித்தும் விட்டவாறிருந்தாள். அவள் கைகள் இலேசாக நடுங்கியவாறிருந்தன. 

அவன் தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினான். 

“மாமா வந்ததும் அவர்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்…”

“வந்துடுவாங்க… இருங்க… இதோ வந்துட்டேன்…” என்றவாறு எழுந்து சமையல் உள்ளே சென்றாள். 

“நான் வரும்போதே காபி சாப்டுட்டுதான் வந்தேன்…” 

“பொய்…” 

“……”

“சாப்பிட்ட மாதிரி தெரியல்லே… உப்புமா பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் சாப்டுட்டுக் காபி சாப்பிடுங்க..” 

“வேணாமே…” 

“அம்மா சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி அனுப்பி னாங்களா?…’ 

“சேச்சே… அப்படியெல்லாம் இல்லே.. எதுக்கு சிரமம்னு தான்..” 

“சிரமம் என்ன? நான் எனக்கு பண்ணப் போறேன்… நான் ராத்திரியில் ‘ரொட்டி’ தான் சாப்பிடுவேன்… பரீட்சைக்குப் படிக் கிறேன்… சோறு சாப்பிட்டா தூக்கம் வருது… அதனால் அப்பாவுக்கு மட்டும்தான் சாப்பாடு. ஆங்… ஒண்ணு சொல்லணும்.. அன்னைக்கு நீங்க சாப்பிட்ட பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் நான் பண்ணலைங்க… எதிர் வீட்டு அத்தைதான் பண்ணாங்க… ரியலா, நான் நல்லா சமைப்பேன்…சாப்பிட்டுப் பாத்து சர்டிபிகேட் கொடுங்க…’ என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

“என்ன படிக்கிறீங்க…” என்று கொஞ்சம் சத்தம் போட்டு மூர்த்தி கேட்டான். அவள் உள்ளிருந்தபடியே சொன்னாள்: 

“பி.ஏ. கரெஸ்பாண்டென்ஸ்ல பண்றேன்.” 

சுகுணாவின் பேச்சில் சிரிப்புகள் பூத்துச் சொரிந்தன. வாக்கியங் களில் முற்றுப்புள்ளிகள் அவளிடம் சிரிப்பாய் முகிழ்த்தன. உற்சாகமும் சந்தோஷமும் வார்த்தைகளில் ஒலிகளாய்க் குமிழிட்டன. 

“ஐயோ அம்மா சொல்லி அனுப்பியதை நான் எப்படி உன்னிடம் சொல்வேன்…” என்று அரற்றியது மூர்த்தியின் மனம். 

உள்ளிருந்து வெங்காயம் வதக்கும் மணம் வந்தது. கூடவே கொளுத்திய பத்தியோடு சுகுணா வெளிவந்து, மேஜையின் மேல் இருந்த பத்திச் சொருகியில் அதைப் பொருத்தினாள். 

“எதுக்கு பத்தி?” 

“சமையல் வாசனை இங்கு வருது. உங்களுக்கு அது பிடிக்குமோ என்னமோ… தோ ஆயிட்டது. ரெண்டு நிமிஷம்.” 

மீண்டும் அவள் உள்ளே நுழைந்து கொண்டாள். பத்தி அடக்கமான, ரஞ்சிதமான வாசனையாய்ப் புகைத்தது. அவன் கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அந்தப் பத்திகள் புகையும் இடத்தில் விழித்திருக்க ஏனோ அவனால் ஆவதில்லை. ஏதோ ஒரு விக்கிரகத்தின் சந்நிதியில், நுரைத்துச் சுழித்து ஓடும் ஆற்றங்கரையில், நிற்பது போல் ஓர் உணர்வு, அவனை ஆட்கொண்டு விடும். 

“சாரி” என்ற குரல் எங்கோ தொலை தூரத்தில் கேட்டது.

அவன் மீண்டான். 

அவனுக்கு முன் ஸ்டூலின் மேல் தட்டில் உப்புமாவும், காபியும் இருந்தன. ஒரு வில்லை எடுத்து சாப்பிட்டான். சாப்பிடலாமா என்று தோன்றியது. ஏன் அதனால் என்ன என்றும் தோன்றியது. அவனுக்குள் நடக்கும் போராட்டத்தை அவள் அறிந்து கொண் டாள். மனிதர்களின் மனசை முகத்தில் வாசிக்கத் தெரியாதவர்கள், வார்த்தைகளால் மட்டும் தெரிந்து கொண்டுவிடப் போவதில்லையே. 

“எப்படி இருக்கு.” 

“பிரமாதம்…” 

“கொஞ்சம் அதிகம்.” 

“எது?” 

“புகழ்ச்சி. நல்லா இருக்கு என்கிறதுதான் பொருந்தும். பாவம்’னு நினைக்கிறீங்க…அதான் கூடுதலா சொல்றீங்க…” 

“சேச்சே… அப்படியெல்லாம் இல்ல…” 

“சாப்பிடுங்க..” என்று விட்டு அவன்முன் தரையில், சுவரில் சாய்ந்து பாதம் தெரியாமல் அமர்ந்தாள். எட்டிப் பார்த்த, மருதாணி பூசிய விரல்கள் சட்டெனத் தெரிந்த ஒரு பாதத்தையும் சேலையால் மூடிக் கொண்டாள். அப்புறம் சொன்னாள்: 

“உங்க முடிவு என்ன ஆனாலும் எனக்கு வருத்தம் இருக்காது. உங்க வசதிக்கு, சொந்தம் என்கிற ஒரே காரணத்துக்காக இங்க பெண் பார்க்க வந்ததே அப்பாவுக்கு சந்தோஷம் தான். உங்க உத்தியோகத்துக்கு உங்க அம்மா எதிர்பார்க்கிற அளவுக்குச் சீர் பண்ண நிறைய பேர் இருப்பாங்க… இல்லீங்களா..” அவள் அவனைப் பார்த்தாள். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தொண்டையில் அப்படியே நின்றது அவனுக்கு. 

“உங்க எதிர்காலம், உங்க வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் மிஸ்டர் மூர்த்தி. அதை உத்தேசிச்சுதான் எந்த முடிவையும் எடுக்க ணும்…” குனிந்திருந்தவள் நிமிர்ந்து அவன் விழிகளைச் சந்தித்து விட்டுச் சொன்னாள்: 

“என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னாலும் நான் வருத்தப்பட மாட்டேன் மிஸ்டர் மூர்த்தி. நல்ல வேளை, அப்பா இல்லை, உங்க கிட்டே பேசணும்னு தோணிச்சு. சொல்ல வேண்டி யதை சொல்லிடறேன். அன்னைக்கு நீங்க என்னை பெண் பார்க்க வந்தப்போ, நீங்கதான் கடைசின்னு எப்படியோ எனக்குத் தோணிச்சு. வெற்றிலை தட்டத்தை இனி தூக்கிக்கிட்டு, தரையைப் பார்த்து நிக்கற அவஸ்தை இன்னியோட விட்டுடுச்சுன்னு நினைச்சுட்டேன். உங்களால் புரிஞ்சிக்க முடியும். ஒவ்வொருத்தர் முன்னாடியும் கண் எச்சில் பட்டு, போறப்போ ஏதோ ஒரு கால் மோதிரம் மாதிரி, ஒரு செருப்பு மாதிரி இது சரிப்படாது. வேறு பார்ப்போம்னு சொல்லிட்டுப் போறதைக் கேக்கும் போதெல்லாம், அவமானத்துல என் உடம்பு குன்றிப் போறது மிஸ்டர் மூர்த்தி. சீ என்னஜென்மம் இதுன்னு தோணுது. ஏதோ ஒரு வேலை இருக்கு. மாசா மாசம் சம்பளம் வருது… நிம்மதியா இருக்கலாமேன்னு நினைச்சா, இந்த அப்பா கேட்டாத்தானே. காபி நல்லா இருக்கா சார்… பொய் சொல்றீங்க ஆல் ரைட்… ஆல்ரைட்… தேங்க்ஸ்.” 

சிரிக்கையில், கண்ணில் கரையோரம் நின்ற ஈரம் பளபளத்தது. மீண்டும் சுகுணா சொன்னாள்: 

“எனக்கும் அன்பு செலுத்த தெரியுங்க… எனக்கும் ஒரு நல்ல மனைவியா, ஒரு நல்ல தாயா இருக்கத் தெரியுங்க… எங்க அப்பா கிட்டே பணம் இல்லாம இருக்கலாம். அதனால் என்கிட்ட அன்பு இல்லாமப் போயிடுமா குணம் இல்லாமே போயிடுமா…” 

அவள் அவனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள், அடக்கி யும், அவளையும் மீறி கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அடக்கமாக மையிட்ட கண்கள் சிவந்து போயின. 

“சுகுணா…” என்றுதான் சொல்ல முடிந்தது அவனால். பேச வேண்டும் என்று பல வார்த்தைகள் மனதுக்குள் தோன்றின. பேசினால்தானா? தன்னை நேசிக்கிறவளோடு தன்னை இணைத்துக் கொள்வதல்லவா சகல இன்பங்களுக்கும் ஊற்றுக்கண். கடிகாரத்தின் நாக்கைப் போல அசைந்து கொண்டிருந்த அவன் மனம் நிலை கொண்டது. 

“சாரி… உங்களை சிரமப்படுத்திட்டேன்…” என்றாள் சுகுணா கண்களைத் துடைத்துக் கொண்டு. 

வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. 

சோமு மாமாதான். பால் ஐஸ் மாதிரி வெளுத்த தலையோடு உள்ளே வந்தார். மூர்த்தி “வணக்கம்” என்று கை குவித்து எழுந்து நின்றான். 

“அடடா நீங்களா… வாங்க… வாங்க… சுகுணா, சாருக்குக் காபி கொடுத்தியா… கடைத் தெருவிலே கொஞ்சம் வேலை…” 

அவர் அவனை எதிர்பார்க்காத திகைப்பும் பரபரப்பும் துல்லிய மாக எதிர்ப்பட்டன. அவர் அமர்ந்ததும் அவன் சொன்னான்: 

‘எல்லாம் ஆச்சு… வெறும் காபி மட்டும் இல்லை. உப்புமாவும் சாப்பிட்டேன். அம்மா உங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னாங்க… 

“சொல்லுங்க…” 

தவிப்புடன் சொன்னார் அவர். சுகுணா சமையல் உள்ளுக்குள் நுழைந்து கொண்டாள். 

“எனக்கு சுகுணாவைப் பிடிச்சிருக்கு சார். கல்யாணத்துக்கு நாள் பார்க்க வேண்டியதெல்லாம் இனி உங்க பொறுப்பு…” 

“அப்படியா… ரொம்ப சந்தோஷம்… சந்தோஷம்…” அவர் அவன் கையைப் பிடித்துக் கொண்டார். அழுது விடுபவர் போல் இருந்தது. 

அவன் எழுந்து வெளியே வந்தான். அவரும் எழுந்து வாசல் வரை அவனுடன் வந்தார். 

“ஒரு நல்ல நாள் பார்த்து அம்மாவை நான் வந்து காணறேன்னு சொல்லுங்க…” என்றார். 

“சரி.” 

அவன் திரும்பி வாசல் கதவைப் பார்த்தான். சுகுணா நின்றி ருந்தாள். விழிகள் கலங்கியிருந்தன அவளுக்கு. உதடுகள் துடிப்பது தெரிந்தது. ஆயிரம் வார்த்தைகளை அவள் பேசி அவன் புரிந்து கொண்டான் அந்தக்கணத்தில். 

இருபத்தாறு ஆண்டு வாழ்வில், அந்தக் கணம் வரை அனுபவித்தறியா ஆழ்ந்த மனநிறைவோடு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான் மூர்த்தி. 

– 1985

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *