மனப்புண்
கதையாசிரியர்: சி.தில்லைநாதன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி 
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 66
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதற்பரிசு பெற்றகதை.
‘அங்கயற் கண்ணி’ என்று தமிழ்ச்சங்கத் தலைவர் அறிமுகப் படுத்தியதற்கேற்ப அவள் கண்கள் அழகாகத்தான் இருந்தன. ஆனால் மொத்தத்தில் அவள் ஒன்றும் அதிரூபவதியாயிருக்க வில்லையே. புதியமாணவரின் விவாதம் நடந்தது. ‘பெண்களுக்குச் சம உரிமை வேண்டும்’ என்று அவள் பேசினாள். அவள் எழுந்த போது ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரியநிறம்’ என்று நான் முணு முணுத்தேனோ இல்லையோ, என் நண்பரெல்லாம் கொல்லென்று சிரித்தனர். கறுப்பாய் இருந்தும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லையே, என்னைமட்டும் ஒருபார்வை பார்த்தாள். அந்தப்பார்வைமட்டும் ஏன் அப்படி இருக்கவேண்டும்? என்னை யும் மறந்து அவள் பேச்சில் ஈடுபட்டேன். பழையமாணவரின் கூக்குரலுக்கிடையேயும் அவள் குயிலோசை கலீரென ஒலித்தது. அமுதமாயிருந்தது அவள் பேச்சு குரலில் மட்டுமல்ல, பொருளிலும்.
“வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்துடுவோம்”.
இதை அவள் பாடிய போது நான் உணர்ச்சிவசப்பட்டேன். பாரதியின் கவிதைகளுக்கு அத்தனை பெரும்சக்தி உண்டென்பதை அப் போதே உணர்ந்தேன். பாரதி கனவில்கண்ட புதுமைப்பெண் ணையும், அவளது கம்பீரமான தோற்றத்தையும் குரலையும் நான் நினைவில் சந்தித்தேன்.
என்ன விசித்திரமானது இந்த மனம்? அது ஏன் இரவெல் லாம் அவளைப்பற்றியே எண்ணவேண்டும்?. அவள்யார்? எப்படிப் பட்டவள்? அவளைப்பற்றி நான் ஏன் நினைக்கவேண்டும்? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. என்மனம் எதையோ எண்ணித் துடித்தது. அட பொல்லாத மனம் என்னையும் மீறி அப்படியா சுழன்றடிக்க வேண்டும். அவள்யாரோ போகிறாள். இந்த மனம் ஏன் இப்படி அலையவேண்டும்? என்மீது எனக்கே ஆத்திரமாய் வந்தது.
மறுநாள் அவளைச் சந்தித்தபோது அத்தனை துணிவு எனக்கு எங்கிருந்து வந்ததோ? ஏதோ சொல்விட்டேன்.
“நேற்று மிகவும் நன்றாகப் பேசினீர்களே”
“ஆங்! ரொம்தத் தாங்ஸ். உங்கள் பேச்சும் மிக நன்றாயிருந்தது.” அவள் பேச்சில் ஒரு கவர்ச்சி கூடியே காணப்பட்டது. அந்தக்கண்கள் என்னை ஏன் அப்படிப் பார்த்தன?. அவள் என்னைப் பாராட்டியது ஏன் எனக்கு அத்தனை குதூகலத்தைத் தரவேண்டும்?. எத்தனையோ நண்பர்கள் வேறு பாராட்டினார்களே!
‘நான் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதில்லை. அதை நானே சிருஷ்டித்துக்கொள்வேன் என்றானாம் நெப்போலியன். நானும் அவனுக்குச் சளைக்காமல் அவளோடு பேசச் சந்தர்ப்பங்களைச் சிருஷ்டித்துக் கொண்டேன். ஒரு நாளைக்காவது அவளைக் காணாவிட்டால் எனக்குப் பொழுதே போகாது. அவளுடைய அழகு விழிகளையும் புன்னகை தவழும் இதழ்களையும் என்னால் மறக்கமுடிகிறதா? விரிவுரைகளுக்குப் போகும்போதும் வரும்போதும், வீதியிலே அத்தனை அழகான பெண்கள் சென்ற போதிலும் என் கண்கள் மட்டும் ஏன் அவளையே தேடின? அவள் என்னைப்பார்த்து நகைத்துவிட்டால் போதும், அன்றைய விரிவுரைகளை ஒருசொற்கூடத் தவறவிடாமல் எழுதிவிடுவேன். ஒரு நாள் என்னுடைய தமிழ்ப்பாடக் குறிப்புக்களை அவள் கேட்டாள். ஆஹா! அமெரிக்காவைக் கண்டபோது காலம்பஸ் அவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பானா?
இப்படி ஒரு பைத்தியம் வரும்போது எத்தனையோ பைத்தியக் கார எண்ணங்கள் தோன்றுமாம். காசு சுண்டிப் பார்ப்பேன். சீட்டுப் போட்டுப் பார்ப்பேன். எல்லாம் அவளை அடையலாமா என்றுதான். என் ஆசைக்கு விரோதமாக அதில் விழுந்தபோ தெல்லாம் நானடைந்த வேதனை …. ? என் எண்ணக்கனவுகள் எத்தனை? அவள் பின்னலை விளையாட்டாக இழுப்பேன். அவள் கோபமாக நடிப்பாள். நான் குனிந்து அவள் கண்களுக்குள் ஊதுவேன். அவள் கண்களைப் பொத்திக்கொண்டு சிணுங்கு வாள். நான் அழவேண்டாமென்று மன்றாடுவேன். அவள் திடீரென முத்துப்பல்வரிசை தெரியச் சிரிப்பாள். ஆஹா! எத்தனை மகிழ்ச்சி? எல்லாம் கனவு. பகற்கனவு.
எத்தனையோ இரவுகள் நான் கண்விழித்து ‘அவளை ஏன் இப்படி நேசிக்கவேண்டும்’ என்ற காரணத்தை அறிய மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். அவள் அபார அழகியாயிருந் தாளா? அப்படி ஒன்றும் பிரமாதமாயிருக்கவில்லையே. சென்ற பிறவியில் அவளுக்கும் எனக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்க வேண்டும். அவள் என்னை எப்படி நினைக்கிறாளோ?. ஓர் ஆவுக்கு இருகொம்பு முளைப்பதுபோல் இருவர்க்குக்காதல் ஒருமிக்க வளரு மென்று பொருளிலக்கணம் கூறுகிறதே. அப்படியானால் அவளும் என்னைப்போல் துடித்திருக்கவேண்டுமே. யாருக்குத் தெரியும் ? அவள் அத்தனை ஆசையோடு என்னிடம் பேசினாளே. ஒருநாள் “உங்களைக் காணவில்லையானால் எனக்கு நிம்மதியேயில்லை” என்று நான் சொல்லிவிட்டபோது அவள் ஏன் அப்படித் தலைகுனிந்து நகைத்திருக்கவேண்டும்? ‘உங்களுக்கு அப்படி யில்லையா என்று மீண்டும் நான் கேட்டபோது அவள் தாழ்ந்த தலையோடு கடைக்கண்ணை என்பக்கம் உயர்த்தி அப்படி நகைத்ததன் அர்த்தம் தான் என்ன?
ஓர் இருதயத்தை இரண்டாக உடைத்து இறைவன் ஒரு ஆணாகவும் ஒரு பெண்ணாகவும் படைப்பானாம். அவை ஒன்றை ஒன்று அடையத் துடிப்பதே காதலாம், அப்படியென்றால் அவளுடைய மனம் என்னை அடையத்துடித்திருக்குமா? இல்லாவிட்டால் என் மனம்மட்டும் ஏன் அத்தனை துடிப்புத் துடித்திருக்க வேண்டும்?
அவளை ஏன் விரும்பினேன் என்று எனக்குத்தெரியவில்லை. அவளுடைய ஒவ்வொரு செயலும் எனக்குப் பிடித்தது. ஒருநாள் என் போக்கைக் கண்டித்து என் நண்பனொருவன் பேசியபோது எத்தனை ஆத்திரப்பட்டேன்? அவளிடம் நான் அப்படி நம்பிக்கை வைத்துப்பழகியது அவனுக்குப் பிடிக்கவில்லை. பெண்கள் சும்மா சிரித்துப் பேசுவார்கள், நம்பக்கூடாது’ என்றான். அவளு டைய செயல்கள் எனக்குப் பிடித்தனவென்று அவனுக்கும் பிடிக்கவேண்டுமென்றில்லையே என் உற்ற நண்பனாயிருந்த அவனுடன் அன்றைக்குப்பின் நான் பேசவேயில்லை.
எங்கள் நட்பும் பேச்சும் மூன்று வருடங்கள் நம்பிக்கையோடு கழிந்தன. பரீட்சை முடிந்தது. “இன்று அவள் போய்விடுவாள். எதிர்காலத் திட்டம் என்ன?’ என்று மனம் ஏங்கியது. பிரியுமுன் அவளைச்சந்திக்கத் துடித்தேன். சந்தித்து எதெல்லாமோபேச விரும்பினேன். நினைத்ததை வெளியாகச் சொல்லமுடியாத கோழையாகி விடுவேனோ என்ற அச்சம். கடைசிச் சந்தர்ப்பம்! புகைவண்டி நிலையத்தில் சந்தித்தேன். என்னைக் கண்டதும் மலர்ந்த முகத்தோடு வந்து பேசினாள், அப்போது அந்தப் பாழாய்ப்போன தோழிகள் வேறு பட்டாளம் போல்வந்து சேர்ந்து விடவேண்டுமா? வண்டி வந்தது. வண்டி நகரும் போது என் விழிகளும் அவள் விழிகளும் ஏன் அப்படி ஒன்றை ஒன்று விழுங்க முயன்றன? இரண்டுதுளிக்கண்ணீர் என் பார்வையை மறைத்தன. அவள் சேலைத்தலைப்பால் சிவந்த கண்களைத் துடைத்துக் கொண்டாள். இதையெல்லாம் பொருட்படுத்தாது அந்த இதயமற்ற வண்டி ஓடிற்று, நான் தனியாய் விடப்பட்டு நின்றேன்.
என் எதிர்காலம் என்னாகப் போகிறது? அவளை மட்டும் அடைய முடியா மல் போனால் என் வாழ்வில் மகிழ்வேது? அமைதியேது ? வாழ்வுதான் ஏது? அவளுக்கு ஒரு கடிதம் வரைவதென முடிவுசெய்தேன். வரைந்தேன், என் இதயத்து உணர்ச்சிகளையெல்லாம் வடிகட்டி வரைந்தேன். அவளுக் நம்பிக்கையேற்படும்படி உருக்கமாக விரிவாக வரைந்தேன்.
பதிலுக்காக எத்தனையோ ஆவலோடு காத்துக் கிடந்தேன். எப்படி எழுதுவாளோ? அவள் மட்டும் என் எண்ணத்துக்குச் சம்மதித்து எழுதிவிட்டால்…? எவராலும். எந்தச் சக்தியாலும் எமது இன்பவாழ்வைத் தடை செய்யமுடியுமா? எத்தனை துன்பம் எதிர்வந்தாலும் அவளை நான் கைவிடமாட்டேன், கைவிடமுடியாது. அப்படி என் எண்ணம் பலித்துவிட்டால் ? அப்பப்பா, நினைக் கவே எத்தனை குதூகலம். இருப்பே கொள்ளவில்லை. நாம் இந்த உலகத்துக்கே இன்ப வாழ்வென்றால் என்ன? இல்லற மென்பதென்ன? ஒத்தவாழ்வு எத்தனை இனியது? என்றெல் லாம் பறைசாற்றி விடமாட்டோமா? அவள் எத்தனை உரிமை யோடு என்னிடம் போராடுவாள், ஊடல் கொள்ளுவாள், துடுக் காகப் பேசுவாள். நான் சரண்புகுந்து விடமாட்டேனா? என்மீது எத்தனை அன்பு காட்டப்போகிறாள்? நான் மட்டும் என்னவாம்? அவளது முகம் வாடினால் என் நெஞ்சமே குருதி கொட்டாதா ?
ஐயோ மனமே! எத்தனை இன்பக்கோட்டைகள் கட்டினாய்?
நாட்கணக்காய், வாரக்கணக்காய் காத்திருந்தேன் அவள் பதிலுக்காக. நான் கடிதமெழுதி வாரங்கள் நான்காகிவிட்டன. என் உள்ளத்தில் அச்சம் மேலிட்டது. அந்தஸ்து, குடும்ப, குல வேறுபாடு ஏதாவது எம் காதலைத் தீர்த்துவிடுமா? நாம் எல்லோரும் மனிதர்கள் தானே. அவள் ஏதோ பார்ப்பனர் பரம்பரையாம்.
அன்று எனக்கு ஒரு திருமண அழைப்பும் ஒரு கடிதமும் வந்தன. திருமண அழைப்பை மூலையிலே வீசிவிட்டுக் கடிதத்தை ஆவலோடு பிரித்தேன், “அன்புள்ள மகனுக்கு…” சா! அப்பாவா அதை எழுதியிருக்க வேண்டும்? எனக்கு ஏமாற்ற மாகவும் துக்கமாகவும் இருந்தது என்ன செய்வது ? படித்துத் தானே தீரவேண்டும். படித்தேன். கலியாணம் பேசுகிறேன், பெண்பார்த்தேன், சாதகங்கள் பொருத்தம், நாள் பார்த்தேன், அந்தஸ்த்துக்குத் தகுந்த இடம், எழுபதாயிரம் சீதனம், வீடு ஒன்று வசதியோடு என்றெல்லாம் என்னவென்னவோ கிறுக்கியிருந்தார். எனக்கு ஆத்திரமாத்திரமாய் வந்து, கடிதத்தைக் கிழித்துக் கூடையிலே வீசினேன். யாழ்ப்பாணத்தாரே இப்படித் தான். ஒருவன் ஒரு உத்தியோகம் பெற்றுவிட்டால் போதும். ஆயிரம் கலியாணம் பேசிவிடுவார்கள். பெண்பார்த்தாராம். யாருக்குவேண்டும் இந்தச் சாதகத்துக்கேற்ற பெண்? அந்தஸ்த்தாம். கல்யாணம் செய்யும் போதும் அந்தஸ்த்து, சீ.இப்படியா தமிழர் வாழவேண்டும்? அங்கயற்கண்ணி என்னை விரும்பினால் என்ன செய்யப் போகிறது இந்த அந்தஸ்த்து? இருமனம் ஒரு மித்தால் அந்தஸ்த்தும் வேற்றுமையும் என்ன வெட்டிப் பிடுங்கி விடுமா?. எழுபதாயிரம் சீதனமாம். எந்த முட்டாளையாவது பேடியையாவது ஏமாற்றுவதுதானே. வீடாம் வசதியாம். என்ன வசதி எனக்குத் தரப்போகிறார்கள் இவர்கள்? எரிச்சலால் என் மனம் பொருமியது.
சலிப்போடு அந்தச் திருமண அழைப்பிதழை எடுத்துப் பிரித்தேன். உலகமே சுழன்றது. வாய்விட்டுக் கதறிவிட்டேன். எ என் நெஞ்சம் வேகி எரிந்தது. மனம் குமுறி அழுதது. என் மனதி லிருந்த ஆசைக் கனவின் நம்பிக்கைகளை எல்லாம் சிதறடித்தது போல என் குமுறல்களையும் அழுத்திவிட அந்தத் திருமண அழைப்பிதழால் முடியவில்லை. அது என்னைப் பார்த்துச் சிரித்தது. “திருநிறைச்செல்வன் தியாகராசாவிற்கும் திருநிறைச்செல்வி அங்கயற்கண்ணிக்கும் திருமணம் நடாத்தப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராய்ச் சமூகந்தந்து மணமக்களை ஆசீர்வதித்துச் சபையைச் சிறப்பித்தேகுமாறு வேண்டுகின்றோம்.
ஆசீர் வதிப்பதாவது, மண்ணாங்கட்டி. இந்தப் பாழ்பட்ட உலகத்தையே எரித்து விட வேண்டும் என என் உள்ளம் துடித் தது. உலகோர் அனைவருமே குதூகலமாக வாழ்வது போலவும் நான் மட்டும் ஒரு நடைப்பிணமாவது போலவும் உணர்ந்ததேன் காதலினால் வெந்துகொண்டிருந்த என் இதயம் வெடித்து இரத்தம் பீறிட்டு ஒடுவதுபோலிருந்தது. நான் சுய நினைவு பெறச் சில நாட்களாயின. அப்போதும் என் இதயப்புண் ஆறவில்லை. இதயத்தில் சீழ்பிடித்து ஊனம் வடிந்துகொண்டே இருந்தது. அதை இங்கிருந்து ஆற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். மலாயாவிலிருந்த நண்பனொருவனுக்குக்கடிதம் எழுதிவிட்டு அங்கு புறப்பட்டேன். அங்கு சேர்ந்த சில மாதங் களில் ஐரோப் பாவில் யுத்தம் ஆரம்பித்துவிட்டது, பின்னர் கிழக்கில்…!
2
இருபது ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்குத் திரும்பி னேன். இந்த இருபது ஆண்டுகளில் உலகிலே எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. என் வாழ்வில் நடைபெற்ற மாற்றங்களும் கொஞ்சமல்ல.
அங்கயற்கண்ணியை மறந்து விடுவதற்கு என் நண்பன் வழிகூறினான். அவன் சொன்ன வழியின்படி சாந்தினியைத் திருமணம் செய்து கொண்டேன். அங்கயற்கண்ணி இடம்பெற்ற என் உள்ளத்தில் வேறு எந்தப் பெண்ணும் அதே அளவு இடத்தைப் பெற்றுவிமுடடியாது. அவளை இழ்ந்தபோது எனக்கு எல்லாப் பெண்களும் ஒரேமாதிரியே இருந்தனர். சாந்தினி அடக் கமான குடும்பப்பெண். அவளோடு அமைதியான குடும்பம் நடாத்தினேன். என்னைக் கணவனாகப்பெற்றதில் அவள் பெருமைப்பட்டாள். ஒரு பெண்ணிற்குத் தாயாகியதில் கூட அவளுக்குப் பெருமைதான். என் மகளுக்குக் கொழும்பு நகரத் தைப் பார்க்கவே புதுமையாக இருக்கிறது. அதோ பிளாட் பாரத்தில் உலாவிக்கொண்டு நிற்கிறாள். அங்கயற்கண்ணியை அன்று நான் வழியனுப்பவந்த அதே பிளாட்பாரம். அன்று அங்கயற்கண்ணி உடுத்திருந்ததுபோன்ற மஞ்சள் சேலையே இன்று என்மகள் கட்டியிருக்கிறாள். எனக்கு மிகப்பிடித்தமான சேலை அதுதான். அழகான வாலிபரைத்தேடும் வயதல்லவா? வேடிக்கைபார்ப்பதாக அவள் எனக்கு நடித்துக் காட்டுகிறாள்.
நான்கூட இந்த இருபது வருடங்கள் சாந்தினியின் கணவனாக நடித்தவன் தானே.அவள் அவள் என்றுமே என்னைச் சந்தேகித்தது கிடையாது. என் இதயப்புண் சில வருடங்களில் ஓரளவு ஆறியிருந்தது உண்மையே. ஆயினும் அதனால் ஏற்பட்ட வடு அதை ஏவராலுமே நிரவிவிட முடியாது. இலங்கைக்கு ஒரு தடவையாவது போகவேண்டும் என்று சாந்தினி எத்தனை தடவை அடம்பிடித்தாள். நான் ஏதேதோ சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்து வந்தேன். பதினெட்டு வருடங்களை இப்படிக் கழித்தேன். இனிமேலும் ஏமாற்ற முடியாத நிலையிலேயே புறப்பட ஒப்புக் கொண்டேன்.
கப்பல் ஏறியதுமே ஆறிப்போயிருந்த வடுவின் ஓரத்தில் புண் புரைய ஆரம்பித்தது. சிறிதாகச் சீழ் வடியவும் ஆரம்பித்தது. இதனை நான் எதிர்பார்த்தே இத்தனை காலமும் கடத்தி வந்தேன். இதைச் சாந்தினிக்கு எப்படி விளக்க முடியும்?
மனப்புண்ணினாலும், உளப் போராட்டத்தாலும் இருபது ஆண்டுகளில் என் உடலிலேயே எவ்வளவு மாற்றம். மயிர் நரைத்து விட்டது. உடலெல்லாம் சோர்ந்து, முகமெல்லாம் எலும்புகள் பீறிடத்தொடங்கிவிட்டன. அங்கயற்கண்ணி என்னைப்பார்த்தால் என்ன நினைப்பாள்? என்னை அடையாளம் கண்டு கொள்வாளா? அவள்தான் இப்பொழுது எப்படி இருப்பாள்? காலம் அவளின் இளமையையும் கண்களின் எழிலையும் எப்படியெல்லாம சிதைத் திருக்கும்? இன்று என் மகள் இருப்பதுபோல் அல்லவா அன்று அவள் இருந்தாள். என் மகளிற்கு அவளின் பெயரைத்தானே குறுகத் தறித்துக் கயற்கண்ணி என்று வைத்தேன். சாந்தினிக்கு அந்தப்பெயர் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை 1 நான் அந்தப் பெயர் தான் சூட்டவேண்டுமென இறுகப் பிடித்தேன். அவள் எனக்காக ஒப்புக் கொண்டாள். இப்பெயர் சூட்டியதால் எனக்குத் தொல்லை கூட இருந்தது. எவ்வேளையிலும் கயற்கண்ணியைப் பெயர் சொல்லி அழைத்ததும் அங்கயற்கண்ணியின் ஞாபகம் வந்துவிடும் எப்படித்தான் இருந்தபோதிலும் என் காதல் நினைவாக அவளின் பெயரைச் சூட்டியதில் ஒருவகைத் திருப்தி. அங்கயற்கண்ணியை ஒரு காலத்தில் காண நேர்ந்தால் அதை அவளுக்குச் சொல்லிக் காட்டவேண்டுமென எண்ணியிருந்தேன். அவளைக் காண்பதற் காக அவள் வீட்டிற்குச் செல்லலாமா? அவள் கணவன் சந்தேகிப்பானா? இந்த வயதிலுமா?
பிளாட்பாரத்தில் வண்டி வந்து நின்றது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். வண்டி இவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடிவிடும் என்றபயமா? வண்டி புறப்பட அரைமணி நேரம் இருந்தது.
பொருட்களை ஏற்றிவிட்டுச் சாந்தினியையும் ஏறச் செய்தேன். கயற்கண்ணியைக் காணவில்லை. பட்டணங்களில் பழகிய பெண்களே இப்படித்தான். பத்து நிமிடங்கள் முன்னதாகமட்டும் புகைவண்டி நிலையத்திற்குப் போனால் போதாதா என்று ஓட்டலில் வந்தேன்.இப்போது கேட்டாள். நானே அவசரப்பட்டு அழைத்து வந்தேன். இப்போது வண்டி புறப்படும்போதுதான் வரு வாள் போல் இருக்கிறது. பிளாட்பாரத்தில் என்ன வேடிக்கை பார்க்கிறாள்? யாரோடாவது பேசிக்கொண்டு நிற்கிறாளா? இருப்புக்கொள்ளாது எட்டிப் பார்த்தேன், அடுத்த பெட்டியின் எதிரே யாரோ ஒரு இளைஞனோடு அவள் பேசிக்கொண்டு நின்றாள். என்ன துணிச்சல்?
அவளை அழைத்து வருவதற்காக இறங்கி நடந்தேன். என்னைக்கண்டதும் அவள் சிறிது திடுக்குற்றாள். பின்னர் சமாளித்துக் கொண்டே “இவர்தான் என் அப்பா” என்று அந்த இளைஞனுக்கு அறிமுகப்படுத்தினாள்.
“அப்பா, இவர் மிஸ்டர் கண்ணனாம். உங்களுடைய பெயரேதான். இவர் எங்க அம்மாவுடைய கிராமமேதானாம். ஆனால் எங்கள் ஒருவரையும் தெரியாது என்று சொல்லுகிறார். இவரும் இன்று இதே வண்டியில் தாயாருடன் பயணம்செய்கிறார்.”
“அப்படியா? ரொம்ப நல்லது. உங்கம்மா இருபத்தைந்து வருடங்களின் பின்னர் வருகிறா. அவருக்கு எப்படித் தெரியும்?”
என் பெயரைக்கொண்ட அந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தேன். எங்கோ பார்த்த முகம்போலத்தோன்றியது.
“கண்ணன்” என்று பெட்டியிலிருந்து ஒருகுரல் வந்தது. எங்கோ பழக்கப்பட்டகுரல். முற் பிறவியிலா? நான் திரும்பிப் பார்த்தேன். அவனும் திரும்பிப் பார்த்தான் வண்டியின் யன்னலூடாக ஒரு முகம் தெரிந்தது.
“என்னம்மா என்று அந்த இளைஞன் அழைத்தான். தாயாரின் கவனம் மகனிலிருந்து என்பக்கம் திரும்பியது. என் விழிகளும் அவள் விழிகளும் மோதின. அதே கயல்விழிகள். காலத்தால் முகத்தின் தோல் சுருங்கியிருந்தது. நெற்றியிலே சுருக்கம். மயிர் வெள்ளிக்கம்பிபோல் நரையோடியிருந்தது. ஒரு வெள்ளைச்சேலை உடுத்திருந்தாள். நான் என் சுயநினைவிற்கு வரச் சில கணங்கள் சென்றன. என்னைச் சமாளித்துக் கொண்டேன். என் கால்கள் அவளை நோக்கி நடந்தன. அண்மையில் சென்று நின்றேன்.
“நீங்களா?” என்ற வார்த்தை அவள் அடித்தொண்டை யிலிருந்து வந்தது. அவள் கண்கள் கலங்கின. வர இருந்த கண்ணீரைத் தடுத்துக் கொண்டாள். கண்ணனும் என் மகளும் எம் மிருவரையும் மாறிமாறிப் பார்த்தனர்.
“இது என் மகன் கண்ணன்” – அவள் தன் மகனை அறிமுகப்படுத்தினாள்.
“இது என் மகள் கயற்கண்ணி” – நான் என் மகளை அறிமுகப்படுத்தினேன்.
“அழகான பெண், இங்கே வாங்கம்மா” = என என் மகளை அழைத்து அணைத்துக் கொண்டாள்.
“உங்கள் மகன்கூட நல்ல அழகான வாலிபன்” என்று அவள் மகனின் முதுகில் நான் தட்டிக் கொடுத்தேன்.
வண்டி புறப்பட மணி அடித்தது. எல்லோரும் பெட்டியில் ஏறிக்கொண்டோம்.
சாந்தினி தூங்கிக்கொண்டிருந்தாள். நாஙகள தூக்கமின்றி இரவுபூராவும் உரையாடினோம் எனக்குத் தூக்கம் வந்தபோதும் கண்ணனுடைய குரலும் கயற்கண்ணியின் குரலும் பெட்டியின் அடுத்த அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தன.
என் வாழ்வில் இருபது வருடங்களாகக்கிட்டாத ஓர் சாந்தி கிட்டியதுபோல என்மனம் ஒருவிதப் பூரணத்துவ நிலை அடைந்தது.
இலக்கியம்
“மனிதன் தன்னைத்தான் அறிந்துகொள்ள உதவிசெய்வது; தன்னம்பிக்ககையை வலுப்படுத்துவது; உண்மையைக் காண்பதற்கான முயற்சிக்கு ஆதரவளிப்பது: மக்களிடத்திலுள்ள நல்லவற்றைக் காண வகை செய்வது; மக்களுடைய இதயங்களில் வெட்கம், கடுங்கோபம், வீரம் ஆகிய உணர்ச்சிகளைக் கிளறுவது; வாழ்க்கையின் மேலான இலட் சியத்துக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்கு வலிமை ஊட்டுவது: மனிதனைத் தூய்மைப்படுத்துவது ஆகியவை இலக்கியத்தின் நோக்கமாகும்’
மக்ஸிம் கார்க்கி.
– இளங்கதிர், 1959-1960, பன்னிரெண்டாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026
மக்களை ஆளும் அரசு(சர்)கள்!
ராமன் செல்வராஜ்
October 15, 2026
பால்ய சோகம்
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
October 15, 2026