எப்படி இருக்கிறது, உலகம்?
கதையாசிரியர்: சுசீலா சின்னத்துரை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி 
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 61
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் பரிசு பெற்றகதை,
வெட்டி வெட்டி வீழ்த்துவோரையும் வாழவைக்கும் வாழைகள். பூவும், பிஞ்சும் காயும் கனியுமாக ஆங்காங்கு காட்டி : இலைகளோடு ஒட்டி உறவாடி நிற்கும் சிறு குலைகள். இத்தகைய ஓர் வாழைத்தோட்டம். குடியிருக்குஞ் சிறிய ஓரு வீடு. பெட்டியில் ஐம்பது ரூபாய் நோட்டுகள். இவ்வளவுதான் காவேரியின் தந்தை அவள் தாயாராகிய பூங் கோதைக்குத் தேடி வைத்து விட்டுச் சென்ற செல்வங்கள். போதா குறைக்குப் பெரும்பாரமாக காவேரியையும் விட்டுச்சென்றார். அப்போது அவளுக்கு ஐந்துவயது தான்- பிஞ்சுப்பருவம்.
கணவன் நெடும்பிரிவால் கலங்குந்தங்கைக்கு, அண்ணாவான மேந்தரம் அளித்த ஆறுதல்; கொடுத்தவாக்கு; “நானிருக் கிறேன் உனக்கு ஒரு மகள்-ஐந்து வயது, எனக்கு ஒரு மகன் பத்து வயது. எங்கே போகப்போகிறது நான் தேடிவைத்திருக்கும் பொருளெல்லாம்?’ உள்ளத்தால் பொய்யாது. இவர் உரைத்தவை தானிவை. அவளும் நம்பினாள். நம்பத்தான் வேண்டும். அண்ணன் தங்கையென்றால் அவர்களைப்போல அன்புடையார் காணக்கிடைக்காது இவர் ஊராகிய நல்லூரில்.
அண்ணன் தங்கையிருவருக்குமிடையில் பாசம் விசை விசையாய் பெருகத் தொடங்கவே, வந்ததுமோசம். முளையிலே கிள்ளியெறி யாவிடின், களையமுடியாதென்று நினைத்து விட்டாள் தாமோதர னின் மனைவி லஷ்மி. “பிச்சைக்காரப் பெண்ணுக்கு,’ முதுசொம்’ உள்ள என் பிள்ளையைக் கட்டிக் கொடுக்கவா?” என்றும் எண்ணி யிருப்பாள் அந்த நாளில்.
எதுவகையும் பாசத்தை முறிக்க நினைத்தாள்; ஒரு வாரம்- இரண்டு வாரம்-ஒரு மாதத்துக்குள்ளேயே முறித்து விட்டாள் நினைத்தால் பெண்களுக்கு இதுவா ஒரு பெரியவேலை? அந்த வீட்டு முற்றத்திற்கும் கால்எடுத்து வைக்காதவகையில் தாமோதரத்தைத் தடுத்துவிட்டாள் லஷ்மி. தடுத்தது என்ன, இல்லாத கோள்பல சொல்லி – அண்ணன் தங்கை உறவுக்கே கொள்ளி சொருகி விட்டாள்.
“கடவுள் யாரைத்தான் கைவிடப்போகின்றார், ஆக்கிய கடவுளுக்கு ஆளத்தான் தெரியாதா?” என்ற எண்ணத்தோடு,
“வாழைத்தோட்டமுண்டு – நாமுண்டு காலையிற் காலையிற் சுட்டுவிக்கும் அப்பமும் துணையுண்டு” என்ற திருப்தியுடன்,காலத்தைத்தள்ளியது, பூங்கோதையின் குடும்பம். அப்போ காவேரிக்கும் வயது பத்தாகி விட்டது. அவள் படிப்பை நிறுத்தவில்லை அவள் தாய். காவேரி கன்னிப் பருவமடைந்தபின்னும், கண்டவர்கள் ஏதும் சொல்லு வார்களே, என்றஞ்சாது, ஈன்று புறந்தந்ததுமன்றி – சான்றோராக் குவது தன்தலையிவே பொறுத்துவிட்டதே என்று மனஞ்சோராது, பள்ளிக்கனுப்பி, அவள் அறிவை தமிழ்ப்பண்பை – பெண்மையை வளர்த்துக்கொண்டே இருந்தாள் அவள் தாய். அதிகம் கூறுவா னேன், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கும் நின்ற காவேரி திறமையான வெற்றிபெற்றாள், பயிற்சிக்காகக் கழகத்துள்புகுந்தும் விட்டாள் பண்புள்ள பெண்ணாக.
அன்பு – நாணுடமை – அடக்கம் -அறிவு அத்தனையுங் கெடாத தமிழ் மங்கையாக, கழகப்படிப்பை முடித்துக்கொண்டு வெளிவர வேண்டுபென்பதே காவேரியின் அவா.
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் பலருள் ஒருவன் சேகர் அறிவுத்தேன் பருகத்துடிக்கும், ஜோஜ் – சேற் மின்மினிப்பூச்சிகள் எத்தனை! அவன் அழகில் மயங்கி அவனையே மாயக்குளியில் வீழ்த்த நினைக்கும் நைலோன்’ வண்ணாத்திப் பூச்சிகள் எத்தனை! தேவை ‘யெனுந்தந்தியைப் பின்தொடர்ந்து பறந்து வந்து அவன் பெட்டி யை நிரப்பும் பணத்தைக் கண்டு கண்ணாலும் பல்லாலும் மெல்ல அவன் பணத்தைத்தட்ட நினைக்கும் பூலோக நட்சத்திரங்கள் எத்தனை!
இத்தனைப்பூச்சிகளும் நட்சத்திரங்களும் வட்டமடித்துக்கிட்ட வரவும் தொட்டுப் பதம்பார்க்க முடியாத-எட்டத்தே, எவர்க்குங் கிட்டாத கனியாக அவன் அடங்கிவாழ்ந்தான்.
‘உடன்பிறவாவிடினும் பிற நங்கையரெல்லாம் என் தங்கை யரே, என்னுங்கொள்கையுடன் வாழும் சேகரை, இப்பல்கலைக் கழகத்துள் கால்வைத்ததும் வைக்காததுமான நிலையிலேயே அவன் இதயத்தை -தங்கையின் பிரிவால் அன்பு நீர் வற்றியிருக்கும் அவன் இதயத்தை – தொட்டுவிட்டாள் எவர்க்குமில்லாத தனிப்பண்பால்- காவேரி. அழகே பெயராக, அதற்குப் பொருத்தமான அழகு. அதரப்பூச்சும் அஞ்சனத்தீட்டலும் இல்லை. அங்க அசைவுகளை அப்படியே காட்டி நிற்கும் ஆபாச உடையும் இல்லை கருங்கூந்தலை குதிரை வாலாக்கித் தன்னைக் குதிரையாக்கும் கோணங்கி நடையு மில்லை. தமிழே பெண்வடிவமான பிம்பமாகவே விளங்கினாள்.
யாழுங்குழலும் அவள் தமிழ்ப்பேச்சின் இனிமையில் அடி பட்டுச், சாய்ந்தன. தமிழ் எழுத்து நடையைக்கண்டு ஆங்கில மொழிநடை ஏங்கித் தவித்தது.
அன்று சொன்னாளே, தமிழ் சங்கத்துணை செயலாளராகத் தன்னைத் தேர்ந்தெடுத்த அன்று.
“தமிழ் மொழியை உயிருக்குநேராக – மேலாக மதிக்கின்றேன் ஆங்கிலமும் படித்தேன்-படித்துவருகிறேன் உதட்டிற்கு அழகாக உழைப்புக்கு இலக்காக.”
எத்துணைத் தமிழ்ப்பற்று அவள் பேச்சிலே -அன்று எத்தனைக் கரங்களின் பேரோலி- அவற்றிற்கிடையே ஒருவனின் வாய்மொழி- ‘அப்பக்காரி’ என நாவினால் சுட்டுவிட்டான். நீறுபட எரித்த சிவன் போல அவளும் கனல் கக்கப் பார்த்துவிட்டாள் அவனை- வரதராஜனை.
நிற்க.தமிழ்ப்பண்பால்-அமிழ்தினும் இனிய சொல் ஆற்றலால் சேகரின் உள்ளத்தையே அள்ளிவிட்டாள். அண்ணாவுக்கொரு ஒப்பற்ற தங்கையென எண்ணி நடந்தாள்-புன்னகை புரிந்தாள் பூத்தமுல்லை போல.
கடல் ஆழங்காணலாம்- பெண்கள் மன ஆழம்காண முடியா தென்று கூறுவார்களே – நம்பலாமா இவளையும்? ஆண்களைத் தான் நம்பமுடியுமா? என பலவாறாக எண்ணிய சேகரையே சில வேளைகளில் அவன் கண்கள் ஏமாற்றி விடுகின்றன. காவேரியின் எழிலைப்பருக துடியாய்த்துடித்தன. ஏன்? தங்கையின் அழகை நயத்து அண்ணா மகிழுதல் இயற்கைதானே? எங்கிருந்தோ வந்தாள் அவன் இதயப் பொய்கையில்தூய புத்தம்புதிய மலராகப்பூத்து நின்றாளே.
‘அப்பக்காரி’ என்று அழைத்துவிட்டால் ஏதோ அவமானம் என்று எண்ணினான் வரதன்-படித்தறிந்த முட்டாள். இன்றைய ரஷ்ய நாட்டின் தலைவன் குருஷ்ஷேவ் முதல் எத்தனையோ தலை வர்கள் எல்லாம், ஏழ்மையின் கோரப்பிடியிலே சிக்கித் தவித்த வர்கள் தான் என்பதை மறந்து உளறித் தள்ளிவிட்டான் வரலாறு படித்தவன்.
”வரதனை’ உனக்கு முன்பே தெரியுமா, அப்படி அவனுக்கு என்ன தீங்கு செய்துவிட்டாய் நீ.?’ என்றொரு கணைகொடுத்தாள். காவேரியின் தோழி நளினி. விம்மி அழுதாள் காவேரி.
“என்னை மன்னித்து விடு. உன்மனத்தைப் புண்படுத்தி விட்டேன் காவேரி” என்று கவலையுடனுரைத்தாள் நளினி.
”தோழி என்ற உரிமையில் இல்லை நளினி, உனக்கில்லா த உரிமை வேறுயாருக்கு? – அவரைப்பற்றி உனக்கேதும் தெரியுமா?” என்று தெரியாதவள் போலக் கேட்டாள் காவேரி.
அவனைப்பற்றிச் சற்றுத் தெரிந்த நளினிக்கு விடை அழிப்பது கஷ்டாமாயிருக்கவில்லை, “அதிகம் படித்தவன் போல நடிக்கிறான்- அகம் பாவம் பிடித்தவன் போல் காணப்படுகிறான் ஒழுக்கத்திற் கெட்டவனாகத் தெரியவில்லை-ஆனால் வலிய எவரையும் வம்புக்கு இழுப்பான்”
”இது நாள்வரையும் சொல்லாதிருந்துவிட்டேன், சொல்ல சந்தர்ப்பமும் கிட்டவில்லை, நளினி-அவர் என் மாமன் தாமோத ரத்தின் மகன். அதனால் தான் பலபேர் முன்னிலையில் ‘அப்பக்காரி!’ எனத்தலையில் தூக்கிவைத்து விட்டான். நல்ல தொரு அத்தான் வந்து வாய்த்திருக்கிறான்”.
“வரதனில் குறை கூறிப்புயனில்லை, எல்லாம் அவர் தாய்செய்த வேலை – என் ஐந்து வயதில் தந்தை இறந்துவிட்டார்- என் தாயார் என்னை வளர்த்துப் படிக்க வைத்து விட்டார். என் தாயார் அண்ணா தாமோதரம். அவருக்கு எங்களிடத்திலுள்ள பாசம் தன் வீட்டில் உள்ள பொருளுக்குச் சேதம் என்று நினைத் தாள் அவர் மனைவி லஷ்மி. பாசத்தை வெட்டத்திட்டஞ்செய் தாள் – வெட்டிவிட்டாள். இரு குடும்பங்களும் இப்போ கீரியும் பாம்பும் போல என்று தன் குடும்ப வரலாற்றைக்கூறினாள் காவேரி. இவளுக்கு ஆறுதல்மொழி கூறினாள் நளினி.
“பணமும் குலமும்-பெருமை அடித்துக் கொள்ளும் உலகம் அழிந்துவிட்டது காவேரி, குணமும் கலைநலமுந்தான் பாராட்டப் படுகிறது. கலையின் பொற்பாதங்களிலே – பணம் மண்டியிட்டு வணங்கத்தொடங்கிவிட்டது இப்போ – இவ்வுண்மையை இன்றில்லை என்றோ ஒரு நாள் அறியத்தான் போகிறாய்”.
“குடும்ப விரோதந்தான் அன்றைய குரோதக் சொல்லிற்கு காரணம் நளினி – அது வரதன் தவறல்ல-என்ன இருந்தாலும் அத்தான் அல்லவா?”
”ஆம்! வரதன் மீது குறை சுமத்தவும் விரும்புவாயா நீ காவேரி! நம்பமாட்டாய் – நானும் சின்னஞ்சிறு வயதில் தாயை இழந்தேன், தந்தையின் தாயாளகுணத்திலே வளர்ந்தேன். என்னை வளர்த்து இந்நிலைக்குக்கொண்டு வருவதற்கு என் தந்தை அடைந்த துன்பம் சொல்ல முடியாது. என் தந்தையும் ஒரு சாதாரண தொழி லாளியே . . உலகமே ஒரு நாடகம் என்றால்-இப்பல்கலைக்கழகமும் அதன் ஒருபகுதிதானே! இங்கே படிக்கும் மாணவ மாணவிகளுள். பலர் தம்பொருட்குறையை இன்னுமுள்ள – குணக்கேடுகளை மூடி மறைத்துத்தான் வாழ்கின்றார்கள் – வாழவேண்டும் – இல்லையேல் காறியுமிழ்ந்துவிடும்” என்றாள் நளினி.
இதுகாறும் மௌனமாயிருந்த காவேரி பதில் கூறினாள். “நளினி! நானோ அப்படி வாழ விரும்பவில்லை – என்றும் -எங்கும் ஒன்று போல் ஒரே தன்மையாகத்தான் வாழவிரும்புகிறேன்.”
மாலை மணி நான்கு அடித்து ஓய்ந்தது. வீணாகக் காலத்தைப் போக்காது இருவரும் தேநீர் அருந்தச் சென்றனர். காவேரியின் வாடிய உள்ளத்தைப் படம்பிடித்துக்காட்டியது அவள் அழகிய முகம்.
அன்று இரவு முழுதும் ஆத்திரத்தால் நவிழ்ந்தான் வரதராஜன். எங்கள்குடும்ப விவகாரத்தையே சபைக்கு எடுத்து- சந்தி சிரிக்கவைத்து விட்டேன். அவளை அவமானப்படுத்த நினைத் தேன். ‘அப்பக்காரி” என்ற சொல் என்னையே அவமானப்படுத்தி விட்டது
விளக்கம் கேட்பார்கள் – விளக்கிச் சொல்லுவேன் ஏளனஞ்செய்வார்கள் அவளை,என்று எண்ணினேன் – என்னையே ஏளனஞ் செய்யத் தொடங்கிவிட்டார்கள்………..
அவள் பேச்சைக்கேட்கும்போதும் ‘ஆ!’ என வாய் பிளக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் புகழ்கின்றார்கள் – அழகு யாரைத் தான் மயக்காது-அதனுடன் அறிவுஞ் சேர்ந்துவிட்டால் மிகுதியைக் கூறுவானேன்? காவேரி அழகி தான்! அறிவு நிறைந்தவள் தான் அந்தப்பயல் சேகர் அன்பாகப் பேசுவதும் சிரிப்பதும் – அதைப்பார்த்துக் கொண்டு நான் சும்மா இருப்பதும் இயலுமா?….. தமிழ்ச் சங்கச்செயலாளன் என்ற பெருமையில் தன்னையே மறந்து விடுகிறான் – இவளும் அவனுடன் பறந்து இன்பச்சிறகடிக்கிறாள்.
அவர்களைக் குறை கூறியும் பயன் என்ன? என் தாய் எங்கள் இரு வீட்டிற்கும் வைத்த நெருப்பு என் நெஞ்சத்தையே சுட்டெரிக்கிறது. காவேரி எழிலரசி மாத்திரமா -கலையரசியும் தான். இன்னுஞ்சில நாட்களாகப் பட்டதாரியாக வெளியேறப் போகின்றாள் – எத்தனை பேர் அவளைத் திருமணஞ் செய்யப்போட்டி போடப் போகின்றார்கள். ஏன்? என் மாமன் மகள் எனக்கேன் அந்தப் பாக்கியம் கிடைக்கக்கூடாது? சேகர் அன்பை அவள் முன்னரே அடைந்திருக்கக்கூடும் – அன்றியும் என் தாய் விட்டு விடவா போகின்றாள். இன்றே அவளை நேரில் கண்டு சமாதானஞ் செய்து கொண்டு – ஏன் – என் அன்பை ஏற்கும்படி கேட்டால் என்ன?
“சீ… என்ன இருந்தாலும் நான் ஒரு ஆண், நாளை பட்டதாரியாக வெளியேறப் போகின்றவன் அவளிடம் மண்டியிடுவதா – ஏன் – அவளே வந்து நடந்ததெல்லாவற்றையும் மறந்துவிடும்படியாகக்கேட்டு, என் மனப்புண்ணை மாற்ற முன் இரக்கூடாதா? வந்தால் அவள் மானம் போய்விடுமா?”
இவ்வளவும் நித்திரைபோல் கண்ணைமூடிக்கொண்டு கிடந்த வரதன் உள்ளத்தின்கண் எழுந்த சிந்தனைச் சித்திரங்கள். கண் விழித்தும் இப்போராட்டந் தீர்ந்ததா? இல்லை, யோசனைக் கடலிலேயே மீண்டும் மூழ்கினான்.
இம்மனப்போராட்டம் காவேரியையும் தாக்கியது போலும். அவளும் நிம்மதியைக் காணாதவளாய் தத்தளித்தாள். கன்னி ருத்தியும் காளை ஒருவனுஞ் சந்தித்துக் கதைத்துவிட்டால் களங்கம் கற்பிக்கத் தவறுவதுஇல்லை இந்த உலகம்.
தமிழ்ச்சங்கத்தின் பேரால் தாங்களே, சேகரையும் காவேரி யையும் செயலாளர்களாகத் தெரிந்தெடுத்தார்கள். இது காரண மாகப் பல தடவைகளில் சந்தித்து நெருங்கிப் பழக வேண்டிய நிலை ஏற்பட்டது. போற்றிய வாயினாலேயே தூற்றத்தொடங்கிவிட் ம் டார்கள். காரணம் எது வாயிருப்பினும் சேகரும் காவேரியும் நீண்டநேரம் இருந்து கதைக்கக் கூடாத காலமும் வந்துவிட்டது.
தமிழ்விழா நடந்துகொண்டிருந்தது அன்று-விழாச்செயலாளர் இருவருக்கும் அதிக வேலையிருந்தது – ஓயாது சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம்-சிரிப்பு வரத்தான் செய்யும். அன்று அவரிருவரும் கூடிப் பேசும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கண்கள் அவர்களைக் கேலி செய்வனபோல் பார்த்தன. தன் சகபாடிகளின் மனப் போக்கை நகைப்பை- ஏழனத்தை காவேரி வெறுத்தாள்-
எவ்வளவு பொல்லாத உலகமப்பா இது ! தனிமையில் வாழவிடமாட்டார்கள் – சேர்த்துப் பணியாற்ற வைத்துவிட்டு பணியாற்றி வாழவிடமாட்டார்கள்.
படிக்காத பாமரமக்களாய் இருப்பின் இவர்களைத் தட்டிக் கழித்து விடலாம்.. பட்டதாரிகளாய் பயிற்சிபெறும் பல்கலைக் கழக மாணவர்களல்லவா இவர்கள்? பகுத்தறிவில்லா மிருகங்களே இவர்களைப் பார்த்து சிரிக்குமல்லவா ?…
அத்தான் வரதராஜனின் வஞ்சக உள்ளந்தான் இம்மாண வர்கள் இடையே சதிராடுகிறதோ… என்னவோ ….?
…. இல்லை! பாவம்! அன்று தவறிழைத்தது ஏதே உண்மை தான். பின்பு வரதன் என்னைத் தனிமையில் சந்திக்கும் போதெல்லாம்-முன்புதான் விட்டபிழையை உணர்ந்து பச்சாத் தாபப்படுபவர் போலல்லவா நடந்து கொள்கிறான் – நிமிர்ந்த தலையுடனே தாழ்ந்து விடுகிறதே!”
வரதனுடைய ஆபாசப்பேச்சும், புரியாத நடையும் காவேரி. யின் ஏழை மனதில் பல கேள்விகளை எழுப்பியதில் வியப்பொன் றில்லை-எனினும் சேகரின் நட்பு அதைக்காட்டிலும் பன்மடங்கு மேலாக அவளை வாட்டியது. பல்கலைக்கழகத்தில் அண்ணா-தங்கை பாசத்தோடு கூடித்திரிந்த உறவும் அவளுக்குப் புரியாத புதிராகத் தான் திகழ்ந்தது.
”கன்னியொருத்தியை அடிக்கடி சந்தித்துக் கதைப்பதற் கேற்றசூழ்நிலையில் சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் – அதனைப் பயன்படுத்திக்கொண்டு தனக்கும் அவளுக்கும் இடையே ஆபாசத் தொடர்பு இருப்பதாகக்கயிறு திரித்து, வெளியே பெருமை யடித்துக்கொள்ளும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பச்சோந்திகளில் ஏன் சேகரும் ஒருவனாய் இருக்கக்கூடாது” என்று தன்னைத்தான் கேட்டாள். ஆனால் ஒரு கணப்பொழுதிலித் தப்பான எண்ணம் அவள் மனதை விட்டோட, தன் கேள்விக்குத்.. தானே விடையையளித்தாள்-.
‘“ஆண்களில் மட்டுமா? பெண்களிலும் இக்குணம் படைத் தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் …… ஆனால் சேகரோ! இல்லை…….. என்னுடன் சேகர் நடந்துகொண்ட வகையிலோ பேச்சிலோ – செயலிலோ – பாவனையிலோ- சிறிதளவும் விபரீதமான போக்கைக் காணமுடியவில்லையே.”
தனிமையில் பல நாள் கண்டிக்குச் சென்றிருந்தார்கள் – படிபகத்தில் பலநூல்களைப்புரட்டி குறிப்பு எடுக்கும் போதெல் எத்தனையோ லாம் பல மணிகள் நேரம் செலவழித்திருந்தார்கள் -இத்தகைய சந்தர்ப்பங்கள் சேகருக்குச் சாதகமாய் நின்றும் அவர் அவற்றைப் பயன்படுத்த இல்லை-ஆம்! சேகர் தன் உள்ளத் தில் தவறான எண்ணத்திற்கு இடங்கொடுப்பவனல்ல.
அன்று நடந்த நிகழ்ச்சி தான், எல்லாம் உள்ளத்தும் தவறான எண்ணத்தைத் தூவிவிட்டது, என்பதை இப்போது தான் முற்றாக உணர்ந்தாள் காவேரி. அத்தகைய நிலையில் அவளும் காண்பவளாய் இருந்திருப்பின் அவள் உள்ளத்தும் தவறான கருத்து பதியத்தான் செய்யும்.
இந்நாள் வரையும்-பெருமையோடு இக்கழகத்திருந்த காவேரி பயிற்சி முடிந்து வெளியேறும் போதா வீண்பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டும். அவள் தாயும் இச்செய்தியை உண்மையென்று நம்பிவிட்டால் அவர் மனம் தாங்க முடியாத வேதனையடையும் இச்சந்தேகம் நீங்கத்தான் வழியேது? அடுத்த நாள் தொடங்க இருக்கும் இறுதிப் பரீட்சை முடிந்துவிட்டால்…
பரீட்சை முடிவுற்ற மகிழ்ச்சி எல்லா மாணவர்களும் இன்பபொழுது போக்குக்காக எங்கெல்லாமோ போய்விட்டார்கள்.
“நீ மாத்திரம் ஏன் போகவில்லை வரதா?” என்ற ஒரு பல்லவியை எடுத்தார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி -காவேரியைப் பற்றிய வரலாற்று அநுபல்லவியை-சரணத்தை -அவன் வாயிலாகக் கேட்கலாமென்ற நம்பிக்கையில்.
“அப்படி ஒன்றுமில்லை ஐயா, உடல்நலம் சரியில்லை” என்றான் வரதன். “எல்லாம் எனக்குத்தெரியும் வரதா-எதனையும் ஆராய்ந்து பாராது முடிவு செய்வது பேராபத்து -வா-அப்படி ஆற்றோரமாகச் செல்வோம்” என்று அன்பு ததும்பும் குரலில் கூறினான்.
தன் மனக்குழப்பத்தைக் காட்ட விரும்பாது வரதன், கலாநிதி கூறியதற்கு உடன்பட்டான். இருவரும் வெளியேறினார்கள். …மாலை நேரமாக இருந்ததினால் அவ்விடத்தில் பலர் வந்திருந் தனர். இருவரும் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு நடந்தனர்.. எங்கும் அமைதி நிலவிற்று. ஆனால் அமைதிக்குப்பின் புயல்வருவது இயற்கை நியதியல்லவா-சடுதியில் வரதன் “ஐயா! அதோபாருங் கள்-இப்போது என்ன சொல்லுகின்றீர்கள்?” எனச் சிலைபோல் நின்றுகொண்டு கோபங்கக்கும் பேய்போல் அலறினான் – கண்கொட் டாது பார்த்தபடி.
”வரதா! இருவரைக் காண்பது உண்மை – ஆனால் அவர்கள் உறவாடல் இதுவாகத்தானிருக்கும் என்பதை எவ்வாறு கணித்து விட முடியும். சற்று மறைந்து நின்று கவனித்துக்கேட்போம்” எனக் கலாநிதி பதிலளிக்கவும், இருவரும் ஒரு மரத்தண்டை மறைந் திருந்து அவர் உரையாடலை செவிமடுத்தனர்.
உலகத்திலேயே இருக்கவேண்டுமென வந்த மனிதன், அதிலி ருந்து ஒழித்தோடவும் முடியுமா? உலகத்தின் கண்ணைக்கட்டி எச்செயலையுஞ் செய்யமுடியுமா? ‘நாம் கதைப்பதைக் கேளாதே எனக்கூறி அதன் செவியைப் பொத்தவும் முடியுமா? இதைக் காவேரியும் சேகரும் அறிந்திலர் போலும். தங்கள் தூய அன்பில் களங்கத்தைப் புகுத்த இவ்வுலகம் என்றும்-எப்போதும் தயாராக இருக்கிறதென அறிந்து, தன் எண்ணக்கருத்தினை எவ்வாறேனும் காவேரிக்குக் கூற வேண்டுமென நிச்சயித்த, சேகர், அவளை மறைவாக ஆற்றங்கரையில் ஒரு தனித்த இடத்தில் கூட்டிச் சென்றான். ஆனால் இங்கும் பிறரை விதியே அழைத்துவரும் எனச் சேகர் அறியாதவனாய்க் காவேரிக்குத் தன் மனதையே வெளியாக எடுத்துரைத்துவிட்டான்.
“எல்லோரும் வெளியே செல்ல நாங்கள் மட்டும் இவ்விடத் தில் எனக்கூறிய காவேரிக்குப் பதிலை அளித்தான் சேகர் “தனியே இருக்கிறோம், எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பழியைத்துடைக்கவேயன்றி -பிழையைச்செய்யும் பிழையைச்செய்யும் நோக்கமாக வல்ல. அதனால் அஞ்சவேண்டியதில்லை…காவேரி!இன்று தான் என் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறேன் மறைத்து வைத்திருந்த மர்மம் ஒன்றை எடுத்துக்கூறப்போகிறேன்…
உன்னைப்போல் கலையரசியாகத்திகழ்ந்து பட்டதாரிப் படிப்பை எட்டிப்பிடிக்கவிருக்கும் போது பதினெட்டு வயது-மைதிலி என்னும் பெயர்பூண்ட என் தங்கையை இழந்தேன் – அவளை வாரி வாயில் போட்டது ஒரு வலிய நோய் அன்று தொட்டு நடைப்பிணமாகத் திரிந்தேன்-என் உயிர்த் தங்கையை மறக்க முடியாத சோகத்தால். ஏதோ ஒரு நல்லகாலம்-என்னை இக் கழ கத்தில் கால்எடுத்து வைக்கச்செய்தது. ஆனால் அமைதியைக் காண முடியவில்லை … காவேரி, ஏதோ நீ வந்தாய் -கண்டேன் – தமிழ் மொழி மாதா எங்களை ஒன்று கூட்டிவைத்தாள் – இழந்த என் தங்கையைப் பெற்றவன் போலானேன்… துன்பப்புயல் வீசிய என் உள்ளத்தில் அன்புத்தென்றல் வீசத்தொடங்கியது. இதையுனக்குச் சொன்னால் நீ என்ன நினைப்பாயோ என்றிருந்துவிட்டேன் ஒன்றும் அறியாஞானிபோல் இது காறும் மௌனம் பூண்டு நின்ற காவேரி பேசமுற்பட்டாள்.
“அண்ணா, இது என்ன? உங்கள் அன்பும் பண்பும் நான் அறி யாதவளா? வேறொன்றுமில்லை -அந்த மழைநாள், மழை சோனாமாரி யாகப்பெய்து கொண்டே இருந்தது-ஒரு குடைக்கீழ் இருவர்-யார் தான் சந்தேகப்படமாட்டார்கள் அண்ணா, வீடு செல்ல இன்னுமிரு நாட்கள் இடையே எப்படித் தீரப்போகிறது இவ் வசைச் சொற்கள். ஊர்வாயை மூடத்தான் உலைமூடி கிடையாதே…”
”காவேரி, அஞ்சாதே, உன் அத்தான் வரதனைச் சந்தித்தேன் – நீண்ட நேரமாகப் பேசினோம். உன் பேச்சையுமெடுத்தேன்-நடந்த வற்றை எல்லாமெடுத்துக் கூறினேன், அனைத்தையுங் கேட்டான்- நம்புபவன் போலவும் நம்பாதவன் போலவும் நடந்துகொண்டான். வரதனின் தாய் செய்த சதியேயன்றி வேறேதும் கோபமும் வரத னிடமுனக்கு இல்லையே-… காவேரி, எங்கள் மீது சுமத்தப்பட்ட பழி தீரவேண்டும்; அழுகிக் கிடக்கும் மூடப் பழக்க வழக்கங்கள் நிறைந்த சமுதாயத்தைச் சீர்திருத்தவேண்டும்; எங்கள் சகோதர அன்பு நிலைபெறவேண்டும் – இம்மூன்றையுந்தானே நீ விரும்புகின் றாய். இவை நிறைவேற ஒரேயொரு வழிதானுண்டு….நீயும் வரதராஜனும் திருமணஞ் செய்துகொள்ளவேண்டும் – முடித்து வைப்பது என் பாரம்.” என்ற சேகரைப் பார்த்துக் காவேரி – “அண்ணா உடன்பிறந்த சகோதரன் இல்லாக் குறையைத் தீர்த்து வருகிறது உங்கள் பாசம்; ஏதோ உங்கள் எண்ணத்திற்கு உயிர் கொடுக்க முயன்று பாருங்கள்’என்று கூறவும், இதுவரை மெளனம் பூண்டு மறைந்து நின்ற கலாநிதி வரதனைத் தோளில் தட்டி,
”வரதா, எப்படி இருக்கிறது உலகம்? இருவருக்கிடையே இருக்குந் தூய அன்பின் தூய்மைக்கே சாட்சிகொடுக்க மறுக்கும் இவ்வுலகத்தில் நீயும் ஒருவன்தானே. எத்தகைய விஷயத்தையே னும் நன்கறியாது மனத்தினாலோ -வாக்கினாலோ தப்பாக ஊகித் துத் திட்டாதே’ என அவனுக்கு புத்தியும், “விதி கூட்டி வைக்கும் இத்தொடர்பு என்றும் இறுதியே நிற்கக்கடவது’ என ஆசியும் கூறி வரதனையும் அழைத்துச் சென்றான்.
கலை
“கலையின் மகோன்னதமான நோக்கம் இதுவே; மனித னுடைய பிரதிபின்பத்தை அவனை விட உயர்ந்ததாகப் படைத்து, மிக மேலான வாழ்க்கைக்கு அதன்மூலம் மனிதனை இட்டுச் செல்வதே” – பஸ்டர்னாக்
“பெற்றோராலும், கணவனாலும், மக்களாலும் அன்பு செலுத்தப் படுபவள் குடும்பப் பெண் ! அவள் காலடியில் அழகு சரணடைகிறது” – மாக்கூன்.
– இளங்கதிர், 1959-1960, பன்னிரெண்டாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026
மக்களை ஆளும் அரசு(சர்)கள்!
ராமன் செல்வராஜ்
October 15, 2026
பால்ய சோகம்
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
October 15, 2026