பிள்ளையா பூதமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: October 8, 2026
பார்வையிட்டோர்: 89 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள் 

கோவிந்தசாமி, பி.ஏ.,எல். டி: ஓர் உபாத்தியாயர் 
ஜானகி: அவருடைய மனைவி 
சுந்தரியம்மாள்: அவருடைய தாயார் 
சாரதாமணி: சுமார் இரண்டரை வயதுள்ள அவருடைய குழந்தை 

முதற் காட்சி 

[வெள்ளிக்கிழமை மாலை, சுந்தரியம்மாளும், ஜானகியும் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.] 

ஜானகி: அம்மம்ம, இந்தப் புள்ளை படுத்திற பாடு சொல்லி முடியலை! இது ஏன்தான் பிறந்ததோ? சனியன்! 

சுந்தரியம்மாள்: இப்ப என்னடி பண்ணுது ஓம்புள்ளை? 

காலையிலே யிருந்து இந்தப் பாடா படுத்தும்? ஜானகி: நான் சாம்பாருக்குப் புளிகரச்சிக்கிட்டிருக் கேன். அது நான் கரைக்கிறேண்ணு வந்து மேலுங் கீழுமா கொட்டிது!என்ன பண்ணித் தொலையிறது? 

சுந்தரியம்மாள்: ரெண்டரை வயசுப்பிள்ளை இப்படி எல்லாம் பண்ணுமாக்கும்? சிறுபிள்ளையா லக்ஷணமா திங்கிறதைத் தின்னோம், உங்கிறதை உண்டோம், ஒறங்கினோ மிண்ணிருக்கும், கண்டிருக்கோம். பெரியவக செய்யிற வேலைக்கெல்லாம் நான் நான் இண்ணு வரக் கண்டோமா? நானும் எத்தனையோ புள்ளையை வளத்திட்டேனம்மா, இப்படி ஓம் புள்ளையைப் போல ஒரு புள்ளையுமில்லை!

சாரதாமணி: பாப்பா புளி காய்க்கின்றே கொண்ணா!

ஜானகி : நீ புளி கரச்சு நாசமாய்ப்போனே! விடு எமனே! 

(குழந்தையிடம் இருந்து பலவந்தமாசுப் பாத்தி ரத்தைப் பிடுங்கிக்கொண்டு, சற்று அப்பால் சென்று ஜானகி புளி கரைக்கிறாள். குழந்தை அழுது கொண்டிருக்கிறது. சற்று நேரத்திற்குப் பின் பாட்டி மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதைச் சாரதா பார்க்கிறாள்.) 

சாரதாமணி: பாப்பா மொயகா அரக்கப் போறேன்!

சுந்தரீயம்மான்: புளியை விட்டு மிளகாய்க்கு வந்திருச்சிடி சனியன்! 

ஜானகி: மிளகாயைக் கண்ணிலே கிண்ணிலே வச்சுக்கிட்டு அழுது தொலையாதடி, வாடி இங்கே!

சுந்தரியம்மான்: இந்தத் துன்பம் எங்கேயாவது உண்டா? விரல்கீரல் நசுங்கிப் போகுமிடி, போடீ. 

சாரதாமணி: பாப்பா அரக்கிறே குரு ! 

ஜானகி : ஐயோ, அந்த மிளகாயிலே கையை வச்சிருச்சு,கண்ணிலே கிண்ணிலே வச்சிரப்போகுது. அதைக் கழுவி விடுங்க. 

சுந்தரீயம்மாள்: வாடி கையைக் கழுவ! 

(குழந்தை வரமாட்டேன் எனப் பிடிவாதம் செய்கிறது. பாட்டி பலவந்தமாய்ப் பிடித்துத் தூக்கப் போகிறாள். குழந்தை கைகளையுங் கால்களையும் உதறுகிறது. இந்தக் கலவரத்தில் அதன் கையிலுள்ள மிளகாய் கண்ணில் தெறிக்க. “கண்ணு எயிது, கண்ணு எயிது!” என்று குழந்தை வீறிட்டு அலறுகிறது.) 

சுந்தரியம்மாள்: ஒரு வேலை ஓடவிட மாட்டேன் என்கிறது. இதுக்குப் பண்டிதம் பண்றதுக்கே நாளெல்லாம் சரியாப் போகுதே! 

(குழந்தையினுடைய கைகளையும் கண்ணையுங் கழு விக் கண்ணுக்குப் பாட்டி விளக்கெண்ணெய் போடுகிறாள், மாலை ஐந்தரை மணிக்கு மேல் கோவிந்தசாமி பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறார்.)

கோவிந்தசாமி: என்ன ஆகியிருக்கிறது? வயிறு பசி எடுக்கிறதே! சாப்பிடலாமா? 

ஜானகி : ஒண்ணும் ஆகலே! எல்லாம் இனிமேல் தான்! 

கோவிந்தசாமி: ஏன்? முன்பாவது இரண்டு பேர், இப்பொழுது வேலைக்கு மூன்று பேர் இருக்கிறீர்களே; ஏன் தாமதமாகிறது? 

ஜானகி: மூன்று பேர் எப்படி? 

கோவிந்தசாமி : நீ ஒன்று, அம்மா இரண்டு, சாரதா மூன்று பேர்! 

ஜானகி: உங்கள் மகளை ஒரு ஆளாகச் சேர்த்து விட்டீர்களா? ஆமாம்! அவள் வேலை செய்யாமல் இருந்தால் போதாதா! அவளுடைய துன்பம் சகிக்க முடியவில்லை! 

கோவிந்தசாமி: அவள் உனக்கு உதவியா யிருப்பாள் என்றல்லவா நான் நினைத்தேன்! 

ஜானகி: ஏன் நினைக்க மாட்டீர்கள்? அதுவும் நினைப்பீர்கள்! அதற்கு மேலும் நினைப்பீர்கள்! உங்களுக்கென்ன, அப்பழுக்குப் படாமல் சட்டையும், வேஷ்டியும் உடுத்திக் கொண்டு போகிறீர்கள். உட்கார்ந்த நாற்காலியை விட்டிறங்காமல் கன்னா பின்னா இன்னு ரெண்டைக் கத்திப்பிட்டு வந்து விடுகிறீர்கள். வீட்டிலே யிருந்து ரெண்டுங் கெட்ட பிள்ளை ஒன்றை வைத்துக் கொண்டு வேலை செய்கிறவளுக்கில்ல அந்தக் கஷ்டம் தெரியும்! ஒரு நாளைக்கு வீட்டி லிருந்துதான் உங்கள் மகளுடைய லீலைகளை யெல்லாம் பாருங்களேன்.ரஜா நாளாயிருந்தால் அங்கே போறேன், இங்கே போறேன் என்று கிளம்பி விடுகிறீர்கள். ரெண்டரை வயசுக் குழந்தை, வீட்டு வேலையில் எனக்கு உதவி செய்யுமிண்ணும் சொல்றீய! ஐயோ காலமே! உங்களோடுங் கூத்துத்தான்! 

கோவிந்தசாமி: உம், அப்புறம். 

ஜானகி: நான் போறேன், சப்பாத்தி போட. உங்களோடு வம்பளந்திக்கிட்டிருந்தா, வேலை நடக்குமா? 

(சமையலறைக்குப் போகிறாள்) 

சாரதாமணி: நானும் போருவேன், தப்பாத்தி! 

(சாரதாவும் பின்னால் ஓடுகிறாள்) 

கோவிந்தசாமி: சாரூ, இங்கே வாம்மா, அப்பாகிட்டே வா! 

சாரதாமணி: … 

(சிறிது நேரத்திற்குப் பின்) 

ஜானகி: போடி, மாவுருண்டையை எடுத்துப் பாழாக்காதேடி. 

சுந்தரியம்மாள்: ஒனக்கெல்லாம் சப்பாத்தி போடத் தெரியுமா? வாடி இங்கே! 

ஜானகி உங்களைத் தானே. அங்கே உக்காந்து கொண்டு என்ன செய்றீய! மக உதவி செய்றதை வந்து பாருங்களேன்! 

கோவிந்தசாமி: முதலாவது கொஞ்சம் சர்பத்தாவது போட்டுக் கொண்டு வா. ரொம்பக் களைப்பா யிருக்கிறது! 

ஜானகி: கிளாஸ் டம்ளரையும், எலுமிச்சம் பழத்தையும் எடுத்துக் கொண்டு வாங்க, அத்தை. 

சாரதாமணி: பாப்பா எத்து வரேன்! பாப்பா எத்து வரேன்! 

(குழந்தை அறைக்குள் ஓடுகிறது.) 

சுந்தரியம்மாள், ஜானகி: (இருவரும் சேர்ந்து) ஐயய்யோ! நீ டம்ளரை ஓடச்சிருவேடி! ஓடச்சிருவேடி! 

(தடதடவென்று இருவரும் அறைக்குள் ஓடுகிறார்கள். அதற்குள் குழந்தை டம்ளரை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறது. ஆனால் கலவரத்தில் போட்டு உடைத்து விடவே, இருவரும் குழந்தையை வைது அடிக்கிறார்கள். குழந்தை கீழே புரண்டு அழுது கொண்டே சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறது) 

ஜானகி: பிள்ளையாராட்டமா பேசாம லிருக்கிறீர்களே! பார்த்தீர்களல்லவா உங்கள் மகள் செய்கிற உதவியை? 

கோவிந்தசாமி: உம். 

ஜானகி : கழுதை, இது புள்ளையா? பூதந்தான் சனியன்!

கோவிந்தசாமி: ஆம், உண்மையிலேயே அது பூதந்தான்! 

இரண்டாம் காட்சி 

பாத்திரங்கள்: முன்போல் 

இடம் : வீடு. 

காலம் : சனிக்கிழமை 

ஜானகி: விடிந்து விட்டதா சனிக் கிழமை! எண்ணை தேச்சு சாரதாவைக் குளிப்பாட்ட முந்தி இன்று ஒரு குரு க்ஷேத்திரமே ஆகி விடும்!

கோவிந்தசாமி: குரு க்ஷேத்திரம் மிகக் கர்நாடகம். இன்று ஸ்டாலின் கிராடே ஆகப்போகிறது பார்!

சுந்தரியம்மாள்: இன்று அவள் பாடு, அவள் அப்பா பாடு. நாம் பேசாம லிருப்போமடி! அவனுக்குங் கொஞ்சம் இந்தக் கஷ்டமெல்லாம் தெரியட்டும்.

கோவிந்தசாமி : சாரதா, நான் வேஷ்டி துவைக்கப் போகிறேன். 

சாரதாமணி: பாப்பாவுந் தோச்சுவேன். 

ஜானகி: அப்படி! அதுதான் சரி, விடாதடீ உங்கப்பாவை! 

கோவிந்தசாமி: (சிரித்த முகத்துடன்) உம்; பாப்பாவும் துவை. வா, ஒஞ் சட்டையைக் கழற்றுவோம். (சட்டையைக் கழற்றி) அப்பா மாதிரி சட்டை யைத் தண்ணியில் நனைச்சு, அந்த சின்னக்கல் லிருக்கே, பாப்பாக் கல் அதிலே துவை. 

ஜானகி: அவள் துவைச்சு மண்ணைப் போட்டா! நீங்க. வாங்கி ரெண்டு அடி அடிச்சுக் குடுங்க. குழந்தை. யோடு சரியா நீங்களும் விளையாடாதீர்கள். 

சாரதாமணி : ஊஹும், உம்,உம்,உம்,உம். (குதிக்கிறாள்.)

கோவிந்தசாமி: அப்பா துவைக்கலை, நீயே துவை. 

(தலையை ஆட்டுகிறார்) உம். 

சாரதாமணி: (சிறிது நேரத்திற்குப் பின் சட்டையைக் காட்டி) அப்பா இங்கே பாரு! பாப்பா அல்லாத் தோச்சிருக்கேன்! 

கோவிந்தசாமி: (சிரித்த முகத்துடன்) அடே! பாப்பா நல்லாத் துவைச்சிருக்கேயே! எங்கே? 

(சட்டையைக் கையில் வாங்கி இரண்டு அடிஅடித்து நீரில் அலசிக் கொடுக்கிறார். சாரதா அதை வாங்கி அவளுக்கு எட்டக்கூடிய ஒரு ஸ்டாண்டில் உலரப் போடுகிறாள்) 

கோவிந்தசாமி: அப்பா எண்ணை தேச்சுக் குளிக்கப் போறேன். 

சாரதாமணி: பாப்பாவும் கூய்ப்பேன்! 

கோவிந்தசாமி: வா, எண்ணை தேய்ப்போம். 

(சாரதா சிரித்த முகத்துடன் ஓடுகிறாள்.) 

கோவிந்தசாமி: பாப்பாவுக்கு அப்பா தேச்சு விடட்டுமா? 

சாரதாமணி : ஊஹும், பாப்பா தேப்பேன். 

கோவிந்தசாமி: சிந்தாமத் தேய்க்கணும்! 

சாரதாமணி : (களி பொங்கும் முகத்துடன்) உம்! 

(எண்ணையை அதிகமாகச் சிந்துகிறாள்) 

கோவிந்தசாமி: இங்கே பார். அப்பாவைப் பார். அப்பா எப்படி எண்ணை சிந்தாமத் தேய்க்கிறேன் பார். 

சாரதாமணி: திந்தாமத் தேய்க்கிறேன். சேரியா அப்பா! 

கோவிந்தசாமி: (சிறிது நேரத்திற்குப் பின்) தேச்சாச்சா? வா, சீயக்காய் தேய்த்துக் குளிப்போம்.

சாரதாமணி: பாப்பா தேப்பேன். 

கோவித்தசாமி: உம், வா! 

(சாரதா சிரித்துக் கொண்டு டுகிறாள்.ஜானகி ஆச்சரியத்துடன் பார்க்கிறாள். அன்றைய எண்ணை ஸ்நானம் இத்தாலியின் எதிர்ப்பைப் போலாகி விடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை போலும்!) 

மூன்றாம் காட்சி 

பாத்திரங்கள்: முன்போல் 

இடம் : சமையலறை 

காலம்: அன்று காலை சுமார் 11 மணி 

கோவிந்தசாமி: (சுந்தரியம்மாளையும், ஜானகியையும் பார்த்து) நானும், சாரதாவும் இன்று சமையல் செய்யப்போகிறோம்.நீங்கள் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது. 

சுந்தமி, ஜானகி: ஓ! பேஷாய் நடக்கட்டும். அவளோடு நாங்கள் படுகிற கஷ்டத்தை அனுபவித்துப் பார்த்தால் தானே தெரியும்! 

(சமையல் நடக்கிறது) 

கோவிந்தசாமி: (சாரதாவைப் பார்த்து) பாப்பா இன்று எத்தனை வேலை செய்து இருக்கிறாள்; தேவலையே! பாப்பா, நல்ல பிள்ளை! இன்றைக்குச் சமையலில் பாதிச் சமையல் பாப்பாவுடையதுதான். சாரதா, அடுப்பைப் பார், விறகில்லையே! 

சாரதாமணி : பாப்பா வேகு எத்து வாரேன், சேரியா?

கோவிந்தசாமி: (சிரித்த முகத்துடன்) உம். 

சுந்தரியம்மாள்: வெறகெல்லாம் அவளை எடுக்கச் சொல்லாதடப்பா. நான் எடுத்துக்கிட்டு வாரேன். கண்ணிலே காதிலே குத்திக் குருடாச் செவிடாப் போயிட்டா அப்புறம் அவளை எவன் கல்யாணம் பண்ணுவான்? 

கோவிந்தசாமி: அவளைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. நீ கொஞ்சம் உஷாராய் எடம்மா? 

சாரதாமணி: (இரண்டு விறகுகளை இரண்டு கைகளிலும் பிடித்துக் கீழே ‘பறபற’வென இழுத்துக் கொண்டு, அந்தச் சப்தத்தைக் கேட்டு அளவு கடந்த மகிழ்ச்சியுடன்) இந்தாப்பா வேகு! 

சுந்தரியம்மாள்: நாசமாய்ப் போக! ஏண்டி ஜானகி வெற்கை இப்படியா அடுக்குவே? வெறகு அடுக்கி யிருக்கிற லக்ஷணத்தைப் பார்க்கலே! நல்லவேளை. கண்ணு தப்பிச்சுது! இந்த மாதிரி வெற்கு அடுக்கி யிருக்கிறதை நான் இங்கே தான் பார்க்கிறேனம்மா! அவனைக் கூப்பிடு. நெத்தியிலே யிருந்து ‘களகௗ’ண்ணு ரத்தம் வடியிது! 

கோவிந்தசாமி: (அவசரமாய் வந்து சிரித்துக் கொண்டே) ஒரு வேலையும் ஓட விடமாட்டேன் என்கிறீர்களே! ஒங்களுக்குச் சிகிச்சை பண்றதுக்கே நேரம் சரியாய்ப் போகும் போலிருக்கே!

சாரதாமணி (பாட்டி கொடுக்குந் தொல்லையைச் சகிக்க முடியாதவள் போல் முகத்தை வைத்துக்கொண்டு) ஆமச் சனியன்! 

(சுந்தரியம்மாளுக்குச் சிகிச்சைசெய்யப்பட்டு முடிகிறது. அடுப்பின் மீதிருந்த சாம்பார் பொங்குகிறதென்று, அதை இறக்குவதற்கு ஜானகி சமையலறைக்கு ஓடுகிறாள்.) 

கோவிந்தசாமி: ஐயய்யோ! ஐயய்யோ! நீ போட்றீவே! போட்றீவே! தொடாதே! கையைச் சுட்டுக்கிறப் போறே! நான் வாறேன்! (ஓடுகிறார்) 

ஜானகி: இப்படியா! ஒரு வேலை செய்யும்போது இப்படிக் கத்திக்கிட்டுப் பின்னாலே ஓடி வந்தா, என்ன வேலைதான் ஓடும்? அவ்வளவு சாம்பாரும் வீணாப்போச்சு. சட்டி வேறே ஒடஞ்சு போச்சு! நல்ல வேளை காலிலே விழுந்து கொப்பளிக்கத் தெரிஞ்சுது! 

கோவிந்தசாமி: நேற்று கண்ணாடி டம்ளரைச் சாரதா எடுக்கப்போன போது, நீங்கள் ரெண்டு பேரும் இப்படித்தானே அவள் பின்னால் ஓடினீர்கள். அதனால் தான் அவள் அதை உடைத்துவிட்டாள்!

சாரதாமணி : (அம்மாளைப் பார்த்து ) நீ வேரே பத்திரே, பாத்தி வேறே பத்திரா! என்ன வேலை ஓடிது! 

ஜானகி: (புன் சிரிப்புடன்) போடி நாயே! இந்தச் சின்ன நாயிட்ட இண்ணைக்கிப்பேச்சு கேக்கணு மின்னிருக்கிது! 

(கோவிந்தசாமி சிரிக்கிறார்.) 

நான்காம் காட்சி 

பாத்திரங்கள்: முன்போல் 

காலம்: அதே நாள் மத்தியானம். சுமார் ஒரு மணி.

இடம்: படுக்கையறை. 

[சாப்பாட்டிற்குப் பின் சாரதாவும், கோவிந்தசாமியும் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.] 

கோவிந்தசாமி: சாரதா, ஒரு பாட்டுச் சொல்லு பார்ப்போம். 

சாரதாமணி: என்னப் பாத்துச் சொல்ல அப்பா? 

கோவிந்தசாமி: ‘நிலா நிலா’ச் சொல்லு. 

சாரதாமணி: அதா? நெலா நெலா எங்கே போறே? மலைக்குப் போறேன். மலைக்கு ஏக்கு? மரம் வெத்த. மரம் ஏக்கு? செப்புச் செய்ய. உம்ம்ம்ம்ம்ம் அப்புறம்? 

கோவிந்தசாமி: செப்பு எதற்கு? 

சாரதாமணி: காச்சுப் போட. காச்சு ஏக்கு? மாடு வாங்க. மாடு ஏக்கு? பால் கயக்க, பால் ஏக்கு? நீ குயிக்க! 

கோவிந்தசாமி : பேஷ்! பாப்பா நல்ல பிள்ளை! பாட்டு நல்லாச் சொல்றியே! 

சாரதாமணி : நீ ஒரு பாத்துச் சொல்லு அப்பா! 

கோவிந்தசாமி: என்ன பாட்டு? 

சாரதாமணி: சின்னஞ் சிறு ‘குயிவி போல’ச் சொல்லு! கோவிந்தசாமி: சின்னஞ் சிறு குருவி போல…நீயும் சொல்லு. 

சாரதாமணி : சின்னஞ் சிறு குயிவி போல… 

கோவிந்தசாமி : நீ திரிந்து பறந்து வா பாப்பா. 

சாரதாமணி: நீ தியிந்து பாந்து வா பாப்பா.

கோவிந்தசாமி: வன்னப் பறவைகளைக் கண்டு. 

சாரதாமணி: வன்னப் பறவைகளைக் கந்து. 

கோவிந்தசாமி: நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 

சாரதாமணி : நீ மயதில் மால்ச்சி கொள்ளு பாப்பா.இன் னொரு பாத்துச் சொல்லப்பா. 

கோவிந்தசாமி: என்ன சொல்ல. 

சாரதாமணி : செந்தமிள் சொல்லப்பா. 

கோவிந்தசாமி: செந்தமிழ் நாடெனும் போதினிலே. 

சாரதாமணி: செந்தமி நாதென்னும் போயினிலே. 

(இந்தப் பாட்டின் மத்தியிலேயே குழந்தை தூங்கி விடுகிறது) 

கோவிந்தசாமி : ஜானகி! ஜானகீ ! 

ஜானகி: ஏன்? 

(ஜானகியும் அவளுக்குப் பின்னால் சுந்தரி அம்மாளும் வருகிறார்கள்.) 

கோவிந்தசாமி: குழந்தை தூங்கி விட்டது! 

ஜானகி: ஆச்சரியத்துடன் தூங்கி விட்டதா? முன் பெல்லாம் தூங்குகிறதுக்கு என்ன பாடு படுத்துந் தெரியுமா? 

சுந்தரியம்மாள்: இண்ணைக்கி இத்தனை இத்தனை வேலை செய்திருக்கில்ல! அந்த அலுப்பு! 

ஜானகி: ஆம், குழந்தை இத்தனை வேலையா செய்யும்? கிணற்றிலேயிருந்து தண்ணி கொண்டு வந்தா, அவள் சட்டையைத் தொவச்சா, அதைக் காயப் போட்டா, தானே எண்ணை தேச்சா,முழுகினா, தானே தலையைத் துவட்டிணுமின்னு தொவட்டினா, அப்புறம் சமையலுக்குத்தான் எத்தனை உதவி பண்ணினா, ஒரு சிறு கிண்ணத்திலே அவ வேறே புளிக்கரச்சா, உப்பு எடுத்துக்கொடுத்தா, மொளகாய் எடுத்துக் கொடுத்தா, அடுப்பு ஊதினா, பருப்பைக் கிண்டி விட்டா! எத்தனை வேலை! இன்று அவள் செய்த வேலையை எண்ணத் தொலையாது! 

சுந்தரியம்மாள்: ரெண்டரை வயசுக் கொழந்தே இத்தனை வேலை செய்ய எங்கையாவது பாத்தமாடி! 

(மூக்கில் விரலை வைக்கிறாள்.) ஜானகி: அதுதான் போகட்டும், சொல்லி வச்சாப்பிலே நீங்க ஏன் நெத்தியைக் காயம் பண்ணிக்கிட்டிய, நான் ஏன் சாம்பார் சட்டியை ஓடைச்சேன்?

கோவிந்தசாமி: இப்பச் சொல், அது பிள்ளையா பூதமா?

ஜானகி (சிரித்துக் கொண்டு) பூதந்தான், களுதை! பிள்ளை இத்தனை வேலை செய்யக் கண்டிருக்கோமா? 

கோவிந்தசாமி: வேலை சம்பந்தப்பட்ட மட்டில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பூதந்தான்! இக் குழந்தை பூதத்தினிடம் வேலை வாங்குவதற்கு ஓர் அலாவுதீனோ அல்லது மந்திரவாதியோ தான் தேவை. இந்த அலாவுதீனுக்குக் குழந்தையின் மனோதத்துவந் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் சிறிது பொறுமையும் வேண்டும். ஏதோ ஒரு பூதம் தன் எஜமானன் தனக்குப் போதிய வேலை கொடுக்கா விட்டால், அவனையே கொன்று விடுமாம். குழந்தைகளும் ஏறக்குறைய அதைப் போலத்தான். அவர்களிடம் அளவற்ற செயலாற்றும் சக்தி இருக்கிறது. அதைச் சரிவரப் பயன் படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களைக் குழந்தைகள் துன்பப்படுத்தவே செய்யும்! 

– உபகுப்தர் (நாடகங்கள்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *