ஏழை நெஞ்சே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 20 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வண்டி தள்ளி ஐந்து வயிறுகளுக்கு அன்றாடக் கஞ்சி யூற்றும் தொழிலாளி கணபதி. நாள்முழுவதும் விடாது பெய்தமழை அன்றைய அவன் பிழைப்புக்கு மண்போட்டு விட்டது. பட்டணத்தில் அறிந்த கடைகள் பலவற்றில் அரிசியும் பருப்பும் கடன்கேட்டு ஏமாந்த மனமும், வெறுங்கையுமாக வீடு சென்ற போது அவன் பிள்ளைகளின் அழுகுரல் பாதிவழியிலிருந்தே காதிற்பட்டு அவன் இதயத்தைப் பிசைந்து பிழியலாயிற்று.

கவலையோடு குடிசைக்குள் நுழைந்து, தன் நேர்மையில் நம்பிக்கை வைத்து, தனக்கு யாரும் உதவி செய்ய முன்வராத, இணங்காத அவமானமும், பிள்ளைகளின் பசிமுகங்கண்ட பதைப்பும், தாங்காமல் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு கணபதியும் விக்கி விக்கி அழ…

மனைவி மீனாட்சி கணவனைத் தேற்ற முயன்று தானும் அழுதாள். இரவு 10 மணிவரை அழுது அழுது களைத்து ஈற்றில் பெற்றவர்களின் மடிகளிற் சோர்ந்து உறங்கிக் கிடந்தன குழந்தைகள்.

கணபதியின் மூளை என்றுமில்லாத ஆழமாக, எப்பொழுதுமில்லாத வேகத்தோடு முற்றும் புதிய திசையிலே சிந்திக்கலாயிற்று. நேர்மைக்காக மாடாக உழைத்து மானமாக வாழ்ந்து வரும் அவனுக்கு உதவ ஒருவருமில்லை. அவனது மாசு மறுவற்ற நேர்மைக்கு மதிப்பில்லை, வாழ்வில்லை. மதிக்கப்படாத, வாழ்வளிக்காத நேர்மையை என்ன தேவைக்கு?

மடியில் உறங்கிக்கிடந்த பிள்ளைகளை எடுத்துக் கந்தற்பாயில் வளர்த்தி விட்டுத் தீர்மானத்தோடு எழுந்த கணபதி, மீனாட்சியை சோற்றுக்கு உலைவைக்கச் சொல்லிவிட்டு இருளில் இறங்கி நடந்தான்.

பட்டணத்தின் இருள் கவிந்த ஒரு முடுக்கில் இருந்த பலசரக்குக்கடை ஒன்றின் ஓடுகளைப் பிரித்துக் கொண்டு உள்ளே புதைந்த கணபதி கையில் ஒரு பை நிறைந்த அரிசி, பருப்புச்சரையோடு கூரையில் முளைத்துக் குதித்து மறைந்து மறைந்து குடிசையை அடைந்தான்.

கணபதியும் அவள் மனைவியும் அவசர அவசரமாகச் சோறாக்கி கொண்டிருக்கையில் தான் களவாடிய கடையின் கூரையைத் தான் மூடாமல் விட்டு வந்தது அவன் நினைவில் வந்து விடவே யாராவது கொள்ளைக்காரன் ஒரு நாள் உணவளித்த அந்தப் புண்ணியவான் கடையைக் கொள்ளையடித்து விடக்கூடாதே என்ற பதட்டத்தில் புறப்பட்டு ஓட்டமும் நடையுமாகப் பட்டணத்தை அடைந்தான்.

அந்தக் கடையின் கூரையில் ஏறி ஓடுகளை உரியபடி அடுக்கி அதைச் சரிப்படுத்திவிட்டு அவன் இறங்கிய போது இரண்டு கரங்கள் திடீரென்று அவன் தோள்களைப் பின்னிருந்து பற்றின. அதிர்ந்து திரும்பினான்.

இரண்டு பொலீஸ்காரர் பெருமிதச் சிரிப்போடு நின்றிருந்தனர்.

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *