எழுத்தின் வலிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 3 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு 8 மணியிருக்கும்! வெளியில் கொட்டும் மழையின் பேரிரைச்சல்!

நான் பத்து நாட்களுக்குமுன் எழுதிய சிறு கதையை முற்றும் தெளிந்த மனநிலையோடு சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, மரங்கள் பேயாட்டமிடப் புயல் சீறும் பயங்கர உறுமலையும் மழையின் சோவென்ற பேரிரைச்சலையும் கிழித்துக்கொண்டு என் இதயத்தில் பாய்ந்தது, “ஐயோ மகளே! என்னை விட்டுப் போய்விட்டாயா?” என்ற கூக்குரல்!

பதறி எழுந்தேன். கதவைத் திறந்துகொண்டு மழையில் நனைந்தபடி வீட்டின் பின்புறமாக அலறல் வந்த திசையில் விழுந்தடித்து ஓடினேன். அந்த மலையின் சாரலில் படிக்கட்டுகளாக அமைந்த பசிய வயல் நடுவே கிடந்த வைக்கோல் வேய்ந்த சிறு குச்சுக்குடிசையிலிருந்து மாரியாத்தா கதறுவது தெளிவாகக் கேட்டது.

அவளுக்கு ஒரே ஒரு மகள் தான். பள்ளிமாணவி! பருவக்குமரி! சிலநாட்களுக்கு முன்னர்தான் மாரியாத்தா வீட்டு வேலைக்காரி கன்னிப்பெண் அவள் நச்சரிப்புத் தாங்காமல் கிருமிநாசினியைக் குடித்து மரணதேவனின் மீளாப் பாழ்மண்டபத்தில் நுழைந்தாள்.

மறுநாள் அவள் பிணத்தைச் சுமந்து அழுது புலம்பிக் கொண்டு அவள் தாயும் கிழமான தந்தையும் என்வீட்டு முற்றத்தால் படிஇறங்கிப் போயிருந்தனர்.

இதற்குள்ளாக மாரியாத்தா மகளும்..? என்னாலான உதவியைச் செய்ய வேண்டும் என்ற பரபரப்போடு அந்தத் தனிமை சூழ்ந்த குடிசையை நெருங்கி வாசற்படியைத் தாண்டிக் குடிசைக்குள் நின்றபோது, என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, 

“யார் நீங்களா? எதற்கு வந்தீங்க? அந்தக்காட்டேரி வேலைக்காரக் குட்டி தற்கொலை செய்துகொண்டதற்கு நானே காரணம் என்றும், அந்தப் பாவத்துக்காக அவளைப் பெற்றவங்க அனுபவித்த துயரத்தை நானும் என் பிள்ளையைப் பறி கொடுத்து அனுபவிக்க நேர்ந்ததாகவும் கதையெழுதிப் பத்திரிகையில் போட்டுச் சல்லி வாங்கின ஆளல்லவா நீங்கள் ? இங்கேன் வந்தீங்க? பார்த்துச் சிரிக்கவா?”

தன் ஆத்திரக் குப்பையை என்மேல் கொட்டிக் கலங்கியழுதாள் மாரியாத்தா!

அவள் மகளைப் பார்த்தேன், கயிற்றுக் கட்டிலில் பரிதாபகமாக இறந்துகிடந்தாள். துயரமும் குற்ற உணர்வும் என் நெஞ்சை மலைப்பாறைகளாக அழுத்தி உலுக்க, விறைத்து நின்றேன்.

என் எழுத்தின் வலிமை இப்படி யான பயங்கரத்திலா வெளிப்பட்டிருக்கவேண்டும்? 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *