கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 93 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீச்சு நடைபயின்று அளைந்து வருந்தென்றலின் உதைப்பு. இலைப் பரப்பிலே சயனித்த மரகதப் பசுமை முழுவதையுமிழந்து, முதுமையின் பழுப்பை அங்கத்திலே அப்பி, ஓசங் குன்றிய வெப்பியாரத்திற் கயர் உறுஞ்சிய சோபிதத்திலே துயருற, இலைக் காம்புஞ் சரிய, இலை யடி பூட்டினை நெகிழ்த்தி மரத்திலே ஒட்டிக் கிடப்பதா, உதிர்ந்த புழுதியிற் புரளுவதா என அவதியுறும் இலை யாக, இல்லற ஈரலிப்பு இற்று, பந்த பாசக் காம்பு அடியிலே சரிய, துறவற ஈர்ப்பு அவர் மனத்தினை அலைக்கழிக்கின்றது. கணுவில், இலையடியின் பிணைப் புச் சமைத்த கக்கத்திற் புதிய பிறவியின் சிரசுதயத்தை இனங்கண்ட அமைதியில் இலை சருகாக உதிரு கின்றது ! துறவற நோன்பியற்றும் வெறி மீதூர, இல்லந் துறந்து தூரந் தூரமாக நடக்கின்றார். 

‘வீணிலே மண்ணையும், பொன்னையும், பெண்ணையுஞ் சதமென நம்பினேன். மண்ணாசை சவக் குழியின் இருப்பிடத்தில் முடிவடைகின்றது.. பொன்னாசை இதயத்தைக் குழப்பிக் கொண்டே அதன் இறுதித் துடிப்பிலே மரிக்கின்றது… பெண்ணாசை தசை யின் தளச்சியுடன், வாலிபப் பருவத்து எழுச்சியிலே கலவி இன்பமே இன்பங்களின் ஆணிவேர் என்ற மயக் கத்தின் விகசிதத்திலே துயருற்றேன். கலவியிற் கழிந்த நாள்கள் விருதாவில் உதிர்ந்த நாள்களே…’-மனத் திலே சுடர் விட்டுக் குதிக்கும் ஞானக் கருத்துக்களென நூங்கு விளைகின்றது. ஆசைக்கு அழிவேயில்லை; பழைய ஆசைகளின் அழிவிலே புதிய ஆசைகள் பிறக் கின்றன; இல்லற ஆசைகளின் சிதையிலே வீட்டின்பப் பேறடைய வேண்டுமென்ற ஆசை மிக மிக ஆழமாழமாக வேர் பாய்ச்சியுள்ளது; அந்த ஆசையே ஏகமாக நிறைந்து தன்னை எதிரேறுடன் அழைத்துச் செல் வதை அவர் உணரவில்லை. இலக்கும், இலட்சிய ! மார்க்கமும் ! வீட்டின்பமே இலக்கு; அதனை அடை யும் இலட்சிய மார்க்கம் துறவற நேதியே என்ற நம்பிக் கையில் அலையலானார். 

வீடல் நாடி நீண்ட பயணம். முதுமையின் தளர்ச்சி பெற்ற உடலிலே அலைச்சலின் விளைவாஞ்சோர்வு வசதியாகக் கொழுகின்றது. பிரயாணத்தின் தரிப்பு. ஒளி குடித்து, நிழல் கவித்துள்ள மரத்தடியில் உடலை நீட்டிப் படுக்கின்றார். அம்மரத்தின் பசிய இலைகள் சமைத்த கூரையிலே பல பொத்தல்கள். பொத்தல்களி னூடே நீலவானின் துணுக்குச் சிதர்கள் தெரிகின்றன. அகண்டகாரமான வானத்தை இவ்வாறு துணுக்கு. களாகக் காட்டும் இலைக் கூரையின் இயற்கை அமைப்பிலே மேய்ந்த அவருடைய கண்கள், தந்தத்தின் எழில் ஏந்தி, முறுவல் சிந்தி, ஒயில் காட்டும் மலர்க் கொத்திலே தரிக்கின்றன. மென்பஞ்சுப் படுக்கை களாக அல்லி வட்டங்களை அலர்த்தி மேடைகள் சமைத்துக் கொடுக்கும் மலர்மொய். அமுதம் இருக்கும் இடத்தைக் காட்டும் வழிகாட்டிக் கோடுகளை நிர்வாண மாக உரிந்து, சுகந்தச் சினைப்பில்… இராக்கதக் காம வெறிகொண்டதேனீ ஒன்று மலர்க்குறிகளை இடித்தும், மகரந்தக் கூடுகளைக் குழைத்தும். இனிப்புப் பிசின் மண்டியதேனை, உறிஞ்சியும்… பட்டப் பகலிலே வெட்ட வெளியிலே, மலர்கள் கற்பழிக்கப்படுகின்றன! தேனீ யின் காமக் கோட்டத்திலே அல்லிகள் உதிருகின்றன; மரகந்த மணிகள் சிந்தப்படுகின்றன; பூக்கள் சில அறுந்து விழுகின்றன… கலவி இன்பமே சகலவுமெனத் தன்னையே அழித்துக் கொள்ளும் மலர்மொய்யின் புன் செயலிலே அவருக்கு வெறுப்புப் பிறக்கின்றது. வெறுப்பு முனிவாக முற்றி வெடிக்கின்றது. 

“வீணிற் கலவியை மாந்தும் மலர்மொய்யே! அந்தத் தேனீயின் காமக் களியாட்டத்திலே நீ அழிந்து சோரம் போவது உனக்குத் தெரியவில்லையா? உன் பட்டுத் திருமேனியை அந்தத் தேனீயைத் தொட்டும் பார்க்க விடாதே. இறை தியானத்தில் ஈடுபடு.பரமபதம் அடைதல் மூலமே நமக்கு அமரத்துவங் கிட்டுகின்றது. 

“வீண் கத்தையே தத்துவம் என்று எண்ணுகிறாய். பேதலித்த புத்தியின் புலம்பல். அஞ்சலி என்ற பெயரில் மலர்களைக் கருங்கல்லிலே வீசியெறிகின்றான் பக்தன். கோயிலைத் துலக்கமாக வைக்கும் ஊழியக்காரன் நம்மைக் குப்பை மேட்டிலே வீசியெறிகிறான். பரமபதம் யாருக்குக் கிடைக்கிறது? பக்தனுக்கா? ஊழியக்கார னுக்கா? அஞ்சலிப் பொருளுக்கா? உன் மூளை சுற்று கிறதா?… சரி, இந்த ஆழமான தத்துவ விசாரத்திற்குள் நாம் இறங்க வேண்டாம். உன்னையே நீ சுய விசா ரணை செய்துபார். நீ மனைவி – மக்களை விட்டு எங்கே ஓடுகின்றாய்? நீ துறந்தது எதை? துறக்க முடியாத தெனத் தேடி ஓடுவது எதை? மோட்சத்தில் அமரத்துவ இன்பம் கிடைக்குமென்று நிச்சயமாகத் தெரியுமா? நீ அலைந்து திரியும் மோட்சத்தின் முகவரியாவது தெரியுமா? இருளிற் கைவிளக்குடன் நடப்பவன் புத்தி சாலி. வானத்து விண்மீன் கைவிளக்குக் கிட்டும் என்று காத்திருப்பவன் பைத்தியக்காரன்”. என்று மலர் மொய் கெக்கலியிட்டது. 

“வீம்பில் எழுந்த ஏமாப்பு… நான் இவ்வளவு காலமும் அனுபவித்தது சிற்றின்பம்; அது புன்மை யானது; போலியானது. அனுபவத்தில் நான் உண்மை யின் தரிசனம் பெற்றவன். சமய குரவரும் ஞானிகளும் ஒரு முகமாக விதந்தேத்தும் நிரந்தர இன்பத்தை நாடிச் செல்கின்றேன்.” 

“வீறு அழிந்ததும், விந்து ஒழிந்ததும் சலிப்புத் தட்டுகின்றதா? ஏமாற்றங்களை மறைப்பதற்காகப் பட்டுத்திரை கட்டி, படாடோப வார்த்தைகளிலே தத்து வம் பேசுகின்றான் மனிதன். பொருளுக்கே வட்டிக் கணக்கு வைக்கும் மனிதன், கலவியின் விளைவும் அதன் பயனும் என்று கணக்குப் பார்க்கின்றான். இலாப நட்டக் கணக்கிலே இன்பமில்லை. கலவியே இன்பம். அதுவே நிலைகளனும், அதுவே இலட்சியமும், அதுவே முயற்சியும், அதுவே பயனும்! கலவியிலே அன்பும், சமத்துவமும், அமுத இன்பமும் பிறப்பதினால், சுயத்தை இழந்த பேரின்பப் பேறு கிடைக்கின்றது. நான் அரும்பாகி, முகையாகி, போதாகி, போகத் திற்குகந்த மலராகும் வரை இன்றைய தினத்திற்காக வும், கலவிக்காகவுந் தவமியற்றினேன். பேரின்பப்பேறு மின்னலைப் போன்றே கிடைக்கின்றது. கணநேரக் கலவியேயாயினும், அதிலே என்னையே முற்றாக இழந்து, நானே இல்லையான நானே இல்லையான, ஆனாலும் நானே நானான புது ஜன்மம் எடுத்து விட்டேன். அந்த அழிவுத் தத்துவத்திலேதான் பிறவித் தத்துவமும் இரு கின்றது. பூவின் அழிவிலே வீயின் தோற்றம். அழிவு போலுந் தோற்றம். புதியதின் பிறப்பு. இனி, என் சூலகம் முற்ற முற்றப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகி அமரத்துவமடைவேன். கனி அழிந்து விடுமென் கிறாயா?… கனியின் விதையிலே மீண்டும் பிறப்புச் சக்கரந் தோன்றுகிறது. தன்னில் தன்னையே அழித்து, தன்னிலேயே தன்னை உருவாக்கிக்கொள்ளும் அற்புதக் கலையே கலவி. கலவியே நான். நானே கலவித் திட்டாந்தம் புரிகிறதா? எனக்கு அழிவேயில்லை”. குதூகல சரஸம் சொட்ட மலர்- அல்ல வீ- பேசிற்று. 

வீளையும் ஒடுங்கிய நிசப்தம் விரிகின் றது. அவருள் எழுந்த தெளிவின் குழப்ப நிலை. குழப்பத்தின் தெளிவு நிலை. மரத்தடியிலிருந்து எழுகின்றார். குழம்பிய நிலையிலே தெளிவில்லை. இருப்பினும், தெளிவு ஏற்பட்டதான பிரமை. 

வீரத்தை மண்டிய மனத்துடன் மலர்மொய் தொடர்ந்தது, ‘நானே மலர்; நானே வீ; நானே காய்; நானே கனி; நானே அதன் கொட்டையும்! நானே நானேயான, நானே சகலதுமான ஏமாப்பினை எனக்குக் கலவியே அளித்தது. புரிகின்றதா? இப் பொழுது சொல்; எது இன்பம்? எது நித்தியம்?” எனக் கேட்டது. 

வீமம் வளைத்துக்கொள்ள அவன் தலை குனிந்தான். 

“வீட்டின்பம் எங்கே கிடைக்கிறது?”- ஏளனத்துடன் வீ அவன் நாணத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் கேட்கிறது. 

“வீட்டிலே… ” – ஒரே சொல்லிற் பதிலை முறித்துக் கொண்டு, தன் அமரத்துவத்தை நிலை நாட்டும் தன்னுடைய படைப்புச் சாயல்களைப் பார்க்கும் எழுச்சியுடன் தன்னுடைய குடிசையை நோக்கி நடக்கலானார். 

– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *