மாடிப்படி

0
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 2026
இணைய வெளியீடு: November 26, 2026
பார்வைகள்: 81
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

“ஒரு தடவை வந்துட்டு போடா,” என்று அண்ணன் சொன்னபோது பெருசாக எதுவும் நினைக்கவில்லை.

காம்பவுண்ட் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன்.

மாடிப்படியில் சாந்தி நின்றிருந்தாள். மேலே போகவுமில்லை, கீழே இறங்கவுமில்லை. சுவரில் கையை ஊன்றியபடி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் அந்த வீட்டைவிட்டு வெளியேறி இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அண்ணன் இந்த வீட்டைக் கட்டும்போது நான் கூட இருந்தேன். இந்த நடைபாதை இப்படி அகலமாக இருக்கணும்னு சொன்னதும் நான்தான். அப்போது இங்கே காற்று நன்றாக வந்தது.

இப்போது நடைபாதையில் ஒரு பழைய நிலைக்கண்ணாடி இருந்தது. நடுவிலிருந்து மூலைவரை விரிசல் ஓடியிருந்தது.

காலை வெளிச்சத்தில் அந்த விரிசல் இன்னும் நீளமாகத் தெரிந்தது.

படிக்கட்டருகே நின்றபோது தோள் சுவரில் லேசாக உரசியதில் சுண்ணாம்புத் தூள் சட்டையில் ஒட்டியது. லேசாகத் தட்டிவிட்டேன்.


அண்ணன் கதவைத் திறந்தார்.

“வா.”

உள்ளே போனோம்.

நாற்காலியை இழுத்தார். உட்கார்ந்தோம்.

தேநீர் வந்தது.

கோப்பை சூடாக இருந்தது. விரலை மாற்றிப் பிடித்தேன்.

வீட்டுக்குள் யாரோ பாத்திரம் வைக்கும் சத்தம் கேட்டது. மேல்மாடியில் காலடிச் சத்தம்.

அண்ணன் தேநீர் டம்ளரை காலி செய்துவிட்டு மேசையில் வைத்தார்.

“இந்த வீடு முன்ன மாதிரி இல்லடா.”

அண்ணன் பார்வை ஜன்னல்பக்கம் சென்றது. மேல்மாடியில் காலடிச் சத்தம் மீண்டும் கேட்டது.


ரமேஷ் வெளியே போவதற்கு முன் சட்டையைச் சரிசெய்துக்கொண்டே பேசினான்.

கண்கள் காம்பவுண்ட் கேட்டைப் பார்த்தன.

“இராப்பகலா இந்த வீட்டுக்காகத்தான் உழைக்கிறேன்…”

பொத்தான் மாட்டவில்லை.

இரண்டு முறை முயற்சி செய்துவிட்டு விட்டுவிட்டான்.

“…எல்லா பாரமும் என் தலைமேலதான். இருந்தும் கொஞ்சம்கூட இங்க மதிப்பில்ல.”

“வீட்டுல மூத்தவன்னா சில விஷயத்த தாங்கித்தான் போகணும் ரமேஷ்,” என்றேன்.

அவன் சிரிக்கவில்லை.

“எவ்வளவு நாளைக்கு சித்தப்பா?” என்று கேட்டபடி கார் சாவியை எடுத்துக்கொண்டு செருப்பை மாட்டினான்.

பொத்தான் இன்னும் திறந்திருந்தது.

வெளியே போகும்போதும் அதை மாட்டிக்கொள்ளவில்லை.


சமையலறையில் அண்ணி திரும்பவில்லை.

கரண்டியை மட்டும் திருப்பினார்.

“சில பேருக்கு இங்க இன்னும் இது யாரு வீடுன்னு புரியல.”

சிறிது நேரம் கழித்து படிக்கட்டு இருக்கும் திசையைப் பார்த்தாள்.

கரண்டி மட்டும் அடுப்பில் தட்டிக்கொண்டிருந்தது.

அடுப்பின் நீலத் தீ அவள் முகத்தில் அசைந்துகொண்டிருந்தது.

“கொஞ்சம் பொறுத்துப் போனா சரியாயிடும்னு தோணுது அண்ணி,” என்றேன்.

அண்ணி ஒரு கணம் திரும்பிப் பார்த்தார்.

“உன் வீட்டுலயும் அப்படித்தானே நடந்துச்சு.”

கரண்டி மீண்டும் அடுப்பில் தட்டியது.

சுவரில் சாய்ந்திருந்த தோளை நேராக்கிக்கொண்டேன். அந்த நீலத் தீயை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கீழே இருந்து அண்ணி, “சாந்தி…” என்று கூப்பிட்டார்.

மேலே நின்றிருந்த சாந்தி பதில் சொல்லவில்லை.


சாந்தி இன்னும் மாடிப்படியில் நின்றிருந்தாள்.

என்னைப் பார்த்தாள்.

“சித்தப்பா, நீங்களாச்சும் இங்க வர்றீங்களே!” என்றாள்.

மணிக்கட்டில் இருந்த வளையலை உள்ளே தள்ளிக்கொண்டாள்.

“காலையில சீக்கிரம் எழுந்திரிக்கிறேன். தண்ணீர் பிடிச்சு வைக்கறேன். துணி துவைக்கிறேன். யாரும் பார்க்க மாட்டாங்க.”

வாசலில் அண்ணன் இருமும் சத்தம் கேட்டது.

“பாத்திரம் கழுவுவேன். அப்பவும் யாரும் பார்க்க மாட்டாங்க.”

“ஒரு நாள் தட்டை கழுவல…”

அவள் கீழே பார்த்தாள்.

வளையல் மீண்டும் நழுவி வந்தது.

“வீடுன்னா அப்படித்தான்… நீதான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்…” என்றேன்.

அவள் என்னைப் பார்த்தாள்.

“நீங்களும் இந்த வீட்டு ஆளுதானே சித்தப்பா.”

“நான்…”

அதற்குப் பிறகு எதுவும் வரவில்லை.

கைப்பிடியில் இருந்த கையை மெதுவாக எடுத்துக்கொண்டேன்.

கீழே சமையலறையில் பாத்திரச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

அவள் பார்வை கீழேயே இருந்தது.


ரமேஷ் இருக்கும்போது கார்த்திக் வெளியே வரவே மாட்டான்.

அவன் போன பிறகுதான் கார்த்திக் வெளியே வந்தான்.

சோபாவின் ஓரத்தில் உட்கார்ந்தான்.

ஒன்றும் செய்யவில்லை.

“வேலை கிடைக்கலை.”

கண்கள் இரவு முழுக்க தூங்காத மாதிரி இருந்தது.

“அதெல்லாம் சீக்கிரம் கிடைக்கும்,” என்றேன்.

அவன் சிரிக்கவில்லை.

“உங்கள மாதிரி நானும் சீக்கிரமா இந்த வீட்டை விட்டு கிளம்பனும் சித்தப்பா… அப்பத்தான் நிம்மதி.”

அவன் ஜன்னலைப் பார்த்தான்.

கைபேசி திரை ஒருமுறை ஒளிர்ந்தது. அவன் பார்க்கவில்லை.

உள்ளே கதவு சத்தம் கேட்டது.

உடனே எழுந்து சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

சில நொடிகள் கழித்துதான் சோபாவில் கைபேசி கிடப்பது தெரிந்தது.

சோபாவின் ஓரத்தில் அவன் உட்கார்ந்த இடம் மட்டும் லேசாக அமுங்கியிருந்தது.


மாலையில் அண்ணன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

உள்ளே இருந்து தொலைக்காட்சி சத்தம் வந்தது.

யாரோ சிரித்தார்கள்.

தொலைக்காட்சி சத்தம் மட்டும் வெளியே வந்தது.

அண்ணன் கையில் தேநீர் டம்ளர் இருந்தது.

“முன்னாடி இந்தத் திண்ணையில உக்காந்துதானே நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்.”

அண்ணன் சிரிக்கவில்லை.

“ஆமா,” என்றார்.

உள்ளே யாரோ “அப்பா…” என்று கூப்பிட்டார்கள்.

அண்ணன் உடனே திரும்பிப் பார்த்தார். எழுந்திருக்கவில்லை.

“ஹ்ம்,” என்று மட்டும் சொன்னார்.

டம்ளரில் இன்னும் தேநீர் இருந்தது.

நான் சுவரில் சாய்ந்தபடி நின்றேன்.

அண்ணன் வாயைத் திறந்தார். பிறகு பேசாமல் டம்ளரைப் பார்த்தார்.

வெளியே தெருவில் ஒரு சைக்கிள் மணி கேட்டது.

அண்ணன் பார்வையை விலக்கிக்கொண்டார்.

நானும் வேற பக்கம் பார்த்தேன்.


வெளியே வந்தேன்.

பின்னால் ஜன்னல்கள் சாத்தப்படும் சத்தம் கேட்டது.

உள்ளே யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று தெரியவில்லை.

நடைபாதையில் அந்த நிலைக்கண்ணாடி இன்னும் இருந்தது.

வாசல் விளக்கு அதில் இரண்டு துண்டாக நீண்டிருந்தது.

மேலே பார்த்தேன்.

மாடிப்படியில் சாந்தி நின்றிருந்தாள்.

மேலே போகவுமில்லை. கீழே இறங்கவுமில்லை.

வெளியே போகும்போது என் தோள் மீண்டும் சுவரில் உரசியது.

சுண்ணாம்புத் தூள் சட்டையில் ஒட்டியது.

நான் அதைத் தட்டவில்லை.

சு.அப்துல் கரீம்

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில்...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *