கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 93 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவாளர் சிவக்கொழுந்து கட்டிலிற்படுத்திருந்தார். அதே அறையில், திருமதி புனிதம் சிவக்கொழுந்து தரையில் விரிக்கப்பட்டிருந்த பனையோலைப் பாயிலே சயனித்தாள். 

அவர் உத்தரதேவியில் ஊர் திரும்பியவர். இரவு பதினொரு மணிக்குத்தான் உத்தரதேவி யாழ்ப்பாணம் வந்தது. மூக்கு முட்டிய கலை. வீட்டில் விரதம். சாப்பாடுங் கிட்டவில்லை. பிரயாண அசதியுடன் வெறும் வயிறாக, கால்களைக் கட்டிலின் சட்டங்களில் எறிந்து எறிந்து ‘அலட்டி’க் கொண்டு படுத்திருந்த சிவக்கொழுந்து கண்களை விழித்தார். தாவணிப் போர்வைக்குள் சரக்கட்டையாகச் சுருண்டு கிடக்கும் மனைவியைப் பார்த்தார். 

“எணேய்!” 

“….ம்…” மறுபக்கம் புரண்டாள். 

“என்னணை புதுநாணமா நித்திரை கொள்ளுறாய். விடிஞ்சல்லே போச்சு.” 

திருமதி சிவக்கொழுந்துவின் செவிகளில் அந்த வார்த் தைகள் ஒவ்வொன்றும் விழுந்தன. கோடிப்புறமிருக்கும் நாவல் மரத்தில் ‘அடை யும் கோழிகள் கூவியதும் அவளுக்குக் கேட்டது. அந்நேரத்திலேயே துயிலெ ழுந்து, தன் வீட்டு அலுவல்களைச் சுறுசுறுப்பாகக் கவனிப்பது அவளுடைய வழக்கம். இன்று அவளால் எழுந்திருக்க இயலவில்லை. தேகமெல்லாம் பச்சைப் புண்ணாக நோகும் அலுப்பு. அவருடைய குரல் காதில் விழுந்த பின்னர், ‘சீ, மூதேவி வாலாயம் கூடாது’ என்ற எண்ணம் உதித்தது. 

“ஓமப்பா நித்திரை சரியா அமத்திப் போட்டுது” என்று சமாதானங் கூறியவாறு எழுத்து, சேலையைச் சரி செய்தாள். அவர் தலைமாட்டிற் கிடந்த ‘லோட்டா’ தண்ணீரை முரடு முறிக்குந் தாளத்துடன் குடித்துவிட்டு, மறுபக்கம் புரண்டு கண்களை மூடிக் கொண்டார். 

புனிதத்திற்குத் தலையைச் சுற்றியது. சுமை யேற்றப்பட்ட வாக்கிலே தலைப்பாரம். செமியாக் குணக்கோலத்தில் வயிற்றைக் குமட்டிக்கொண்டும் வரும் உணர்வு. இத்தனைக்கும் வெள்ளியும் சனியும் விரதம்; ஒரு நேரச் சாப்பாடு. கிணற்றடிப் பக்கம் விரைந்தாள். வெகு பிரயாசையுடன் சத்தத்தை அடக்கி, எலுமிச்சை மரத்தின் கீழ் வாந்தியெடுத்தாள். கால்களாற் புழுதியை ‘எத்தி மூடினாள். எலுமிச்சைப் பழமொன்றைப் பறித்து மோந்தாள். நிலை சற்றே சீரடைந்தது. பற்களில் உமிக்கரி போட்டு மினுக்கி, முகம் கால்கழுவி, கிழக்கு நோக்கி விபூதி பூசி, வீட்டுப் பணியில் ஈடுபட்டாள். 

பானையில் அடைத்திருந்த புளியம் பழமொன்றை உப்பிலே தோய்த்து வாயிலே திணித்துக் கொண்டு, குசினிக் கதவடியில் நின்று வீட்டறைப் பக்கம் பார்த் தாள். திருவாளர் எழுந்து வரும் ‘சிலமனை’க் காண வில்லை உலையில் நீர் மலமலத்துக் கொதித்தது… 

தேங்காய்ப் பாதியைத் துருவி எடுத்து, பிட்டுக்கும் மாக்குழைத்து முடிந்த பொழுதுதான், கிணற்றடி யில் வலு அவதியுடன் ஓங்காளிக்கும் சத்தங் கேட்டது. விரல் நுனிகளிலே தன் உடற் பாரத்தை ஏற்றி, குறுக்கு வேலியால் எட்டிப் பார்த்தாள். சிவக்கொழுந்து விரல் களைத் தொண்டைக்குள் திணித்து, பித்தத்தை இறக்கி முகம் கழுவிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கெதியாக முட்டைக் கோப்பியைக் கலந்தெடுத்தாள். 

“என்னணை முட்டைக் கோப்பியே ? இண்டைக் கும் ஏதேன் விரதம் கிரதமாக்குமெண்டு நினைச்சன்.” 

“உங்களுக்கு வருஷத்திலை முந்நூற்றறுபத்தைஞ்சு நாளும் பச்சை மீன் வேணும். நேத்துத்தான் புரட்டா சிச் சனி விரதம்.” 

“விரதத்தோடை ரயில் பயணக்காரனையும் பட்டினி போட்டிட்டாய்.” 

“உன்னாணை மத்தவங்களிலை குத்தம் கண்டு பிடிக்கிறதுக்கு உங்களைப் போலை ஆளில்லை. இன்ன நாளைக்கு வாறதெண்டு ஒரு விசளம் எழுத மூண்டுசேம் கிடைக்கேல்லை. பேந்தென்ன? வந்தாக் கண்டு கொள்ளுவம்.” 

கோப்பையை உதட்டோரம் வைத்துக் கோப்பியில் ஒரு முரடு உறிஞ்சிக் குடித்தவாறே, “எங்கை, கொம்மாவைக் காணம்?” என்றார். 

“எப்பவும் நெக்கு ஊழியம் செய்யுறதெண்டு அவவுக்குத் தலையெழுத்தே? தனிய இருக்கிறதெண்டு துணைக்கு இருந்தவ. வீரபத்திரரைக் கண்டதும், ராத்திரியே அவ தம்பியோடை அண்ணன் வீட்டுக்குப் போயிட்டா”.

”அதுக்கு, நடுச் சாமத்திலையே போறது? அந்தக் கிழடிக்கு என்ர நிழலும் புடிக்காது என்று சொல்லிக் கோப்பியைக் குடிக்கிறார். 

“மருமேனிலை மாமியாருக்கு அவ்வளவு மரியாதை யாக்கும்” வார்த்தைகளை அரையுங் குறையுமாக விழுங்கிக் கொண்டே குசினிக்குள் நுழைந்தாள். 

நேற்றுத்தான் இளங் கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெழுகப்பட்டிருந்த தரையை, விளக்கு மாற்றினாலே கூட்டி, அடுக்களையை ஒதுக்கினாள். ‘துருவலை’க் குற்றியை எடுத்துப் போட்டு அதன் முன்னால் பெரிய பருத்தித்துறைப் பெட்டியொன்றைக் கவிழ்த்து வைத்தாள். அதன் மேல் தலைவாழை இலைத்துண்டு ஒன்றைப் போட்டு, தண்ணீர் தெளித் துக்கொண்டே, ‘பேப்பர் படிச்சது போதும். வாருங் கோவன் என்று அழைத்தாள். 

கைகளைக் கழுவிக்கொண்டு வந்த சிவக்கொழுந்து குற்றியில் அமர்ந்தார். மூன்று பிட்டுகளை இலையில் வைத்து உதிர்த்துவிட்டு, முட்டைப் பொரியலையும் எடுத்து வைத்தாள். அவர் சாப்பிடத் தொடங்கினார். 

திருவாளருக்கும் திருவாட்டியாருக்கு மிடையில், மௌனச் சுவர் எழுந்து நின்றது. 

“சோக்கா இருக்கப்பா. இப்பதான் வீட்டுச் சாப்பாடு. சிங்கள சாப்பாட்டிலை நாக்கு மரத்துப் போச்சு.” 

அவர் நிமிர்ந்து பார்த்தார். அவள் மாட்டுக் கொட்டிற் பக்கம் பார்த்து, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது. 

”என்னெணை நீட்டுக் கயித்திலையோசிக்கிறாய்?”

நெஞ்சைக் கூறாக்கிக் கக்கப்பட்ட வெப்பமான நெடுமூச்சு. 

“இல்லை. ஐந்து மாசமா மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணப் பக்கம் கோச்சி வரேல்லையாம்.” 

“கோச்சி வந்ததுதான். எனக்குத்தான் லீவு கிடைக்கேல்லை” 

“நான் காத்தைக் குடிச்சுக் கிடப்பன் எண்டு நினைச்சியளாக்கும்.” 

“எனக்கிருக்கிற கடன்தான் உனக்குத் தெரியுமே?”

“ஆருக்காகப் பட்டனியள். அந்த மாத்தறைச் சிங் களத்திக்காகத்தானே?” 

“பேக்கதையள் கதைச்சுக் கோவத்தைக் கிளப் பாதை.” 

“கோழ்வம் கோழ்வமெண்டு நெடுகப் பேக் காட்டுறதே? உங்களிட்டை வந்த தம்பையா அண்ணேட்டை என்ன சொன்னனியள்?” 

“அவன் ஒரு கோள்மூட்டி.” 

“பத்து வருஷமா அவள் என்னத்தைப்பெத்தாள்? அந்த மலடியோடை நான் வாழமாட்டன். காசும் அனுப் பமாட்டன், ‘ எண்டு அவரிட்டைச் சொன்னனியளோ, இல்லையோ?” 

“சும்மா ஒரு கோவத்திலை சொன்னதை இவ பெரிய இது எண்டு சொல்லுறாள். தம்பையா அண்ணை வரக்கே என்னை வேலையிலை இருந்து நிப்பாட்டி வெச்சாங்களெண்டு தெரியுமல்லே?” 

”கங்காணியெண்டால், ஆஸ்பத்திரியிலைகங்காணி வேலையைப் பாக்க வேணும். சிங்களக் கங்காணியளை மேய்ச்சால் விடுவாங்களே? ஒரு சிங்களத் தோறையைக் கிளப்பி வெச்சிருந்தியாம். எப்படிப் பாடு?” 

‘அவளாலை-அவள் சொன்ன சாட்சியாலை தான்- என்ர உத்தியோகம் திரும்பிக் கிடைச்சுது. உனக்கு ஒண்டுந் தெரியாது,’ 

“அது கிடக்க, அவளுக்கு-என்ர சக்களத்திக்கு எண்டாலும்-புள்ளைப் பூச்சி வெச்சுருக்கோ?” 

அவளுடைய ஒவ்வொரு வார்த்தையுந் திருவாளர் சிவக்கொழுந்துவைக் குடைந்தெடுத்தது. நிதானம் தடம் புரண்டது. 

“மலட்டுப்… மலட்டுக் கதையள்தானே வரும்.” 

“இஞ்ச! உந்தக் கோழ்வத்தைக் கொண்டுபோய் நீர் மேய்க்கிற சிங்களத்தியளிட்டைக் காட்டும். ஆர் மலடி? நான் வேறையொருவனைக் கட்டியிருந்தால் இதுக்கிடையிலை ஐஞ்சாறு பெத்திருப்பன்.”‘ 

தேகத்தை உலுப்பி ஆட்கொண்ட கோபாவேசத் துடன், குற்றியை இடறி எழுந்தார். பெட்டி உதை யில் நசிந்தோடி, அடுக்களை வாசலில் கிடந்தது. வெளியால், சருவக் குடத்திற்குப் பக்கத்தில், பிட்டு மணிகள் சிதறிக் கிடந்தன. காகங்கள் விழுந்தடித்துக் கொண்டு இரைச்சலுடன் கொறித்தன. 

“அதுதானே, உந்த வேசையின்ரை முகத்திலை முழிக்காமல் அங்க நிக்கிறனான்.” 

ஈச்சேரில் வந்து படுத்தார். புகையிலையைக் கிழித்து, ஒரு சுருட்டுச் சுற்றி எடுத்தார். அதைப்- பற்ற வைத்தார். புயலின் புத்திரப் பாக்கியமான நிசப்தம் ஆட்சி செலுத்தியது. 

அந்தச் சுருட்டைப் புகைத்து முடிப்பதற்கிடையில், பதினைந்து இருபது நெருப்புக் குச்சிகளைச் செல வழித்தார். சுருட்டுக் குறளை எறிந்தார். வெற்றிலைத் தட்டைச் தேடிப் பிடித்தார். வெற்றிலை வாடிக் கிடந்தது. கறட்டிச் சுண்ணாம்பு. ஒருவகையாகச் சமாளித்து, ஒரு வாய்க்குத் தாம்பூலம் தரித்தார். ‘சேட்’டை எடுத்து மாட்டி, சால்வையைத் தோள்களில் எறிந்தார். வெளியே புறப்படும் ஆயத்தம். 

அவரை வழிமறிப்பதைப் போல எதிரில் வந்து நின்றாள் புனிதம். ஆத்திரம் – சினம் ஆகியவற்றின் சுவடுகள் தூர்ந்திருந்தன. முகமும் முகமும் நேராகச் சந்தித்தன. புதிதாகக் காணப்படும் அவளுடைய கவர்ச்சியில் அவருடைய விழிகள் ஒரு கணம் நிலைத் தன. இப்பவும் கல்யாணச் சந்தையில் ‘செல்லும்’குமரி. அவளுடைய கழுத்தில் சிவக்கொழுந்து தாலி கட்டிப் பத்து ஆண்டுகளாயினும், சென்ற வைகாசியிலேதான் இருபத்தியெட்டு வயது பூர்த்தியாயிற்று. தனக்கட்டுகள் சதை கூட்டிக் கொழுத்த வாக்கில் நிமிர்ந்து சௌந்தர்யப் பொலிவு காட்டின. குலை தள்ளிய வாழையின் நிறைவுடன், இரத்தம் ஊறிய பாங்கில், முகத்தில் மலர்ச்சி. கன்ன உச்சிக்காரி இப்பொழுது நேர் வகிடுவிட்டு வாரத் தொடங்கியிருந்தாள். இந்த ‘உத்தி’ முகத்தை உருண்டையாக்கிக் காட்டியது. சிரிக்கும் பாசாங்கில், நாக்கு நுனி உதட்டை நனைத்து மீண்டது. 

“நீங்கள் ஆள் சுறுக்கர்தான். துலைக்கே புறப்பட்டுடியள்?” 

பதிலில்லை. 

“இஞ்சாருங்கப்பா, ஒருக்காச் சின்னக்கடைப்பக்கம் போயிட்டு வாருங்கோவன்.” 

“சின்னக் கடைக்கே? என்னத்துக்கு?” 

“இண்டைக்கு நாயித்துக்கிழமையல்லே? கட்டைக் காலன்தானே உங்களுக்குப் பிடிக்கும்?” சற்று முன்னர் நடந்த சண்டையின் சாயல் எள்ளளவும் இழையாத இதங் குழைத்துப் பேசி, ஓர் ஐந்து ரூபாய்த் தாளை அவருடைய கைக்குள் வைத்தாள். அவருடைய நாக் கில் கடல் ஆமை இறைச்சியின் சுவை ஊர்ந்தது. கோபமெல்லாம் அடங்கிற்று. 

சால்வையை ஈச்சேரின் சட்டத்தில் எறிந்து, மறுபடி யும் குந்தினார். ”கொஞ்சம் பச்சைத் தண்ணி கொண்டானை” 

செம்பிலே தண்ணீர் வந்தது. வாயிற் குதப்பப் பட்ட வாடல் வெற்றிலை ஒரு மாதிரியாகக் கசந்தது. வாயை நன்றாக அலம்பிக் கொப்பளித்துத் துப்பி விட்டு, ‘அண்ணாக்காக’த் தண்ணீர் குடித்தார். செம்பிற்குள் பார்வை நிலைத்தது. 

“இங்க செம்புக்கை வெத்திலை கிடக்கு”

“ஓம்.வாடாமல் போட்டு வைச்சனான்” 

“அப்ப வெத்திலைத் தட்டையுந்தா. சுண்ணாம்புக் கறண்டீக்கை கொஞ்சம் தண்ணிவிட்டுஇழகப்பண்ணு.”

புனிதம் மடித்துக் கொடுக்க, பத்தியமாகத் தாம்பூலம் தரித்தார். நாக்கும் நன்றாகச் சிவந்தது. 

“இஞ்சேருங்கோ, கெதியாப் போனாத்தான் நல்ல தாய்க் கிடைக்கும்” 

”எனக்குத் தெரியாத சின்னக் கடையே? கொஞ்சம் பொறுத்துப் போவம்.” 

“நீங்கள் மாத்தறைக்குப் போன ரெண்டுவருஷத் துக்குள்ளை யாழ்ப்பாணம் தலைகீழா மாறீட்டுது.”

புனிதமும் வெற்றிலை போட்டுக் கொண்டாள்.

“உனக்கு நல்லா வடிவாச் சிவந்திருக்கணை.” 

“இதிலை தெரியும் நான் எப்பிடி பட்டவளெண்டு. எப்ப வேலைக்குத் திரும்பிப் போறியள்?” 

“நான் ஒரு கிழமை லீவிலை வந்தனான்.”

“மழைதான் பெய்யப் போகுது.” 

தன்னுடைய உத்தேசத்தைத் தெரிவிக்க இதுதான் சமயமெனச் சிவக்கொழுந்து நினைத்தார். 

“எல்லாத்தையும் மறந்திடுவம். உன்னை என்னோடை கூட்டிட்டுப் போகத்தான் லீவுபோட்டு வந்தனான்.” 

“இவ்வளவு காலமும் இல்லாத கரிசனை இப்பதான் புதிசாய் முளைச்சிருக்கு… ஏன் இப்ப அந்தச் சிங்களத்தி கைவிட்டிட்டாளே?” 

“உந்த விண்ணானம் கொட்டுற பொம்புளைய ளோடை கதைச்சுத் தப்பேலாது. நான் ஒரு சிங்கள வைப்பாட்டி வெச்சிருக்கிறன் எண்டு ஆரோ தட்டு வாணியள் கதை கட்டியிருக்க வேணும்.” 

“பேந்து கதைப்பம். கெதியாய் கடைக்குப் போயிட்டு வாருங்கோவன்.” 

அந்தச் சமயம், ‘சங்கட’த்தால் சைக்கிளை ஏற்றி, படலையைத் திறந்து கொண்டு ஒரு வாலிபன் வந்தான். சாக்கினால் உறை போடப்பட்டிருந்த ஒரு பெரிய போத்தல் ‘கரி’யரிற் கட்டப்பட்டிருந்தது. பக்குவமாகச் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தினான். சைக்கிள் ‘கான்டி’லிலே தொங்கிய பையைக் கையில் எடுத்தான். 

“அது மரஞ்சீவுறவன்.” 

“இப்ப இவங்களுக்குக் காசுமெத்தி, ஊர் பிடிபட்டு, கெப்பர் மிஞ்சிப் போச்சு. அவன் சின்னவன் கத்திக் கூடு கட்டி, முட்டியள், தீட்டுத்தடி எல்லாத்துடனும் உடுப்புப் போட்ட மாதிரித்தான் வருவான். உவன்ரை சோக்கைப் பாருங்கோவன்’ என்று வாய்க்குள் புறு புறுத்தார். 

சேட்டைக் கழற்றி, கொடுக்குக் கட்டி, கத்திக் கூடு மாட்டி, தளைநாரையும் முட்டியையும் கையில் எடுக் கும்வரை, அவனையே அவதானித்தார்சிவக்கொழுந்து ஈச்சேரில் படுத்துத் தன்னைக் கவனிக்கும் அவரை அவனும் உற்றுப் பார்த்தான். 
 
“என்ன அப்பிடிப் பாக்கிறாய் செல்லத்தம்பி? இவர்தான் எங்கட இவர்.” 

”ஐயாவே ? அப்படித்தான் நினைச்சன். எப்பிடி ஐயா மாத்தறைப் பக்கம் மழைதண்ணி?” என்று சம்பிர தாயமாகச் சுகபலன் விசாரித்தான். அவர் அவனு டைய நெஞ்சிற் சடைத்திருந்த ரோமத்தையும் உருண்டு திரண்டு கருங்காலிக் குத்தியின் மெருகு பெற்றிருக்குந் தேகக் கட்டையும் ‘விடுப்’புப் பார்த்தார். அப்புறந் தான், ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்கிற மரியாதைப் பண்பு ஞாபகத்திற்கு வந்தது. 

“நீ சின்னவனுக்குச் சொந்தமே.” 

“ச்சா……நாங்கள் கொட்டடிப் பகுதி உரை யாடலை நீட்டாமல், ‘“அப்ப வாறன் ஐயா, இண்டைக் குப் பாளை தட்டுமுறை என்று கிணற்றடிப் பக்கம் போக அவசரங் காட்டினான். 

“இந்த வளவிலை எத்தினை மரம் கட்டியிருக்கிறாய்?” 

“அஞ்சு.” 

”எதெது?” 

“கிணத்தடிக் கறுப்பிக் கன்றுகள் ரெண்டு, கக்கூசடி உசரியும்,வளுக்கலும், கோடிச் சிவப்பி” சிரத்தை யின்றிப் பாடம் ஒப்புவிக்கும் பாவனையிற் சொன்னான். 

“நாவலடிச் சிவப்பியும் நல்லா ஊறுமெண்டு சின்ன வன் சொல்லுவான்”. 

“அது பாளை மாறிப் போச்சுது. ஐயாவுக்கு எங்கடை தொழில் முறையும் நல்லாத் தெரியுதே?” என் ‘பொடி’ வைத்துப் பேச்சை முறித்துக் கொண்டு கிணற் றடிக் கறுப்பியை நோக்கி நடந்தான் 

“இந்தக் கோசு ஏன் மரங்களைச் சின்னவனுக்குக் டுக்கல்லை?” என்று மனைவியை விசாரித்தார்.

‘’சீவிய உருத்து எண்டு சொல்லி அம்மாதான் இவனுக்குக் குடுக்க ஒத்தக்காலிலை நிண்டவ. மரத்துக்கு எழுவது  ரூவா மேனி மூன்னூற்றம்பது ரூவா தந்தவன். அந்தக் காசிலை வாங்கிவிட்ட பசுவாலும், கோழியளாலும்தான் பிச்சை எடுக்காமல் மானத்தைக் காப்பாத்தி சீவிக்கிறன்.” 

“இவன் ஐயம்புள்ளை ஆக்களின்ரை பகுதியாக்கும். அவங்கள் காசுக்காரர்.” 

“ஆனாலுமப்பா, சனியனுக் கெறு. அகராதி பேசு றவன். அண்டைக்கு முத்தத்து மரத்திலை பழுத்திருக் கிற தேங்காய்க் குலையைப் புடுங்கிவிடு எண்டு சொல்ல, தேங்காய் ஆயிறவனைப் பாருங்கோ. அவனும் புழைக்க வேணும்’ எண்டு சொல்லீற்றுப் போனான்” 

“இப்ப இந்த கீழ்சாதியளுக்குத்தானே நடப்பு? என் னோடை அவன் அருளானந்தம் – அவன்தான் கொய் யாத் தோட்டத்து நளவன்- மாத்தறைக்கு வேலை மாறி வந்தான். பேந்து ஒரு மாசத்திலை இஞ்சை திரும்பி வந்துட்டான். நானும் மூண்டு மாசமாப் பிடிக்கா எம்பியளை எல்லாம் பிடிச்சு ஒரு மாறுதலுக் குப் புழுத்திப் பார்த்தனே!” 

“என்னப்பா, கதையிலை குந்தீட்டியள். எப்ப இறைச்சி வாறது. எப்ப காய்ச்சிறது, எப்ப சாப்பிடுறது?” 

”ஓமப்பா வெய்யிலும் ஏறீட்டுது. நான், அவன் ராசான்ரை கடையிலை ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு ஓடியாறன். உலையை வெய்யன்.” 

சிவக்கொழுந்து புறப்படும் பொழுது, கிணற்றடி மரத்திற் பாளை தட்டுஞ் சத்தம் கேட்டது. 

சின்னக்கடையிலிருந்துசிவக்கொழுந்து திரும்புவதற் கிடையில் அவரைத் தேடி சரவணமுத்துவும் திருநாவுக் கரசும் வந்திருந்தார்கள். அவர் கடைக்குச் சென்ற சமாசாரத்தைப் புனிதம் தெரிவித்தாள். அவர்களிரு வரும் படலைக்கு முன்னால், வீதி திருத்தக் குவித்திருந் தக் கல்லுக்கும்பலுக்கு பக்கத்திற் குந்தியிருந்தார்கள். அப்பொழுதுதான் செல்லத்தம்பியும் சீவலை முடித்துக் கொண்டு புறப்பட்டான். 

அவர்களுக்கும் அவனுக்குமிடையில் ஏதோ வாக்கு வாதம் நடந்தது. 

திருமதி சிவக்கொழுந்து உற்றுக் கேட்டாள். 

“இஞ்ச பார் சரவணமுத்து, உன்ரை பெருமா கோயில் சண்டித்தனத்தை எள்ளெண்ணைச் சட்டி எரிக்க வாறதுகளிட்டைக் காட்டு. நான் கொட்டடி யான். இனிமேல் என்னட்டைச் சேட்டைவிட்டால், பாளைக் கத்தியாலை உன்ர குடலை எடுத்துப்போட்டுத் தான் வழக்குப் பேசுவன். செல்லத்தம்பியின் குரல் உரத்துக் கேட்டது. 

புனிதம் வேலியால் எட்டிப் பார்த்தாள். அதற் கிடையில் அவன் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். 

அந்நேரம் சிவக்கொழுந்து அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் அவருடைய காதைக் கடித்து ஏதோ சொன்னார்கள் 

‘அப்பிடியே சங்கதி?நான் கறியைக் குடுத்திட்டு வாறன்’ என்று படலையைத் திறந்து உள்ளுக்கு வந்தார். புனிதம் ஒரு தேங்காயைக் கொடுவாக் த்தியின் பிறத்தியால் அதனைப் பாதியாக்குவதற்காக அடித்துக் கொண்டிருந்தாள். 

சிவக்கொழுந்துவின் முகம் கறுத்து வியர்வைக் காட்டில் மிதந்தது. கறி உமலை, அவளுடைய கால் களில் பட்டும் படாமலும் விழ வீசியெறிந்தார்.பேசாமல் திரும்பினார். 

“துலைக்கே ?” 

“கறியைக் காச்சு, வாறென்” 

“வெய்யிலுக்கை போட்டு வந்து என்ன அவசரம்? கால் ஆறிப் போகலாமே?” 

“கண்கெட்டுப் போவாளே, படலைக்கை சரவண முத்தனும் திருநாவுக்கரசனும் நிற்கிறது தெரியல்லையே ? அவங்களோடை ஒரு அலுவல்.” 

”அப்ப இண்டைக்குச் சாப்பாட்டுக்கும் ஆளில்லை யாக்கும். அந்தக் குடிகாரங்களோடை சேந்து குடிகுடி யெண்டு குடிச்சுப் போட்டு ராவைக்குத்தான் வாற தாக்கும். இஞ்சையல்லே உங்களுக்கு முட்டியிலை கள்ளு வாங்கி வெச்சிருக்கிறன்.” 

“ஒவ்வொரு கதைக்கும் நீ மாத்துக் கதை கதைக் காதை. நீ கெதியாக் கறியைக் காச்சு. நான் சுறுக்கா வந்திடுவன்.” 

படலையை அடித்துச் சாத்திவிட்டு, சிவக்கொழுந்து. வெளியேறினார். 

புனிதம் எப்பொழுதும் சமையலிற் சுறுசுறுப்பு. இன்றைக்கு இனந்தெரியாத பதற்றம். கத்தியில் இறைச்சியை அறுத்தாள். ‘வார்’களைக் குறுணி யாக்க முடியவில்லை. வெடுக்கு மணத்திலே அரு வருப்பு. பெரிய துண்டுகளாகப் போட்டாள். 

ஆமைக் கொழுப்பையே உருக்கி, கடுகு – சீரகம்- கறிவேப்பிலை – அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய் இறைச்சி எல்லாவற்றையும் போட்டுத் தாழித்து, யைப் போட்டு வேகவைத்தாள். உப்பும் மிளகாய்த் தூளும் போட்ட பின்னர் தேங்காயின் முதற்பாலை யும் விட்டுக் கொதிக்க வைத்தபோது, பெரிய வேலை யொன்றைச் செய்து முடித்த திருப்தி ஏற்பட்டது. இதற் கிடையிலேயே இறாலில் சொதியும் கூட்டி வைத்தாள். குழம்பை இறக்கிவிட்டு சொதியை அடுப்பில் ஏற்ற வேண்டியதுதான். மரக்கறியில்லை. 

குழம்பை இறக்கித் திருகாணியில் வைத்து, தேசிக் காய்ப் புளியை ஊற்றிப் பிரட்டிச் சட்டியால் மூடி விட்டு, சொதிச் சட்டியை அடுப்பில் ஏற்றினாள். 

அப்பொழுது, சிவக்கொழுந்து அடுக்களைக்குள் நுழைந்தார். சாமான் பெட்டிகள், சட்டிகள், விறகு- மட்டை முதலியன விரித்தபடியே கிடந்தன. இன்ன மும் அவற்றை அடுக்கி ஒதுக்கவில்லை. துருவு பலகைக்குப் பக்கத்திற் கிடந்த சிரட்டை யொன்றை எடுத்துக்கொண்டு, பனை மட்டைக் கிராதித் தட்டி எழுந்து நின்ற அரைக் குந்திலே குந்தினார். ‘ஆளுக்கு நல்ல ஏத்தம்.’ 

“இதிலை கொஞ்சம் இறைச்சி போட்டி” என்று சிரட்டையை நீட்டினார். 

”நெக்குத் தெரியுமே அந்தப் பாழ்பட்டு போவாங் களோடை போனால், இப்பிடித்தான் ஆட்டத்திலை திரும்புவியளெண்டு…’அகப்பையாற்கோலி இறைச்சித் துண்டுகளைச் சிரட்டைக்குள் போட்டாள். 

”டீயே வாராத் தெரிஞ்சு போடு.” 

”சரி பிடியுங்கோ” என்று சிரட்டையைத் திருப்பிக் கொடுத்தாள். 

தோலை முன்பற்களால் உரித்துத் துப்பிவிட்டு, வாரைச் சப்பினார். பெரிய துண்டு; பல்லுக்குக் கொஞ் சம் கஷ்டம். 

“நான் தானே சொன்னனான் இஞ்சை கள்ளு வேண்டி வெச்சிருக் கெண்டு.” 

இறைச்சித் துண்டு ஒன்றை கொடுப்புப் பற்களுக் கிடையிற் சப்பிக் கொண்டே, “நான் அந்த நளவன் சீவிற கள்ளைக் குடிப்பனெண்டு நினைச்சியே” என்றார். 

ஆணிக்குடல் துண்டு ஒன்று, அவருடைய வாயில் ரப்பராக இழுபட்டது. 

“இவளுக்கிப்ப சோகை புடிச்சுப் போச்சு. உப்புப் புளிக் கணக்கொண்டும் சரியாத் தெரியுதில்லை.” 

மடிக்குள் மறைத்திருந்த போத்திலை உருவி வெளியே எடுத்தார். அரைப் போத்தலில், அரை சாராயம் வாசிக்குச் இருந்தது. கிளாஸ் கூடத் தேடாமல், போத்தல் கழுத்தை வாயில் வைத்து ஒரே மடக்காகக் குடித்தார். அஷ்டகோணமாகிப் பிளந்த இதழ்களினால் குழம்புடன் கூடிய இறைச்சியைச் சூப்பி, அதனைச் ‘சப்பாமலே’ விழுங்கி, ஒருமுறை இருமி, அவஸ்தையைத் தணித்தார். 

“அதுதானே பாத்தனான். கறுப்பன் கையோடை இருக்கேக்கிள்ளை ஏன் கள்ளை?” 

”நானும் பாக்கிறன். வேசைக்கு நாக்கு நீண்டு போச்சு. இப்பவே ரெண்டிலை ஒண்டு தெரிய வேணும்.” 

“என்னத்தைப் பத்தி?” 

‘‘நீ என்னோடை மாத்தறைக்கு வாறியோ, இல்லையோ?”

“உன்னாணை அப்பா, புண்ணியம் கிடைக்கும். போய் முழுகீட்டு வந்து சாப்பிடு. எல்லாத்தையும் ராவைக்குக் கதைக்கலாம்.” 

குந்திலிருந்து எழுந்தார். அவளுடைய முகத்திற்கு எதிராகத் தன் முகத்தை வைத்துக் கொண்டு “ராவிலை கள்ளப் புருஷனோடை தான் படுக்கிறது. எனக்கு இப்ப பதில் வேணும்.” 

சாராய நெடியும், கடல் ஆமை இறைச்சி வெடுக் ம் ‘பக்’ கென்று புனிதத்தின் மூக்குத் துவாரங்களில் ஏறின. அருவருப்பு உணர்வு. வயிற்றைக் குமட்டியது 

அடுப்பில், சொதி கொதித்துத் திரைந்தது, அவ ளுக்குத் தலையைச் சுற்றியது. 

குசினியிலிருந்து முற்றத்திற்கு ஓடி வந்து, பொன் இருக்கிலன்று நாட்டப்பட்டுத் தழைத்து வளர்ந்திருந்த முள்முருக்கம் மரத்திற் கைகளைத் தாக்குக் கொடுத்துக் குனிந்தாள். 

“வூஓக்… வூஓக்…”- வாந்தியெடுத்தாள், அவதியின் உணர்வு. 

“என்னடி மாய்மாலம் கொட்டுறாய்…என்னடி உனக்குச் சத்தியும் வருத்தமும்? சொல்லண்டீ! நீ என் னோடை வாறியா, இல்லையா?” 

களைப்புடன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்தாள். 

“என்னடி நான் கேக்கிறன். நீ உன்ர பாட்டுக்கு இருக்கிறாய்?”

”நீ கேக்கிறகேள்விக்குமறுமொழியுந்தேள்வையே? இந்த வீடு வாசலை, மாடு கண்டை விட்டுட்டு, இரவல் புடவையிலை பெரிய கொய்யகம் வெச்சுக்கொண்டு கூப்பிட்ட இடத்துக்கு இவருக்குப் பின்னாலை திரிய வேணும். செத்தாலும் இந்தப் படலையைத் உன்னோடை வரமாட்டன்” 

“சரவணமுத்துவும் திருநாவுக்கரசும் எழுதினதும் சொன்னதும் எல்லாம் சரிதான்.” 

”அந்தக் கோள்காவி நாரதங்கள் என்ன சொன்ன வங்கள்? இனிமேல் அவங்கள் இந்த வீட்டுப் படலைக்கு வரட்டும்.” 

“இப்ப சண்டித்தனமும் அல்லோகாட்டுறாள்’ வலு ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த இறைச்சிச் சிரட் டையை அவள் மீது எறிந்தார். குறி தவறாது அது சரியாக அவள் நெற்றியிற்பட்டது. இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. 

”ஐயோ, இந்தப் பாழ்பட்டுப் போவான்-குறுக் காலை தெறிப்பான் – என்னைக் கொல்லுறானே, என்று கூவித் தணிந்தாள். 

அமைதி. 

“கடைசியா நான் சொல்லுறன். கேட்டுக் கொள் ளும். இந்த ரெண்டு வருஷமா நீர் உழைச்சுத் தந்த திலை சீவிக்கேல்லை. இது என்ர வீடு வளவு. நீர் உன்ர ஆக்களோடை போகலாம்.” 

‘“என்னடி சொல்லுறாய்” என்று கேட்டவண்ணம், ‘துருவலை’ப் பலகையை ஓங்கிக்கொண்டு வந்தார். 

“ஏன் நிக்கிறீர்? அடியுமன். மலடன்களின்ரை சண்டித்தனம் பெண்டுகளிலைதானே?” 

“நான் மலடன் எண்டால், நீயும் மலடிதானேடி?” 

“நீ தான் மலடன்… நான் மலடியில்லை…” 

இந்நேரம் படலையைப் பிடுங்குவது போலத் திறந்து கொண்டு, அவசரமாகத் திருநாவுக்கரசு ஓடி வந்தான். 

“சரவணமுத்துவை முச்சந்தியிலை வெச்சு நளவன் செல்லத்தம்பி அடிச்சுப் போட்டான்’ என்றுமுற்றத்தில் நின்று கத்தினான். 

“இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு. முதலிலை அவனை முடிச்சுப் போட்டுத்தான் இவளின்ரை கணக்கைத் தீர்க்க வேணும்” என்றுகொடுவாக்கத்தியை எடுக்கக் குசினிப் பக்கம் பாய்ந்தார். நிதானமற்ற கால்களுடன், குசினிப்படியில் தடக்குப்பட்டு, தடா லென்று கீழே விழுந்தார். துருவு பலகையின் பற்கள் கிழித்துக் கன்னத்திலிருந்து இரத்தம் கோரமாக வடிந்து கொண்டிருந்தது. 

“வடுவா! நீங்கள் பிரிச்சு வைச்ச மாதிரி உங்கடை கூட்டாளியைத் தூக்கிக் கொண்டாச்சும் போயிடு. ஆனால் ஒண்டு. இண்டையிலையிருந்து, நீயோ சரவண முத்துவோ என்ரை வீட்டுப் படலையைத் துறந்தால் விளக்கு மாத்தாலைதான் அடிப்பன்” என்று ரௌத்திர காளிபோல புனிதம் கூச்சலிட்டாள். 

– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *