மனிதனும் விலங்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 10 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகத நாட்டில் தத்தன் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் ஏழை. அவனுக்கு ஆறு பிள்ளைகள் இருந்தனர். குழந்தைகளுக்கு வயிறார உணவளித்து அவனால் காப்பாற்ற முடியவில்லை. குழந்தைகள் பசியால் மிகவும் வருந்தினர். தத்தன் மனைவி கணவனைப் பார்த்து, ”உங்கள் மனம் கல்லா? நம் குழந்தைகள் பசியால் துடிக்கின்றன. ஆண் மகனாகிய நீங்கள் சோம்பேறியாக இருக்கலாமா? உழைத்துப் பொருள் சம்பாதிப்பதுதான் ஆண்களுக்கு அழகு. எங்கேயாவது சென்று எந்தத் தொழிலாவது செய்து பொருளீட்டு வாருங்கள்’ எனக் கூறினாள். இதைக் கேட்ட தத்தன் மனம் வருந்தினான். உடனே வெளியே புறப்பட்டான். 

நெடுந்தூரம் நடந்துசென்று ஒரு காட்டினை அடைந்தான். நெடுந்தொலைவு நடந்ததால் மிகவும் களைப்படைந்தான். தண்ணீர் வேட்கை மிகுந்தது. தண்ணீருக்காகச் சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு கிணறு தெரிந்தது. அக் கிணற்றை அடைந்தான். அதனைச் சுற்றிலும் செடிகளும் கொடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்தன. தண்ணீர் இருக்கிறதா? எனத் தத்தன் எட்டிப் பார்த்தான். அந்தக் கிணற்றுக்குள் ஒரு புலி, ஒரு குரங்கு, ஒரு பாம்பு ஆகியவற்றை முதலில் கண்டான். அவை அக் கிணற்றில் தவறி விழுந்தவை; வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்தன. கிணற்றின் நடுப்பகுதியில் கொடிகளைப் பற்றித் தொங்கிக்கொண்டிருக்கும் மனிதன் ஒருவனையும் பார்த் தான். அவனும் கிணற்றில் தவறிவிழுந்தவனே. அவன் தத்தனைப் பார்த்து, “ஐயா! என்னைக் காப்பாற்றுங்கள். துன்பக் காலத்தில் ஒருவனுக்கு உதவுதல் அறிவுடை யோர் செயலாகும். எப்படியாயினும் என்னைக் காப்பாற் றுங்கள்” எனக் கெஞ்சினான். 

கிணற்றினுள்ளே இருந்த புலி, “நல்லவனே! என்னையும் காப்பாற்று” எனக் கூறியது. இவ்வாறே குரங்கு, பாம்பு ஆகியவையும் வேண்டிக்கொண்டன. தத்தன் அந்தக் கொடிய விலங்குகளைக் கண்டு பயந்தான்; அவற்றைக் காப்பாற்றினால் துன்பம் ஏற் படுத்தும் என எண்ணினான். ஆனால், மனிதன் அவ்வாறு செய்யமாட்டான். அவனை மட்டும் காப்பாற்ற முடிவு செய்தான்; அவன்மீது இரக்கங் கொண்டான். பக்கத்திலிருந்த ஆலமரத்திலிருந்து விழுதுகளை அறுத்துத் திரித்த கயிற்றைக் கிணற்றுக்குள் விட்டான். கிணற்றிலிருந்த மனிதன் அக் கயிற்றைப் பிடித்துக் கொண்டான். தத்தன் மெதுவாக அவனை வெளியே தூக்கிவிட்டான். அவன் தத்தனிடம், “ஐயா! நான் பக்கத்து ஊரில் வாழ்பவன். என் பெயர் வாணன். நான் ஒரு வணிகன். எந்தப் பொருளாக இருந்தாலும் அதனை விற்றுத் தருவேன். அதன் வாயிலாகக் கிடைக்கும் வருவாயில் நான் வாழ்ந்துவருகிறேன். உங்களுக்கு உதவி தேவைப்படும்போது என்னிடம் வாருங்கள்” எனக் கூறினான். 

மனிதனை மட்டும் காப்பாற்றிய தத்தனைக் கிணற் றுக்குள் இருந்த புலி, குரங்கு, பாம்பு ஆகியவை ஏக்கத்துடன் பார்த்தன. தத்தன் மனம் இரங்கி அவற்றையும் காப்பாற்றினான். அவை நன்றியுணர்வோடு சென்றன. 

அதன்பிறகு தத்தன் பொருள் தேடச் சென்றான். பல இடங்களிலும் சுற்றியலைந்தான். அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால், பொருள் தேட முடியவில்லை; வயிற்றுக்கும் சோறு கிடைக்கவில்லை. அவன் தன் ஊருக்குத் திரும்பிவிட முடிவு செய்தான், பிறகு அவன் தான் சென்ற வழியாகவே திரும்பினான். 

பசி அவனை வாட்டியது. மயங்கி மரத்தடியில் கிடந்தான். அப்போது அவனை யாரோ தொடுவது போன்று இருந்தது. தன்னருகில் குரங்கு ஒன்று நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். முதலில் அதனைக் கண்டு அஞ்சினான். ஆனால், அது அவனை ஒன்றும் செய்யவில்லை. அதன் கையில் பழங்கள் இருந்தன. குரங்கு அவற்றைத் தத்தனிடம் தின்னக் கொடுத்தது. பழங்களைத் தின்று பசி நீங்கிய தத்தன் அது தான் காப் பாற்றிய குரங்கே என்பதைத் தெரிந்து கொண்டான். அப்போது குரங்கு,”ஐயா! நீங்கள் என்னை ஆபத்தி லிருந்து காப்பாற்றினீர்கள். நீங்கள் பசியால் வாடு வதைப் பார்த்தேன். என்னால் முடிந்த கனிகளைக் கொண்டுவந்தேன். நீங்கள் செய்த உதவியை நான் மறக்கவில்லை. உங்கள் பசி தீர்ந்ததா? மேலும் வேண்டுமானால் சொல்லுங்கள். கொண்டுவருகிறேன்’ என்றது. தத்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு குரங்குக்கு நன்றிகூறிப் புறப்பட்டான். 

தத்தன் சிறிதுதூரம் நடந்து சென்றான். அவன் எதிரில் ஒரு புலி வருவதைக் கண்டான். அதைப்பார்த்து மிகவும் அஞ்சினான். அந்தப் புலி, தத்தன் அருகில் வந்தது. அதுவும் தன்னால் காப்பாற்றப்பட்டதே என்பதைத் தெரிந்துகொண்டான். அப் புலி, ‘ஐயா! நீங்கள் சிறிது நேரம் இங்கேயே இருங்கள்” எனக் கூறிவிட்டுச் சென்றது; விரைவில் ஒரு சிறிய மூட்டை யுடன் அங்கு வந்தது. புலி தத்தனைப் பார்த்து, “ஐயா! இஃது ஓர் இளவரசனுடையது. அவன் ஏறிவந்த குதிரை அவனுக்கு அடங்காமல் மருண்டு ஓடி இளவரசனைக் கீழே தள்ளிக் கொன்றுவிட்டது. நான் அவனைப் பார்த்தேன். அவன் விலை உயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்தான். இவை எனக்குப் பயன்படாதவை என்பது எனக்குத் தெரியும்; ஆனாலும் என்னைக் காப் பாற்றிய உங்களுக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில் எடுத்து வைத்திருந்தேன். இவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, அம் மூட்டையைத் தத்த னிடம் தந்தது. கொடிய விலங்காகிய புலியிடம் நன்றி யுணர்வு இருப்பதைக் கண்டு தத்தன் வியப்படைந்தான். புலிக்கு நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு தத்தன் அம் மூட்டையை எடுத்துக்கொண்டு தன் ஊருக்குப் புறப்பட்டான். 

வரும்வழியில் ஒரு பெருநகரத்தைத் தத்தன் பார்த்தான். அந்நகர் வழியாக அவன் போய்க்கொண் டிருக்கும்போது எதிரில் வாணன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தான். வாணன் தத்தனைப் பார்த்து. ‘ஐயா! பொருள்தேடச் செல்வதாகச் சொன்னீர்களே. எவ்வளவு சேர்த்தீர்கள்?” எனக் கேட்டான். தன்னிட மிருந்த நகைமூட்டையை வாணன் உதவியால் பண மாக்கிக்கொண்டால் நலமாக இருக்குமே என்று தத்தன் நினைத்தர்ன். ஆகையால், தான் புலியிடம் பெற்று வந்த நகைகளை வாணனிடம் காட்டித் தனக்கு அப் பொருள் எவ்வாறு கிடைத்தது என்பதையும் விளக்க மாகக் கூறினான். “இந்த நகைகளை எல்லாம் விற்றுப் பணமாகக் கொடுத்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆதலால் நீங்கள் இதனை விற்றுக் கொடுங்கள்’ என்றான். ”அதற்கென்ன? இந்த உதவியைக் கூடவா நான் செய்யமாட்டேன்? என்னைத் துன்பத்திலிருந்து காப்பாற்றிய உங்களுக்கு இவ்வுத வியைச் செய்வேன்” என நயமாகப் பேசித் தத்தனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். 

வாணன் நகரத்தைச் சேர்ந்தவன்தரன், இறந்த இளவரசன். இளவரசன் வேட்டைக்குச் சென்றிருந்த போது யாரோ அவனைக் கொன்றுவிட்டனர். அவன் அணிந்திருந்த அணிகலன்களையும் திருடிக்கொண்டு போய்விட்டனர். இளவரசனின் பிணம் மட்டும் காட்டில் கிடந்தது. “இளவரசனைக் கொன்று நகைகளைத் திருடிய கள்வனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர் களுக்குச் சிறந்த பரிசு அளிக்கப்படும்” என்று அவ்வூர் அரசன் அறிவித்திருந்தான். தத்தன் கூறிய செய்தியி லிருந்து இந்த நகைகள் இறந்துபோன இளவரசனு டையவை என்பதை வாணன் தெரிந்துகொண்டான். எப்படியாவது அரசர் தருவதாக அறிவித்துள்ள பெரிய பரிசினைத் தான் அடையவேண்டும் என எண்ணினான். தத்தனே தன்னைக் காப்பாற்றியவன் என்பதையும் வாணன் நினைக்கவில்லை. தத்தனைத் தன் வீட்டிலேயே இருக்கச் சொன்னான். உடனே காவலர் களிடம் சென்று, “இளவரசனைக் கொன்று நகைகளைத் திருடிய கள்வனை நான் கண்டுபிடித்துவிட்டேன். இதோ, இளவரசன் அணிந்திருந்த நகைகள். நீங்கள் என்னுடன் வந்தால் அவனைப் பிடித்துவிடலாம்” எனக் கூறி நகைகளையும் கொடுத்தான். காவலர்கள் அந் நகைகளை அரசனிடம் காட்டி வாணன்சொன்னவற்றைக் கூறினர். அரசன் நகைகளைப் பார்த்தான். அவை இளவரசன் அணிந்திருந்தவையே என்பதை உணர்ந் தான். அரசன் கடுஞ்சினம் கொண்டான். கள்வனைக் கொண்டு வர ஆணையிட்டான். அரசன் ஆணைப்படி தத்தனைக் கட்டி இழுத்து வந்தார்கள். தத்தனுக்கு. ஒன்றும் புரியவில்லை. அரசன் தத்தனை நோக்கி. “இந்த நகைகளை வாணனிடம் கொடுத்தது நீதானே?” என அதட்டிக் கேட்டான். ‘ஆம்’ என்றான் தத்தன். மன்னன் கடுஞ்சினத்தால் நன்கு ஆராயாமல் தத்தனே. குற்றவாளி என முடிவு செய்தான். மறுநாள் காலையில் அவன் தலையை வெட்டிவிடுமாறு கட்டளையிட்டான். கரவலர்கள் தத்தனைச் சிறையில் தள்ளினர். 

தத்தன் சிறைச்சாலையில் புழுங்கிக்கொண்டிருந் தான்.“நான் காப்பாற்றிய வாணனே இன்று எனக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்துவிட்டான். துன்பத்திலிருந்த உயிர்களை அன்று நான் காப்பாற்றினேன் என்னை இன்று யார் காப்பாற்றப்போகிறார்?” என்று தனக்குள் எண்ணி வருந்தினான். அப்போது கிணற்றி லிருந்து தத்தனால் காப்பாற்றப்பட்ட பாம்பு அங்கே வந்தது.”ஐயா! நீங்கள் என்னைத் துன்பத்திலிருந்து அன்று காப்பாற்றினீர்கள். இன்று நான் உங்களைக் காப்பாற்றுகிறேன். இப்போது நான் அரசியைத் தீண்டுவேன். உம்மைத் தவிர எவராலும் அரசியைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் சென்று அரசியைத் தொட்டதும் நஞ்சு வெளியேறி அரசி பிழைப்பாள் என்று சொல்லிச் சென்றது. 

தத்தனிடம் கூறியபடியே அந்தப் பாம்பு அரசியைத் தீண்டியது. மருத்துவர்கள் வந்தனர். மந்திரவாதிகளும் வரவழைக்கப்பட்டனர். ஒருவராலும் அரசியைக் காப் பாற்ற முடியவில்லை. அரசியின் உயிரைக்காப்பாற்று கின்றவர்களுக்குத் தக்க பரிசு தருவதாக அரசன் நகரெங்கும் அறிவித்தான். சிறையிலிருந்த தத்தனும் இச் செய்தியை அறிந்தான். ”நான் அரசியைக் காப்” பாற்றுகிறேன்” எனக் கூறினான். 

காவலர்கள் தத்தனை அரசனிடம் அழைத்துச் சென்றனர். அவன் அரசியைத் தொட்டதும் உறக்கத் திலிருந்து எழுவதுபோல் விழித்து எழுந்தாள். 

மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். தத்தனுக்கு. மிகுந்த பொருள்களைப் பரிசாக அளித்தான். அரசன் தத்தனிடம், “இவ்வளவு நல்லவராகத் தோன்றும் உங்க ளிடம் இளவரசனது நகைகள் எப்படி வந்தன? உண்மையைச் சொல்லுங்கள்” எனக் கேட்டான். தத்தன் நடந்ததை அப்படியே எடுத்துரைத்தான். மேலும், ‘அரசே! துன்பத்துக்கு ஆளான குரங்கு,புலி,பாம்பு ஆகியவற்றைக் காப்பாற்றத் தயங்கினேன். ஆனால். இந்த மனிதனை முழுமனத்தோடு அன்புடன் காப்பாற்றி னேன். துன்பம் செய்யுமோ என நான் அஞ்சிய அந்த விலங்குகள் நன்றி மறவாமல் எனக்கு உதவி செய்தன. நான் நம்பிய இந்த மனிதன் எனக்குக் கேடு செய்து விட்டான்” எனக் கூறினான். 

அரசன் வாணனின் வஞ்சகச் செயலை அறிந்து அவனுக்குக் கடுந் தண்டனை விதித்தான்; தத்தனைத் தன் நகரிலேயே குடியேறச் செய்து அவன் மனைவி மக்களுடன் இனிது வாழ உதவினான். தத்தன் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். 

‘செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டா.” -உலகநீதி 

“நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம் 
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.” – மூதுரை 

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *