விருந்து போற்றிய வேளாளர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 3 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழ வள நாட்டில் இளையான்குடி என்னும் ஓர் ஊர் உண்டு. நெல்வயல்களும் கரும்புத் தோட்டங்களும் நிறைந்த வளமான ஊர் அது. அவ்வூரில் மாறன் என்ற ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் உழுதுண்டு வாழ்ந்த உத்தமர்; தம் வயல்களில் விளைந்த தானியங்களை இல்லாதவர்க்கு உதவி வந்தார். பசி என வந்தவர்க்குப் புசி எனச் சோறளித்து மகிழ்ந்தார். யார் வந்தாலும் உபசரித்து அவருடைய பசியறிந்து உணவளித்து அனுப்புவார். ஏழை மக்கள் பலர் அவரால் பசி தீர்ந்து மகிழ்ந்தனர். மக்களுடைய வயிற்றுப் பசியைப் போக்கு வதையே கடவுளுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி மகிழ்ந்தார். மாறன், இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மக்களிடத்தில் இறைவன் உள்ளான் என்பதை நன்கு உணர்ந்தவர். எனவே, இறைவனது பெயரைச் சொல்லிக்கொண்டு எவர் வந்தாலும் அவரை இறைவனாகவே எண்ணி வழிபடும் இயல்புடையவர். 

மாறன் மனைவியும் மிகுந்த நற்குணம் உடையவர். கணவன் குறிப்பறிந்து ஒழுகும் நல்லியல்பு உடையவர். கணவரது தொண்டில் தாமும் மகிழ்ச்சியோடு ஈடு பட்டார். அவரது. ஒத்துழைப்பு இல்லையெனில் மாற னாரால் வருபவர்களின் அழிபசியைத் தீர்க்க முடியாது. கணவனும் மனைவியும் சேர்ந்து அனைவருக்கும் உதவி வந்தனர். மக்கள் அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர் இவ்வாறு சிறப்பாக இருவரும் சில ஆண்டுகள் வாழ்ந்துவந்தனர். 

வந்தவர்களுக்கெல்லாம் நாள்தோறும் உணவு அளித்துவந்ததால் நாளடைவில் அவர்கள் செல்வம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவர்கள் மிகுந்த வறுமை நிலையை அடைந்தனர்; தமது நிலங்களைச் சிறிது சிறிதாக விற்றனர்; அத் தொகையைக்கொண்டு வழக்கம்போல வந்தவர்களுக்கு உணவு அளித்து மகிழ்ந்தனர். ஒரு சிறிய நிலம் எஞ்சிய எல்லா நிலங்களையும் விற்றாயிற்று. கணவன் மனைவி ஆகிய இருவருக்குமே உணவுக்கு வழி இல்லாத நிலை ஏற்பட்டது. எனினும் அவர்கள் இருவரும் தாங்கள் கொண்ட கொள்கையிலிருந்து ஒருசிறிதும் பிறழவில்லை. எவ்வளவு துன்பப்பட்டாலும் வருபவர் களுக்கு உணவு வழங்குவதை அவர்கள் நிறுத்தவே இல்லை. மிகுந்த வறுமை நிலையிலும் தங்கள் கொள்கையிலிருந்து சிறிதும் தவறாத அவர்கள் பெருமை உடையவர்கள் அல்லரோ? 

ஒரு நாள் நள்ளிரவு நேரம். எங்கும் ஒரே இருள். மழை ‘சோ’ வெனக் கொட்டிக்கொண்டிருந்தது. மாற னாரும் அவரது மனைவியாரும் அன்றிரவு உணவின்றிப் படுத்து உறங்கினர். அப்போது அவர்கள் வீட்டின் கதவினைத் தட்டும் ஓசை கேட்டது. மாறனார் எழுந்து சென்று கதவைத் திறந்தார். இறைவன் அடியார் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் மழையால் நனைந்திருந்தார்; பசியால் மிகவும் களைப்படைந்திருந் தார். மாறனார் அவரைப் பார்த்தார்; மனம் பதைத்தார். உள்ளே அவரை அழைத்து வந்து உட்காரவைத்தார். அவரது ஈர உடம்பை உலர்ந்த துணியால் துடைத்தார்; வந்தவர் பசியால் வாடியிருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அவரது பசியை எப்படியாவது போக்க வேண்டும் என எண்ணினார். வீட்டினுள் சென்றார். தம் மனைவியை அழைத்து, “வந்துள்ள அடியவர் மிகவும் முதியவர். பசியால், மிகவும் களைப்படைந்துள்ளார். கண்கள் பஞ்சடைந்துள்ளன; கால்கள் தள்ளாடுகின்றன. எப்படியாவது அவரது பசியைப் போக்கியாகவேண்டும்! என்ன செய்வது?” என்று கவலையோடு கேட்டார். 

அந்த அம்மையார், “நமக்கோ இரவு உணவு இல்லை. வீட்டில் சோறு சமைக்க எதுவும் இல்லை. கடன் கொடுப்பவரிடமெல்லாம்’ முன்பே வரங்கியாகி விட்டது. நாம் வாங்கிய கடனைத் திருப்பித் தரவும் இல்லை. எனவே, எவரும் கடன் தரவும் மாட்டார்கள். யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்றாலும் நள்ளிரவு ஆகிவிட்டது. இனி எவரையும் கேட்க இயலாது” என வருந்திக் கூறினார்; தம் கணவரின் துன்பம் கண்டு எப்படியும் அதனைத் தீர்க்க வேண்டும் என எண்ணினார். உடனே தம் கணவரைப் பார்த்து, “இன்று காலையில் நீங்கள் வயலில் விதைத்த நெல் முளைகளை வாரி வந்தால் ஓரளவு சோறு சமைக்க முடியும். இதைத் தவிர இப்போது வேறு வழி இல்லை” எனக் கூறினார். 

எப்படியாவது வந்தவருக்கு உணவு அளிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த மாறனார், மனைவி சொன்னதைக் கேட்டதும் மகிழ்ந்தார். “நெல் விளையவில்லை யென்றாலும் குற்றமில்லை. வந்துள்ள பெரியவர் பசியைத் தீர்ப்பதே நமது முதல் கடமை” என முடிவு செய்தார். உடனே ஒரு கூடையை எடுத்துத் தலையில் கவிழ்த்துக்கொண்டு வயலை நோக்கிப் புறப் பட்டார். நள்ளிரவு நேரம் ஆதலால் எங்கும் ஒரே இருள். மழைக்காலம் ஆகையால் வானில் மீன்கள்கூடப் காணப்படவில்லை. செல்வதற்குரிய வழி சரியரகத் தெரியவில்லை. ஆயினும் மாறனார் மன உறுதியுடன் புறப்பட்டார். நாள்தோறும் நடந்து சென்று பழக்கப் பட்ட வழியாதலால் காலினால் தடவிக்கொண்டே சென்றார். அவர் தம்முடைய வயலை அடைந்தார். அன்று விதைத்த நெல் மணிகளைக் கைகளால் தடவிப் பார்த்துக் குவித்தார். சேறுபடிந்த நெல் விதைகளை வாரிக் கூடையில் வைத்தார். அதைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு வந்த வழியாகவே விரைந்து திரும்பினார். 

மாறனாரது மனைவியார் வீட்டின் வாயிலிலேயே காத்திருந்தார். கணவர் வந்ததும் கூடையை இறக்கி வைத்தார். மாறனார், “விரைவில் உணவு சமைத்து விடு’ என்றார். மனைவியார். ”அடுப்பு எரிக்க விறகு இல்லையே என்ன செய்வது? ? ” என வருந்தினார். மாறனார் சிந்தித்தார். வீட்டின் மேல்கூரையைப் பார்த்தார். நீண்ட நாள்களாகப் பழுது பார்க்கப் படாமையால் வீட்டுக் கூரையின் ஒரு பகுதி சரிந்து இருந்தது. அதனைக் கண்ட அவர் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. உடனே கூரையில் தொங்கிக்கொண் டிருந்த வாரையை இழுத்துச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொடுத்தார். மனைவியார் அடுப்பைப் பற்றவைத்தார்; சேறுபடிந்த நெல்லை நன்கு நீரினால் கழுவினார்; அந்த நெல் முளைகளை ஒருசட்டியில் போட்டு அடுப்பில் வறுத்தார். நெல் முளைகளில் இருந்த ஈரம் போயிற்று. உடனே, அவ் விதைகளை உரலில் இட்டுக் குற்றினார்: நன்கு புடைத்து உமியை நீக்கி அரிசியாக்கினார். 

பின்னர் அவ்வரிசியை உலையிலிட்டுச் சமைத்தார். மனைவியார் கணவரைப் பார்த்து, “இயன்ற அளவு சோறு ஆக்கிவிட்டேன். வெறும் சோற்றை மட்டும் எப்படி இடுவது? கறிக்கு என்ன செய்வது?’ எனக் கேட்டார். உடனே மாறனார் தோட்டத்திற்குச் சென்றார். அங்குப் பாத்தியில் வளர்ந்திருந்த கீரை களைக் கைகளால் தடவிப் பறித்துவந்தார்.க அக் கீரையைக் கறிசமைத்து வைத்தார். இருவருக்கும் மகிழ்ச்சி. எப்படியாவது வந்துள்ள பெரியவரது பசியைப் போக்கிவிடலாம் என எண்ணினர். 

மாறனார் இலையினைப் போட்டுவிட்டுப் பெரிய வரை எழுப்பச் சென்றார். அவருடைய மனைவி சோற்றையும் கறியையும் கொண்டுவந்து வைத்தார். பெரியவரை எழுப்பச் சென்ற மாறானார் திடுக்கிட்டார். மழையில் நனைந்து குளிரால் நடுங்கிப் பசியால் வாடி உறங்கிக்கொண்டிருந்த அந்தப் பெரியவரை அங்குக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். எவரையும் காணவில்லை. செய்தியறிந்த மனைவியாரும் பதறினார். ‘வீடுதேடி வந்த பெரியவர் உண்ணாமல் சென்றுவிட் டாரே! நீண்டநேரம் ஆகிவிட்டமையால் போய்விட் டாரோ?’ என எண்ணி இருவரும் மனம் வருந்தினர். அப்போது வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 

“உங்கள் இருவருடைய நல்ல மனத்தை அறிந்து கொள்ளவே வந்தேன். எவ்வளவு துன்பம் வந்த போதிலும் கொள்கையிலிருந்து மாறாத உங்கள் மன உறுதியைப் பாராட்டுகிறேன். உங்களைப் போன்ற நல்லவர்களால்தாம் அறம் அழியாமல் உள்ளது. நீங்கள் புகழோடு நீண்டகாலம் வாழ்வீர்களாக!” என இறைவன் வாழ்த்தி மறைந்தான். இச் செய்தியை அறிந்த மக்கள் அனைவரும் அவ்விருவரையும் போற்றிப் புகழ்ந்தனர். 

“ஆற்றுப்பெருக்கற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.” – நல்வழி 

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்விருந்து வானத் தவர்க்கு
” – திருக்குறள்

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *