மகிழம் பூக்கள்..!
கதையாசிரியர்: ரகுராமன் சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2026
பார்வையிட்டோர்: 186

தன்யா எந்த சலனமும் இல்லாமல், என்னையே பார்த்து கொண்டிருந்தாள்!
வீட்டின் மிகப்பெரிய ஹாலில் இப்படிப்பட்ட அமைதியை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை!
தன்யாவுக்கு என் வயதோ அல்லது ஒரிரண்டு வயதோ குறைவாக இருக்கலாம்!
அவளும் நானும் ஒரே ஊர். பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்!
இது தவிர, தன்யாவின் இறந்து போன கணவரும் நானும் லாஜிஸ்டிக் நிறுவனத்தில், நீண்ட காலம் ஒன்றாக பணியாற்றியவர்கள்!
வீட்டிற்கு வரும்போதெல்லாம் , வழக்கமாக கல கலவென்று பேசி, உபசரிக்கும் தன்யா சலனமற்று இருப்பது, ஏனோ மனதை பிழிந்து எடுத்தது!
“அபி இப்ப எப்படி இருக்கான்?”
நான் தான் முதலில் அமைதியை கலைத்தேன்!
தன்யா எதுவும் பேசவில்லை! கையை மட்டும் நீட்டினாள்!
எதிரே தாழிடப்படாத, பாதி திறந்த அறை கதவு!
விளக்குகள் அணைக்கப்பட்டு, பகலிலும் இருள் சூழ்ந்திருந்தது!
வலது பக்க ஜன்னல் சாத்தியேயிருந்தது!
கொஞ்சம் திறந்து வைத்திருந்தால், சில்லென்ற காற்றோடு மகிழ மரத்தின் பூக்களின் வாசனையும் வீடு முழுவதும் பரவியிருந்திருக்கும்!
நான் இருந்த இடத்திலிருந்து, அபியை இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது!
சேரில் சாய்தபடி, கம்ப்யூட்டர் டேபிளில், காலிரண்டையும் போட்டு கொண்டு கண் திறந்த படியே, ஸிலிங்கில் தொங்கும் மின் விசிறியையே வெறிக்க பார்த்து கொண்டிருந்தான்!
உள்ளங்கையில் கண்ணாடியால் கீறி கொண்ட ரணங்கள்… ரத்த கசிவுகள்! கட்டு போடப்பட்டிருந்தது!
மற்ற சமயமாயிருந்திருந்தால், என்ன வேலையாக இருந்தாலும் விட்டு விட்டு “அங்கிள்” என்று அழைத்தப்படியே, அறையிலிருந்து வெளியே ஒடி வந்து, சினிமா அரசியல் என்று கதை அளக்க தொடங்கியிருப்பான்.
அபி தன்யாவுக்கு ஒரே பிள்ளை! அழகான தோற்றம். ஐ.டி.துறையில் மானேஜர்! தேவைக்கு அதிகமாகவே சம்பளம்!
எல்டாம்ஸ் ரோட்டீல் தனி வீடு!
சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருந்தது!
“உனக்கு வர பெண் எப்படி இருக்கனும் அபி?”
நான் கேட்டதற்கு சட்டென்று சொன்னான், “நடிகை ருக்குமணி வஸந் மாதிரி இருக்கணும் அங்கிள்!”
நல்ல வேளை, ருக்குமணி வஸந்தே வேண்டும் என்று அவன் கேட்கவில்லை!
ஆனால், அவன் எதிர்பார்த்த படியே, பேரழகி இல்லாவிட்டாலும், அழகியாக ரஞ்ஜனி வந்து சேர்ந்தாள்!
எண்ணி அறுபது நாட்களில், வீடு மொத்தமும் மாறி போயிருந்தது!
உறவினர்கள், நண்பர்கள் என்று எப்போதும் சிரிப்பும் சந்தோஷமும் நிரம்பி வழியும் அந்த வீடு இப்போது தண்ணீரில் நனைத்து போட்ட துணிபோல அசைவற்று இருந்தது!
தோட்டத்தில் எப்போதும் கூவி கொண்டிருக்கும் குயில்கள், கிளிகள் கூட இடத்தை வேறு எங்கோ மாற்றி கொண்டு போய் விட்டது!
மீண்டும் அபி இருந்த அறையையும், தன்யாவையும் மாறி மாறி பார்த்தேன்!
அபியின் கல்யாணத்தில் என்ன குறைச்சல்?
இது ஒரு அரேஜ்ஸூடூ மேரேஜ் .
நிச்சயதார்த்தம், முகூர்தம் ரிசப்ஷன் எல்லாம் வேற லெவல்!
வந்திருந்தவர்கள் எல்லோரும் சொன்னது ..
“பொண்ணு சூப்பர் டா… பங்ஷன் நல்லா கிரான்டா பண்ணியிருக்கே….”
பாராட்டு புயலில் அபி திக்குமுக்காடி போனான்!
இப்போது இது எல்லாம் கடந்த நாட்கள்…
கல்யாணமான முதல் நாள் ரஞ்ஜனி அபியிடம் பேசிய முதல் சில வார்த்தைகள்…
“எப்ப நீ பெங்களூருக்கு டிரான்ஸ்பர் வாங்க போற?”
சொந்த வீடு, வேலை எல்லாம் சென்னையில் இருக்கும் போது “நமக்கு எதுக்கு பெங்களூரு?”
அபி எத்தனையோ சொல்லி பார்த்து விட்டான்! ரஞ்ஜனி யார் சொல்லியும் கேட்பதாக இல்லை!
ஒவ்வொரு நாளும் ரஞ்ஜனியின் பிடுங்கல் தொடர்ந்தது!
வேறு வழியில்லாமல், அலுவலகத்தில் கெஞ்சி கூத்தாடி மாற்றல் வாங்கிவிட்டான்! சென்னையை விட அங்கு சம்பளம் குறைவு இருந்தாலும் சம்மதித்தான்!
அம்மாவை இங்கு விட்டு விட்டு அபி அங்கு தனி குடித்தனம்!
ரஞ்ஜனி முழுவதும் மாறிவிட்டிருந்தாள்.
அவள் வைத்த ஒரே ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதில், சந்தோஷத்தில் திளைத்தாள்!
அபி இதை கொஞ்சமும் எதிர்பார்கவில்லை!
அவன் மீது நிமிடத்துக்கு ஒரு முறை அன்பை பொழிந்தாள்!
எல்லாம் சரியாக தான் போய் கொண்டிருந்தது!
ஒரு நாள் மாலை ஷாப்பிங் போவதாக சொல்லி சென்ற ரஞ்ஜனி இரவு ஆகியும் திரும்பவில்லை!
அபிக்கு பதற்றம் தொற்றி கொண்டு விட்டது!
ஒரு மால் இல்லாமல் அத்தனையும் தேடிவிட்டான்!
அவளது செல்போன் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை!
யாரவது கடத்தியிருப்பார்களா?
சாலையில் அடிபட்டு எங்காவது ஹைஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருப்பாளா?
அபியின் மனசு பல விதமாக பதறியது!
முதல்ல போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுடா! மத்தெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்! – அம்மா போனில் கதறினாள்!
அபி பதட்டத்திலும் யோசித்தான்!
போலிஸ், பிரஸ் நியூஸ்…அது இது என்று போனால் ரஞ்ஜனிக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கே அது அவமானமாக முடியலாம்!
பெங்களுர் போலிஸில் கீயூ பிராஞ்சில் வேலை செய்து கொண்டிருந்த, தனது கல்லூரி ஸ்நேகிதன் ராஜுவின் ஞாபகம் வந்தது!
இந்த விஷயத்தில் “அன் அவிஷியலாக” அபிக்கு உதவுவதில் ராஜு முதலில் தயங்கினாலும், பிறகு நண்பனுக்காக ஒப்பு கொண்டான்!
அங்கும் இங்கும் அலைந்து கடைசியாக , நகரின் அந்த பிரதான ஸ்டார் ஒட்டலுக்கு வந்தாகிவிட்டது.
எட்டாவது ஃளோர். சரியாக, எண்- 283 ஆவது அறைக்கு வெளியே ராஜுவின் கையிலிருந்த கருவியின் சிக்னல் நின்று மின்னியது!
அபிதான் காலிங் பெல்லை அழுத்தினான்!
கதவு திறந்தது!
அங்கே ரஞ்ஜனி, பின்னால், ஒரு இளைஞன்.
அபி அதிர்ச்சியில், நொடியில் உறைந்து போனான்.
” யேய்! அபி! ஹியிஸ் விக்னேஷ். என்னோட லௌவர்! இவனுக்காகதான், பெங்களூருக்கு உன்ன டிராஸ்வர் வாங்க சொன்னேன்….நமக்கு நடந்த கல்யாணத்துல எனக்கு கொஞ்சமும் இஷ்டமில்ல! நல்ல இடம் அது இதுன்னு சொல்லி, பேரன்ஸ் என்ன கட்டாய படுத்தினதாலே சம்மதிச்சேன்! ஸாரி அபி…இனிமே விக்னேஷ் கூடதான் நான் இருக்க போறேன்!”
ரஞ்ஜனி பேச பேச அபிக்கு தலை சுற்றியது!
ஒவ்வொரு நொடியும், அந்த இடம் அவனுக்கு நரகமாய் மாறியிருந்தது!
அம்மாவுக்கு நடந்ததை, போன் பண்ணி சொல்லிவிட்டு, அன்றைக்கே சென்னை வந்தவன் தான்!
இருள் சூழ்ந்த அறைக்குள் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டான்!
டாக்டர் என்ன சொன்னார்?
தன்யாவின் அமைதியை மீண்டும் கலைத்தேன்!
“அபி, தீவிர மன அழுத்ததுக்கு ஆளாகி இருக்கான்! உடனடியாக அட்மிட் செய்து சிகிச்சையை ஆரமிக்காவிட்டால் மன சிதைவு நோய்க்கு ஆளாகி விடுவான்!” – என்று டாக்டர் ஆருத்ரன் கூறியதாக, தன்யா சொன்னாள்!
“நா வேணா ரஞ்ஜனி பேரன்ஸ்கிட்ட பேசி பார்கவா?” என்றேன்.
“வேண்டாம்! தப்பு நடந்து போச்சு, இனிமே பேசி பிரயோஜனம் இல்ல”
“அபியோட வேலை, இன்னொரு கல்யாணம்…”
“இப்ப இது எத பத்தியும் என்னால யோசிக்க முடியல! புத்தி சுவாதீனமற்ற ஒரு பிள்ளையை இந்த பூமியில நா விட்டுட்டு போக விரும்பல! முதல்ல அவன் நார்மலுக்கு வரணும்! அதுக்கான எல்லா முயற்ச்சி யையும் செய்யனும்!”
தன்யா பேச பேச துயரத்திலும் அவளிடம் ஒரு தெளிவையும் உறுதியையும் பார்க்க முடிந்தது!
தன்யா எழுந்து அபியின் அறைக்குள் நுழைந்தாள்.
தாழிடப்பட்டிருந்த வலது புற ஜன்னலை விசாலமாக திறந்து வைத்தாள்.
சூரிய ஒளி கீற்றுக்கள் அறைக்குள் அங்கும் இங்குமாக ஒளிர்ந்தன.
ஜன்னலுக்கு வெளியே மர கிளையில் புதிதாக ஒரு ஜோடி குயில்கள் எங்கிருந்தோ வந்திருந்து கூவி கொண்டிருந்தன!
கூடவே, மகிழம் பூக்களின் வாசனை, அபியின் அறையையும் தாண்டி வீடு முழுவதும் இப்போது பரவியிருந்தது!
தொடர்புள்ள சிறுகதைகள்
அம்மாவின் பிறந்த நாள்
ரா.நீலமேகம்
October 9, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 9, 2026
மிகநீண்ட மூன்று நாட்கள்
வாசுகி நடேசன்
October 6, 2026