போலி கெளரவம் வேண்டாம்!
கதையாசிரியர்: வசுமதி ராமசாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 105
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புமிக்க சகோதரி சுஜாதாவுக்கு,
கடைக்குப் போவதும், வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்குவதும் பெரிய தொல்லையாய்ப் போய் விட்டதென எழுதியிருக்கிறாய். அது ஒரு கலை யென்பதைப் பலர் அறியவில்லை. பெரிய குடும்பங்களில் கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்கிப் போடுவதற்கென ஒரு ஆள் நியமித்திருப்பார்கள். சாமான் அறையை மேற்பார்வை பார்க்க ஒருவரைத் திட்டம் செய்து வைத்திருப்பார்கள். சாதாரண மத்தியதரக் குடும்பங்களில் அப்படி யெல்லாம் ஆள் போட்டால் பார்த்துக் கொள்ளச் சாமான்களே இருக்காது.
மேல்நாட்டார் கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்குவதைக் கௌரவக் குறைவாக நினைக்க மாட்டார்கள். நம்மிடம் அந்தப் பழக்கம் இன்னும் வரவில்லை. ஒரு நீதிபதி தம்முடைய வெளிநாட்டு அநுபவத்தை வெகு அழகாகச் சொன்னார். அங்கே வீட்டுக்கார அம்மாள் வீட்டைச் சுத்தம் செய்து, கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்கி வந்து சமையலையும் துரிதமாகச் செய்து முடித்து விட்டுப் பின் மேஜை மேல் உணவைப் பரிமாறவும் வந்து விட்டாளாம்.
சில விஷயங்கள் ஆண்கள் செய்ய முடியாதவை. பெண்களால் மட்டும் ஆக கூடியவை சில இருக்கத் தானிருக்கின்றன. சமையல் வேலை, வீட்டு நிர்வாகம், நோயாளிக்குப் பணிவிடை செய்வது, குழந்தைகளை வளர்ப்பது, கடைக்குப் போய் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவது முதலிய வேலைகள், இவைகளுக்கு அடிப்படையான சகிப்புத் தன்மை ஆண்களுக்குக் குறைவுதானே. ‘கடைக்குப் போவது ஆண்களால் முடியாது’ என்றால் ஆயிரம் கேள்விகள் எழலாம். ஆனால் அந்தக் காரியம் பெண்களால் தான் முடியும்.
பெண்கள் துணிக் கடைக்குப் போவதில் ஏற்படும் கசப்பான – ஒரு பழைய அனுபவத்தைக் கூறுகிறேன், கேள்.
ஒரு சமயம் திருச்சியிலிருந்து என் தோழி வந்திருந்தாள், அவளுடன் ஜவுளிக் கடைக்கு என் உறவினர் ஒருவரைத் துணைக்கு அனுப்புயிருந்தேன், என் தோழி விதம் விதமாகக் குழந்தைகளுக்கு நிறையத் துணிகள் வாங்கினாள். “உன் பெண் சுதாவுக்கு இந்த நிறம் பாவாடை நன்றாயிருக்குமே?” என்று என் உறவினரைக் கேட்டாளாம். எங்கே தம்மைக் கருமி யென நினைத்து விடப் போகிறாளோ என்ற போலி கௌரவத்தில் அவர் கையில் இருந்த ரூபாய்க்குப் பாவாடைத் துணி வாங்கி விட்டார். என் உறவினர் அந்தத் தொகையை ஒரு முக்கியமான செலவுக்கு ஒதுக்கி வைத்திருந்தாராம். பிறகு நீண்ட நாட்கள் வரை அந்தப் பணத்தின் அவசியத்தை உணர்த்து சிரமப்பட்டுக் கொண்டே இருந்தார்.
நாம் துணிக் கடைக்குப் போவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ள எனக்கு அந்தச் சம்பவம் பெரிதும் உதவியாக இருந்தது. கடைகளில் புடவைகளை விதம் விதமாக எடுத்துப் போடுவார்கள். சாதுர்யமாகப் பேசுவார்கள். நாம் விலையைப் பார்த்துச் சற்று யோசித்தால் கூட, “பரவாயில்லை. எடுத்துக் கொண்டு போங்கள். உங்களைப் கொடுத்து போன்றவர்களிடம் சேலையைக் எங்கள் கடைப் பெருமையை அறியப் படுத்த வேண்டும்” என்பார் வியாபாரி. “உங்களைப் போல்” என்ற பதம் நம் தலையில் ஐஸ் வைத்துக் கட்டிய மாதிரி ஆகி விடும். “சேலை நன்றாக இருக்கு மென்ற உத்தரவாதமான வியாபாரம் எங்களுடையது. உங்களுக்கு விலையைப் பார்த்துப் போடுகிறேன்” என்று தொடர்ந்து கூறுவார். இது என்னவோ நமக்குத் தனிச் சலுகை என நினைத்து நாம் அதிக விலைக்குப் புடவையை வாங்கிக் கொண்டு விடுவோம்.
இவ்வாறு அவர்கள் சாதுர்யமாகப் பேசி அதிக விலையுள்ள துணிமணிகளை வாங்கச் செய்து விடுவார்கள். விலை குறைவான சேலையை எடுத்தால், “அது உங்களுக்கு வேண்டாம், நெசவு சரியில்லை” என்று சொல்லி விடுவார்கள். மின்சார விசிறி, குளிர்ந்த பானம், காப்பி இப்படி யெல்லாம் உபசாரம் இருந்தால் நம்முடைய பில் விஷம் போல் ஏறி விடுமென்று அறிந்து கொள்ள வேண்டும்.
நம் பணப் பையைப் பற்றியும் குடும்புத்தின் வருவாயைப் பற்றியும் ஒரு நினைவு இருந்தால் நாம் சமாளித்து விடலாம்.
இப்படிக்கு,
பூமா தேவி.
– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.
![]() |
ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடைசி பேருந்து
புஷ்பராஜ் கந்தசாமி
October 3, 2026
சுகந்தம்
பொ.கருணாகரமூர்த்தி
October 3, 2026
கோணங்கள்
ரேவதி பாலு
October 3, 2026
