பார்க்காத பக்கங்கள்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 1994
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 119
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம். 

அந்த வங்கிக்கிளை நகரின் மையப்புறத்திலிருந்து நகர்ந்து, சிறிது ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்தது. 

நகரின் நவீன சந்தையில் அது இயங்கிக்கொண்டிருந்த பகுதி விமானக்குண்டு வீச்சில் சேதமாகிவிட, அது இப்படி இயங்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. 

“வாற கிழமை கலியாண வீட்டுக்கு நாள் வச்சாச்சு, இது தான் கார்த்திகை மாசத்திலை கடைசிநாள். தள்ளிப்போட முடியாது. இந்தத் தேவைக்கெண்டுதான் ரெண்டரை லட்சம் கணக்கிலை போட்டு வச்சிருந்தனான். இப்ப ஆயிரம் ரூபாய் மட்டுந்தான் தரலாமெண்டு சொல்லுறியள். இது சரியே?” முகாமை யாளரின் முன்னிருந்த வாடிக்கையாளர் கோபத்தின் உச்சத்தில் கதைத்துக்கொண்டிருந்தார். 

“எங்களின்ர நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ள வேணும். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் போக்குவரத்து கிளாலி யாலை நடக்குது. நாங்கள் அதாலை போய்வர முடியாது. சட்டபூர்வமாய் கப்பலாலை தான் எங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கொண்டுவரலாம். அதுவும் காசு கொண்டு வர பலவித சட்டதிட்ட நடைமுறைகளிருக்கு. இதாலை தான் திரவப் பணத்துக்குத் தட்டுப்பாடு. இருக்கிற காசை ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபா வீதம் கொடுக்கிறம். உங்களுக்கு வங்கிக்கட்டளை தரலாம். ஆரும் கடைக்காரரிட்டை தேவையான பொருட்களை வாங்க அதைக்குடுக்கலாம்…” முகாமையாளர் மிகுந்த பொறுமை யுடன் விளக்கிக்கொண்டிருந்தார். 

“இப்பவே எல்லாப் பொருட்களும் நெருப்பு விலை பே ஓடர் கொடுத்து சாமான் வாங்கினா இன்னும் கூட விலை கொடுக்க வேணும். பாங்க் காசு தர ஏலாதெண்டு சொல்ல முடியாது. வாடிக்கையாளரின் கோபம் எல்லை கடந்துகொண்டிருந்தது. 

தீர்வைப்பகுதி உத்தியோகத்தர் முகாமையாளரின் அருகே வந்து நின்றார். 

“எக்ஸ்கியூஸ்மி சேர். பச் அடிக்க வேணும் ஜெனரேற்றர் போடவா?” வியர்த்துக் கொட்ட நடுவெயிலில் வேலைசெய்பவர் போல அவர் தோற்றமளித்தார். மின்சார வசதியை இழந்துவிட்ட வடபகுதியில் மின்பிறப்பாக்கியை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. எனவே குறித்த ஒரு நேரத்தில் மின்பிறப்பாக்கியை இயக்கி, கூட்டல் இயந்திரங்களை உபயோ கித்துச்செய்யும் வேலைகளையெல்லாம் அந்த நேரத்தில் செய்து விடுவது வழக்கம். 

“ஜெனரேற்ரர் போடாதேங்கோ. பொமர் மாதிரி சத்தம் கேட்குது. ஜெனரேற்ரர் போட்டால் ஒரு சத்தமும் கேட்காது.’ பாதுகாவல் உத்தியோகத்தர் இடைமறித்துக் கூறிக்கொண்டிருக் கும்போதே வாடிக்கையாளர்கள் ஓடிச்சென்று மரங்களுக்குக் கீழே படுக்கிறார்கள். 

“கியங்….” குண்டுவீச்சு விமானம் சுற்றும் ஓசை கேட்கிறது. 

“மிஸ்ரர் தியாகு. காசை அப்பிடியே கொண்டாரும். மற்றவை மரங்களுக்குக் கீழை ஓடிப்போய் படுங்கோ.” முகாமையாளர் அவசர உத்தரவு பிறப்பிக்கிறார். 

வங்கி ஊழியர்கள் அனைவரும் தம்வசமிருந்த முக்கியமான ஆவணங்களை அவசரமாகப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, வெளியே ஓடிச்சென்று பாதுகாப்பான இடங்களெனக் கருதிய இடங்களில் முகங்குப்புற விழுந்து படுக்கிறார்கள். 

மழைகாலமாகையால் நிலம் ஆங்காங்கே சேறும் சகதியு மாகக்கிடக்கிறது. அதைக்கவனிக்கும் மனநிலையில் எவருமில்லை. மரணத்தின் வாயிலில் நிற்பதாக மனம் நிச்சயப்படுத்திக்கொண்டு பதறிக்கொண்டிருக்கிறது. இஷ்ட தெய்வங்களை மனமும் வாயும் பிரார்த்திக்கின்றன. தம் அன்புக்குரிய குடும்ப உறவுகளின் நினைவுகள் “இனி அவர்களைக் காணமாட்டோமா?” என்ற ஏக்கத்துடன் மனதுள் வருகின்றன. 

முகாமையாளரும் பிரதி முகாமையாளரும் காசாளரிடமிருந்த பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் இரும்புப் பெட்டியுள் வைத்துப் பூட்டுகின்றனர். பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏற்கனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் கடைப்பிடிக்கவென வகுத்திருந்த திட்டப்படி வாயில்களைப் பூட்டுகின்றனர். 

“கிய்ய்ங் டமால்” 

மிக அருகே குண்டுவீச்சு விமானம் பதிந்து குண்டை வீச அவர்கள் நின்ற நின்ற இடங்களிலேயே விழுந்து படுக்கின்றனர். 

அவர்களும் மனிதர்கள்தான். 

இதயங்கள் ஒருகணம் நின்று பின் மிக வேமாகத் துடிக்கத் தொடங்குகின்றன. தம்மேல் அக்கட்டிடம் தகர்ந்து விழப்போவதை எதிர்பார்த்த அவர்களின் மனங்கள் அப்படி நடக்கவில்லையெனச் சில நிமிடங்களில் உணர்கின்றன. 

மீண்டும் எழுந்து அவசர அவசரமாகப் பூட்டிவிட்டு வெளியே ஓடிச்சென்று நிலத்தில் விழுந்து படுக்கிறார்கள். 

திடீரென வீதியால் வந்த இருவர் ஓடிவந்து, வங்கியின் முன்புற வராந்தாவில் ஏறி கதவருகே ஓடிச்சென்று அருகே விழுந்து படுக்கிறார்கள். 

இதைக் கவனித்த இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் எழுந்து வங்கி வாயிலை நோக்கி ஓட ஆரம்பித்த வேளை, 

‘கிய்ய்ங் பட பட பட் பட பட பட்” குண்டுவீச்சு விமானம் தாளப்பதிந்து கலிபர் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பிக்க அவர்கள் பட்டென விழுந்து படுக்கிறார்கள். 

“பட பட பட் பட பட் பட பட் பட பட பட்” பரவலாக கலிபர் தாக்குதல் நடைபெறுகிறது. 

சுமார் பத்து நிமிடங்களின்பின் சத்தங்கள் இரைசல்கள் ஓய்கின்றன. 

மெல்ல மெல்ல எல்லோரும் எழுகின்றார்கள். 

“இதிலை ஏன் படுத்தனீங்கள்?” வங்கி வாயிலில் வந்து படுத்தவர்களை நோக்கி முகாமையாளர் கேட்கிறார். 

“மேலை சீமெந்து பிளேற் பாதுகாப்பாயிருக்குமெண்டு நினைச்சம்.’ அவர்களின் பதிலில் தவறு காண முடியவில்லை. ஆனால் அவர்கள் நல்லவர்களோ அல்லவர்களோ வங்கியின் கதவருகே சென்றதும் எந்தச்சூழலிலும் பொறுப்பான ஊழியர் பதறிக்கொண்டு ஓடிவர வேண்டியிருக்கிறதே. 

முகாமையாளர் திரும்புகிறார். பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொடையிலிருந்து குருதி வடிந்துகொண்டிருந்தது. 

உதவி முகாமையாளர் கதவைத் திறந்துகொண்டு ஓடிச் சென்று முதலுதவிப்பெட்டியை எடுத்து வருகிறார். 

ஒருவர் வாகனமொன்றை அழைத்துவர ஓடுகிறார். 

ஐந்தாறு பேருக்குக்காயம். முகாமையாளருடன் பேசிக்கொண் டிருந்த வாடிக்கையாளரின் விரல்கள் சிதறிய நிலையில் மயக்கமுற்றிருந்தார். 

அனைவருக்கும் முடிந்தளவு முதலுதவி செய்து வாகனத்தி லேற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர், அன்றைய வேலைகளை முடிக்கவென அந்த வங்கி ஊழியர்கள் கடமை 

யாற்றத் தொடங்குகின்றனர். இல்லாவிடின் அடுத்த நாள் வேலையை ஆரம்பிப்பது சிரமமல்லவா? 

அவர்களது கைகள், அவசர கதியில் இயங்க, காதுகள் அடுத்து வரப்போகும் குண்டுவீச்சு விமானங்களின் ஓசை எக்கணமுங் கேட்கலாமென கூர்மையுடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. 

– 1994

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *